சோழர்கள் காலத்தில், குறிப்பாக தஞ்சை பெரியகோயிலுக்காக செய்துகொடுத்த உற்சவ விக்கிரகங்கள் பற்றி ஒரு புத்தகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, தற்போதுள்ள பெரியகோயிலின் கல்வெட்டுகள் பிரகாரம் சுமார் 70 உற்சவ விக்ரஹங்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றில் ஒரு சில விக்ரஹங்கள் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. சில வெண்கல வார்ப்பாலும், பித்தளையினாலும் செய்யப்பட்டவை. பெரும்பாலும் செம்பை உபயோகித்துச் செய்த விக்ரஹங்களே அதிகம். அதனால் பொதுவாக அவற்றை செப்புத் திருமேனிகள் என்பர். (பெரியவர்களை, வைணவர்கள், தங்கள் திருமேனி பாங்காக இருக்கிறதா? என்று விசாரிப்பார்கள். உடம்பு சௌக்கியமா என்று அர்த்தம். கேரளத்தில், திருமேனி என்பது அரசகுலத்திற்கான சொல்). மனிதர்களுக்காக எடுக்கப்பட்ட செப்புச் சிலைகளை பிரதிமங்கள் என்பர்.
இவற்றைப் பற்றி (எந்த எந்த விக்ரஹங்கள் செய்யப்பட்டன, எதனால் செய்யப்பட்டன என்பதை) கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமன்றி, விக்கிரஹத்தின் மொத்த உயரம், பீடம் எப்படி அமைந்திருந்தது, பாதத்திலிருந்து தலைப்பகுதி வரை உள்ள உயரம், உட்கூடாக விக்ரஹம் வடிவமைக்கப்பட்டதா இல்லை கனமாகச் செய்யப்பட்டதா என்றெல்லாம் விவரமாகச் சொல்கின்றன. அவற்றிற்கான ஆபரணங்கள், அதில் பதிக்கப்பட்ட நவமணிகளின் எண்ணிக்கை போன்றவற்றையும் குறிப்பிடுகின்றன. (இப்படியெல்லாம் அவற்றில் குறிப்பிட்டுள்ளன என்று முன்பே தெரிந்திருந்தால், படிக்கத் தெரிந்தவர்கள் லவட்டியிருக்கமாட்டார்களா?)
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடும் பதிகத்தில்,
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ்
சாழலோ!
என்று பாடுகிறார். இந்தப் பாடலின் பொருளைப் பிறகு பார்ப்போம். திருச்சாழல் என்ற இந்தப் பதிகம் எப்படி வந்தது என்பதற்கு ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று சொல்கின்றனர். சாழல் என்பது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு (தாயத்து பல்லாங்குழியல்ல). ஒரு பொருளை ஒட்டியும் வெட்டியும் இரண்டு மகளிர் வேறு வேறு விதமாகப் பாடுவதாக அமையும் ஒரு விளையாட்டு.
இலங்கை மன்னன், தன்னுடைய வாய்பேச முடியாத பெண்ணுடனும், பௌத்தத் துறவிகளுடனும் சிதம்பரம் வந்தான் என்றும், தில்லைச் சிதம்பரம் கோயிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்த பௌத்தத் துறவிகள், இங்கு நடராஜருக்குப் பதிலாக புத்தரின் விக்கிரஹம் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியதாகவும், அதற்காக தில்லைவாழ் அந்தணர்களை அழைத்து வாதத்திற்கு அழைத்ததாகவும், வாதத்தில் அந்தணர்கள் தோற்றுவிட்டால் தில்லை நடராஜரை எடுத்துவிட்டு அங்கு புத்தரின் விக்ரஹத்தை வைக்கவேண்டும் என்று சவால் விட்டதாகவும் சொல்கின்றனர். இதனால் மனம் கலங்கிய தில்லைவாழ் அந்தணர்கள் சிவனிடம் முறையிட, அவரும் மணிவாசகர் கனவில் தோன்றி, உடனே தில்லைக்குச் சென்று வாதத்தில் கலந்துகொள்ளுமாறு கட்டளையிட, மணிவாசகர் (இவருக்குத்தான் மாணிக்கவாசகர் என்று இறைவனே பெயரிட்டதாகச் சொல்லுவர்) தில்லையில் பௌத்த துறவிகள் முன்பு வாதத்திற்கு உட்கார்ந்தாராம். பதிகத்தின் முதல் இரண்டு அடிகளை மணிவாசகர் பாட, வாய் பேச முடியாத இளவரசி, அடுத்த இரண்டு வரிகளைப் பாடினாராம். இதுபோன்று முழுப் பதிகத்தையும் பாடி முடித்தாராம். முடிந்தவுடன் பௌத்த துறவிகள் பேசமுடியாமல் ஆகிவிட்டதாம். தன் மகள் பேசியதைக் கேட்ட இலங்கை மன்னன் சைவ சமயத்தைத் தழுவினான். மணிவாசகர் இறைவனிடம் வேண்டியதைத் தொடர்ந்து பௌத்தர்களும் தங்கள் இழந்த பேசும் திறனைப் பெற்றார்களாம். பிறகு அவர்களும் சைவ சமயத்துக்கு மாறினார்கள் என்பது கர்ண பரம்பரைக் கதை. அதனால் இந்தப் பதிகத்தை பக்தியோடு பாடினால், வாய்பேச முடியாதவர்கள் பேசும் திறமையைப் பெறுவர், மற்றவர்களுக்கு நல்ல பேச்சுத் திறமை வாய்க்கும் என்பது தொன்மையான நம்பிக்கை.
சோழர் காலச் சிலைகளைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டு சம்பந்தமே இல்லாமல், மாணிக்கவாசகரின் திருச்சாழல் பதிகத்தை எழுத ஆரம்பித்துவிட்டானே என்று யோசிக்கிறீர்கள் அல்லவா? (இப்படிப்பட்ட பசுமாடு இரயில் நிலையத்தின் வாசலில் கட்டப்பட்டிருந்தது, என்று பசுமாட்டைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து வந்த ஒரு மாணவன், இரயில் நிலையத்தைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னதும் எழுதினாற்போல)
பாடலின் பொருள்: மலைமகளாகிய பார்வதி தேவியைத் தன் உடலில் ஒரு பாகமாக வைத்திருக்கும் அவன் (சிவபெருமான்), வஞ்சகமாக மற்றொரு பெண்ணான கங்காதேவியை, தன் சடையில் மறைத்துவைத்திருப்பது எதற்காக என்பது கேள்வி. மிகுந்த வேகத்துடன் தேவலோகத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியை அவன் தன் சடையில் விழச் செய்ததன் மூலம் அதன் வேகத்தை மட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால், கங்கை நதி, பூமியையே புரட்டி பாதாளத்தில் சேர்த்து பேரழிவினை ஏற்படுத்தியிருக்கும். பூமிக்கு வரவிருந்த பெரும் கேடை த் தவிர்ப்பதற்காக இப்படிச் செய்தான் என்பது விடை.
விளக்கம்: கபில முனிவரின் சாபத்தால் சாம்பலான அறுபதினாயிரம் சகரர்களின் ஆன்மாக்கள் நற்பேறு பெறும்பொருட்டு, பகீரதன் கடும்தவம் புரிந்து வானுலகிலிருந்து கங்கைநதியை பூமிக்கு வர அழைத்தான். அப்படி வேகமாகப் பாய்ந்தால் பூமி தாளாதே என்று கங்கை கேட்டதற்கு, சிவனிடம் தவம் செய்து கங்கையை தன் சடையில் தாங்கி பூமியில் விழவைத்த புராணக் கதை இங்கு சொல்லப்படுகிறது. சலம் என்பதற்கு உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் வஞ்சனையான செயல் என்று அர்த்தம். இது சஞ்சலம் என்பதன் தமிழாக இருக்கலாம். பகீரதன் அழைத்ததால் கோபம் கொண்ட கங்கை மிகுந்த வேகத்துடன் ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து வேகமாகப் பாய்ந்தது.
உங்களுக்கு
நேரம் கிடைக்கும்போது திருச்சாழலில் ஒவ்வொரு பதிகத்தையும் படித்துப் பொருள்
தெரிந்துகொள்ளுங்கள். திருச்சாழலின்
முதல் பதிகம் கீழே.
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு
என்னை?
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!
கோயில் கோபுரத்தில் என்ன என்ன சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன என்பதை அடுத்த முறையிலிருந்து உன்னிப்பாக கவனியுங்கள். மேலே உள்ள சிற்பம் போன்று அனேகமாக எல்லா கோயில் கோபுரங்களிலும் இருப்பதைக் காணலாம். இது கிருஷ்ணர், யமுனையில் குளித்துக்கொண்டிருந்த கோபியரின் ஆடைகளை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது அமர்ந்த காட்சி. கோபியர்கள் ஆடையைத் தரும்படி வேண்டுகிறார்கள். இதுபோலவே கோபுரத்தில் இது ஒரு முனையில் இருந்தால் அதன் நேர் எதிர் முனையில் நரசிம்மருடைய உருவம் செதுக்கப்பட்டிருக்கும்.
தஞ்சை பெருவுடையார் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சடையுடன் கூடிய ஆடவல்லானின் திருவுருவில் கங்கை, பெண் வடிவத்தில், இடுப்புக்குக் கீழ் நீரலைகளுடன் இருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டிருந்ததாம். அடுத்த முறை நீங்கள் ஆடவல்லானின் சிற்பங்களை, சிலைகளைக் கண்டால், அதில், கங்கையோ இல்லை மற்ற உருவங்களோ இருக்கிறதா என்று கூர்ந்து கவனியுங்கள்.
இப்போது பதிகத்தை விட்டுவிட்டு வரலாற்றிற்கு வருவோம். இராஜராஜ சோழன் தன் சித்தப்பாவிற்கு அரச பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு இளவரசனாகப் பவனி வந்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இராஜராஜன் பட்டம் ஏற்றபோது ஏறத்தாழ 45 வயதுடையவனாக இருந்திருக்கவேண்டும். அவனுடைய மகன் ராஜேந்திரன், 20-25 வயதுடையவனாக இருந்திருத்தல் வேண்டும். சில வருடங்களிலேயே இளவரசனாக இராஜேந்திரன் நியமிக்கப்பட்டு, சோழர் படைத் தளபதி என்ற நிலையில், பல போர்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தான். ராஜராஜ சோழன் சுமார் 27 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான். சுமார் 1012ல், தன் மகனை அரசனாக ஆக்கிவிட்டு தான் ஆட்சிக்கட்டிலிலிருந்து இறங்கியிருக்கவேண்டும். காரணம் ராஜராஜன் தன் மகனான இராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டில் ஒரு தேவதானம் கொடுத்தான் என்று முக்கூடல் கல்வெட்டு கூறுகிறது. இராஜேந்திரன் பட்டத்திற்கு வரும்போது அவனுக்கு சுமார் 50 வயதாகியிருக்கவேண்டும்.
அதனால் தான் சோழப்பேரரசின் அரசனானதும், சில ஆண்டுகளிலேயே (6 ஆண்டுகள்) தன்னுடைய மகன் இராஜாதிராஜ சோழனை அரசனாக்கி, இருவரும் சேர்ந்தே சோழப்பேரரசை ஆண்டனர். ராஜராஜ சோழ தேவர் 1014ல் மறைந்தார். இராஜாதிராஜ சோழன் அரசனானது 1018ல்.
இராஜேந்திர சோழனுக்கு மூன்று மனைவியர். அவனுக்கு மூன்று குமாரர்கள். ராஜாதிராஜன், ராஜேந்திரன், வீரராஜேந்திரன்.
ராஜேந்திர சோழன் தன் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலும் போரில் கழித்தான். அவற்றை நாம் மூன்று வகையாகக் கொள்ளவேண்டும். தன் தந்தை ராஜராஜ சோழன் பேரரசனாக இருந்தபோது, படைத்தலைவனாக நடத்திய போர்கள். இந்த வெற்றிகள் ராஜராஜ சோழனின் வெற்றிகளாக அவனது மெய்கீர்த்தியில் வரும். இரண்டாவது, தான் தலைவனாக ஆனபிறகு, நட த்திய போர்கள்.
ராஜேந்திர சோழன் பேரரசனாக இருந்து வெற்றி பெற்ற போர்கள், இடைதுறை நாடு (தற்போதைய ரெய்ச்சூர் பகுதி, கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரைக்கும் இடைப்பட்ட சமவெளி நாடு), கொள்ளிப்பாக்கை (ஐதராபாத்திற்கு வடகிழக்கே, கிபி 13ம் நூற்றாண்டுவரை சிறப்புற்றிருந்த இடம். தற்போது கூல்பாக் என்று அழைக்கப்படுகிறது), மண்ணைக்கடக்கம் (தற்போது மான்யகேடம் என்று அழைக்கப்படுகிறது. இது இராட்டிரகூடர்களின் தலைநகராக இருந்த நகரம். மேலைச் சாளுக்கியர்களுக்கும் இதுதான் தலைநகரமாக இருந்தது. வடக்கிலிருந்தும் பகைவர்கள் தாக்க, தெற்கிலிருந்தும் சோழர்கள் தாக்க, மேலைச் சாளுக்கியர்கள் இங்கிருந்து தங்கள் தலைநகரத்தை கலியாணபுரத்திற்கு மாற்றிக்கொண்டனர். இந்த மண்ணைக்கடக்கம் மதிள் சூழ்ந்த பகைவர்களால் தாக்கமுடியாத இருந்ததாம்). இவற்றையெல்லாம் தன்னுடைய மூன்றாவது ஆட்சிக் காலத்திற்குள் வென்றிருக்கிறான்.
இனி கங்கைகொண்ட சோழீச்வரம் படங்கள்.
இரண்டு அடுக்குகளாக உள்ள மாளிகை போன்ற அமைப்பு.
மஹிஷாசுர மர்தனி கோயில். இது 13ம்
நூற்றாண்டைச் சேர்ந்தது. ராஜேந்திர சோழன் காலத்தில் இதுவும் விநாயகர் சன்னிதியும் கிடையாது.
மஹிஷாசுர மர்தனி…. தஞ்சைப் பகுதி
மஹிஷாசுர மர்தனியை நினைவுபடுத்தியது.
ஆதியில் கங்கை நீர் ஊற்றப்பட்டிருந்த கிணறு.
நந்திக்கும் சிங்கமுகத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. சிங்க முகச் சிற்பம், காலத்தால் பிற்பட்டதோ என்று எனக்குத் தோன்றியது.
கொடிமரத்தின் கவசத்தை எதற்காக அன்று மீண்டும் மாட்டினார்கள், திரும்பவும் சுத்தம் செய்தார்களா இல்லை சாதாரண தினங்களில் கழற்றிவிடுவார்களா என்பது தெரியவில்லை.
இனி அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
நெல்லை, கேரளத்தில் திருமேனி என்பது அரசகுலத்தில் சொல்லப்பட்டாலும், அது ஆன்மீகத்தில் இருப்பவர்களையும், அறிவிலும் ஆன்மீகத்திலும் சிறந்தவர்களையும் சொல்வதுண்டு.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் திருமேனி என்பது தூய தமிழ். அதை வைணவர்களும் கேரள உயர்குடியினரும் இன்னும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் பொது மக்களுக்கு (என்னைப் போன்ற) அது அந்நிய வார்த்தை.
நீக்குஅத்தனை உற்சவ விக்ரகங்களும் இப்பவும் இருக்கின்றனவஆ?
பதிலளிநீக்குநெல்லை, விவரங்களை எல்லாம் மிகவும் ரகசிய பாஷையில்தானே சொல்லியிருப்பாங்க! இல்லைனா படிச்சவங்களா இருந்தாலும் அதைச் சரியாகப் புரிந்து கொண்டால்தானே லவட்ட முடியும் இல்லையா?
கீதா
அனேகமாக எல்லாமே கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. உங்களுக்குத் தெரியுமா? திருவரங்கத்தில் துவாரகாலகர்களுக்கு முன் உள்ள மண்டபத்தில் (சந்தன மண்டபம்) ஒரு சிறு அறையில் பொன்னால் செய்யப்பட்ட மேனி இருந்தது. பாண்டிய அரசன் வழங்கியது. அது முஸ்லீம்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
நீக்குஇக்கதையை எங்கோ வாசித்த நினைவு நிழலாக...
பதிலளிநீக்குபதிகம் வாசிக்கும் போதே பொருள் புரிந்தது. என் சிறிய மூளைக்கும் புரியும் படி அழகாக எழுதியிருக்காரே மாணிக்க வாசகர்!!! என்று ஒரு சின்ன மகிழ்ச்சி!
புராணக் கதையும் நினைவுக்கு வருகிறது உங்கள் விளக்கம் படித்ததும்.
கீதா
பக்தி இலக்கியங்களை ஊன்றிப் படித்தால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். ஒரு சில பாசுரங்களே மிகக் கடுமையாக, கடினமாக இருக்கும். உதாரணம் திருமழிசையாழ்வார் இயற்றிய திருச்சந்த விருத்தம் பாசுரங்கள்.
நீக்குநிலாய ஐந்துமாய் புனற் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாயது ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே
அடுத்த திருச்சாழலின் முதல் பதிகமும் பொருள் விளங்கியது.
பதிலளிநீக்குசிவப்பெழுத்து - சிற்பம் சூப்பர். நேரெதிர் முனையில் நரசிம்மர் உருவம் செதுக்கப்பட்டிருக்கும் என்பது தகவல். இனி பார்க்க நேர்ந்தால் இதைக் கவனிக்க வேண்டும்.
கீதா
கோயில் கோபுரங்களின், அதிலும் புராதான கோபுரங்களின், உதாரணம் மன்னார்குடி, திருவரங்கம், கும்பகோணம் ஆராவமுதன் போன்ற பல கோயில்களின் கோபுரங்களை உன்னிப்பாகப் பாருங்கள். எனக்கு அவற்றைப் பார்க்கவும், படமெடுக்கவும் பிடிக்கும். இங்கு பகிர்கிறேன், சென்சார் அதிகாரி பிஸியாக இருக்கும் சமயமாகப் பார்த்து.
நீக்குஅடுத்ததும் நோட்டட்.
பதிலளிநீக்குவரலாறு அப்ப கர்நாடகா வடக்கு, ஆந்திரா பக்கம் எல்லாம் இருந்திருக்காங்க சோழர்கள். வட இந்தியா வரைக்கும் போய் வென்றார்களே (முதலாம்) ராஜேந்திரன் காலம் இந்த ராஜேந்திரன் தானே இல்லையா?
இந்தக் குழப்பம் எனக்கு அப்பப்ப வரும்!! ஹிஹிஹி
கீதா
வர்றேன்... வர்றேன்... விரைவில் வரும் பதிவில் (பத்து வாரங்களுக்குள்) இந்தியா முழுமையும் தமிழர்கள்தான் என்ற தரவுகளோடு வருகிறேன்.
நீக்குராஜேந்திரன் பெயரில், முதலாம் இரண்டாம் என்றெல்லாம் உண்டு. வரலாற்று அரசர்கள் பெயரில் குழப்பங்கள் உண்டு.
படங்கள் எல்லாம் சூப்பர் சில சிதைந்து இருக்கின்றன போலும்.
பதிலளிநீக்குஅரசர்களின் உருவச் சிலைகள் இருக்கும் படம் செம. சிதைந்திருந்தாலும் கூட.
ஓ அந்த சிதைந்த கட்டிடம் மாளிகையா? இரண்டடுக்கு மாளிகை போன்ற அமைப்பு இவ்வளவு சின்னதுதனாஅ? இல்லை சிதைந்து போனதா?
13 ஆம் நூற்றாண்டு அதற்கு முன்னர் அப்ப விநாயகர் இல்லையா கோயில்களில்?
மஹிஷாசுரமர்தனி அழகு. சேலை கட்டியிருக்காங்க அது நடன போஸ் போல இருக்கு!
பெரிய சிங்கம் !! கவர்கிறது
பெரிய நந்தியும் கவர்கிறது
கொடிமரத்தைச் சுத்தி என்னது அது? முதல்ல ஏதாச்சும் டவர் வைச்சுட்டாங்களோன்னு நினைத்தேன்
கடைசி மூன்று படங்களும் ரொம்ப அழகா இருக்கு
கீதா
கீதா
அந்த மாளிகை போன்ற அமைப்பின் கீழ்ப் பகுதி மண்ணில் புதையுண்டிருக்கலாம். அல்லது இது கோவில் மண்டபம் சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம்.
நீக்குஇந்த இரண்டடுக்கு மாளிகை பழுது பட்டிருக்கும். அங்கிருந்த கற்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டதை முன்னமே எழுதியிருக்கிறேன்.
நீக்குகொடிமரத்தைச் சுற்றி, கவசம் போட சாரம் அமைத்திருக்கின்றனர் (விசேஷம் முடிந்ததும் அகற்றிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். காரணம் இது தொல்லியல் துறை பராமரிக்கும் இடம், அதனால் புதியவைகளுக்கு புதிய நடைமுறைகளுக்கு அனுமதி இல்லை)
ஸ்ரீராம்.. நிறைய இடங்களை அகழ்வாய்ந்து பார்க்கலாம். நமக்கு செம்பொன் சிலைகள் கிடைத்தாலும் கிடைக்கும். மற்றபடி வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை பலர் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அதனால் அகழ்வாராய்ச்சி செய்வது கடினம்.
நீக்குவடுவூர் ஸ்ரீராமர் அப்படிக் கிடைச்சவர் தானே!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.
நீக்குஜென்மசாபல்யம் தீர்ந்தது. தவிர்த்த சில படங்களை பதிவிடும் வாய்ப்பு கிட்டியது. அந்தகால தமிழ் சினிமாக்களில் ஒரு காபரே அல்லது குளி சீன் கவர்ச்சிக்காக இருக்கும். அதே போன்று இன்றைய பதிவில் கவர்ச்சிப்படமாக கிருஷ்ண லீலை இடம் பெற்றுள்ளது.
பதிலளிநீக்குஇன்றைய பதிவு ஒரு நிறைவான பதிவு, படங்கள் நல்ல வெயிலில் எடுக்கப்பட்டவை யாதலால் நல்ல ஷார்ப்நெஸ்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். கவர்ச்சி என்று நினைத்தால் கவர்ச்சி. பக்தி என நினைத்தால் பக்தி. இப்படிப்பட்ட பல படங்களைப் பகிரும் எண்ணம் இருக்கிறது.
நீக்குநீங்கள் திருவனந்தபுரம் கோயில் சென்றிருக்கிறீர்களா? ஆஞ்சநேயருக்கு முன் உள்ள சிற்பங்களைக் கண்டிருக்கிறீர்களா?
ஆமாம். பார்த்தோம்.
நீக்குபலருக்கும் இந்த ராஸ்லீலா குறித்த புரிதல் இல்லை. ;(
நீக்குதிருமேனி என்று பெயர் படித்ததும் எனக்கு தமிழ்வாணன் நினைவுக்கு வந்தார். அவர் எழுதிய கதை ஒன்றில் ஒரு கேரக்டர் பெயர் திருமேனி. இப்போதைய ஒரு இயக்குனர் பெயர் மகிழ் திருமேனி!
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். எனக்கும் இயக்குநர் பெயர் நினைவுக்கு வந்தது.
நீக்குநம்பூதிரி பிராமணார்கள் கூட திருமேனி என அழைக்கப்பட்டார்கள்
நீக்கு// சாழல் என்பது மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு //
பதிலளிநீக்குஅம்மாடி.. அந்தக் காலப் பெண்கள் தமிழறிவு அதிகம் பெற்று, கவிபாடும் திறனுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்.
"அம்மாடி.. அந்தக் காலப் பெண்கள் தமிழறிவு அதிகம் பெற்று, கவிபாடும் திறனுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்.
நீக்குஉண்மை. ஆனால், " சாழல்" விளையாட்டினை தொடர்ந்து, காலம் மாற, மாற ஒருவருக்கொருவர் " சாடுதல்" விளையாட்டினையும் கற்றுக் கொண்டு விட்டார்கள் போலும்.! :))
ஹா.. ஹா... ஹா... டிபிகல் கமலா அக்கா கமெண்ட்!
நீக்குஅந்தக் காலப் பெண்கள் கல்வி அறிவு மட்டுமன்றி, ஞானமும் எது சரி என்று சொல்லும், கணவருக்கு புத்திபுகட்டும் அளவு அறிவு பெற்றிருந்தனர். சனிக்கிழமையில் இதுபற்றி வரும்.
நீக்குசாழல் சாடுதல்... ஹா ஹா ஹா. ஆமாம் பெண்கள் சாடுவது பெண்களுக்குள்ளே அல்லவா?
நீக்குஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு, அதன் முன்னர் முகலாயப் படை எடுப்பு என்னும் காரணங்கள் பெண்கள் அடக்கி வைக்கப்பட்டதன் முக்கியக் காரணம்.
நீக்குஅப்பாடி... பெண்கள் அடக்கிவைக்கப்பட்டதற்குக் காரணம் பார்ப்பனர்களின் சதி இல்லையே....
நீக்குகுல வாரிசு தீர்க்கமாக இருக்கவேண்டும் (வேறு கலப்பு கூடாது) என்பதற்காக நம்பூதிரிகள் அவர்கள் மனைவியை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். அதனால் அவர்கள் பெயரே அந்தர்ஜனம்.
இது தெரியும். என் அப்பாவின் கொள்ளுத்தாத்தா/பாட்டி வகையறா நர்மதை நதி தீரம்+கேரள நம்பூதிரிகள்னு அப்பா சொல்லி இருக்கார். அவங்க மலையாளத்தில் எழுதின சுவடிகள் எல்லாமும் வீட்டில் இருந்தன. எல்லாம் போயாச்சு. இப்போ குடும்ப மரம் போட்டால் என் தாத்தாவில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டி இருக்கு.
நீக்குஎன்னுடைய அம்மாவின் அப்பாவும் அங்கிருந்து வந்தவர் என்று தோன்றும். காரணம் குடும்பப் பெயர் (வம்சப் பெயர்). இதுபற்றி தொடரில் எழுதுகிறேன்.
நீக்கு// / நடராஜருக்குப் பதிலாக புத்தரின் விக்கிரஹம் இருந்தால் எப்படி இருக்கும் //
பதிலளிநீக்குஉங்க சாமி உசத்தி எங்க சாமி உசத்தி பிரச்னை ஆதி காலத்திலிருந்தே உண்டு என தெரிகிறது!
இது எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது.
நீக்குஅது சரி.. பண்டார நாயகா, திசநாயகா (இலங்கை) போன்றவர்கள் விஜய நகர நாயக்கர் வம்சம் என்பது தெரியுமா? அவர்கள் இந்துக்கள், திருமால் வழிபாடு உடையவர்கள். அதனால்தான் அவர்கள் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்யச் செல்கிறார்கள்.
அரசல் புரசலாகத் தெரியும். நிச்சயமாய்த் தெரியாது. சமீபத்தில் யாரோ ஒருத்தர் திருமலை சென்றபோது இந்த விஷயம் வெளியே வந்தது. ஆனாலும் முழுமையாகத் தெரியாது.
நீக்குஇலங்கை அரசனுக்கு வம்சாவளி இல்லாததால் மதுரை நாயக்கர் வம்சப் பெண்ணுக்குப் பிறந்ததா அல்லது தத்தெடுத்தார்களா என்று நினைவில்லை.
நீக்குNews to me.
நீக்குபசுமாடு ரயில்நிலையம் உவமை எதற்காக என்று விளங்கவில்லை! பசுமாடு எது? ரயில் நிலையம் எது?
பதிலளிநீக்குசோழர் காலச் சிலைகள் பற்றி எழுத ஆரம்பித்து திருச்சாழல் பதிகத்துக்குள் சென்றுவிட்டேன். பசு மாடு பற்றிப் படித்துவந்த மாணவன், இரயில் நிலையம் பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னால் தான் படித்த பசுமாடு கட்டுரையை விடையாக எழுதி, கடைசி வரியில் இப்படிப்பட்ட பசுமாடு இரயில் நிலையத்தில் கட்டப்பட்டு இருந்தது என்று, கேள்விக்குச் சம்பந்தமில்லாத பதில் எழுதுவதைப் போல
நீக்குதென்னைமரம் கட்டுரை கேள்விக்கு தான் மாணவன் மாட்டை ப்பற்றி எழுதி கடைசியில் இந்த பசு தென்னைமரத்தில் கட்டப்பட்டு இருந்தது என்று முடிப்பான் என்ற கதையே நான் அறிந்தது.
நீக்குJayakumar
இரண்டு விதமாகவும் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது ஜெயகுமார் சார்.
நீக்குஇதை எழுதும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருந்தபோது, இயற்பியல் பேராசிரியர், எங்களிடம், பரீட்சையில் கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால் (நெடிய விடை) விட்டுவிடாதீர்கள், ஏதாவது எழுதுங்கள். பல நேரங்களில் தேர்ச்சி மதிப்பான 13.5 கிடைக்கவில்லை என்றால் (40க்கு), திருத்துபவர், 1/2 அல்லது 1 மார்க் போட்டு பாஸ் பண்ண வைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார். நான் அந்த இண்டெர்னல் டெஸ்டில் ஒரு கேள்விக்கு கதை அடித்திருந்தேன். அதற்கு அந்த பேராசிரியர் Gas என்று எழுதி பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்திருந்தார் (என்னிடம் எனக்கே அல்வா கொடுக்கிறாயா என்றார்)
//சலம் என்பதற்கு உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் வஞ்சனையான செயல் என்று அர்த்தம். //
பதிலளிநீக்குஅப்போ வெங்கடாசலம் என்றால் என்ன அர்த்தம்?!!! ஹிஹிஹி..
அட அநியாயமே... தமிழையும் வடமொழியையும் ஒரே அர்த்தத்தில் வைக்கிறீங்களே... சலம்-மலை. வெங்கட சலம் - திருவேங்கடவன் உறையும் மலை.
நீக்குபொதுவாக அனைவருமே இப்படிக் குழப்பிக்கறாங்க. இதே போல் ஹிந்தியில் "கம்பீர்" எனில் ஆங்கிலத்தில் இருக்கும் சீரியஸாக என்னும் பொருளில் வரும். இதைத் தமிழில் அந்த அரசன் கம்பீர நடை நடந்தான் எனக் குழப்பிக்கக்கூடாது. ஆனாலும் பிரசார சபை மூலம் படிக்கிறவங்க இதுக்குப் பெரும்பாலும் ஜிவாஜி ராஜராஜசோழனாகக் கம்பீர நடை நடந்தார் என்றே சொல்லுவார்கள். "கம்பீர் ரூப் ஸே" என ஹிந்தியில் வந்தால் தீவிரமான சிந்தனையில் எனப் பொருள் கொள்ளணும்..
நீக்குஇங்கே சிவாஜியை எழுத்தே ஆகணுமா? நியாயமா இது?
நீக்குஹெஹெஹெ, கம்பீரம்னாலே ஜிவாஜி தான்னு சொல்றாங்களே! மத்த எந்த நடிகர் கம்பீரம்னு சொல்றாங்க? என்ன நான் சொல்றது? :))))))
நீக்கு//ஹிந்தியில் "கம்பீர்" எனில்// ஓ... அதான் எப்போதும் கௌதம் கம்பீர், திருடனைப் பிடிக்கப் போகும் போலீஸ் போல முகத்தை உர்ர்ர்ர்ர்ர் என்று வைத்துக்கொண்டிருக்கிறாரா?
நீக்குhehehehehehehe
நீக்கு//பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ //
பதிலளிநீக்குஇந்த வரியைப் படித்ததும் ஏனோ "மேனி ஒரு செம்பவள மேல்முழுதும் வெண்ணீறு" பாடல் நினைவுக்கு வந்தது.
https://www.youtube.com/watch?v=L5xIcfStEPM
அருமை ஸ்ரீராம்... முதலில் எனக்கு இது என்ன திரையிசையா ஏடாகூடப் பாடலா என்று சந்தேகம் வந்தது. பாடலைக் கேட்டேன். அருமை.
நீக்குவார்த்தைகளிலிருந்து கோபித்துக் கொண்டு தள்ளி நின்ற சில எழுத்துகளை சமாதானப்படுத்தி வார்த்தைகளுடன் சேர்த்து விட்டேன். ஒன்றிரண்டு பிழைகளையும் சரி செய்து விட்டேன் - கண்ணில் பட்ட வரை!
பதிலளிநீக்குஇந்த மாதிரி தட்டச்சுத் தவறுகளை (அழகி எழுத்துருவால் வருகிறது) நான் சரி செய்துதான் அனுப்புவேன். சில நேரங்களில் சட் என்று முழுவதும் சரி பார்க்காமல் அனுப்பிவிட நேரிடுகிறது. பழைய பதிவுகளை (டாக்குமெண்ட்) படித்தபோது அதில் உள்ள பிழைகளைச் சரி செய்தேன், ஆனால் அதற்கு முன்பே உங்களுக்கு அனுப்பிவைத்துவிட்டதால், குழப்பம் வேண்டாம் என்று சரி செய்த டாக்குமெண்டை மீண்டும் அனுப்பவில்லை.
நீக்குஎனக்கு இந்த மடிக்கணினியில் இ கலப்பை இருந்தும் பயன்படுத்த முடியலை. :( கோக்குவில்.ஹிந்து தளத்தில் எழுதி காப்பி, பேஸ்ட் செய்து தான் போட வேண்டி இருக்கு. அப்படியும் எழுத்துப் பிழைகள் மலிந்து விடுகின்றன. ஒரு காலத்தில் பிழையே இல்லாமல் தட்டச்சுபவர் என்னும் பெயர் உண்டு. இத்தனைக்கும் தமிழ்த் தட்டச்சும் தெரியும். ஆனாலும் இப்போப் பயன்பாட்டில் ஃபோனெடிக் தான். :(
நீக்குஎனக்கும் தட்டச்சில் பிழை விடுவது பிடிக்காது. ஒரு காலத்தில் பாளையங்கோட்டையில் ஹையர் முதல் வகுப்பு எடுத்த ஒரு சிலரில் நானும் உண்டு. ஹை ஸ்பீடும் பயின்றேன் ஆனால் டெஸ்டுக்குப் போகவில்லை.
நீக்குமுருகா சரணம்..
பதிலளிநீக்குசரணம் சண்முகா.
நீக்குகம்பீரமான படங்களுடன்
பதிலளிநீக்குபதிவு வழக்கம் போல..
வாங்க துரை செல்வராஜு சார். நன்றி
நீக்குசில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கே
பதிலளிநீக்குகொடிமரம் இல்லை...
ஆமாம். கோமதி அரசு மேடம் பகிர்ந்திருந்த படங்களில் (அவர் சென்றிருந்தபோது எடுத்தவை) கொடிமரம் இல்லை.
நீக்குஎஞ்சியிருக்கின்ற இரண்டு அடுக்கு தளத்தைப் போல
பதிலளிநீக்குதஞ்சை கோயிலிலும் இருந்திருக்கின்றது...
தஞ்சை கோயிலின் முன் மண்டபமே இரண்டடுக்கு கட்டிடம்தான். காலப்போக்கில் முதல் தளம் பழுதுபட்டு இடிந்துவிட்டது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு மிக அருமையான பதிவு. ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் தந்ததுடன், கங்கை கொண்ட சோழீச்வரம் கோவில் படங்களும் கண்களை கவர்கின்றன. கங்கை நதியின் கதையும், இலங்கை மன்னன் கதையும் படித்தறிந்து கொண்டேன்.
சலம், சஞ்சலம் விளக்கம் அருமை. மாணிக்கவாசகர் பாடல்கள் எளிதில் பொருள் உணர்த்தின. "சாழல்" என்ற மகளிர் விளையாட்டினை பற்றி தெரிந்து கொண்டேன். பதிவை சிறப்பான தொகுத்திருக்கிறீர்கள்.தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். பதிவு உபயோகமாக இருக்கிறது என நினைக்கிறேன்.
நீக்குமணிவாசகரின் திருவாசகத்தில் "அம்மானை"யும் உண்டு கமலா ஹரிஹரன். என்னோட புத்தகம் ஸ்ரீரங்கத்தில் இருக்கு. யாரோ பரிசாய்க் கொடுத்தது. அவ்வப்போது எடுத்துப் படிச்சேன். என் இளைய சிநேகிதி பார்வதி ராமச்சந்திரன் என்பவர் திருவாசகத்தின் இந்தச் சாழலுக்கு சாதாரண உரையும் உள்ளார்ந்த தத்துவ உரையும் கொடுத்து "ரத்தினமாலை" என்னும் எங்கள் ஆன்மிகக்குழுவில் போட்டார். பின்னர் அது புத்தகமாகவும் வந்ததுனு நினைக்கிறேன்.
நீக்கு"ஊசல்" இருக்கிறதா என்று பார்க்கணும் கீசா மேடம்.
நீக்குஇருக்கு. பொன்னூசல் நு பெயர்னு நினைவு. எனக்குச் சாழலும், அம்மானையும் பிடிக்கும். அடிக்கடி வாசிப்பேன்.
நீக்குவழமை போலவே சிறப்பான தகவல்களுடன் படங்களும் சேர்ந்த பகிர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட் நாகராஜ்.
நீக்குசோழ வரலாறுகளுடன் கங்கை கொண்ட சோழபுர படங்கள் அருமை. இரண்டடுக்கு மாளிகை அமைப்பும் சிலைகள் படங்களும் இப்பொழுதுதான் காண்கிறோம்.நன்றி.
பதிலளிநீக்குவாங்க மாதேவி அவர்கள். தமிழகம் வந்தால் மூன்று கோயில்களைக் காணத் தவறாதீர்கள்.
நீக்குஅந்தப் புதைப்யுண்ட சிற்பங்கள் அரசகுடும்பத்தினரா? நான் முதலில் சப்த கன்னியரோனு நினைச்சேன். அமர்ந்த வண்ணம் தனியாய் இருப்பதுவும் ஜேஷ்டா தேவியோனும் நினைச்சேன். ஆனால் ஜேஷ்டாதேவி ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் வழிபாட்டில் இல்லை என்பதால் வேறேனு புரிஞ்சது. இரண்டடுக்கு மாளிகை இப்போது சிதைந்து இருக்கிறது என்றாலும் கற்கள் இன்னமும் அடையாளம் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. தொல்பொருள் இலாகாவிடம் இருப்பதால் இதுவாவது மிஞ்சி இருக்குனு நினைக்கிறேன். ராஜராஜனுக்குத் தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதற்கு ஆவலைத் தூண்டியது காஞ்சி கைலாசநாதர் கோயில் எனக் கேள்விப் பட்டிருக்கேன். இங்கே கங்கை கொண்ட சோழபுரத்துக்குத் தன் தந்தை கட்டிய கோயிலையே வைச்சுக் கட்டி விட்டான் ராஜேந்திர சோழன்.
பதிலளிநீக்குராஜேந்திர சோழன் கங்கைக்குப் போனதெல்லாம், பின்னர் இலங்கை சென்று பாண்டிய அரசின் தொன்மையான இந்திரன் கொடுத்த ரத்தினக் கிரீடம், வாள்மாலை போன்றவற்றை அரசன் மகிந்தனிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்த வரலாற்றையும் தன் "வேங்கையின் மைந்தன்" வரலாற்றில் "அகிலன்" விரிவாகவே எழுதி இருப்பார்.
பின்னர் வந்த நாட்களில் சோழ குலத்தின் பூர்விக இளவரசர்களே இல்லாமல் போய்ச் சாளுக்கியப் பரம்பரையில் இள்வரசன் சோழ அரியணையில் அமர்ந்து முடி சூடிக் கொண்டான். அவன் தான் இரண்டாம்குலோத்துங்கன் என நினைக்கிறேன். ராமானுஜர் காலம். கம்பர் ஒட்டக்கூத்தர், சேக்கிழார் ஆகியோரும் இவன் காலம்னு நினைவு. மத்ததை நெல்லை சொல்லிடுவார். :)
ராஜேந்திர சோழனால் அரச மகுடத்தைக் கொண்டுவர இயலவில்லை. அது எங்கோ ஒளிக்கப்பட்டுவிட்டது.
நீக்குராஜேந்திர சோழனின் பேரன் (மகள் வழி) சாளுக்கிய தேசத்திலிருந்து சோழ சாம்ராஜ்யத்தின் அரசனாகிறான் (அவன் பெயரும் ராஜேந்திரன். பட்டப்பெயர் குலோத்துங்கச் சோழன் - முதலாம்). அவனுடைய பெயரன் இரண்டாம் குலோத்துங்கச் சோழன். அவன் காலத்தில்தான் இராமானுஜரை அரசவைக்கு வரவைக்க முயற்சித்தது.
விரைவில் கைலாசநாதர் கோயில் வரும் (பதினைந்து வாரங்கள் கழித்து ஹாஹாஹா). அதற்கு இன்னும் எழுத ஆரம்பிக்கலை.
ம்ம்ம்ம்? ஆனால் அகிலன் வேங்கையின் மைந்தனில் இதை எல்லாம் விவரித்து எழுதி இருக்கார். கங்கையில் இருந்து நீர் கொண்டு வந்ததுக்குக் கூட யானைகள் அணிவகுத்து கங்கையிலிருந்து குடங்களில் நீர் எடுத்துவருவதாக ஓவியர் வினு சித்தரித்திருப்பார். வந்தியத் தேவனும், குந்தவையும் இதில் வயதானவர்களாக வருவார்கள். வேங்கையின் மைந்தன் அநேகமாக ஐம்பதுகளின் கடைசியில் கல்கியில் வந்திருக்கலாம். நான் படிச்சது தாத்தா வீட்டு பைன்டிங்கில்.
நீக்குவேங்கையின் மைந்தன் படிக்கும் ஆவல் வந்துவிட்டது. பிடிஎஃப் இருக்கும் என்று நினைவு. எத்தனையோ வரலாற்று நாவல்களைப் படிக்கணும்..
நீக்குநேற்று வர முடியவில்லை, வீட்டு வேலைகள் கொஞ்சம் அதிகம். பிள்ளைகள் அடுத்த மாதம் வருகிறார்கள்.
பதிலளிநீக்குபதிவு மிகவும் அருமை. மாலை தினம் திருவாசகம் , தேவாரம், திருப்புகழ் எல்லாம் படிப்போம். ஞாயிறு மட்டும் விடுமுறை . நேற்று உங்கள் பதிவை படித்து இருந்தால் நேற்றும் திருவாசகம் படிப்போம்.
திருச்சாழல் சிவனுடை காருணியத்தை சொல்வது, தில்லையில் அருளியது. ஹலோ எஃப்எம் ஆத்திசூடியில் தினம் திருவாசகத்திலிருந்து ஒரு பதிகத்தை சொல்லி விளக்கம் சொல்வார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஜெயராம் .
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
பாடலும் அதன் அர்த்தமும் , பதிகம் பிறந்த கதையும் அருமையாக சொன்னீர்கள்.
கோயில் கோபுர சிற்பங்கள், மற்றும் ந்டராஜ சிற்பங்களை கவினிக்க சொன்னது அருமை.
நிறைய படித்து அவற்றை தகுந்த இடங்களில் பகிர்வது அருமை.
வரலாறும் அருமை.
கங்கைகொண்ட சோழீச்வரம் படங்கள் அனைத்தும் மிக அருமை.
மஹிஷாசுர மர்தனியை தரிசனம் செய்து கொண்டேன்.
தொடர்கிறேன்.
வாங்க கோமதி அரசு மேடம். உடல் நிலை சரியில்லையோ இல்லை பயணமோ என நினைத்தேன்.
நீக்குதேவார திருவாசகப் பதிகங்கள் மிக இனிமை. அர்த்தத்தை நோக்கினால் ரொம்பவே ரசிக்கலாம்.