முந்தைய பகுதி சுட்டி இங்கே: பணத்திமிர்
மங்களாம்பிகா கோஷ்டி, புடவைக் கடையிலிருந்து கிளம்பி செல்லும் வரை மங்கா மாமிக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன்னுடைய குழுவினருடன் புடவைகள் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக, ஆனால் அதிகம் கவனமில்லாமல் இருந்தாள்.
தாங்கள் வாங்கிய புடவைகளுக்குரிய பணத்தைக் கொடுக்க கல்லா அருகே வந்தபோது, கல்லாவில் இருந்தவரிடம், மங்கா மாமி கேட்டாள் "அந்த பண்ணையார் வீட்டுக்கார அம்மா அடிக்கடி இந்தக் கடைக்கு வருவதுண்டா?"
"ஆமாம் எப்பவும் இங்கேதான் புடவைகள் வாங்குவாங்க, அடிக்கடி வருவாங்க."
"அவங்க பையனுக்குக் கல்யாணமா?"
"ஆமாம். ரெண்டு மூணு மாசத்துக்குள்ள பையனுக்குக் கல்யாணம்; அதோட சேர்த்து அந்தப் பையனின் தங்கைக்கும் கல்யாணம் என்று சொன்னார்கள். இங்கேதான் எல்லாவற்றுக்கும் புடவைகள் வாங்க வருவேன் என்று சொல்லியிருக்கிறார்கள்."
அதற்குள் மங்கா மாமி கோஷ்டியிலிருந்த ஒரு மாமி, "ஆமாம், பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கறாங்க என்று கேள்விப்பட்டேன். ரொம்ப பெரிய இடமாம். ஏழு தலைமுறைக்குச் சேர்த்து, சொத்து இருக்கின்ற இடமாம். ஏற்கெனவே இந்தப் பண்ணையாரினி வானத்தைப் பார்த்துக்கொண்டு நடப்பா. இனிமேல அவளைக் கையில புடிக்கமுடியாது."
மங்கா மாமியின் மனதுக்குள் இடி இடித்தது. 'அப்போ, அந்தப் பையன் கல்யாணம் செய்துகொள்ளப் போவது கல்யாணியை இல்லையா?'
'அடக் கடவுளே கல்யாணி இதைத் தாங்கமாட்டாளே. நான் என்ன செய்வேன்? என்ன செய்யப் போகின்றேன்? கணேஷ மூர்த்தி சொன்னது போலவே பணக்கார சிநேகிதம் பாதாளத்தில் தள்ளிவிடும் போலிருக்கே - போலிருக்கு என்ன? தள்ளிடுச்சு.' இந்த வகையில் மங்கா மாமியின் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வந்தன.
வீட்டுக்கு வந்து சேரும் வரையிலும் மங்கா மாமிக்குக் குழப்பமாகவே இருந்தது.
வீடு பூட்டியிருந்தது.
அரைமணிநேரம் கழித்து, கல்யாணி, தன தோழியின் வீட்டிலிருந்து வந்து சேர்ந்தாள்.
மங்கா மாமியைப் பார்த்ததும், "அம்மா" என்றாள். அவ்வளவுதான்! அவள் கண்களிலிருந்து 'பொல பொல' வெனக் கண்ணீர் அவளுடையக் கன்னங்களை நனைத்து, கீழே விழத் துவங்கியது.
மங்கா பதறிப் போனாலும், கல்யாணியின் கண்ணீருக்கானக் காரணத்தை யூகித்துவிட்டாள்.
"என்னம்மா கல்யாணி? விஸ்வம் கடிதம் எழுதவில்லையா?"
"இல்லை அம்மா - கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் கண்ணீரை வரவழைத்துவிட்டது" என்று சொல்லியபடி, கடிதத்தை நீட்டினாள் கல்யாணி.
அதை வாங்கிப் பார்த்த மங்கா மாமிக்கு, கடைசி நான்கு வரிகள் மட்டும் பெரிய எழுத்துகளில் எழுதியிருந்தது கண்களில் பட்டது.
"கல்யாணீ - உன்னை நான் அடுத்த முறை பார்க்க நேர்ந்தால், உன் கணவனுடனும், குழந்தையுடனும், சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டும்.
என்னை மன்னித்துவிடு, மறந்துவிடு."
(தொடரும்)