செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வசனத்தைச் சொன்னா...(திரைப் புதிர்)


பொழுது போக ஒரு ரிலாக்ஸ் பதிவு..!

சில புகழ் பெற்ற வசனங்களைச் சொன்னால் படம் பெயர் தெரிந்து விடும்.... உதாரணமாக "மாமா.. காஞ்சிப் போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதலடையும்..." என்ற வசனத்தைச் சொன்னால் உடனே படம் பெயர் சொல்லி விட முடியும்... அது போல கீழே உள்ள வசனங்களை வைத்து என்ன படம் என்று கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்...

1) "மாயா...உனக்குள்ள இருக்கற அதே மிருகம்தான் எனக்குள்ளேயும் தூங்கிகிட்டு இருக்கு...அதைத் தட்டி எழுப்பிடாதே..."
"உனக்குள்ள இப்படி ஒரு கிராமத்தான் இருக்கறது தெரியாமப் போச்சு சக்தி..."

2) "கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது... கஷ்டப் படாம கிடைக்கற எதுவும் நிலைக்கவும் நிலைக்காது..."

3) "வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்க ஜெயிக்கறவன் தோப்பான்..தோற்கறவன் ஜெயிப்பான்..."

4) "கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும் நாய் கடிக்காம விடாது"

5) "லதா...விஸ்கியைத்தானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே, விஷத்தை இல்லையே?..."

6) "தம்பி....தம்பி....என் பொண்ணு உங்க படத்துல நடிக்கிறதுக்கு எவ்வளவு ஆயிரம் பணம் தருவீங்க... நான் கார் வாங்கணும், பங்களா வாங்கணும்...எஸ்டேட் வாங்கணும்..."
"யோவ் யோவ் யோவ்!...ஏமாந்தா எங்கப்பனையே வாங்கிடுவே போலிருக்கு...இது முதல் படம்,  கொடுக்கறதை வாங்கிக்கோ..இந்தா நூத்தி ஒரு ரூபாய் அட்வான்ஸ்.."

7) "வாழறத்துக்காக சாகற அளவு ரிஸ்க் எடுக்கத் தயார்.."

8) "சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்.."

9) "பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக் கூடாது.."

10) "நான் ஒரு தடவை சொன்னா, ஐநூத்து ஒரு தடவை சொன்ன மாதிரி .... " (வசனம் சரிதான். நூறு இல்லை. .... )
  
(வாசகர்களே! நீங்களும் உங்களைக் கவர்ந்த  வசனங்களையோ / குத்து வசனங்களையோ (Punch dialog) பின்னூட்டத்தில் பதியலாம்.)  
   

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தேச பக்தி

சொத்து, காதல், மரியாதை
சொந்த பந்தத்தில் அவமானம்
கடன் கேட்டுப் பெறாமை
கடன் கொடுத்து வராமை
என் சாதியை உன்சாதி தாக்குதல்
என் சாதி தாக்கி போலீசில் புகார்
அண்டை மாநிலத்து நீர் வராமை
அண்டை மாநிலம் நீர் கோருதல்
என் கட்சிக்கு அவமானம்
உன் கட்சிக்கு கௌரவம்
எதிரி நன்றாக  ஆடி
என் கட்சி தோற்றல்
இதெல்லாம் ஏதும் இன்றி
எல்லாம் சரியாக இருந்தால்
இந்திய நாடு என் நாடு
இந்தியர் யாவரும் எம் மக்கள்


வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பணமும் மனமும்...

தொடர்பதிவில் ஒரு வசதி... என்ன தலைப்பு என்று யோசிக்கத் தேவை இல்லை. சப்ஜெக்ட் பற்றி குழம்ப வேண்டாம். ஆனால் என்ன, தொடர் அழைக்கும் பாதையில் பயணம், அல்லது நம் பாதைக்குத் தொடரைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.

கொஞ்ச நாள் முன்பு தமிழ் உதயம் இந்தப் பதிவை எழுதி இருந்தார். அதைப் பற்றிய சிந்தனையில் இருந்த பொழுது. 

சிறு வயதிலிருந்தே பாக்கெட் மணி போல காசு கிடைத்தால் செலவு செய்து பழக்கம் இல்லை. பாக்கெட் மணி கொடுக்கும் பழக்கம் குடும்பத்தில் இல்லை. ஆனால் 'ஊர்க்காசு' உண்டு. ஊரிலிருந்து வந்து செல்லும் உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது குழந்தைகளுக்கு ஐம்பது பைசா / ஒரு ரூபாய் என்று ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. அதனால் ஒரு சிறு கணிசமான சேமிப்பும் இருந்தது.

நண்பர்கள் இந்த மாதிரி காசை மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் உடனே செலவு செய்து விடுவார்கள். சிலர் என்னைப் போல சேமித்து வைத்திருப்பார்கள். அஞ்சு பைசா அம்மு போல உண்டியல் வைத்திருப்போம். செலவு செய்யாமல் சேர்த்து சும்மா வைத்திருப்பதற்கு பெற்றோரிடமே கொடுத்து விடலாமே என்று நண்பர்கள் கிண்டலடிப்பார்கள்.

பின்னர், பள்ளியில் சஞ்சாயிகா திட்டத்தில் சேர்த்து வைக்கப் பட்டு, சேர்த்ததுண்டு. ஆனால் அது பள்ளியின் கட்டாய திட்டம் என்பதால் அதிகம் சேர்க்க முடிந்ததில்லை! கட்டாயப் படுத்தும் போது சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது!

கடைக்கு போகும் வேலைகள் கொடுக்கப்பட்ட பொழுது, கமிஷனில் கொஞ்சம் காசு பார்த்ததுண்டு!  

அஞ்சலக சேமிப்பில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்கியது. நம் கையெழுத்தையே சந்தேகப் படத் தொடங்கி ஒருமுறை பணம் திரும்பி வாங்குவதில் தாமதமானது. அதில் சேர்த்த பணத்தில் முதல் முறை பெற்றோர், மற்றும் உடன் பிறந்தோருக்கு ஒரு தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. சேமிப்பேன். சந்தோஷமாகச் செலவு செய்ய! 




வேலைக்குப் போகத் தொடங்கிய பிறகு கணக்கு எழுதும் பழக்கம் அப்பாவினால் சொல்லிக் கொடுக்கப் பட்டது. வாங்கும் சம்பளத்துக்கு வரவு செலவு எழுதும் பழக்கம் வந்தது. நல்ல பழக்கம்தான். இதில் சில பல உதவிகள் உண்டு. ஒருசமயம், கேபிள்காரர் ஆறு மாதமாய் பணம் தரவில்லை என்றபோது கணக்கு நோட்டுப் புத்தகத்தை இன்ஸ்டன்ட்டாகக் காட்டி நிரூபித்திருக்கிறேன். கணக்கு எழுதும்போது , சில குறிப்புகளுடன் எழுதுவது வழக்கம். செல்லாத ஐம்பது ரூபாய் நோட்டு கொடுத்து பின்னர் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னது' என்று அடைப்புக் குறிக்குள் இருக்கும்..! இது போல வாசகங்களை நினைவு படுத்தி சொன்னதும் அவரும் ஒப்புக் கொண்டார்.

பணம் குறித்த பொதுவான மனநிலையை சொல்லலாம்.

சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது இருபது சதவிகிதமாவது சேமிக்க வேண்டும் என்று யாரோ சொன்னது. அதைக் கடை பிடிப்பதோடு சரி. ரொம்ப சேமித்து வைத்துக் கொள்வதெல்லாம் இல்லை. சாத்தியமும் இல்லை. 'கடனில்லாமல் வாழ்கிறோமா?' அது போதும் என்ற மனநிலைதான் இப்போது.

முக்கியமான இடங்களில் செலவு செய்யத் தயங்குவதும் இல்லை. நண்பர்களோடு கூடும் இடங்களிலும் கூட்டமாகச் செலவு செய்யும் இடங்களிலும் பணம் எடுத்துக் கொடுக்கத் தயங்கியது இல்லை. பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கும். பணத்தைச் சேர்த்து வைத்து ஒன்றும் ஆகப் போவது இல்லை. நாளை போகும்போது ஒன்றையும் எடுத்துக் கொண்டு போகப் போவது இல்லை. இன்றைய சந்தோஷத்துக்கு நம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் தயக்கம் இல்லை. பணத்தில் அல்ல, மனதில் பணக்காரன்! நம் குழந்தைகளை அவர்கள் நல்லபடியாய் (அவர்கள் காலிலேயே) நிற்க வழி செய்து கொடுத்து விட்டால் போதும் என்று நினைப்பவன்.

பணம் கையில் இருந்தும் எடுத்து செலவு செய்யத் தயங்குபவர்தான் வறுமையில் இருப்பவர் என்று எங்கோ படித்ததாய் ஞாபகம். 'பணம் என்னடா பணம் பணம்' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. 'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' என்று கூட ஒரு பாடல் உண்டு.

முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்கும்போது பேரம் பேசும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அதன் நியாயமான விலை விவரம் தெரிந்திருக்குமாயின் நியாயமாய் இருந்தால் வாங்கி விடுவது.

சிக்கனத்துக்கும் கருமித் தனத்துக்கும் என்ன வேறுபாடு என்று அடிக்கடி யோசித்ததுண்டு.

*எனக்குத் தெரிந்த வியாபாரி ஒருவர் அன்று வியாபாரம் சரியாக ஆகவில்லை என்றால் இரவு உணவைத் தியாகம் செய்து விடுவார். 

*ஊரிலிருந்து வந்திருந்த அவர் அப்பா மாலை நாளிதழ் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்த தம்பியைக் கடிந்து கொண்டார் இவர். "ஏண்டா? இதுல அப்பா என்ன படிக்கக் கேட்கிறார்? ஜோசியப் பகுதி.. பக்கத்துக் கடைல வாங்கறாங்க... ஒரு எட்டு அங்க போய் கேட்டால் கொடுத்திருக்கப் போறாங்க...காசை வேஸ்ட் செய்து விட்டாயே..." என்றார். நான் அவர் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன், வருத்தப் பட்டிருப்பாரோ என்று. பெருமையான புன்னகை. அவரும் வியாபாரிதான். மகன் முன்னுக்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கை தெரிந்தது அவர் முகத்தில்.

இதில் தவறு என்பதும் சரி என்பதும் அவரவர் பார்வையைப் பொறுத்ததுதான்.

ஆனால் காசு கையில் இருந்தும் அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொள்ளாமல் வாழ்வதும், எல்லாவற்றையும் சேமிப்பில் போட்டு விட்டு மிகச் சிக்கனமாக வாழ்ந்து வருவதுமாக இருக்கும் நண்பர்களைப் பார்க்கும்போது, 'பூதம் போல பணத்தைக் காத்து என்ன செய்யப் போகிறார்கள்?' என்று தோன்றும். எதிர்காலத்துக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தேவைதான். ஆனால் இது ரொம்ப ஓவராகப் படும் எனக்கு.

எல் ஐ சி பற்றி ஒரு ஜோக் உண்டு. செத்தபிறகு வரும் காசுக்காக நிகழ்காலத்தில் ஏழையாய் இருப்பது என்று. நேற்று என்பது போன கதை. நாளை என்பது நிச்சயமில்லாதது. இன்று என்ற இறைவன் கொடுத்த கொடையில் சந்தோஷமாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.

செலவு செய்கிறேன் என்றோ, சந்தோஷமாக இருக்கிறேன் என்றோ பார்க்கும் பொருளை எல்லாம் வாங்குவதும் இல்லை. எந்தப் பொருளை வாங்கினாலும் ஏதாவது ஒரு உபயோகம் இருக்கும்தான். ஆனால் இந்த உபயோகம் அவசியம், இது இல்லாமல் இருப்பது கடினம் என்ற, தேவைப் பட்ட பொருட்களை வாங்கத் தயங்கியதும் இல்லை.

மொத்தத்தில் பணம் மனதை அடிமை கொண்டதில்லை. அது இல்லாமல் கஷ்டப்படும் நிலையிலும் கடவுள் வைக்கவில்லை.

தலைப்பை ஒட்டி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. மனதில் வந்ததை எல்லாம் எழுதி விட்டேன். தவறு என்பதும் சரி என்பதும் அவரவர் வாழ்க்கை முறையில்.    

புதன், 25 ஆகஸ்ட், 2010

எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும்..


முன்பு பேச்சு என்ற தலைப்பில் ஒரு பதிவு வந்திருந்தது. படிக்காதவர்களுக்கு சுட்டி இங்கே

பேச்சு என்பது ஒரு கலைதான். பேச்சில் வளர்ப்பது நட்பையா, பகையையா... பேச்சைப் பொறுத்தது. 

வாதம் விதண்டாவாதம் ஆவதும் உண்டு. அது பற்றி எழுதியது இதோ

அடுத்தது அடுத்தவர்களைப் புரிந்து கொள்வது. 

பேசும்போது சொல்வார்கள். "நீ என்னைப்பத்தி யோசிச்சி பாரு...என் பக்கத்துல நின்னு யோசிச்சிப் பாத்தா தெரியும் உனக்கு..."  

நம்மில் எத்தனை பேர் நம்முடன் விவாதிக்கும் எதிராளியின் பார்வையில் பிரச்னையைக் காண்கிறோம்? நிறையப் பேர் எதிராளி என்ன சொல்கிறார் என்பதையே காதில் வாங்குவது இல்லை. ஒரு சின்ன இடைவெளி எப்போது கிடைக்கும், தான் சொல்லக் காத்திருக்கும் புள்ளி விவரங்களை அடுக்கலாம் என்று காத்திருப்போம்... சுலபமாக மறந்து விடுவது எதிராளியும் அதே நிலையில்தான் இருப்பார் எனபதையும், நாம் சொல்லும் விஷயங்களில் முழு மனத்தைக் கொடுக்காமல் அவர் தனது குறிப்புகளையும், வாதங்களையும் சொல்லக் காத்திருக்கிறார் என்பதையும்.

ஒரு அம்மா தன் மகனிடம் சொன்னாளாம், "டேய் கண்ணா.... இந்த மாதிரிப் பசங்களோட சேராதடா... நல்ல பசங்களாப் பார்த்து சேர்ந்து விளையாடுடா..."

பையன் சொன்னானாம், "அது சரிதான் அம்மா... ஆனால் அவர்கள் (நல்ல பசங்களுடைய) அம்மாக்கள் அந்தப் பசங்களை என்னோட சேர விட மாட்டேங்கறாங்களே...!"

எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரிதான் யோசிக்கிறார்கள்.

உபயோகமற்ற வாதங்களால் இருவர் சொலவதையும் இருவரும் கேட்காமல் தன் பக்கம்தான் நியாயம் என்று மனதினுள் நினைத்து நிம்மதி இல்லாமல் நிற்பதுதான் மிச்சம்.

ஒரு சிறுவன் ஒரு ஐஸ் க்ரீம் கடைக்கு சென்று பெரிய கப் ஐஸ் க்ரீம் விலையைக் கேட்டானாம். இருபது ரூபாய் என்றாராம் கடைக்காரர். தன்னிடமுள்ள காசை எண்ணிப் பார்த்த சிறுவன் சற்று சிறிய கப்பின் விலையைக் கேட்டானாம். கடைக் காரர் சற்றே எரிச்சலுடன் பதினெட்டு ரூபாய் என்றாராம். சரி என்று அதைக் கொண்டுவரச் சொல்லி சாப்பிட்டு விட்டு பில் பணம் வைத்து விட்டு சிறுவன் சென்ற பிறகு தட்டைப் பார்த்த கடைக் காரர் நெகிழ்ந்து போனாராம். மூன்று ரூபாய் டிப்ஸ் வைக்கப் பட்டிருந்ததாம்.

கடைக் காரர் நினைத்தது என்ன, சிறுவன் மனதில் ஓடிய எண்ணம் என்ன?

நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்றும் கட்டாயமில்லை...!

விலை உயர்ந்த, அழகிய தன் காரை ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்ற சிறுமியிடம் 'வா ஒரு சுற்று சுற்றி வரலாம்' என்று சொல்லி, காரில் ஏற்றி, சுற்றி வந்து நிறுத்தினாள் அந்தப் பெண்.

"எப்படி இருந்தது..."

"ஆஹா.... ஓடுவதே தெரியவில்லை...உள்ளே பாடலுடன் சுகமாக இருந்தது...என்ன விலை ஆண்ட்டி?"

"எனக்குத் தெரியாது... என் அண்ணன் எனக்குப் பரிசாகக் கொடுத்தது...ஏய்... என்ன அப்படிப் பார்க்கிறாய்? உனக்கும் அபபடி ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்றுதானே யோசிக்கிறாய்..?"

"இல்லை ஆண்ட்டி... உங்கள் அண்ணனைப் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்..."

எதிர்பார்ப்புகளுக்கும் எண்ணங்களுக்கும் என்னவொரு வித்யாசம்? 'பெரிதினும் பெரிது கேள்' என்ற பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.    
     

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நான் அவர் இல்லை!


அப்பாவி தங்கமணி அழைத்த தொடர்பதிவு தொங்கலில் இருப்பதால் கற்பனைக் குதிரையை தட்டி விடலாம் என்று கிளம்பினேன். மூன்று காலில் சோர்வுடன் நின்றிருந்தது. ஒரு காலை யாரோ உடைத்து விட்டார்கள் போலும்! 

"என்ன.." என்றது சிக்கனமாக.

"புறப்படணும்..." அதை விட சிக்கனமாக நான்.

"ஸாரி...ஒரு கால் உடைந்திருக்கு, இன்னொரு காலும் ரிப்பேர். இப்போ என்ன அவசரம்?"

"அவசரமா..? ஏற்கெனவே லேட்.. அப்பாவி தங்கமணி ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காக..."

"அவங்க எப்பவுமே அவங்களை அழைத்த தொடர்பதிவுக்கு ஒண்ணரை மாசம் கழிச்சுதானே எழுதுவாங்க....உனக்கு மட்டும் என்ன அவசரம்?"

"ஆயிடிச்சி...அவ்வளவு நாள் ஆயிடிச்சி..." பொய்.

"சரி..சரி.. வந்து தொலை... ஒரு கால் உடைஞ்சிருக்குங்கறேன்...."

"விடு... அதான் நல்லது... பதிவு சரியா வரல்லைன்னா கற்பனைக் குதிரை கால் உடைஞ்சிருந்தது என்று சொல்லி விடலாம்..."

ஒரு குதிரை உடம்பிலேயே புகுந்தால் என்ன...?

"ரேசில சரியா ஓடலைன்னா உடனே துப்பாக்கியைத் தூக்கி சுட்டுடுவீங்க...எங்க உடம்புல புகுந்து சொல்லணும்னா உங்களை மாதிரி மனிதர்களுக்குதான் நிறைய திட்டு விழும்..மாடு ட்ரை செய்யலாமா...அதோ ஒரு பசு மேயுது பாரு...போ,,"

வயதான பசுவாகத் தெரிந்தது. மெல்ல அருகில் சென்றேன். "என்ன என் உடம்பில் புகப் போகிறாயா...வேண்டாமப்பா...அதுக்கு என் உடம்புல தெம்பில்லை .."

"நான் எதுக்கு வரேன்னு எப்படித் தெரிஞ்சுது? நீ கத்தறது...ஸாரி! பேசறது எப்படி எனக்குப் புரியுது?"

"அதுக்கு உன் கற்பனைக் குதிரைதான் காரணம்...விடு உனக்கு என்ன தெரியணும் சொல்லு..."

"ஏன் இவ்வளவு விரக்தியாப் பேசறே..?"

"ஆமாமப்பா.. பால் வேணும்கற வரைக்கும் கறந்துப்பீங்க... வத்திப் போச்சு என்று தெரிஞ்சதும் வெட்டறதுக்கு அனுப்பிடுவீங்க...தப்பிக்கறது எங்க சாமர்த்தியம்... உங்களைச் சொல்லிக் குத்தமில்லே.. நீங்க உங்க அப்பா அம்மாவையே முதியோர் இல்லத்துல சேர்க்கறவங்க ... போப்பா...போ..பொழைப்பைப் பாரு..." மேய்ச்சலைத் தொடர்ந்தது கிழப் பசு.

சங்கடத்துடன் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை நெருங்கினேன். நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தது. ஆட்சேபம் ஏதும் இல்லாததால் மெல்ல உள்ளே புகுந்தேன்.    

........................................................

வெளியே வந்தேன். ஆடு நிச்சலனமாக நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தது. ஏதாவது பேசினேனா... தெரியவில்லை. வேண்டாம்... ஆடு வேண்டாம்.

எறும்புக் கூட்டம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. வழி தவறிய எறும்பு ஒன்று எனது அலைவரிசையுடன் ஒத்துப் போனது போலும்... சிரித்து விட்டு "வா.." என்றது.

சூபர்வைசர் எறும்பு ஒன்று வேகமாக அருகில் வந்து இதன் தலையில் தட்டி வரிசையில் சேர்த்தது. ஓடிய எறும்புக் கூட்டத்தில் என்னைப் புரிந்த எறும்பைத் தேடி கூடவே ஓடினேன். எதனிடமிருந்து வருகிறது என்று தெரியாமல் எறும்பு சைசில் குரல் மட்டும் வந்தது..."அண்ணே... நேரமில்லைண்ணே ...'அவங்களுக்குதான் வேலை இல்லை.. உனக்குமா...போ, வேலையைப் பாரு'ன்னு திட்டறாங்கண்ணே ... மீறினா தலையைக் கிள்ளிடுவாங்க. போயிட்டு வாங்கண்ணே.."

நம்ம வீட்டு நாயாய் மாறினால்...

வீட்டுக்குத் திரும்பி...

அட... பின்னாலேதான் வந்து கொண்டு இருக்கிறது.

வாலை ஆட்டியது.

"நீங்கள் தின்று போடும் மிச்சங்களைக் கொடுத்து எங்கள் நன்றியை வாங்கிக் கொள்கிறீர்கள்' என்று குத்திக் காட்டுமோ.... நன்றியுள்ள பிராணி. எஜமானைப் பாராட்டுகிறேன் என்று என்னையே புகழ ஆரம்பித்து விடும். எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது. கூச்ச சுபாவம்..

புலி, சிறுத்தை கண்ணில் கண்ணில் பட்டாலும் நான் அருகில் சென்றால் அது என்னை தின்னும். நான் உள்ளே புகுந்தாலும் நானே என்னைத் தின்றாலும் தின்று விடுவேன். வேண்டாம் ரிஸ்க்கு...

புலி சிறுத்தை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது...

ஒரே வழி...எனது அதிகாரியாய் மாறுவதுதான். தொல்லை இல்லாத வேலை. ஒரு நாள் முழுதும் கீழே வேலை செய்பவர்களை விரட்டிக் கொண்டே சும்மா இருக்கலாம்! ஆனால் அது போரடிக்குமே...

பேசாமல் சுஜாதா, சாண்டில்யன் என்று மாறி ஒரு நாள் முழுக்க ஏதாவது எழுதி சேமித்து வைத்து விட்டால் என்ன? பாவம் அவர்கள் பேரைக் கெடுக்க வேண்டாம்...

சும்மா சரித்திரக் கதா பாத்திரங்களாய் மாறி பிரிந்தவர்களைச் சேர்த்தும், சேர்ந்தவர்களைப் பிரித்தும் பார்த்தால் என்ன..? வேண்டாமா...சரி விடுங்க...

செத்துப் போன என் அம்மாவாய் மாறினால் என்ன?

"கொஞ்சம் இந்த வேலையை எல்லாம் விட்டுட்டு சாப்பிட வாடா கண்ணா...உடம்பு என்னத்துக்காகும்..."

ஐயோடா... வேண்டாம்...

தாய்க்குப் பின்....

நான் என் மனைவியாய் மாறினேன்.

அப்புறம் எனக்குப் பேசவோ சிந்திக்கவோ நேரமில்லை. தொடர்ந்து கணவருக்கு என்ன செய்ய, குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசனை ஓடிக் கொண்டே இருக்க, துணிகள் துவைத்துக் கொண்டே அரிசி, பருப்பை ஊற வைத்து விட்டு மகன் ஆஃபீசுக்குக் கிளம்ப உடைகள் எடுத்து வைத்து விட்டு "என்னங்க... அவனுக்கு நெட்டுல ஒரு வரன் பார்த்தீங்களே...என்ன ஆச்சு?" வேலைக்காரியிடம் துலக்க வேண்டிய பாத்திரங்களைக் காட்டிவிட்டு காய்கறி வாங்கக் கடைக்குக் கிளம்புமுன் இவருக்கு ஒரு ரவா உப்புமாவாவது கிண்டி கொடுத்து விட்டுப் போகலாமா, அப்புறம் காஃபி வேறு கேட்பாரே என்ற சிந்தனையுடன் ஃபிரிஜ்ஜைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு திரும்பி, 'ஐயையோ காலைப் பாலை உறை குத்தினோமோ...' ஆஹா...கால்ல என்ன வழ வழாங்குது.... என்னவோ கொட்டி இருக்கு. இதைக் கிளீன் செய்யணுமே...இந்தாம்மா...(வேலைக்காரியை) இதைக் கொஞ்சம் துடை...'

கம்ப்யூட்டரையும் கீ போர்டையும் விட்டு எழுந்தேன்...

"அந்தப் பையை இப்படிக் குடும்மா... நான் காய்கறி வாங்கி வர்றேன்... அப்படியே கடையில் ரெண்டு இட்லி சாப்பிட்டுடறேன்... நீ அலட்டிக்காதே.. உனக்கும் வாங்கி வரவா..."

அதிசயத்துடன் என்னைப் பார்த்த மனைவி, "வேண்டாம்.. நான் கோவிலுக்குப் போகணும்..என்னாச்சு உங்களுக்கு.." என் கண்களில் புதிதாய்த் தெரிந்த வாஞ்சையை பார்த்து பீதியானாள்.

பையை வாங்கிக் கொண்டு நடந்தேன்...

கத்தரிக்காயாய் மாறினால் என்ன...

கிழங்கெல்லாம் வேணாம்... மண்ணுக்குள் போக வேண்டியதிருக்கும்....! 
    

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஞாயிறு - 58A

மராட்டிய மாநிலத்தில் கோலாப்பூர் அருகே சித்தகிரி கலைக்கூடத்தில் காணப்படும் மெழுகு மற்றும் சிமெண்டால் செய்யப்பட்ட உருவங்களைக் காணக் கண் கோடி வேண்டும்.  இன்னும் நிறைய இருக்கிறது - siddhagiri  என்று கூகிளிட்டுப் பாருங்கள்.  
   

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பயம் காட்டுதல்

ராகவன், 'சாயந்திரம் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் உனக்கு பயம் காட்டுகிறேன்' என்று சொல்லிப் போனதிலிருந்து லக்ஷ்மிக்கு உள்ளூரப் பயம் தான்.ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை .

'மாறு வேஷத்தில் வருவானா? ஏதாவது பயங்கரமான மனிதர்களை உடன் அழைத்து வருவானா? நாய் பேய் என்று ஏதாவது இருக்குமோ? நெருப்புப் பெட்டியில் கரப்பான் பூச்சியோ?' என்றெல்லாம் நிலை கொள்ளாமல் தவித்தவண்ணம் உள்ளும் புறமும் அலைந்து கொண்டிருந்தாள்.

காலையில் ராகவன், "லக்ஷ்மி, என் பேனாவை நீ எடுத்தியா ?" என்று கேட்டதும், 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லாமல் ஏதேதோ பேசி விட்டதன் தாக்கம் அந்த சூளுரை வரை போய் விட்டது. நாம் வேறு மாதிரியாகப் பேசியிருக்கலாமோ என்று ஒரு கணம் நினைத்தாலும், அடுத்த நிமிடமே இந்த ராகவன் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை.  எல்லாவற்றிலும் அவன் சொன்னபடிதான் எல்லோரும் கேட்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதே அவன் வழக்கம்.  ஆகையால் ஜீன்ஸ் ஐஸ்வர்யா ராய் போல் என்னாகுமோ ஏதாகுமோ என்ற பயத்திலேயே பொழுதைக் கழித்தாள்.

மாலை ராகவன் வந்ததும் வராததுமாக பயம் பற்றிய சர்ச்சையைக் கிளப்பவே பயமாக இருந்தது.  இருப்பினும் ராகவன் ஞாபகமாக "லக்ஷ்மி, காலையில் நான் சொன்னேன் இல்லையா, மாலை நான் வந்ததும் பயம் காட்டுகிறேன் என்று..." என்று சொல்லிக் கொண்டே தன் பையைத் திறந்து அதனுள் கையை விடவும் மின்சாரம் தடைப்படவும் சரியாக இருந்தது.  ஒரே நிசப்தம். ராகவன் கையை வெளியே எடுக்கும் பொழுது "ஆ, அது என்ன? ஜன்னலிலிருந்து வந்த அரைகுறை வெளிச்சத்தில் ஒரு தலை விரி கோலமான குட்டிச் சாத்தான் பொம்மை போல ஒன்றை எடுக்கிறானே என்று நினைத்துக் கொள்ளும் பொழுது மின்சாரம் திரும்பி வர.... 

'அம்மா' என்று ஒரு அலறல் - லக்ஷ்மியிடமிருந்து அல்ல - ராகவனிடமிருந்து.  'அண்ணா நல்லாவே பயம் காட்றே' என லக்ஷ்மி சொல்ல,  ' அ... அ...அ..ங் ' தவிர ராகவனால் வேறு எதுவும் சொல்ல முடிய வில்லை. 

ராகவன் பையிலிருந்து எடுத்தது ஒரு கீரைக் கட்டு என்றாலும் அவன் பார்த்து அலறியது ஒரு பச்சைப் புழுவைப் பார்த்துதான்.  அவனே அலறியதை விட்டு விட்டு அவன் லக்ஷ்மிக்கு எப்படி பயம் காட்ட நினைத்தான் என்பது தெரிந்து கொள்ள ஆசைப் படுபவர்கள் 'bayam' ('பயம்') என்று கூகிளிடவும் அல்லது இந்தோனேசியா வரை பொடி நடையாக போய்ப் பார்த்து வரவும். 







  




("ஒபாமாவுக்கு பயம் என்றால் என்ன என்றே தெரியாது.  



ஏனென்றால் ..........

அவருக்கு ............

தமிழ் ..... 

தெரியாது !" 

என்று வந்த ஒரு குறுஞ்செய்தி தான் இதற்குத் தூண்டு கோல்.) 
  

புதன், 18 ஆகஸ்ட், 2010

தியான சுகம் .


தியானம் மெடிடேஷன் என்று இப்போது ஒரேயடியாக பிரபலம் ஆகி விட்டது. தியானத்தில் பல பிராண்டுகள் வந்து விட்டன தாடி வைத்த குரு, நெடுமுடி குறுந்தாடி, குறுமுடி நெடுந்தடி தரித்த குரு, தலைப்பாகட்டு சால்வை குரு, வயிற்றை எக்கியே கம்யூனிகேட் செய்யும் சிரித்த முகத்து குரு, ஒரு நாள் மழித்து ஒரு நாள் வளர்த்து வெரைட்டி காட்டும் சிநேகமான குரு, 'சொல்' என்பதை 'சொள்' என்றும் 'கொள்' என்பதை 'கொல்' என்றும் உச்சரித்து நம்மைக் குழப்பும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (இதுவரை மூன்றுதான் லிமிட். இது என்று ஐந்து ஆறு என்று பெருகப் போகிறதோ அப்போ இருக்கு நமக்கு ஆப்பு. ) சுவாமி என்று நமக்கு தியான / விளக்க சூப்பர் மார்க்கெட்டே இருக்கிறது.   
  
இப்படி பலமாதிரியான ஆசான்கள் நமக்கு தீட்சை அளிக்கத தயாராக இருக்கிறார்கள்.  
  
என் தியான மண்டபம் வேறு மாதிரியானது. என் குருவோ ஒரு நிஜமான கர்மயோகி அவரது ஆசிரமம் சிரமம் இல்லாதது. சுகம் நிறைந்தது. ஆனால் தியானத்துக்கு மிகவும் ஏற்ற இடம். இங்கு குரு ஒரு வண்டு போல காது கிட்ட ரீங்காரம் செய்து கொண்டே இருப்பார். அது போக 'ஞிஞய் சிசிர்' என்றோ, 'ஜிகு ஜிகு ஜிகு சட' என்றோ வாத்திய சங்கீதம் ஒரு ஆப்பிரிக்க இசை வடிவு போல வந்து கொண்டே இருக்கும். சில சமயம் தம்புரா சுருதி போல ஒன்று கேட்கும். 'தடக் தடக்' என்று ஒரு தாள ஜதி இழையும் எங்கேயோ எப்போதோ கேட்பது போல், 'சள சள' வென்று ஆனால் சன்னமான குரலில் ஒரு பேச்சு பேசுவது போல இருக்கும் ஆனால் இருக்காது. இந்த அபூர்வ சூழ்நிலை தினமும் வாய்க்காது. ஐம்பது அறுபது நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்.  
    
ஆகா, மனம் ஒருமித்து நம் மூச்சை நாமே கவனிப்பதும், நம் எண்ண ஓட்டங்களை மிகச் சரியாக எடை போடுவதும் உலகின் நன்மை தீமைகளை சீர் தூக்கிப் பார்ப்பதுமாக நாம் ஆழ் நிலையில் அமிழ்ந்து போகும் போது திடீரென்று குருவின் குரல் நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வரும்:
   
"சார் ஷேவிங்(கும்) செய்யணுமா?"   
    

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சக்கனி ராஜமார்கமு

நாள் : ஆகஸ்ட் 16, 2010.
இடம் : ரங்கிரி :: டம்புள்ளா:: ஸ்ரீலங்கா 
போட்டி: இந்தியா இலங்கை இடையே நடந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி.

வெற்றி பெற ஐந்து ரன்கள் தேவை.  சாதாரண வெற்றிக்கு பதினாறு ஓவர் இருக்கிறது.  கூடுதல் புள்ளி பெற ஆறு ஓவர்கள்.  ஒரு ஓட்டம் எடுத்து தொண்ணூற்று ஒன்பதை அடைந்த சேவாக் ஒரு ஓட்டம் எடுத்து நூறை எட்ட வேண்டும் என்று தோனி Defence விளையாடி மூன்று பந்துகளைக் கடந்த நிலை.


அடுத்த ஓவர் தொடக்கம்.  ரன்திவ் பந்து வீச சேவாக் ஒரு ரன்னைப் பெறும் முயற்சியில் ஆடத் தொடங்க, ஒரு சாதாரண பந்தை சங்ககாரா பிடிக்க முயலாமல் நான்குக்கு அனுப்ப, (அது intentional என்றும் சொல்ல முடியாதுதான்..  ஆனாலும் சங்கக்காரா வின் விக்கெட் கீப்பிங் தரமும், இந்த ஆட்டத்திலேயே அவர் விராத் கொஹ்லியின் கேட்ச் பிடித்ததும் நினைவுக்கு வருகிறதே) இப்போது தேவை வெற்றிக்கு ஒரு ரன்.  வெற்றிக்கு ஏராளமான பந்துகளும் இந்தியாவின் கையில்  ஆறு விக்கெட்டுகளும் இருக்க வேறு மாதிரி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லாத நிலை. சேவாக்குக்குத் தேவை ஒரு ரன் இந்தியாவுக்குத் தேவை ஒரு ரன்.... நூறுக்கும் வெற்றிக்கும். 

அடுத்த பால் ரந்திவ் போடுகிறார்.  சேவாக் அடிக்கிறார்.  "சிக்ஸ்"...!  கையை உயர்த்தி பேட்டைத் தூக்கி கொண்டாடுகிறார்...ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப் பட்டு ஒரு ரன் உதிரிக் கணக்கில் மட்டுமே சேர சேவாக் தொண்ணூற்று ஒன்பதிலேயே...

வெற்றிக்குத் தேவையான ரன் வந்த பிறகு பந்து போட முடியாது.  முன்னாலேயே போட்ட பந்துதான்.  போடப் பட்ட பந்து செல்லாது என்றும் அறிவிக்க முடியாது.  ஆட்டக் காரர் அதை ஆடுவதை தடுக்கவும் முடியாது.  விளையாடினால் ஓட்டங்கள் கணக்கில் சேரத்தானே வேண்டும்...  என்ன இழவு ரூல் இது..முதலில் நோ பால் அதனால் வெற்றி பெற்றாயிற்று..எனவே அதற்குப் பின் வந்த எண்ணிக்கை கணக்கில் வராது..  இந்த சூழ்நிலையில் நோ பாலை விட்டு விட வேண்டியதுதானே..  ஆறை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே...

சேவாக் மறுபடி மறுபடி வெவ்வேறு வார்த்தைகளில் இது திட்டமிட்டு நடந்தது என்று வலியுறுத்துகிறார்.  எந்த பந்து வீச்சாளரும் தனது பாலில் எதிரணி ஆட்டக் காரர் நூறு அடிப்பதை விரும்புவதில்லை என்று சொல்லி, 'ரந்திவ் நோ பாலே போடாதவர், இந்த ஆட்டத்தில் அதுவும் இயற்கைக்கு மாறாக காலை வெகு வெளியே வைத்து போட்டது யதேச்சையானது அல்ல, ஆனாலும் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே' என்று சொல்ல,   குற்றச் சாட்டுக்கு கோபப் படாமல் சங்கக்காரா 'எனக்குத் தெரிந்து இல்லை,ரந்திவ் அபபடி இல்லை, வேறு யாராவது அப்படிச் சொல்லி இருக்கிறார்களா என்று விசாரிக்கிறேன்' என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.  இரண்டு நாள் முன்பு மைதானத்தை தோனி குறை சொன்னதும் நினைவில் இருக்கும்.

ஆட்டக் காரர்கள் என்னமோ செய்து விட்டுப் போகட்டும்.  முன்பெல்லாம் ஆடும் போது இந்த மாதிரி சூழ்நிலை வந்தால் ஏழு ரன்கள் கணக்கில் சேர்க்கப் பட்டு இருக்கும்.  பேட்ஸ்மேன் கணக்கில் ஆறு சேர்ந்திருக்கும்!  இந்த ரூல்,எப்போது திருத்தப் பட்டது,  அது ஏன் ஆட்டக் காரர்களுக்கே தெரியவில்லை?  சேவாக் கையை உயர்த்தி கொண்டாடுகிறார்,  சங்கக்காரா பரிசளிப்பு நிகழ்ச்சியில்,"ஓ..அப்படியா...அந்த ரூல் எனக்குத் தெரியாது...' என்கிறார். என்ன ரூலோ...யார் போட்டதோ...எப்படி இவ்வளவு நுணுக்கமாக யோசித்து பிரச்னை செய்கிறார்களோ...?!!

கொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் சதத்தின் மிக அருகில் இருக்கும்போது நம்மூரு தினேஷ் கார்த்திக் ஆறு அடித்து அவருக்கு அந்த வாய்ப்பை மறுத்தது நினைவுக்கு வருகிறது.

கட்டாக்கில் கொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் 99 இல் இருக்கும்போது இதே அணி ஒரு வைட் போட்டதையும் சேவாக் நினைவு கூர்ந்திருக்கிறார்..

இதை எல்லாம் பார்க்கும்போது இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஆட்டத்தின் இறுதிக் கட்டம்.  பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஆட்டம்...வெற்றிக்கு ஓரிரு ரன்களே தேவை.  பாகிஸ்தான் பேட்டிங்.  கடைசி விக்கெட்.  வால்ஷ் பௌலர்.  அவர் ஓடிவந்து பாலை போடுமுன்னரே பாகிஸ்தான் ஆட்டக்காரர் அப்துல் காதிர் ஓடத் தொடங்குவதைக் கவனித்து கொண்டிருந்த வால்ஷ்,  பால் போடுவதைக் கடைசி வினாடியில்  நிறுத்தி வெளியே ஓடி விட்ட அப்துல் காதிரை பார்த்து எச்சரிக்கிறார்.  ஆனால் ரன் அவுட் செய்யவில்லை.  அசட்டுச் சிரிப்புடன் காதிர் திரும்ப வந்து நின்று கொள்கிறார்.  வால்ஷுக்கு ஜென்டில்மேன் ஆஃப் கிரிக்கெட் என்று பெயர் கிடைத்தது...  ஜியா உல் ஹக் கூட அவரைப் பாராட்டியதாய் ஞாபகம். இந்தப் பட்டத்தால் என்ன பிரயோஜனம் என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!

கபில் தேவ் ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இதே போல சீனியர் கிரிஸ்டனை எச்சரித்தார்.  அவர் மறுபடி மறுபடி அதே போலச் செய்ய அவரை அடுத்த முறை அவுட் ஆக்கி விட்டார் கபில்.

அப்படியெல்லாம் ஆட்டங்களைப் பார்த்து விட்டு இப்படி ஆட்டம் பார்த்தால்...   அதுக்குதான் நான் இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்கிறீர்களா சாய்...  நானும் மதிப்பதில்லைதான்...ஆனால் அவ்வப்போது இம்மாதிரி ஜெம் இன்னிங்க்ஸ்களை ரசிப்பதுண்டு.

ஏற்கெனவே தோனியின் முன்னேற்பாடான மைதானம் பற்றிய டயலாக் கேட்டு ஆட்டத்தின் போக்கை வேறு மாதிரி கற்பனை செய்திருந்தேன்...!

என்னவோ போங்க....! 
(தலைப்புக்கும் கட்டுரைக்கும் உள்ள சம்பந்தத்தை யாரேனும் பின்னூட்டத்தில் எழுதவும்)

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சுதந்திர தின சிந்தனைகள்.







ஆகஸ்ட் 15 என்றவுடன் நினைவுக்கு வருவது நள்ளிரவில் பெற்றோம் விடுதலை எப்போது விடிவு வருமோ என்ற (மு.மேத்தா?) குறுங்கவிதை, மற்றும் கொடித்துணியைக் கிழித்துக் கோவணமாகத் தந்தேன் என்ற சமத்காரச் சொல்லாட்டமும்தான்.  
     
சுதந்திரம் நம் மக்களுக்கு, ஒரு செண்ட்டிமெண்ட்டல் கிளுகிளுப்பு தவிர வேறு எதையும் தரவில்லை. எதிலிருந்து சுதந்திரம் பெற்றோம்?? ஆங்கிலேயருக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட்டு, வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாக இப்போது நம்மவராலேயே சுரண்டப் பட்டு சோகத்தில் தவிக்கிறோம். இதில் நம் (கம்ப்யூட்டர், கார், வீடு என்று சற்று வசதியாக வாழ்கின்ற) ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுப் புது மாதிரியாக சுரண்டலுக்கும் பிளாக்மெயிலுக்கும், அச்சுறுத்தலுக்கும் மன மயக்கங்களுக்கும் ஆளாகி கௌரவம் மரியாதை இழந்து தாம் தவிப்பதையும் உணராது அவலத்தில் இருக்கிறார்கள்.   
                   
இந்த நிலையில் ஒரு சில நூறு கோடிகளை செலவழித்து சுதந்திர தினம் கொண்டாடுவது ஒரு கேலிக் கூத்து என்பதைத் தவிர வேறு என்ன? தவறான வழியில் சம்பாதித்த செல்வாக்கு என்பதைத் தவிர வேறு தகுதியேதும் அற்ற பலப் பலர் லட்சாதிபதிகள் அல்ல அதற்கும் மேலாக கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பதைக் காண்கிறோம். கேவலமான நடத்தையும் குற்றவாளித்தனமும் கொண்ட அயோக்கியர்கள் தொலைக் காட்சியில் தோன்றி " நான் குற்றம் இழைத்தேன் என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது " என்று கேட்கிறார்கள். (நான் குற்றம் செய்ய வில்லை என்று பெரும்பாலும் இவர்கள் சொல்வதில்லை என்பது ஒரு விசித்திரம்). 
                   

யாரும் யாரும் கூடி யாரைக் கவிழ்க்கலாம் என்பது தவிர வேறு லட்சியங்கள் அற்ற அர்சியல்வாதிகளால் சீரழிகிறோம். அரசில் எனக்குப் பங்கு என்று கொள்ளைக்குத் துணைபோன சின்னத் திருடர்கள் பெரிய திருடர்களிடம் உரிமை கொண்டாடும் வெட்கமற்ற காட்சிகள் கண்முன்னே விரிகின்றனஇந்த லட்சணத்தில் யாரோ சில ஆயிரம் குழந்தைகளை விடிகாலையில் எழுப்பி புது சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி யாரோ ஒரு பூஜ்யர் பித்துக் குளித்தனமாக உளறுவதைக் கேட்கவும் கை பிசு பிசுக்க ஓரிரண்டு பப்பரமுட்டுக்களை வாங்கிக் கொள்ளவும் அனுப்பி வைக்கிறோம். " இல்லைன்னா டீச்சர் திட்டுவாங்க! " ( டீச்சரை திட்ட வேறு ஏற்பாடுகள் இருக்கின்றன.)
                       

பெரும்பதவிப் பெருச்சாளிகள் மைக் முன்னே நின்றுகொண்டு லட்சியப் பிரசங்கங்கள் செய்வதைக் கேட்கும் போது சிரிப்பு வரவில்லை, அழுகை வருகிறது.
                      
அண்மையில் பயங்கரவாதிகளை, "தயவு செய்து பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் " என்று கெஞ்சாத குறையாக அழைப்பு விடும் காமெடிக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. இடையே 600 டன் (கிலோ இல்லை டன்) வெடி மருந்தை சில புத்திசாலிகள் வண்டியில் ஏற்றி அனுப்பி, அவை காணாமல் போய் வெறும் வண்டிகள் மட்டும் தெருவில் அம்போ என்று நிறுத்தப்பட்டிருந்தனவாம். இந்த வெடிமருந்து எத்தனை இந்தியர்களை அல்லது இந்தியச் சொத்துக்களை அழிக்கப் பயன்படப் போகிறதோ யாரறிவார்?

                                        

கைதேர்ந்த குற்றவாளிகளை "அவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் அழகே அழகு " என்று பாராட்டி லாபம் பார்க்கிறார்கள். ஒரே குத்தில் எதிரியை (எதிரிகள் ஒவ்வொருவராகத் தான் வர வேண்டும் என்பது எழுதாத விதி!) பம்பரமாக நாற்பது அடி தூரத்துக்கு சுழற்றி அடிப்பதாகக் காட்டி ஹீரோக்கள் சிருஷ்டிக்கப் படுகிறார்கள். அவருக்குப் படத்துக்குப் பதினைந்து கோடி, இவருக்கு பாட்டுக்கு 2 லட்சம், காமெடிக்காரருக்கு ஷாட்டுக்கு 2 லட்சம் என்று சுவாரஸ்யமாகச் செய்திகள் போட்டு மக்கள் வெங்காய பக்கோடாப் பொட்டலம் வாங்கி ரசித்துச் சாப்பிடுவதைப் போல கொறித்துத் தள்ளுகிறார்கள்.
                          
மீட்பர் எப்போது வருவார்? வருவாரா? இல்லை படிப்படியான அழிவுதானா? ஆண்டவனே அறிவான்.