வியாழன், 31 மே, 2012

அலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா!

       
முந்தைய பதிவு சுட்டி << 
           
எக்மோரிலிருந்து புரசவாக்கத்திற்கு, ஒரு பஸ் பிடித்து, 'கங்காதீஸ்வரர் டாங்க்' நிறுத்தத்தில் இறங்கி, அண்ணன் வழி காட்ட, சுந்தரம் (பிள்ளைத்) தெருவில் இருக்கின்ற அண்ணன் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டில் மொத்தம் எட்டுக் குடித்தனங்கள் இருந்த ஞாபகம். நாங்கள் இருந்த முதல் மாடியில் ஐந்து குடித்தனங்கள் இருந்தன.
     
அண்ணி ஆசிரியை. புரசவாக்கம் முத்தையா செட்டியார் ப்ரிபரேட்டரி ஸ்கூலில் பணிபுரிந்து வந்தார். அங்கு படித்த எல்லோருக்கும் (கமல்ஹாசன், மஞ்சுளா, குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த சில ஆசிரியர்களின் குழந்தைகள் என்று பெரிய பட்டியலே சொல்லுவார் என்னுடைய அண்ணி! கொஞ்சம் ரீலும் விடுவார். நான் இவர்களில் யாரையாவது சந்தித்தால் அண்ணி சொன்னது சரிதானா என்று அவர்களிடம் கேட்கவேண்டும் !) கீதா டீச்சரை ஞாபகம் இருக்கின்றதா என்று கேட்டால், அவர்கள் என் அண்ணியைப் பற்றிக் கூறுவார்கள்! 
     
அசோக் லேலண்டில் பெரிய பதவி வகித்துக் கொண்டிருந்த ஒருவர், (பெயர் தெரியும்; ஆனால் சொல்லமாட்டேன்!) நாகைக்கு லீவில் வந்திருந்தார். அவரை, என்னுடைய அப்பாவின் முதலாளிக்குத் தெரியும். அந்த முதலாளியின் சிபாரிசின் பெயரில், நாங்கள் (அப்பாவும் நானும்) அவரைச் சென்று பார்த்தோம். அவரிடம் அசோக் லேலண்டில் எனக்கு அப்ரெண்டிஸ் ஆக சேர) எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு வந்துள்ள விவரத்தைக் கூறினோம். (ஹி ஹி கூறினோம் இல்லை - கூறினார், என் அப்பா. எனக்கு அப்பொழுதெல்லாம் அதிகம் பேச வராது! ) அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். அசோக் லேலண்டில் நாங்கள் என்ன உற்பத்தி செய்கிறோம் தெரியுமா? என்று கேட்டார். 'லாரி, பஸ்' என்றேன். "Commercial vehicles. Our product name is Comet. Prepare well for quiz type questions" என்றார். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்" என்றார். 
    
அந்தக் காலத்தில், நாகப்பட்டினம் (போன்ற பகுதிகளில்) பாலிடெக்னிக் படித்து, மூன்றாவது ராங்க் எடுத்த எனக்கும், முதல் ராங்க் எடுத்த பக்கிரிசாமி, இரண்டாம் ராங்க் எடுத்த கருணாநிதி போன்ற என் நண்பர்களுக்கும், competitive exams என்றால் என்ன என்றே தெரியாது. எங்களுக்குத் தெரிந்த கடினமான கணிதக் கேள்வி, காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்? என்பதுதான். (இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்). அந்தக் காலத்தில் கால்குலேட்டர்கள் கூடக் கிடையாது!  . 
    
அண்ணனிடம், competitive exam விவரங்கள் பற்றி நான் கூறியவுடன், அவருடைய அலுவலகத்தில் (Kilpauk Medical College Hospital Administration) சர்க்குலேஷன் லைப்ரரியில் இருந்து, Competition  Success Review புத்தகத்தின் நடுவில், சிறிய அளவில் இருக்கும் பகுதியில் இருக்கின்ற கேள்விகள் எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துப் படித்து பதில்கள் அளிக்கச் சொன்னார். அது மாதாந்திர பத்திரிக்கை என்று நினைக்கின்றேன். பழைய CSR பத்திரிக்கைகளின் நடுப் பகுதிகளையும், (சர்க்குலேஷன் முடிந்து புத்தகக் கடைக்கு எடைக்கு போட வைத்திருந்த) புத்தகங்களிலிருந்து கிழித்துக் கொடுத்தார். ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஒரு வாரத்திற்குள் படித்து, தயார் செய்துகொண்டேன். 
             
அப்ரெண்டிஸ் எழுத்துத் தேர்வுக்கு, இந்த கேள்விகள் எல்லாம் பெரிதும் உதவின. அதே வகைக் கேள்விகள் அந்த Written exam கேள்வித் தாளில் நிறைய வந்திருந்தன. அந்த நாட்களில் Quiz type கேள்விகள் என்றால் என்ன என்றே தெரியாதிருந்த எனக்கு Competition Success Review என்ற புத்தகத்தையும், அதன் நடுப் பகுதியையும், கேள்விகளையும், அறிமுகம் செய்து, அண்ணன் காட்டிய வழி, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 

=================================== 

அசோக் லேலண்டின் அசெம்பிளி பிரிவில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி பிரிவில், ஜான் என்று வயதான நண்பர். 
 
  
ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி என்பது பார்ப்பதற்கு சுலபமாகத் தோன்றும். ஆனால், கை சக்கரத்தை (steering wheel) சுற்றும் பொழுது, தரை சக்கரத்தை (Road wheel) இயக்குகின்ற Cam & Roller மெக்கானிசம் சரியாக செட் செய்வது மிகவும் கடினமான வேலை. அந்த வேலைக்கு யாராலும் 'இப்படித்தான் செய்யவேண்டும்' என்று செய்முறை எழுதமுடியாது. ஸ்டீரிங் வீலில் இவ்வளவு டார்க் கொடுத்தால், அது இயங்கவேண்டும் (இணைப்புகள் இல்லாத பொழுது, இணைப்புகள் இணைத்த பிறகு, வண்டி முழு லோட் செய்த பிறகு என்று பல கட்டங்கள் உண்டு.) என்று சொல்ல முடியுமே தவிர, அதை எப்படி வரவழைப்பது என்பது யாராலும் சொல்லமுடியாது. அவைகளை சரியாக வரவழைக்க ஜான் ஒருவரால் மட்டுமே முடியும். அதற்கு Shims adjustment என்று பெயர். ஜான் அவர்களின் தாரக மந்திரம், 'கண் குன்சு, கை ஃபீலிங்' என்பது. மனிதர் ஸ்டீரிங் அட்ஜஸ்ட் செய்ய வந்தால், இப்படி ஒரு தட்டு, அப்படி ஒரு தட்டு, இங்கேயிருந்து இரண்டு ஷிம் எடுத்து அந்தப் பக்கம், மீண்டும் சில தட்டுகள், சுத்தியல் கொண்டு ஸ்டீரிங் ஷாப்டில் கொஞ்சம் அடி, ராக்கர் ஷாப்டில் கொஞ்சம் தட்டுவார். ஸ்டீரிங் செட் ஆகிவிடும். 


ஜான் ரொம்ப வருடங்கள் முன்பே ரிட்டையர் ஆகிவிட்டார். தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு சிஷ்யரை நன்றாகத் தயார் செய்திருந்தார். அவரும் என்னுடைய நண்பர். விரைவில் நாங்கள் இந்த வகை ஸ்டிரிங் பெட்டிகளுக்கும் ஓய்வு கொடுக்கவேண்டி வந்தது. 
      
ஜான் மாதிரி ஆட்கள், அ லே வில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு யூனிட்டிலும், உண்டு. அவர்கள்தான் அசோக் லேலண்டின் இராஜ அச்சுகள் (King pins) என்று சொல்லலாம். 
===================================  
   
கொசுறு: 
         
நேற்று எங்களுக்காக Xylo வாடகை கார் (Taxi for sure) ஓட்டிய பால் என்னும் ஓட்டுனர் என்னிடம் கேட்டார், "சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணிணீங்களா? நான் எர்ணாவூர் பாரதி நகர்தான் சார். அந்நியன் ஷூட்டிங் எடுத்தாங்களே, அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில்தான் வீடு. உங்களுக்கு இருதயராஜ் தெரியுமா? என்னுடைய சித்தப்பா சார் அவரு." 
     
நான் சொன்னேன் "எனக்கு அசோக் லேலண்டில் இரண்டு இருதயராஜ் தெரியும். ஒருவர் எலெக்ட்ரிகல் பிரிவு. இன்னொருவர் பைலட் ப்ரொடக்ஷன் பிரிவு கிளார்க். நீங்கள் சொல்வது யாரு". பால் உடனே "அவர் அசோசியேஷன் செக்ரட்டரி சார்!" என்றார். .
              
எனக்கு இப்போ அசோக் லேலண்டில் மூன்று இருதயராஜ்களைத் தெரியும்!    
       

செவ்வாய், 29 மே, 2012

அபிராமி....அபிராமி....


சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருக்கடையூர்.

உறவினர் ஒருவரின் அறுபதாம் கல்யாணம்.


பெரிய மாற்றம் எதுவுமில்லை. பேட்ச் பேட்ச் ஆக நின்று வரிசையாக உள் நுழைந்து யானையின் (அபிராமி) தலைமையில் உள் சென்று அறுபதாம் கல்யாணம், பீமரத சாந்தி, சதாபிஷேகம் செய்து திரும்புகிறார்கள். 



முன்னர் இருந்த அபிராமி இல்லையாம் இவள். புதிய யானை.



அபிராமிக்கு ஓயாத வேலை, உழைப்பு. சளைக்காமல் உள்ளுக்கும் வெளிக்கும் நடந்து 60, 70, 80 ஆம் கல்யாணங்கள் செய்து கொள்ள வந்திருப்போரை உள்ளே அழைத்துச் சென்று விட்டு விட்டு அடுத்தவரை அழைக்க வாசலுக்கு வந்து.....



மதியம் ரெஸ்ட். அப்போது சம்பாதிக்கும் வேலையிலும் உணவு உண்ணும் வேலையிலும் பிசி!


குரங்கார் ஒருவர் அங்கிருந்த கடையிலிருந்து ஒரு சீப்பு வாழைப் பழத்தை நொடியில் கவர்ந்து கோவில் மதிலில் ஏறினார்..(ஏறினாள்!).


படமெடுப்பதைப் பார்த்ததும் இன்னும் மேலேறிச் சென்று விட்டாள்.

வாசலில் அமர்ந்திருக்கும் யாசகர்கள் ஒரு சிறப்பு வார்த்தை உபயோகித்து அட்டாக் செய்து யாசகம் கேட்கிறார்கள். "நீங்க அமோகமா இருப்பீங்க.... உங்க குடும்பமே அமோகமா இருக்கும்..."



குரங்கைப் படமெடுக்கும்போது முதலில் ஒரு யாசகர், அப்புறம் ஒருவர், அப்புறம் ஒருவர் என்று பெரிய கும்பலால் சூழப் பட்டேன்.



"இவ்வளவு பேர் இருக்கோமேன்னு பார்க்கறீங்களா... ஒருத்தர் கிட்டக் குடுங்க... நாங்க பிரிச்சிப்போம் சாமி....அமோகமா இருப்பீங்க...!"

தங்குமிடத்திலிருந்து சாப்பாடு வரை எல்லாம் வியாபாரம்!

அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தவனம்....



திருமணத்தை வீடியோ எடுப்பது, படமெடுப்பது எல்லாம் செய்தாக வேண்டுமென்பதால் உள்ளே கேமிரா எடுத்துப் போவதில் சிரமமில்லை. படமெடுக்கவும் தடையில்லை. நாங்கள் சென்றிருந்த நேரம் நடிகை ரேவதி சங்கரன் வந்திருந்தார்.

பிரகாரம்...





கேமிரா ரீசார்ஜ் பேட்டரி சரியாக வேலை செய்யவில்லை. டியூரசெல் பேட்டரிக்கு அலைந்தால் அப்புறம்தான் தெரிந்தது அங்கிருக்கும் மளிகைக் கடைகள் எல்லாவற்றிலும் கிடைக்காத விஷயமே இல்லை. டியூரசெல்லில் இருபது படங்கள்தான் எடுக்கமுடிவது ஒரு சோகம்!


அபிராமியின் (யானை)அருகிலிருந்து கோபுரம்....

அம்மன் சன்னதி...


கஜபூஜை போல கோ பூஜை....


ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்க முடிகிறது. மாடியுடன் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் வாடகை. கீழே ஹால் முழுக்க A/C. மாடியில் இரண்டு அறைகள் A/C. அங்கு ஒரு ஹால். மேலும் கீழும் சேர்த்து எழுபது எண்பது பேர் வரை தங்கலாம்! கீழேயும் இரண்டு அறைகள்.  இது போலத் தங்குமிடங்கள் நிறைய அங்கு!  லாட்ஜுகளும் உண்டு. 


பூஜையில் வைக்கப் பட்ட மரகத லிங்கம்....


தங்கியிருந்த இடத்திலிருந்து பக்கவாட்டில் கோபுரம்.



திருக்கடையூர் செல்லும் வழியில் அண்ணன் பெருமாள் கோவில் என்ற முப்பத்தெட்டாவது திவ்ய தேசம் பற்றி தனிப் பதிவில்!


வெள்ளி, 25 மே, 2012

எட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா!


                    

கே வி: "என் மனைவி குழந்தையின் பெயர் 'மாயா' என்று வைக்கலாமா என்று கேட்டவுடன், நான் அதிசயித்துப் போனேன். ஆனால், மாயா, பிங்கி இருவரும் என்னைத் தொடர்ந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை. 'போதும் இந்த மாயா பிங்கி விவகாரங்கள். அவர்களை என் குடும்பத்திற்குள் நான் அனுமதிக்கத் தயாராக இல்லை' என்று நினைத்தேன். மனைவியிடம், 'மாயா - பாயா, பிங்கி - சொங்கி' என்றெல்லாம் எந்தப் பெயரும் வேண்டாம் என்றேன். என் பெண்ணுக்கு கூகிளில் தேடி, விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகையின் பெயரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். "
           
எ சா: "Anushka?"
            
கே வி: "No. ANOOSKA"  
      
எ சா: "சுத்தம்!" 
           
கே வி: "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" 
            
எ சா: "உங்களுக்கு நியூமராலாஜி தெரியுமா?"
               
கே வி: "தெரியாது" 
             
எ சா: "MAAYA, PINKI / PINKY, ANOOSKA - எல்லாப் பெயர்களுக்கும் கூட்டுத் தொகை எட்டு வருகின்றது." 
             
கே வி: "அதனால் என்ன?"
             
எ சா: "இன்று காலை நொச்சூர் வெங்கட்ராமன் என்பவர் கூறிய உபன்யாசம் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் பூஜ்யம் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுள்; எட்டு என்பது மாயா, மாயை. என்றார். எட்டு என்பது மாயச் சுழல் - இரண்டு பூஜ்யங்கள், ஒன்று கடிகார சுற்றாகவும், மற்றது அதற்கு எதிர் திசையிலும் அமையும் சுற்றாகவும் அமைந்த உழல் சக்கரம்' என்றார்" 
                   
கே வி: "ஆச்சரியமாக இருக்கின்றதே! மாயாவுக்கும் எட்டுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றனவா?"
             
எ சா: "ஆமாம். நீங்கள் இங்கு வந்து என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே, பல எட்டுகள் இங்கே வந்து விழ ஆரம்பித்தன. KV, 08-08-2008, 8th floor, Desh (Raaga), Maaya, Date of birth: 08-08-1970 8 pm, Date of death: 08-08-2006 08:08 AM, OA, Pinki, Anooska என்று பல எட்டுகள். (ஒருவேளை ஜீவி சார் இன்னும் சில எட்டுகள் கண்டு பிடித்திருந்தால் அவைகளும் சேரும்!)   அதெல்லாம் போகட்டும். நீங்கள் என்னைத் தேடி வந்ததின் காரணம் என்ன? அதைச் சொல்லுங்கள். 
             
கே வி: "மாயாவின் ஆவி கூறிய கதையில், ஒரே ஒரு இடத்தில் உங்கள் பெயரைக் கூறி இருந்தார். ஜோதிட வைத்தியரின் சிஷ்யர் என்றும் கூறினார். அப்புறம் அந்தப் பெயர் மறந்து போயிருந்தது. நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம், என்னை இங்கே கொண்டு வந்தது என்று சொல்ல வேண்டும். "
         
எ சா: "அது என்ன சம்பவம்?"  
      
கே வி: "எனக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். பெரியவன் பெயர் அர்விந்த். அடுத்துப் பிறந்தவள்தான், அநூஷ்கா. இப்போ அநூஷ்கா ஆறுமாதக் குழந்தை. நேற்று ஆபீசில், இந்தூர் ஆபீஸ் பற்றி, பாட்டியா விசாரணை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். எம் டி இந்தூர் கோர்ட்டில் ஆஜராகி, பாட்டியா சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. எம் டி யுடன், அவருடைய பி ஏ, ஸ்ரீவத்சன் என்ற என் நண்பரும் இந்தூர் சென்றிருந்தார். ஸ்ரீ வத்சனிடம், நான், மாயா ஹோட்டல் பற்றியும், பெரியவர் கோவிந்தராஜன் எனக்கு உதவியதையும் (மட்டும்) கூறி, அங்கு அவரைச் சந்தித்தால், அவரை நான் மிகவும் கேட்டதாக சொல்லவேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தேன். ஸ்ரீவத்சன் இந்தூரிலிருந்து என்னுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசும்பொழுது, 'கோவிந்தராஜன் தினமும் ஜெயிலுக்குப் போய் வருவதாகவும், அவருடைய முதலாளி ஓ ஏ என்பவர் ஜெயிலில் இருப்பதாகவும், அவர் மீது, பிங்கி என்பவரை விஷ மாத்திரை கொடுத்து கொன்றதாக வழக்கு என்றும், பிங்கி இறந்ததற்கான காரணம், அவர் குடித்த கோக்க கோலா பானத்தில் விஷம் கலந்து இருந்தது, அதே விஷ மாத்திரை, ஓ ஏ வின் அறையில், கண்டெடுக்கப்பட்டதால், ஓ ஏ கைது செய்யப் பட்டு, சிறையில் இருக்கின்றார்' என்றும் சொன்னார். " 
     
எ சா: "என்னது? கோக்க கோலாவை பிங்கி குடித்தாளா! அதே மாத்திரை ஓ ஏ ரூமில் ..... ஓ! அது மாயா கையிலிருந்து விழுந்து மாயமாக மறைந்த மாத்திரையா!! அடக் கடவுளே!" 
    
(தொடரும்)  
         

வியாழன், 24 மே, 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்... 05



1) ஆண்களின் கோபம் எப்படி வெளிப்படுகிறது? பெண்களின் கோபம் எப்படி வெளிப்படுகிறது?

     
2) உங்களின் எண்ணங்களுக்கு எதிர் எண்ணங்கள் இருப்பவர்களை விரும்புவீர்களா? ஒத்த எண்ணங்களை உடையவர்களை விரும்புவீர்களா? ஏன்?    
            
3) "உள்ளத்தில் பாசமுண்டு ஊமைக்குத் தெரியும்.... ஊமையின் பாஷை இங்கு யாருக்குத் தெரியும்?" - எந்தப் பாடலில் வரும் வரிகள் இவை?   
        
ஆக்சுவலா இது மூன்று கேள்விகள் இல்லை; மூன்று செட் கேள்விகள்.      
                 

புதன், 23 மே, 2012

உள் பெட்டியிலிருந்து 5 2012


முன்பே சொன்னது...
    
காலங்கள் சிலரை மறக்கச் செய்து விடும். ஆனால் சிலரின் நினைவுகள்தான் காலங்களையே மறக்கச் செய்து விடுகின்றன.  
================================
துண்டாய் வந்தாலும் அன்பின் துடிப்பைச் சொன்னது...

*some text missing  
*Dear....
=============================

"நண்பேண்டா..."

நீ எப்போது விழுந்தாலும்
தூக்கி விட 
நான் இருக்கிறேன்..
ஆனால்
சிரித்து முடித்து விட்டுத்தான்...           
===========================

என்ன கொடுமை சார்...

ஒரே ஆசிரியர் எல்லாப் பாடத்தையும் கத்துக் கொடுக்க மாட்டாராம்... ஆனால் ஒரு மாணவன் எல்லாப் பாடத்தையும் எழுதணுமாம்...
============================


   
சண்டையில் ஆதாயம்
   
முதல் நபர் : "நான் அடிச்சா அமெரிக்காவுல போய் விழுவே..."
     
இரண்டாம் நபர் : "நான் அடிச்சா ஆப்பிரிக்கால போய் விழுவே..."
   
அருகாமை நபர் : " என்னைக் கொஞ்சம் லேசா அடிங்க சார்... நான் டெல்லி வரை போகணும்.."
=====================================

அப்பவே அப்படித்தானா ...! 

எந்த மனிதனும் பெற்றதற்கு கௌரவிக்கப் படுவதில்லை. கொடுத்ததற்குத்தான் கௌரவிக்கப் படுகிறார்கள்! - கால்வின் கூலிட்ஜ்.
===================================

தாமதமாக எடுக்கப் பட்டால் சரியான முடிவும் தவறாகலாம்! - கார்ல் மார்க்ஸ்.
===============================

யார் பெரியவர், யாரைக் கேட்க?

நேரு மாமா சொல்றார், 'சோம்பேறித்தனம் பெரிய எதிரி'ன்னு. காந்தி தாத்தா சொல்றார் 'எதிரியை நேசியுங்கள்'னு! நீங்களே சொல்லுங்க.. மாமா சொல்றதைக் கேட்கவா, தாத்தா சொல்றதைக் கேட்கவா...?  
========================

தூக்கம் உன் கண்களை ....    

தூங்குவதற்கு மட்டுமா இரவு? இன்றைய தவறுகளை மறக்கவும் நாளைய கனவுகளை நினைக்கவும்தான்!
============================

உறவின் ரகசியம்

தெரியாதவரிடத்து அறிவாளியாய் இருந்தாலும் அன்புடையவர்களிடம் முட்டாளாகவே இருங்கள்!

நாம அடுத்தவங்களுக்கு செஞ்ச நல்லதையும், அடுத்தவங்க நமக்கு செஞ்ச கெடுதலையும் மறந்துடறது நல்லதுங்க...

வெற்றியும் வேதனையாகும், பாராட்ட நம்மில் அன்புடையார் யாருமில்லாத போது! தோல்வியும் சுவைதான், தாங்கிப் பிடிக்க நம்மில் அன்புடையார் நம்முடன் இருக்கும்போது! 
===============================

உதடு ஒட்டணும்!

உறவின் வெற்றி நான் என்பதை நாம் என்றாக்கும் ஒரேழுத்து வித்தியாசத்திலிருக்கிறது!
===============================


நெனச்சது ஒண்ணு...

ரெயில் பெட்டியில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த அந்த 24 வயது வாலிபன் அப்பாவை அடிக்கடி கூவிக் கூவி அழைத்து, மரங்கள் பின்னால் ஓடுவதையும், வானம் கூடவே வருவதையும் சத்தமாக சொல்லி ரசித்தான். உடன்பயணிகள் இருவர் தந்தையிடம் அனுதாபத்துடன், "ஏன் அவனை ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பிக்கக் கூடாது?" என்று கேட்டனர். புன்னகையுடன் தந்தை சொன்னார், "மருத்துவ மனையிலிருந்துதான் வருகிறோம். பிறவியிலிருந்து கண்கள் இல்லாமலிருந்த என் மகனுக்கு இப்போதுதான் பார்வை கிடைத்துள்ளது"
=============================  
                           

செவ்வாய், 22 மே, 2012

தமிழுல இது என்ன பாட்டு?



இந்தப் படத்தில் வருவது எந்த ஊரு? 
      

திங்கள், 21 மே, 2012

அலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க்காதே!

                     
   
பர்ஸ் காணோம் என்று தெரிந்தவுடன், பல கற்பனைகள். ஒரு வேளை அண்ணன் எக்மோர் ஸ்டேஷனுக்கு வரவில்லை என்றால், எப்படி பஸ் பிடித்து புரசவாக்கம் போய் சேருவது? 'புரச --- வா --- come' என்று சொல்லுமா அல்லது 'டேய் .போ .... go ...' என்று சொல்லுமா? பல வித சிந்தனைகளுடன் இடத்திற்கு வந்து, சோகமாக உட்கார்ந்துகொண்டேன்.
     
என்னுடைய கர்ண கடூரக் குரலில், டிரெயினிலேயே பாட்டுப் பாடி, நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கூட ஓர் ஐடியா வந்தது. ஆனால் என்னிடம், கையால் 'டிர்ர்ரக், டிர்ர்ரக்' என்று சத்தம் எழுப்புகின்ற தாளக் கருவி (யார் கண்டுபிடித்திருப்பார்கள் இதை!!) தயாராக இல்லை! ஒரு ரப்பர் பாண்ட் மட்டும் இருந்தது. பக்கத்து  சீட்டு சாம்புவிடம், "சார்! ஒரு மாட்ச் பாக்ஸ் இருக்குமா?" என்று கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போனார். "லைட்டர்தான் இருக்கு" என்றார். சொல்லியதுடன் நிறுத்தாமல், அவருடைய பையை சீட்டுக்கு அடியிலிருந்து எடுத்து, அதில் ஏதோ தேட ஆரம்பித்தார்.   
     
"எனக்கு காலி நெருப்புப் பெட்டி இருந்தால் போதும்" என்றேன். 
            
"அது இல்லைங்க தம்பி. இது என்ன? என் பையில் எப்படி வந்தது? ..." என்று கேட்டார். அவர் கையில் என்னுடைய பர்ஸ்! பர்ஸ் பத்திரமாக இருக்கின்றது என்பது தெரிந்தவுடன், ஒரு கெத்து வந்துடுச்சு பாருங்க. எப்படியும் என்னிடம் வந்துவிடும் என்ற நம்பிக்கை!  'அவரே கண்டு பிடிக்கட்டும் என்னுடைய பர்ஸ்தான் என்பதை' என்று நினைத்து, வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்தேன். 
            
அவர் பர்சைத் திறந்தார். உள்ளே இருந்த படம் !! ஹி ஹி என்னுடைய படம் இல்லைங்க! சிக்கல் சிங்கார வடிவேலர் படம்!! அந்தப் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை! அவர் மேலும் ஆராய்ச்சி செய்து சிங்கார வடிவேலர் படத்துக்கு அடியில் இன்னொரு படம் இருக்கின்றதே - அது என்ன என்று பார்க்க முயற்சி செய்த போது ... நான் அவசரமாகக் குறுக்கிட்டு "சார் அது என்னுடைய பர்ஸ். நான் நீங்க சொன்னது போல, சீட்டுல கர்ச்சீஃப் போட்டேன் இல்லையா - அப்போ பர்ஸ் கர்ச்சீஃபோடு வந்து கீழே இருந்த உங்க பைக்குள் விழுந்துடுச்சு போலிருக்கு. பையில விழுந்ததால, சத்தமே வரலை, நானும் கவனிக்கவில்லை." என்றேன். 
                       
நல்ல வேளை - அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க்கவில்லை.  அது என்ன படம் என்று கேட்கின்றீர்களா? (அப்பாதுரைக்கு அஞ்சு சான்ஸ்!)  
                          
ஆனால் பர்ஸ், பணம் என்று எதையும் பற்றிக் கவலைப் படத் தேவை இல்லாமல் போய்விட்டது. ஸ்டேஷனுக்கு அண்ணன் வந்திருந்தார், என்னை புரசைவாக்கம் அழைத்துச் செல்ல!    
========================================  
              
அ லே வில்  கற்றுக் கொண்ட இரண்டாவது பாடம்:

அசோக் லேலண்டில்,'அப்ரெண்டிஸ் ஆக சேருகின்றேன் ' என்றவுடனேயே, ஒவ்வொருவர் அங்கு யாரைத் தெரியும் என்ற விஷயங்கள் நிறைய சொன்னார்கள். அப்படி காற்றுவாக்கில் வந்த ஒரு தகவல்: 'எனக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில், இரண்டு வருடங்கள் சீனியர் ஆக இருந்த டி எஸ் ராஜகோபாலன் (என்னுடைய  அண்ணனின் வகுப்புத் தோழன்) அங்கு ஏற்கெனவே அப்ரெண்டிஸ் ஆக இருக்கின்றார்' என்பதுதான்.
              
வேலையில் சேர்ந்த இரண்டு வாரங்களுக்குள், அவர் எந்த டிபார்ட்மெண்டில் இருக்கின்றார் என்ற விவரம் தெரிந்து கொண்டு, அவரைத் தேடித் தேடி, அவரை ஒரு நாள் காண்டீனில் சாப்பாட்டுக் கியூவில் நின்று கொண்டிருக்கும் பொழுது கண்டுபிடித்தேன்.
   
"விஸ்வேஸ்வரன் தம்பிதானேடா நீ! இங்கே சேர்ந்துட்டியா? வெரி குட். இது நம்ப ஊரு போல இல்லை. எவனும் நமக்கு தேடி வந்து எந்த உதவியும் செய்ய மாட்டான். அவனவன் தன்  தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, போய்கிட்டே இருப்பான். நீயும் அதே போல இருக்கக் கத்துக்க. மற்றவர்களிடம் எந்த உதவியும் எதிர் பார்க்காதே." 
                       
நான் அப்படி மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் 'அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கினே இருப்பான்' என்று டி எஸ் ஆர் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பதை அடிக்கடி உணர்ந்தேன். 
============================================  
      
கொசுறு: 
ஒரு டீ எட்டு பைசா. ஒரு இட்லி எட்டு பைசா. ஒரு வடை எட்டு பைசா. ஒரு பொங்கல்  பதினாறு பைசா! ஒரு பூரி செட் பதினாறு பைசா. சாப்பாடு நாற்பது பைசா. நான் சேர்ந்த பொழுதும், அதற்குப் பின் அங்கு நான் வேலையில் இருந்த முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அதே விலைதான்! 

              

புதன், 16 மே, 2012

அலேக் அனுபவங்கள் 01:: படித்த பாடம் என்ன?

                         
முன்னுரை சுட்டி இங்கே! 
                  
'பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது'    என்று எழுதியிருந்தேன்.
      
திடுக்கிடும் அனுபவம் பற்றி, வாசகர்கள் பலரும் பல தினுசாக எழுதியதில் எனக்கே குழம்பிப் போய்விட்டது! 
    
நான் ஒரு முன்-ஜாக்கிரதை முத்தண்ணா. ஆதலால், ரயிலில் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்ட இருக்கையை விட்டு (ஒரு கையை கூட விடாமல்) இந்தண்டை, அந்தண்டை நகராமல், என்னுடைய மஞ்சள் பையை பத்திரமாக பிடித்திருந்தேன். அம்மா ஏற்கெனவே சொல்லியிருந்தாள் - யாராவது ஏதாவது பேசினால் அதை நம்பி விடாதே.எவனாவது திருடன், "இங்கே பாரு தம்பி / அங்கே பாரு தம்பி என்று போக்குக் காட்டி, பையை, பர்ஸை கவர்ந்து சென்று விடுவான். அப்புறம் நீ அசோக லேலண்ட் போகாமல் சோக லாண்டிங் ஆக வேண்டியதுதான்." என்று. முன் ஜாக்கிரதை முத்தண்ணா, அதி முன் ஜாக்கிரதை அப்பண்ணாவாக மாறி, அப்படி பயணம் செய்தேன். 
   
ஆனாலும் ஒரு பச்சப் புள்ளை எவ்வளவு நேரம்தான் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருக்க முடியும்? இயற்கை என்னும், இளைய கன்னி விடுத்த அழைப்பை (nature's call தான். வேறு ஒன்றும் விபரீதக் கற்பனைகள் வேண்டாம்!) தட்ட முடியாமல், எழுந்தேன். மஞ்சள் பையையும் எடுத்துக் கொண்டு செல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். அப்பொழுது பக்கத்து சீட்டில் இருந்த துப்பறியும் சாம்பு (நான் வைத்த பெயர்தான்!) "தம்பி ஒன்றுக்குப் போகணுமா? பையை சீட்டுக்குக் கீழே வைத்துவிட்டு, சீட்டுல கர்ச்சீஃப் போட்டுட்டு போங்க. நான் பார்த்துக்கறேன்" என்றார். 
   
எனக்கு ஒரே சந்தோஷம். வேகமாக கைக்குட்டையை பாண்ட் பையிலிருந்து உருவி வெளியே எடுத்து, சீட்டில் போட்டுவிட்டு, கனவேகமாக இலக்கு நோக்கி சென்றேன். தண்ணீர் பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை. :))) கருத்துரைப்பவர்கள் கவனியுங்கள். கழிப்பறையை விட்டு வெளியே வருவதற்கு முன் அங்கிருந்த கண்ணாடியில் பார்த்து, தலை சீவிக் கொண்டு, வாஷ் பேசின் குழாயில் தண்ணீர் பிடித்து, முகம் கழுவி, கர்ச்சீஃப் தேடி போன கை, பிரேக் போட்டு நின்றது. கர்ச்சீஃபைத்தான் சீட்டில் போட்டுவிட்டு வந்தேனே! சரி, முகத்தில் உள்ள ஈரம காய, டிரெய்ன் கதவின் ஜன்னலுக்கு அருகில் நின்று, ரயில் செல்லும் திசையைப் பார்க்கலாம். முகத்தில் மோதுகின்ற எதிர்க் காற்றில், ஈரம உலர்ந்துவிடும், என்று நின்றேன். 
     
அப்பா கூறிய வார்த்தைகள், புத்திமதிகள் எல்லாம் காதில் ஒலித்தது. எக்மோர் ஸ்டேஷனுக்கு உன்னுடைய அண்ணன் நிச்சயம் வந்து, உன்னை புரசவாக்கம் அழைத்துப் போவார். அப்படி வரவில்லை என்றால், கவலைப் படாதே. எக்மோர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், ரோடை க்ராஸ் செய்து, செருப்புக் கடைக்கு எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பில் போய் நின்று கொள். ரூட் நம்பர் பதினாறு, இருபத்து இரண்டு இரண்டில் எது வந்தாலும் அதைப் பிடித்து, புரசவாக்கம் கங்காதீஸ்வரர் டாங்க் ஸ்டாப்பிங் என்று கேட்டு டிக்கெட் வாங்கிக் கொள். பதினைந்து பைசா தான் டிக்கெட். உன்னுடைய பர்சில் சில்லரையாக இரண்டு பத்து பைசாக்கள், ஒரு ஐந்து பைசா வைத்துக் கொள். மெட்ராஸ்ல பஸ் டிக்கெட் வாங்க சில்லறை இல்லை என்று ரூபாய் நோட்டைக் கொடுத்தோம் என்றால், இரக்கம் பார்க்காமல் இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதை நினைத்துப் பார்த்தவாறு கை அனிச்சையாக பாண்ட் பையில் இருந்த பர்ஸை தொட்டுப் பார்க்கச் சென்று, என்னுடைய மூளைக்கு ஒரு அவசரத் தந்தியை அனுப்பியது. 

பர்ஸைக் காணோம்.   

நான் திடுக்கிட்டேன். (இதுதாங்க திடுக்கிட்ட அனுபவம்!) 

அப்புறம் நான் என்ன செய்தேன்? அதை அடுத்த பதிவில் சொல்கின்றேன். 

************************************* 
அசோக் லேலண்டில் கற்றது: 
    
அப்ரெண்டிசாக இருந்த காலத்தில், என்ஜின் அசெம்பிளி பிரிவில் ஒரு நாள், என்ஜினை ஓவர் ஹெட் கிரேன் வைத்து தூக்கி, அதை அந்தரத்தில் நிறுத்தி, என்ஜினின் அடிப்பாகத்தில் இருக்கின்ற சம்ப ஸ்க்ரூகளை ரி-டைட் செய்யும் நண்பர் ஒருவர், "நீ சூப்பர்வைசர் ட்ரைனியா?" என்று கேட்டார். "ஆமாம்" என்றேன். இந்த கிரேன் சரியா வொர்க் பண்ணலை. அதோ அங்கே என்ஜின் ரெக்டிபிகேஷன் செக்ஷன்ல ஒரு கிரேன் இருக்கு பாரு, அதை இயக்கி, இங்கே கொண்டுவா"  என்றார். நான் என்ஜின் ரெக்டிபிகேஷன் சென்று, அந்தக் கிரேன் பக்கத்தில் இருந்த ஒருவரிடம், "நான் கிரேனை எடுத்துச் செல்லலாமா?" என்று கேட்டேன். 

அதற்கு அவர், "ஊஹூம் - கூடாது. எனக்கு அதுல வேலை இருக்கு" என்றார். 

நான் திரும்பி வந்து, முதலில் என்னிடம் கிரேன் கொண்டு வரச் சொன்னவரிடம், "கிரேன் பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர், அது தனக்கு வேண்டும், நமக்குத் தரமுடியாது என்கிறார்" என்றேன். 
     
இவர் என்னைப் பார்த்துச் சொன்னது இன்னமும் கீதோபதேசமாய் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. "தம்பி நீ கம்பெனிக்கும் புதுசு, ஊருக்கும் புதுசு என்று நினைக்கின்றேன். நான் சொல்வதை கவனமா கேட்டுக்க. நமக்கு நம்ம வேலை முக்கியம். நம்மளும் கம்பெனி வேலைதான் செய்கிறோம். அது கம்பெனி கிரேன். அவரு வீட்டிலிருந்து கொண்டுவரவில்லை. இங்கே ரொம்பப் பேருங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. யாராவது அவர்களிடம் போய், ஏதாவது பெர்மிஷன் கேட்டா கெத்தா, 'முடியாது' என்று மறுத்து, நம்மைத் திருப்பி அனுப்பி விடுவார்கள். நீ நேராகப் போய், அந்தக் கிரேனை, யாரிடமும் பெர்மிஷன் கேட்டுக் கொண்டிராமல், 'ரைட் ராயலா' எடுத்துக் கொண்டு வந்துகொண்டே இருக்கணும். நம்ப வேலை முடிந்ததும், அந்தக் கிரேனை, அங்கேயே கொண்டுபோய் விட்டு விடலாம். நம்முடைய நோக்கம் நல்லதாக இருந்தால், நாம் யார் தயவுக்கும், அனுமதிக்கும் காத்திருக்க வேண்டியது இல்லை." 

உடனே, வீர நடை போட்டு, கிரேனிடம் சென்றேன், கிரேனை இழுத்து வந்து, அவரிடம் கொடுத்தேன். கிரேனை எடுக்கக் கூடாது என்று கூறியவர், ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்! 

***********************************
கொசுறு: 
      
நாற்பதாண்டு கால நண்பன் ராகவேந்திரனிடம், (இப்பொழுது அவர் இருப்பது ஸ்ரீரங்கத்தில்) நேற்று தொலைபேசினேன். "டேய் பார்த்தியா? ஐ பி எல் போட்டிக்கு நடுவே தோனி நம்ப யுனிஃபார்ம் போட்டுகிட்டு வந்து, நம்ப கம்பெனி பத்தி இந்தியில ஏதோ சொல்றாரு!" என்றான்! 
         

செவ்வாய், 15 மே, 2012

எட்டெட்டு பகுதி 18:: இவரா அவர்?

     
    
கே வி சொல்கிறார்: கோவிந்தராஜன் என்ற பெயரைக் கேட்டதும், எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது! மாயா(வின் ஆவி) தன்னுடைய தந்தையின் பெயரை, கோவிந்தராஜன் என்றுதானே கூறியது? இவரா அவர்? "சார் - நீங்க மா ...." நாக்கு நுனிவரை வந்துவிட்ட கேள்வியை, 'சட்'டென்று நாக்கைக் கடித்து நிறுத்தினேன். வாயை இறுக மூடிக்கொண்டேன். 'எனக்கு எப்படித் தெரியும்'  என்று அவர் கேட்டால், நான் என்ன சொல்வது? அப்படியே சொன்னாலும், மாயா தற்கொலை செய்துகொண்டாள் என்று நினைத்திருக்கும் அவருக்கு, 'மாயா கொலை செய்யப்பட்டாள்' என்று எனக்குத் தெரிந்த உண்மையைக் கூறினால், அவர் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்து, கேட்க வந்த கேள்வியை அப்படியே மாற்றி, "சார் நீங்க மார்னிங் இங்கே எதுக்கு வந்தீங்க?" என்று கேட்டேன். 
             
கோ: "வரதராஜன் - அது ஒரு பெரிய கதை. வீட்டுக்கு உள்ளே வாங்க, சொல்றேன்."
                
வீட்டுக்குள் நுழைந்தோம். 
                      
சுவரில் ஒரு படம். அந்தப் படத்திற்கு பெரிய மாலை. அந்தப் படத்தில் ஒரு பெண். நேற்றிரவு நான் பார்த்த மாயா உருவத்திற்கு, சற்றும் பொருத்தமில்லாத முகம். (மாயா உருவம் சொல்லியது, எனக்கு ஞாபகம் வந்தது. 'நான் எந்த உருவமும் எடுத்துக் கொள்ளலாம்; நீங்க பயணத்தின் போது பார்த்த விக்ரமாற்குடு கதாநாயகி ரூபம் எடுத்து வந்திருக்கின்றேன்'...) ஆனால், இந்தப் படத்தில் இருந்தது அழகான, களையான முகம். அந்தப் படத்தில் இருந்த பெண்ணுக்கு படம் எடுக்கப் பட்டபோது இருபது வயதுதான் இருந்திருக்கும். அந்தப பெண்ணின் கண்களே ஏதோ ஒரு சோகக் கதை சொல்வது போல இருந்தது. 
                 
கோ: "இவள்தான் என்னுடைய பெண் மாயா. இவள், இந்த வீட்டில், இந்த இடத்தில் சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிட்டாள். அவளுடைய நினைவாக, இங்கே ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் எட்டாம் தேதி இங்கு வந்து, அவளுடைய படத்திற்கு மாலை அணிவித்து, இங்கேயே இரவு முழுவதும், என் மகளை நினைத்தபடி தியானம் செய்வேன். அவளுடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றாகப் போய்விட்டது. தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்று, என்னுடைய குழந்தை தற்கொலை செய்து கொண்டுவிட்டாள்."
            
கே வி: "ஓ? அப்படியா? உங்க மாப்பிள்ளை யாரு? எங்கே இருக்கின்றார்?"
                       
கோ: "என்னுடைய சொந்த ஊர் வல்லம். என்னுடைய பெண், நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், ஒருவருடன், இந்த ஊருக்கு ஓடி வந்து, அவரைக் கல்யாணம் செய்து கொண்டாள். நான் அது பிடிக்காமல், வல்லத்திலேயே ரொம்ப வருடங்கள் தனியாளாக இருந்தேன். குழந்தை இல்லாத ஏக்கத்தில், இவள் தற்கொலை செய்து கொண்டவுடன், என்னுடைய மாப்பிள்ளை, என்னை இங்கே வரவழைத்தார். எனக்கு, இன்றளவில், என் மாப்பிள்ளையைத் தவிர வேறு எந்த உறவும் கிடையாது. அவர் என்னை இந்த ஊரிலேயே இருக்கச் சொல்லி, எனக்கு இந்த ஹோட்டலில் தங்குவதற்கு, சாப்பாட்டுக்கு வசதிகளை, தன செலவிலேயே செய்து கொண்டு உள்ளார். ஆனால், அவர் யார், அவருக்கும் எனக்கும் என்ன உறவு என்பதை, அவருடைய அனுமதி இல்லாமல் யாரிடமும் சொல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்."
               
கே வி: "அப்படியானால், நான் அவரைப் பற்றி எதுவும் கேட்டு, உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை" 
                    
அப்பொழுது என்னுடைய அலைபேசியில், எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியவர், என்னுடைய மாமனார். "மாப்பிள்ளை ரொம்ப நேரமா உங்களைத் தொடர்புகொள்ள முயன்று, இப்போதான் கனெக்சன் கிடைத்தது. உங்களுக்கு ஒரு பெண் பிறந்திருக்கின்றாள். ஆமாம், நம்ம அரவிந்துக்கு தங்கச்சி பொறந்திருக்கா. உங்க ஆபீஸ் வேலை எல்லாம் முடிஞ்சுடுத்து என்றால், உடனே கிளம்பி ஊருக்கு வாங்க, மாப்பிள்ளை" 
                          
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கோவிந்தராஜனிடம், "சார் எனக்கு ஒரு பெண் பிறந்திருக்கின்றாள். என்னுடைய மாமனார் ஃபோன் செய்து சொன்னார். நான் உடனே ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் இந்தூருக்கு வந்தால், உங்களை சந்திக்கின்றேன்" என்று கூறி, விடை பெற்றேன். 
               
****************************************
ஊர் வந்து சேர்ந்ததும், ஓய்வு எடுத்துக் கொண்டு, என்னுடைய மனைவியையும், பெண்ணையும் பார்ப்பதற்கு, ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அக்காவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கின்றது என்று கேள்விப் பட்டவுடன், என்னுடைய (உதவாக்கரை) மைத்துனன், அந்தக் குழந்தைக்கு, ஒரு பிங்க் நிற கவுன் வாங்கி வந்து கொடுத்திருந்தான். என்னுடைய மனைவி, அந்த கவுனை, என் பெண்ணுக்கு அணிவித்திருந்தாள். என்னைப் பார்த்ததும், என் மனைவி ரொம்ப சந்தோஷமாக, "வந்துட்டீங்களா? நம்ப பெண்ணைப் பாருங்க! எவ்வளவு அழகா, க்யூட்டா இருக்கா!"

"ஆமாம். ரொம்ப அழகா, தலை நிறைய கரு கரு, சுருள் முடியோடு, தீர்க்கமான கண்களோடு, க்யூட்டா இருக்கா!"
   
மனைவி: "இந்த அழகுக் குட்டிக்கு, இந்த 'பிங்கி'க்கு, 'மாயா' என்று பெயர் வைப்போமா?"
   
(தொடரும்) 
                       

திங்கள், 14 மே, 2012

நடக்கும் நினைவுகள்... (06) கில்லி!

               
நடந்து சென்று,  கடந்து செல்லும்போது கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்த சில வாண்டுகளைத் தாண்டிச் சென்றேன். மரியாதை நிமித்தம் நான் கடந்து செல்லும்வரை ஆட்டம் நிறுத்தப் பட்டது. பௌலர் விக்கெட் கீப்பரைப் பார்த்து "உங்க ஸ்கோர் என்ன" என்றான்! (சாதாரணமாக பௌலரும் விக்கெட் கீப்பரும் ஒரே டீமாகத்தானே இருக்க வேண்டும்? தெரு கிரிக்கெட்டின் நியதிகள் தனி. ஆள் பற்றாக்குறையால் தன் டீமுக்கு தானே கீப்பிங் செய்வார்கள்!) ஃபீல்டர் வாண்டு ஒன்று "பதினேழு" என்றது. பௌலர் கடுப்பானான். "எப்படி, எப்படி... இப்போதானே பதினொன்னுன்னு சொன்னே" என்று பாய, கீப்பர், ஃபீல்டர் ஆகியோர் பஞ்சாயத்தில் ஈடுபட, நான் முனநோக்கி நடந்தாலும் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன! 
                  
கிரிக்கெட்டுக்கு ஆதி விளையாட்டு கிட்டிப் புள்! கிட்டி என்று அழைக்கப் படும் பாதி விறகு போன்ற சவுக்குக் கட்டை ஒரு முனையில் பாதியாகச் சீவப் பட்டு கிரிக்கெட்டில் இருக்கும் 'பேட்'டுக்குச் சமானமாய் இருக்கும். புள் என்று அழைக்கப் படும் வஸ்து,  உள்ளங்கை சைஸில்அதே சவுக்குக் கட்டை இரண்டு பக்கமும் கூராகச் சீவப்பட்டு இருக்கும்.  இதைப் பந்தாகக் கொள்ளலாம்! 
                        
ஒரு வட்டத்துக்குள் செதுக்கப் பட்டிருக்கும் சின்னஞ்சிறு நீள் குழியில் இந்தப் புள் குறுக்கு வாட்டில் வைக்கப் பட்டு, 'கீந்த'ப் படும்! கெந்தி விடுதல் கெந்துதல் என்பதுதான் கீந்துவது என்று பேச்சு வழக்காக இருந்தது. சற்று தூரத்தில் ('கீந்த'ப் படும் புள் உத்தேசமாகப் பயணம் செய்யும் தூரத்தில்) எதிர்க் கட்சி ஆட்கள் நின்றிருப்பார்கள் கீந்தப் படும் 'புள்'ளை (கையில் துண்டுடன் அல்லது கழற்றப்பட்ட அவரவர் சட்டையுடன் - விக்கெட் கீப்பர் போலத்) தயாராய் நிற்கும் எதிர் டீம் ஆட்கள் கேட்ச் செய்து விட்டால் கீந்திய ஆள் அவுட். பக்க வாட்டிலோ, தலைக்கு மேலோ வேகமாக 'கீந்த'க் கூடியவர்கள் திறமை சாலிகள். 
                     
இதில் கண்டிஷன் எல்லாம் உண்டு. திரும்பி நின்று தலைகீழாய் கால்களுக்கிடையே கீந்த பெரும்பாலும் தடை விதிக்கப் படும்! வேகம் அதிகம் இருக்கும் என்பதால். நேராக நின்றுதான் கீந்த வேண்டும்!! கேட்ச் பிடிக்கப் படாமல் கீழே விழும் 'புள்'ளை எதிர் டீம் ஆட்கள் எடுத்து, கீந்தியவன் அந்த வட்டத்தின் மேல் முனையில் வைத்திருக்கும் கிட்டியை அடிக்க வேண்டும். புள்ளால் கிட்டியில் அடித்து விட்டால் கீந்தியவர் அவுட். 
                  
இதிலும் தப்பி விட்டால் அந்தப் 'புள்' எங்கு விழுந்திருக்கிறதோ அங்கு சென்று கிட்டியால் 'புள்'ளை ஒரு முனையில் தட்டி மேலெழுப்பி அடிக்க வேண்டும். இது மாதிரி மூன்று முறை செய்யலாம். மூன்றாவது முறையும் புள்ளை மேலே எழுப்பி எவ்வளவு தூரத்தில் அடித்திருக்கிறோம் அங்கிருந்து வட்டம் வரை கிட்டியால் அளந்து கொண்டே வர வேண்டும். அது ஸ்கோர்!
                  
பதில் ஆட்டத்தில் எதிர் டீம் அந்த டார்கெட்டைத் தாண்ட வேண்டும்!
                         
கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும் போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்து விட்டாலும் அவுட்! அதே சமயம் புள்ளைக் கிட்டியால் அடித்து மேலே எழுப்பி அதை இரண்டு முறை மூன்று முறை என்று எத்தனை முறை வேண்டுமானாலும் (முடிந்தால்) தட்டி அப்புறம் அடிக்கலாம். இதற்கு(த்தான்) கில்லி என்று பெயர்! அபபடி அடிக்க அடிக்க கிட்டியால் வட்டம் வரை அளக்கும் ஒரு அளவை இரண்டு மடங்கு மூன்று மடங்கு என்று உயரும் ஏதோ ஒரு கட்டத்தில் 'புள்ளா'ல் அளக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஸ்கோர் செம எகிறு எகிற ஒரு வாய்ப்பு! 
                      
இந்த மாதிரி 'கில்லி' அடிக்கும் முயற்சிகளில் இருக்கும்போது(ம்) எதிர் டீம் கேப்டன் "ஸ்கோர் என்ன" என்று கேட்பார். (மற்ற சமயங்களிலும் கேட்கலாம். இப்போது கேட்டால் அடிப்பவரின் கவனத்தைக் குலைக்கலாமே!) யாராவது அவசரப் பட்டு தப்பாகச் சொல்லி விட்டால் போச்! அத்தோடு அந்த டீமின் ஆட்டமே காலி. எனவே ஒவ்வொரு டீமிலும் ஸ்கோர் சொல்ல என்று தனியாக ஆட்களை வைத்து விடுவார்கள், அல்லது கேப்டன் 'வேறு யாரும் சொல்லக் கூடாது. நான்தான் சொல்வேன்' என்று சொல்லி விடுவார்! 
              
ஆட்டத்தின் இந்த இடம் வாண்டுகள் கிரிக்கெட்டில் ஸ்கோர் கேட்ட இடத்தில் நினைவுக்கு வந்ததால்தான் முழு ஆட்டத்தைப் பற்றியும் நினைவுக்கு வந்து நினைவுகள் கூடவே நடந்தன! 
                         
கில்லி அடிக்கும் போது கேட்ச் பிடிக்க முயன்று எத்தனை முறை இரண்டு கை மணிக்கட்டுகளிலும் கிட்டியால் அடி வாங்கியிருக்கிறோம் என்று மணிக்கட்டுகள் வலியை நினைவு கூர்ந்தன. 
                      
கிட்டியாலும், புள்ளாலும் அடிவாங்கிய நாட்களும், தெருவில் தாண்டிச் செல்வோர் மீது பட்டு, சண்டை ஏற்பட்ட நாட்களும் நினைவில் நடை பயின்றன.
                       
இப்போது (கிராமங்களிலேனும்) யாராவது கிட்டிப்புள் விளையாடுகிறார்களா, தெரியவில்லை!