8.10.25

சமாதானத்துக்கான நோபல் பரிசு என்பது முக்கியமா?

 

ஸ்கூல் லீவு, பூஜை விடுமுறைகள், சுண்டல் நாட்கள், அரசியல் நிகழ்வுகள் என்று பல காரணங்களால், நம் வாசகப் பெருமக்களுக்கு கேள்விகள் ஒன்றும் கேட்கக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். 

ஆனாலும் என்ன? 

நாங்களே ஒரு கேள்வி கேட்டோம். பல பிரபலங்கள் அந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்லியிருப்பார்கள் என்று கற்பனை செய்தோம். 

எங்கள் கேள்வி : 

உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று போர் முகம் காட்டி வரும் இந்தக் காலத்தில், சமாதானத்துக்கான நோபல் பரிசு என்பது முக்கியமா? 

பதில்கள் :

1) அதிராவின் பாஸ் - ட்ரம்ப் அங்கிள் : 

ஏய் ! யாரங்கே? இந்த மாதிரி வம்பு கேள்வியைக் கேட்ட எங்கள் Blog வலைப்பதிவை அமெரிக்காவில் படிப்பவர்கள் எல்லோரும் 100% வரி கட்டவேண்டும் என்று இப்போதே உத்தரவு இடுகிறேன். 

எலான் மஸ்க் : சார் - ஆனால் வலைப் பதிவுகளைப் படிக்க நம்ம நாட்டுல வரி எதுவும் கிடையாதே !

டிரம்ப் : ஏன்யா - லூஸா நீயி? நான் சொல்லிட்டேன் இல்ல - இன்று முதல் ஒருவரை அப்பாய்ண்ட் பண்ணி, எங்கள் Blog பதிவுகளில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வரிகள் உள்ளன என்று எண்ணி என்னுடைய பார்வைக்கு அனுப்பச் சொல்லு. ஒவ்வொரு வரிக்கும் ஒரு டாலர் வரி. 

எலான் மஸ்க் : சார் அந்த வரி எண்ணுகிற போஸ்டுக்கு ஆளுங்க யாரும் வரத் தயாராக இல்லை. 

டிரம்ப் : ஏன்? 

எலான் மஸ்க் : ஏற்கெனவே செனட் அப்ரூவல் கிடைக்காததால் அரசாங்க அதிகாரிகள் சம்பளம் கிடைக்காம வயித்துல ஈரத் துணியைப் போட்டுக்கொண்டு பட்டினி கிடக்கறாங்க. இங்கே வந்து அவர்கள் எங்கள் Blog பதிவைப் படித்து, எவ்வளவு வரிகள் என்று சொன்னால், நீங்க அவருக்கே 27 டாலர் வரி (ஆமாம் இது 27 ஆவது வரி) போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம். 

டிரம்ப் :  வயித்துல ஈரத் துண்டா - அது எங்கே உற்பத்தி செய்யப்பட்ட துண்டு ?

எலான் மஸ்க் : அது வந்து திருப்பூர் என்ற ஊரில் தயாரிக்கப்பட்ட துண்டு. 

டிரம்ப் : திருப்பூர் எங்கே இருக்கு? 

எலான் மஸ்க் : இந்தியாவுல 

டிரம்ப் : இனிமே திருப்பூர் துண்டுகளுக்கு 100% வரி. 

எ ம - துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார். 

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த டிரம்ப் உதவியாளர், " சார் நீங்க நோபல் பரிசு குறித்த கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே? " 

டிரம்ப் : "எந்தக் கேள்வி ?"  

உதவியாளர்  : " எங்கள் Blog கேள்வி "

டிரம்ப் : " நீ அதைப் படிச்சியா " 

உதவியாளர் : " ஆ ஐயோ ஆமாம் .. இல்லை எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. என்னிடம் திருப்பூர் துண்டு இல்லே .." (ஓடுகிறார்) 

= = = = = = = = = =

ரஷ்ய அதிபர் புடின் : 

ஏற்கெனவே 420(!) க்கு மேற்பட்ட நோபல் பரிசாளர்களைக் கொண்ட அமெரிக்காவுக்கு நோபல் பரிசு கொடுக்கக் கூடாது. பாகிஸ்தான் ராணுவம் சண்டையை நிறுத்தச் சொன்னதும் நிறுத்திய இந்திய ராணுவ அமைச்சருக்குத்தான் சமா  நோபல் பரிசு வழங்கவேண்டும். 

அல்லது எங்கள் ரஷ்யத் தலைவர் பெயர் கொண்ட தலைவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். 

நிருபர் : அவர் சமாதானத்துக்கான முயற்சி என்ன செய்தார்? 

புடின் : கே டி சகோதரர்கள் இருவருக்குள் சமாதானம் பேசி சமூக 'நிதி'யை நிலை நாட்டினார் என்று கேள்விப் பட்டேன். நீங்க அவரிடம் சென்று விசாரிக்கலாம். 

- - - - - - - - - - - -

நிருபர் : புடின் சொன்ன 'அவர்' நீங்கதானா? 

அவர் : ஆமாம். 

நிருபர் : உங்கள் சமாதான முயற்சி உண்மைதானா? 

அவர் : ஆம். 

நிருபர்: நான் நோபல் கமிட்டியினரிடம் தொடர்பு கொண்டு, பேசினேன். அவர்கள் ஒரு துண்டு சீட்டு என்னிடம் கொடுத்து இதில் இருப்பதை நீங்க பார்த்துப் படித்துவிட்டால் உங்களுக்கே சமாதான நோபல் பரிசு என்று சொல்லியிருக்கிறார்கள். 

அவர் : எங்கே கொடுங்க ? 


பார்த்துவிட்டு அவர் கூறியது : " எனக்கு இந்த பல் உடைக்கின்ற நோ-பல் பரிசு எல்லாம் வேண்டாம். இதை விட உயரிய விருதாகிய 'யுனெஸ்கோ சமாதான சமூக "நிதி" பரிசு போதும். " 

- - - - - - - - - - -

நிருபர் : சார் உங்க பெயர் என்ன? 

" Fidel Edwards " 

(West Indies Bowler ) 

நிருபர் : " உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்று ஏன் சொன்னீங்க ?" 

எட்வர்ட்ஸ் : " நான் சொன்னதை நீங்க சரியா கேட்கவில்லை "

நிருபர் : " என்ன சொன்னீங்க?"

எட்வர்ட்ஸ் : " நான் சொன்னது - நோ பால் (No Ball_ - பரிசு கொடுப்பதாக இருந்தால் அது எனக்குத்தான் கொடுக்கவேண்டும் - என்று" 

நிருபர் : " அப்படியா! நோ பால் பரிசு பெற நீங்கள் செய்த சாதனை என்ன?"

எட்வர்ட்ஸ் : " என் கிரிக்கட் வாழ்க்கையில் டெஸ்ட் தொடர்களில் இதுவரை நான் 325 நோ பால் போட்டுள்ளேன். " 

= = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


பஹ்ரைனில் மால்களில் தியேட்டர் காம்ப்ளெக்ஸ் நிறைய உண்டு. அது தவிர தனிப்பட்ட திரையரங்கமும் உண்டு. அல் ஹம்ரா எனப்படும் இந்தத் திரையரங்கம் என் வீட்டருகே அமைந்திருந்தது. ஒவ்வொரு முறையும் திரைப்படம் பார்க்கப்போகும்போது என்ன படம் என்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வேன் (பெரும்பாலும்). நம்ம ஊர் மாதிரி கச்சா முச்சான்னு தியேட்டர்கள் இருக்காது (ஆனால் இப்போ நம்ம ஊர் தியேட்டர் காம்ப்ளெக்ஸிலும் நல்ல தியேட்டர்கள் பல இருக்கின்றன)


Balcony Ticketதான். கூட்டம்லாம் பெரும்பாலும் இருக்காது. இது நான் ஐ படம் பார்த்தபோது! 

('ஐ' யஹோ ! தனியாக உட்கார்ந்து பார்க்க பயமா இல்லையா? ) 


ஒருவேளை அமி ஜாக்சனைப்  பார்த்து பயம் தெளிந்திருப்பார்! 
- - - - - - - -


இங்க பெங்களூர்ல, என் வளாகத்தை ஒட்டியே இருக்கும் தியேட்டர் காம்ப்ளக்ஸில் அவ்வப்போது படத்துக்குச் செல்வேன் (முன்பு அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். அதாவது Book My Showல பார்த்து, அன்றைக்கு எந்த ஷோவுக்கு டிக்கெட் விலை குறைவு என்று பார்ப்பேன். வார நாட்களில் காலை 10 மணிக்கு மிகக் குறைவான விலைதான் இருக்கும், 112 என்பது போன்று. அதுபோல படம் அன்றுதான் கடைசி என்பதுபோல இருந்தால் 99 ரூபாய். டக் என்று பத்து நிமிடங்களுக்கு முன்னால் வீட்டிலிருந்து புறப்பட்டு படத்துக்குச் சென்றுவிடுவேன். ஆனால் இப்போதெல்லாம், எப்போதாவதுதான் செல்கிறோம். எனக்கு, நாலு படங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக ஓடிடி தளம் ஒரு வருடத்துக்கு பணம் கட்டிவிடலாமே என்ற எண்ணம்தான்).

- - - - - - - - - - -


தாய்லாந்து சென்றிருந்தபோது, நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் ஒரு தாமரைக்குளம் (அப்படீல்லாம் இல்லை. நீர்நிலைல தாமரையை வளர்த்திருந்தாங்க) பார்த்தேன். பொதுவா தாமரையை தற்காலங்களில் பார்ப்பது அரிது. அல்லிக்குளம் நிறையவே நான் பார்க்கிறேன். அதிலும் இந்தத் தாமரை ஆயிரம் இதழ்கள் என்று சொல்லும்படியாக ரொம்பப் பெரியதாக இருந்தது. இந்தப் படத்தை எங்கள் பிளாக் தளத்தில் பதிவிடணும் என்று தேடிக்கொண்டிருந்தேன்.



இந்தப் படத்தைப் பார்த்ததும் ஸ்ரீராம் மனதில் எந்தப் பாடல் ஒலிக்கும்?  அமேசான் காடுகள் பற்றிய டாக்குமெண்டரிகளில் நான் தாமரை இலைகளைப் பார்த்திருக்கிறேன். எம்மாம் பெரிசு இருக்கும் தெரியுமா? அதில் அனகோண்டா பாம்பின் குட்டி படுத்திருக்கும் என்றால் எவ்வளவு பெரிய ஸ்டிராங்கான இலையாக அது இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.  ஆமாம், தாமரைக் கண்ணன் என்று சொல்கிறார்களே, ஆணின் கண்ணின் நிறம் அப்படி இருந்தால் அழகாக இருக்குமா?

= = = = = = = = = =

KGG பக்கம்: 

நான் படிக்கின்ற நல்ல மருத்துவ குறிப்புகளை, அவ்வப்போது 'ClevNote' செயலி மூலம், என் போனில் சேர்த்து வைப்பது என் வழக்கம். 

அதிலிருந்து, இன்று கடுக்காய் பற்றிய தகவல்கள் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். 

நீங்கள் அனைவரும் கடுக்காயைப் பார்த்திருப்பீர்கள். எனினும் பார்த்திராத அல்லது அறிந்திராத தலைமுறைக்கு, இதோ கடுக்காய்: 

கடுக்காய், ஆங்கிலத்தில் Haritaki, Harad, Inknut என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. 

இன்றைய விலையில் 100 கிராம் கடுக்காய் சுமார் 45 ரூபாய்க்கு கிடைக்கிறது (Amazon price) நாட்டு மருந்துக் கடைகளில் இன்னும் மலிவாகக் கிடைக்கலாம். 

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையையும் நீங்கள் எடுத்துக் கொண்டால் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது.

 அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்!

கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

1. கண் பார்வைக் கோளாறுகள்

2. காது கேளாமை

3. சுவையின்மை

4. பித்த நோய்கள்

5. வாய்ப்புண்

6. நாக்குப்புண்

7. மூக்குப்புண்

8. தொண்டைப்புண்

9. இரைப்பைப்புண்

10. குடற்புண்

11. ஆசனப்புண்

12. அக்கி, தேமல், படை

13. பிற தோல் நோய்கள்

14. உடல் உஷ்ணம்

15. வெள்ளைப்படுதல்

16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்

17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு

18. சதையடைப்பு, நீரடைப்பு

19. பாத எரிச்சல், மூல எரிச்சல்

20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி

21. ரத்தபேதி

22. சர்க்கரை நோய், இதய நோய்

23. மூட்டு வலி, உடல் பலவீனம்

24. உடல் பருமன்

25. ரத்தக் கோளாறுகள்

26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்

மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவ த்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க.

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26 நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, பிணி இல்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள். 

மழைக் காலங்களிலும், பனிக் காலங்களிலும் என்னிடம் எப்போதும் கடுக்காய்த் தோல் கைவசம் இருக்கும். தொண்டையில் கிச் கிச், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கபக்கட்டு அறிகுறிகள் தோன்றினால், உடனே ஒரு சதுர செ மீ அளவிலான கடுக்காய் தோலை வாயில் அடக்கிக் கொண்டு எச்சில் விழுங்குவேன். நிவாரணம் கிடைக்கும். 

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்! 

= = = = = = = = =

73 கருத்துகள்:

  1. கடுக்காயைப் பற்றிப் படித்ததும் என் தாளவாடி நாட்கள் (ஏழாம் வகுப்பு) நினைவுக்கு வருகின்றன. அங்கு மலைப் பகுதியில் விளையும் கடுக்காயை மைதானங்களில் காய வைத்திருப்பார்கள். அதன் உள் உள்ள கொட்டையை நீக்கிப் பயன்படுத்தணும் என்று இப்கோதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உள்ளே இருக்கும் கொட்டையை அகற்ற வேண்டும். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. கடுக்காய் சின்ன வயசில் இருந்தே பயன்பாட்டில் வைச்சிருக்கோம். ஆனால் குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க. நானும் அவரும் மட்டும் தான். கடுக்காய் மாத்திரைகளாக வைச்சிருக்கேன்.

      நீக்கு
    3. இப்போ இங்கே தோஹா வந்ததில் ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு வரவே இல்லை. அரசு அங்கீகாரத்துடன் கூடிய மருத்துவமனையின் மருந்துச் சீட்டுகள் தான் இங்கே காட்டலாம். நான் காட்டிக் கொண்டிருந்தது வெங்கட்ரமணா வைத்தியசாலை, கரூரின் மருத்துவரிடம். ஆகவே அவற்றைத் தொடரவில்லை. இப்போ எல்லாமே அலோபதி தான்.

      நீக்கு
    4. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. நாபல் சபாதானப் பரிசு என்பது தகுதியில்லாதவர்களுக்கும், அவர்களுக்கு சோப் போட அளிக்கப்படுவது, தகுதி உள்ளவர்களுக்கு அரசியல் மதக் காரணங்களுக்காக அளிக்கப்படுவதில்லை என்பது என் அனுமானம். அவங்களுக்குத் தேவையானவர்களுக்கு அவர்கள் இந்தப் பரிசை வழங்குகிறார்கள், நம் திமுகவின் அண்ணா பெரியார் விருதுகளைப் போல.

    அபூர்வமாக, இந்தப் பரிசை இவருக்குக் கொடுத்துத் தொலைத்தால், உலகில் சமாதானம் ஏற்பட்டுவிடும் எனத் தோன்றும் காலம் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  3. ஆக,
    கௌதம் ஜி எல்லாருக்கும் கடுக்காய் கொடுத்து விட்டார்..
    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  4. அதற்காகப் பரிசு என்பதே பீற்றல்...
    ..
    யாருக்கு யார் எதைக் கொடுத்தால் என்ன?

    நாயின் பாடு நக்கித் தான்
    கோழியின் பாடு கொத்தித் தான்..

    பதிலளிநீக்கு
  5. தஞ்சாவூர் பூச்சந்தையில் தாமரைப் பூக்கள் கிடைக்கின்றன..

    தெய்வமலரை காத்துக் கொள்ள தவறி விட்டோம்..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்று வித்தியாசமான புதன். "புதன் கிடைத்தாலும் பொன் கிடைக்காது" என்றொரு சொல் வழக்கு உண்டு. அதற்கான விபரமான பதிலை எதிர்பார்க்கிறேன். நோபல் பரிசு அந்த பொன்னுக்கு நிகராகுமா? இல்லை பொன்னை விட தரம் மிக்கதா? புகழ், செல்வம் எது சிறந்தது புரியவில்லை? (எதுவுமே நிரந்தரமில்லை என்பது மட்டும் நம் (என்) மனம் எப்போதும் சொல்லிக் கொண்டுள்ளது.)

    படங்களும் பதமும் விபரங்களில் சகோதரர் நெல்லைத் தமிழர் கலக்கி வருகிறார். அவரின் படங்களும், அதற்கான விளக்கங்களும் மனதை நிறைக்கின்றன. தாமரை மலர் மிக அழகாக இருக்கிறது. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்ற நினைப்பு வருகிறது. அழகிய மலரை பகிர்ந்த அவருக்கு நன்றி.

    கடுக்காயின் பலன்களை கூறியது சிறப்பு. "காலையில் இஞ்சி, நடுப்பகலில் சுக்கு, இரவில் சிறிது கடுக்காய்" என எடுத்து வந்தால், மேற்கூறிய உடல் உபாதைகள் குறையும் என பெரியவர்கள் சொல்வார்கள். என்னிடமும் கடுக்காய் சூரணம் உள்ளது. அவ்வப்போது பயன்படுத்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள், நல்ல நாளுக்கு. தங்கம் விலை அதீதமாக ஏறிக்கொண்டுவரும் இந்தச் சமயங்களில் , அப்போவே வாங்காமல் போனோமே என்று ரொம்பவே கலங்கியிருப்பாரோ கமலா ஹரிஹரன் மேடம்? அந்த நினைவிலேயே பழமொழியை இந்தக் காலத்துக்கேற்றபடி மாற்றிவிட்டாரே

      நீக்கு
    3. ஹா ஹா ஹா. ஆம். "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது." என்பதே சரியான பழமொழி. கல்விக்கு அதிபதி புதன். சேரும் செல்வத்திற்கு இடங்கொடாமல், பொன் வாங்க வேண்டுமென சிரமப்பட்டு சேர்த்து வைக்கும் பணம் ஒவ்வொரு புதனுக்குள்ளும் செலவாகி விடுமோ? அதனால்தான் இந்தப்பழமொழி யாரோ ஒருவரால் முதலில் உருவானதோ .?

      ஒரு வேளை இது இன்று மாறியமைந்ததும் இன்றைய வித்தியாசமான புதன் பதிவை படித்ததினால் இருக்குமோ? நீங்கள் பகிர்ந்த தாமரையை பார்த்ததிலிருந்து, "ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ எங்கள் தேவி முகம்"என்ற பி. சுசீலா அவர்களின் பக்திப் பாடல் மனதுக்குள் ஓடியபடி உள்ளது. அருமையான பதிவு.

      நீக்கு
    4. கமலாக்கா எந்தப் பரிசுமே ஒன்றும் பெரிதல்ல. அதுவும் இப்போ எல்லாம் பரிசுகளுக்குப் பின் நடக்கும் விஷயங்கள் ....

      குன்றின் மீதிட்ட விளக்கு போல இருந்தாலே போதும்.

      கீதா

      நீக்கு
  8. சமாதானத்துக்கான நோபல் பரிசு.... எந்தப் பரிசுமே முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. அன்றைய செய்திக்கு உபயோகமாகும். ஆனால் ரொம்ப வயதான பலருக்கும், "நோ பல்" பரிசு தானாகவே கிடைத்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  9. எனக்கென்னவோ, நான் கேள்விகள் அனுப்பி, கேஜிஜி சார் மிஸ் பண்ணியிருக்கிறார் என்ற சந்தேகம். இன்னொன்று, பத்திரிகை ஆசிரியர் என்பவர் சிலவற்றைப் பதுக்கி, கேள்விகள் வராதபோது உபயோகித்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? சரி பார்த்து சொல்கிறேன்.

      நீக்கு
  10. கடுக்காய்த்தோல் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்படியான விஷயங்களுக்காகத்தான். கடுக்காய் நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது.

    திரிபலாவும் சாப்பிடுவதுண்டு. (அதிலும் கடுக்காய் உண்டே)

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ட்ரம்ப் - சிரித்துவிட்டேன். நல்ல கற்பனை. ஒரு வேளை ட்ரம்ப் நம்ம அப்பாதுரைஜியை கன்சல்ட் செய்யலாம் அப்பாதுரை ஜி அவருக்குசப்போர்ட்டர் இல்லையோ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அல்லது எங்கள் ரஷ்யத் தலைவர் பெயர் கொண்ட தலைவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். //

    ஹாஹாஹாஹா....இப்பலாம் அந்தப் பெயரை அவர் கடைசிலதான் சொல்றார்னு தெரியுதே. முழுப்பெயரையும் சொல்லி...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பார்த்துவிட்டு அவர் கூறியது : " எனக்கு இந்த பல் உடைக்கின்ற நோ-பல் பரிசு எல்லாம் வேண்டாம். இதை விட உயரிய விருதாகிய 'யுனெஸ்கோ சமாதான சமூக "நிதி" பரிசு போதும். "

    சிரித்துவிட்டேன்!! நல்ல கற்பனை அதுவும் கடைசில அந்தப் பெயர்!!!!!! செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'யுனெஸ்கோ சமாதான சமூக "நிதி" பரிசு போதும். "// இதுதான் அந்தக் கடைசி....தெரியாம பெயர்னு வந்துருச்சு,

      கீதா

      நீக்கு
    2. புரிந்து கொண்டோம். நன்றி.

      நீக்கு
  14. கடுக்காய் மருத்துவ குணங்களைப்பற்றி நன்றாக தெறிந்துகொண்டேன்.
    இதேபோல். அவர் அவர்கள் அனுபவத்தில்
    கண்ட மருத்துவ குணங்கள் கொண்ட வற்றை பகிர்ந்தால்
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேட்டதை பகிரவேண்டாம்
    அனுபவத்தில் பயன் அடைந்ததை மட்டம் பகிரவும்
    நன்றி
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  15. என்ன படம் அது நெல்லை?

    ஓ ஐ படமா!

    தாமரைக்குளம் + தாமரைப் பூ சூப்பர். அழகா இருக்கு,

    கீதா

    பதிலளிநீக்கு
  16. //இன்றைய விலையில் 100 கிராம் கடுக்காய் சுமார் 45 ரூபாய்க்கு கிடைக்கிறது (Amazon price) நாட்டு மருந்துக் கடைகளில் இன்னும் மலிவாகக் கிடைக்கலாம்//

    நாட்டு மருந்து கடைகளில் விலை சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கு. சில பொருட்களுக்கு அமேசானே பெட்டர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. டிரம், புடின், உரையாடல் செம கலக்கல்.

    தாமரைப்பூ மிக அழகாக இருக்கிறது. சரஸ்வதி பூஜைக்கு தாமரை மலர்கள் இங்கு வாங்கினோம்.

    கடுக்காய் வைத்தியக் குறிப்புகள் நன்று.

    பதிலளிநீக்கு
  18. " சமாதான சமூக சம நிதி "
    நன்றாகத் தான் இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  19. எதற்கும் கவனமாக இருக்கவும்

    பதிலளிநீக்கு
  20. சஹஸ்ர தள வாசின்யை நம

    சாதாரண தாமரையை ஆயிரம் இதழ் உடையது
    எனப் புகழ்வது வழக்கம்.

    தாமரையின் சூலகத்தைச் சுற்றிலும் தழைத்திருக்கின்ற நுண்மங்களை கணக்கிட்டவர் எவரும் உண்டோ!..

    பதிலளிநீக்கு
  21. சஹஸ்ர தள வாசின்யை நம

    சாதாரண தாமரையை ஆயிரம் இதழ் உடையது
    எனப் புகழ்வது வழக்கம்.

    தாமரையின் சூலகத்தைச் சுற்றிலும் தழைத்திருக்கின்ற நுண்மங்களை கணக்கிட்டவர் எவரும் உண்டோ!..

    பதிலளிநீக்கு
  22. கேள்வியும், பதிலும் அருமை. நெல்லையின் தியேட்டர் அனுபவங்களும் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. தியேட்டரில் படம் பார்த்தே சுமார் 30 வருடங்கள் இருக்குமோனு நினைக்கிறேன். அதென்னமோ ஆவலோ, ஆர்வமோ இருந்ததில்லை. ஒரு மாதிரிச் சலிப்புத் தான் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே, அதே!

      நீக்கு
    2. எனக்கு என்னவோ தியேட்டரில் படம் பார்ப்பதுதான் பிடிக்கும். சென்னையில் இருந்தவரை என் கணவர், நான், என் சினேகிதி மூவரும் தியேட்டரில் நிறைய படம் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் விருகம்பாக்கம் ஐநாக்ஸ். பெங்களூர் வந்த பிறகு குறைந்து விட்டது.

      நீக்கு
  23. திருப்பனந்தாள் மடத்துக்குப் போயிருந்தப்போ அங்கே தாமரைக்குளத்தைப் பார்த்தேன். நம்ம கு.கு. கூடக் கும்பகோணம் வழியே குலதெய்வக் கோயிலுக்குப் பரவாக்கரை போனப்போ அங்கே பார்த்த தாமரைக்குளத்தை வரைஞ்சிருக்கு. ஃபோட்டோவெல்லாம் இல்லை. அது தன்னோட ஞாபக சக்தியிலேயே வரைஞ்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  24. பொதுவாக வெளிநாடுகளிலேயே பெரிய பெரிய மால்களில் தியேட்டர்களும் இருக்கின்றன. அம்பேரிக்காவில் பல மால்களில் பார்த்திருக்கோம். சிலவற்றில் படங்களும் பார்த்திருக்கோம். அநேகமாக 3D படங்கள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மால்களில் உள்ள தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க 'மால்' அதிகம் கொடுக்கவேண்டி இருக்கும்!

      நீக்கு
    2. இருக்கலாம். ஆனால் சிலவற்றில் உள்ளே நுழையும்போதே சினிமா டிக்கெட் கொடுப்பாங்க.

      நீக்கு
  25. நம்ம ஊரில் தியேட்டர்கள் என்றால் ம்ஹூம், எந்தத் திசையில் இருக்குனு கூடத் தெரியாது. இந்த விளையாட்டு வீரரைப் பார்த்ததும் இங்கே தோஹாவில் எங்க வீட்டுக்குப் பக்கவாட்டில் இருக்கும் கால்பந்து வீரர் பெட்ரோ நினைவுக்கு வரார். தினமும் அவர் போவதையும் வருவதையும் பார்த்துக்கொண்டு ஜன்னலருகே உட்கார்ந்திருப்பேன் லாப்டாப் முன்னால்.

    பதிலளிநீக்கு
  26. ராஜஸ்தானில் நிறையப் படங்கள் பார்த்திருக்கோம். அங்கே திறந்தவெளித் திரையரங்கம். வீட்டுக்கருகே ஒண்ணு இருந்தாலும் அதில் எப்போவானும் நல்ல படங்கள் வரும் ஆகவே கொஞ்சம் தள்ளி இருந்த இன்னொரு திறந்தவெளித் திரை அரங்கத்துக்குப் போவோம். குழந்தைகள் பள்ளியிலிருந்து மதியமே வந்துடுவாங்க. ஆகவே சாப்பிட்டு வீட்டுப்பாடங்களை முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் விளையாடிட்டு இரவு உணவை ஏழரைக்குள் சாப்பிட்டுடுவோம். வாழைப்பழங்கள் எப்போவும் கை வசம் இருக்கும். எட்டு மணிக்குத் தான் திரையரங்கில் படம் போடுவாங்க/ அதுக்குள்ளே வீட்டில் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பிடுவோம். குழந்தைங்க அவங்க அவங்க சைகிளில் போயிடுவாங்க. நாங்க இருவரும் ஸ்கூட்டரில் போவோம். குழந்தைங்களுக்கு டிக்கெட் கிடையாது. எங்களுக்கு ஒன்றரை ரூபாய். ஜவான்களுக்கு மற்ற ராணுவப்பணியாளர்களுக்கெல்லாம் டிக்கெட் கிடையாது. ராத்திரி பத்தரை, பதினோரு மணிக்குப் படம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து பழங்களும் பாலும் சாப்பிட்டுப் படுப்போம். இங்கே நகர வாழ்க்கை மாதிரிக் காலம்பர நாலு, நாலரைக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டாம். நிதானமாக அவசரமே இல்லாமல் வேலைகளைச் செய்யலாம். எத்தனை செய்தாலும் பொழுது மிகுந்திருக்கும். அந்த வாழ்க்கை இனி வராது. ஒரு வாரத்துக்கு 3, 4 படங்கள் கூட சமயத்தில் பார்ப்போம். இரண்டு நாளைக்கொரு தரம் படம் மாத்திடுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. அங்குதான் எதிரொலி படத்தை நிறைய தடவைகள் பார்த்தீர்களோ?

      நீக்கு
    3. உயர்ந்த மனிதன் பார்த்திருப்பார்!

      நீக்கு
    4. கௌதமன் சொல்வது தான் சரி. உயர்ந்த மனிதன் படம் தான் லக்ஷம் தரம் பார்க்க நேர்ந்தது. ஆனால் ராஜஸ்தானில் பார்த்தவை எல்லாம் ஹிந்திப்படங்கள் தான். தமிழ்ப்படம் பொங்கல் சமயம் போடுவாங்க. உயர்ந்த மனிதன் பார்க்கையில் (எல்லாம் கசின்ஸ்) ஜிவாஜி வெறியர்கள் கூட வந்தவங்களை என்னை விட்டுடுனு சொன்னால் கூட விடலையே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      எதிரொலி படத்தை ஜாம்நகரில் தியேட்டரில் சனி, ஞாயிறு போடும் தென்னிந்தியப் பட வரிசையில் போட்டாங்க. கடைசியில் இருந்து ஆரம்பிச்சு ஆரம்பம் வரை காட்டிட்டு இருந்தாங்க. தியேட்டரில் ஒரே சத்தம், விசில், கூப்பாடு. சிலர் போய்ச் சொல்லியும் வழக்கமான ஆபரேட்டர் லீவாம். ஆகவே படம் போடத் தெரிஞ்சவங்க இல்லைனு சொல்லிட்டாங்க. :)))))

      நீக்கு
  27. ஹா ஹா ஹா நல்ல கற்பனை! வாய் விட்டு சிரித்தேன். நம்ம ஊர் தலைவர்கள் குறிப்பாக பப்பு, சீமான், கமலஹாசன் என்ன சொல்வார்களென்றும் கற்பனை செய்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  28. தாமரை படம் அழகு! கடுக்காய் தகவல்கள் பயனுள்ளவை.

    பதிலளிநீக்கு
  29. கற்பனை கேள்வி பதில்கள் அருமை.நெல்லைததமிழன் படங்கள் அருமை.
    கடுக்காய் நன்மைகள் பயன் உள்ளது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!