கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
Home schooling என்று ஒரு விஷயம் பிரபலமாகி வருகிறதே அது சரியா?
# எல்லாவற்றையும் போலவே, இதிலும் நன்மை, வசதி உண்டு. கூடவே சில வேண்டத்தகாத அம்சங்களும் இருக்க வாய்ப்பும் உண்டு. ஒரு மாணவனின் மனவியல், அறிவாற்றல் எப்படி இருக்கிறது, அவன் குடும்பத்தின் பின்னணி என்ன, எப்படி - இவற்றைப் பொறுத்து ஹோம் ஸ்கூலிங் என்பதை மிக வெற்றிகரமாக சாதிக்க முடியும்.
இரண்டு மூன்று திறமையான இளவயது ஆசிரியர்கள் ஒரு பத்துப் பதினைந்து மாணவர்களை மிகச் சிறப்பாகத் தயார் செய்து பட்டம் பெற வைக்க முடியும் என்ற நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். மாணவர்கள் ஜிம், காற்பந்து எனத் தம் உடலையும் பேணிக்காக்க முடிகிறது என்று இருந்தால் அதிலும் ஒரு ஈர்ப்பு வந்து விடும் அல்லவா ? மினி ஸ்கூல் திட்டம்.
பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே அப்பா அம்மா உதவியுடன் படித்துக் கல்லூரியில் சேர்ந்த இளைஞன் நினைவுக்கு வருகிறார்.
பலவிதமான காரணங்களுக்காக ஹோம் ஸ்கூலிங் என்கிற திட்டம் மேன்மேலும் சரியாக்கப்பட்டு, பரந்து பட்டு அமலுக்கு வரும் என்றுதான் தோன்றுகிறது.
& Home schooling போன்ற சமாச்சாரம் நமது வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளிப் படிப்பு படிக்க இயலாமல், உலகம் சுற்றும் வாய்ப்பு + பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு. பரிட்சை எழுதி நூறு வாங்க வேண்டிய நேரத்தில் கூட கிரிக்கெட் மைதானங்களில் நூறு அடித்து பாராட்டுகள் பெற்று வருகிறான்!
"எந்த ஒருவனை எல்லோரும் நல்லவன் என்கிறார்களோ, அவனை முழுமையாக நம்பி விடாதே" என்று சாணக்கியர் கூறியிருக்கிறாராம். அப்படியே பொது வாழ்வில் ஒருவனை எல்லோரும் திட்டினால் அவன் நல்லவன் எனலாமா? உதாரணமாக காந்தி, மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி,நிர்மலா சீதாராமன்.
# எல்லாத் தேற்றங்களுக்கும் மறுதலை இராது.
அரசியல் என்று வந்துவிட்டால் எவரானாலும் அவரைப் போற்றுவோரும் தூற்றுவோரும் வெவ்வேறு அளவிலிருப்பர். இதில் காந்தி நேரு இருவரும் தூற்றுவோரே இன்றிச் சிலகாலம் இருந்தார்கள். நிர்மலா சீதாராமன் அவர்களைத் தூற்றுபவர்கள் என்று பார்த்தால் அதிகம் இல்லை. ஆனால் மதிக்காதவர்கள் உண்டு. ஆதரவு என்று எங்கும் அதிகம் இல்லாத சிலர் தமது தகுதிகள் காரணமாக பெரிய பதவிகள் வகித்ததுமுண்டு. அதற்குச் சமமாக அல்லது அதற்கும் மேலாக தகுதி சிறிதும் இல்லாத பலர் வேறு சில காரணங்களால் நல்ல இடத்தில் அமர்த்தப் பட்டு நாற்காலியைத் தேய்த்ததும் உண்டு. சிலர் நாலு (நானூறு, நாலாயிரம் ?) காசு பார்த்ததும் உண்டு . பூர்வ ஜென்ம புண்ணியம் பற்றி நம்பிக்கை நமக்கு வரப் பலப்பல ஆச்சரியங்கள் அரசியல் சினிமா இரண்டிலுமே நிறைய இருக்கின்றனவே !
நெல்லைத் தமிழன்:
ஒருவரிடம் வாக்களிப்பதற்குக் காசு வாங்கிக்கொண்டு, அவருக்கு வாக்களிக்காமல் இருப்பது பாவம் அல்லவா? ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் காசு வாங்கிக்கொண்டால், அவர்கள் எல்லோர் சின்னத்திலும் ஒரு குத்து குத்தினால் பாவம் இல்லை என்பது என் அபிப்ராயம். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? (உடனே அந்தக் காசும் என்னுடைய காசுதானே என்று ஜல்லியடிக்கக்கூடாது. நாம் கட்டும் வரியில்தான் சாலையோ மேம்பாலமோ போடுகிறார்கள், அதில் என் பணமும் இருக்கிறது என்று இரண்டடிக்கு நாம் பள்ளம் தோண்ட முடியுமா? இல்லை செங்கல்லை உருவ முடியுமா?)
# காசு வாங்குவது தான் பாவம். அந்தப் பாவத்தை செய்தபின், சரியான கட்சிக்கு ஓட்டு போடுவதன் மூலம் ஒரு புண்ணியம் சம்பாதித்து, முந்தைய பாவத்தை கழுவப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் என் திடமான எண்ணம்.
& இப்போ எல்லாம் EVM ல ஒரு வோட்டுக்கு மேலே போட முடியாது. ஒன்று போட்டவுடனேயே லாக் ஆகிவிடும். நிற்க. நான் இதுவரை எந்த தேர்தலிலும் காசு வாங்கியது இல்லை.
சமீப தேர்தலின்போது, உதவிக்கு இருக்கும் பெண்மணி வோட்டுப் போட ஊருக்கு செல்லும் முன்பு, 'யாருக்கு வோட்டுப் போடுவீங்க' என்று கேட்டேன். 'விசிலுக்கு' என்றார். 'தி மு க / அ தி மு க பணம் கொடுத்தால்? ' என்று கேட்டேன். 'யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன். ஆனால் வோட்டு விசிலுக்கு ' என்றார். ஆனால், ஊருக்குப் போகும் முதல்நாள் கேட்கும்போது - எங்க ஊர்ல எப்பவும் ரெட்டலை (அ தி மு க)தான் ஜெயிக்கும், அதனால ரெட்டலைக்கு ஓட்டுப் போடுவேன் ' என்றார். அவர் சொன்னதுபோல இந்தத் தடவையும் அவங்க ஊர்ல ரெட்டலைதான் ஜெயித்தது!
சில நேரங்களில் அதீத விலை வைத்து இனிப்புகள் விற்பனை செய்வதைப் பார்த்து ரொம்பவே வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்களே என்று தோன்றுகிறது. உதாரணமா, நெல்லையில் மிக்சர் கிலோ 350, இனிப்புகள் அதே 350 என்று இருக்கும்போது, சென்னையில் 600, 800, 1200 என்றெல்லாம் விற்கிறார்களே. சில ஆந்திர இனிப்பகங்கள் கிலோ 1500 ரூ என்றும் விற்கிறாங்க. ஏன் நம்ம கிருஷ்ணா மைசூர்பா, 900 ரூ கிலோ என்று சொல்றாங்க. எப்படி இப்படி அதீத விலை வைத்து சம்பாதிக்கணும்னு நினைக்கறாங்க?
# நல்ல நெய் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தி செய்ய முடியுமானால் அதிக விலை நியாயப்படுத்தப்படுகிறது. அடக்க விலைக்கு மேலே நியாயமான லாபம் வைத்து விற்பதில் தவறில்லை. தரம் இருந்தால்தானே விலை போகும் ?
அதே கேள்விதான்... எண்ணெயிலும். நல்லெண்ணெய் 320 ரூ-350 ரூ-கும்பகோணத்தில், தேங்காய் எண்ணெய் 400 ரூ, ஆனால் சென்னை, பெங்களூரில் 500-700 ரூ என்று விற்கறாங்க. ஆர்கானிக் என்ற லேபிள் போட்டு ஏய்க்கிற மாதிரி, கோல்ட் ப்ரெஸ் என்று புதுசா ஏமாத்தக் கிளம்பியிருக்காங்க, டாடா கம்பெனி உட்பட. இதெல்லாம் நியாயமா?
# இந்த ஆர்கானிக் சமாச்சாரங்கள் என்பது, ஒன்று - பெரிய மோசடியாக இருக்க வேண்டும், இல்லை - வெகு நியாயமான விஷயமாக இருக்க வேண்டும். இதை சரி பார்ப்பதற்கு நம்மிடம் வசதிகள் இல்லை. உண்மையிலேயே ஆர்கானிக் தானா என்று ஒரு அரசு இலாகா உறுதி செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் அங்கும் ஊழல் குறுக்கிடுமே என்ற மிகப்பெரிய பயம் இருக்கிறது.
சமீபத்தில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற ஒருவர் (அவர் 20,000 ஜாதி மக்களோடு சென்றவர்), வழில அவங்களுக்கு வெஜ் மட்டன் பிரியாணி, வெஜ் மட்டன் குருமா, வெஜ் கோழி ஃப்ரை என்று பலவற்றையும் செய்து தந்தார்கள் என்று சந்தோஷமாகச் சொன்னார். நான் வெஜ் சாப்பிடணும் என்ற ஆசை இருந்தால் நான் வெஜ்ஜை சாப்பிட வேண்டியதுதானே. எதற்காக வெஜ் பெயரில் நான் வெஜ் ஐட்டங்களைச் சாப்பிடும் ஆர்வம் பலருக்கு வருகிறது?
# ஒரு தலத்திற்கு யாத்திரை போகிறவர்கள் ஏதோ பெரிய முனி புங்கவர்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பலனுக்காகப் போகிறவர்கள் நிறையவே உண்டு. அசைவ உணவு போலவே ருசிக்கிற சைவ உணவுகள் என்பதில் அசைவ விருப்பம் உள்ள மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது தானே. அவர்களை திருப்திப்படுத்த இது மாதிரி பெரிய யாத்திரை ஏற்பாடு செய்பவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.
சின்ன வயசுல வீட்டுல காசு திருடி மாட்டியிருக்கீங்களா? என்ன விதமான தண்டனை கொடுத்திருக்காங்க?
# கடைக்கு போய் சாமான் வாங்கி வரும்போது காலணா அரையணா சொந்த செலவு செய்வது வழக்கம். இரண்டொரு தடவை அம்மா கண்டுபிடித்தாலும் அதைப் பெரிது படுத்தவில்லை. "அப்பாவிடம் சொல்கிறேன்" என்று பயமுறுத்துவதுடன் சரி.
& கண்ணனுக்கும் கௌதமனுக்கும் பேதமில்லை தோழி. இவன் காசு திருடி மாட்டிய கதைகள் ஒரு கோடி ! ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல! தண்டனை என்று பார்த்தால் - சின்ன அண்ணன் செய்த கேலிகள் மட்டுமே!
தாய் தந்தை மறைந்த பிறகு, இன்னும் அவங்களை நல்லா பார்த்துக்கொண்டிருக்கலாம், இதை இதைச் செய்திருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?
# தோன்றாமல் இருக்குமா ? இயன்றவரை சரியாகத்தான் பார்த்துக் கொண்டேன். என்றாலும், அவ்வப்போது அவர்களுக்கு சிறு சிறு சந்தோஷங்களைக் கொடுத்திருக்கக் கூடிய பல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதில்லை என்று நினைத்து வருத்தப்படுவதுமுண்டு.
& எனக்குத் தோன்றியது இல்லை. ஆனால் என் மனைவி, என் அப்பா இறந்தபிறகு சில வருடங்கள் கழித்து, 'உங்க அப்பா உயிருடன் இருந்த சமயத்தில் இந்த ப்ரமோஷன் increment எல்லாம் வந்திருந்தால், அவர் ஆசைப் பட்டபடி எல்லாம் செய்து கொடுத்திருப்பேன். நமக்கு வசதி வரும்போது அவர் உயிருடன் இல்லையே என்று வருத்தமாக உள்ளது' என்றார்.
= = = = = = = = =
படமும் பதமும் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
கனடாவில் சென்ற வாரம் நடந்த ராதா கல்யாண மஹோத்ஸவத்தில் வைக்கப்பட்டிருந்த சீர் வரிசை.
video :
சீர் வரிசைகளை சுமந்து வந்த பெண்கள் வரிசை.
------- ---------
நெல்லைத்தமிழன் :
மே இறுதியில் காரைக்குடி சென்றிருந்தேன். அங்கு 100 ஆண்டு காலப் பழமையான நாட்டுக்கோட்டைச் செட்டியார் மாளிகையின் நூறாவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்குப் போயிருந்தோம். மாலை 5 மணிக்கு திருச்சி இரயில்நிலையத்துக்கு வந்துவிட்டோம். பெங்களூர் இரயில் 8 1/2 மணிக்குத்தான் வரும். மனைவியை ஏர்கண்டிஷன் தங்குமிடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு (அப்பா...தமிழகத்தில் என்னா வெயிலு) நான் வெளியே ஏதேனும் இனிப்புக் கடைகளுக்குச் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். இரயில் நிலையத்தின் வெளியே வந்ததும் நம் மூத்த பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு போன் செய்தேன். அவரைப் பார்க்க இயலும் என்று சொன்னதால், டக் என்று பேருந்தில் திருச்சி பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து கூகுள் மேப் துணையுடன் அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் அட்ரஸ், எத்தனையாவது சந்தில் திரும்பணும் என்றெல்லாம் எழுதியிருந்தாலும் நமக்கெல்லாம் கூகுளாண்டவரே துணை. பேருந்து பயணம் 35 நிமிடங்கள். நடை 15 நிமிடங்கள். அவருடைய வீட்டில் அரைமணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்க முடிந்தது. பேசுவதற்கு ரசனையான மனிதர் அவர். எத்தனையோ விஷயங்கள் இருந்தன. நேரக் குறைவு.
நானும் மனைவியும் ஒரு தடவை சென்றிருக்கிறோம். அவருடைய பேத்தி திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள். செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எனக்கு கோபு சார் ஆச்சார்யாரின் குரல் (Acharya's call) என்ற ஆங்கிலப் புத்தகம் இரண்டு தந்தார். நமக்குத்தான் காபி டீ இதெல்லாம் கிடையாதே. அவர்கள் வருத்தப்படக்கூடாதே என்று வெந்நீர் அருந்தினேன். கோபு சாரிடம் எத்தனையோ விஷயங்கள் பேசலாம். போனில் எப்போதாவது பேசுவேன். எளிமையான மனிதர். நான் அவரிடம் எப்போதும் சொல்லுவேன்..இணையத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கணும், நீங்களானா சோம்பேறித்தனத்தில் வாட்சப் உலகத்திலேயே இருக்கீங்களே என்று. என்னவோ.. அவர் பிளாக்கில் இயங்குவதை நிறுத்திவிட்டார்.= = = = = = = = = = =
KGG பக்கம் :
நான் எழுதிவரும் தொடர்கதை அடுத்த வாரம் தொடரும்.
== = = = = = =
என்னுடைய முதல் அண்ணனும் குடும்பத்தின் மூத்தவரும் ஆகிய திரு கே ஜி வெங்கடரமணி - தன்னுடைய 94 ஆம் வயதில், நேற்றிரவு காலமானார்.
நான் பிறந்த காலத்திலேயே சென்னையில் வேலை பார்க்க ஆரம்பித்தவர் அவர். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் மீது மிகவும் பாசம் வைத்திருந்தவர். எங்களுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் கண்டு சந்தோஷம் அடைந்தவர் அவர்.
சில மாதங்களாக இதயம் பலவீனம் அடைந்ததால் அடிக்கடி மருத்துவமனை சிகிட்சை பெற்று வந்தார்.
உயிர் பிரிகின்ற கடைசி நிமிடம் வரை, மருத்துவமனையில் தன்னுடைய மகள், மாப்பிள்ளை மற்றும் பேரன் பேத்தி எல்லோருடனும் பேசிக்கொண்டு சுய நினைவுடன் இருந்தார்.
அவருக்கு எங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் அஞ்சலி செலுத்துகிறோம்.
= = = = = = = = = = = = = = = =
கேஜிவி அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்.
பதிலளிநீக்குமிக நிதானமான வாழ்க்கை அமைந்தால்தான் இந்த மாதிரி கடைசி வரை நினைவும் ஓரளவு ஆரோக்கியமும் அமையும் என நினைக்கிறேன்.
ஆம். நன்றி.
நீக்குநாங்களும் சென்ற வாரத்தில் ராதா கிருஷ்ண கல்யாண கோத்சவத்தில்்கலந்துகொண்டோம். அது என்ன முடிந்த பெண்கள் மாத்திரம் இனிப்பு (பதினோரு துண்டங்கள்) எடுத்துவரச் சொல்லியிருக்கிறீர்கள்? ஆண்களுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை எனக் கேட்டு நானும் செய்து எடுத்துக்கொண்டு போயிருந்தேன்.
பதிலளிநீக்குஅது சரி... எல்லோரும் அவர்களே செய்துகொண்டு வந்திருந்தார்களா இல்லை கடையில் வாங்கியிருப்பார்களா?
தெரியவில்லை.
நீக்கு//எல்லோரும் திட்டினால் அவன் நல்லவன்//- கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கருணாநிதி பேரை எழுதியிருப்பாரோ என பயத்துடனே படித்தேன்.
பதிலளிநீக்குஎந்த ஒரு புகழ் பெற்ற மனிதர், வெற்றித் திரைப்படம் போன்றவற்றிர்க்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ரொம்ப நல்லவன் என்று ஒருவனை எல்லோருமே, குறிப்பாக உயிரோடு இருந்தபோது சொல்வதே இல்லை.
இன்றைக்கு யோசிக்கும்போது காமராஜர் மேல் குற்றம் சொல்பவர்களே அனேகமாக இல்லை. பாராட்டுபவர்களே உண்டு. ஆனால் அவரையும் தேர்தலில் அவங்க சமூகத்தைச் சேர்ந்தவங்களே தோற்கடித்து நாட்டுக்கு நல்லது செய்த புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டார்கள். அதனால் தமிழகம் எவ்வளவு மோசமான நிலைக்கு (அரசியல்) சென்றது என நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆம்.
நீக்குமூத்தவர் கே.ஜி. வி. அவர்களின் மறைவு..... எங்களது அஞ்சலி..... அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்...
பதிலளிநீக்குநல்லவர் - சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை. காய்த்த மரம் கல்லடி படும்.....
கேள்விகளும் பதில்களும் நன்று.
நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமூத்த அண்ணன் கே. ஜி. வி. அவர்களின் மறைவு வருத்தம் தரும் செய்தி. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருக்கும், அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான அனுதாபங்கள்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.