பள்ளி மாணவப் பருவம். கிராமத்து வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து மைல் நடந்தால்தான் உயர்நிலைப் பள்ளி. இப்போது போல பேட்டைக்குப் பேட்டை அப்போதெல்லாம் பள்ளிக் கூடங்கள் இல்லை.
நாங்கள் ஐந்தாறு பேர் ஒரு ஜமா. வெள்ளி மாலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம். பள்ளி விட்டதும் ஊரின் ஒரே 'டெண்ட்' கொட்டகையில் படம் பார்த்தாக வேண்டும். அதுவும் முதல் காட்சியோடு இரண்டாம் காட்சியும்.
அப்போதையப் படங்களில் நீளக் கட்டுப்பாடு இருக்காது. வசனங்களுக்குப் பதில் பாட்டாகவே இருக்கும். அது பழகிப் போயிற்று. மாறுவதற்கு ஐம்பதுகள் துவக்கம் வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது.
M K T பாகவதரின் 'சிவகவி' அன்று இரண்டு ஷோக்களும் பார்த்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டோம். பாதி வழியில் நண்பர்கள் அவரவர் வீடுகளுக்குப் பிரிந்துவிட, நான் மட்டும் தனியாக ஒரு இரண்டு மைல் தொலைவு வந்தாக வேண்டும்.
சாலையின் இரண்டு பக்கமும் உசரம் உசரமாக அடர்ந்த மரங்கள் கிளைபரப்பிப் பம்மிக் கொண்டிருக்கும். தெரு விளக்கு என்பதெல்லாமும் இல்லை. சாலையில் வீடுகளும் வெகு தொலைவுக்கு இருக்காது. ஒரே இருட்டு. பயத்தைப் போக்க, உரத்த குரலில் பாடிக் கொண்டு வருவது வழக்கம். பின்னால் யாரோ வந்து கொண்டிருப்பது போல அடிக்கடித் தோன்றும். ஒரு மனப்பிராந்தி.
இந்தப் பழக்கம் நாளாவட்டத்தில் இருட்டு பயமும் இல்லாமல் செய்தது. விளைவாக பேய் பிசாசு பயங்களும் இல்லை.
=============================================
நாளச்சேரி பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார். பருத்த உடம்பு. ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காற்றாடிக் கொண்டிருக்கும். கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக் கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.
பாட்டி பேய்க்கதைகள் நிறையச் சொல்வார். அம்மாவும் பதிலுக்கு படம் காட்டுவார்.
"ஒரு நாள் வெளக்கு வச்சப்புறம் கொல்லைக்கதவைத் தற்செயலாத் திறந்தேனா.... சரசரன்னு புடைவைச் சத்தம்.... கோடி வீட்டு மங்களம்.... குளத்துல விழுந்து செத்தாளே, அவள் சரேல்னு முள்வேலிக்கு நடுவே பாய்ஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்.... ஒரு பலத்த சிரிப்பு.... போயிட்டா...."
அதிலிருந்து எனக்கு கொல்லைக் கதவைத் திறக்கவே பயம். திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும். பகலில் கூட அக்கதவுப் பக்கம் தனியாகப் போனதில்லை.
பாட்டி சர்வசாதாரணமாகக் கேட்டாள். "கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்திருக்கிறாயா நீ?"
"ரொம்பக் கேள்விப் பட்டிருக்கேன்"
"நேத்து கூட நான் பார்த்தேன். கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது.... வாயை அடிக்கடி தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில் தீத்துப்புடும்"
பாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.
"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா... ஒரு சுருட்டு பத்த வச்சிக்கிட்டு வயப்பக்கம் வந்தேன். பார்த்தா அந்த வரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு... நெருப்பா கொட்டுது, அணையுது, கொட்டுது, அணையுது.... குளத்தாண்டை திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்.... ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்..."
நான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.
"பாட்டி, நீ நிஜமா அதைப் பார்த்தியா..."
"பின்னே,,, ஒனக்கும் பாக்கணுமா....!"
அம்மா பேச்சை மாற்றினால். பாட்டிக்கு அடுத்த சப்ஜெக்ட், எதிர் வீட்டுப் பெண் வாசலில் வந்து நின்று பசங்களைப் பார்க்கிறாளாம்.... "முழியை நோண்டணும்...அந்தக் காலத்துல நாங்க வீட்டை விட்டு வெளியே வந்திருக்கோமா... இப்படியும் இருக்கிறாளுங்களே...."
பாரதி நினைவுக்கு வந்தார்.
==============================
மருதமுத்து மாரியம்மன் கோவில் பூசாரி. பார்ட் டைம் ஜாப். மிச்ச நேரம் குறி சொல்லுதல், நாடகங்களில் நடித்தல், கிடா மீசையை அவ்வப்போது ஒழுங்குபடுத்துதல்....
கோவிலில் தீமிதி உற்சவம் அமர்க்களப்படும்.மெயின் பார்ட் மருதமுத்துவுக்குதான். மஞ்சள் வேட்டி கட்டி, சாமி வந்து அவர் குதிப்பது பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி.
ஆட்டுக் கிடா, சேவல் துடிக்கத் துடிக்க வீச்சரிவாளால் பலியிடுவது அவருக்கு நல்ல அனுபவமுள்ள வேலை.
சாமி வந்து ஆடும்போது, சுற்றி நிற்கும் பக்த கோடிகள் கை கட்டி, வாய் புதைத்து நிற்பர். ஊரில் பெரிய பணக்காரராகப் பார்த்து அவரை முதலில் அழைத்து சாமி 'துண்ணூறு' கொடுக்கும். எக் கோவிலிலும் இந்தப் பணக்கார செலெக்ஷன் நிச்சயம் உண்டு.
=============================================
நண்பன் வேதகிரி அம்மா திருணம்மா மீது அடிக்கடி சாமி வந்து விடும். வெள்ளிக் கிழமைகளில் அம்மன், சனிக்கிழமைகளில் வெங்கடாசலபதி.
"சாமியாடி' என்று ஊரில் அவருக்குப் பெயர். வரம் கேட்க கூட்டம் நிறைய வரும். காணிக்கைகளுடன்.
உட்கார்ந்தவாக்கில், கண்களை மூடிக் கொண்டு உடலை முன்னும் பின்னும் அசைத்து ஆட்டம் காட்டுவார். சமயங்களில் பக்க வாட்டில் சரிந்து எழுவதும் உண்டு. ஒவ்வொரு தரமும் கற்பூர வில்லைகளைக் கொளுத்தி வாயில் போட்டுக் கொள்ளுவார். வந்திருக்கிற அத்தனை பேருக்கும் 'அருள்வாக்கு' வழங்குவது 'கிளைமேக்ஸ்'.
ஒருதடவை நான், பஞ்சாமி, சூசை, ஹனிஃபா, தங்கவேலு போயிருந்தோம்.
"ஐயரு வீட்டுத் தம்பி பாஸ் பண்ணிப்பிடும்... அதான கேக்க நினச்சே...?"
நான் அதை எங்கே கேட்க நினைத்தேன்...நான் கேட்டது..."நேதாஜி உயிரோடு இருக்காரா.... எங்கே இருக்கிறார்?"
சாமி கண்களைத் திறக்கவே இல்லை. உரக்க ராகமிட்டு "வெங்கடாஜலபதி....திருப்பதி பெருமாளே....இந்தப் புள்ளக்கி நல்ல புத்தி கொடுங்க... ஐயரு வூட்டம்மா கவலைப் படுறா.... இவன் நல்லாப் படிக்க வரம் கொடுங்க..."
இரண்டு நாட்களுக்குப் பின் குளக்கரை மதகு. வேதகிரியிடம் "நான் கேட்டதுக்கு ஒங்கம்மா பதில் சொல்லலியே..." என்றேன்.
அவன் சொன்ன பதில் முக்கியமானது.
"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"
இதுதானே சரியான பதில்!
=================================
இருட்டு. கொத்தூர்ச் சாலை வரப்பில் பிரிந்து உயர்ந்த வரப்பில் ஏறி, தாழ்ந்து, மறுபடி உயர்ந்து கொள்ளி வாய்ப் பிசாசு வந்து கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் ஏன் இடுப்பில் இடித்தான். "அது வருதுடா..."
வந்தது எங்களை நோக்கித்தான். தலையாரி கையிலிருந்த அரிக்கேன் லைட்டைக் கீழே வைத்து விட்டு, "தம்பிங்களா...இருட்டுல இங்கெல்லாம் இருக்காதீங்க... காத்து கருப்பு நடமாடற நேரம்.... வயசுப் பிள்ளைங்களாச்சே .... "
இருட்டில் மறைந்து அவர் 'ஒதுங்க'ப் போனார்.
இன்றும் கூட இப்படி இருட்டில் ஒதுங்குபவர்கள் இந்நாட்டில் ஒருவரா, இருவரா?
என்ன வயசு??????? :))))))
பதிலளிநீக்குசிவகவி எப்போ வந்தது? ஹிஹிஹி, ஐம்பதுகள் வரை காத்திருக்க வேண்டி இருந்ததுன்னா! :))))))))
மின்மினிப் பூச்சியைப் பார்த்தும் பயந்தவங்க உண்டு. ம்ம்ம்ம்ம்.... என் கணவரும் பள்ளிக்குப் போகையிலே வயல், வரப்பிலேயே நடந்து போகவர, ஆறு மைல் நடந்து போயிருக்கார்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரி தான்! சின்ன வயசில் பயந்து பயந்து இருட்டில் நடந்து பழகியது தான் பின்னாளில் எதற்கும் பயம் என்பதே இல்லாமல் மனசை உரமேற்றி வைக்கிறது!
பதிலளிநீக்குterrific memories..
பதிலளிநீக்குசிவகவி பாட்டை ரெண்டு எடுத்து விட்டிருந்தா வழிக்குத் துணையா இருந்திருக்கும்....
பதிலளிநீக்குநகரங்களுக்கு வந்துவிட்டதால் கொள்ளிவாய் பிசாசுகளை மறந்துவிடுகிறோம். கொள்ளிவாய் பிசாசுகள் நகரத்தில் தங்கவும் இடமில்லையே.
பதிலளிநீக்குஆட்டோகிராஃப் சிந்தனைகள் சுவாரஸ்யம்
பதிலளிநீக்குஎனக்கு என் பெரியம்மா ஞாபகம் வருகிறது.
பதிலளிநீக்கு”இரவு வைரவரும் காளியாச்சியும் மாறி மாறி எங்கட முற்றத்தில.முதல்ல நாய்ச்சங்கிலிச் சத்தம் பிறகு பார்த்தால் சலங்கைச் சத்தம்.அதுவும் பக்கத்து வளவு வேலிச்சண்டை.அந்த வேலியை அளவெடுக்கினம்போல....”
இதுபோல நிறையச் சொல்லுவா.அப்ப ஓம் ஓம் என்று கேட்டிருக்கிறன்.இப்ப சொன்னால்...!
//"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்?"
பதிலளிநீக்குஇதுதானே சரியான பதில்!//
அதானே:))!
பள்ளி வயதில் கூடப்படிப்பவர்கள் விடும் புருடாவை நம்பிய இரவுகளில் பயந்ததுண்டு.
சுவாரஸ்யமான அனுபவங்கள். இந்த விஷயத்தில்தான் எத்தனையெத்தனை கற்பனை இட்டுக்கட்டல்கள்! எனக்கு ‘சுவாமியும் நண்பர்களும்’ கதைதான் நினைவுக்கு வந்தது இதைப் படித்ததும். அருமை!
பதிலளிநீக்குபணக்கார பக்தர்களுக்கு மட்டுமல்ல, நெருங்கிய சொந்தங்களுக்கும் முதலில் திருநீறு கொடுக்கும் சாமிகள் உண்டு :-))
பதிலளிநீக்கு