கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1. ஆண் நடிகர்கள் வயதாக ஆக மெஜெஸ்டிக் லுக் வருவதும் பெண் நடிகைகளுக்கு வயதாக ஆக அப்படி இல்லாததன் காரணம் என்ன? உடனே விதிவிலக்குகளான பிரசாந்தைக் கொண்டு வராதீங்க
# நடிகைகள் திரையில் மிக அழகாகத் தோன்றுவதன் பின்னணியில் எவ்வளவு பேருடைய உழைப்பு இருக்கிறது என்பது நமக்குப் புரிவதில்லை. நடிகர்களின் மெஜஸ்டிக் லுக்கும் அவ்வாறே.
2. "டூட்" படம் மோசம் என்ற விமர்சனம் பலர் சொல்றாங்க (Dude) நான் படமாகப் பார்த்தபோது எனக்கு அப்படித் தோன்றவில்லை. நகைச்சுவையா ஒரு கான்செப்ட் எடுத்துக்கிட்டு பண்ணியிருக்காங்க. மோசமான படம் என்றால் சூப்பர் ஹிட் ஆகுமா? நீங்கள் படத்தைப் பார்த்தீர்களா?
# நான் பார்க்கவில்லை.
& நானும் பார்க்கவில்லை; பார்ப்பதாகவும் இல்லை.
3. நம்ம ஊர்ல, வெளி நாடுகளைப் போல, விவசாயத்தை பெரிய தொழிலாக அணுகினால், அதாவது வெண்டைக்காயை வற்றல், உறைந்த வெண்டை என்று பலவித மதிப்பு கூட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் கம்பெனி, வெண்டை விவசாயிகளிடம் வாங்கியோ அல்லது அவங்களே பெரும் விவசாய நிலங்களில் விளைவித்தோ, கார்ப்பொரேட் போன்று செயல்பட ஆரம்பித்தால், விவசாயத்தில் நஷ்டம் என்று ஒன்று வராதோ?
# விவசாயத்தில் இடைத் தரகர்கள் கொல்லை லாபம் அடிப்பதே நிறுத்தினாலே விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதை எடுத்துச் செய்ய யாருக்கும் வாய்ப்பு இல்லை. காரணம் அரசு இயந்திரத்தில் எல்லா மட்டங்களிலும் பரவி போன ஊழல் லஞ்சம். மற்றபடி நீங்கள் சொல்வது போல் விவசாயிகளின் விளைச்சலை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அமோகமாகத்தான் இருக்கும்.
4. டயபடீஸ் ஷுகர் அளவு, BP அளவு, எடை என்று பலவற்றை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எடுத்து கவலைப்பட்டு, அதற்காக மருந்துகளோ அல்லது உடற்பயிற்சிகளோ செய்வதைவிட, எதையும் செய்யாமல் அக்கடா என்று இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு வழியோ?
# எனக்கு உடல்நிலை பலருடன் ஒப்பிடும் போது நன்றாக இருப்பதால் இந்த கேள்விக்கு சரியான பதிலை என்னால் சொல்ல இயலவில்லை. என் கருத்து என்று சொல்வதானால் உடம்பில் ஏதாவது ஒரு உபாதை வந்தால் அதை பார்த்து வைத்தியம் செய்து கொண்டால் போதும் என்று தோன்றுகிறது. 75 அல்லது 80 வயதை கடந்தவர்களுக்கு மிகப்பெரிய தொகை செலவு செய்து வைத்தியம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மருத்துவம் செய்ய ஐ சி யூ வில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் தனி அறையில் வைத்தியம் செய்து கொள்ள ஒரு நாளைக்கு 17,000 என்ற செலவானதாகச் சொன்னார்கள். எத்தனை பேரால் இந்த மாதிரி வைத்தியங்கள் செய்து கொள்ள முடியும் ?
5. எந்த வயதில் நாக்கிற்கு ருசி முக்கியமாக இருக்காது? எதையாவது சாப்பிட்டால் போதும் என்று தோன்றும்?
# இதற்கு வயது நிர்ணயம் செய்ய இயலாது. ஏதோ உள்கோளாறு காரணமாக உணவில் ஈடுபாடு குறைவதை அந்தக் காலத்தில் "அன்னத் திரேஷம்" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வசதி இல்லாது, வயிறும் காய்ந்தால் பழைய செருப்பை மோரில் ஊறப்போட்டு சாப்பிடலாம், (சார்லி சாப்ளின் மாதிரி).
பானுமதி வெங்கடேஸ்வரன் :
என் தோழி ஒருத்தி 1980ல் வங்கி நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, "சமைக்கத் தெரியுமா? என்ன இனிப்பு செய்வீர்கள்?"மைசூர் பாக் செய்வது எப்படி? என்றெல்லாம் கேட்டார்களாம். அவள் சென்றதோ வங்கியில் எழுத்தர் பணிக்கு. இப்படி நிறைய கதைகள் அப்போது உண்டு. அது என்ன மாதிரி மனப்பான்மை? இப்போதெல்லாம் அப்படி நடப்பது போல் தெரியவில்லையே?
# விசாலமான அறிவு இருக்கிறதா என்று சரி பார்க்க இந்த மாதிரி கேள்விகள் உதவும் என்று நினைத்துக் கேட்கிறார்களோ ?
& பெரிய கம்பெனிகளில் நிறைய பேரை இண்டர்வியூ செய்பவர்களுக்கு ஒரு பேசிக் ரூல் உண்டு. Make the candidate to feel ease. ஆகையால் முதல் சில கேள்விகள் இப்படிக் கேட்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்குப் பிறகு வேலை தொடர்பு உடைய கேள்விகள் கேட்பார்கள்.
அப்படி இல்லாமல் நேர்முகத் தேர்வு முழுவதும் இப்படியான கேள்விகள் என்றால், வேலைக்கு ஆள் ஏற்கெனவே தேர்ந்து எடுத்துவிட்டார்கள் அல்லது ஹை லெவல் recommendation மூலம் வேறு ஆளுக்கு வேலை என்று முடிவெடுத்திருப்பார்கள். உங்கள் தோழியிடம் சும்மா சில கேள்விகள் கேட்டு time pass செய்திருப்பார்கள்.
கே. சக்ரபாணி சென்னை 28:
1. யாரேனும் ஃபோன் செய்து என்ன பண்றீங்கன்னு கேட்கும்போது சும்மாதான் இருக்கேன்னு சொல்றதுக்கு பதிலா ஃபிரீயாதான் இருக்கேன்னு சொல்லலாமே.
# லாம்தான். வோம்.
& 'ஃபிரீயாதான் இருக்கேன்' என்று ஆண்கள் சொன்னால் சரி; பெண்கள் சொன்னால் சரியாக இருக்குமா? என்று யோசிக்கவேண்டும்.
2. திருமணத்தில் காசியாத்திரை நிகழ்ச்சியில். மாப்பிள்ளைக்கு குடை விசிறி காலுக்கு செருப்பு எல்லாம் கொடுப்பார்கள் சரி கையில் கைத்தடி கொடுப்பது ஏன்?
# 1945 வாக்கில் தலைப்பா அங்க வஸ்திரம் வாக்கிங் ஸ்டிக் இவை உல்லாசிகளின் அடையாளங்களாகக் கருதப்பட்டன. எங்கள் வீட்டிலேயே பனங்கட்டையில் செய்த வாக்கிங் ஸ்டிக் இருந்தது. அது போக யாத்திரிகர்களுக்கும் கைத்தடி ஒரு உபயோகமான பொருள். காசி யாத்திரை போகும் பையனுக்கு அது வேண்டாமா ?
& இதென்ன இப்பிடி கேட்டுட்டீங்க! காசியாத்திரை செல்லும் மாப்பிள்ளை, வெயில் / மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள குடை, தங்குமிடங்களில் (சத்திரங்களில்) காற்றுக்காக விசிறி, கால் செருப்பு வெயில் முள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு - எல்லாம் சரி - போற வழியில (சொறி)நாய் துரத்தினால், அவற்றைத் துரத்துவதற்கு வாக்கிங் ஸ்டிக். அம்புட்டுதான்!!
= = = = = = = = =
படமே பதம் :
அனுப்பியவர் : ஆர் இளங்கோவன்; உரிமையாளர், ராஜம் ஹவுசிங், ஊரப்பாக்கம் .
- - - - - - - - - - - - -
மருத்துவக் குறிப்பு : (ஆம் - அவர்தான் அனுப்பினார்!)
நாராயண, நாராயண!
== = = = = = = =
படமும் பதமும் :
கிருஸ்துமஸ் candy, மற்றும் சாக்லேட்டுகள்.
---------------------
சென்ற வாரத்தில் ஒரு நாள் மால் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். Lush என்னும் பிரபல பாடி கேர் & சோப் கடையில்தான் இந்த சோப்புகளை பார்த்தேன்.
மிட்டாய், சாக்லேட், கேக் வடிவ சோப்புகள். வெனிலா, ஸ்ட்ராபெர்ரி என்று ஐஸ்க்ரீம் போல ஃப்ளேவர்கள். பாத்ரூம் ரிஃப்ரஷ்னர் கூட இந்த அரோமாக்களில்🤔
பாத்ரூம் ரிஃப்ரஷ்னர் என்றால் லாவண்டர், ரோஸ், லெமன், ஜாஸ்மின் என்று பழகிய எனக்கு வித்தியாசமாக இருந்தது.
------------
பெரிய சைஸ் கர்மா, ஹனிகோம்ப் சோப்புகளை நறுக்கித் தருவார்களாம். 100gm பத்து கனடியன் டாலராம்!
-------------
நெல்லைத்தமிழன் :
சமீபத்தில் Prestige Falcon City என்ற குடியிருப்பு வளாகத்திற்குச் சென்றிருந்தேன். வளாகத்தின் பெயரை நினைவுபடுத்துவதுபோல மிகப் பெரிய பருந்து மீனைக் கவர்வது போல சிலை அமைத்திருந்தார்கள். ரொம்பவே அழகாக இருந்தது.
( Prestige என்ற வார்த்தைக்கு வியட்நாம் வீடு சிவாஜி அல்லது அ ம மு க சின்னம் சிலை வைக்கவில்லையா! )
அந்த வளாகத்தையொட்டி இருந்த Forum mallல், பழைய ஜூக் பாக்ஸ் (இசைத்தட்டில் பாட்டுக் கேட்பது) வடிவத்தில் மிகப் பெரியதாக ஒளி விளக்குகளுடன் அமைத்திருந்தார்கள். கண்ணைக் கவர்ந்த அந்த அமைப்பு இதோ
KGG பக்கம் :
மார்கழி மாதம் பிறந்துவிட்டது.
1957 - 62 கால கட்டத்தில் நாகையில் நான் அனுபவித்த மார்கழி மாதங்கள் நினைவுக்கு வருகின்றன.
காலையில் அக்கம்பக்கத்து கோவில்களிலிருந்து திருப்பாவைப் பாடல்கள் எம் எல் வசந்தகுமாரி பாடியவை ஒலிக்கும்.
அதிகாலையில் நாலரை அல்லது ஐந்து மணிக்கே அம்மா என்னையும், என் சின்ன அண்ணனையும் எழுப்பிவிடுவார்கள்.
நாங்கள் இருவரும் உடனடியாக பல் தேய்த்து சுமாரான டிராயர் சட்டை அணிந்து (அந்தக் காலத்தில் எங்களுடைய ஆடைகள் எல்லாமே சுமாரானவைதான்! பட்டன்கள் எல்லாம் உதிராமல் இருந்தால் அது சுமாரில் கொஞ்சம் நல்லவை!) அருகில் உள்ள சட்டையப்பர் கோவில் வாசலில் இருக்கும் ராமமடம் செல்வோம்.
அங்கே மார்கழி மாத பஜனை நடந்துகொண்டு இருக்கும். சில பாடல்களில் ஒரு வரி பாடி கேப் கொடுத்தார்கள் என்றால், கோரசாக எல்லோரும் கடைசியில் பாடப்பட்ட வரிகளை உரத்த குரலில் ரிபீட் செய்வோம்.
"ராமச்சந்திரா ரகுவீரா, ராமச்சந்திரா ரணதீர"
இது போன்று இன்னும் சில பாடல் வரிகள் !
பெரிய பிறை போன்ற அமைப்பில் உள்பக்கமாக நிறைய சாமி படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருக்கும். மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணர், பெரிய கிருஷ்ணர், ஆண்டாள், மாடு மேய்க்கும் கிருஷ்ணர், ராமர் பட்டாபிஷேகம், ஆஞ்சநேயர் .. இன்னும் பல படங்கள்.
குறிப்பிட்ட சிலர் குறிப்பிட்ட பாடல்களை மட்டும் பாடுவார்கள். அபூர்வமாக சிலர் ஆடாது அசங்காது வா கண்ணா போன்ற பாடல்களைப் பாடுவார்கள்.
எல்லாம் ரொடீன் ஆக போய்க்கொண்டு இருக்கும்.
திடீரென்று உபயதாரர் வீட்டு வேலைக்காரர்கள் ஒரு பெரிய பாத்திரத்தில், வெண் பொங்கல் சுடச் சுட கொண்டு வந்து வைப்பார்கள்.
பொங்கல் மணம் அந்த மடம் முழுவதும் வீசும்.
சோர்வாக பாடிக்கொண்டிருந்த எல்லோருக்கும் சுறுசுறுப்பு வந்துவிடும் !
கோரஸ் வரிகள் இன்னும் உற்சாகமாக பெரிதாக ஒலிக்கத் தொடங்கும்.
" ராதே ராதே ராதே முகுந்தா பிருந்தாவன சந்தா "
பிறகு ராம மடத்தின் இரண்டு extreme கதவுகளில் (ஒன்று entry மற்றது exit ) ஒரு pair கதவு மூடப்படும். இதற்கு 2 காரணங்கள்:
1) பொங்கல் வாங்கித் திங்க மட்டும் வருபவர்களை தடுப்பது மற்றும்
2) வாங்கித் தின்றுவிட்டு மறுபடி reentry செய்ய முயல்பவர்களைத் தடுப்பது.
ஒரு பக்கக் கதவுகள் மூடப்பட்டவுடன்,
டிங் டிங் டிங் ..
டிங் டிங் டிங் ..
என்று மூன்று மூன்றாக ஆலய மணி ஒலிக்கும். அந்த நேரத்தில் எல்லோரும் எழுந்து நின்று, படங்களுக்கு காட்டப்படும் கற்பூர தீப ஆரத்தியைப் பார்த்து பக்தியுடன் கன்னத்தில் பட படவென்று போட்டுக்கொள்வோம். அருகில் வரும் கற்பூரத் தட்டின் ஒளிப் பிழம்பிற்கு அருகே கைகளைக் காட்டி கொஞ்சம் சூடான உள்ளங்கைகளைக் கண்களை மூடி ஒத்தடம் கொடுத்துக்கொண்டு விரைந்து சென்று, திறந்திருக்கும் ஒரு பக்க கதவுக்கு அருகே வரிசையாக நிற்போம்.
பொங்கல் பாத்திரம் கதவுக்கு அருகே கொண்டு வந்து வைக்கப்படும்.
அதை கரண்டியால் எடுத்து கொடுப்பவர் பெரும்பாலும் (குண்டு ) வைத்தா அல்லது ஒல்லி தண்டபாணி வாத்தியார்.
எங்கள் பார்வையில் குண்டு வைத்தா கஞ்சர். ஒல்லி வாத்தியார் தாராளம் - பொங்கல் வழங்குவதில்!
வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல். (எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ) மற்ற நாட்களில் வெண் பொங்கல்.
சில நாட்கள் தொன்னையில் வழங்கப்படும். சௌகரியம் - பொங்கலின் சூடு உள்ளங்கைகளை சிவக்க வைக்காது.
பல நாட்கள், சூடான பொங்கல் கைகளில் வாங்கி, உள்ளங்கைகள் சிவந்துவிடும். பொங்கல் உருண்டையை இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி வருவோம்.
சிலர் ரிஸ்க் எடுக்காமல் சிறு பாத்திரங்களைக் கொண்டு வந்து அதில் பொங்கல் வாங்கி செல்வார்கள்.
கோடி வீட்டு கிருபா, தன்னுடைய பாத்திரத்தில் ஒரு கரண்டி பொங்கல் வாங்கியவுடன், " மாமா என் தம்பிக்கு கொஞ்சம் பொங்கல் " என்று கேட்டு பாத்திரத்தில் இன்னும் ஒரு கரண்டி பொங்கல் வாங்குவாள். (அவளுக்கு தம்பியே கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும்! )
பிறகு நாங்கள் வேறு வீடு மாற்றி சென்றுவிட்டோம். அடுத்த இரண்டு வருடங்கள் ராமமட பஜனை செல்ல இயலவில்லை.
அதன் பின் மீண்டும் சட்டையப்பர் கோவிலுக்கு எதிரில் இருந்த காக்கா பிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் குடி பெயர்ந்தோம்.
அதன் பின் நீலகிரி பக்கம் ஏழாம் வகுப்பு படித்து திரும்ப நாகைக்கே வந்து சேர்ந்தேன்.
அம்மாவிடம் சொல்லி வைத்து, 1964 மார்கழி மாதத்தில் ஒரு லீவு நாளில் அதிகாலையில் எழுந்து பல் தேய்த்து, சட்டையப்பர் கோவில் ராமமடம் சென்று பார்த்தால் - மடம் மூடியிருந்தது.
மார்கழி மாத பஜனை இல்லை; கூட்டமும் இல்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். மார்கழி பஜனைகளை முன்னெடுத்து செய்த ரோலிங் மில் சங்கர ஐயர் (ராம மடத்திற்கு எதிர் வீடு) காலமானதற்குப் பிறகு அதை யாரும் முன்னெடுத்து செய்யாததால் மார்கழி பஜனை அங்கே மார்கழிப் பனி போல கரைந்துவிட்டது.
************* *************
சென்னைக்கு (புரசவாக்கம்) வந்த பிறகு, 1971 மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்து கோவில்களிலிருந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் கேட்க ஆவலாக இருந்தேன்.
பார்த்தால் எங்கு பார்த்தாலும் ஐயப்பன் பக்தி பாடல்கள், பஜனைகள்தான் ஸ்பீக்கரில் ஓங்கி ஒலிக்கும்.
அப்படி எங்கிருந்துதான் இந்த பாடல்கள் கேட்கின்றன என்று சென்று பார்த்தால், சுந்தரம் பிள்ளைத் தெருவின் கோடியில் ஒரு சிறிய கீற்றுக் கொட்டகைப் போட்டு அங்கே இருக்கும் ரிக்க்ஷா இழுப்பவர்கள் சிலர் நீலக் கலர் / கருப்புக் கலர் வேட்டி கட்டி, பீடி புகைத்த வண்ணம் அங்கே இருந்த ரெகார்ட் பிளேயரில் இசைத் தட்டுகளை மாற்றி மாற்றிப் போட்டு ஸ்பீக்கர் வழியாக பாடல்களை அலற வைத்துக் கொண்டிருந்தார்கள்.
= = = = = = = = = = = =
இன்னும் பலப் பல வருடங்கள் கழித்து, 2010 சமயத்தில், மார்கழி மாதத்தில் குரோம்பேட்டை குமரன் குன்றம் காலை எட்டு மணிக்கு நானும் என் ஒ வி தம்பியும் சென்றிருந்தபோது அங்கே பள்ளிக்கூட மாணவ மாணவியர் கோஷ்டி (அருகில் இருந்த விவேகானந்தா வித்யாலயா மாணவர்களாக இருக்கலாம் ) திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி முடித்து, வந்திருந்த எல்லோருக்கும் பொங்கல் வழங்கினார்கள்.
நானும் என் தம்பியும் அந்தப் பொங்கல் பிரசாதம் வாங்கி உண்டோம்.
மார்கழி மாத பொங்கல் நினைவுகள் எவ்வளவு சுவையானவை!
= = = = = = = = = = = = = = = = = =



1989ல் கணிணி ஆபீசர் வேலைக்கு மழை வரவழைக்கும் ராகம் எது எனக் கேட்டார்கள். ஆளை அவன் ஸ்மார்ட்டா என்றெல்லாம் செக் பண்ண இது மாதிரி கேட்பார்கள் என்ன பதிலும் சொல்லலாம்
பதிலளிநீக்குகரெக்ட்.
நீக்குபெண்கள் ஃப்ரீயாத்தான் - அதிலென்ன தப்பு? ஆண்கள் டிப்டாப்பா ட்ரெஸ் போட்டுக்கிட்டு டேட்டிங் போக யாருடா பெண் அகப்படுவா கேட்கலாம்னு காத்துக்கொண்டிருப்பதுபோல நினைக்கறீங்களே
பதிலளிநீக்கு:))))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவையத்து வாழ்வோரை வாழ வைக்கும் வடிவேலா சரணம்.
நீக்கு1) பொங்கல் வாங்கித் திங்க மட்டும் வருபவர்களை தடுப்பது மற்றும்
பதிலளிநீக்கு2) வாங்கித் தின்றுவிட்டு மறுபடி re entry செய்ய முயல்பவர்களைத் தடுப்பது.
பொங்கல் அனுபவங்கள் அருமை
:))) நன்றி.
நீக்குஎன்னோட மார்கழி மாத அனுபவங்களை எல்லாம் மதுரையில் மார்கழி மாத நினைவுகளாகப் பதிவாய்ப் போட்டிருக்கேன். இயன்றால் பகிர்கிறேன்.
நீக்குநன்றி.
நீக்குயாத்திரைனா என்ன பனகல் பார்க் வாக்கிங்குனு நினைச்சுட்டாரா? மேடு பள்ளங்களில் நடந்து செல்ல கைத்தடி வேண்டாமா?
பதிலளிநீக்குஅதானே!
நீக்குஅனைவருக்கும் வணக்கம்!. நான் அனுப்பியுள்ள படத்தில் முதலில் படத்தில் இருக்கும் கிருஸ்துமச் கேண்டிகள், சாக்லேட்டுகள் எல்லாமே சோப்புகள்தான்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
நீக்குஹலோ நெல்லையண்ணே! அங்க திருப்பதி உம்மாச்சி சன்னிதானத்துக்குச் சாற்றுமுறைக்குப் போகாம திருப்பாவை சொல்லாம இங்க என்ன நடிகைகள்/பாவைகள் பத்தி பேச்சு!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஹப்பா நெல்லைய வம்புக்கு இழுத்தாச்சு!
கீதா
:))))
நீக்குநம்ம மக்கள் இப்படி சாமியார்னா முற்றும் துறந்தவர்களா இருக்கணும் என எதிர்பார்ப்பதால்தான் நித்யானந்தா போன்றவர்கள் மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க
நீக்குசிரித்துவிட்டேன்!!!!! நெல்லை.
நீக்குகீதா
பெண் நடிகைகளுக்கு வயதாக ஆக அப்படி இல்லாததன் காரணம் என்ன? //
பதிலளிநீக்கும்ஹூம் நெல்லை நீங்க பெண்களைச் சரியா கவனிக்கறது இல்லைன்னு தோன்றுகிறது!!!!
கீதா
வயதான பெண்களையா ?
நீக்குகௌ அண்ணா, என்னது வயதான பெண்களையா!!! ஆஆஆஅ எல்லாரும் அடிக்க வந்துடப் போறாங்க. எப்படி எங்களை வயதானன்னு சொல்லலாம்னு!!!!!
நீக்குகீதா
:))))
நீக்குநடிகை எனில் பெண்
பதிலளிநீக்கு/// பெண் நடிகைகளுக்கு///
இது என்ன விதமான தமிழ்?...
(சும்மா பொழுது போறதுக்காக)
அப்போ ஆண் நடிகை, அவ்வை ஷண்முகியோ !
நீக்குசும்மா இதையெல்லாம் யார் யார் கூர்ந்து கவனிக்கறாங்கன்னு செக் பண்ணத்தான். ஹா ஹா ஹா
நீக்குநெல்லை, நம்ம ஊர் விவசாயிகள் எத்தனை பேரிடம் ஏக்கரா கணக்கில் நிலங்கள் இருக்கின்றன?
பதிலளிநீக்குவெளிநாடுகளில் விவசாயிகள் என்றால் ஒரு சிறு கிராமம் அளவுக்கு நிலங்கள் இருக்கும். அவங்களே நேரடியாக விற்கவும் செய்யறாங்க. farm fresh காய்கறிகளை நிலத்தின் அருகே வைக்கிறாங்க இல்லைனா கடைகள் போட்டு. மகன் அங்குதான் பெரும்பாலும் வாங்குவான்.
நம்ம ஊர் விவசாயிகளுக்கு ஒரு வீடளவு நிலம் கூட இருக்காது பெரும்பான்மையோருக்கு. துண்டு நிலத்தில் என்ன விளைவித்து எப்படி லாபம் ஈட்ட முடியும்?
இதற்குக் கூட்டுறவு உதவும். ஆனால் அதிலும் பிரச்சனைகள் உண்டு.
இப்ப சில கம்பெனிகள் வந்திருக்கின்றனவே விவசாயம் பெரிய அளவில் செய்து அவங்களே பொருட்களும் விற்பது வந்திருக்கிறது. ஒன்று அவர்கள் தாங்களே நிலங்கள் வைச்சிருக்காங்க இல்லைனா விவசாயிகளிடம் விளை பொருட்களை வாங்கிக் கொள்கிறார்கள் இதிலும் இவங்க கிட்டத்த்டட்ட இடைத்தரகர் போலதான் விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிக்குவாங்களா என்பது சந்தேகம்தான்.
கீதா
எந்த வயதில் நாக்கிற்கு ருசி முக்கியமாக இருக்காது? எதையாவது சாப்பிட்டால் போதும் என்று தோன்றும்?//
பதிலளிநீக்குஹாஹாஹா 80 ஐக் கடந்தவங்களுக்கும் ருசி முக்கியமாகப் படுகிறது நெல்லை, ஒரு சிலருக்கு.
மணம் நுகர முடிந்தால்தான் நாவில் ருசி தெரியும்....நன்றாக மணம் ருசி அறியும் சக்தி இருந்த என்னைப் போன்ற ஆளுக்கு இடையில் அதுவும் 48 வயதில் பின் தலையில் அடிபட்டதிலிருந்து மணம் ருசி தெரியாமல் போனதோடு, (இங்கு ருசி என்பதை உப்பு புளிப்பு காரம் இனிப்பு துவர்ப்போடு சம்பந்தப்படுத்திச் சொல்லக் கூடாது அது வேறு இது வேறு.) அது அறியாதப் பிரச்சனை வந்ததிலிருந்து.....(இப்ப எப்பவாச்சும் மணம் ருசி தெரியும் ஆனால் எப்போதும் இல்லை. இப்ப சமீபமா சுத்தமா தெரியலை) நான் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் அதுவும் விரும்பி!!!!
புதியதாகச் சாப்பிடவும் விரும்புகிறேன்...! மனப்பக்குவம் வந்துவிடும், நெல்லை. இத்தனைக்கும் மணம் ருசி அறியும் சமயத்திலும் கூட எந்த உணவையும் குறை சொல்லும் பழக்கம் இருந்தது இல்லை. அப்பவும் சரி இப்பவும் சரி மன ரீதியாகச் சுவைத்துச் சாப்பிடும் பக்குவம் வந்துவிட்டது ஹிஹிஹீஹி...
அதுக்காக எனக்கு வயசாகிடுச்சுன்னு எல்லாம் கணக்குப் பண்ண வேண்டாம் கேட்டேளா!!!!
கீதா
இப்போ செய்முறைகளை எழுதி சூப்பரா வந்துச்சு என்று நீங்கள் சொன்னால் இனி எப்படி நம்புவது? சும்மா அடிச்சி விடறாங்கன்னு தோணும்
நீக்குசிரித்துவிட்டேன் நெல்லை!!!!!! நான் சொன்னாத்தானே அடிச்சு விடறதா தோணும்..
நீக்குசாப்பிடறவங்க சொன்னா!!!??
கீதா
பானுக்கா, நான் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருக்கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன்!!! ம்ஹூம் போனதில்லையே!
பதிலளிநீக்குஏன் சொல்லுங்க? இப்படிக் கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டிருந்தால் ஆஹா அடிச்சு விட்டிருப்போம்ல!!
கீதா
யாரேனும் ஃபோன் செய்து என்ன பண்றீங்கன்னு கேட்கும்போது சும்மாதான் இருக்கேன்னு சொல்றதுக்கு பதிலா ஃபிரீயாதான் இருக்கேன்னு சொல்லலாமே. //
பதிலளிநீக்குநல்ல பாயின்ட், சக்கரபாணி சார்.
பயன்படுத்தும் சொல் ஃப்ரீ என்று ஏனென்றால் கேட்பவர்கள் கேட்கும் கேள்வியும் "நீங்க இப்ப ஃப்ரீயா பேசலாமான்னு" என்பதால்...
கீதா
காசி யாத்திரை வாக்கிங் ஸ்டிக் கேள்விக்கு சூப்பர் பதில்கள்!!
பதிலளிநீக்குஒரு வேளை காசிக்கு வயசானவங்கதானே போவாங்க என்பதால் வாக்கிங் ஸ்டிக் கொடுக்கறாங்களா? சிம்பாலிக்? மாப்பிள்ளைக்கு வயாசாகிடுச்சுன்னு நினைச்சு?!! கையில் கீதை புத்தகம் கொடுப்பாங்க இல்லையா? அலல்து ராமாயணம் புக்கா?
கீதா
இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்குப் பதில் நான் சன்னியாசி ஆகிவிடுகிறேற் என்று சொல்றவனை, இல்லப்பா பெண் மாத்திரமல்ல சொத்தும் (நகை இத்யாதி) தர்றோம்னு சொல்லி தலைல கட்டிடறாங்களா?
நீக்குலாஜிக்!!!
நீக்குகீதா
இது குறித்து விரிவாக என்னுடைய இன்றைய பதிவில் தொகுத்துப் பகிர்ந்திருக்கேன். ஏற்கெனவே நான் எழுதிய பதிவில் இருந்து தான் எடுத்துத் தொகுத்திருக்கேன். சுட்டி கொடுக்கவில்லை. முடிஞ்சால் கொடுக்கிறேன்.
நீக்குநன்றி.
நீக்குமுதல் படமும் பதமும் - சிரித்துவிட்டேன்!
பதிலளிநீக்குஅந்த டெக்னிக்க ஃபாலோ பண்ண மாட்டோம்ல! !!!!!!
கீதா
கிருஸ்துமஸ் candy, மற்றும் சாக்லேட்டுகள். //
பதிலளிநீக்குமனதைக் கவர்கின்றன.
கீதா
ரொம்ப அழகா இருக்கு பானுக்கா....அவை சும்மா பார்வைக்குத்தான் என்று தெரிகிறது. ஒன்று மெழுகில் செய்திருப்பாங்க. இல்லைனா சோப்பாக இருக்கும். இப்படிப் பார்த்ததுண்டு.
நீக்குகீதா
கீழே கேக்கும் சோப் என்று தெரிந்துவிட்டது அதிலேயே இருக்கு கார்ட். அது சரி எப்படி இவ்வளவு பெரிய சோப்பைப் பயன்படுத்துவாங்க? வெட்டி வெட்டி பயன்படுத்துவாங்களோ?
பதிலளிநீக்குநம்ம சிறு வயதில் பெரிய சன்லைட் பார் சோப் வாங்கி வந்து வீட்டில் அதைச் சின்ன சின்ன கட்டியாக வெட்டி தந்துடுவாங்க இதில் தான் ஒரு மாசம் ஓட்டணும்னு! அதான் நம்ம துணிய தோய்க்கறதுக்கு!!!!
கீதா
ஆம்! சின்ன வயதில், செங்கல் போல ஒரு lifebuoy சோப் வாங்கி, அதை நான்கு துண்டுகளாக வெட்டி, ஒன்று அண்ணனுக்கு, ஒன்று எனக்கு, ஒன்று தங்கைக்கு என்று கொடுத்து, ஒன்று ரிசர்வ் ஸ்டாக் ஆக இருக்கும். முதலில் கரைப்பவர்களுக்கு ரிசர்வ் சோப் கிடைக்கும்! எவ்வளவு தேய்த்தாலும் அந்த 1/4 செங்கல் தேயவே தேயாது!
நீக்குகௌதமன் சாருக்கு இப்போதும் அந்த லைஃப்யை மிஸ் செய்த வருத்தம் இல்லையே. இப்போ அந்த லைஃபாய் கிடைத்தால் உடனே நான் வாங்கிவிடுவேன்
நீக்குஇப்போ வருகின்ற லைஃப்பாய் சோப் எல்லாம் மினி சைஸ் மட்டுமே.
நீக்குஅந்தக் கர்மா சோப் நம்ம ஊர் pear சோப் போன்று இருக்கிறது. இப்ப இப்படியான நிறைய சோப்கள் நம்ம ஊரிலும் வந்துவிட்டன. அப்போலோ, மெடிமிக்ஸ் என்று
பதிலளிநீக்குகீதா
பானுக்கா இங்கும் இப்படி நீங்கள் சொல்லியிருக்கும் ஃப்ளேவர்களில் freshner வந்துவிட்டன. மால்களில் இப்படியான கடைகளுக்குப் போனால் கிடைக்கின்றன. விலை மட்டும் பார்க்கக் கூடாது!
பதிலளிநீக்குகீதா
சமீபத்தில் Prestige Falcon City என்ற குடியிருப்பு வளாகத்திற்குச் சென்றிருந்தேன். வளாகத்தின் பெயரை நினைவுபடுத்துவதுபோல மிகப் பெரிய பருந்து மீனைக் கவர்வது போல சிலை அமைத்திருந்தார்கள். ரொம்பவே அழகாக இருந்தது.//
பதிலளிநீக்குரொம்ப அழகாக இருக்கு.
இதே போன்று மஹாலக்ஷ்மி லேய் அவுட் மெட்ரோ ஸ்டேஷன் இறங்கியதும் இருக்கும் Brigade Gateway. உள்ளே பெரிய குளம் நீரூற்று, நீர் வீழ்ச்சி போன்று, பெரிய பெரிய கடைகள் அமேசான் ஆஃபீஸ் இன்னும் பிற அலுவலகக் கட்டிடங்கள், குடியிருப்பு, சாப்பாட்டு கடைகள், ஓரியன் மால், அது தவிர வேறு ஒரு மால், ஒரு ஃபேமஸ் பட்டுப் புடவைக் கடை (பெயர் மறந்து போச்சு) மருத்துவமனை என்றும், இரவு அந்தக் குளம் ஊற்று எல்லாம் விளக்கொளியில் ஒளிவீசும் காட்சிகளும் இருக்கும் மிகப் பெரிய வளாகம். உள்ளே செல்ல பக்கி செர்வீஸ் உண்டு.
நான் படங்கள் காணொளிகள் எடுத்திருந்தேன். பகிர....வழக்கம் போல...பகிராமல்..
கீதா
படங்களை உடனுக்குடன் பகிராமல் என்னதான் செய்றீங்களோ
நீக்கும்ஹூக்கும், நினைச்சேன் இந்தக் கருத்து வரும்னு!!!! ஹாஹாஹா. என் பிரச்சனை எனக்குதானே தெரியும், நெல்லை....
நீக்குபகிர்கிறேன். இப்ப எழுதறதை முடிக்கவே நாள் ஆகிடும் போல!!
கீதா
மால் படங்கள் சூப்பர்.
பதிலளிநீக்குஇப்ப எல்லாம் இப்படியான குடியிருப்புகள் தான் வருகின்றன பெரும்பாலும்.
கீதா
கௌ அண்ணா, நல்ல அனுபவங்கள்.
பதிலளிநீக்குஎனக்கும் மார்கழி என்றாலே எங்கள் ஊர் நினைவுக்குவந்துவிடும்.
கிட்டத்தட்ட இதே அனுபவங்கள்தான்.
கீதா
நன்றி.
நீக்குஎங்கள் ஊர் விட்டு வந்த பிறகு இப்படியான அனுபவங்கள் மிஸ்ஸிங்க்.
பதிலளிநீக்குகீதா
அதே, அதே!
நீக்குஅதானே,.. ... பொங்கலும்
பதிலளிநீக்குபுளியோதரையும் ரெண்டாவது ரவுண்டு
வாங்கித் தின்னா சும்மா உட்டுடுவமா!?
:)))
நீக்குரெண்டாவது
பதிலளிநீக்குரவுண்டு பொங்கல் வாங்கித்
திங்கறதே சுகம்..
:))))
நீக்குகொதமன் சாரின் மார்கழி நினைவுகள் ரொம்பவே ரசிக்கும்படியா இருந்தது. நல்லா எழுதியிருக்கீங்க
பதிலளிநீக்குஇந்த ஸ்ரீராமுக்கு என்ன விதமான மார்கழி அனுபவம்னு எழுதுவாரா?
உங்கள் எழுத்தைப் படிக்கும்போதே வெண் பொங்கல் வாசனை வருது
நன்றி.
நீக்குஇன்று காலை திருப்பதியில் வெண்பொங்கல் பிரசாதம். என் முறை வந்தபோது காலி. பிறகு லட்டு கொடுக்க ஆரம்பித்தார். இரண்டு மணி கழித்து அடுத்த சேவையில் சர்க்கரை பொங்கல் பிரசாதம். நேற்று தயிர்சாதம். இன்னொரு தரிசனத்தில் புளியோதரை
பதிலளிநீக்குஇருந்தாலும் மார்கழி வெ மற்றும் ச பொங்கல் சுடச்சுட சாப்பிடுவதே சுகம்
ஆம்! இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் .. என்று பாடாத குறை!
நீக்குகாசி யாத்திரை வாக்கிங் ஸ்டிக் கேள்வி ரசிக்கும்படியா இருந்தது.
பதிலளிநீக்குமார்கழி மாத நினைவுகள் அருமை. எனக்கும் ஊர் நினைவுக்குவந்துவிடும்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. நாவில் ருசி இல்லாவிட்டால் சாப்பிட பிடிக்காது. இப்போது ஒரு மாதமாக ஜலதோஷம் பீடித்ததில் நான் அப்படித்தான் ருசியின்றி, வயிறுக்கென சாப்பிடுகிறேன். இந்நிலை என்று மாறுமோ..?
நாராதரின் கலகம் நன்றாக உள்ளது. எதிர் பேச்சு பேசாமலிருந்தால் கலகம் எப்படி வரும். மருத்துவரின் யோசனை சிறப்பு. முதலாவது ஏற்கனவே படித்தாக நினைவு.
படமும் பதிவும் பகுதி நன்றாக உள்ளது. கழுகும் மீனும் சிறபம், சோப்பாக பயன்படும் சாக்லெட் உருவ அமைப்புகள். அனைத்தையும் ரசித்தேன்.
தங்கள் மார்கழி நினைவும் அருமை. இங்கு சிலர் பிரசாதம் நன்றாக இருந்தால், மறுபடி மறுபடி சென்று வாங்கி அங்கேயே இரவு டின்னரையும் முடிக்கின்றனர். இன்று எங்கள் வீட்டில் யதேச்சையாக வெண் பொங்கல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
:)))) பாராட்டுக்கும் தாகவளுக்கும் நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குகாசி யாத்திரை அந்தக்காலத்தில் நடந்து போவார்கள் வெகு தூரம் நடந்து போகும் போது கைத்தடி இருந்தால் நல்லது. பாதுகாப்புக்கும் நல்லது என்று கொடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஆம், அதே, அதே!
நீக்குகுடிகார சிரிப்பாக இருக்கே!
பதிலளிநீக்குபடமும் பதமும் படங்களும் அதைபற்றிய விளக்கங்களும் அருமை.
மார்கழி மாத பஜனையும், பொங்கல் பிரசாதமும் பகிர்வு அருமை.
நீங்கள் பாடிய பாடல் எல்லாம் நாங்கள் சின்மாயாமிஷன் பாலவிஹாரில் பாடுவோம்.
எனக்கும் மார்கழி மாதம் எம்.எல். வசந்த குமாரி அவர்கள் பாடல்தான் கேட்க பிடிக்கும்.
பஜனை கேட்க போய் மடம் மூடபட்டதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பியது படிக்கும் போது வருத்தமாய் இருக்கு.எவ்வளவு எதிர்பார்ப்புடன் போய் இருப்பீர்கள்.
சிறு வயது நினைவுகள் நினைத்து பார்க்க மகிழ்ச்சிதான்.
என் அம்மா, தம்பி, தங்கைகளுடன் , அக்கம் பக்கத்து வீட்டாரோடு மார்கழி மாதம் அதிகாலை (4.30 க்கு) தல்லாகுளம் பெருமாள் கோயில், காட்டுப்பிள்ளையார் கோயில் எல்லாம் போய் மார்கழி பூஜை பார்த்து ஒரு உருண்டை பொங்கல் வாங்கி வந்தது நினைவுகளில் பசுமையாய் மனதில் உள்ளது.
இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
நீக்குபா வெ மேடம் அனுப்பிய படங்களைப் பார்த்தேன். எனக்கு அளவுக்கு மீறிய சைசில் உணவுப் பொருளோ உபயோகிக்கும் பொருளோ இருந்தால் பிடிக்காது.
பதிலளிநீக்குபஹ்ரைனில் இருந்தபோது மாலில் இருக்கும் ஒரு ஐஸ்க்ரீம் பிராண்ட் கடை பிடிக்காது. யானை லத்தி போட்டதுபோல ஐஸ்கிரீம் ஷேப் ஒவ்வொரு பாக்சிலும் இருக்கும்.
:)))))
நீக்கு