புதன், 28 மே, 2014

அனோஸ்மியா


                             
 
நமக்கு சாதரணமாக நிறைய விஷயங்களை அருமை தெரியாமலே அனுபவிக்கிறோம். பேச்சு, கண்பார்வை, ஊனமில்லா உடல்... ஏதாவதொன்று இல்லாமல் போகும்போதுதான் அதன் அருமை தெரியும்.


என் பதின்ம வயது நண்பர் ஒருவரை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பயங்கரமாக இளைத்திருந்தார். அவ்வப்போது பார்த்துக் கொள்வதுதான். ஆனால் நீண்ட இடைவெளிகளில். 

சுவையான பிரியாணி தயாராகிறது. கலர்புல் ஸ்வீட் தயாராகிறது. ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே சாம்பார், குருமா தோசை, எண்ணெய் வாசனை மூக்கைத் துளைக்கிறது. சுவை நரம்புகள் தூண்டப்பட்டு ஆர்வப்பசி வருகிறது.

                                                              
 
ம்யூட் ஆன டிவி பார்த்திருக்கிறோம். காது கேளாதோருக்கு உலகமே ம்யூட்டில்தானே இயங்குகிறது. அது போல இந்த உணவுப்பொருள்களின் மணம் நம் நாசிகளுக்குத் தெரியாவிட்டால்...
                                                                 
                                       

என் நண்பர் முன்னரே சர்க்கரை வியாதிக்காரர் என்று தெரியும். கிட்னி பாதிக்கப்படப் போகிறது, கண்கள் பாதிக்கப்படப் போகிறது என்று எச்சரிக்கையாக அவப்போது சோதனை செய்துதான் வருகிறார்.


அவர் வந்த நேரம் வீட்டில் மணக்க மணக்க முருங்கைக்காய் வெந்தியக் குழம்பு வைத்திருந்தோம். அவரைச் சாப்பிடச் சொன்னதும் ஒன்றும் சொல்லாமல் கொஞ்சம் சாப்பிட்டார். பின்னர் பேச்சுவாக்கில்  குழம்பு வாசனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் தனக்கு கடந்த இரண்டு வருடங்களாக எந்த வாசனையுமே தெரிவதில்லை என்றார். 


அதிர்ச்சியாக இருந்தது. 

சாப்பாட்டின் மீதான ஆர்வமே குறைந்து, சும்மா பசிக்குச் சாப்பிட்டு வந்திருக்கிறார். எனவேதான் அநியாயமாக இளைத்திருக்கிறார். 
 


                  

குருமாவோ, சரவணபவன் சாம்பாரோ நாக்கில் படும்போதுதான் சுவை மணம் என்று நமக்குத் தோன்றும். ஆனால் வாசனையே தெரியாமல் என்ன சுவை இருந்து என்ன பயன்? சுவையே அறியாமல் போய்விடும்.
                                                    
                        
 
மருத்துவர்களிடம் சரியாகி விடுமா என்று கேட்டால், 'பார்ப்போம்' என்றும் மருத்துவம் பார்த்தாலும், இவருக்கு சர்க்கரை நோயினால் இந்நிலை வந்திருந்தாலும், இது கூட ஒரு முன்னோடி தான் சீக்கிரமே உங்களுக்கு பராலிட்டிக் அட்டாக் வரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி பயமுறுத்தி இருக்கிறார்கள். 
 

 
 
 
மிக நெருங்கிய சிலர் தவிர மற்றவர்களுக்கு இவரின் இந்த பாதிப்பு தெரியாமல் வைத்திருக்கிறார்.

பஸ்ஸில் போனால், கூட்டத்தில் இருந்தால் வியர்வை நாற்றம், மற்ற வாயு நாற்றங்களினால் பாதிக்கப்பட மாட்டார் என்று பேசிக் கொண்டோம். அதே போல, வீட்டில் கேஸ் லீக்கானால் கூடத் தெரியாது என்பதும் உரைத்தது. 
 
 
                                                


மூக்கு என்பது சுவாசிக்க மட்டுமே... மற்றபடி பயனில்லை என்பது என்ன கொடுமை?

15 கருத்துகள்:

  1. #மூக்கு என்பது சுவாசிக்க மட்டுமே. #
    சில நாட்களுக்கு முன்தான் மூக்கு ,மூக்கு கண்ணாடியை தாங்கவும் தேவைன்னு எழுதியது நினைவுக்கு வந்தது !

    பதிலளிநீக்கு
  2. மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஒரு விபத்தில் தன் நாசியின் வாசனைத் திறனை இழந்தார். மூளையில் அந்த நரம்புகள் பாதிக்கப் பட்டு இருந்தனவாம். இப்பொழுது எப்படி இருக்கிறாரோ. நான் பார்த்த போது அதற்காகக் கவலைப் பட்ட மாதிரி தெரியாவில்லை. காஸ் லீக் என்றதும் பகீர் எகிறது.

    பதிலளிநீக்கு
  3. மாறுவது சிரமம் என்றே தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு
  4. பெயரில் இனிப்பை வைத்திருக்கும் நோய் எத்தனை அபாயகரமானது என்பது அதிர வைக்கிறது. வாசனை கூட நம்மை விட்டுப் போய் விடும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. Wegener's granulomatosis என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள ஒரே துடிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. பாவம் தான். நம்மை எல்லாம் இந்த மட்டுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்கிறாரே என சந்தோஷமும் பட வேண்டும். கடவுளுக்கு நன்றி. விரைவில் அவர் உடல்நலம் அடையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. எந்த வித வாசமும் தெரியாமல் இருப்பது கொடுமை தான்.....

    பதிலளிநீக்கு
  8. அடக் கொடுமையே.. பாவம்தான் அவர்

    பதிலளிநீக்கு
  9. நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது! பாவம் அவர்! விரைவில் குணமடையட்டும்!

    பதிலளிநீக்கு
  10. ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்
    இதே மனிதர்கள் தாம், இதே மூக்கு, தொண்டை, வாய், நாக்கு, கண்கள், மூளை தாம்!

    அப்பொழுது தெரிந்திராத (அதைப் பற்றி அறிவில்லாத என்று சொல்ல முடியாது; மிகச் சிறந்த மருத்துவ மேதைகள் இருந்திருக்கிறார்கள்)
    பல புதுப்புது வியாதிகளும் அவற்றின் பெயர்களும் இப்பொழுது தான் சகஜமாக நமக்கெல்லாம் தெரியவருகின்றன.

    இதற்குக் காரணம் இப்பொழுதிய மருத்துவ அறிவு வளர்ந்திருக்கிறது என்று கொள்ளலாமா அல்லது இப்பொழுது தான் இந்த வியாதிகள் எல்லாம் தோற்றம் கொண்டிருக்கின் றன என்று சொல்லலாமா?

    இது ஆராய்சிக்குரிய சப்ஜெக்ட்!

    மூக்கு பற்றிய பதிவாகையால் நினைவுக்கு வந்தது. 88 வயது
    பெரியவர் ஒருவர் எனக்குப் பழக்கம். பொடித்தாத்தா என்று தான் சிறுவர்கள் கூப்பிடுவார்கள்.
    'சர்..சர்'.. என்று பொடி ஏற்றிக் கொண்டு கண்கள் ஜிவுஜிவுக்க சாமவேத மந்திரங்களை
    ராகம் போட்டு ஸ்பஷ்டமாக அவர் சொல்லும் அழகும் அவரின் தேஜஸூம் இருக்கே! மனிதர் அந்த வயதிலும் திடகாத்திரமாக தாண்டிக் குதித்து ஓடி வருவார். அவரிடம் ஓசிப் பொடி...

    ஓசிப்பொடி சமாச்சாரம் ஒண்டர்புல்லான விஷயம்...
    இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. என்னுடன் 20 வருடங்களுக்கு முன்னால் இங்கு ஒரு பெண் (திருமணமானவள் 25க்குள்தான் இருக்கும்) வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் அவரால் எந்த வாசனையையும் உணர முடியாது என்றார். அப்போ Gas Leak ஆனால் என்று கேட்டதற்கு, அதற்கு ஒரு equipment இருக்கிறது. Gas Leak ஆகும்போது சத்தம் கொடுக்கும், விளக்கு எரியும் என்று சொன்னார் (எப்படி என்றெல்லாம் தெரியாது. ஆனால் இத்தகையவர்களுக்காக அந்த facility இருக்கிறது).

    உணவின் வாசனைதான் பசி உணர்வைத் தூண்டுகிறது. இல்லாவிட்டால் ருசி தெரியாது. (வெறும் கசப்பு, இனிப்பு போன்றவை மட்டும் தெரியும்).

    பூரி மசால், வாசனை இல்லைனா, அது என்ன பூரிமசால். பாவம்தான் உங்கள் நண்பர்.

    இதுபோல், கண் பார்வை அற்றவர்களுக்கு.......

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!