அது ஓர் அரசு அலுவலகம்.
காலை ஏழு மணிக்கே சுறுசுறுப்பாகும் அலுவலகம்.
ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள்.
கொஞ்ச நேரத்தில் கோவிந்தன் ஓடிவந்தார்.
"தொங்கறான் சார்.... தொங்கறான் சார்..."
"யாரு கோவிந்து?"
"சாரதி சார்.... தொங்கறான் சார்..."
"புரியலையே....."
"போய்ட்டான் சார்.... தூக்குல தொங்கிட்டான் சார்..."
அதிர்ந்து போய் எல்லோரும் ஓடினார்கள். சாரதி குறைந்த உயரத்தில் காலை மடக்கி அசௌகர்யமாகத் தொங்கியபடி மரணித்திருந்தார். கடைசி நிமிடத்தில் கால் தரையைத் தொடும் உயரத்துக்குக் கால்கள் தாழ்ந்திருக்க வேண்டும். கொள்கைப் பிடிப்புடன் கால்களை மடக்கி முடிந்திருந்தார்.
மெல்ல இறக்கினார்கள். அருகில் ஒரு கடிதம்.
"என் குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது.... என் மகனுக்கு எவ்வளவு முயன்றும் வேலை கிடைக்கவில்லை. எனவே நான் போகிறேன். என் வேலையை என் மகனுக்கு வாங்கித் தரும்படி அதிகாரிகளைக் கடைசியாகக் கேட்டுக் கொள்கிறேன். எனக்குச் சேர வேண்டிய தொகை வரும்போது கீழ்க் கண்ட வகையில் என் கடன்களை அடைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்..." என்றிருந்த கடிதத்தில் இட்லி சாப்பிட்ட கடன், டீக்கடைக் கடன் என்று வந்த பட்டியலில் அலுவலகத்தில் கடைசியாக முதல் நாள் வாங்கிய பத்து ரூபாய்க் கடன் வரை இருந்தது.
அரசுப் பணியில் ஒருவர் இறந்தால், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதை உபயோகித்துக் கொள்ளும் வண்ணம் அமைந்த தற்கொலை.
குறைந்த வருமானத்தில் தன் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர், மாதக் கடைசியில் கிடைக்கும் சொற்பக் காசைக் குடும்பத்திற்குக் கொடுத்து விட்டு பட்டாணி சாப்பிட்டே உயிர் வாழ்ந்தவர். சற்றே மனநிலை சரியில்லாத தன் மனைவி மேல் பிரியமாக இருந்தவர்.
உடன் பணிபுரிந்தவர்கள், தங்கள் வாரிசுகளுக்குப் பலவகையிலும் முயன்று வேலை வாங்கித் தந்ததைப் பார்த்து தானும் எவ்வளவோ முயன்றார். லெப்ரசி இருந்து சரியானதாக சான்றிதழ் பெற்றால் வேலை கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். அதுவும் முயன்று பார்த்தார். வளர்ந்த மகன் பலமுறை அடிக்கவே வருகிறான் என்று வருத்தப் படுவார்.
அதிர்ச்சி விலக நீண்ட நாள் ஆனது எல்லோருக்கும். தற்கொலை செய்து கொண்டவரின் மகனுக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் விவாதங்களாகி, கடைசியில் அவர் மகனுக்கு வேலை கிடைத்தது.
பட்டியலில் இருந்தபடி, பத்து ரூபாய்க் கடன் வரை செட்டில் செய்யப்பட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
அனுபவம் இங்கு முடியவில்லை. அனுபவம் மேலும் பாடம் கற்றுக் கொடுத்தது. சர்வீஸ் முடியப் போகும் நிலையில் இருந்த இன்னும் இரு கடைநிலை ஊழியர்கள், மர்மமான முறையில் 'இயற்கை மரணம்' அடைய, அப்புறம் உரிய காலத்தில் அவர்கள் வாரிசுகளும் வேலை வாங்கினார்கள்....