நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 27
இராமானுஜர் காஞ்சியில், கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் சில சிஷ்யர்களுடன் கூடி இருந்தார்.
இதற்கிடையில், வைணவ தரிசனத்தின் தலைவரான ஆளவந்தார் பரம பதித்த பிறகு, வேறு யாரும் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ளவில்லையே, ஆளவந்தார் மனதில் இருந்த இராமானுஜர் இப்போது சன்னியாசியாகி காஞ்சீபுரத்தில் இருக்கிறாரே, அவர் வந்து அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டுமே என்று எண்ணிய ஆளவந்தாரின் சிஷ்யர்கள் மற்றும் பெரியோர்கள், திருவரங்கம் கோயிலில் நம்பெருமாளைப் பிரார்த்தித்துக்கொண்டனர். (நம்பெருமாள் என்பது இப்போதைய உற்சவரின் பெயர். இராமானுஜர் காலத்தில் உற்சவரின் பெயர் அழகிய மணவாளன் என்பதே. இருந்தாலும் நமக்குக் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பெருமாள் என்றே நான் உபயோகிக்கிறேன். நம்பெருமாள் பெயர்க் காரணம் பின்னால் – பலப் பல வாரங்கள் கழித்து வரும்)
திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சீபுரத்திற்கு அனுப்பி, இராமானுசரை திருவரங்கத்துக்கு அழைத்துக்கொள்வோம் என்று முடிவெடுத்தனர். திருவரங்கப் பெருமாள் அரையரும் பெரியோர்களின் விண்ணப்பத்தைக் கேட்டு, உடனே நம்பெருமாளைச் சேவித்துவிட்டு காஞ்சீபுரம் நோக்கிக் கிளம்பினார்.
காஞ்சீபுரத்துக்கு அவர் வருவதை அறிந்து ‘வரம் தரும் பெருமாள் அரையர்’, திருவரங்கப் பெருமாள் அரையரை எதிர்கொண்டு அழைத்து, தம்முடைய திருமாளிகைக்கு அழைத்துக்கொண்டுபோய் உணவிட்டு, ஓய்வெடுக்கச் சொன்னார். மறுநாள், பேரருளாளர், கச்சிக்கு வாய்த்தான் திருமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது (உற்சவர்), திருக்கச்சி நம்பி ஆலவட்டக் கைங்கர்யம் செய்துகொண்டிருக்க, இன்னொரு புறத்தில் இராமானுஜரும் முக்கோல் ஏந்திய திருக்கையுடன், திருக்கச்சி நம்பி இயற்றிய ‘வரதராஜ அஷ்டகத்தை’ச் சேவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது திருவரங்கப் பெருமாள் அரையர் காஞ்சீபுரத்துக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து திருக்கச்சி நம்பி அவர் தங்கியிருந்த இடத்துக்குப் போய் வணங்கி, பேரருளாளனைச் சேவிக்க கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு சென்றார். அப்போது அங்கு இராமானுஜரும் மற்றையவர்களும் இருந்தனர். அரையரும் வரதராஜனைச் சேவித்து, ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னத்தை அநுஸந்திக்க, அவருக்கு கோயில் மரியாதைகளைச் செய்தனர்.
பிறகு திவ்யப் பிரபந்தங்களை பண்ணுடன் தேவகானத்தில் பாடினார். பேரருளாளனும் உவப்புடன் இருக்க, அரையருக்கு திருப்பரிவட்டம் மாலை போன்றவற்றைத் திரும்பவும் அளித்தனர். அரையர் தொடர்ந்து பாடவும், பேரருளாளன் அர்ச்சகர் முகமாக, என்ன வேண்டும்? எதை வேண்டுமானாலும் நம்மிடம் பெறலாம் என்று மகிழ்ந்து சொல்ல, அங்கு இருந்த இராமானுஜரைக் காட்டி, இவரை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு பேரருளாளன், இராமானுஜரைத் தவிர வேறு எது கேட்டாலும் தருகிறோம் என்று சொல்ல, முதலில் எது வேண்டுமானாலும் தருகிறோம் என்று சொல்லிவிட்டுப் பேச்சு மாறலாமா என திருவரங்கப் பெருமாள் அரையர் கேட்டார். பேரருளாளரும், இராமானுஜரைத் தந்தோம் என்று சொன்னார்.
அது கண்டு மகிழ்ந்து, திருவரங்கப் பெருமாள் அரையர், இராமானுஜரின் கையைப் பிடித்து, திருவரங்கத்துக்கு எழுந்தருளவேண்டும் என்று சொன்னார். இராமானுஜரைப் பிரிய நேர்ந்தது பேரருளாளனுக்கு மிகுந்த வருத்தம் என்று இராமானுஜ திவ்ய சரிதையை எழுதிய பிள்ளைலோகம் ஜீயர் கூறுகிறார். இந்தப் பிள்ளை லோகம் ஜீயர் என்பவர் ஸ்வாமி மணவாள மாமுனியின் எட்டு முக்கிய சீடர்களில் ஒருவரான பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் கொள்ளுப் பேரர், கிபி 1540-1620க்குள் வாழ்ந்தவர். அவர், பேரருளாளன் அடைந்த துயரமாக ஒரு பாடலையும், இராமானுஜர் காஞ்சீபுரத்தைவிட்டுப் புறப்பட்டுப் போவதை ஒரு பாடலாகவும் எழுதியிருக்கிறார் (அந்தச் சரிதத்தில்). அந்த இரண்டு பாடலின் சுவை கருதி இங்கு தருகிறேன்.
சந்ததியில்லா மனைமகள் போலே தடமுலையில்லா மடமகள் போலே
செந்தழலில்லா ஆகுதிபோலே தேசிகனில்லா ஓதுகைபோலே
சந்திரனில்லாத் தாரகைபோலே இந்திரனில்லா உலகம் போலே
எங்கள் இராமானுசமுனி போனால் இப்புவிதான் எப்படியாமோ
பொருள்: பிள்ளைச்செல்வம் இல்லா இல்லத்தரசி போலவும், மார்பகம் இல்லா இளம்பெண் போலவும், நெருப்பு இல்லாத வேள்வி போலவும், குரு இல்லாத கல்வி போலவும், சந்திரன் இல்லாத நட்சத்திரக் கூட்டம் போலவும், தலைவன் இல்லாத நாடு போலவும், எங்கள் இராமானுஜ முனி இல்லாவிட்டால் இந்த இடம்தான் பொலிவிழந்து போய்விடுமே.
இப்படி பேரருளாளன் எண்ணி, இராமானுஜனைத் தனியே அழைத்து விடைகொடுத்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இராமானுஜர், பேரருளாளனின் விருப்பத்தையும் அறிந்து, அரையருடன் திருவரங்கம் கிளம்பத் தயாரானார். கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் அழைத்து, மடத்துக்குச் சென்று கோயிலாழ்வாரைக் கொண்டு வருக, நாம் செல்லலாம் என்று சொன்னார். அவர்களும் அப்படியே இராமானுஜரின் திருவாராதனப் பெருமாளான பேரருளாளரை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்து சேர்ந்தனர். திருக்கச்சி நம்பியும் அவர்கள் எல்லோரையும் திருவரங்கத்துக்கு வழியனுப்பி வைத்தார்.
இத்தனை காலம் தான் வாழ்ந்த காஞ்சீபுரத்தை விட்டுவிட்டு இராமானுஜர் வாழ்வு திருவரங்கத்தில் தொடரப் போகிறது. இராமானுஜனுக்கு அவர் மனதில் அந்த நிகழ்வு ஏற்படுத்திய எண்ணத்தை கவிதை வடிவில் பிள்ளைலோகம் ஜீயர் கூறுவதைக் காண்போமா?
திக்குநோக்கித் திரும்பித்திரும்பியே தேவராசர்தம் கோயிலை நோக்கியே
செக்கர்மேனிமிகப் பெருங்கைகளால் சோர்ந்த கண்கள் பனிநீர் தெறித்திட
மிக்க கோயில் பெருவழிதன்னிலே வேதநல்ல மறையோர்கள் தம்முடன்
புக்ககத்துக்குப் போகிற பெண்கள் போல் போயினார் பெரும்பூதூர் முனிவனார்
பொருள்: இறைவனின் சன்னிதி இருக்கும் திசையை நோக்கி மீண்டும் மீண்டும் திரும்பித் திரும்பிப் பார்த்து, தேவர்களுக்கெல்லாம் தலைவனான அந்த தேவப் பெருமாளின் திருக்கோயிலையே உற்று நோக்கி, சிவந்த மேனியை உடைய இறைவனின் நீண்ட கரங்களின் அருளை நினைத்து, அவர் கண்கள் சோர்ந்து போகும் அளவிற்கு பக்திப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் சிந்த, திருவரங்கம் செல்லும் பாதையில், வேதங்கள் முற்றுணர்ந்த வேதிகளுடன், புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்கள் போலச் சென்றார், பெரும்பூதூரில் அவதரித்த இராமானுஜர்.
விளக்கம்: திருமணமாகி, முதன் முதலாக தன் கணவர் வீட்டிற்குச் செல்லும் பெண்கள், நாணத்துடனும், மகிழ்ச்சியுடனும், எழிலுடனும் செல்வார்களே அதுபோன்று இராமானுஜர், தன் பிறந்தகமான காஞ்சீபுரத்தை விட்டுவிட்டு, புக்ககமான திருவரங்கம் நோக்கிச் சென்றார். காஞ்சீபுரத்தை விட்டுச் செல்லும்போது பேரருளாளப் பெருமாள் நினைவுக்கு வர அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
இனி நாம் இராமானுஜரின் திருவரங்க வாழ்க்கையைப் பார்க்கப் போகிறோம்.
(கோயிலாழ்வார் என்பதற்கு அர்த்தம், தினமும் திருவாராதனம் செய்யும் பெருமாள். ஆச்சார்யர்கள், பெரியோர்கள், தங்களுக்கென்று திருவாராதனப் பெருமாளாக விக்ரஹத்தை, அது அரை அடி உயரம் வரை இருக்கலாம், வைத்திருப்பர். தனி விக்ரஹமோ இல்லை, தாயாருடன் சேர்ந்த விக்ரஹமாகவோ இருக்கும். மற்றபடி பெரும்பாலான வைணவர்கள், விக்ரஹ ஆராதனையில் நியமம் உண்டு என்பதால், விக்ரஹத்திற்குப் பதிலாக, சாளக்கிராமங்களை பெருமாளாக எண்ணி திருவாராதனை செய்வார்கள். இதனையே கோயிலாழ்வார் எனச் சொல்லுவர். பல ச்ரேஷ்டமான வைணவர்கள், தாங்கள் வெளியூர்களுக்குச் செல்லும்போது கோயிலாழ்வாரையும்கொண்டு செல்வர். இது பற்றி எழுத ஆரம்பித்தால் கதை வேறு எங்கோ சென்றுவிடும்.)
இன்றைக்கு திருவாராதனப் பெருமாள் என்ற வார்த்தையை உபயோகித்ததால், அது தொடர்பான ஒரு பாசுரத்தை எழுத நினைக்கிறேன்.
திருவாய்மொழி முதல் பத்தில், நான்காம் பதிகம் ‘அஞ்சிறைய மடநாராய்’ என்று துவங்கும். அதில் எட்டாவது பாசுரம் ‘நீயலையே’ என்று துவங்கும் பாசுரம். இந்த திருவாய்மொழியில், ஆழ்வார், நாயகி பாவம் கொண்டு, நாயகனான கண்ணனின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாமல், ஒவ்வொரு பறவையாகப் பார்த்து, அந்த எம்பெருமானுக்குத் தூது விடுவதாக இந்தப் பதிகம். நாரை, குயில்கள், அன்னம், சக்ரவாகப் பறவை, குருகு என்று ஒவ்வொன்றையும் தூது அனுப்புவதாகப் பாசுரம். நான் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பாசுரத்தை மாத்திரம் எடுத்துக்கொள்கிறேனே, தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லையே என்று நினைக்க வேண்டாம். ஆச்சார்யார்களின் வரலார்றைச் சொல்லும் பகுதிகள் என்பதால், அந்த அந்தப் பகுதிக்கு எது சரியாக வருமோ அந்தப் பாசுரத்தை எடுத்துக்கொள்கிறேன். இந்த வரலாறெல்லாம் முடியும்போது மற்ற பாசுரங்களின் அர்த்த விசேஷங்களையும் காணப்போகிறோம்.
நீயலையே? சிறுபூவாய்!* நெடுமாலார்க்கு என்தூதாய்*
நோயெனது நுவலென்ன,* நுவலாதே இருந்து ஒழிந்தாய்*
சாயலொடு மணிமாமை* தளர்ந்தேன் நான்* இனி உனது
வாயலகில் இன்னடிசில்* வைப்பாரை நாடாயே
பொருள்: சிறிய மைனாவே… நீ என்னுடன் பழகியவள் அல்லவா? என்னுடைய பிரிவாற்றாமை என்ற நோயைப் பற்றி திருமாலுக்கு தூதாகச் சென்று அவரிடம் சொல் என்று சொல்லியிருந்தும் நீ அவரிடம் போய்ச் சொல்லாமல் இருந்துவிட்டாய். அதனால் என்னுடைய மென்மையும், நீல நிறமாக ஒளிரும் நிறமும் தளர்ந்து நான் வாடிப்போய் இருக்கிறேன். இனி, நான் உனக்கு உணவளிப்பேன் என்று நினைத்து என்னிடம் வாராதே. உன்னுடைய அலகில் உணவை வைக்க வேறு யாரையாவது தேடிச் செல்.
விளக்கம்: நோய் எனது – என்னுடைய பசலை நோய், நுவல்-சொல், சிறு பூவாய்-சிறிய மைனாவே, சாயல்-என்னுடைய மென்மை, மணிமாமை- நீல மணி போன்ற நிறம், இன்னடிசில்-இனிய உணவு. செல்லப் பறவையான மைனா, தனக்கு உதவி செய்யவில்லை, தலைவனிடத்தில் தூது சென்று தன் நிலையைத் தெரிவிக்கவில்லை என்பதால் கோபம் கொண்டு, இனி உனக்கு நான் உணவு தரப்போவதில்லை, வேறு எங்காவது சென்றுவிடு என்று சொல்கிறாள்.
பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்ட ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் அதில் ஒரு அங்கமாக தினசரி திருவாராதனை செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இதன் காரணம், பெருமாள் கண்டருளாத உணவை சாப்பிடக்கூடாது என்பது. அதனால்தான் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என்று திருவாராதனப் பெருமாளை வைத்துக்கொண்டு, ஆராதனை செய்து, உணவைக் கண்டருளிய பிறகு சாப்பிடுவர்கள்.
இராமானுஜரின் தாய் மாமாவான பெரிய திருமலை நம்பி (இவர் இராமானுஜரின் ஆச்சார்யர்களில் ஒருவர். அவருக்கு இராமாயண ரகசியங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தவர். இராமானுஜர் வரலாற்றில் வரும்), ‘வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை’ என்ற கிருஷ்ண விக்ரஹத்தை ஆராதித்து வந்தார். அவர் அந்திம தசை அடைந்தபோது (மிக வயதாகி உடல் தளர்ந்தபோது), தன்னுடைய பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய இயலாமை குறித்து வருந்தி, தன்னுடைய கோயிலாழ்வார் சன்னிதி திரையைத் திறக்கச் செய்து, விக்ரஹத்தைப் பார்த்து இந்தப் பாசுரத்தைச் சேவித்தாராம். இனி உனக்கு திருவாராதனம் செய்யக் கூடியவரை நீ தேடிக்கொள் என்ற அர்த்தத்தில், ‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், இனி உனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே’ என்று அருளிச் செய்தாராம். ஆச்சார்யார்கள் பெருமாளிடம் பக்தியும், தங்கள் எண்ணம் மூச்சு செயல் எல்லாவற்றிலும் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களையே எண்ணிக்கொண்டிருந்தார்கள் என்பதற்கான நடந்த நிகழ்வு இது.
அத்திவரதர் தற்போது துயில் கொள்ளும், இராமானுஜர் காலத்தில் இராமானுஜர் தன் அனுஷ்டானங்களுக்கு உபயோகித்த அனந்த சரஸ் பொய்கை
வரம் தரும் பெருந்தேவித் தாயார், பேரருளாளன்.
காஞ்சீபுரம் பெருந்தேவித் தாயார், வரதராஜர் – உற்சவ மூர்த்தி
அடுத்த வாரம் தொடரலாமா?...
======================================================================================
நான் படிச்ச கதை - பானுமதி வெங்கடேஸ்வரன்
டைவர்ஸ் - பி.வி.ஆர்
பி.வி.ஆர். அவர்களால் எழுதப்பட்டு 1975. ஆம் ஆண்டு குமுதத்தில் தொடர்கதையாக வெளிவந்த 'டைவர்ஸ்' என்னும் நாவல் சிறுகதைகள்.காம் என்னும் தளத்தில் படிக்க கிடைக்கிறது.
பி.வி.ஆர். என்ற பெயரில் கதைகள் எழுதிய பி.வி.ராமகிருஷ்ணன் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்தாலும் கல்வி கற்றது வேலை பார்த்தது எல்லாமே சென்னையில்தான். ஏ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கல்கி, அமுதசுரபி, கலைமகள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற எல்லா பிரபல இதழ்களிலும் கதைகள் எழுதி பரிசுகளும் வாங்கியிருக்கிறார். இவருடைய கதைகள் எல்லாமே குடும்பச் சூழலை பின்ணனியாகக் கொண்டவை.
ஆங்கில எழுத்தாளர் ஆர்தர் ஹெய்லியைப் போல பி.வி.ஆரும் ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாக வைத்து, அங்கு உலாவும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கி கதையை நகர்த்தும் உத்தியைத் தனது பல நாவல்களில் கையாண்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பின்னணியாகக் கொண்டு பி.வி. ஆர். எழுதிய 'சென்ட்ரல்' நாவல், கல்கியில் வெளியாகி வாசக வரவேற்பைப் பெற்றது. சென்னை உயர்நீதிமன்றப் பின்னணியில் பி.வி.ஆர். எழுதிய நாவல் 'மிலாட்'. 'ஜி.ஹெச்.' சென்னை அரசுப் பொது மருத்துவமனையை மையமாக வைத்து எழுதப்பட்டது. 'கிண்டி ஹோல்டான்', கிண்டி குதிரைப் பந்தயத்தைப் பின்னணியாகக் கொண்டது. 'கூந்தலிலே ஒருமலர்' பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டைப் பின்னணியாகக் கொண்டது.
தன்னுடைய படைப்புகள் பற்றி பி.வி.ஆர்., "என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் சம்பவங்கள் நிறையவோ, பெரிதாகவோ இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்குத் தோன்றவில்லை. நான் முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவனுள்ள உரையாடல்களுக்கும், மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகளுக்கும் தான். உரையாடல்களின் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கூறுவது தான் சிறந்த முறை என்று கருதுகிறேன்". என்று குறிப்பிடுகிறார்.
டைவர்ஸ்
சிவராமன் என்னும் பெரிய தொழிலதிபர் தன்னுடைய வக்கீலுக்குப் படித்த ஒரே மகளான வசுதாவை, ஏழ்மை நிலையிலிருந்து தன்னுடைய முயற்சியால் மட்டும் முன்னேறிக் கொண்டிருக்கும் கோபிக்கு திருமணம் செய்து தருகிறார். இருவரும் தேனிலவுக்கு ஊட்டிக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து முதுமலைக்குச் சென்று யானை மீது சவாரி செய்து வனத்தை பார்வையிட வேண்டும் என்று வசு விரும்புகிறாள். அந்த நேரத்தில் கோபிக்கு அசிஸ்டெண்ட் மேனேஜராக பதவி உயர்வு அளித்த அவன் பணியாற்றும் நிறுவனம் அவனை உடனே சார்ஜ் எடுத்துக் கொள்ள கோருகிறது. அதனால் கோபி தேனிலவை பாதியில் முடித்துக் கொண்டு சென்னை திரும்ப விரும்புகிறான்.
வசுவோ எப்படியிருந்தாலும் "நீங்கள் இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு என் அப்பாவின் கம்பெனியில் இதை விட உயர்ந்த பதவியில் சேரத்தானே போகிறீர்கள்?" என்று கேட்க, எட்டு வருடங்களாக என்னை போஷித்த கம்பெனிக்கு நான் விசுவாசமாக இருக்க வேண்டும்" (இதை இந்தக் கால இளைய தலைமுறை வாட்! எட்டு வருடங்கள் ஒரே கம்பெனியிலா?! என்று கேட்பார்கள்) என்று கோபி கூறி தனியாக சென்னைக்குத் திரும்ப, வசு பொள்ளாச்சியிலிருக்கும் தன் சினேகிதியை பார்க்கச் செல்கிறாள். அப்பொழுதே முதல் விரிசல் தொடங்கி விடுகிறது.
தாங்கள் குடியிருக்க ஒரு சின்ன போர்ஷனை மேற்கு மாம்பலத்தில் வாடகைக்கு எடுக்கிறான் கோபி. அரண்மனை போன்ற பெரிய வீட்டில் இருந்த வசுவுக்கு இந்த மாம்பலம் வீடு எலிப்பொந்தாகத் தோன்றுகிறது. தங்கள் வீட்டிற்கு அவனை அழைக்க, கோபி மறுத்து விடுகிறான். இதை அடுத்து நடக்கும் வேறு சில விஷயங்களும் அவர்களுக்குள் பிளவை பெரிதாக்குகிறது. கோபிக்கு அடி மனதில் வசு மீது பாசம் இருக்கிறது, வசுவும் அவன் பிரிவை உணர்ந்தாலும், பிடிவாதத்தால் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறாள்.
வசு-கோபி கதைக்கு இணையாக வசுவின் பெற்றோர்களின் கதையும் வருகிறது. தன் பெற்றோரை ஆதர்ச தம்பதிகள் என்று கருதுகிறாள் வசு. தினசரி அம்மா பூஜை முடித்தவுடன் தரும் பால், பிரசாதம் இவைகளை பக்தியோடு வாங்கிக் கொள்ளும் சிவராமனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு திருமணத்திற்கு முன்னாலிலிருந்தே இருக்கிறது. அது தெரிந்ததும் வசுவின் தாய் ராஜலட்சுமி "நாம் இருவரும் இனிமேல் பேருக்கு, ஊராருக்கு முன் நாம் கணவன், மனைவி, நமக்குள் எந்த உறவும் கிடையாது" என்று கூறி விடுகிறாள்.
வசுவின் தோழியின் கணவனும், கோபியின் சக ஊழியனுமாகிய ஒருவனுக்கு விபத்து நேரிட அவனைப் பார்க்க வந்த வசுவும், கோபியும் ஒரு இரவு சேர்ந்திருக்க நேரிடுகிறது. அன்று அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம் அவர்கள் பிணக்கை தீர்த்து விடுகிறது. தன்னுடைய பெற்றோர்களுக்கு திருமணமாகி இருபத்தைந்தாவது வருடத்தை சிறப்பாக கொண்டாட வசு விரும்புகிறாள், அதற்கு கோபி முழுமையாக ஒத்துழைக்க, வெள்ளிவிழா கொண்டாட்ட ஏற்பாடுகள் விமரிசையாக செய்யப்படுகின்றன.
தங்களின் திருமண வெள்ளி விழாவிற்கு தன் துணைவியையும் அழைப்பேன் என்று பிடிவாதமாக சிவராமன் கூறி அப்படியே செய்ய, அவளுக்கு வேண்டுமென்றே ஒரு மூலையில் உட்கார இடம் ஏற்பாடு செய்கிறாள் ராஜலட்சுமி. அதனால் கோபமடைந்த சிவராமன் ரிசப்ஷன் முடிந்த கையோடு அமிர்தம்மாவை பார்க்க அவள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்கிறார். அவள் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் தான் குறுக்கிட்டது தவறு என்பதை தான் உணர்ந்து விட்டதாகக் கூறி பிரிந்து சென்று விடுகிறாள். (டைவர்ஸ் என்னும் டைட்டிலை ஜஸ்டிஃபை செய்தாகி விட்டது).
முன்பு எலிப்பொந்து என்று கேலி செய்த வீட்டிற்கே சென்று கோபியோடு குடித்தனம் செய்கிறாள் வசு. அவர்களுக்கு நிறைய சண்டை வருகிறது, ஆனாலும் அடிநாதமாக காதல் இழையோடுவதால் பிரியாமல் சந்தோஷமாகவே வாழ்கிறார்கள் என்று கதையை முடித்திருக்கிறார் பி.வி.ஆர்.
கதை பெரும்பாலும் உரையாடல்களாகவே நகர்கிறது, பி.வி.ஆருக்கே உரிய இயல்பான, நகைச்சுவை மிளிரும் உரையாடல்கள். குமுதத்தில் தொடராக வந்த பொழுது படித்திருக்கிறேன். சிறுகதைகள்.காமில் கிடைத்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். தொய்வில்லாத சுவாரஸ்யமான நடை.
இந்தக் கதையில் பெரிய தொழிலதிபரான சிவராமன் தங்கள் அந்தஸ்திற்கு சற்றும் பொருந்தாத வரனுக்கு தன் ஒரே மகளை மணம் செய்து கொடுப்பாரா என்ற சந்தேகம் எனக்கு வரவில்லை. ஏனென்றால் ஒரு பையன் முன்னுக்கு வரக்கூடியவன் என்ற நம்பிக்கை இருந்தால் அந்தஸ்து பார்க்காமல் தன் மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுப்பவர்கள் உண்டு. ஆனால் தன் நண்பனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணோடு தொடர்பு உண்டு என்று தெரிந்த பிறகும் அவனுக்கே தன் தங்கையை எவனாவது திருமணம் செய்து கொடுப்பானா? ஆரம்ப காலத்தில் சிவராமனின் தொழில் பார்ட்னராக இருந்த ராஜலட்சுமியின் சகோதரர் அதைச் செய்கிறார்.
மேலும் அமிர்தம்மா சிவராமனை விட்டுப் பிரிந்ததற்கு சொல்லப்படும் காரணம் வலுவாக இல்லை. இந்த சின்ன குறைகளை பொருட்படுத்தா விட்டால் ரசிக்கக்கூடிய கதைதான்.

அழகிய மணவாளன்! என்ன ஒரு அழகான பெயர்! இல்லையா நெல்லை?
பதிலளிநீக்குஉண்மையில் என் மனதில் பதிந்த பெயர். நம்பெருமாள் காரணம் நான் அறிந்ததும் நீங்கள் சொல்ல இருப்பதும் ஒன்றுதானா என்பதை நீங்க சொல்லும் போது பார்க்க வேண்டும்.
கீதா
இஸ்லாமிய படையெடுப்பின் போது...நடந்த நிகழ்வு பின்னர்....அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற பெயரைப் பற்ற நிகழ்வு...
நீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. மணவாளன் என்ற பெயர் நெல்லையில் பலருக்கு உண்டு. நம்பெருமாள் என்பது நம்முடைய என்று சொந்தம் கொண்டாடும் விதத்தில் அழகுற அமைந்திருக்கிறது அல்லவா?
நீக்குகலாபக் கால நிகழ்வுகள் சுருக்கமாகப் பின்னர் வரும்
நீக்குஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் உற்சவர் இன்றும் அழகிய மணவாளர் என்றே அழைக்கப்படுகிறார். கொஞ்சம் இப்போதுள்ள நம்பெருமால் விக்ரஹத்தை ஒத்திருந்தாலும் சிரிப்பு, பார்வை, உடல் அமைப்பு, முக சௌந்தரியம் ஆகியவற்றில் சின்னச் சின்ன மாறுதல்கள் தெரியும். அதிலும் அந்தக் கடை இதழ்கள் சிரிக்கும் சிரிப்பு, நம்பெருமாளுக்கே சொந்தமானது.
நீக்குஆமாம் கீசா மேடம்... நம்பெருமாள் விக்ரஹம் தனித்துவம் வாய்ந்தது.
நீக்குநம் பெருமாள் என்று சொல்வது மனதிற்கு மிகவும் நெருக்கமாக அன்போடு வாத்ஸல்யத்தோடு சொல்வது. நம்ம நெருங்கிய உறவினரை நினைக்கும் போதோ பார்க்கும் போதோ ஹேய் நம்ம என்று சொல்லிப் பூரிப்பது போல...அமைந்த பெயர். அத்தனை உணர்வுபூர்வமாக இருந்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குகீதா
உண்மைதான். உணர்வுபூர்வமானதும்கூட
நீக்குஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்கு வந்தது உணர்வுபூர்வமான, அந்த உரையாடல் எல்லாம் ரசிக்கும்படியான நிகழ்வு என்றாலும் கூடவே என் மனதில் தோன்றும்...பேரருளாளனும், நம்பெருமாளும் ஒன்றுதானே, ஒருவர்தானே என்று...
பதிலளிநீக்குகீதா
ஆம். அனைத்தும் ஒரே இறை சக்தி. இருந்தாலும் அவரவர்கள் ஊர் விட்டுப்போய்விடக் கூடாது இல்லையா?
நீக்கு/என்றாலும் கூடவே என் மனதில் தோன்றும்...பேரருளாளனும், நம்பெருமாளும் ஒன்றுதானே, ஒருவர்தானே என்று.../
நீக்குஆம்.சகோதரி படித்து வரும் போது நானும் அப்படித்தான் நினைத்தேன். அதற்கு நெல்லைத் தமிழர் சகோதரரின் பதில் சிறப்பு.
இருப்பினும் அப்போதெல்லாம் தன் அடியவர்களுக்காக இறைவனே உடனே வந்து பேசியிருக்கும் சம்பவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. நமக்கே நமக்கறியாமல் இறைவன் வந்து நம்மருகில் நிற்பதை சில சமயங்களில் பிறகு உணர்கிறோம். இதுதான் தெய்வ சங்கல்பம் என்பதை பிறகு தெரிந்த பின் மனமுருகியும் போகிறோம். ஓம் நமோ நாராயணா எனும் நாமத்தின் பலன் அது என புரிந்தும் கொள்கிறோம். 🙏. நன்றி.
நம் எல்லோருக்குமே இறைவன் தனிப்பட்ட முறையில் தன் கருணையைக் காண்பித்த அனுபவம் இருக்கும் கமலா ஹரிஹரன் மேடம்
நீக்குஅப்பாடலை வாசித்ததுமே புரிகிறது பொருள். பரவால்ல நம்ம தமிழ் அந்த அளவு மோசமாகவில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்!!! அழகான பாடல் இல்லையா! ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
நெல்லைக்காரர்களுக்கு தமிழறிவு பற்றிக் கேட்பானேன்.
நீக்குஅநியாயமா இருக்கே. மதுரைக்கு அப்புறமாத் தான் மத்த ஊரெல்லாம். நெல்லைத் தமிழெல்லாம் பேசும் பாணியில் தான். மத்தபடி நல்ல தமிழ்னா மதுரைக்கு அப்புறம் தான்.
நீக்குபோனாப் போகுது. குழந்தை அழுதுவிடக் கூடாது. பாண்டிய நாட்டுத் தமிழ்தான் உசத்தி
நீக்குமுன்பு படித்தேன். உலகில் தமிழ் அழகாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில். இரண்டாவது நெல்லையில் என்று
நம்ம வீட்டுப் பாட்டிகள், அப்புறம் ஆராதனம் செய்யும் பெரியவங்க, கோயிலாழ்வார் என்றே சொல்வாங்க...சிறுவயது முதல் கேட்டுப் பழக்கம்.
பதிலளிநீக்குகீதா
கோயிலாழ்வாருக்கு அவ்வளவு முக்கியத்துவம். எல்லாம் ஒரே இறைசக்தி எனப் புரியவைக்கிறார்கள்
நீக்குநீயலையே? சிறுபூவாய்//
பதிலளிநீக்குரொம்ப அழகான பாசுரம்.
விளக்கமும் நன்று.
கீதா
நன்றி கீதா ரங்கன்
நீக்குபடங்கள் ரொம்ப நல்லாருக்கு, நெல்லை
பதிலளிநீக்குகீதா
நன்றி. பொதுவா நான் ரசிக்கும், ரசித்த படங்களைப் பகிர்கிறேன்
நீக்குடைவெர்ஸ் கதையை வாசித்திருக்கிறேன், பானுக்கா.
பதிலளிநீக்குநல்ல கதை. தொய்வில்லாமல் பயணிக்கும் கதை எழுத்துநடை. நீங்க சொல்லிருப்பது போல் உரையாடல்களிலேயே நகர்த்துகிறார்.
ராஜலக்ஷ்மி மற்றும் அமிர்தம்மா நல்ல characterization அவர்களின் குணங்களைக் கோடிட்டுக் காட்டுவதிலேயே தெரிந்துவிடும்.
ராஜலக்ஷ்மிக்குத் தன் கணவரின் மற்றொரு வாழ்க்கை தெரிய வரும் போது மனம் கொதித்துப் போயிருக்கும்....ஆனாலும் வீட்டிற்குள்ளிருந்தே தன் போராட்டத்தை அமைதியாகக் காட்டி அதுவும் ஒரு டைவேர்ஸ்தானே!! வெளியில் தெரியாவிட்டாலும்...ஆனாலும் ரொம்பக் கஷ்டமான மன நிலைதான். அத்தலைமுறைக்கான மன நிலை. மன உறுதி கொண்ட பெண்மணியான பாத்திரப்படைப்பு. அக்காலத்துக்குப் பொருந்தும்.
அக்கா நீங்க சொல்லியிருப்பதும் எனக்குத் தோன்றியது. சகோதரன் நண்பருக்கு வேறொரு பெண்ணின் மீது ஈர்ப்பிருக்கிறது என்று தெரிந்து தன் தங்கையைத் திருமணம் செய்து கொடுப்பது என்பது....அதுவும் ஏமாற்றி....அது சரி அதெப்படி சிவராமன் அதற்குச் சம்மதிக்கிறார் என்றும் கேள்வி எழுந்தது. அங்கு வலுவாக இல்லையோ?
ஆனால் அமிர்தம்மா டக்கென்று பிரிகிறாளே அதெப்படி சாத்தியம் அங்கு ஏதோ ஒன்று....அதுவரை உங்க ராஜலக்ஷ்மி என்று சற்று மன வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்த அமிர்தா, ஒரு வேளை ராஜலக்ஷ்மி வரைக்கும் தெரிந்தாகிவிட்டது, வசு வரை தெரிந்துவிட வேண்டாம் என்பதால் இருக்குமோ?
இதை அடுத்த பாகமாக எழுத சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன
கீதா
பிவிஆர் எழுதியவற்றில் என் மனம் ஒன்றாத நாவல் இது. ஆரம்பம், முடிவு, கதைப் போக்குனு எதுவுமே பிடிக்காது. இதைப் பற்றி பானுமதிக்கு விமரிசனம் ஒண்ணும் கொடுத்திருந்தேன். அவங்க பார்க்கலை போலிருக்கு.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்..... நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குசுவையான பாசுரம் மற்றும் விளக்கம். திகட்டாத தேன் அமுது..... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கதை குறித்த தகவல்கள் நன்று.
கதையை சிறுகதைகள் தளத்தில் வாசிக்கிறேன்
வாங்க வெங்கட் நாகராஜ். நன்றி
நீக்குஇன்னும் பயணத்தில்தான். நாளை மைசூரிலிருந்து பெங்களூர் போய்ச் சேருவேன். பிறகுதான் விட்டுப்போனவைகளைப் படிக்கணும்
ஹி்.... ஹி்..... ஹி..... இன்று நானும் பயணத்தில் கும்பகோணம் தாண்டி பயணம்
நீக்குதங்களது கும்பகோணம் பயணத்திற்கும் வாழ்த்துகள் ஸ்ரீராம் சகோதரரே. பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நீக்குமைசூருக்கும், "பெண்"களூருக்கும் அடிக்கடி போயிருக்கோம். "பெண்"களூரிலோ, மைசூரிலோ வீடு வாங்கி அங்கேயே இருக்கும் எண்ணமும் இருந்தது. மைசூரில் பார்க்கவும் பார்த்தோம். பிள்ளைக்கு, மாட்டுப்பெண்ணிற்கெல்லாம் பிடிச்சிருந்தது. எங்களுக்கு ஏனோ அது அதிகப் பணம் கொடுத்து வாங்க அவ்வளவாய் லாயக்கில்லைனு தோணியது. இன்னிக்கு வரை பிள்ளைக்கு அது ஏமாற்றம் தான். அந்த வீட்டை ஏன் வேண்டாம்னு சொன்னீங்கனு புரியவே இல்லைனு சொல்லிட்டு இருக்கார்.
நீக்கு@Sriram, குலதெய்வம் கோயிலா, புது மருமகளோடு?
நீக்குஒரிஜினல் மைசூர்பாக் சாப்பிட மைசூரிலேயே வசித்துவிடத் தீர்மானித்தீர்களா? நம்ம ஊர்தான் சரிப்படும்
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா. நலமா துரை செல்வராஜ் சார்?
நீக்குநலமே விளைக
பதிலளிநீக்குவாழிய நலம்
நீக்குஅழகிய படங்கள்..
பதிலளிநீக்குஇனிய தரிசனம்...
அன்பின் நெல்லை அவர்களுக்கு
நன்றி
மிகவும் நன்றி
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குதங்களது தற்போதைய பயணங்கள் சிறப்பாக இருக்கிறதா? ஆன்மிக பயணமாக பல கோவில்களுக்கும் சென்று வருவதறிந்து மகிழ்ச்சி.
இன்றைய பாசுர பதிவும், குருபரம்பரை பகுதியும் எப்போதும் போல் நன்றாக உள்ளது. ஸ்ரீ இராமனுஜரின் திருவரங்கம் பயணம் குறித்து நன்றாக கூறியுள்ளீர்கள். நானும் பரவசமான பக்தியுடன் படித்தேன். பாசுர விளக்கங்களும், அதன் பொருளும் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் கண்ணெதிரே காண்பது போல, மகிழ்ச்சியுடன் கண்டு தரிசித்து வணங்கி கொண்டேன். நல்ல அருமையான பதிவையும், தெய்வ தரிசனங்களையும் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவை ரசித்து கருத்து எழுதியமைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்
நீக்கு
பதிலளிநீக்குமணவாள மாமுனிகளை தென்கலையார் மிகவும் போற்றுவர். வேதாந்த தேசிகனை வடகலையார் மிகவும் போற்றுவர். இதுவே நான் அறிந்தது.
பி வி ஆர் கதை ஒன்று ஏ பி யில் முன்பே பதிவிடப்படுத்துள்ளது. அந்தஸ்து என்று தலைப்பு. இந்தக் கதையின் அடிப்படையில் பாலகுமாரன் கதை ஒன்று வாசித்ததாக நினைவு. தொழிலதிபர் அய்யங்கார் இரண்டு மனைவிகள் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ளும் இரண்டாவது மனைவி என்று கதை நீளும்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். வேதாந்த தேசிகர் மணவாள மாமுனிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் மூத்தவர். இராமானுஜர் காலத்திற்குப் பிறகு பிள்ளைலோகாச்சார்யார் காலத்தில் interpretation differences வந்தன. அவைதாம் இரு கலையாக பரிமளித்ததன் காரணம்.
நீக்குகாலப்போக்கில் டிஎம்கே ஏடிஎம்கே போல ஆகிவிட்டது
இந்த அழகிய மணவாளர் ஏன் "நம் பெருமாள்" என அழைக்கப்பட்டார் என்னும் வரலாற்றை என்னோட ஸ்ரீரங்கம் பதிவுகளில் எழுதி இருக்கேன். எழுதிப் பத்து வருஷங்களுக்கு மேல் ஆகின்றன. விரும்பியவர்கள் படிச்சுக்கலாம் என்பதால் சுட்டி கொடுத்திருக்கேன்.
பதிலளிநீக்குhttps://aanmiga-payanam.blogspot.com/2015/04/blog-post_6.html
என்ன இருந்தாலும் நெல்லை எழுதுவது போல் வராது தான். தக்க பாசுரங்களையும் போட்டு ரொம்பவும் பக்திபூர்வமாக உணர்ந்து அனுபவித்து எழுதுகிறார்.
வணக்கம் சகோதரி
நீக்குஉங்களது சுட்டியிலும் சென்று அழகிய மணவாளரைப்பற்றி படித்து அங்குமொரு கருத்தை தெரிவித்து விட்டு வந்தேன். இறைவனை பற்றி அறிந்து கொள்ளும் எண்ணங்கள் அனைவருக்கும் இயல்பாக வருவதுதானே ..! தங்களுடையதும் நல்ல தெளிவான விபரங்களுடன் கூடிய எழுத்து. நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அட? அதுக்குளேயுமா? ரொம்ப நன்றி. அந்த வலைப்பக்கத்தில் இன்னும் நிறையப் பதிவுகள் கிடைக்கும். நாங்க திருக்கயிலை யாத்திரை போனதில் இருந்து, சிதம்பரம் பற்றி, துவாரகா, உடுப்பி, சிருங்கேரி பத்தி, அயோத்தி பற்றினு நிறையக் கிடைக்கும் நேரம் கிடைச்சால் பாருங்க. காவிரிக்கரை ஆலயங்கள், நவ திருப்பதி, நவ கயிலாயம், அஹோபிலம் போனதுனு எல்லாமும் கிடைக்கும். திருமதி கோமதி அரசுவும் இங்கெல்லாம் போய்வந்து எழுதி இருக்கார். அவ்ஃற்றில் அவர் ஸ்ரீலங்கா போனதும் (நாங்க போகலை) திருக்கயிலை போனதும் இன்னமும் விரிவாக எழுதி இருப்பார்.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஉடன் நல்ல விளக்கமான பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. நீங்கள் குறிப்பிட்ட அவற்றையும் என் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்கிறேன். (என் நேரம் என்பது இங்கு இரு பொருள் படும். நல்ல ஆன்மிக விஷயங்களை தெரிந்தவர்கள் எழுதிய பதிவின் மூலமாக படிக்கவும், ரசித்து மெய்மறக்கவும் ஒரு நல்ல நேரம் என்பது இறைவனருளால் அமைய வேண்டுமில்லையா.?) தவறாமல் படிக்கிறேன் சகோதரி. உங்கள் விளக்கமான, கோர்வையான, தெளிவான எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்பவை. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கீதா சாம்பசிவம் மேடம். இளையோர்களைப் பாராட்டினால் அவங்க ஊக்கம் கொள்வார்கள் என்பது உண்மைதான். அதற்காக இப்படியா?
நீக்குஉங்களுக்கு அவகாசமும் ஊக்கமும் இருந்திருந்தால் நம்பெருமாள் பயணத் தொடரைத் தொடர்ந்து எழுதி முடித்திருப்பீர்கள். ரொம்ப நல்லா ஆர்வத்துடன் நான் படிக்கும்படி எழுதிவந்தீங்க
உங்கள் ஆன்மீகப் பயணம் பிளாக் மிக உபயோகம். நினைவுக்கு இங்கு லிங்க் கொடுத்ததற்கு நன்னி ஹை கீசா மேடம்
நீக்குஇந்தப் பேரருளாளன் என்னும் பெயரைப் படிக்கும்போதும் அவருடைய அர்ச்சாவதாரம் ப்கிரும்போதும் இளைய இனிய நண்பர் கேசவபாஷ்யம் நினைவில் வருகிறார்.
பதிலளிநீக்குஎங்களுக்கும் அதாவது (ஸ்மார்த்தர்கள்) தினசரி பூஜை செய்யும் விக்ரஹங்களை எங்கு போனாலும் எடுத்துச் சென்று அவங்க நியம, நிஷ்டைகளின் படிப் பூஜைகள் செய்து அவங்க கையாலேயே குமுட்டி அடுப்பில்(90கள் வரையும் நடந்தது) வெண்கலப்பானையில் சாதம் வைத்து நிவேதனம் செய்துவிட்டு அந்த அன்னத்தைத் தான் சாப்பிடுவார்கள். இது நான் எங்க வீட்டுக் கல்யாணங்களில் நிறையப் பார்த்திருக்கேன். எங்க தாத்தாவே (அம்மாவின் அப்பா) வேல் பூஜை செய்ததால் வெளியில் எங்கும் சாப்பிட மாட்டார். பெண், பிள்ளை கல்யாணங்களில் கூட வேல் பூஜையை விட்டதில்லை. பாட்டி எல்லாப் பாத்திரங்களும் எடுத்துக் கொண்டு சாமான்கள் பால், தயிர் மட்டும் சமையல் காரங்க கிட்டே வாங்கிக் கொண்டு சமைப்பார். அவங்க இரண்டு பேருமே அந்த 3 நாட்களும் இப்படித் தான் சாப்பிடுவாங்க. கடைசிவரை கல்யாண சமையல்களெல்லாம் சாப்பிட்டதில்லை.
நல்ல தகவல். இறை பக்தி வழிபாடு நியமம் எல்லாருக்கும் ஒன்றுதானே. வாரியார் கழுத்தில் சிவலிங்க மாலை போட்டிருந்ததால் விழுந்து வணங்கவேண்டாம் என பரமாச்சாரியார் சொன்னதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது
நீக்குமுந்தைய தலைமுறைகளைப்போல் கடுமையான நியமங்கள் இப்போது காலப்போக்கில் குறைகிறது
கல்யாணம் ஆகி அம்பத்தூர் வந்ததில் இருந்து பிறகு 2012 இல் அங்கிருந்து கிளம்பும்வரை எத்தனை முறை காஞ்சிபுரம் போயிருப்போம்னு சொல்லவே முடியாது. அதிகாலையில் போனால் நிச்சயமாய்க் காஞ்சிபுரம் இட்லிப் பிரசாதம் கொடுப்பாங்க. கிடைக்கும் கிடைச்சிருக்கு.
பதிலளிநீக்குஎனக்கு வரதராஜப் பெருமாள் கோயில் அதிரசம் நினைவுக்கு வருது. இப்போ கான்டிராக்டில் போயிடுச்சு
நீக்குபாசு விளக்கங்கள் அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குபி வி ஆர் கதைகள் வேறு படித்திருக்கிறோம் இக் கதை படிக்கவில்லை.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குவணக்கம், வாழ்க வளமுடன்பதிவு அருமை.
பதிலளிநீக்கு//இராமானுஜர், தன் பிறந்தகமான காஞ்சீபுரத்தை விட்டுவிட்டு, புக்ககமான திருவரங்கம் நோக்கிச் சென்றார். காஞ்சீபுரத்தை விட்டுச் செல்லும்போது பேரருளாளப் பெருமாள் நினைவுக்கு வர அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. //
நமக்கும் பழகி பிரிவது நினைக்கும் தோறும் கண்ணீர் அரும்பும்.
//இராமானுஜரைப் பிரிய நேர்ந்தது பேரருளாளனுக்கு மிகுந்த வருத்தம்//
அவருக்கும் இவர் நினைவாவே இருக்கும். இருந்தாலும் இறைவன் சித்தம் எவ்வளவு காலம் எங்கு இருக்க வேண்டும் என்பது.
வாங்க கோமதி அரசு மேடம்.... சொந்த ஊர், கோயில்.... இதைப் பிரிவது கஷ்டம்தானே
நீக்குபிள்ளை லோகம் ஜீயர் எழுதிய இரண்டு பாடல்களும், அதன் விலக்கமும் அருமை.
பதிலளிநீக்குஅனந்த சரஸ் பொய்கை மற்றும் வரம் தரும் பெருந்தேவித் தாயார், பேரருளாளன் படங்கள் மிக அருமை தரிசனம் செய்து கொண்டேன்.
மிக்க நன்றி. என் பதிவுகளில் ஒரு படமாவது, இறைவன் படம் சேர்த்துவிடுவேன்.
நீக்குUnlock Your Trading Potential with WinProFX
பதிலளிநீக்குUnlock your trading potential with WinProFX, a trusted platform designed to help traders succeed in the dynamic world of financial markets. Whether you're a beginner taking your first steps or an experienced trader looking to enhance your performance, WinProFX provides the tools, resources, and support you need to trade with confidence. Access advanced trading platforms, real-time market analysis, educational materials, and responsive customer support to make informed trading decisions. With a focus on transparency, innovation, and user satisfaction, WinProFX empowers you to explore opportunities across Forex, commodities, indices, and more. Start your trading journey with WinProFX today and take a confident step toward achieving your financial goals.
Contact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.org/