7.7.26

சிறுகதை : கரும்புக் காட்டு நாகம் - கே ஜி கௌதமன்

 

                                          கரும்புக் காட்டு நாகம்

கே ஜி கௌதமன்   

வேலாயிக்கு தூக்கமே வரவில்லை. இது என்ன பிழைப்பு? நாளும் செத்து செத்துப் பிழைக்கவேண்டி இருக்கு? எல்லோரும் வேலைக்குப் போறாங்க, சம்பாதிக்கிறாங்க. ஆம்பிளைங்க செய்யுற அதே வேலையை ஒரு பொம்பிளை செய்தாலும் கூலி என்னவோ அவங்களுக்குக் கொடுப்பதைவிட கம்மியாதான் கொடுக்கிறாங்க. தன் புருஷன் செய்து கொண்டிருந்த அதே கரும்புக் காட்டு (கரும்பு வெட்டும்) வேலையை, தான் செய்வோம் என்று போய் நின்ற போது, புருஷன் இறந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. புருஷன் வேலை செய்து சம்பாதித்து வந்ததை எல்லாவற்றையும் அவனே குடித்துத் தீர்த்துவிடுவான். எப்பொழுதாவது (அதிசயமாக) குடிக்காமல் வந்தான் என்றால், வேலாயி சொல்வது எல்லாவற்றுக்கும் 'பூம் பூம் மாடு ' போல தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொள்வான். கையில் / பையில் இருக்கின்ற பணத்தை, தாராளமாக வேலாயியிடம் எடுத்துக் கொடுத்து விடுவான். 


அந்த ஊரில் வேலை கொடுக்கும் ஏஜெண்ட் கமிஷன் கந்தசாமி. யாருக்கு என்ன வேலை தெரியும், எதை எதை யார் எப்படிச் செய்வார்கள் என்பதெல்லாம் கந்தசாமிக்கு அத்துப்படி. அதைவிட யாருக்கு, என்ன வேலை செய்ய ஏற்பாடு செய்தாலும், அவர்களிடம் ஒரு கணிசமான தொகையை கமிஷனாக பெற்றுவிடுவார்.  


சென்ற ஆண்டு அந்த ஊருக்கு வந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஒருவருக்கு கந்தசாமி நிறைய ஆள் பிடித்துக் கொடுத்தார். வேலாயியின் புருஷன் சீனிக்கும் ஒரு பாலிசி - ஒரு லட்ச ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்தார், கந்தசாமி. அதற்கான கமிஷனை, அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்டிடமே கறந்துவிட்டார். சீனிக்கு அன்று ஒரே மகிழ்ச்சி. வேலாயியிடம் பெருமையாக சொல்லிக் கொண்டான். "தே - இங்க பாரு கரும்புக் காட்டுக்கு வேலைக்குப் போகாதே, பூச்சி பொட்டு (பாம்பு என்ற சொல்லையே வாயால் சொல்லமாட்டாள் வேலாயி) எதுனாச்சும் போட்டு வெச்சதுன்னா உசுருக்கு உத்தரவாதம் இல்லே. அப்பிடீன்னெல்லாம் சொல்லுவியே, இப்ப ஒண்ணும் கவலை இல்லே; நான் போயிட்டாலும் உனக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்" என்றான் பெருமையாக. 

"மச்சான் - எனக்கு அந்த ஒரு லட்ச ரூபா எல்லாம் வேணாம். என் கூட நீ இருந்தா போதும். பொறக்கப் போற நம்ம குழந்தை, நீ, நான் எல்லோரும் ஒண்ணா சந்தோஷமா வாழ்ந்தா - அது போதும் எனக்கு" என்றாள் வேலாயி. 

                 

நான்கு மாதங்கள்தான் பாலிசி பிரிமியம் கட்டினான் சீனி. அதையும் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்து டவுனில் இருந்த ஏஜெண்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் கந்தசாமி. நான்காவது தவணை கந்தசாமியிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் போனவன், உயிரோடு திரும்பவில்லை. சீனியின் போஸ்ட் மார்ட்டம் தகவல்படி - அவன் இறந்தது குடியாலா அல்லது பாம்பு தீண்டியதாலா அல்லது அவன் உடல் கண்டு எடுக்கப்பட்ட ரயில்வே டிராக் அருகில் - ஏதாவது ரயில் மோதியதாலா அல்லது இவை அனைத்தும் காரணமா என்று பட்டி மண்டபமே நடத்தியிருந்தார் டாக்டர். ஊரிலே சில பேர் கமிஷன் கந்தசாமிதான் சீனியின் மரணத்துக்குக் காரணம்; பட்டணத்து ஏஜெண்டோடு சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் அடித்துவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். சீனியின் இன்சூரன்ஸ் பாலிசி, 'கமிஷன் கந்தசாமி'யிடம்தான் இருந்தது. ('இதெல்லாம் ரொம்ப பத்திரமா வெச்சிக்கணும் சீனி. இது என்கிட்டயே இருக்கட்டும்; நீ மாசா மாசம் பிரிமியம் பணம் மட்டும் கொண்டு வந்து கொடுத்து விடு. நான் அதை ஏஜெண்டுக்கு அனுப்பிடறேன்.

இன்சூரன்ஸ் ஆபீசில் ஒரு நுட்பமான பாயிண்டில் பாலிசி தொகை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். சீனி இறந்த தேதிக்குப் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து, அவன் பெயரில், பிரிமியம் கட்டப் பட்டிருந்தது. (ஏஜெண்டுக்கு சீனி இறந்த தகவல், ஒரு வாரம் கழித்துத்தான் தெரியும். எனவே அவர் பிரிமியம் கைக்கு வந்தவுடனேயே சீனி பெயரில் அதைக் கட்டிவிட்டார்.) செத்துப் போனவர் எப்படி இரண்டு நாட்கள் கழித்து பிரிமியம் கட்டினார்? என்று ஒரு (புத்திசாலி) விசாரணை அலுவலர் கேள்வி கேட்க - இன்சூரன்ஸ் அலுவலகம் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. வேலாயி சார்பாக வாதிடுவோர் யாரும் இல்லை. 
            
'யாரைச் சொல்லி என்ன பயன்? வேலாயிக்கும் அவளுடைய குழந்தை மலருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கின்றதே? வயிறு மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் ஏழ்மையே இல்லாமல் இருக்குமே! 
               
வேலாயிக்கு, கரும்பு வெட்டுகின்ற வேலையில் இருக்கின்ற கஷ்டங்கள் தெரியாமல் இல்லை. கரும்புக் காட்டின் சொந்தக்காரி ஒரு பெண் என்பதால், சீனி சாவுக்கு தேடி வந்து ஆறுதல் சொன்னார், அந்தப் பெண்மணி. தயங்கித் தயங்கிதான் வேலாயி அந்தப் பெண்மணியிடம், தன் புருஷன் செய்த வேலையைத் தனக்குக் கொடுக்கமுடியுமா என்று கேட்டாள். 
              
'வேலாயி இது சுலபமான வேலை இல்லை. ரொம்ப ரிஸ்க் இருக்கற வேலை. கரும்புக் காட்டில் கருநாகம், விஷப் பூச்சிகள் எல்லாம் இருக்கும். கரும்போடு கரும்பாக அது இருப்பதை கண்களாலும் காதுகளாலும் உணர முடியும். ஒரு கணம் கவனமில்லாமல் இருந்தால் கூட, உயிருக்கே ஆபத்தாக ஆகிவிடும்.' என்றார். 
                          
'அம்மா இந்த வேலையின் நெளிவு சுளிவு எல்லாம் ஓரளவுக்கு இவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். என்னால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கின்றது. நான் செய்கிறேன்' என்றாள் வேலாயி. 
                
'சரி' என்று ஒப்புக் கொண்டார், அந்தக் கரும்புக் காட்டு எஜமானி. 
                   
ஒரு மாதம், வேலை சரியாகத்தான் நடந்தது. முதலில் ஆண் தொழிலாளர்கள் பெருத்த சத்தம் எழுப்பியபடி, கம்புகளால் கரும்புகளைத் தட்டியபடி, கால்களை ஒவ்வொரு அடியும் ஓசை எழும்படி வைத்து, காட்டினுள் செல்வார்கள். பாம்புகள் இருந்தால், அவை இவர்களுக்கு அஞ்சி, காட்டுக்குள் வெகு தூரம் சென்றுவிடும்.  அதன் பிறகு, பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்கள் சென்ற வழியில் இருக்கின்ற கரும்புகளை வெட்டத் துவங்குவார்கள். 'பாம்பு போக்குவது' என்று இதை அந்த ஊர் மக்கள் சொல்வார்கள். நாள் தோறும் கரும்பு வெட்டி, அன்றைய கூலியை, அன்றே வாங்கி, கஞ்சி வைத்து மகளுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு, சந்தோஷமாக இருந்து வந்தாள் வேலாயி. 

கொட்டும் மழையில் ஒரு நாள் கரும்பு வெட்ட சென்று, வானம் கறுத்து இருந்ததாலும், நிலத்தில் நீர் தேங்கி இருந்ததாலும், கையில் பிடித்திருந்த அரிவாளுடன் வழுக்கி விழுந்தாள் வேலாயி. கையில் பிடித்திருந்த அரிவாள், பிடியிலிருந்து நழுவி மண்ணில் விழ, அங்கே பயந்து போன நாகம் ஒன்று பாய்ந்து காட்டுக்குள் சென்றது. அருகே கரும்பு வெட்டிக் கொண்டிருந்த அவளுடைய தோழி காத்தாயி, வேலாயியை கைகளால் தூக்கி, கரும்புக் காட்டுக்கு வெளியே கைத்தாங்கலாக அழைத்து வந்து, அருகில் இருந்த டீக்கடை ஒன்றிலிருந்து டீ வாங்கிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள். காத்தாயி சொன்னாள்: "வேலாயி - நான் ஒன்டியாளு, இருந்தாலும் செத்தாலும் யாருக்கும் ஒண்ணும் கவலை இல்லே. ஆனா உன்னை நம்பி ஒரு ஜீவன் இருக்குது. அதுவும் பொட்டப் புள்ள. உனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா அதனோட கதி என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு. நீ பேசாம அந்த கமிஷன் ஏஜென்ட் கந்தசாமியைப் போய்ப் பார்த்து, வேற எதுனாச்சும் பாதுகாப்பான வேலையாப் பாத்துக்கோ. இந்த வேலை உனக்கு வேண்டாம் தாயி". வேலாயிக்கும் அது சரி என்றே பட்டது. 
                      
மறுநாள் காலை கமிஷன் கந்தசாமி வீட்டுக்கு சென்றாள், வேலாயி. கந்தசாமி ஆரம்பத்தில் சீனி பற்றி மிகவும் வருத்தப் பட்டு, இரக்கப் பட்டுப் பேசினார். அதன் பிறகு, வேலாயி வேலை கேட்டு வந்த விவரம் தெரிந்தவுடன், "வேலாயி, உனக்கு இல்லாத வேலையா? இன்னும் பார்க்கப் போனால், உன் புருஷனுக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் தொகை கூட, இன்சூரன்ஸ் கம்பெனி மேல கேஸ் போட்டு, உனக்கு ஒரு மாசத்துல வாங்கிக் கொடுத்துவிடுவேன். கரும்புக் காட்டுல வேலை இல்லாத நேரங்களில் உன் புருஷன் கட்டிடம் கட்டுகின்ற இடங்களில் வேலை செய்தான். நீ சித்தாளு வேலை எல்லாம் செய்வியா? வேற என்ன வேலை எல்லாம் தெரியும்? நான் சொன்னாக்க உனக்கு மறுநாளே வேலை போட்டுக் கொடுக்க ஆட்கள் இருக்காங்க. உன்னாலே நான் கேட்கிற கமிஷனைக் கொடுக்க முடியுமா?" 
                
"கமிஷன் எல்லாம் கொடுக்கிற நிலைமையிலா நான் இருக்கிறேன் சாமி? வாங்குகிற கூலி, எனக்கும் என் குழந்தைக்கும் வாய்க்கும் வயித்துக்கும்தான் சரியா இருக்கு." என்றாள் வேலாயி. 
               
"அது எனக்குத் தெரியும் வேலாயி. இன்னிக்குப் பொழுது சாஞ்சதும் - அதோ அங்கே இருக்கற தோட்டக்காரன் குடிசைக்கு வந்துடு. என்னுடைய கமிஷன் என்னன்னு சொல்லுறேன். தோட்டக்காரனுக்கு இன்னிக்கு சாயந்திரம் லீவு கொடுத்துடறேன் " என்றார் கந்தசாமி,  ஒரு மாதிரியாகச் சிரித்தபடி.
               
வேலாயி ஒரு கணம் திகைத்து நின்றாள். பிறகு, பதில் எதுவும் பேசாமல், நேரே வீட்டை நோக்கிச் சென்றாள். வழியில் கரும்புக் காட்டைக் கடக்கும்பொழுது அவளுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. கண்ணீர் விட்ட படி, தன் விதியையும், வாழ்வில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும் மனதுக்குள் எண்ணிக் குமைந்தவாறு சென்றாள், வேலாயி.  
                  
வீட்டுக்கு வந்ததும், வேலாயியின் வருத்தம் கோபமாக மாறியது. 'சீனி, கந்தசாமி சம்பந்தமாக, ஊரார் சொல்லுகின்ற இன்சூரன்ஸ் கம்பெனி கதைகள் உண்மையாக இருக்குமோ' என்று கூட அவளுக்குத் தோன்றியது. பொழுது சாய்ந்ததும், ஒரு முடிவோடு, கரும்பு வெட்டுகின்ற அரிவாளை எடுத்துக் கொண்டு கமிஷன் கந்தசாமியின் தோட்டக் குடிசையை நோக்கிச் சென்றாள், வேலாயி.  
                  
மீண்டும் கரும்பு காட்டைக் கடக்கையில், தனக்கு முன்பு, நெளிந்து நெளிந்து சென்று கொண்டு இருக்கின்ற கருநாகத்தின் மீது அவள் பார்வை விழுந்தது. நேற்று காலை அவள் அரிவாள் விழுந்தபோது தப்பிச் சென்ற அதே நாகம். அதே நீளம், அதே கனம். ஆமாம்; அதே நாகம்தான்! வேலாயிக்கு அந்த நாகத்தின் மீதும் ஒரே ஆத்திரமாக வந்தது. இது தன் கண்ணில் பட்டதால்தானே, அவள் வேறு வேலை தேட முடிவு செய்தாள்! அதனால்தானே கந்தசாமி போன்ற 'நிழல் நாகங்கள்' தன்னைக் காணிக்கையாகக் கேட்கின்றன? முதலில் இதை வெட்டிச் சாய்த்துவிட்டு பிறகு, கந்தசாமியை கடவுளுக்குக் காணிக்கை ஆக்குவோம்' என்று நினைத்தவாறு வேகமாக அதனைப் பின் தொடர்ந்தாள் வேலாயி. 


வேலாயி தொடர்ந்து வருகிறாளா என்று பார்ப்பது போல, திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்ற நாகம், கந்தசாமியின் தோட்டக் குடிசை வாயில் கதவுப் பக்கம் போய், எங்கே செல்வது என்று சற்றுத் தடுமாறியது. வேலாயியை (மட்டும்) குடிசை ஜன்னல் வழியாகப் பார்த்த கந்தசாமி, உள்ளிருந்து வந்து குடிசைக் கதவைத் திறந்தார். முதல் விருந்தாளியாக, நாகம் உள்ளே நுழைந்தது. வேலாயி, சட்டென்று கதவை வெளியிலிருந்து இழுத்துத் தாளிட்டாள். தன வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக செல்லத் துவங்கிய அவளின் காதுகளில், கந்தசாமியின் அலறல் லேசாக விழுந்தது.     
**** ***** 
மீண்டும் கரும்புக் காட்டுக்கு வேலைக்கு வந்த வேலாயியை, அதிசயமாகப் பார்த்தாள் காத்தாயி. வேலாயி சொன்னாள்: "என் புருஷன் இங்கேதான் மறு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்காரு. அவரு எனக்கு எந்த கஷ்டமும் வராமப் பாத்துக்குவாரு . இந்தக் கரும்புக் காட்டுல இருக்கறது எல்லாம் நாகப் பாம்புகள் இல்லை; நல்ல பாம்புகள்" என்றாள். 

======================================================================================

        

 நாங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவகம் – 01 – நிசர்கா கார்டன், பெங்களூரு

நெல்லைத்தமிழன்

இதனை நான் திங்கள் கிழமைக்கு ஏற்ற ஒரு தொடராகத்தான் கருதுகிறேன். அதனால் எல்லோருமே படத்துடன் தொடர்ந்து எழுதலாம். திங்கள் கிழமை உணவின் செய்முறை பகுதி தவிர உணவுடன் தொடர்புள்ள பகுதிகளும் இருந்தால் மாற்றமாக இருக்கும் என்று நான் நினைப்பதால் எழுதத் தொடங்கியுள்ளேன். 

என் பெண்ணிடம் நாம் பார்த்த விஷயம், அவள் சாப்பிடுவதற்கு முன்பாக படம் எடுப்பாள் (அதற்காக எல்லா ஐட்டமும் வந்த பிறகு படம் எடுத்த பிறகு சாப்பிடத் தொடங்குவாள். ஆனால் அது ஸ்பெஷல் உணவாக இருக்கவேண்டும். சும்மா அருகில் உள்ள உணவகத்துக்குக் கூப்பிட்டுச் சென்றால் அதையெல்லாம் புகைப்படம் எடுக்க மாட்டாள்). அப்படி நான் சமீப காலங்களில் படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பகுதியில் உணவின் படத்தைவிட சாப்பிட்ட உணவகம் பற்றி எழுதுவதுதான் முக்கியம். 

நான் பெங்களூர் பசவணகுடியில் மாதம் ஒரு தடவையாவது சேவை வாங்கச் செல்வேன் (இடியாப்பம். கிலோ 120ரூ, நாங்கள் வந்த புதிதில் 80ரூ இருந்தது). அப்படி ஒரு தடவை செல்லும்போது DVG சாலையின் முனையில் திவாரி ரெஸ்டாரண்ட் இருந்தது. (அதுபற்றி பட த்துடன் ஒரு தடவை எழுதறேன்) டிபிகல் வட இந்திய உணவு. ஆலு பராத்தா, ஆனியன் பராத்தா என்று பெரிய லிஸ்ட் உண்டு. இது தவிர ஜாமூன், ரோஸ் மில்க், லஸ்ஸி.  அதற்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாய், சிறிது மசாலா போட்ட தயிர். வாங்கிக்கொண்டு தெருவில் நின்றுகொண்டுதான் சாப்பிடணும். எனக்கு பாரம்பர்ய உணவு தவிர வேறு எதுவும் பிடிக்காது என்று சொல்லியிருக்கிறேன். எப்போதிலிருந்து ஆலு பராத்தா பிடிக்க ஆரம்பித்தது என்று ஒரு பகுதியில் எழுதறேன். திவாரி ரெஸ்டாரண்டின் உணவு எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. சாப்பிட்டுவிட்டு காந்திபஜாரை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, டிவிஜி சாலையில் நிசர்கா கார்டன் என்று போட்டிருந்த ரெஸ்டாரண்டைக் காண்பித்து மனைவி, அடுத்த முறை அங்கு சாப்பிடுவோம் என்றாள். அந்த ரெஸ்டாரண்டை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு டி.வி.ஜி சாலைக்கு இருவரும் சென்றபோது, நான் திவாரி ரெஸ்டாரண்டிலயும், அவள் நிசர்கா கார்டனிலும் சாப்பிடலாம் என்று நினைத்தேன். முதலில் திவாரி ரெஸ்டாரண்ட் சென்றால், அவளுக்கு, எதுக்கு நிசர்கா கார்டனுக்கு திரும்ப நடக்கணும், அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிடுவாளோ என நினைத்து முதலில் நிசர்கா கார்டனுக்கு சென்றோம். அவள், பனீர் மட்டர் மற்றும் ரோட்டி ஆர்டர் செய்தாள். ரொம்ப நல்லா இருக்கு என்று அவள் சொன்னதால் நான் எனக்கு நார்த் இண்டியன் உணவு ஆர்டர் செய்தேன். 

பனீர் மட்டர் 200 ரூ, ரோட்டி 40 ரூ, நார்த் இண்டியன் லஞ்ச் 160 ரூ என்று நினைவு. நார்த் இண்டியன் லஞ்சுக்கு, 2 ரோட்டி, 3 தொடுகறி, ஒரு கிண்ணத்தில் தயிர் சாதம், ஒரு கிண்ணத்தில் புலாவ், ஒரு இனிப்பு, அப்பளம்-பபட், சிறிய ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் என்று கொடுத்தார்கள்.  எனக்கு சில ஹோட்டல்களின் நார்த் இண்டியன் மசாலா ஒத்துக்கொள்ளாது, அலர்ஜி வந்துவிடும். அதனால் பயந்துகொண்டே சாப்பிடுவேன். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் ஆகும்வரை எனக்கு பயம் இருந்துகொண்டே இருக்கும். 

நார்த் இண்டியன் லஞ்ச் மிக அருமையாக இருந்தது. தயிர் சாதம் மனைவிக்கு (நான் டயட்டில் இருக்கேனே). விலையும் அதிகமில்லை. ரெஸ்டாரண்ட் மிக சுத்தமாக இருந்தது. எனக்கு ரொம்பவே திருப்தி. அவங்களிடம் சென்று உணவு சூப்பர் என்று சொன்னேன். அந்த ரெஸ்டாரண்ட் 50 வருடங்களுக்கு மேல் இருக்காம். 

அந்த ரெஸ்டாரண்டுக்கு அதற்குப் பிறகு ஒரு முறை சென்றோம் (இரு வாரங்களுக்கு முன்பு). அப்போ ஒரு தொடுகறியும் எனக்கும் அவளுக்கும் ரோட்டி 2, ஒரு நான் வாங்கினோம்.  திரும்பவும் போகணும். அங்கு வெஜ் பிரியாணி எப்படி இருக்கு என்று பார்க்கணும். நூல் பரோட்டா அவர்களுடைய ஸ்பெஷல் என்று போட்டிருந்தார்கள். சாப்பிடலாமா என்று யோசனையாக இருக்கிறது. 


வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிட்டுப் பாருங்கள்.

40 கருத்துகள்:

  1. கரும்புக் காட்டு நாகம் கதை முன்பே படித்திருக்கிறேனே. மீள் பதிவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை பேர் ஞாபகம் வச்சிருப்பாங்கன்னுதான்...  வாங்க நெல்லை.  முதல் ஆளா வந்து போட்டு குடுத்துட்டீங்க!

      நீக்கு
    2. நீங்கள் கேட்டிருக்கும் நேரத்துக்கு ஓரிரு நிமிடங்கள் முன்பு என் அக்காவும் வாட்ஸாப்பில் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

      நீக்கு
    3. நாகப்பட்டினத்திலே கரும்புக்காடு+ நாகம் எல்லாம் கலந்து கட்டியா உண்டோ? கதாசிரியர் வாழ்ந்த ஊராச்சே என்பதற்காகக் கேட்டேன்.

      நீக்கு
    4. நான் கேட்க நினைத்ததை நெல்லை கேட்டு விட்டார், இருந்தாலும் நானும் கேட்கிறேன் மீள் பதிவா? ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறதே?

      நீக்கு
    5. //எத்தனை பேர் ஞாபகம் வச்சிருப்பாங்கன்னுதான்... // எங்களை எத்தனை குறைவாக எடை போட்டு விட்டீர்கள்? கிடக்கட்டும். சனி,ஞாயிறு நான் வெளியே போயிருந்தேன், அங்கு நெட்வொர்க் கிடையாது. உங்களுக்கு என்ன ஆச்சு?

      நீக்கு
    6. கல்கி பத்திரிக்கையில் பொன்னியின் செல்வன் திரும்பத் திரும்ப வருவது போல இங்கே க கா நா கதை போலிருக்கு. முன்பே சொல்லியிருந்தா சரோஜாதேவியை இங்கே shift பண்ணியிருப்பேன்!

      நீக்கு
    7. முன்னாடியே படிச்சாச்சு.

      நீக்கு
    8. எனக்கு இப்போ என்ன சந்தேகம்னா, கௌதமன் சாருக்கு ஆசிரியர் கல்கியைப் பிடிக்காதா இல்லை பொன்னியின் செல்வனைப் பிடிக்காதா?

      நான்லாம் (மற்றவர்களும்) பொ.செ, சி.ச, பா.க போன்றவற்றை கல்கி மீள் பதிவு பண்ணினாங்கன்னா இரண்டு வாரத்துக்குள்ள முழு புத்தகமும் வாங்கிடுவேன், வோம். வேலையத்துப்போய் ஒரு ஸ்பூன் பாயசத்துக்காக இப்போ உள்ள சரவணபவன் ஹோட்டல் மதிய உணவு ஆர்டர் செய்யற மாதிரிச் செய்ய மாட்டோம். அதாவது தொடர்கதைக்காக கல்கி வாங்கி பணத்தை வீண்டிக்க மாட்டோம்.

      நீக்கு
  2. கரும்பு வெட்டுவது அவ்வளவு ஆபத்தான பணியா?

    நாகப்பாம்பிற்குப் பதிலா, பொதுவா கர்நாடகா ஆகும்பே பகுதியில் மாத்திரம் அதிகமாக்க் காணப்படும் ராஜ நாகத்தைப் போட்டிருக்கிறீர்களே.

    பதிலளிநீக்கு
  3. என்றோ அனுப்பிய ரெஸ்டாரன்ட் அனுபவம். மறந்துவிட்டீர்களோ இல்லை பார்க்கவில்லையோ இல்லை சுவாரசியம் இல்லையோ என நினைத்துக்கொண்டேன்.

    Gas தட்டுப்பாடு வந்ததால் அங்கு, நார்த் இன்டியன் மீல்ஸ் மெனுவிலிருந்து எடுத்துவிட்டோம், தனியாக ரோட்டி, நான் ,சப்ஜி ஆர்டர் பண்ணிக்கலாம், நூல் பரோட்டாவையும் மெனுவிலிருந்து எடுத்துவிட்டோம் என சென்ற முறை போயிருந்தபோது சொன்னார்.

    உலகத்து நாட்டாமை, பிரச்சனையை முடிக்க விடாமல் உலகத்தை அதகளம் பண்ணுதே. எல் நினோ போல, ஒருத்தனுடைய பேராசை உலகத்து மக்களையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்துதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை,, மறந்து விட்டேன். கடவுள் நினைவுபடுத்தினார்!

      நீக்கு
    2. இன்றைய பதிவின் சுவையான பகுதிக்கு நன்றி!

      நீக்கு
    3. நெல்லை போட்டிருக்கும் ப்டங்களில் ரொட்டி எல்லாம் கருகிப் போயிருக்கே! பாதிக்கு மேல் பிய்ச்சுத் தூரப் போடணும். :( ஆனாலும் சிலருக்குக் காந்தலும் பிடிக்கிறது.

      நீக்கு
    4. சென்னையில் அண்ணாநகர் ஐயப்பன் கோயிலுக்கு அருகே உள்ள சுக் சாகரில் தான் முன்னெல்லாம் சாப்பிட்டிருக்கோம். கீழே சாதாரணமான காலை உணவுகளெல்லாம் கிடைக்கும். சுய சேவை. மாடியில் தான் ரெஸ்டாரென்ட். காலை பதினோரு மணிக்குப் பின்னரும், மாலை ஏழு மணிக்குப் பின்னரும் திறப்பார்கள்.

      நீக்கு
    5. என்னாது.. ரொட்டி கருகியிருக்கா.... நல்லாத்தானே இருந்தது. ஒண்ணும் பிச்சுத் தூரப்போடலியே. காந்தல் நல்லாருக்குன்னு யாரேனும் சொன்னாஅவங்க வெண்கல உருளில பண்ணின அரிசி உப்புமாவோ, அரிசி மாவு புளி உப்புமாவோ சாப்பிட்டிருக்காங்கன்னு அர்த்தம்.

      நீக்கு
    6. வெண்கல உருளிலே எல்லாம் காந்தாது. கருப்பாகாது. பொன் முறுகலாய் வரும். இது அப்பட்டமான காந்தல், காந்தல், காந்தலே தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  4. விடாது கருப்பு கதை தான்! எபி--யை இந்த உணவகம், சாப்பாட்டு சமாச்சாரங்கள் விடாது போலும். ஒருத்தரை மாற்றி ஒருத்தர் இந்த விஷயத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டால் சலிப்பு தான் மிஞ்சுகிறது. அப்படி என்ன தான் இதில் மோகம் இருக்குன்னு தெரியலே.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... சிரிப்பும் புளிப்பும் சில காலம்னு என் அம்மா சொல்லுவா. கவலை இல்லாத சிரிப்பும் பல்லைப் பற்றிக் கவலைப்படாமல் பிடித்துத் தின்னும் புளிப்பும் கொஞ்சம் வயதாகிவிட்டால் இருக்காது இல்லையா?

      அதற்கான குறிப்பிட்ட வயதை அடைந்துவிட்டால் ஒவ்வொன்றிலும் மோகம் குறையும். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று சொல்லியிருப்பதுபோல, உணவின் மீதான ஆசைக்கு ஏதேனும் பழமொழி இருக்கிறதா?

      நீக்கு
    2. அம்மாக்கள் வாக்கு எப்போதுமே தேவ வாக்கு தான் நெல்லை.
      மனம் நெகிழ்ந்து சொல்கிறேன்.

      நீக்கு
  5. நாகம் ஏற்கனவே படம் எடுத்து இங்கு போட்டுடிச்சே....!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. /நூல் பரோட்டா அவர்களுடைய ஸ்பெஷல் என்று போட்டிருந்தார்கள்/
    அது என்ன நூல் பரோட்டா? புதிதாக இருக்கின்றதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவை பிழியறமாதிரி மைதா மாவைப் பிழிந்து சேர்ப்பாங்க, இல்லைனா வீச்சு பரோட்டா மாதிரி மாவை வீசி, கத்தியால கோடுபோட்டு இழை இழையா பிரித்து, சேர்த்து, வட்டமாக்கி, அழுத்தி பண்ணிட்டு, பரோட்டா தயார் ஆனதும் இரண்டு கையால அடிப்பாங்க. இரண்டாவது முறைல நான் ஒரு தடவை பண்ணியிருக்கேன். எண்ணெயை நினைத்து திரும்பப் பண்ணவில்லை.

      நீக்கு
  7. /முதலில் திவாரி ரெஸ்டாரண்ட் சென்றால், அவளுக்கு, எதுக்கு நிசர்கா கார்டனுக்கு திரும்ப நடக்கணும், அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிடுவாளோ என நினைத்து முதலில் திவாரி ரெஸ்டாரண்ட் சென்றோம்./
    ".......என நினைத்து முதலில் நிசர்கா கார்டன் ரெஸ்டாரண்ட் சென்றோம்" என்று வர வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சூர்யா சார். எனக்கு பொறுமை, living in current moment குறைவு. அதனால் முதலில் அவளுக்கானதைச் செய்வோம் என நினைத்தேன்.

      நீக்கு
    2. @ Nellai! சூர்யா அவர்கள் நீங்க எழுதி இருப்பதிலே இருக்கும் பிழையைச் சொன்னால் நீங்கே வேறே என்னமோ நினைச்சுக்கறீங்க! :)

      நீக்கு
    3. ஆமாம் னு சொன்னதிலேயே அவர் சொன்னதை சரின்னு சொல்லிட்டேனே. அதுனாலத்தான் தவறுகள் வருதுன்னு சொல்லியிருக்கேன்.

      நீக்கு
  8. கருப்பங்காட்டுக் கதை இயல்பாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  9. பூச்சி பொட்டு என்றால் எனக்கும் பயம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுல பயம் என்னன்னா, அது எந்த வகைப் பாம்புன்னு அதுட்ட அட்ரஸ் கேட்டு போட்டோ பிடிச்சு (அல்லது அதைப் பிடிச்சு) பிறகு ஆஸ்பத்திரில போய்ச் சொன்னா அதுக்கு ஏத்த ஊசி போடுவாங்க.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. நெல்லை இந்த இரண்டு உணவகங்களும் பார்த்திருக்கிறேன். நல்லாருக்குன்னு தெரியுது. விலையும் ரொம்ப ரீசனபிள் ஆக இருக்கு.பார்ப்போம் வாய்ப்பு கிடைச்சா ...

    பொதுவா வட இந்திய சப்ஜிக்களில் வடக்கே மசாலா கம்மியாக இருக்கும். இங்கு தென்னக ஹோட்டல்களில் வட இந்திய சப்ஜி பண்ணும் போது மசாலா நிறைய சேர்த்துவிடுகிறார்கள் எனவே வட இந்திய உணவை இங்கிருக்கும் வட இந்திய உணவகங்களில் சாப்பிடலாம் என்று தோன்றும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க தற்போதைய வீட்டருகே ஏதேனும் உருப்படியான ரைஸ்டாரன்ட் இருந்தாச் சொல்லுங்க. ஆடு மேய்த்த மாதிரியும் இருக்கும், அண்ணனுக்கு பொண் பார்த்த மாதிரியும் இருக்கும்கற மாதிரி, உங்களையும் பார்த்துட்டு அங்கயும் சாப்பிட்டு வரலாம்.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இது ஏற்கனவே படித்த கதை என்றாலும், மீண்டும் ஒரு தடவை படித்து ரசித்தேன். "தெய்வம் நின்று கொல்லும்" என்னும் பழமொழி உறுதியாகிறது. கதைக்கேற்ற படங்கள் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!