7.5.26

நானுறங்கும் நாள் வேண்டும் சாய்ந்துகொள்ள தோள் வேண்டும் என் கண்ணில் நீர் வேண்டும் சுகமாக அழவேண்டும் ...

 

OTT யில் பார்த்த படம் 

Assi 


"கோர்ட்டில் ஜெயிப்பது என்பதற்கான பொருள் என்ன?  தோற்பது என்பதஸிற்கான பொருள் என்ன?

பாதிக்கப்பட்ட பெண்ணின் கேள்வி.  

ஆமாம் என்ன பொருள்?

Pink படத்தின் வேறு வடிவம் என்று எண்ண வைக்கும் படம்.  அதே டாப்ஸி பன்னு ஹீரோயின்.  பெரும்பாலும் கோர்ட் காட்சிகள்.  

ஆசிரியையாக பணிபுரியும் கனி குஸ்ருதி பள்ளி முடிந்து ஒரு பார்ட்டி அட்டென்ட் செய்து திரும்பும் வழியில் ஐந்து இளைஞர்களால் காரில் கடத்தப்பட்டு சீரழிக்கப்படுகிறார்.  அவர் இறந்து விடுவார் என்று எண்ணி ரயில்வே லைன் அருகில் வீசி விட்டு செல்ல முகம் தெரியாத நபரால் காப்பாற்றப்படுகிறார்.  அன்பான ஆதரவான கணவன்.  பெரிய மனிதத்தோரணையுடன் ஆறேழு வயது மகன்.

கணவனின் அலுவலகத்தில் பணிபுரியும் குமுத் மிஸ்ரா தனி கதை வைத்திருக்கிறார்.  அவர் மனைவி ஒரு சாலை விபத்தில் இறக்க, அதற்கான நீதி கிடைக்காமல் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்.

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து ஆஜர் செய்தபின் போராட்டம் தொடங்குகிறது.  நீதி தடுமாறுகிறது.  நேர்மையான நீதிபதி நம்மூர் ரேவதி நியாயமாக நடக்க போராடுகிறார்.

நடுவில் குற்றவாளிகளில் இருவரை குடையால் மறைத்துக்கொண்டு ஒருவன் கொலை செய்கிறான்.  அவனுக்கு மக்கள் ஆதரவு பெருகுகிறது.  அம்பரெல்லா மேன் என்று அழைக்கப்படுகிறான் அந்த மர்ம மனிதன்.  அவன் செயல்களை டாப்ஸி எதிர்க்க அவர் முகத்தில் சாணி வீசப்படுகிறது.

இத்தனை கூத்துகளையும் அந்த சிறுவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.  Assi என்றால் ஹிந்தியில் 80 என்று அர்த்தம்.  ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு நாடு முழுவதும் 80 பெண்கள் சீரழிக்கபப்டுகிறார்கள் என்கிறது படம்.  20 நிமிடங்களுக்கு ஒருமுறை '20 நிமிடங்கள்' என்று ஸ்லைட் மாதிரி காட்டி நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

டாப்ஸி தனது வாதங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கலங்காமல் பேசுவது போல வைத்திருக்கலாம் என்று தோன்றியது.  நஸிருத்தீன் ஷா வருகிறார்.  என்ன அவர் ரோல் என்பது குழப்பம்.  குமுத் மிஸ்ராவை அவர் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பது புரியவில்லை.

ZEE 5 ல் பார்த்தேன்.  ஹிந்தியில்தான் பார்த்தேன்.  

பார்க்கலாம்.  

==========================================================================================

கவிதைகள் புதிது 

மழையிலே கதகதப்பு
இளமையின் குறுகுறுப்பு


மழைச்சாரல்..
மனதிலும் சாரல்
அருகில் இருந்திருக்கலாம்
நீ


போர்வையின் கதகதப்பில் பொதிந்து
மோக மழையில் 
நனைகிறது இளமை 
மழைக் காலமும் பனிக்காலமும்
சுகமானது


நனைந்தபடி வருகிறேன்
மழையில்
இல்லம் சேர்ந்ததும்
இழைய நீயிருப்பாய்
என்ற நினைவில்
கதகதப்பாய்
நனைந்தபடி வருகிறேன் 
மழையில்

======================================================================================

கமல் - எழுத்தாளர் சுஜாதா சந்திப்பு.  1979 - 80  மே 3 ஆம் தேதி சுஜாதா பிறந்தநாளையொட்டி பேஸ்புக்கில் பகிர எடுத்து வைத்திருந்தேன்.  அங்கு இதைவிட பெரிய உரையாடல் சுஜாதா - சிவகுமார் உரையாடலை பகிர்ந்து விட்டேன்!
சுஜாதா : கதாசிரியருக்கும், நடிகருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. நீங்க பல பாத்திரங்களை ஏற்று நடிக்கிறீங்க. அவங்க குணாதிசயங்களை 'ஸ்டெடி' பண்றீங்க. நாவலாசிரியர் ஒரே நாவலில் எல்லா கேரக்டர்களுக்கு குள்ளும் புகுந்து வரணும். அந்தந்த கேரக்டருக்கு உரிய பாணியில் அவர்களைப் பேச வைக்கணும். அதுக்கு வந்து- காதில் விழுறதையெல்லாம் கவனமா 'கலெக்ட்’ பண்ணணும். நான் நண்பர் ஒருவருடன் லண்டன் போயிருந்தப்போ ரோடு ஓரத்திலே ஒரு ஜோடி அழுந்தந்திருத்தமா 'கிஸ்' பண்ணிக்கிட்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என் நண்பர் நின்று உற்றுப் பார்த்துவிட்டு 'சாப்பிட றான்யா' என்றார். 'ப்ளூஃபிலிம்' பார்க்க அங்கேயுள்ள ஒரு தியேட்டருக்குச் சென்றோம். திரையில் ஒரு பெரிய கார் வருவதையும், அதிலிருந்து ஒரு அழகான பெண் இறங்குவதையும் காட்டினான். என் நண்பருக்கு ஒரே கோபம். 'அவுக்க வேண்டியதுதானே - இதில் என்ன கார் எல்லாம். 108 அடி ஃபிலிம் வேஸ்ட். இதிலே வேற 'ஏ' சர்டிபிகேட்' என்று அலுத்துக் கொண்டார். 'பிளேபாய்'ல ஒரு ஜோக் வந்திருந்தது. ப்ளூஃபிலிம் எடுக்கிற டைரக்டர் ஒருவர் ஷூட் பண்றார். “Cut it" कांض "You Please go on" என்கிறார். அதுமாதிரி “you Please go on தமிழ்ப்படத்தில் உண்டா கமல்?

கமல் : இல்லியே! அதெல்லாம் சாயங்காலம் ஷூட்டிங் முடிஞ்ச பிறகு எங்க திறமையிலே நாங்க ஏதாவது சம்பாதிச்சிகிட்டாதான். இப்போ உங்க கதைகள் சில படமான விதமெல்லாம் சரியில்லேன்னு பேட்டி எல்லாம் கொடுக்கற நீங்க ஏன் சினிமாவுக்கு கதை கொடுக்கறீங்க? விட்டுட வேண்டியதுதானே!"

சுஜாதா : கொடுக்கலேன்னா எடுத்துக்கறாங்க. அது மட்டுமில்லாம கதையை வாங்கிய உடனே என்ன சொல்றாங்க தெரியுமா? 'ஸ்கிரீன்பிளே மாதிரியே எழுதியிருக்கீங்க. அப்படியே படமாக எடுக்கப் போகிறோம்' அப்படீங்கறாங்க. அதுக்கப்புறம் "என்ன நீங்க எடுக்கப் போறீங்கன்னு உங்க ஸ்கிரீன் பிளேயைக் கொஞ்சம் காட்டினீங்கன்னா பரவாயில்லையே” என்று கேட்கிற நிலைக்கு நம்மளைக் கொண்டு வந்துடுவாங்க, அப்புறம் 'சி'க்கு போகும்போது இது சரியா வராதுன்னு ஆரம்பிப்பாங்க. அதுக்குப்பிறகு தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு அவங்க அவஸ்தைப்படப் போறாங்களேன்னு எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதாகி விடுகிறது.

கமல்: 'மழைத்தல்'னு நீங்க ஒருமுறை எழுதியிருக்கீங்க இல்லே 'பெய்யெனப் பெய்யும் மழை. மழைக்கு மெனில் சொல் உன்தாயிடம், நாடு நனையட்டும்'னு நான் எழுதியிருந்தேன், மழைக்கும்னு சொல்றது ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னுட்டாங்க சார்.

சுஜாதா : சொல்லலாம். தவறில்லை.

கமல் : சுப்பிரமணிய ராஜூவோ மாலனோ யார்னு ஞாபகமில்லை. ‘கீழ்பர்த்தில் ஒரு நல்ல நாட்டுக்கட்டை மனத்திற்குள் அவளைப் படுக்க வைத்தேன்' அப்ப டீன்னு எழுதியிருந்தாங்க.

சுஜாதா: புதுக் கவிதையில கல்யாண்ஜி எல்லாம்... பிரமாதம். ஒரு வேலைக்காரி சுமாரா இருக்கறவ பெருக்கிட்டிருக்கா. 'தரை சுத்தமாயிடுச்சி. மனம் குப்பையாயிடிச்சி' அப்படீங்கறார் நாலு பக்கக் கதை அந்த இரண்டு வரிகளில் வந்துடறதே!
கமல்: இன்னொன்று நான் படிச்சேன். 'கறுப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்' அப்படீன்னு. என்ன கற்பனை பாருங்க.

சுஜாதா : இன்னொரு புதுக்கவிதை நான் படிச்சேன் ''கண்ணீர்' என்ற தலைப்பில். 'இதயத்தில்தானே இடி. இங்கே ஏன் மழை'ன்னு எழுதியிருந்தாங்க. இன்னொருவர் இப்படி 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம். என் கல்யாணம் மட்டும் ஏன் நொச்சிக் குப்பத்தில் நிச்சயிக்கப்படுகிறது?'

கமல் : சினிமா கவிஞர்கள் பலர் பிரமாதமாக பாட்டு எழுதியிருக்காங்க. நான் சினிமா பாட்டுப் புத்தகத்திலே யிருந்தும் கலைஞர் கருணாநிதி வசனம் படிச்சும்தான் தமிழ் நல்லா பேச கத்துக்கிட்டேன்.

சுஜாதா : உங்க மாதிரி ஆளோடு எவ்வளவு நேரம் பேசறதுன்னாலும் நான் தயார்தான். ஆனால் இன்னிக்கு இரவு 9-30 மணி ரயிலில் பெங்களூர் போகணும். ஓ.கே. கமல். இன்னொரு முறை மீட்பண்ணி நாம பேசுவோம்.

கமல் : ஓ..யெஸ்! சந்திப்போம். சமீபத்தில் உங்க நாவல் ஏதாவது படமாகுதா?

சுஜாதா: 'கரையெல்லாம் செண்பகப் பூ' கதையை டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் வாங்கியிருக்கிறார். 'சாவி'யில் நான் எழுதிய 'காகிதச் சங்கிலிகள்' கதையை பஞ்சு அருணாசலம் வாங்கியிருக்கிறார். இன்னிக்கு காலையில்தான் பூசை நடந்தது. ஓ.கே. புறப்படுகிறேன் கமல் சந்திப்போம்.

திரைக்கதிர்

======================================================================================



'நம்மவர்' படம் பார்த்திருக்கிறீர்களா?  ஒரு ரௌடி காலேஜில் VP யாக வருவார் கமல்.   இருக்கும் இடத்திலிருந்து மாடியில் உலவிக்கொண்டிருக்கையில் சில மாணவர்கள் போதைப் பழக்கத்தில் ஈடுபடுவதைப் பார்ப்பார்.  முதல்முறை அவர்களை துரத்துகையில் தப்பி விடுவார்கள்.  மறுமுறை முயற்சிக்கையில் மொட்டை மாடியிலிருந்து அப்படியே மரத்தை வளைத்து கீழே குதிப்பார்.  

வாசுவின் இந்த செயலைக் கேட்டபோது அது நினைவுக்கு வந்தது எனக்கு.

வாசு ஸார் - 2

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நல்லாட்சியின் ஆரம்பத்திலேயே கஞ்சா புழக்கம் கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஊடுருவி விட்டது என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்ன செய்வது அப்படி ஒரு ஆட்சியாளர்களை தேர்வு செய்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும்..

ஒரு மாத காலமாக எங்கள் பள்ளியில் யாரோ ஒருவன் வெளியில் இருந்து வந்து கஞ்சா பொட்டலத்தை விற்றுவிட்டு செல்கிறான் என்ற செய்தி எனக்கு வந்து கொண்டே இருந்தது... நான் AHM என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்து, இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று பெரிய வகுப்பு மாணவர்கள்  நாலு பேரை அழைத்தேன்.  பள்ளியின் ஒரு மூலையில் - அதாவது அவன் விற்பனை செய்யும் அந்தப் பகுதியில் இருந்து கண்காணிக்கச் சொன்னேன்.  அவன் வந்தததும் எனக்கு தகவல் தெரிவித்து விட்டு அவனை அங்கிருந்து துரத்துமாறு சொன்னேன். 

அடுத்த நாளே அவன் வந்தான். அவன்  வந்தது எனக்குத் தெரிவிக்கப்பட்டது.  நான் சொன்னபடி செய்யச் சொல்லி மாணவர்களுக்கு சொல்லி விட்டு நானும் தயாரானேன்.

மாணவர்கள் அங்கிருந்து துரத்த, அவன் காம்பவுண்டுக்கு வெளியே தப்பி ஓடினான்.

அவன் காம்பவுண்டு சுவற்றிற்கு வெளியே ஓடி வருகின்ற அந்த நேரத்தில் நான் சுவற்றின் மேல் ஏறி நின்று அவன் மீது பாய்ந்து அவனைப் பிடித்தேன். அவனிடம் ஏதாவது ஆயுதம் இருந்திருந்தால் என் கதி என்னவாகி இருக்கும் என்று தெரியாது...  நான் அப்போது அதை யோசிக்கவே இல்லை.  மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தும் எண்ணம் மட்டுமே மனம் முழுக்க இருந்தது.

மாணவர்களும் வந்துவிட அனைவரும் சேர்ந்து அவனைப் பிடித்து விட்டோம்.

அவனை உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஒப்படைக்கவும் செய்தோம். இந்த நிகழ்வில் நான் போட்டிருந்த Pant கிழிந்து விட்டதை என் உடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் கவனித்துக் கூறினார். வீடு அருகில் தான் என்பதால் உடனடியாக வீட்டிற்கு வந்து Pantஐ மாற்றினேன்.

=====================================================================================

ஜெய்சங்கர் உஷா நந்தினி நடித்து, 1971 ல் வெளிவந்த  'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்திலிருந்து ஒரு பாடல்.

எஸ் பி பாலசுப்ரமணியம் வசந்தா பாடிய பாடல்.  கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.

லேசாக ஏதோ ஒரு ஹிந்திப் பாடலை நினைவு படுத்தும்.  காட்சி பரயாதான் படப்பாடலான  'து பியார்' பாடல் காட்சியை சற்றே நினைவு படுத்தும்!


====================================================================================

வாடகை ஓட்டுநர்களுடனான அனுபவம்..

ஒரு திருமணத்துக்காக சித்தூர் சென்றபோது வந்த டிரைவர் பெரும்பாலும் எனக்கு வரும் ஆஸ்தான டிரைவர்.  புதிதாக ஒருவர் வந்தாலே எங்களுடன் ஒருவர் என்ற நிலையிலேயே அவரை வைப்போம்.  இருந்தாலும் அவர்கள் தங்கள் தொழில் "தர்மங்களை" விடுவதில்லை!

சித்தூரில் இந்த Use and Throw தட்டுகள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டோம்.  கிளம்புவதற்குள் அதை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் நினைத்திருந்தோம்.  ஆனால் இங்கே அங்கே சுற்றி வந்தபோதெல்லாம் இன்னும் நேரம் இருக்கிறதே என்று விட்டு  விட்டு கோவில் சென்று திரும்பி வந்தபோது அவை மீண்டும் எங்கள் கண்ணில் பட, அவரை காரை நிறுத்தத் சொன்னேன்.    

இவர்களுக்கெல்லாம் ஒரு வழக்கம் என்ன என்றால் முதலில் நீங்கள் சொல்லி இருக்கும் இடம்தான் மெயின்,  நடுவில் நிறுத்தச் சொல்வது மனதில் பதியாது, அல்லது பதியாதது போல இருந்து விடுவார்கள்.  ''காரை சாலையின் இடது பக்கம் ஓட்டுங்கள்'' என்பேன் - ஏதாவது கடை தென்பட்டால் உடனே நிறுத்த வசதியாக.  ஆனால் இவர்கள் வலது புறமாக ஓட்டி வந்து விட்டு அதைத் தாண்டி சிறிது தூரம் சென்று விடுவார்கள்.  அதாவது டிராஃபிக்கினால் அப்படி செல்கிறார்களாம்!  பின்னால் வண்டிகள் வருகிறதாம்.  அப்படியும் ஓரிரு முறை யு டர்ன் போடுங்கள் என்றும் சொல்லி இருக்கிறேன்.  ஏன் இப்படி இவர்கள் இருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கும்!  அதிலும் பாஸ் ரொம்பவே கடுப்பாவார்!

விஷயத்துக்கு வருகிறேன்.  அப்படி அந்தக் கடையைப் பார்த்ததும் நிறுத்தச் சொன்னதும் வழக்கமான பாணியில் தாண்டி நிறுத்தி விட்டு அவரே ஒரு பதிலும் சொன்னார்.."இனிமே வரிசையா நிறைய கடை இருக்கு ஸார்..   நானே நேற்று பார்த்தேன்.  அப்படியே போய் பார்த்துக்கலாம்"

சரி என்று கிளம்பினால் ஒரு கடை கூட அந்த வரிசையில் அப்புறம் தென்படவில்லை என்பதோடு திருமணம் முடிந்து ஊர் திரும்பும் வழியிலும் கடைகள் இல்லை.  

டிரைவரின் கேள்வி  "திரும்ப ஊருக்குள் அந்தக் கடைய போய்ப் பார்க்கலாமா ஸார்?"  

கிண்டல்தானே!

கோபத்தை அடக்கிக் கொண்டு "இதோ பாருங்க ரஜினி..  (அதுதான் அவர் பெயர்)  முதல் வாய்ப்பு எப்போ கிடைக்குதோ அதை அங்கே யூஸ் செய்துகொண்டு விட வேண்டும்...  அப்புறம் தேடினாலும் கிடைக்காது"


செயற்கையாக தன் குற்றத்தை தானே நொந்து கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டே வந்தார். அப்புறம் வந்த டிரிப்புகளிலும் சரி, கடந்த வெள்ளிக்கிழமை சேலம் சென்றபோதும் சரி, எதையாவது வாங்க வேண்டும் என்றால் குறுகலான மார்க்கெட் ரோடில், அல்லது உருப்படாத கடையில் எல்லாம் ஸ்லோ செய்து எங்களை அங்கே வாங்கச் சொன்னார்.  நான் சொன்ன வசனங்களை ("முதல் வாய்ப்பு எப்போ கிடைக்குதோ அதை அங்கே யூஸ் செய்துகொண்டு விட வேண்டும்...  அப்புறம் தேடினாலும் கிடைக்காது") புதுசு போல எனக்குத் திரும்பிச் சொன்னார்.   ("அப்புறம் என்னை குறை சொல்லக்கூடாது!")  நான் கண்டு கொள்ளவில்லை.  'இன்னும் போங்க' என்று சொல்லி நல்ல கடையிலேயே வாங்கினேன்.

அவர் வேண்டாம் என்று விட்டு விடுவதுதானே என்றுதானே தோன்றுகிறது?  வாடகை ஓட்டுநர்களில் இந்த அளவு சாதுவான, கொஞ்சம் நியாயமானவராகவும் கூட டிரைவர்கள் அமைவது சிரமம்.  மற்ற டிரைவர்களுக்கு இவர் எவ்வளவோ தேவலாம்.  

மேலும் அவர்களுக்கும் எவ்வளவோ எரிச்சல்கள்..

=====================================================================================

ஒரு முறை இயக்குனர் பாலாவும் அவர் குருநாதர் பாலு மகேந்திராவும் அலுவலக ஜன்னல், கதவு எல்லாம் பூட்டி விட்டு வெளியே புறப்பட்டார்கள்.
கார் சிறிது தூரம் வந்த பிறகு "அடடா.." என்றார் பாலு. டிரைவர் பதட்டமாக, "வண்டியை திருப்புப்பா....உடனே அலுவலகம் போகணும்..." அவரின் பரபரப்பு பாலாவுக்கும் பதட்டத்தை வரவழைத்தது. டிரைவரும் வேகமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். வண்டி அலுவலகம் வந்தவுடன் பாலா இறங்கி உள்ளே ஓடினார்...உள்ளே....
1954ல் பிரேமா என்கிற நடிகை 'நீலக்குயில்' என்கிற படத்தில் சத்யனின் மனைவியாக நடித்து அறிமுகமானார். முதல் நாயகியாக மிஸ் குமாரி என்கிற நடிகை இருந்ததால் அந்தப்படத்தில் இரண்டாம் நாயகியானார் ப்ரேமா. அதனாலோ என்னவோ பிரேமாவுக்கு இரண்டாம், மூன்றாம், நான்காம் ரோல்களே பின்னாளில் கிடைத்தன. முன்னணி நாயகியாக அவரால் வரவே முடியவில்லை. அவருக்கு அது வருத்தமாகவே இருந்தது. K.P.மேனன் என்பவரோடு திருமணம் நடந்து பிரேமாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததுமே பிரேமா முடிவெடுத்து விட்டார். இவளை இதே திரையுலகில் மிகப்பெரும் நடிகையாக்குவேன் என்கிற சபதம் ஷோபா என்கிற மகளின் மூலம் பூர்த்தியானது.
மூன்று வயது முதலே மகளை நடிக்க வைக்கத்தொடங்கினார் ப்ரேமா. மகாலட்சுமியாக இருந்த மகள் ஷோபாவாகி நாயகியும் ஆனார். பாவம் ப்ரேமா...மகளின் மனநிலையை அறியாதவராக இருந்தார். மகள் இளவயதிலேலே நடிப்புத்தொழிலுக்கு வந்ததால் சிறுவயதில் பெரிய வயதுக்கான மனநிலையை பெற்றிருந்தார்.
அம்மாவிடமிருந்து தப்பிக்கவே பாலு மகேந்திராவிடம் அடைக்கலமானார் ஷோபா. அங்கிள் என்று அழைத்துக்கொண்டிருந்த பாலுவும் ஷோபாவுக்கு தாலி கட்டினார். பாலு சாதிக்க பேய்ப்பசி உள்ளவர். அவர் தன் கேரியரை பார்ப்பதா ஷோபாவை பார்ப்பதா என தெரியாமல் தடுமாறினார். இலங்கையிலிருந்து திருமணம்செய்து அழைத்து வந்த அகிலாவும் வீட்டில் இருக்கிறார். பாலுவிடம் எதையோ எதிர்பார்த்த ஷோபா ஒரு நாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாலுவுக்கு அதிர்ச்சி. தன்னால் ஒரு உயிர் போனால் யாரால் தாங்கமுடியும்?. பாலுவின் வாழ்வில் தீராப்பழியை அவரே அழைத்து வாங்கி வைத்துக்கொண்டார். ஓடி ஓடி நடிப்பு வாய்ப்பு வாங்கிய ப்ரேமா பாலுவின் மீது வழக்கெல்லாம் தொடுத்தார். ஒரு நாள் தன் மனசாட்சியின் கேள்விகள் தாளாமல் ப்ரேமாவும் தற்கொலை செய்து கொண்டார்.
பாலாவும், பாலுவும் ஓடிப்போய் அலுவலகத்தை திறந்ததும் பாலு ஓடிப்போய் ஜன்னல் கதவை திறந்து விட்டார். அங்கு ஒரு தாய்ப்பூனை கதவை திறந்ததும் ஜன்னலின் வழியே ஓடிச்சென்று புத்தக அலமாரியின் கீழே பதுங்கியது. பாலா குனிந்து பார்த்தபோது அங்கு சில புதிதாகப் பிறந்த குட்டிப்பூனைகளுக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தது. "அவசரத்தில் இந்த தாய்ப்பூனையை மறந்துவிட்டேன். எப்போதாவது வெளியே சென்று விட்டு வந்து குட்டிகளுக்கு பால் கொடுக்கும். நல்ல வேளை ஞாபகம் வந்தது"....பாலு மகேந்திராவின் குரலில் ஆசுவாசாம் தெரிந்தது. எத்தனை மனிதம்?...
இந்த மனிதத்தைப் பெற பாலு மகேந்திரா கொடுத்த விலை தான் பெரிது. இந்த காருண்யத்தில் நூற்றில் பத்து பங்கு இருந்திருந்தால் கூட ஷோபா என்கிற குழந்தைப்பெண் தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்று தோன்றுகிறது. ஷோபாவுக்கு அஞ்சலிகள்....
மனித வாழ்வில் நாமெல்லாம் பொம்மலாட்டக்கயிறு கட்டிய பொம்மைகள்...சரி தானே.....?
மீள்...

Selvan anbu

======================================================================================
1985 ம் வருடம் வெளியான 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே படம்.  செமி ஆக்ஷன் படம் என்று சொல்லலாம்.  மாதவி ஜோடி.

இளையராஜா இசை.  இன்று பகிரும் பாடல் வைரமுத்து எழுத்தில்.   பாலு மகேந்திராவின் இன்னொரு அபிமான நடிகை மௌனிகா அறிமுகமான படமாம் இது.

இந்தப் பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று.  SPB இந்தப் பாடலில் பல்லவியை மட்டுமே பாடுவார்.   

சரணங்கள் மட்டுமே பாடுவார் ஜானகி அம்மா.  சோகம் சொல்லும் பாடல்.  வசீகரமான வரிகள். 

"நானுறங்கும் நாள் வேண்டும் சாய்ந்துகொள்ள தோள் வேண்டும் என் கண்ணில் நீர் வேண்டும் சுகமாக அழவேண்டும்..."  

என்னுடைய கேசெட்  காலங்களில் மதுரை வானொலியில் இந்த பாடல் ஒலிபரப்பானபோது ரேடியோவிலிருந்து தலைவர் பாடிய வரிகளை மட்டும் பாஸ் செய்து பாஸ் செய்து, பதிவு செய்து வைத்திருந்தேன்.  அது ஒரு நேர பைத்தியம்!  மதுரை வானொலி ஒலிபரப்பு FM ரேடியோ போல தெளிவாக இருக்கும்.  

இளையராஜா வழங்கி இருக்கும் ஸ்லோ மெலடி.  அந்த ஆரம்ப இசை..  பாடல் ஆரம்பம்..  SPB யின் மென்மையான கீழ் ஸ்தாயி ஆரம்பம்.


==========================================================================================

பொக்கிஷம் :

இரண்டு விளம்பரங்கள், இரண்டு கோபுலு ஓவியங்கள்,  இரண்டு விமர்சனங்கள்!









========================================================================================

சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பார்கள்.  நீதிமன்றங்களும் அரசும் கைகோர்த்து இப்படி நடந்து கொள்ளும்போது பாதிக்கப்பட்டவர் மனநிலை கொதிநிலையை அடைகிறது...



======================================================================================

ஜோக்ஸ் :

கடைசி ஜோக்கை படிக்க முடியாமல் போனால்..  வருந்துகிறேன்.








63 கருத்துகள்:

  1. என்னைச் சீரழித்தவனை மன்னிக்க நீ யார்?..... மனதில் பதிந்த பகுதி.

    அரபு தேசங்களின் நீதி பக்கத்தில் எந்த நாடும் வர இயலாது. அமெரிக்க தண்டனையான, 300 வருடம், 120 வருடம் எனக் கொடுக்கும் முறையும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  ஆமாம்,  எனக்கும் சற்றே மகிழ்வு தந்த செய்தி.

      நீக்கு
  2. தன் கனவை பிள்ளைகள் மூலம் தீர்த்துக்கொள்பவர்கள் பிள்ளைகளின் வாழ்வைச் சீரழிக்கிறார்கள்

    பாலுமகேந்திரா பற்றி நல்லவிதமாக எழுதப்பட்ட பெஉதி இது. ஆனால் அவருடைய மோசமான பக்கங்கள் பல உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைப்பற்றி நிறைய நெகட்டிவ் செய்திகள்தான் படிக்கிறோம்.  எனவே இது!

      நீக்கு
  3. வாசு சாரின், கஞ்சா விற்பனையாளரைப் பிடித்தது... நல்ல செயல் ஆனால் வேண்டாத வேலை என எனக்குத் தோன்றியது.

    உனக்கு வேண்டாம்னா வாங்காதே, வியாபாரத்தைக் கெடுக்க நீ யார் என்றே ரௌடிகள் அரசியல்வாதிகள், போலீஸ் மற்றும் ஆசிரியரின் மேலதிகாரிகள் கேட்டுக் குடைச்சல் கொடுக்கும் காலம். எல்லோரின் துணையுடன் போலீஸ் ஸ்டாஷன்களுக்கு அலைய வைப்பார்கள், மாணவர்களையே எதிர் சாட்சி சொல்ல வைப்பாங்க. ரொம்ப ரிஸ்கான விஷயம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மனம் அநீதியை எதிர்க்க தயங்கவில்லை. 
       
      இந்த மாதிரி ஒரு வியாபார ஃபிராடை நான் எதிர்த்து மதுரையில் மாட்டிய அனுபவத்தை அனுபவமாக முன்னர் எழுதி இருந்தது நினைவிருக்கும் உங்களுக்கு!

      நீக்கு
  4. இங்கெல்லாம் ஆட்டோ கார்ர்களே அப்படி நிறுத்துவாங்களே. வாடகைக் கார் டிரைவர் இப்படி இருப்பது ஆச்சர்யம்.

    ஒருவேளை நான் நல்லவர்களை மாத்திரம் சந்தித்திருக்கிறேனோ...

    இல்லை இல்லை. கும்பகோணம் வாடகைக் கார் ஓட்டுநர் காளியாகுடி ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட முடியாமல் இடைஞ்சல் செய்துவிட்டார சென்ற முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் சில மனிதர்கள்! 

      அவர் மற்ற கஸ்டமர்களை புறம் தள்ளி என்னுடன் - எங்களுடன் - வருவதையே விரும்புகிறார்.  மற்ற ஓட்டுனர்களுக்கு வேறு வழி இல்லை என்றால்தான் வாய்ப்பு தருவார்!

      நீக்கு
  5. நகைச்சுவைகளை இரண்டாம் முறையும் வெளியிடணும் என்று வேண்டுதலா? அதிலும் பெரும்பாலும் அட்டு வகையைச் சேர்ந்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் விருப்பமில்லைதான்.  வெளியிட்டது எது வெளியிடாதது எது என்று குழப்பம் வந்து விடுகிறது.  அந்த பகுதியையே எடுத்து விட்டால் என்ன என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
  6. இன்றைய பதிவின் அளவு கச்சிதம். ஆனால் ஜோக்குகள் உட்பட சில செய்திகள் ஏற்கனவே படித்தவையாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. ஜெய்சங்கர், உஷா நந்தினி பாடல் கேட்டிருக்கிறேன். வீராணம் நீரை சென்னைக்கு கொண்டு வரப்போகிறோம் என்று கருணாநிதி ஆட்சியில் வாங்கி போடப்பட்ட குழாய்களுக்குள் டூயட். இதைப் பார்த்ததும் துக்ளக்கில், 'பிளாட்பாரத்தில் வசிப்பபவர்களுக்கு இருக்குமிடமாகவும், தமிழ்ப் படங்களில் டூயட் காட்சியை படமாக்கவும் பயன்படும்' என்று எழுதியது நினைவுக்கு வருகிறது.
    அடுத்த பாடல் கேட்ட நினைவு இல்லை. பாடல் காட்சிகளில் ஹீரோவும் ஹீரோயினும் பேசிக்கொண்டு நடந்தால் போதும் என்பதை கொண்டு வந்தவர் பாலு மகேந்திரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பாடல் காட்சிகளில் ஹீரோவும் ஹீரோயினும் பேசிக்கொண்டு நடந்தால் போதும் என்பதை கொண்டு வந்தவர் பாலு மகேந்திரா.//

      ஹிந்தியில் ஏற்கனவே பாசு சட்டர்ஜி செய்திருந்தார்.  அதைப் பார்த்துதான்...

      நீக்கு
    2. பாசு சட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜி ஆகியோரின் படங்களைப் பார்த்துட்டு............................!

      நீக்கு
    3. ம்ம்ம்ம்ம்ம்ம்?????????????????????? காசேதான் கடவுளடா! படத்தில் கூட முத்துராமனும் லக்ஷ்மியும் இப்படி ஒரு குழாய்க்குள்ளாக டூயட் பாடி ஆடின நினைவு இருக்கு. இந்தப் படம் தனாஅ? சரியாத் தெரியலை. ஆனால் காசேதான் கடவுளடா படம் 72 ஆம் ஆண்டில் அல்லது 71 ஆம் ஆண்டு கடைசியில் வந்தது. நான் பார்த்தது என்னோட அலுவலகம் அருகே தண்டையார்ப்பேட்டை அகஸ்தியா தியேட்டரில்.

      நீக்கு
    4. வாங்க கீதா அக்கா.. ரிஷிகேஷ் முகர்ஜி பற்றி தேர்த்தியலை. ஆனால் பாசு சட்டர்ஜி தெரியும்.

      நீக்கு
    5. காசேதான் கடவுளடா படமா வேறு படமா?  எனக்கும் காட்சி அரைகுறையாய் நினைவுக்கு வருகிறது.  பாடலும், படமும் நினைவுக்கு வரவில்லை.

      நீக்கு
    6. 2, 3 படங்கலில் வந்திருந்தாலும் எனக்கு நினைவிருப்பது காசே தான் கடவுளடா படம் தான். முத்துராமன், லக்ஷ்மி.

      நீக்கு
    7. அதில் உள்ள பாடல் லிஸ்ட் பார்த்தேன்.  கோவை சௌந்தர்ராஜன் பாடல் ஒன்று இருக்கிறது.  அதுதானோ என்னவோ..

      நீக்கு
  8. "என்னை சிதைத்தவனை மன்னிக்க நீ யார்?" என்று கேட்ட அந்தப் பெண்ணின் கேள்வி நியாயமானது.
    சுஹாசினி என்னும் சிறு குழந்தையை வன் புணர்வு செய்து கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த மனித மிருகத்திற்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று மகளிர் அமைப்புகள் போராடியும் ஜாமீன் கொடுக்க அந்த் மிருகம் வெளியே வந்து அவன் தாயையையும் கொன்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடூரம்.  சில அரசியல் தலையீடுகள், சிபாரிசுகள் இவர்களை காக்கின்றன.

      நீக்கு
  9. கார் ஓட்டுனர்கள் பெரும்பாலும் நீங்கள் சொல்வது போலத்தான் நடந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் அனுபவம் இருக்கு போல...

      நீக்கு
  10. இளைய தலைமுறை விமர்சனம் குமுதமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிதான் ஞாபகம்.

      நீக்கு
    2. குமுதமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் விமரிசனம் எழுதியவர் பெயர் காந்தன் எனப் போட்டிருக்கே. காந்தன் கல்கிப் பத்திரிகையில் தான் விமரிசனம் எழுதுவாரோ என நினைவு. பேப்பர் பார்த்தால் குமுதம் போலோ கல்கி போலோ தெரியலை. அதான் எனக்கும் குழப்பம். :(

      நீக்கு
    3. ஆமாம் கீதா அக்கா.  கரெக்ட்டு..  கல்கிதான்.

      நீக்கு
  11. இன்றைய பதிவு நன்று. மன்னிக்க நீ யார்... சரியான செயல் தான்! குற்றம் செய்தவர் என்று தெரிந்த பின்னும் அவரைத் தண்டிப்பதில்லை - பல சமயங்களில்! மன்னிப்பு என்பது எல்லா இடங்களிலும், எல்லோருக்கும், எப்போதும் தேவையில்லை.

    பாடல்கள் நன்று. பாலு மகேந்திரா குறித்த செய்திகள் - ம்ம்ம்.. ஆனால் அவரைப் பற்றிய நெகட்டிவ் செய்திகள் தான் அதிகம்.

    சில ஜோக்ஸ் படிக்கும்போதே முன்னரே படித்ததோ என்று தோன்றியது. எனக்கு மட்டும் தான் அப்படித் தோன்றியதோ என்று பார்த்தால் மேலும் சிலரும் சொல்லி இருக்கிறார்கள். கடைசி ஜோக் (?) படிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமாம், ஜோக்குகள் எல்லாமும் திரும்ப வந்திருக்கின்றன. கடைசி ஜோக்கை நானும் கஷ்டப்பட்டுப் படிச்சுட்டேன்.

      நீக்கு
    3. சில வாரங்களுக்கு ஜோக்ஸ் வேணாம்.. என்ன?

      நீக்கு
  12. ​//மழைக் காலமும் பனிக்காலமும்
    சுகமானது​//
    ​ஒவ்வாமையால் அடுக்குத் தும்மல்
    ​வரும்போது.
    கவிதைகளுக்கு retirement வயதாகி விட்டன. இளமை திரும்பவில்லை.
    சுஜாதா உரையாடல் என்று வருவதெல்லாம் உண்மைதானோ என்று ஐயம் எழுகின்றது. காரணம் சுஜாதா இறந்தே 20 வருடங்கள் ஆகப்போகிறது. வார்த்தைகளை அப்படியே நினைவில் வைத்திருக்க முடியாது. அதே போன்று ஒலி நாடாவில் வைத்திருத்தாலும் உபயோக சூன்யம் ஆகியிருக்கும்.

    சுஜாதா கமல் பேட்டி பேட்டியாக இல்லை, ஒரு அரட்டையாகத்தான் தோன்றுகிறது. சுஜாதாவின் ட்ரேட் மார்க்கே சுருங்கச் சொல்லுதல். அது இப்பேட்டியில் இல்லை.
    ஆக இது ஒரு AI உண்டாக்கியதாகத் தோன்றுகிறது.

    நீலக்குயில் படத்தில் இருந்து ஒரு பாடலை சில காலங்களுக்கு முன் வெள்ளி விடீயோவிற்கு அனுப்பியிருந்தேன்.
    ஜோக்குகள் ஏனோ தானோ
    மொத்தத்தில் அலைச்சல், கூடுதல் வேலைகள் என்பவற்றின் அசதி பதிவில் தென்படுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே...  இளமையையே சந்தேகிக்கிறீர்களே...!

      சுஜாதா பேட்டி அப்போதைய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.  கமல் வறுமையின் நிறம் சிவப்பு படப்பிடிப்பிலிருந்து அப்படியே வந்து கலந்து கொண்டார் என்ற ஆரம்பக் குறிப்பையெல்லாம் தவிர்த்து விட்டேன்!

      நீக்கு
  13. இன்னிக்கு வந்திருப்பவை பலவும் முன்னரே படிச்சதாக இருக்கு. முக்கியமாக அந்தப் பெண் தன்னைச் சீரழித்தவனைக் கொன்றது, மற்றும் ஜோக்குகள் முதல் நான்கும் பலமுறை படிச்சது. கடைசி ஜோக்கைக் கஷ்டப்பட்டுப் படிச்சுட்டேன். இந்த மாதிரி கோபுலு படங்களை "மத்யமர்" குழுவில் ஒருத்தர் விடாமல் பகிர்ந்து வருகிறார். வினோ மோகன் என்பவர். அவருடைய ஒரு ப்திவைக் கூட இங்கே பகிர்ந்திருந்தீர்கள். "இளைய தலைமுறை"னு படம் வந்ததே இப்போத் தான் தெரியும். அதிலும் ஜிவாஜி இளைய தலைமுறையா? படம் பார்ப்பவர்கள் பாவம். அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஸ்ரீதர் படமா? தெரியலை. மறந்து போச்சு. ஆனால் சித்ராலயா பானர் இல்லைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். வினோ மோகன் பற்றி JKC ஜீவி ஸார் இரண்டு பெரும் சொல்லி இருந்தார்கள். லிங்க் கொடுத்திருந்தார்கள். பகிர்ந்தேன்.

      ஜீவி ஸார் இன்று யு எஸ் செல்கிறார்.

      நீக்கு
  14. சுஜாதா, கமல் இருவரின் இந்தப் படம் நிறையப் பார்த்திருந்தாலும் அது பேட்டிக்கானது என்பதை இன்னிக்குத் தான் தெரிந்து கொண்டேன். அது சரி, உங்களுக்கு இப்போ இளமை ஊஞ்சலாடுகிறதோ? கவிதைகளில் இருந்து அப்படித் தான் நினைக்கிறேன். சேலம் போன அனுபவங்கள் எழுதுவீங்கனு எதிர்பார்த்தால் அதை என்னமோ ரகசியமாவே வைச்சிருக்கீங்க. போகட்டும் விடுங்க.

    பாடல் இப்போத் தான் கேட்டேன். உஷா நந்தினி அதிகமா ஜிவாஜியோட நடிச்சே பார்த்திருக்கேன். கௌரவம் படத்தில் கூட அவர் தான் ஜிவாஜிக்கு ஜோடியாக வந்த நினைவு. ஜெய்சங்கரோடும் நடிச்சிருக்காங்களா தெரியாது. ஆனாலும் அவ்வளவாய்ப் பிரபலம் ஆகலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா, கமல் படம் இந்த பேட்டிக்கானததுதானா என்று நிச்சயமாக தெரியாது.  புத்தகத்திலிருந்து பேட்டியை எடுத்தேன்.  அதில் படமில்லை.  படம் இணையத்திலிருந்து எடுத்தேன்.

      நீக்கு
  15. இங்கே பையரிடம் Z5 இருப்பதாய்த் தெரியலை. எனக்கு அமேசான் ப்ரைமும், நெட்ஃப்ளிக்ஸும் போட்டிருக்கார். அதிலேயே நான் இன்னமும் எதுவும் பார்க்கலை. துரந்தர் 1 மட்டும் இருமுறை பார்த்ததோடு சரி. டங்கல் படம் பாதி வரை பார்த்தேன். தொடரலை. ஒரே போராக இருக்கு. :))

    உங்கள் சகோதரர் வாசு வீர, தீர, பராக்கிரமங்களுக்குச் சொந்தக்காரர் என்பதை அறிந்து கொண்டேன். கஞ்சா கடத்தியவனைப் பிடிச்சுப் போலீஸில் ஒப்படைச்சதெல்லாம் சரி, போலீஸ் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்து அந்தக் குற்றவாளியை உள்ளே தள்ளினாங்க தானே! சமயத்தில் யார் பிடிச்சுட்டு வராங்களோ அவங்க மேலேயே கேஸ் போடுவாங்கனு சொல்லிட்டு இருக்காங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரந்தர் இருமுறை பார்த்தீர்களா..  அசாத்திய பொறுமைதான்!  கஞ்சா கேஸ் பத்தி எனக்கும் அந்த சந்தேகம் உண்டு.  ஸ்கூல் ஹெச் எம் என்பதால் மரியாதையாக விட்டிருப்பார்கள்.  அவனையும் பிற்பாடு சத்தமில்லாமல் விட்டிருப்பார்கள்..( "அந்த ஸ்கூல் பக்கம் போகாதே ராஜா...")

      நீக்கு
    2. எங்க பையரும் இப்படித் தான் துரந்தர் இருமுறை பார்த்தேன்னு சொன்னதுக்கு ஒரே சிரிப்பு. கேலி. என்னவோ போங்க. இந்தக் காலத்திய மனிதர்களின் ரசனையே புரியலை. :( இன்னிக்குப் பொன்னியின் செல்வன் 1 ம், சாவா படமும் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். பொன்னியின் செல்வன் தமிழில் கிடைக்கலை. பிரைமில் ஹிந்தி தான் கிடைச்சது. தொலைக்காட்சியில் போட்டாங்க தான். ஆனால் அப்போத் தொலைக்காட்சிப் படங்களெல்லாம் பார்க்கிறாப்போல் நிலையில் இல்லை. பார்த்தவரைக்கும் பொன்னியின் செல்வன் ஓகே ரகம். லைடிங், செட்டிங்ஸ் நல்லா இருக்கு. ஆழ்வார்க்கடியான் யாரு? ஜெயராமா? சகிக்கலை! :(

      நீக்கு
    3. பொன்னியின் செல்வன் தமிழிலும் கிடைக்கிறது.  எந்த OTT என்று நினைவில்லை.

      நீக்கு
  16. வாடகை ஓட்டுநர்கள் எங்கேயுமே இப்படித் தான் போல. ஆனாலும் நாங்க விடமாட்டோம். காரைப் பின்னுக்கு எடுக்கச் சொல்லி வருவோம். அல்லது பிடிவாதமாக யூ டர்ன் எடுக்க வைப்போம். இப்போத் தான் எங்கேயும் காரிலேயே போகவில்லை. கடைசியா 2023 செப்டெம்பரில் மழை நாளில் சென்னையில் தி.நகரில் ஒரு விசேஷத்துக்குப் போனதோடு சரி. அது ரொம்பவே அருமையான பயணமாகவும் அமைந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // செப்டெம்பரில் மழை நாளில் சென்னையில் தி.நகரில் ஒரு விசேஷத்துக்கு//

      நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறது.

      நீக்கு
  17. ஷோபா பற்றிய செய்தியைப் படிச்சேன். பாலு மஹேந்திரா பண்ணிய மிகப் பெரிய தவறு. மன்னிக்கவே முடியாதது. என்னமோ சிலரின் வாழ்க்கை இப்படியாகி விடுகிறது. இவரோடு மட்டுமில்லாமல் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட இன்னொரு நடிகையான ஃபடாஃபட் ஜெயலக்ஷ்மி என்பவரும் இப்படித்தான். அது யாரால், எப்படி நிகழ்ந்தது என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியலை. அதே போல் தான் ஷோபாவுக்கும். ஒரு பூனையைக் காப்பாற்ற ஓடோடி வந்த பாலு மஹேந்திராவால் ஷோபாவைப் புரிஞ்சுக்கவோ காப்பாற்றவோ முடியலை.

    பொம்மலாட்டம் திரைப்படம் சென்னையில் தான் கிருஷ்ணவேணி தியேட்டரில் பக்கத்து தாமோதர ரெட்டித் தெருவில் இருந்த சித்தப்பா வீட்டில் இருந்தப்போப் பார்த்தேன். ஜெயலலிதா பாவம் இவரைத் தான் உருகி உருகிக் காதலித்ததாகவும் ஜெய்சங்கர் மறுத்துட்டதாகவும் அப்போது எங்களைப் போன்ற பெண்களிடம் பேச்சு நடக்கும். அதிலும் சிலர் ரவிச்சந்திரன் கட்சி, சிலர் ஜெய்சங்கர் கட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... எனக்கு ஒன்று புரியலை. எதுக்கு ஷோபா மீது அனுதாபம்? பாலுமஹேந்திரா என்ன பேச்சலரா? திருமணமானவரிடம், தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்வதே தவறு இல்லையா?

      நீக்கு
    2. படாஃபட் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று நான் எதுவும் பிடிக்காது.  ஷோபா அப்படிச் செய்து கொள்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போல...

      ஜெ ஜெ கதை நானும் படித்திருக்கிறேன்!

      நீக்கு
    3. ஃபடாஃபட் விஷயம் ஓபன் சீக்ரட் ஆச்சே. ஷோபா பெரிதும் பாலு மஹேந்திராவை நம்பி இருந்தார். கடைசியில் ஷோபாவை ஏமாற்றினார். பின்னர் மௌனிகா வந்ததும் மனைவியையும் ஏமாற்றினார். என்னவோ போங்க! உண்மையான காதல்னா என்னன்னே இந்தத் திரைப்படக் காரங்களாலே நமக்குத் தெரியாமலேயே போயிடறது. :(ஷோபாவின் கதை தான் திரைப்படமாகக்கூட வந்ததுனு நினைவு.

      நீக்கு
    4. ஜெஜெ பெற்ற தாயாலேயே ஏமாற்றப்பட்டார். மகனுக்குனு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்த சந்தியா பெண்ணைச் சம்பாதிக்கும் கருவியாகவே பார்த்தார். :(

      நீக்கு
    5. // :(ஷோபாவின் கதை தான் திரைப்படமாகக்கூட வந்ததுனு நினைவு. //

      ஆமாம். சில வாரங்கள் முன்பு நான் பகிர்ந்த குறுக்கெழுத்து போட்டியில் அதுவும் ஒரு வாசகம்! லோகாயுண்டே மரணம் ஒரு பிளாஷ்பேக்.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. OTT யில் பார்த்த படம் விமர்சனம் படித்தேன்.முதல் பதிவில் பாதிக்கபட்ட பெண் கேட்ட கேள்வியும்,
    சட்டத்தை கையில் எடுத்த கொண்ட பெண்ணும்
    பாலுமகேந்திரா ஷோபா , செய்தி எல்லாம் மனதை கஷ்டபடுத்தியது.
    மாலுமகேந்திரா செய்தியில் ஷோபாவின் அம்மா படம் தப்பாக போட்டு இருக்கிறார்கள். இவர் மெட்டி ஒலியில் மாமியாராக நடித்தவர். இப்போதும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // செய்தியில் ஷோபாவின் அம்மா படம் தப்பாக போட்டு இருக்கிறார்கள். //

      ஓ..  அப்படியா?  அவர்கள் போட்டதை நானும் செக் செய்யாமல் போட்டு விட்டேன்.  எப்படியும் எனக்கு விவரமும் தெரியாது!

      நீக்கு
  20. உங்கள் கவிதையில் மழை, பகிர்ந்த பாடல் காட்சிகளில் மழை.
    நேற்று மதுரையில் பயங்கர இடி , மின்னலுடன் இரவு முழுவதும் மழை.
    அக்னி நடசத்திரத்தில் மழையால் வெயிலின் கொடுமை குறைந்து இருக்கிறது.

    எஸ் பி பாலசுப்ரமணியம் குரல் இளமையில் மிகவும் அருமையாக இருக்கும். ஜெயசங்கர், ரவிசந்திரன், சிவாஜி, எம்,ஜி, ஆர் எல்லோருக்கும் பாடினார் அனைத்தும் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் மழை வரும் என்பார்கள். இந்த வருடமும் வந்து விட்டது போலும். மதுரை ஜேஜே என்றிருந்திருக்கும்.

      நீக்கு
  21. கார் ஓட்டுனர்கள் சிலர் அவர்கள் சாப்பிட்ட ஓட்டல், அவர்களுக்கு பிடித்த கடைகள் என்று நிறுத்தம் செய்வார்கள்.

    பொக்கிஷம் பகிர்வுகள் படித்தேன் பார்த்தேன், கடைசி நகைச்சுவை படிக்க முடிகிறது. 10 கேள்விகள் தான் கேட்பது வழக்கம் என முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார் ஓட்டுநர்கள் கதையே அப்படிதான் போல..

      நீக்கு
  22. சுஜாதா கமல் - உரையாடலா இல்லை அவங்க அவங்க தங்களுக்குப் பேச வாய்ப்பு வந்ததும் கடகடன்னு பேசினாங்களா? ஒண்ணுக்கொண்டு தொடர்பு இருப்பதுபோலவே தெரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடிட் செய்து போட்டார்களோ என்னவோ..   சும்மா ஒருஉரையாடல் அவ்வளவுதானே!

      நீக்கு
  23. மழைக் கவிதை பிடித்திருந்தது.

    பழைய ஜோக்ஸ் இன்னும் நன்றாக வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

    "என்னைச் சீரழித்தவனை மன்னிக்க நீ யார்?..... சரியான கேள்விதான் பாதிக்கப்பட்ட பெண்ணின் காயப்பட்ட மனநிலை :( அது அவளுக்குத்தான் புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி..  ஆமாம் பிடிபடும் குற்றவாளிகளுக்கு யாராவது அரசியல்வியாதி சிபாரிசு செய்தால் பொதுமன்னிப்பு அப்படி இப்படி என்று ஒரு சாக்கு வைத்து அரசு விடுதலை செய்தால் எப்படி இருக்கும்..  பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத்தான் வலி  தெரியும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!