புதன், 26 பிப்ரவரி, 2014

என்றென்றும் சுஜாதா





இந்தப் புத்தகம் படித்தபோது மறுபடி சுஜாதா நம்மிடையே இருப்பது போன்றே உணர்வு. படிப்படியாக அவருடனான தனது முதல் சந்திப்பிலிருந்து சொல்லத் தொடங்குகிறார் அமுதவன். கொடுத்து வைத்தவர். 'ஆறடி தாண்டிய அந்த அற்புத மனிதருடன்' வெளியூர்ப் பயணத்தில் உடன் செல்வதே சுவாரஸ்யம் என்று எழுதி இருக்கும் இவர், அவருடன் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நெருக்கமான நண்பராக இருந்திருக்கிறாரே....

                                                                       
 
மூன்று மாதங்களுக்குமுன் இந்தப் புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டபோது சுஜாதா பெயரை உபயோகித்து காசு பார்க்க நினைக்கும் முயற்சியாகவே தோன்றியதால் (அதுமாதிரி ஒரு புத்தகம் வாங்கி ஏமாந்திருந்தேன்) இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. புத்தகத் திருவிழாவுக்குமுன் எங்கேயோ படித்த ஒரு விமர்சனம் 'இது வாங்கவேண்டும்' என்று குறித்து வைத்துக் கொள்ளத் தோன்றியது. (இப்போது கூட ஒரு வாரமாக எஸ்ரா எழுதியுள்ள இதே போன்றதொரு சுஜாதா நினைவுகள் புத்தகம் பற்றி முகநூலில் பார்த்தேன். வாங்க வேண்டுமா என்று இனிதான் முடிவெடுக்க வேண்டும்.)
                          


புத்தகக் கண்காட்சியில் புத்தகம் எடுத்து சற்றே புரட்டிப் பார்த்ததுமே நல்லவேளை, வாங்கி விட்டேன்.
    


புத்தகத்தின் கடைசி பகுதிகளில் கண்கலங்க வைத்திருக்கிறார் அமுதவன். சுஜாதா ரெங்கராஜனின் கடைசி நாட்களைப் பற்றி எழுதி இருக்கிறார். கற்றதும் பெற்றதும் பகுதியில் அமுதவன் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் குறிப்பிட்ட வாரப் பதிவை என்போன்ற பலரும் படித்து அதிர்ந்துதான் போயிருந்தோம்.


பல பிரபலங்கள் 'முன்னாள் பிரபலங்களா'க மறைவதே வழக்கம். அதாவது அவர்தம் துறையில் சமீபத்தில் அவருடைய பங்களிப்பு என்று ஒன்றும் இருக்காது என்ற நிலையிலேயே கூட அவர்களது மறைவுகள் அவர்களை நேசித்த மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். (உதாரணம் சிவாஜி கணேசன், ராஜேஷ் கன்னா, பி பி ஸ்ரீனிவாஸ், டி எம் எஸ்) கடைசிவரை எழுத்துலகில் உயிர்ப்புடனிருந்த சுஜாதாவின் மறைவு எங்களைப் போன்ற அவர் ரசிகர்களுக்கு மாறாத சோகம்தான். 


என் நண்பன் ஒருவன் - அவனும் தீவிர சுஜாதா விசிறி - அவர் மறைவுச் செய்தி கேட்டு மயிலை செல்லலாமா, அஞ்சலி செலுத்தலாமா என்றுகேட்டபோது, வேண்டாம் என்று சொல்லி விட்டேன். விட்டு விட்டோம். உயிருடன் அவரைப் பார்த்திருந்தால் அர்த்தம் இருந்திருக்கும். மறைந்தவுடன் போய்ப் பார்ப்பதில் என்ன இருக்கிறது? சுஜாதா என்றென்றும் எங்கள் மனதில் இருக்கிறார்தான். 


லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நிருபமா என்று ஒருவரும் முன்னுரை எழுதி இருக்கிறார். யாரென்று தெரியவில்லை. ஆனால் நிருபமா என்ற பெயர் பார்த்ததும் 'எதையும் ஒருமுறை' நிரு நினைவுக்கு வந்தார். கூடவே மாருதி வரைந்திருந்த அந்த ஓவியப்பெண்ணும்!


பழகுவதற்கு எவ்வளவு எளிமையானவர் சுஜாதா என்று அமுதவன் விவரித்துக்கொண்டு வரும்போது சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது. அந்த எளிய மனிதரின் பயம் (ரத்தம் ஒரே நிறம்) பற்றி அமுதவன் எழுதி இருந்தது பற்றிப் படித்தபோது பாவமாக இருந்தது. "என்னை ரொம்பவும் நேசிப்பதாக என்னிடம் நட்பு பாராட்டும் சில நண்பர்களே இதைத் தூண்டி விட்டு நடத்துகிறார்கள் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி" என்று சொல்லியிருக்கிறார் சுஜாதா. 


சுஜாதாவே கமலிடம் விருப்பம் தெரிவித்திருந்தும் அவரை நடிக்கவைக்க கமல் முயற்சி எடுக்காதது ஆச்சர்யம்தான். கமல் நினைத்திருந்தால் அது பெரிய விஷயமில்லை.

                     


பதிப்பகத்தார் சிலர் அவரை ஏமாற்றியது குறித்துச் சொல்லியிருப்பது (ஒரு புத்தகத்துக்கான ராயல்டி ஒரு வெள்ளிக்குடம், இன்னொன்றுக்கு ஒரு பேன்ட் பிட் - அதுவும் அவரின் கணுக்கால் அளவுக்குத்தான் வருமாம்), திரையுலகிலும் அவரை உபயோகித்துக் கொண்டு அவருக்குச் சேர வேண்டியதைத் தராமலிருந்தவர்கள், ("சுஜி எல்லாத்துக்கும் கணக்கு வச்சிருக்கா") சுஜாதா எழுத்துகளுக்கு திருமதி சுஜாதாவின் உதவி, சுஜாதா பங்குபெற்ற முதல் வாசகர் கூட்டத்தின் சுவாரஸ்யம், அவருக்கு வந்த திரைப்பட இயக்குனர் வாய்ப்பு... அலுவலகத்தில் அவரின் சாதனைகளும், வேதனைகளும்,... நண்பரின் திருமணத்தைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, அப்போது அந்தக் காலத்தில் அரிதாகவே கிடைக்கக் கூடிய அமெரிக்கப் பயண வாய்ப்பையே சுருக்கிக் கொண்டது, 

நிறையவே சுவாரஸ்யமான பகுதிகள். 

திருமதி சுஜாதா தன் கணவர் பற்றிச் சொன்னதாக சமீபத்தில் ஒரு வார இதழில் வந்த பேட்டி எவ்வளவு பொய் என்று இதைப் படிக்கும்போது தெரிகிறது. போதாததற்கு திருமதி சுஜாதாவே தான் தற்சமயம் எழுதிவரும் ஒரு தொடரிலும் இது பற்றிச் சொல்லியிருக்கிறார்.


                                               _MG_2251
பல இடங்களில் பல விவரங்களை, தனக்குத் தெரிந்திருந்தும் நாகரீகம் கருதி அளவாகவே சொல்லிச் செல்கிறார் அமுதவன்.
எல்லோரும் பாட்டெழுத நான் என்ன விதிவிலக்கா என்று ஆரம்பித்து சுஜாதா எழுதிய ஒரு கவிதை!

"படுத்துக் களைத்திருக்கும் பத்மாவைப் பாச்சா
கடித்த கதை பற்றிச் சொல்ல நினைத்தவன்
பாயை விரித்துப் படுத்தவளை பாச்சா
வாயைத் திறந்து...வரைக்கும் வந்துவிட்டேன்.
மாயச் சுழலிது மேலே முடிச்சவிழ்க்க
ராயப்பேட்டை பாலு வா!"
ரசிகர்கள் தன்னைப் பார்க்கும்போது கேட்கும் கேள்விகளாக சுஜாதா சொல்வது பற்றி இரண்டு இடங்களில் வந்திருக்கிறது. (பக்.30 மற்றும் பக்.78)

சுஜாதாவால் கைதூக்கி விடப்பட்ட அப்போதைய ஒரு இளம் எழுத்தாளரே சுஜாதா பெயரைக் கெடுக்க முயற்சித்ததும், அவரை மன்னித்த சுஜாதாவின் பெருந்தன்மையும், சாவியுடனான அவரின் ஊடல் உட்பட்ட நட்பு அனுபவங்கள்....
சுஜாதா எழுதிய ஒரு தொடர்கதைக்கு அண்ணாசாலையில் வைக்கப்பட்ட ஒரு கட் அவுட் குறித்து அவர் அடைந்த சந்தோஷம், (கனவுத் தொழிற்சாலை என்று நினைக்கிறேன்)
                


ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவரா சுஜாதா என்ற சந்தேகம் வந்ததாம் ஒருவருக்கு. சிந்தனைக்கு மொழி உண்டோ? அப்படியே இருந்தாலும் அது தாய்மொழியாகத்தானே இருக்க முடியும்?


படிக்கப் படிக்க சுஜாதாவின் இன்னொரு பக்கத்தை அறிய முடிகிறது. எவ்வளவு எளிய மனிதர்! உடம்பு மிகவும் முடியாத நிலையிலும் அவர் ஓய்வெடுக்காமல் இரண்டு மூன்று வேலைகளை ஒத்துக் கொண்டு அவர் உழைத்தது,

அப்போதைய கர்னாடக முதல்வர் வீரப்ப மொய்லியுடன் நடந்த நேர்காணலில் சுஜாதா கொண்டு சென்றிருந்த டேப் ரெகார்டர் வேலை செய்யாமல் போக, மூட் அவுட் ஆன சுஜாதாவுக்கு ஆறுதல் சொல்லி அந்த நேர்காணலைத் தனது நினைவிலிருந்து அழகாக, ஒன்றையும் விடாமல் அமுதவன் எழுதிக் கொடுத்ததை சுஜாதா மிகவும் பாராட்டினாராம். உண்மை. சுஜாதா பற்றி இவர் எழுதி இருப்பவை சுஜாதா பேசுவது போலவே இருக்கின்றன. 


கமலை அழைத்து வந்து சுஜாதா நடத்திய (அவர் அலுவலகத்தில்) விழா ஒன்றுக்கு இவரை அழைக்கவில்லை சுஜாதா.  அதைப் பற்றியும் எழுதி இருக்கிறார் அமுதவன். அந்தக் கட்டுரையே ஏதோ பாதியில் நிற்பது போல இருக்கிறது (பக்.87). அதை கவனித்தீர்களா, அந்தக் கட்டுரையே அவ்வளவுதானா அமுதவன் ஸார்?


இன்னொரு இடத்தில் 'கண்ணதாசனைப் பார்த்த பிரமிப்புப் போலவே அவர் தொழில்ரீதியாக பிரமித்துச் சொன்னது ரஹ்மானைத்தான்' என்று எழுதி இருக்கிறார் அமுதவன். கண்ணதாசன் பற்றிய அந்தக் குறிப்பு இந்தப் புத்தகத்தில் இல்லை.


புகைப்படங்களைப் பொறுத்தவரை ஆரம்பகாலப் புகைப்படங்களில் தொடங்கி படிப்படியாக அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ற புகைப்படங்களைத் தொகுத்திருப்பது அழகு. கடைசி பகுதிகளில் இளைத்து, கூன் விழுந்த அந்த உயர மனிதரின் புகைப் படங்கள் சோகத்தைத் தருகின்றன.


இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் அவர் எழுதி இருக்கும் எல்லாவற்றையும் நானே பகிர்ந்து விடுவேன்...

அவசியம் சுஜாதா ரசிகர்கள் தவற விடக் கூடாத புத்தகம்.

'என்றென்றும் சுஜாதா'
விகடன் பிரசுரம்
184 பக்கங்கள் - 90 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க.

ஜோதிஜி திருப்பூர் தனது தேவியர் இல்லம் பக்கத்தில் பகிர்ந்துள்ள, இதே புத்தகத்துக்கான விமர்சனம்.
 

24 கருத்துகள்:

  1. மிக அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். வாங்கி வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம்... பால்ஹனுமான் அவர்களின் இணைப்புகளுக்கு நன்றி... அமுதவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. ஆ.வி.&யில் வேலை பார்த்தபோது சுஜாதா என்ற மந்திரச் சொல்லுக்காகவே இந்தப் புத்தகத்தை கேட்டு வாங்கி லேஅவுட் பண்ணினதும், அந்தச் சாக்கில் மொத்த மேட்டரையும் படித்து ரசித்ததும் இப்போதும் நினைவில் பசுமையாய். படிக்கையில் நான் என்னென்ன உணர்ந்தேனோ... அதில் ஒன்றும் விடாமல் அருமையாக இங்கு நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கையில் மகிழ்ச்சி! குறிப்பாக & கறுப்பு சிவப்பு வெளுப்பு வரலாற்று நாவல் துவங்கியதில் வந்த பிரச்னைகளின் தீவிரம் மற்றும் பதிப்பகங்கள் சரியான ராயல்டி தராமல் ஏமாற்றிய விஷயமும்! (உங்க கதைகளை தொடர்கதையாவே ஜனங்க படிச்சுடறதால புத்தகங்கள் விக்கறதில்லை சார்ன்னு சொல்லப்பட்டதை நம்பிய அப்பாவி எழுத்தாளர்!!!)

    பதிலளிநீக்கு
  4. நானும் இது இந்த புத்தகம் குறித்து ஒரு விமர்சனப் பார்வையாக எழுதி உள்ளேன்.

    http://deviyar-illam.blogspot.in/2014/02/blog-post_14.html

    பதிலளிநீக்கு

  5. @ஜோதிஜி... நானும் படித்தேன். இங்கு இணைப்பு நானே கொடுத்திருக்க வேண்டும். இப்போது கொடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. சாதனையாளர்கள் பற்றிப் படிப்பது சுவாரசியமே. அதுவும் விருப்பத்துக்குரிய சா பற்றிப் படிப்பது இன்னும் சு.

    சுஜாதா போதை இன்னும் குறையவில்லை என்பது உங்கள் விமரிசனக் குதூகலத்திலிருந்து புரிகிறது.

    திருமதி சுஜாதாவே சொல்லிட்டாங்கனா சரியாத்தான் இருக்கும். முன்னால சுஜாதா இன்ன மாதிரினு சொன்னவங்க அப்ப யாரு?

    சிந்தனைக்கு மொழி உண்டு. தாய்மொழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    சுஜாதாவின் எழுத்து அவர் காலத்திலேயே அலுத்து விட்டது. டிஎம்எஸ் இன்னும் அலுக்கவில்லை.



    பதிலளிநீக்கு
  7. இதுவரைப் படிக்கவில்லை
    அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்
    அற்புதமான பதிவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ***திருமதி சுஜாதாவே சொல்லிட்டாங்கனா சரியாத்தான் இருக்கும். முன்னால சுஜாதா இன்ன மாதிரினு சொன்னவங்க அப்ப யாரு?***

    அந்தத் "தவறை" சரிசெய்யத்தானே இந்தத் தொடரே எழுதப் படுகிறது?

    I dont know how many people are behind her and INSTRUCTING her how to write the TRUTHS and FACTS about her husband, which she herself dos not know or have any idea about it! LOL

    However அவர் குறைகளை எழுதியது எழுதியதுதான். அதை அழிக்க முடியாது. ஆனால் அவரை மிகையாகப் புகழ்ந்து அதை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம் என்கிற எண்ணத்தில் "சான்றோர்களின்" ஆதரவில் அவர் "எழுதுகிறார்".

    இரு கோடுகள் மாதிரி, குறைக்கோட்டை மிகச்சிறியதாக ஆக்க இப்போ நிறைக்கோடு நீளமாகப்போடப்படுகிறது! ஆனால் எவ்ளோதான் நீளமாக்கினாலும் அந்த சிறிய கோடு இருக்கத்தான் போது!

    It is always interesting read human beings "justifications" by manipulating the "mistakes" made earlier! LOL

    பதிலளிநீக்கு

  9. திரு. அமுதவன் அவர்கள் தமிழ்மணத்தில் நட்சத்திர எழுத்தாளராக இருந்தபோது பகிர்ந்து கொண்ட பலவிஷயங்கள் இதில் இருப்பது போல் தெரிகிறது. திரு. சிவகுமார் பற்றியும் நிறையவே பகிர்ந்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது. சுஜாதா எழுதிய பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். மெக்சிகோ நாட்டு சலவைக்காரி பற்றி கீரிக்கும் பாம்புக்கும் சண்டையிடப் போகும் கழைக்கூத்தாடி போல் சொல்லியே வந்தார். எங்காவது அந்த ஜோக் சொன்னாரா தெரியவில்லை. ஒருவேளை அமுதவனுக்குத் தெரிந்திருக்கலாம் அந்தப் புத்தகம் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  10. நானும் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு விசிறி . உங்கள் புத்தக மதிப்புரை மிகவும் விரிவாக உள்ளது. படிக்க வேண்டிய புத்தகம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா.

    பதிவை படித்த போது.. அந்த புத்தகத்தை வேண்டி படிக்கச் சொல்லுகிறது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராமுக்கும் கருத்துச் சொல்லியிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான புத்தக அறிமுகம்...

    நிச்சயம் வாங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான மதிப்புரை. பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாவ் படிக்க அருமையா இருக்கு..

    பதிலளிநீக்கு
  16. வாவ் படிக்க அருமையா இருக்கு..

    பதிலளிநீக்கு
  17. வாங்கி வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியது தங்களின் பார்வையில் இந்த புத்தகம்.

    பதிலளிநீக்கு
  18. அனுப்பி வைங்க படிச்சுடுவோம். :)

    பதிலளிநீக்கு
  19. தங்களின் விமர்சனத்திற்கு நன்றி
    நான் இன்னும் வாங்கி படிக்கல படிக்கிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!