திங்கள், 8 செப்டம்பர், 2014

திங்க கிழமை 140908 :: தின்ற அனுபவம் - பிளம்ஸ்


நான் ஏழாம் கிளாஸ் படிக்கின்ற வரையிலும் பிளம்ஸ் என்கிற பழத்தைக் கண்ணால் கண்டது இல்லை. கேள்விப் பட்டிருந்ததோடு சரி. அந்தக் காலத்தில் நாகையில் தெருவில் கொண்டு வந்து விற்கின்ற பழங்கள் என்றால் அது இலந்தப் பழம், நாகப்பழம், மற்றும் சீசனில் மாம்பழம்.

சிறிய வகுப்புகளில் படிக்கின்ற காலத்தில், அப்பா என்னிடம், அஞ்சு பூ சொல்லு, அஞ்சு காய்கறிகள் சொல்லு, அஞ்சு ஊர் பெயர் சொல்லு என்றெல்லாம் கேட்டு இம்சைப் படுத்திய நாட்களில், பூக்களில் முதலாவதாக வாழைப்பூ என்று ஆரம்பிப்பேன். (இக்காலப் பசங்க குஷ்பூ என்று கூட சொல்லலாம்!)

ஆனால் அஞ்சு பழங்கள் பெயர் சொல்லு என்று கேட்டால் நான் சொல்கின்ற முதல் பழப் பெயர் பிளம்ஸ் என்றுதான் இருக்கும். அந்தப் பெயரை, லீவில் வந்திருந்த அண்ணன் சொன்ன நாள் முதல் அது என் நினைவிலும் வாயிலும் அடிக்கடி உருவாய் அருவாய் வந்து போகும்.

நாங்கள்  எமரால்ட் கேம்பில் இருந்தபோது, அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில்  சந்தை கூடும். காய்கறிகள், பழங்கள், பொரி, இத்யாதி இத்யாதிகள் விற்பனை கனஜோராக நடக்கும். 

அண்ணனும், அண்ணனின் உயிர் நண்பரும் சந்தைக்குச் சென்று ஒரு வாரத்திற்கு வேண்டிய காய்கறி, பழங்கள் வாங்கி வருவார்கள். அப்போ எல்லாம் ஃப்ரிட்ஜ் என்ற ஒரு வஸ்து எங்குமே கிடையாது. (மனசாட்சி: கொஞ்சம் விட்டாக்க அப்போ ஆல்வா எடிசனே பிறக்கவில்லை என்று சொல்லிவிடுவார் போலிருக்கு!) 

மேலும், ஊர் முச்சூடுமே ஃப்ரிட்ஜுக்குள் வைத்தது போலிருக்கும் பொழுது, ஊருக்குள்ள எதுக்கு ஃபிரிட்ஜ்! 

அ உ ந - சந்தையிலிருந்து வந்ததும், என்னிடமும் என் தங்கையிடமும் கேட்டார்: "நான் பழம் கொஞ்சம் வாங்கி வந்திருக்கின்றேன். அது என்ன பழம் என்று ரெண்டு பேரிலே யாராவது சொல்லுங்க பார்க்கலாம்!"என்றார். 

நான் முதல் ஆளாக "பிளம்ஸ்" என்றேன். 

தங்கை, "தக்காளி" என்றாள். (அப்போ எல்லாம் தமிழ் சினிமாவில் இதெல்லாம் திட்டுகின்ற வார்த்தை கிடையாது. இப்போதான் நாடு ரொம்பக் கேட்டுப் போயிடிச்சு!) 

நான் சொன்னதைக் கேட்ட அ உ ந நண்பர் அசந்துபோய்விட்டார்! 

"எப்படி தெரியும்?" என்று கேட்டார். 

அவருக்கு எப்படித் தெரியும் நான் அஞ்சு பழம் சொன்னா அதுல முதல் பழம் பிளம்ஸ் என்று சொல்வேன் என்று!

பிளம்ஸ் பழத்தைப் பார்த்த என் தங்கை, 'இது நிச்சயம் தக்காளிதான், உங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியவில்லை' என்றாள். 

முதல் பிளம்ஸ் எடுத்து, என்னிடம் கொடுத்தார்! ஆஹா ஹா - என்ன அழகு இந்த பிளம்ஸ் பழம். 
    
                          
ஐந்தே வினாடிகளில் பரபரவென்று பழத்தைக் கபளீகரம் செய்துவிட்டேன். 
            
அடுத்த பழத்திற்குக்  கை நீட்டியபொழுது அவர் கேட்டார், பழத்திலிருந்த கொட்டையைத் துப்பிட்டேதானே?"
          
அடக்கடவுளே - பிளம்ஸ் பழத்தில் கொட்டை உண்டு என்று எனக்கு இதுவரையில் யாரும் சொன்னதில்லையே! 
             
இப்போ என்ன செய்வது? கொட்டையையும் சேர்த்து முழுங்கிட்டேனே! 
              
அப்போதான் அரவங்காட்டிலிருந்து வந்த அண்ணனிடம், "பிளம்ஸ் பழத்தைக் கொட்டையோடு சாப்பிட்டுவிட்டால் என்ன ஆகும்?" என்று கேட்டேன். 
          
அண்ணன் கொஞ்சம் விவகாரமான ஆள். பூதம் படம் எல்லாம் சாக்பீசால் தரையில் வரைந்து, அதற்கு ப்ரூபரம் என்று ஒரு பெயரும் இட்டு, என்னையும் என் சின்ன அண்ணனையும் பயமுறுத்துவார். இப்போ தனியா ஒரு ஆடு போல போய் அவரிடம் சிக்கிக்கொண்டு விட்டேன்! சும்மா விடுவாரா? 
             
"கொட்டையைச் சேர்த்துச் சாப்பிட்டயா? போச், போச்! எல்லாமே போச்சு. அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள் உன் வயிற்றில் அது செடியா மொளச்சு, ரெண்டு மூணு வருஷத்துல மரமாயிடும். அதற்கப்புறம் பிளம்ஸ் பழம் வேண்டும் என்றால், நாம சந்தைக்குப் போகவேண்டாம். உன் கிட்டேயிருந்தே பறிச்சுக்கலாம்!"
              
அவ்வளவுதான். எனக்கு கிலி பிடித்துவிட்டது. இரண்டு மூன்று நாட்கள் சரியாகத் தூங்காமல் வயிற்றைத் தடவிக் கொண்டே இருந்தேன். அந்த நாட்களில் நிறைய வெந்நீர் சாப்பிட்டேன். வெந்நீர் ஊற்றினால் செடி வளராது, பட்டுப் போயிடும் என்று அம்மா சொல்லியிருக்கின்றாள்! 
             
லேசாக வயிறு வலித்தால் கூட ஸ்கூலுக்குப் போகாமல் வீட்டில் இருந்து வெந்நீர் குடித்துக்கொண்டு இருந்தேன்! 
           
நிறைய வெந்நீர் குடித்ததால், பிளம்ஸ் மரம் வயிற்றில் வளராமல் போயிடுச்சு!   
    

20 கருத்துகள்:

  1. பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியிருக்குமோன்னு தோணுது.

    பதிலளிநீக்கு
  2. பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியிருக்குமோன்னு தோணுது. பழம் தின்று கொட்டை போட்டவர்கள் யாரவது சொன்னால் நல்லாருக்கும்

    பதிலளிநீக்கு
  3. மதுரையிலே சிரிப்பாச் சிரிக்கும். ரொம்பவே விலையும் குறைவா இருக்கும். சின்ன வயசில் பழம்னு சாப்பிட்டது இது ஒண்ணைத் தான். :)))) ஆனால் கொட்டை இருக்குனும், அதைத் துப்பணும்னும் தெரியுமாக்கும்! :)))

    வாழைப்பழம் வாங்கினால் நவராத்திரி, கிருஷ்ணன் பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி போன்ற நாட்களிலும் வீட்டில் அப்பா செய்யும் ச்ராத்தம் அன்றும் தான் வாங்குவார்கள். அதெல்லாம் மிச்சம் இருந்து கிடைச்சால் ரொம்பவே அதிசயம்.

    பெரியப்பா சென்னையிலிருந்து வரச்சே மாம்பழம் வாங்கிண்டு வருவார். எங்க அப்பா அதை இரண்டு பக்கக் கதுப்பையும் எடுத்துட்டுக் கொட்டையில் மிச்சம் , மீதி இருக்கும் கதுப்புக்களையும் சுரண்டி விட்டு வெறும் கொட்டையைச் சப்பக் கொடுப்பார். அப்போல்லாம் அது கிடைச்சதே பெரிய விஷயம். வாசல்லே நின்னுட்டு எல்லோரும் பார்க்கும்படி பெருமையாச் சப்பிட்டு இருப்போம். :))))

    முதல் முதலாக முழு மாம்பழம் சாப்பிட்டது சின்னமனூரில் என் சித்தி வீட்டில், சித்தப்பா கட்டாயப்படுத்திச் சாப்பிடச் சொன்னது. அப்பாவுக்குத் தெரிஞ்சுடுமோனு நான் பயந்த பயம்! :))))) இப்போ நினைச்சாலும் சிரிப்பு வரும்.

    இங்கே புக்ககத்தில் நேர் மாறாக நடக்கும். நான் கல்யாணமாகி வந்தப்போ கடைசி மைத்துனருக்கு ஐந்து வயது. மூணு வேளையும் மாம்பழம் முழுப்போடு போடுவார் அப்போவே. யாருமே கண்டுக்க மாட்டாங்க. எனக்கு அது கலாசார மாறுபாடாத் தெரிஞ்சது! ஷாக் ஆயிட்டேன். :))))))

    பதிலளிநீக்கு
  4. முழு மாம்பழம் சாப்பிடறாச்சே பதினைந்து வயசு ஆயிடுச்சு! :))) அந்த விஷயத்தில் என் தம்பி அதிர்ஷ்டக்காரர். அவர் 10, 11 வயசிலேயே சாப்பிட்டார். :))))

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா! ப்ளம்ஸ் பழமெல்லாம் வளர்ந்த வயதில்தான் நான் கண்டேன்! அதில் ஆர்வமும் இல்லை! ஆனால் உங்க கதை ரொம்ப சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  6. ஊட்டி போனால் வாங்கும் பழம் ப்ளம்ஸ்..

    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் அமர்ந்திருக்கும் வெண்நாவல்மரம் ஒருமுனிவரின் தலைவழியாக முளைத்திருக்கும்..

    எனவே நாவல்பழம் சாப்பிடுபோது கவனமாக இருப்போம்..

    இப்போதுதானே சர்க்கரை வியாதிக்கு நாவல்பழ்கொட்டை நல்லமருந்து என கண்டுபிடித்திருக்கிறார்கள்..!

    பதிலளிநீக்கு
  7. // இக்காலப் பசங்க குஷ்பூ என்று கூட சொல்லலாம்//

    Was this article written during 90s ?

    பதிலளிநீக்கு
  8. // வெந்நீர் ஊற்றினால் செடி வளராது, பட்டுப் போயிடும் என்று அம்மா சொல்லியிருக்கின்றாள்!

    லேசாக வயிறு வலித்தால் கூட ஸ்கூலுக்குப் போகாமல் வீட்டில் இருந்து வெந்நீர் குடித்துக்கொண்டு இருந்தேன்!

    நிறைய வெந்நீர் குடித்ததால், பிளம்ஸ் மரம் வயிற்றில் வளராமல் போயிடுச்சு! //

    One of the reasons for water scarcity, today.

    A tree will fail on getting added certain amount of 'mercury' too. Thank God, your mother didn't tell you this.

    பதிலளிநீக்கு

  9. அடுத்து நீலகிரியில் அதிகமாகக் கிடைக்கும் ஆரஞ்சு, பேரிக்காய், வால் பேரி போன்றபழங்கள் தின்ற அனுபவமா.? மறந்து விட்டேனே பீச்சஸ் (peach) பழமும் சாதாரணமாகப் பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  10. // மாடிப்படி மாது said...

    பழம் மருவி பளம்னு மாறி அப்புறம் பிளம்ஸ்ன்னு மாறியிருக்குமோன்னு தோணுது. //
    சார், நீங்க எப்பவுமே இப்படித்தானா (யோசிப்பதில்), இல்ல இப்படித்தான் எப்பவுமேவா ?

    பதிலளிநீக்கு
  11. நெய்வேலியில் இருந்த போது, வீட்டிலேயே மாமரம், பலாமரம், சாத்துக்குடி, பம்ப்ளிமாஸ், சீதாப்பழம், வாழைமரம் என ஏகப்பட்ட ம்ரங்கள் இருக்க, வெளியே வாங்கிக் கொடுப்பது என்பது மிகவும் குறைவு.

    சில சமயங்களில் வெள் ஊர்களில் இருந்து வரும் உறவினர்கள் வாங்கி வந்தால் உண்டு. விடுமுறையில் விஜயவாடா செல்லும்போது வாங்கி சாப்பிடுவோம்.....

    மரம் முளைச்சிருந்தா எவ்வளவு வசதியா இருந்திருக்கும் - இப்படி வென்னீர் விட்டு வளர விடாம செஞ்சிட்டீங்களே :)))))

    பதிலளிநீக்கு
  12. நம்ம ஊரிலேயே நிறைய வித பழங்கள் கிடைத்தாலும் வெளியுர் பழங்கள் என்றால் கொஞ்சம் மௌஸ் அதிகம் தான். பெயர் கொஞ்சம் வித்தியாசமாக வெளிநாட்டு பாணியில் வேறு இருக்கிறதா.... அதனால அதன் மேல் சிறு வயதில் எனக்கும் கொஞ்சம் மோகம் வந்தது தான்.
    வாங்கி சாப்பிட்டால் துவக்கத்தில் இனிப்பது கடைசியில் புளிப்பாக வந்து வாயைக் கெடுத்தது. அதிலிருந்து விரும்பி சாப்பிடுவதில்லை. இங்கே பிரான்சுக்கு வந்த பிறகு “அப்ரிகோ“ என்ற பழ மரத்தை வாங்கி நட்டேன். இரண்டு வருடத்தில் நான்கு ஐந்து “அப்ரிக்கோ“ பழம்“ காய்த்தது. பிறகு மரம் காய்ந்து விட்டது. அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன். ஆனால்....
    அந்த மரத்தின் அடி கிளையிலிருந்து துளிர்விட்டு தனியாக ஒரு கிளை வளர்ந்தது. அதில் இந்த வருடம் காய் விட்டு பழுத்தப் பிறகு பார்த்தால் அது பிளம்ஸ்!! வேற வழியில்லாமல் பறித்து அனைவருக்கும் கொடுத்தேன்.
    இது எப்படி மாறியது என்று தெரியவில்லை!!
    உங்களின் பதிவைப் பார்த்ததும் இந்த ஞாபகம் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  13. நல்ல வேலை செய்தீர்கள்:))! வெந்நீரைக் குடித்ததால் பிழைத்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. ஹை வெந்நீர் வைத்தியம் சூப்பர். திண்டுக்கல்லில் பிறந்து வளர்ந்ததால் ப்ளம்ஸ் நிறைய சாப்பிட்டு இருக்கோம். அவசர அவசமா நிறைய சாப்பிடணும் என்பதால் கொட்டையோடு நிறைய சாப்பிட்டு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  15. ஹாஹாஹா ரொம்ப ரசித்தோம்....
    (அப்போ எல்லாம் தமிழ் சினிமாவில் இதெல்லாம் திட்டுகின்ற வார்த்தை கிடையாது. இப்போதான் நாடு ரொம்பக் கேட்டுப் போயிடிச்சு!) // ஹாஹஹ...
    .
    அவருக்கு எப்படித் தெரியும் நான் அஞ்சு பழம் சொன்னா அதுல முதல் பழம் பிளம்ஸ் என்று சொல்வேன் என்று!// ஹாஹாஅ நல்ல டெக்னிக்...ஆனா எப்பவும் வொர்க் அவுட் ஆச்சோ?!!

    ஆமாம் அப்பொல்லாம் ஏதவதுகொட்டையை முழுங்கிட்டா அது மரமா முளைக்கும் என்று சொல்லுவது எல்லாம்.....

    ரொம்ப அழகா எழுதிருக்கீங்க உங்க அனுபவத்தை!

    பதிலளிநீக்கு
  16. ப்ளம்ஸ் அருமையான பழம்...நல்ல சிவப்பு கலரில் இருந்தால் நல்ல சுவையாக இனிப்பாக இருக்கும்.....ஊட்டி ப்ளம்ஸ் ரொம்ப நல்லாருக்கும்....மரத்த வென்நீர் விட்டு பட்டு போக வைச்சுட்டீங்களே! ஹாஹாஅ...

    பதிலளிநீக்கு
  17. கருத்துரைத்த எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. கொடைக்கானல் பழங்கள் திண்டுக்கல்லில் நிறைய கிடைக்கும். பண்ணைக்காடு போஸ்ட் மாஸ்டர் ப்ளம்ஸ் அனுப்புவார்.ரசித்து ருசித்திருக்கிறோம். கீதா சொல்வது போல மதுரையிலும் கிடைக்கும். உங்கள் ப்ளம்ஸ் ஆசை வெWWஈரில் முடிந்ததா. நல்ல சுவையான திங்கள் தீனி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!