மந்திரிக்கழகு வரும் பொருள் மறைத்தல் ..... மன்னிக்கவும் 'மந்திரிக்கழகு வரும் பொருளுரைத்தல்' என்று ஒரு தமிழ் சொற்றொடர் ஆத்திச்சூடியோ மூதுரையோ கொன்றை வேந்தனோ நினைவில்லை. ஆனால் ஒரு அழகிய மந்திரியை தம் வீட்டில் வைத்திருக்கும் நண்பரை அண்மையில் சந்தித்தேன்.
"ஸார், நீங்கள் இதை நம்பமாட்டீர்கள், ஆனால் இது உண்மை. நேற்று நாங்கள் எல்லாரும் வீட்டில் உட்கார்ந்து டிவியில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் பேரன், 'தாத்தா சட்னு வா, யூசுப் பதான் சிக்ஸ் அடிக்கப் போறார்.' என்று கூவினான். வேகமாக ஓடிப்போய் டிவியை கூர்ந்து கவனித்தேன். ஆம். பதான் ஆறு விளாசித் தள்ளினார். ரி ப்ளே அல்ல, லைவ் தான்!! அது மட்டுமா, பதான் அவுட் ஆனது, அடுத்த பவுண்டரி என்று என் பேரன் ஞான திருஷ்டியோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல அப்படியே நடந்தது. ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு முன்பாக பின்பு நடக்க இருப்பதை அப்படியே சொல்லி என்னை பிரமிக்க வைத்தான் பேரப்பிள்ளை. ஒரு வேளை அடுத்த இந்தி பேசும் அலைவரிசையில் சற்று முன்பாகவே படம் வருகிறதோ என்று பார்த்தாலும் அவன் வேறு சேனல் பார்க்க எங்கள் வீட்டில் இலவச டி வி இல்லையே!"
ஒரே மூச்சில் பட படவென்று சொல்லி முடித்தார், என் நண்பர்.
குழம்பிப் போன எனக்கு கொஞ்ச நேரம் கழித்துதான் விஷயம் விளங்கியது.
அது என்ன மர்மம்? ஊகியுங்கள் பார்க்கலாம்.