கொத்துமல்லித் தொக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொத்துமல்லித் தொக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.6.15

'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு




தலைப்பில் கொத்துமல்லி மட்டும் இருந்தாலும் இதில் புதினாவுக்கும் இடமுண்டு.


வீட்டில் என்றென்றும் இருப்பில் இருக்க வேண்டிய விஷயங்கள் பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், போன்றவற்றோடு கறிவேப்பிலை மற்றும் இந்தக் கொத்துமல்லிக்கு நிறைய இடம் உண்டு.


கொத்துமல்லி இல்லையேல் சாம்பார் இல்லை.  கொத்துமல்லி இல்லையேல் ரசம் இல்லை!  இட்லி, தோசைக்கு அரைக்கும் தேங்காய் சட்னியில் கொத்துமல்லி சேர்த்தால் தனிச் சுவை.  

கொத்துமல்லித் தழைகளை என் அப்பா சும்மாவே வாயில் போட்டு மெல்லுவார்!  சாம்பார், ரசத்தில் போடும்போது சற்றுப் பொடியாக நறுக்கிக் கூடப் போடுவோம்!

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.


இரண்டு கட்டு கொத்துமல்லி வாங்கிக் கொள்ளவும்.  (சென்னையிலும், மதுரையிலும் கட்டு 10 ரூபாய்!)  அப்புறம் ஒரு கட்டு புதினா வாங்கிக் கொள்ளவும்.  (இதுவும் கட்டு 10 ரூபாய்தான்).  சிலர் இரண்டு கட்டு கொத்துமல்லிக்கு இரண்டு கட்டு புதினா போடலாம் என்பார்கள்.  ஆனால் அப்படிப் போட்டால் தொக்கின் பெயரில் புதினாவுக்கும் இடம் கொடுக்க வேண்டி வரும்.  எனவே கொத்துமல்லி வாசனை தூக்கலாகத் தெரிய இந்த அளவிலேயே நாம் செய்வோம்!


அப்புறம் ஒரு சள்ளை பிடித்த வேலை.  இந்த கொத்துமல்லி, புதினாவை இலை, இலையாக ஆயவும்.  ஆயப்பட்ட ஈர்க்குகளில் இலை வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும்.  பின்னே?  கட்டு 10 ரூபாயாக்கும்!  இலைகள் போக மிச்ச மீதியைத் தூக்கித் தூர வைத்து விடவும்.




ஆய்ந்த இலைகளை சுத்தமான நீரினில் நன்கு அலசி, 


ஒரு செய்தித் தாளில் பரவலாக இட்டு, காய வைக்கவும்.  காய வைக்கவும் என்கிற வார்த்தையை விட 'உலர வைக்கவும்' என்கிற வார்த்தைப் பொருத்தமாக இருக்கும்.  எனவே சென்ற வரியை அழித்து விடவும்!


அப்புறம் கொஞ்சமாக உளுத்தம் பருப்பு, (உளுத்தம் பருப்பு நிறையச் சேர்த்தால் தொக்கின் சுவை கெட்டு விடும்.  அதனால் கொஞ்சமாக சேர்க்கவும்) காரத் தேவைக்கு ஏற்றாற்போல வரமிளகாய், கொஞ்சம் பெருங்காயம் எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து ஓரமாக வைக்கவும்.  அடுப்பை அணைத்து விட்டு அந்தச் சூடான வாணலியில் இந்த இலைகளைப் போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.


உளுத்தம்பருப்பு, இன்ன பிற சமாச்சாரங்களைத் தனியாக மிக்ஸியில் இட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும்.  கரகரவென்று நான் சத்தத்தைச் சொல்லவில்லை.  ரொம்ப நைஸாக அரைக்க வேண்டாம் என்பதைச் சொன்னேன். 



பிறகு இலைகளைத் தனியாக மிக்ஸியிலிட்டு நான்கு ( 4 தான்) சுற்று சுற்றிக் கொள்ளவும்.


அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் இந்த இலைகளைக் கலந்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.








இப்போது தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.  இல்லை, இட்லிதான் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.   அட, வேண்டாமப்பா, 'இன்று நான் மோர்சாதம்தான் சாப்பிடப் போகிறேன்' என்கிறீர்களா?  அதற்கெல்லாம் இது நல்லபடி துணை நின்று உள்ளே அனுப்பி வைக்கும்!