நேற்று வெங்கட் தனது தளத்தில் இணையத்திலிருந்து ஒரு படம் வெளியிட்டு, அதற்கு அங்கு யாரோ எழுதி இருந்த கதையையும் கொடுத்திருந்தார். இன்னொரு படம் போட்டு அதற்கு கதை நம்மைக் கேட்டிருக்கிறார்.எனக்கு படம் பார்த்து கதை எழுதி பழகி விட்டது. எனவே அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்த படத்துக்கு நானும் ஒரு கதை எழுதி அங்கு அனுப்... இல்லை, இருக்கவே இருக்கு செவ்வாய்.. இங்கும் பகிர வேறு ஏதாவது தேடணும்.. எதற்கு தேடிகிட்டு? இதை செவ்வாயில் போட்டுடலாம்னு இங்கே போட்டுட்டேன்!
அந்த இன்னொரு படத்துக்கு கதை? அவர் கடைசி தேதி எதுவும் சொல்லவில்லை... Mail IDயும் கொடுக்கவில்லை. என்னிடம் அவர் ID இருக்கும்தான். பார்ப்போம்.
========================================================================================
கதாசிரியர்
- ஸ்ரீராம் -
"பையா... என்ன என்னை ரகசியமா படம் எடுக்கறே? 'இன்ஸ்டா'ல போஸ்ட் போடப்போறியா?"
"அய்யய்யோ.. மன்னிச்சுடுங்க தாத்தா... தெரியாம எடுத்துட்டேன். எதற்காவது உதவும்னு எடுத்தேன்.."
"எடுத்துக்கோ தப்பில்லே.. நான் என்ன நடிகையா நடிகனா, எடுக்கக் கூடாதுன்னு சொல்ல.. என்னையும் ஒருத்தன் படமெடுக்கறானேன்னு சந்தோஷம்தான்"
"அப்புறம் தம்பி,, தாத்தான்னு கூப்பிடாத... அங்கிள்னு கூப்பிடு. ஸ்கூல் பசங்க வேணா என்னை தாத்தான்னு கூப்பிடலாம்.. ஹா.. ஹா.. ஹா
"சரி தாத்... ஸாரி அங்கிள்.. சரி அங்கிள்"
"சரியா ஸாரியா ஒரு தெளிவில்லையே தம்பி உன்கிட்ட.."
"இல்லை அங்கிள்.. நரைச்ச தலை, கைல தடி.."
"ஓ.. இந்த தடியா? எங்க தெருவிலும் சரி, இங்கயும் சரி, நாய் நிறைய இருக்கு. ஒண்ணும் பன்ணறதில்லைதான். இருந்தாலும் ஒரு ஜாக்கிரதைக்கு... திடீர்னு ஒருநாள், தப்பித்தவறி பக்கத்துல வந்தா மிரட்டறதுக்கு. மிரட்டறதுக்குதான்.. அடிக்க மாட்டேன்... அது என்னை ஒண்ணும் பண்ணாத வரை நானும் வன்முறையை கையில் எடுக்க மாட்டேன்!" கொஞ்சம் சத்தமாக சிரித்தவாறு, தொடர்ந்து "இதுவரைக்கும் ஒண்ணும் பண்ணல்லன்னு கேர்லெஸ்ஸா இருக்கக் கூடாது பாரு.."
கொஞ்ச நேரம் இருவரும் கடலைப் பார்த்தபடி மௌனமாயினர்.
"ஏன் அங்கிள் வயசனாதை ஒத்துக்க மாட்டேங்கறாங்க?"
"யாரு?"
"பொதுவா எல்லோரும்.. ஏன், நீங்களே கூடதான்..."
"என்னை மட்டும் நேரடியா கேக்க தைரியம் வரலை இல்ல?"
"ஆமாம் அங்கிள்.. உங்களுக்கு தெரியாததா? அது பயம் இல்ல.. மரியாதை, நாகரீகம்.."
"என்ன புண்ணாக்கோ.. இதுக்கு நீ கோச்சுக்காத.. எனக்கு கோவம்லாம் வராது. சரி சரி.. படம் எடுத்தியே.. என்ன எழுதுவே? எனக்கும் சொல்லு... நானும் ரசிக்கிறேன்"
"அப்போ என்ன தோணுதோ அதை எழுதுவேன் அங்கிள்.. ஒண்ணும் எழுதாம போட்டோ மட்டும் கூட போட்டுடுவேன்"
"சோகமா எழுதுவியா? ஜாலியா எழுதுவியா?
"அது நான் எடுக்கும் படத்தைப் பொறுத்து.. இப்போ உங்க படத்தை வைத்து சோகமா எழுத முடியுமா? இவ்வளவு சிரிச்ச மூஞ்சியோடு இருக்கீங்க.."
"அழுதால் அனைத்தும் நடந்துவிடுமா அன்பனே.. எப்படி நம்ம ரைமிங்? நாங்களும் எழுதுவோம்ல..?"
"நீங்க எழுதுவீங்களா அங்கிள்?"
"கடல் அலைகள் கூட நமக்கு பாடம் சொல்லுது தெரியுமா? பொங்கற அளவு பொங்கிட்டு அப்புறம் அமைதியாகி வீட்டுக்குப் போயிடணும்.. பொங்கி வரும் அலையெல்லாம் அடங்கி அமைதியா திரும்ப தன் வீட்டுக்குள்ள போறதைப் பார்த்தியா? அதுலேருந்து மக்கள் பாடம் படிக்கறாங்களா?"
பொங்கும் அலைகள்
போகிற போக்கில்
மனிதனுக்கு
ஒரு பாடம் சொல்லிச்
செல்கின்றன
பொங்கத் தெரிந்த மனதுக்கு
அடங்கவும்
தெரிவதுதான்
வாழ்க்கையின் வெற்றி..
எப்படி?"
"நல்லாயிருக்கு அங்கிள், நான் இதுமாதிரி இதுவரை யோசிச்சதில்ல"
"எல்லோரும் சொல்றதையே நாமளும் எப்படிச் சொல்றது? நாம என்ன ஒண்ணாங்கிளாஸ் ரெண்டாங்க்ளாஸ் பாடமா படிக்கறோம்?"
"சரி அங்கிள்.. தினசரி வந்து உட்கார்ந்துட்டு போறீங்க.. இன்னிக்கிதான் நான் உங்களை போட்டோ எடுத்ததை பார்த்தீங்க.. நான் ஏற்கனவே வேற வேற நாள்ல இரண்டு மூன்று தடவ உங்களை போட்டோ எடுத்திருக்கேன்.. நீங்க கவனிக்கலை"
"இருக்கலாம்.. போன வாரம் நான் ஒரு குழந்தையோட விளையாடிக்கிட்டிருந்ததை நீ போட்டோ எடுத்ததை பார்த்தேன்.. அதனாலேயே கொஞ்ச நேரம் போஸ் மாறாமல் இருந்தேன். நீயும்தான் அதை நோட்டீஸ் பண்ணலை"
'அட' என்று மனதுக்குள் வியந்து கொண்டான் அவன்.
"வீடு பக்கம்தானா அங்கிள்?"
"ஆமாம்ப்பா.. நடக்கற தூரம்தான். அதாவது என்னால நடக்க முடிஞ்ச தூரம்" புன்னகைத்தார் அவர்.
"ஆண்ட்டி தொல்லை தாங்காம டெய்லி இங்க வந்துடறீங்க போல.. ஒரு நாள் கூட மொளகா பஜ்ஜி அது இதுன்னு எதுவும் வாங்கிட்டு போக மாட்டேங்கறீங்களே.. பேரப் பசங்க கேட்க மாட்டாங்களா?"
"பதில் சொல்லாமல் அவனை ஒருமுறை பார்த்து விட்டு அந்தப் பக்கம் திரும்பி கடலைப் பார்த்தார். சிரித்தார்.
"ஏதாவது கேக்கணும்னா நேரா கேளேன்.தம்பி.. உன் பேரென்ன..?"
"தம்பின்னே வச்சுக்குங்களேன்.."
"ஹா... ஹா.. ஹா.. பதிலுக்கு பதிலா? இப்படி உட்காரு தம்பி"
அவன் உட்கார்ந்ததும், தாண்டிச் சென்ற கடலைக்காரனைக் கூப்பிட்டு இரண்டு கடலைப் பொட்டலம் வாங்கி அவனிடம் ஒன்றை நீட்டினார். கொஞ்சம் தயங்கி விட்டு அவனும் வாங்கி கொண்டான்.
ஒவ்வொரு கடலையாக
நிதானமாக தோல் உதிர்த்து வாயில் போட்டபடி பேசினார் அவர்.
"வீட்ல ஆண்ட்டியும் நானும் மட்டும்தான்..." ஆண்ட்டிக்கு ஒரு அழுத்தம் கொடுத்து சொல்லி சிரித்தார் மறுபடியும்.
"நான் அங்கிள்னா அவங்க ஆண்ட்டிதானே?"
திரும்பி அவனைப் பார்த்தார். அவன் பார்வையைப் படித்தவர்.. "யங் மேன்.. டோன்ட் ஜம்ப் இன்டு கான்க்ளூஷன்ஸ்.. நீ நினைக்கற அளவு நான் தனியா கஷ்டப்படற சீனியர் சிட்டிசன் இல்ல" மறுபடியும் சிரித்தார்.
"என்னோடது ஐடியல் குடும்பம்... புரில? ஒரு பையன் ஒரு பொண்ணு.. பொண்ணு கல்யாணமாகி திருச்சில இருக்கா.. பையன் நாங்க இருக்கற வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்கான்.."
வாயில் போட்ட கடலையை துப்பினார். "ஒரு பொட்டலத்துல எவ்வளவு சொத்தை கடலை பாரு.. இதுவரைக்கும் அஞ்சாறு சொத்தை"
"வேற இன்னொண்ணு வாங்கிட்டு வரவா அங்கிள்?"
"வேணாம் வேணாம்.. இன்று இப்படி போச்சு.. அவ்ளோதான்.. எல்லா நாளும் எல்லாமும் சரியா வந்துடாது. "
மீண்டும் கடலையும் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தவர் பேச்சைத் தொடர்ந்தார்.
"என் மகனின் பசங்க.. அவனும் ஐடியல் பேமிலிதான்.. ஒரு பொண்ணு, ஒரு பையன்,, சாயங்காலமானா ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் மாத்திட்டு, அவங்க ஆண்ட்டி கிட்ட டியூஷன் படிக்க வந்துடுவாங்க. இப்போ இப்போ அவங்களோட இன்னும் ரெண்டு பெரும் - அவங்களோட க்ளாஸ்மேட்ஸ் - வர்றாங்க.. ஆண்ட்டி எல்லோருக்கும் டியூஷன் எடுப்பா.. ஃப்ரீ தான்.. அவ படிச்ச படிப்பு வீணாகக் கூடாதே... நான் அவங்களுக்கு தொந்தரவா இருக்க வேணாம்னு அந்த நேரம் இங்க வந்துடுவேன்.."
"ஓ.." தலையாட்டிக் கொண்டான் தம்பி.
"என்ன, நீ எதிர்பார்த்த ஒரு சோகக்கதை இல்லையா? "
"அப்படியெல்லாம் இல்ல அங்கிள்.." சிரித்தான். கொஞ்சநேரம் வேறு ஏதோ பேசிவிட்டு சொன்னான் "கிளம்பறேன் அங்கிள்.. மறுபடி பார்க்கலாம்"
கையாட்டி விடை கொடுத்தவர் மறுபடி மக்களையும் கடலையும் புன்னகையுடன் பார்க்கத் தொடங்கினார்.
கொஞ்ச தூரம் சென்றவன் ஏதோ சந்தேகத்துடன் திரும்பி அவரைப் பார்த்தான். அவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர் மறுபடி சிரித்து கையாட்டினார்.
===========================================================================================
=======================================
குட்டி ஈன்ற தாய் யானையை காவல் காக்கும் தங்கை, மகன்: வால்பாறை வாகைமலையில் ஆச்சரியமூட்டும் காட்சி :
குட்டி ஈன்ற தாய் யானையை, கவனமாக கண்காணித்து, காவல் காத்து வருகின்றன அதன் சகோதரி யானையும், மகன் யானையும். வால்பாறை வாகைமலை பகுதியில் இந்த கண்கொள்ளக்காட்சியை கண்டு ஆச்சரியப்படுகின்றனர் பொதுமக்கள்.
தமிழக-கேரள வனப் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம் வால்பாறை. இங்குள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.
இவை அடிக்கடி அருகில் உள்ள தேயிலை தோட்டப் பகுதிகளுக்குள் நுழைவதும், குடியிருப்புகள், கடைகளை துவம்சம் செய்வதும், மக்கள் அவற்றை விரட்டுவதும் வழக்கம்.
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை வாகைமலை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை குட்டி ஈன்று, அந்தப் பகுதியை விட்டு நகராமல் உள்ளது.
இந்த யானையை, அதன் சகோதரி யானையும், மகன் யானையும் சில அடி தூரத்தில் நின்று காவல் காத்து வருகின்றன. இங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் 13 யானைகள் சுற்றித் திரிகின்றன.
இந்த கண்கொள்ளாக் காட்சியை அப்பகுதி மக்கள் பரவசத்துடன் பார்க்கின்றனர். எனினும், யானைகள் இருக்கும் பகுதிக்கு அருகில் மக்கள் சென்றுவிடவேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வனத் துறையினர் கண்காணிப்பு
“பொதுவாக தாய் யானை குட்டி ஈன்றால், அந்தக் குட்டியை விட்டு சிறிதுதூரம் கூட நகராது. குட்டி ஓரளவுக்கு நடந்து செல்லும் பக்குவத்துக்கு வந்த பின்னரே, குட்டியையும் அழைத்துக்கொண்டு, மற்றொரு இடத்துக்குச் செல்லும். அதற்கு 10 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகலாம்.
தன் குட்டிக்கு மற்ற விலங்குகளாலோ, மனிதர்களாலோ துன்பம் நேரிடுவது தெரிந்தாலும், குட்டியுடன் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகரும். அப்படி நகரும்போது, குட்டி யானைக்கு ஆபத்து நேர்வதும்உண்டு. எனவே, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகிறோம். மேலும், தாய் யானை இருக்கும் பகுதி, யானைக் கூட்டம் நிற்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர் வனத் துறையினர்.
இதுகுறித்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (என்.சி.எஃப்) நிர்வாகியும், வன விலங்குகள் ஆய்வாளருமான ஆனந்தகுமார் கூறியது:
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் வால்பாறையில் யானைகள் இடம்பெயர்வது அதிகமாக இருக்கும். இதே சமயங்களில்தான், காட்டு யானைகள் குட்டி போடுவதும் சகஜம்.
பசுமையான வனப் பகுதி
பெரும்பாலும் அடர்ந்த வனப் பகுதியில், தண்ணீரும், பசுமையான உணவும் கிடைக்கும் பகுதியில்தான் யானைகள் குட்டி ஈனும். இந்த யானையும் பக்கத்தில் உள்ள காட்டில்தான் குட்டி ஈன்றுள்ளது. இப்பகுதியில் உணவும், நீரும் நிறைய இருப்பதால், அங்கிருந்து இங்கு வந்துள்ளது.
மேலும், குட்டி ஈன்ற யானையை, அதற்கு நெருக்கமான உறவு முறையுள்ள யானைகள்தான் காவல் காக்கும்.
அந்த வகையில், இந்த யானைக்கு அருகில் நின்று கண்காணிக்கும் மற்றொரு பெண் யானை, இதன் சகோதரியாக இருக்கக்கூடும்.
மேலும், அதனுடன் இருக்கும் ஆண் யானைக்கு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். இந்த யானையும் உடன் நிற்பதைப் பார்க்கும்போது, குட்டி ஈன்ற யானையின் பிள்ளையாக இருக்கும். அல்லது அதனுடன் நிற்கும் சகோதரியின் குட்டியாகவும் இருக்கலாம்.
பொதுவாக, ஆண் யானைகள் குறிப்பிட்ட பருவத்துக்குமேல் கூட்டத்தில் இருக்காது. அதற்கு பெண் யானைகளை விட கூடுதலான உணவு, நீர் தேவை. எனவே, அது தனியாகச் சென்று உணவு தேடி, சாப்பிடும். இந்த சிறிய ஆண் யானை, பெரிய யானையுடன் இருப்பதற்கு, அந்த 2 யானைகளில் ஒன்றின் குட்டியாக இருக்கலாம் என்று கருதவாய்ப்புள்ளது என்றார்.
இதுகுறித்து வன விலங்கு ஆய்வாளர்கள் கூறும்போது, “யானைகள் பெரும்பாலும் காட்டுக்குள்தான் குட்டி ஈனும். மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து, குட்டி ஈனாது. இங்கு தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனத்துக்குள் குட்டியுடன், தாய் யானையும் வந்துள்ளதற்கு, உணவும், நீரும் இங்கு கிடைப்பதே காரணம். இது மிகவும் ஆபத்தானது.
சில ஆண்டுகளுக்கு முன் சோலையாறு பகுதிக்கு குட்டியுடன் வந்த தாய் யானை, ஆற்றைக் கடக்கும்போது குட்டியைத் தவறவிட்டுவிட்டது. ஆற்று வெள்ளத்தில் குட்டி அடித்துச் சென்றதால், தாய் யானையுடன் வந்த யானைக் கூட்டம் குட்டியைத் தேடி அலைந்தன. அவற்றின் பிளிறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியைக் காப்பாற்றினர். யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க வனத் துறையினர் முயன்றனர். ஆனால், யானைகள் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டன. பின்னர், அவற்றின் வழித்தடத்தைக் கண்டறிந்து, குட்டி யானையை வனப் பகுதிக்குள் கொண்டுசென்று, யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிட்டனர். குட்டியும் அந்த கூட்டத்துக்குள் சென்று, தாயுடன் சேர்ந்துகொண்டது.
ஆனால், என்ன காரணத்தாலோ, யானையே குட்டியை சேர்க்காமல் துரத்தியடித்தது தாய் யானை. இதில், அந்த குட்டி யானை இறந்தே விட்டது. எனவே, தாய் யானை, குட்டியுடன் காட்டை விட்டு ஊருக்குள் வருவதால், அதைச் சார்ந்த யானைக் கூட்டத்தால் மக்களுக்கு மட்டுமல்ல; இயற்கை இடர்கள், வன விலங்குகளால் யானைக் குட்டிக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, இவற்றின் அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது” என்றனர்.
- தி இந்து (தமிழ்) - நாளிதழிலிருந்து... 2016
இதுபற்றி பகிர்ந்தும் என் மாமா விசு பகிர்ந்த செய்தி ஒன்று. அவர் அந்த ஏரியாவில்தான் பணிபுரிந்தார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயிலில் பர்லியாறு அருகில் குட்டி யானை ரயில்வே லைனைக் கடக்கும்போது ரயில் மோதியதில் குட்டிக்கு காயம். காலை 8-30 க்கு நடந்த இந்த சம்பவம்.... மாலை 5-00 மணிக்கு அதே ரயில் பர்லியாறு பக்கம் வரும்போது ரயில் ஓட்டுநர் ரயிலை தூரத்தில் நிறுத்தி விட்டார்.அவர் கண்ட காட்சி: காலையில் குட்டி அடிபட்ட இடத்தில் 5 யானைகளுக்குமேல் கூடி......வரட்டும் ரயில் நம்மைத் தாண்டி எப்படிப் போகிறது எனப் பார்ப்போம் என்ற பாணியில் நின்றுகோண்டிருந்ததுதான். விசு
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஎன்னடா இன்னும் யாரையும் காணோம் என்று வாசலில் நின்று வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன்!!!
உடன் பதிலுக்கு நன்றி. வாசலில் நின்று வழிமேல் பார்த்திருந்த அந்த விழிகள் பூத்து விட கூடாதென்று என்னை அனுப்பி வைத்த அந்த இறைவனுக்கும் நன்றி.
நீக்குஏதோ ஒரு படத்தில் SJ சூர்யா சொல்வது போல "நான் நினச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க"
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை நன்றாக உள்ளது. நேற்று இரவு தாமதமாக சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்களின் பதிவில் இந்தப்படத்துடன் வந்த சிறுகதையும் படித்தேன். உடன் கருத்து தெரிவிக்கவில்லை. இன்று தரலாமென நினைத்துப் படுத்து விட்டேன். இப்போது உங்களிடமிருந்தும் அதே படம் கதை வேறு. இவ்வளவு விரைவில் நல்ல பாஸிட்டிவாக ஒரு சிறுகதையை யோசித்து எப்படி? அசத்தி விட்டீர்கள் போங்கள்...! மிகவும் ஆச்சரியமாக உள்ளது. "கதாசிரியர் ஸ்ரீ ராம்" என்ற தலைப்பும் நன்றாக உங்களுக்குப் பொருந்திய விட்டது. தங்கள் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. அங்கும் படித்திருக்கிறீர்கள் என்பது கூடுதல் ப்ளஸ்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல கதை. காலை எழுந்தவுடன் (இப்போது ஆறு மணிக்குத்தான் எழுந்தேன்.) கதையை படித்தவுடன் இன்னமும் நினைக்க, நினைக்க வியப்பு மேலோங்குகிறது. "ஓர் இரவில் வெள்ளியென உதயமான கதை." தங்கள் திறமைக்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவர் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்த அந்த இன்னொரு பெண்ணின் படத்திற்கேற்ற கதைக்கும் தங்களுக்குத்தான் பரிசு நிச்சயமாக காத்திருக்கிறது. அதையும் விரைவில் படிக்க ஆவலாக இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// அந்த இன்னொரு பெண்ணின் படத்திற்கேற்ற கதைக்கும் தங்களுக்குத்தான் பரிசு நிச்சயமாக காத்திருக்கிறது. //
நீக்குஹா ஹா ஹா முடிவே செய்து விட்டீர்கள் போல... மற்றவர்கள் எழுத்தின் திறமையை நீங்கள் அறியாதவரா என்ன! மட்டுமல்ல.. வெங்கட் எல்லோருக்குமே பரிசு கொடுப்பார்!! இல்லையா வெங்கட்?!
வெங்கட் தளத்தில் கதையைப் படித்தேன்.
பதிலளிநீக்குஇங்கு நீங்கள் எழுதியுள்ள சிறுகதை என்ன சொல்ல வருகிறது? கடைசி வரியில், திரும்பிப் பார்த்தபோது அங்கு தாத்தா இல்லை, தடி மாத்திரமே இருந்தது என்பது போல அமானுஷ்யமாக முடியுமோ என நினைத்தேன்.
உரையாடல்கள், கவிதை ரசிக்கும்படி இருந்தது. ஆனால் சிறுகதையா?
வாங்க நெல்லை.. கதை ஏதாவது சொல்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்! சொல்ல வேண்டுமா?
நீக்குகதை ஏதேனும் சொல்ல வேண்டும். வெறும் பேட்டி போன்ற த்வனியைத் தருகிறது.
நீக்குநான் கவனிக்காத்தை புரிந்துகொள்ளாத்தை யாரேனும் எழுதுகிறார்களா என்று பார்க்கணும்.
அதாவது ஒரு ட்விஸ்ட்... அல்லது அம்புலிமாமா போல ஒரு நீதி? அதுதானே?
நீக்குயானை பற்றிய நிகழ்வுகளே வசீகரம்.
பதிலளிநீக்குமூணாறில் யானைச் சவாரி செய்தேன்... எவ்வளவு கஷ்டம் சவாரி செய்வது.
அங்கு யானைக்கூட்டத்தைக் காணச் செல்ல வாய்ப்பு கிடைக்கலை. இந்த வருடம் பயணிக்க நினைத்திருக்கிறேன்.
நான் யானையை கோவிலில் பார்த்திருப்பதோடு சரி!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குயானைகள் பற்றிய செய்திகளும் சுவாரஸ்யமாக இருந்தது. யானைகளும் தாய் பாசத்தில் மிஞ்சியவை இல்லை. முன்பு யானை பற்றிய காணொளிகள் சில பார்த்துள்ளேன்.அடுத்தடுத்து நிறையவும் பார்த்துள்ளேன். ஆனால், இரவில் கனவில் யானைகள் வருவதால் நிறுத்தி விட்டேன்.
நீரில் விழுந்த அந்த குட்டி யானையை மக்கள் காப்பாற்றி அதன் தாயுடன் சேர்த்த பின்னும் அந்த தாய் யானைக்கு என்ன கோபமோ.? ஏன் அந்த குட்டியை புறக்கணித்ததோ? . ஆனால் அதுவும் விரைவில் மரணத்தை அடைந்தது துயரமான செய்தி.
தங்கள் மாமா தந்த செய்தியும் வியப்பு. அது யானைகளின் கோபத்தை காட்டுகின்றன. யானை தன்னை துன்புறுத்தியவர்களை என்றுமே நினைவில் வைத்திருந்து பழி வாங்குமாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சில விஷயங்கள் என்றுமே நிரந்தர ஆச்சர்யம் அளிக்கக்கூடியவை. அதில் யானையும் ஒன்று. இல்லையாஅக்கா?
நீக்குயானை கனவில் வருவதை, பிள்ளையாரே கனவில் வருவதாக ஏன் நினைக்கத் தோன்றவில்லை?
நீக்குபிள்ளையாரும் ஒரிரு முறைகளுக்கும் மேலாகவே வந்திருக்கிறார். அன்பாக பேசியிருக்கிறார். அன்றொரு நாள் கனவில் நான் பூக்களை அவர் மேல் தூவியதும், அவர் செய்த புன்னகை மனதுக்கு இதமாக இருந்திருக்கிறது. கனவு உடனே கலைந்து விட்டது. மறுநாளும் அது தொடராதா என மனம் ஏங்கியது. / எதிர்பார்த்தது. இன்னமும் எதிர்பார்த்தபடி உள்ளது.
நீக்குஅவர் கோபமாக இருப்பது போல் வந்தால், நமக்கும் அந்த கனவு மறையாமல் இருந்தால் அன்று முழுவதும் மனசு வருத்தப்படும். அன்று முழுவதும் மட்டுமில்லாமல், ஓடும் வாழ்க்கையில் சிறு தவறுகள் ஏதும் வந்தாலும் "அதுதானோ அன்று இறைவனே கனவில் காட்டியுள்ளாரோ" என நினைத்து கவலை கொள்ளும்.
மேலும்,, அதேப் போல் யானை துரத்துவது போல் கனவில் வந்தால் நாம் எடுக்கும் ஓட்டத்தில்நம் இருதயம் அடித்துக் கொள்ளுமே..! அதை நம்முடைய நல்ல தூக்கத்தில் நிறுத்தவே (ஒரேடியாக நிறுத்தவும் இறைவன் மனம் வைக்க வேண்டும்.) தூக்கம் கலைந்து விழித்து கொண்டாலும் பல மணி நேரமாகும். அதனால்தான் யானை பற்றிய காணொளிகளை இரவில் படிப்பதில்லை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீங்களும், கதையுடன் கவிதையையும் கூடுதல் ப்ளஸாக.இணைத்து விட்டீர்கள். பொங்கும் கடலுடன் மனதையும் இணைத்து தந்த கவிதை அருமை. அதைக் குறிப்பிட மறந்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குசிறுகதை என்றால் ஒருதுவக்கம், ஒரு முடிச்சு, அதற்கு ஒரு தீர்வு என்ற வழக்கமான ஃபார்மெட்டிலிருந்து மாறுபட்டு ஒரு கதையை தந்திருக்கிறீர்கள், எங்களுக்கு நிறைவைத் தந்ததா? என்றால் ஹிஹி!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. இந்த ட்ரெண்ட்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு புத்தகமே வரப்போகிறது!
நீக்குஅப்படியா? நான் கூட இப்படி ஒரு கதை ஆரம்பித்து, சம்பவம் எதுவும் இல்லையே என்ரு பாதியில் நிறுத்தியிருக்கிறேன்.
நீக்குஓகே அக்கா.
நீக்குட்ரெண்டா,?.. கொடுமை!
நீக்கு'மெல்ல இனிச் சாகும்' என்று பாரதியார் சொன்னது இன்றைய தமிழ் எழித்துலகிற்கும் பொருந்தும் போலிருக்கு.
சிவசங்கரி இப்படி சம்பவங்களே இல்லாமல் 'பொழுது' என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அது இலக்கிய சிந்தனை பரிசுக்குக் கூட தேர்வானது. ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.
பதிலளிநீக்குஓ.. அப்படியா?
நீக்குG.V. Sir உங்களுக்கு தெளிவாக வழிகாட்டக் கூடும்.
பதிலளிநீக்குநன்றி அக்கா. கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.
நீக்குயானை பற்றிய செய்தி ஆச்சர்யம்! வியப்பான விலங்குதான்.
பதிலளிநீக்குஆமாம். பிரமிக்க வைக்கும் உயிரினம்.
நீக்குபடம் பார்த்து கதை சொல் என்று பிள்ளைகளுககு ஒரு வீட்டு பாடம் கொடுப்பார்கள். அது போல் இன்றைய கதை எழுத்ப்பட்டிருக்கிறது. கதையின் தரம் பற்றி மற்றவர்கள் கூறி விட்டார்கள்.
பதிலளிநீக்குநேற்று இப்படத்திற்கு பின்னூட்டமாக //மெரினாவில் எப்படீங்க சன்செட் வரும். சன்ரைஸ் தான் வரும். // என்று துவங்கி அதை வெளியிடாமல் இருந்து விட்டேன்.
இது போன்ற உரையாடல்களை கதை என்று சொல்லாமல் "கண்டதும் கேட்டதும்" என்ற தலைப்பில் போடலாம்.
Jayakumar
வாங்க JKC ஸார்...
நீக்கு// கதையின் தரம் பற்றி மற்றவர்கள் கூறி விட்டார்கள். //
நன்றி. வெங்கட் எழுதுவது போல ராகாககா என்று கூட எழுதலாம்.
மெரினாவில் சூரிய அஸ்தமனும் வரும் ஜேகேசி சார். உலகம் உருண்டை அல்லவா? இதை நான் ஊட்டியில் தினம் தினம் அனுபவிச்சிருக்கேன். அருமையான காட்சி. கன்யாகுமரி முனையில் காலைஅவேளைகளில் பௌர்ணமீ சமயம் சந்திர அஸ்தமனமும் சூரிய உதயமும் பார்க்கலாம். மாலை வேளைகளில் ஒரே சமயம் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம்னு பார்க்கலாம். கொஞ்சம் யோசிச்சா உங்களுக்கே புரியும். நீங்க ஓர் விஞ்ஞானி.
நீக்குமெரினாவில் எப்படீங்க கடலில் சன்செட் வரும். கடலில் சன்ரைஸ் தான் வரும்.
நீக்குஇப்போ சரியா?
//கதையின் தரம் பற்றி மற்றவர்கள் கூறி விட்டார்கள்.// என்னைத் தவிர மற்றவர்கள் நன்றாக இருப்பதாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
நீக்கு//மெரினாவில் சூரிய அஸ்தமனும் வரும் ஜேகேசி சார்.// எப்படி கீதா அக்கா? மெரினா இருப்பது கிழக்கு கடற்கரை, மேற்கு கடற்கரையில்தானே சூரிய அஸ்தமனம் பார்க்க முடியும்? கன்யாகுமரி மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் இருப்பதால் அங்கு சூரிய அஸ்தமனம், சந்திரோதயம் இரண்டையும் ஒரு சேர பார்க்க முடியும்.
நீக்குநான் காலை வேளையில் ஜூஹூ பீச் சென்றிருக்கிறேன், அங்கு சூரியன் கடலிலிருந்து உதயமாகும் காட்சியைப் பார்த்ததில்லை. சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மெரினா சென்றிருக்கிறேன், அங்கு சூரியன் கடலுக்குள்மறையும் காட்சியையும் கண்டதில்லை.
நீக்குஸ்ரீராம், இயல்பான கதை. characterization த்வனியில் நகரும் கதை. இதில் பல யூகங்களை வாசிப்பவர்கள் யோசிக்கலாம். உதாரணத்திற்கு அப்பையன் கடைசியில் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே நகர்கிறான்....அவன் மனதில் ஓடியிருக்கும் இந்தத் தாத்தா சும்மா கதை விடுகிறாரோ? தன் குடும்பம் ஐடியல் குடும்பம் என்று?
பதிலளிநீக்குஏனென்றால், பொதுவாக ஒரு தாத்தாவோ, பாட்டியோ கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தால் உடனே சோகக் கதைதான் எல்லார் மனதிலும் தோன்றும். அதற்கு மாறாக எழுதியிருப்பதற்கே உங்களுக்கு ஒரு ஷொட்டு ஸ்ரீராம்!
கீதா
தனியாக அமர்ந்தால் சோகமா? பழைய காலத்தை நினைத்து, நம் அனுபவங்களை நினைத்து அசைபோடக் கூடாதா? இல்லை விளையாடும் சிறுவர்களைப் பார்த்து மகிழக்கூடாதா? இல்லை ஜோடிகள் வழிவதைப் பார்த்து, ஆஹா என்ன ரம்மியமான காலம், இது எப்போதும் நிலைக்கட்டும் என நினைக்கக்கூடாதா? இல்லை, தனக்குத் தராமல் ஒளித்துவைத்திருக்கும் பட்சணங்களை எப்படி தெரியாமல் எடுத்துச் சாப்பிடுவது என யோசிக்கக்கூடாதா?
நீக்குவாங்க கீதா.. நன்றி. பெரும்பாலும் நான் எழுதும் கதைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியக்கூறுகள் இருப்பது போலவே அமைக்க விரும்புவேன். விரும்புவது என்பதைவிட அப்படி வந்து விடும்!
நீக்குஅப்பாடி.. நெல்லை அதைத்தானே நான் முயன்றிருக்கிறேன்!
நீக்குஇப்படி கேள்வித்தூண்டில் போட்டுதான் பதிலை வரவழைக்க முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!
நீக்குஅந்தத் தாத்தா மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே படத்தில். எனவே கதையும் அதற்கு ஏற்ப நகர்வது அந்த இளைஞருக்கு டஃப் கொடுப்பது போல தாத்தா....ஓ ஸாரி ஸாரி அங்கிள்!!!! தாத்தா கோச்சுக்காதீங்க!!!!!!
பதிலளிநீக்குஉரையாடல்கள்.
இதில் இன்னொன்று அந்த இளைஞர், கொஞ்சம் வயதானவரோடு உரையாடும் வகையில், அதையும் ப்ளஸ் என்பேன்.
அந்த அங்கிளுக்கும் தன்னை அப்பையன் படம் எடுப்பது தெரிந்து போஸ் கொடுத்திருக்கிறார் அதற்கு முன்னர்!
இயல்பாக ஒரு கடற்கரையில் நிகழ்வதைப் படம் பிடித்துக் காட்டுவது போல....இருக்கிறது.
//கொஞ்ச தூரம் சென்றவன் ஏதோ சந்தேகத்துடன் திரும்பி அவரைப் பார்த்தான். அவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர் மறுபடி சிரித்து கையாட்டினார்.//
இது சாதரணமான ஒரு வரி போலத் தோன்றலாம். ஆனால் இதில் பல விஷயங்கள் மறைமுகமாகக் கலந்திருப்பதை உணரமுடிகிறது ஸ்ரீராம். இதையே கூட ஆரம்பமாக வைத்துக் கதை பிறக்க வழி இருக்கு ஸ்ரீராம்...இக்கதையிலிருந்தே!!
கீதா
அவரும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்பதற்குப் பதில் அவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் என வந்திருந்தால்?
நீக்குஆஹா... கீதா நீங்கள்தான் அந்த வரியை கவனித்திருக்கிறீர்களா. இன்னும் கூட ஒன்று பாக்கி இருக்கிறது...
நீக்குநாங்களும் பார்த்தோமுல்ல!
நீக்கு__/\__
நீக்குஅழகிய சிங்கருக்கு நன்றி சொல்லலாம் இல்லையா ஸ்ரீராம் படம் கொடுத்து 20 வரிகளுக்குள்க கதை எழுத சொல்லும் பயிற்சி இப்படியான characterization. கொண்டுவரும் அழகான பயிற்சி அது.
பதிலளிநீக்குகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு பிரேம் ஒர்க் இருக்கும் கதையை வாசிக்காமல் ஓபன் மைண்டோடு கதையை வாசிக்கும் போது பல புரிதல்கள் நமக்கு கிடைக்கும். கதை என்றால் ஆரம்பம் முடிச்சு அதை அவிழ்த்தல் முடிவு என்றுதான் இருக்க வேண்டுமா என்ன... ஃப்ரீ ஸ்டைல் ரைட்டிங் அதுதான் பொதுவாக ஆங்கில இலக்கியத்தில் கையாளப்படும் ஒன்று. இந்த கதையை நான் அந்த விதத்தில் பார்க்கிறேன். கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகிறது இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ அந்த ஸ்டைல் அதான் முதலில் சொன்னது போல் ஆங்கில இலக்கியத்தில் வரக்கூடிய கதைகள் போன்று எனக்குத் தோன்றியது. ஆங்கில இலக்கிய சிறுகதையில் நிகழ்வுகளாக இருக்கும் அந்த வரிகளின் எடையில் பல அர்த்தங்கள் இருக்கும் ரீட் இன் பிட்வீன் லைன்ஸ் என்பதாக அப்படி இந்த கதையில் நான் சில விஷயங்களை மறைமுகமாக நான் பார்க்கிறேன் ஸ்ரீராம்
கீதா
நன்றி கீதா.. உண்மையில் நான் வரும் வியாழனன்று ஒரு விளக்கம் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அநேகமாக அதற்குத் தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.
நீக்குஎதுக்கு ஸ்ரீராம்....கதைக்கு எல்லாம் கோனார் நோட்ஸ்!!! சின்னப் பிள்ளைகளா என்ன நாங்க?!!! ஹிஹிஹி (இந்த இடத்துல மட்டும் நாங்க பெரியவங்க...இல்லைனா சின்ன குழந்தைங்கதான்...கதையில் தாத்தா சொல்றது போல!! அங்கிள் ஆண்டி கூட இல்லையாக்கும்....ஓடி விளையாடு பாப்பாக்கள்!)
நீக்குகீதா
ஹா... ஹா... ஹா.. வேண்டாம் என்கிறீர்களா?
நீக்குகதைனா கதை. உரையாடல் எனில் உரையாடல். இங்கே பார்த்துட்டு வெங்கட்டின் வலைப்பக்கமும் போனேன். சில ஆண்டுகளுக்குப் பின்னர்! இந்தப்படத்துக்கான சோகக்கதையைப் படிச்சேன். நேத்திக்குத் தான் முகநூலில் உண்மையாக நடந்த ஒரு இறப்புப் பற்றிப் போட்டிருந்தார்கள். யு.எஸ்ஸில் ஒரு வயதான தம்பதி திருமணம் ஆகி 60 வருடங்களோ என்னமோ! ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்தவர்கள் இறப்பிலும் அப்படியே சேர்ந்தே இறக்கணும்னு நினைச்சுக்கறாங்க. இறைவனின் சித்தமும் அதுவாகவே இருந்து அந்தப் பெரியவர் கடைசி நேரத்தில் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு உன் நிழலில் இருக்கும்போதே சாகப்போறேன்னு சொல்லிட்டுச் செத்துப் போக மனைவியும் அடுத்த அரைமணியில் கணவனிடம் உங்களைத் தொடர்கிறேன்னு சொல்லிக் கொண்டே இறக்கிறாள். இது தான் அந்த நிகழ்வின் முக்கியக் கரு. நான் சொல்லி இருப்பது கொஞ்சம் முன்பின்னாக இருந்தாலும் கணவன்,, மனைவி இருவருமே அடுத்தடுத்து இறப்பது என்பது அபூர்வமாக நடக்கும் ஒன்று. தமிழ்நாட்டிலும் ஒரு சில இப்படி நடந்திருப்பதைப் பத்திரிகைச் செய்திகள் மூலம் பார்த்துத் தெரிந்திருக்கிறோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... நீங்கள் சொல்லி இருப்பது ஒரு அரிய நிகழ்வு.
நீக்குஎன் பெண்ணின் தாத்தாவும், பாட்டியும் இப்படி ஒரே நாளில் அரை மணி வித்தியாசத்தில் இறந்து போனார்களாம்.
நீக்குநான் சொல்வது எத்தனை பேருக்குப் பிடிக்குமோ? ஸ்ரீராம் அவர் வீட்டிலேயே இப்படியாக ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்கார். அதை வாரா வாரம் சொல்லவும் செய்கிறார். ஆகவே இந்தக் கதைனு அவர் எழுதி இருப்பது குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதுவும் இல்லை என்பதே என் கருத்து. அப்பட்டமாகச் சொல்லணும்னா ஸ்ரீராம் இன்னும் எவ்வளவோ அழகாகவும், காதலைச் சொல்லுவதாகவும் உண்மைக்காதல் என்றால் என்ன என்பதை எடுத்துக்காட்டும்படியும் எழுதி இருக்கலாம். அவரால் முடியும். ஆனால் என்னமோ சுருக்கமாக ஒரு பேட்டியுடன் நிறுத்திக் கொண்டுவிட்டார். எனக்கு அடி விழும் முன்னர் நான் இங்கேருந்து கிளம்பறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... மனதில் பட்டதை சொல்லி இருக்கிறீர்கள்.. இதில் என்ன? வீட்டில் அனுபவமா? அது என்ன?
நீக்குஎந்த உலகத்தில் இருக்கீங்க? உங்கள் அப்பா/அம்மா காதல் பற்றிச் சொல்கிறேன். அதை விடவா பெரிய காதலைத் தேடிப் போகணும்? இந்தக் காதல் என்ற வார்த்தை இப்போதெல்லாம் சரியான பொருளில் வருவதில்லை என்பதால் உங்களுக்கும் மறந்து போச்சு போல. உங்கள் காதலைக் கூடச் சொல்லலாம் என்றாலும் உங்கள் அப்பாவுக்கு நிகராக உங்களைச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.
நீக்குசிவனடியார்கள் அனைவருமே ஞானசம்பந்தரைப்போல ஈசனிடம் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குகின்றனர்" இதுவும் காதல் தான். உயர்ந்த காதல். ஆனால் இப்போதெல்லாம்! :(
அடடா? ஆனைங்களைப் பத்திச் சொல்லலையே! ஆனைங்க அதுவும் குட்டி ஆனைங்க நம்ம செல்லம் ஆச்சே. ஆனால் கிட்டே போகத் தான் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். :))))
பதிலளிநீக்குகுட்டி யானையின் விளையாட்டு காணொளிகள் நிறைய பார்த்து ரசிப்பேன்.
நீக்குநாய் - கைத்தடி - அந்தப் பகுதி யதார்த்தம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகதையோடு போகிற போக்கில் ஒரு தத்துவமும் சொல்லிட்டீங்க. அந்தக் கவிதையைச் சொல்கிறேன். இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஒரு பாடம் சொல்லும் இல்லையா?!
"எல்லோரும் சொல்றதையே நாமளும் எப்படிச் சொல்றது? நாம என்ன ஒண்ணாங்கிளாஸ் ரெண்டாங்க்ளாஸ் பாடமா படிக்கறோம்?"//
ஹாஹாஹா அதானே!!! ரொம்ப விளக்கமாக எழுதினால் போரடிக்கும் ஸ்ரீராம். வாசிக்கறவங்களும் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா!!!?
எங்கள் தளத்தில் துளசி இப்படியான முடிச்சுகள் அவிழ்தல் இல்லாத கதைகள் எழுதியிருக்கிறார் (ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதாலோ என்னவோ!!!)
கீதா
நன்றி கீதா. உங்கள் பின்னூட்டம் சற்றே ஆறுதலாய் இருப்பது உண்மை.
நீக்குகீதா ஒரு ஆப்டிமிஸ்ட்! பார்க்கும் விஷயங்களில் எல்லாம் நல்லதை மட்டும் பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்.
நீக்குஆனை பற்றிய செய்திகளை ரசித்து ரசித்து வாசித்தேன் ஸ்ரீராம். கூடவே விசுமாமாவின் அத்தகவல்!!! ஆமாம் ஆனைகள் கூட்டமாக வந்துவிடும் நியாயம் கேட்க!!!! போராட்டம் செய்ய. என்ன ஒரு அறிவு ஜீவி ல்ல?
பதிலளிநீக்குஆனைகளின் வழித்தடங்களில் நாம் எத்தனை எத்தனை அட்டூழியம் செய்கிறோம் இல்லை? ஆனாலும் அவை அதற்குத் தங்களை அடாப்ட் செய்து கொண்டு வாழ்கின்றன.
யானைச் செய்தியை வாசித்ததும், அண்ணாமலையின் மிக அற்புதமான ஒரு கட்டுரை linked in ல் வாசித்தது நினைவுக்கு வந்தது. இடையில் பூடகமாக ஒரே ஒரு வரிதான்...அரசியலை இணைத்து எழுதியிருக்கிறார். ஆனால் மற்றவை ஆனைகளைப் பற்றி வாழ்க்கையோடு, யதார்த்தத்தோடு ரொம்ப அழகாகப் பொருத்தி எழுதியிருக்கிறார்.
விருப்பமுள்ளவர்கள் இங்கு வாசிக்கலாம். https://www.linkedin.com/pulse/dignity-underestimated-annamalai-k-qrboc
கீதா
படிக்க முயற்சிக்கிறேன் கீதா.. யானை அதன் வழக்கங்கள், வாழ்க்கை எப்பவுமே சுவாரஸ்யம்.
நீக்குபடமும் கதையும் சிறப்பு. ஒரே படம் அனைவரின் கற்பனையையும் வெவ்வேறு விதமாகத் தூண்டி விடுகிறது. தாத்தாவின் சிரிப்பு மிகப் பிடித்தது. மெரினாவில் காமிராவும் கையுமாகச் சில பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இங்கே காமிராக்காரரே பிடிபட்டு விட்டார்.:)
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா.. மிக்க நன்றி. மெரினாவில் மட்டுமா பார்க்கும் இடமெல்லாம் சட்டென இப்போது படம் எடுத்து விட முடிகிறதே... என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.. கண்ணில் படும் காட்சியை எல்லாம் எடுத்து கன்டென்ட் ஆக்கி விடுகிறேன்!
நீக்குபின்னப்பட்ட கதையும் நலம். சந்தோஷமான வாழ்க்கையையே சொல்ல வேண்டும் அழுகை முதுமை இரண்டும் தேவை இல்லை. பாசிட்டிவ் கதைக்கு நன்றி ஶ்ரீராம்.
பதிலளிநீக்குஉண்மைதான் அம்மா. நீங்கள் அடிக்கடி சொல்வதுதான் அது.
நீக்குயானைகள் பற்றி செய்திகள் முன்னெல்லாம் படிப்பேன். வெகு சுவாரஸ்யமான உயிர்கள். மனிதனை மிஞ்சிய சிந்தனைத் திறன் உடையவை. அனேகமாக நாம் அனைவரும் யானைக் காதலர்களாகத் தான் இருப்போம். அருமையான பதிவு .நன்றி ஶ்ரீராம் அண்ட் வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குவயதானவர்களின் தனிமை மற்றும் சோகத்தைப் பேசப்போகும் ஒரு வழக்கமான கதையோ என்ற எண்ணத்தை தொடக்கத்தில் உருவாக்கிய கதை பின்னர் அதை உடைத்து நேர்மறையாகவும், யதார்த்தமாகவும் நிறைவுற்றிருப்பது நன்று.
பதிலளிநீக்குபெரியவரின் நகைச்சுவையான பேச்சிலும், சொன்ன
கவிதையிலும் பொதிந்திருக்கும் வாழ்க்கைத் தத்துவம் கதையின் பலங்களில் ஒன்றெனில், இறுதியில் மீண்டும் திரும்பிப் பார்த்த இளைஞனுக்கும், சிரித்தபடி கையசைக்கும் அந்த பெரியவருக்கும் இடையேயான தருணம்... தங்கள் எழுத்தின் பலம். சொல்லப்படாத ஒரு அன்பையும் மரியாதையையும் மனதில் நிறுத்துகிறது.
இதுபோல தனித்திருந்த பெரியவர்கள் பலரை நான் படமாக்கியிருக்கிறேன். ஆனால் பேச முயன்றதில்லை.
“கொஞ்ச நேரம் பாஸ் மாறாமல் இருந்தேன். ..”
*போஸ்?
மிக்க நன்றி ராமலக்ஷ்மி. பாராட்டுக்கு நன்றி.
நீக்குஆமாம். 'போஸ்' என்றுதான் வரவேண்டும். எவ்வளவு விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்த்தாலும் இப்படி நேர்ந்து விடுகிறது!! மாற்றி விட்டேன். நன்றி.
யானைகளைப் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள். வனத்துறையினர் மக்களுக்குத் தொடர் எச்சரிக்கை அளித்து வருகிறார்கள். ஆயினும் தங்கள் வாழ்விடங்கள் ஆக்ரமிக்கப்படுவதில் சமீபமாக யானைகள் படும் சிரமங்கள், மனிதர்கள் தாக்கப்படுவது போன்ற செய்திகள் அதிகரித்தபடி இருப்பது கவலைக்குரியது. பிரிந்த குட்டி யானையை தாய் சேர்க்காமல் போனது சோகம்.
பதிலளிநீக்குஆமாம். யானைகள் பற்றிய செய்திகள் எப்போதுமே சுவாரஸ்யம்தான். யானைகளை பார்க்க பாவமாக இருக்கும். இவ்வளவு பிரம்மாண்ட ஜீவன் தன் பலம் அறியாமல் இருக்கிறதே என்று.
நீக்குபடத்திற்கான கதை - மகிழ்ச்சி.
பதிலளிநீக்குயானைகள் குறித்த தகவல்கள் எவ்வளவு படித்தாலும், யானைகளை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுப்பதே இல்லை.