16.6.26

கேட்டு வாங்கிப் போடும் கதை - மௌனத்தின் நறுமணம் - சாந்தி மாரியப்பன்

இன்று கேட்டு வாங்கிப் போடும் கதையாக அமைதிச்சாரல் சாந்தி மாரியப்பன் பண்புடன் இணைய இதழுக்கு எழுதிய கதையை "கேட்டு வாங்கி" போடுகிறேன்.  நன்றி சகோதரி.
-----------------


மௌனத்தின் நறுமணம்
- சாந்தி மாரியப்பன் -



சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு. குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து வண்ணவண்ண எண்களோடும் எழுத்துகளோடும் படங்களோடும் மல்லுக்கட்டிய அவனது மூளை, இப்போது சிக்னலில் தெரியவிருக்கும் ஒரு சொட்டுப் பச்சை நிறத்திற்காக ஏங்கியது. எப்போது ஊருக்குப்போய் நிம்மதியாக இருப்போம் என்றிருந்தது.

சென்னையின் அசுரவேகப் பிடியிலிருந்து தப்பித்து, ஒரு நீண்ட பெருமூச்சோடு இரயிலேறினான். குளிர்சாதனப் பெட்டியின் செயற்கைக் குளிர் காற்று அவனது நுரையீரலைச் சுட்டது. கையில் இருந்த லேப்டாப் பையை ஒருமுறை பார்த்தான். ஐந்து ஆண்டுகள்... ஐந்து ஆண்டுகளில் அவன் புழங்கியது வெறும் எண்களோடும் குறியீடுகளோடும், இழந்தது சொந்த மண்ணின் ஈரத்தையும், அந்த மனிதர்களின் அன்பையும்.

இரயில் தண்டவாளங்களில் தாளம் தட்டியபோது, சுபாஷின் மனம் காலச் சக்கரத்தில் பின்னோக்கி உருண்டது. ஊருக்குப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு கலவையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. கடைசியாக அவன் ஊருக்குப்போனது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது ஊர் எப்படியிருக்கும்? மனிதர்கள் எப்படியிருப்பார்கள்? தெரு முனையிலிருந்த அந்தப் பழைய வீட்டை அதன் சொந்தக்காரர்கள் இடித்துப் புதிதாகக் கட்டுகிறார்கள் என அம்மா ஒரு முறை சொல்லியிருந்தாள். எனில், அதன் வாசலிலிருக்கும் செண்பகப்பூ மரத்தையும் வெட்டியிருப்பார்களோ? என யோசித்தான்.

அதிகாலை நான்கு மணிக்கு இரயில் நிலையத்தில் இறங்கியபோது, மார்கழியின் அதிகாலைப்பனியிலும் அவனது மண்ணுக்கே உரித்தான அந்த இளம் சாரல் காற்றிலும் தேகம் சிலிர்த்தது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அந்த அதிகாலையிலும் ஒரு சில தேநீர்க்கடைகள் இயங்கிக்கொண்டிருந்தன. விபூதி பூசிய பாய்லர், பால் பாத்திரம், கடைக்குத் தனி அழகைக்கொடுத்தன. சாம்பிராணியும் மலர்களும் மணக்க சுவரில் அடித்திருந்த ஷெல்பில் வீற்றிருந்தனர் தெய்வங்கள். அன்றைய தினம் முதன்முதலாய்க் காய்ச்சிய பால் ஒரு தம்ளரில் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கூடவே இரண்டு வடைகளும் தூக்கத்தை உதற ஒரு டீ குடிக்கலாமா? என நினைத்தவன், வீட்டிற்குப் போய் அம்மாவின் கையால் குடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, நிலையத்தின் வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறினான். தன் வீட்டின் வாசலில் நின்றபோது, பழைய வேப்பமரத்தின் கசப்பு கலந்த மணம் அவனை அணைத்துக் கொண்டது.

அவனது அம்மா அலமேலு, வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவள், மகனைக் கண்டதும் கையில் இருந்த கோலமாவைச் சிறதவிட்டு ஓடி வந்தாள்.

"வா மக்களே.. தேகம் ஏன் இப்படிக் கறுத்துப் போயிருக்கு? ஆளே மெலிஞ்சுட்டியே. நேரத்துக்குச் சாப்புடுகியா இல்லியா?" அம்மாவின் பாசம் எப்போதும் மாறாதது, அது காலத்தைக் கடந்த ஒரு மகா நதி.

மறுநாள் காலை, கோயிலுக்குச் சென்ற சுபாஷ், அந்தக் காட்சியைக் கண்டான்.

பிள்ளையார் கோயிலின் வெளியே அந்த சின்ன பூக்கடையில், பூங்காவனம் அமர்ந்திருந்தாள். பூக்காரம்மாளின் மகள் அவள்.

அவள் கைகள் பூக்களைத் தொடுக்கும் விதம் ஒரு கவிதை போல இருந்தது. ஒவ்வொரு மலரையும் நாரிடம் ஒப்படைக்கும்போதும், அதனிடம் ஏதோ ஒரு ரகசியத்தை பகிர்கிறாளோ, அந்த சுவாரஸ்யத்தில் அவை தன்னைத்தானே தொடுத்துக் கொள்கின்றனவோ எனும்படி இருந்தது. தியானம் போல் பூத்தொடுத்துக்கொண்டிருந்த அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவளது கண்கள் ஒரு பேராழியைப் போலத் தெளிந்திருந்தன.

சுபாஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது இயல்பல்லாத விசித்திரமான அமைதி, அவனை ஒருவித அசௌகரியத்திற்கு உள்ளாக்கியது. அவள் ஒரு மொட்டைப் போலத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு, உலகத்திற்கும் தனக்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத திரையைத் தொங்கவிட்டிருந்தது போலத் தோன்றியது.

மதிய உணவின் போது, அலமேலு சூடாகப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது சுபாஷ் மெல்லப் பேச்சைத் தொடங்கினான்.

“அம்மா, கோயிலில் பூங்காவனத்தைப் பார்த்தேன். பூக்காரம்மா மகள்தானே? ஏன் அவ ஒரு மாதிரியா இருக்கா? பூ வாங்க வர்றவங்க கிட்ட கூட ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்தான் பேசறா. முன்னாடி நல்லாத் துறுதுறுன்னு பேசிட்டுத் திரிவாளே?"

அலமேலு பெருமூச்சு விட்டு ஒரு கணம் அமைதியானாள். “அவ ஒரு மாதிரி ஆயிட்டாடா சுபாஷ் 'ஏண்டி இப்படி இருக்க?'ன்னு கேட்டா, அவ சிரிப்பா... ஆனா அந்தச் சிரிப்புல சத்தமே இருக்காது. அவளுக்குப் படிப்பு வரும், ஆனா படிக்கப்போக மாட்டேன்னுட்டா. வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு எல்லாமும் அழகா நறுவிசா செய்ய வரும். அவ கையால ஒரு சொம்பு தண்ணி ஊத்துனாலே அந்த மகிழ்ச்சியில தோட்டமே பூத்துச்சொரிஞ்சுரும். ஆனா அவ எதையும் அவளுக்கா மனசுல தோணுனாத்தான் செய்வா. பட்டணத்துல இருக்கற அவ அக்கா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாலாவது அங்க அவ வயசுல இருக்கற பிள்ளைகளைப்பார்த்து இவளும் கலகலப்பா இருப்பான்னு நினைச்சாங்க. ம்ஹூம்.. போக மாட்டேன்னுட்டா. இந்த ஊர்ல இருக்குற பூக்களோடவே அவளோட காலம் கழிஞ்சுட்டு இருக்கு."

“ஏன்மா, அவளுக்கு ஏதாவது மனசுக்கஷ்டமா?"

"தெரியலடா. நீ தட்டைப் பார்த்து சாப்பிடு. இன்னுங்கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?"

ஊரே அவளைப் பற்றி ஒரு விசித்திரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்தது-”பூக்காத மொட்டு" என்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை, சிரிப்பதில்லை என அம்மா சொன்னதிலிருந்து, 'ஏன் இப்படியிருக்கிறாள்?' என்ற கேள்வி அவன் தலைக்குள் குளவியாய்க் குடைந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு மாலை வேளையில், காலாற நடந்துகொண்டிருந்த சுபாஷ், கோவிலிலிருந்த நந்தவனத்திற்குச் சென்றான். அங்கே பூங்காவனம் தனியாகப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். செடிகளுக்கு இடையே அவள் மறைந்து மறைந்து தெரிவது, ஒரு தேவதை தன் தோட்டத்தைப் பராமரிப்பது போல இருந்தது. சுபாஷ் மெல்ல அவளை நெருங்கினான்.

"பூங்காவனம்... என்னை ஞாபகம் இருக்கா?"

அவள் நிமிர்ந்து பார்த்தாள், அந்தப் பார்வையில் ஒரு தீட்சண்யம் இருந்தது. புன்னகைத்தாள். "ஞாபகம் இருக்கு சுபாஷ். சென்னைக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. அஞ்சு வருஷம் உங்க உருவத்துல நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உங்க குரல் அப்படியே இருக்கு."

அவளுக்குத் தன்னை ஞாபகமிருப்பது குறித்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. பூப்பறித்துக்கொண்டே நகர்ந்த அவளை அவனும் தொடர்ந்தான்.

"ஆனா நீ நிறைய்ய மாறியிருக்கே. ஏன் பூங்காவனம் இப்படி மௌனமா இருக்க? ஊரே உன்னைப் பத்திப் பேசுது. ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்லை? யாரோடாவது உனக்கு மனத்தாங்கலா?"

பூங்காவனம் தன் கையில் இருந்த ஒரு மல்லிகை மொட்டை வருடியபடி பேசினாள்.

"சுபாஷ்... சென்னை எப்படி இருக்கு?"

"நல்லா இருக்கு... ஆனா, இங்க இருக்கற மாதிரி அமைதியா இருக்காது, நம்ம ஊரை நான் ரொம்பவே நினைச்சுப்பேன்" என்றான் தயக்கத்துடன். “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை. சின்னப்பிள்ளைகளா நாம விளையாடறப்ப எவ்ளோ கலகலப்பா வாய் ஓயாம பேசிட்டே இருப்ப. நீ ஏன் பூங்காவனம் இப்படி மாறிட்ட? ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்ல? ஊரே உன்னை பூக்காத மொட்டு'ன்னு கிண்டல் பண்றது உனக்கு வருத்தமா இல்லையா?"

பூங்காவனம் அருகில் மரத்தின் கிளையில் இருந்த ஒரு செண்பகப் பூவைப் பறித்துக் கூடையில் போட்டாள். "பூக்குறதுன்னா என்ன சுபாஷ்? இதோ இந்தச் செம்பகப்பூ போல இதழ் விரிச்சுத் தன்னை, தன் மனசை, தன் எண்ணங்களை மத்தவங்களுக்குக் காட்டுறது மட்டும்தான் பூக்குறதா? என் மௌனமும் ஒரு பூதான். அதை நுகரத் தெரிஞ்சவங்களுக்குத்தான் அதோட வாசனை புரியும்."

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு முதிர்ச்சி இருந்தது. “உங்க நகரத்துல ஒரு நிமிஷமாவது சத்தம் இல்லாம இருக்க முடியுமா? உங்க போன், உங்க கம்ப்யூட்டர், உங்க கார்... எல்லாம் சத்தம் போட்டுட்டே இருக்கு. அந்தச்சத்தம் எனக்குப் பிடிக்கவேயில்லை. இங்க, இந்த இயற்கைக்கு நடுவுல இருக்குற அமைதியிலும், இந்தப்பூக்களின் மெளனத்திலும் எனக்கு என்னவோ இனம் புரியாத நிம்மதி கிடைக்குது"

சுபாஷ் பேச முடியாமல் நின்றான். அவளது வார்த்தைகள் வெறும் பேச்சல்ல,

"இங்க பாருங்க... இந்தச் செடியில இருக்குற ஆயிரம் மொட்டுகளை.. நானும் பூக்காத மொட்டாவே இருக்க விரும்புறேன். ஏன்னா, மொட்டுக்குள்ள தான் அந்தப் பூவோட மொத்த வாசமும் செறிஞ்சு இருக்கு விரிஞ்சா சில மணித்துளிகள்ல அது காத்துல கரைஞ்சு போயிரும். என் மௌனமும் அப்படித்தான். அமைதியா இருக்கேன், அதனால நிம்மதியா இருக்கேன். ஆனாலும், இந்தப் பூக்களோடு, இந்த மண்ணோட ஈரத்தோடு, இந்தக்காத்தோடு, இந்தத் நான் நிறைய்யப் பேசிக்கிட்டுதானிருக்கேன். தேனீக்களோடு

"நான் ஏன் பூக்கணும் சுபாஷ்? பூத்தாப் பறிப்பாங்க... இல்லன்னா வாடி காய்ஞ்சு விழும். மொட்டாவே இருக்கும்போது நான் எனக்குள்ளே முழுமையா இருக்கேன்

அவள் தொடர்ந்தாள், "நீங்க எல்லாரும் ஒருத்தரோடொருத்தர் பேசறீங்க, ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டதா நினைச்சுக்கறீங்க. உண்மையில் யாரும் யாரையும் புரிஞ்சுக்கறது இல்லை. இங்க, நான் அதிகமா பேசாம இருக்கேன்.. அதனாலயே எல்லோரையும் எல்லாத்தையும் கவனிச்சு ஆழமாப்புரிஞ்சுக்கறேன். நீங்கல்லாம் பேசிப்பேசி பிரச்சினைகள் கூடுதலாகி ஒருத்தருக்கொருத்தர் மனத்தாங்கலோடு கடைசியில் பேசாம இருந்துடறீங்க. நான் ஆரம்பத்துலயே பேச்சைக்குறைச்சுக்கிட்டேன். அது அப்படியே பழகிடுச்சு, நல்லாருக்கு.. அவ்ளோதான்"

சூரியன் மறையத் தொடங்கியது. பூங்காவனம் தன் கூடையைத் தூக்கிக் கொண்டு மௌனமாகப் படியிறங்கினாள். அவளது பாதங்கள் மண்ணில் படாதது போல ஒரு பிரமை. அவள் விட்டுச் சென்ற அந்தப் பூக்களின் வாசனையை விட, அவளது வார்த்தைகளின் மணம் சுபாஷின் மனதிற்குள் ஆழமாக இறங்கியது.

அவளது அறிவு, அவளது முதிர்ச்சி, அவளது தெளிவு.இவை எதையும் அவன் எங்கேயும் யாரிடமும் இதுவரை கண்டதில்லை. அவள் பூக்காத மொட்டு அல்ல; அவள் பூக்கத் தேவையில்லாத அளவுக்குத் தன்னுள் மலர்ந்துவிட்ட ஒரு முழுமை.

அன்று இரவு சுபாஷால் உறங்க முடியவில்லை. ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் பூஜைக்காக தூரத்தில் கோயில் மணியின் சத்தம் மெலிதாகக் கேட்டது. சுபாஷ் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தூரத்தில் பூங்காவனம் கோயிலுக்குப் பூக்கூடையுடன் செல்வது தெரிந்தது. உடன் நடந்துகொண்டிருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோதும், அவள் இப்போதும் அமைதியாகவே நடந்துகொண்டிருந்தாள். அவளது மௌனம் அந்த ஊர் முழுவதும் ஒரு நறுமணமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவனுக்கு இப்போது புரிந்தது.. அவள் அதிகம் பேசாத ஒரு பூக்காத மொட்டாகவே இருக்கத் தீர்மானித்திருப்பது, இந்த உலகத்திடமிருந்து தன் மௌனத்தின் நறுமணத்தைத் தற்காத்துக் கொள்ளத்தான்.

மறுநாள் காலை, அவன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். ஆனால், இம்முறை அவனது கண்களில் ஒரு தெளிவு இருந்தது. அவன் தன் பையில் ஒரு காய்ந்த மகிழம்பூவை எடுத்துப் போட்டுக்கொண்டான். அந்தப் பூவின் நறுமணம் அவனுக்குப் பூங்காவனத்தின் மௌனத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அவனுக்குள் பூங்காவனம் விதைத்த அந்த மௌனத்தின் விதை ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியிருந்தது.

வண்டி நகரத் தொடங்கியது..

********************************************

டிஸ்கி சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி. - சாந்தி மாரியப்பன். 

******************

========================================================================================


மறுபடியும் கொஞ்சம் ஜோக்ஸ்....  








24 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வு நன்றாக உள்ளது. மௌனத்தின் நறுமணம் சிறப்பானதுதான். அதை உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் சிறப்புப் புரியும். பூங்காவனம் என்ற கதையின் நாயகியின் பெயர் பொருத்தமும் நன்றாக உள்ளது. அவளே ஒரு வனந்தான். அவளுக்குள் அத்தனை மலர்களின் வாசனைகளும் மெளனமாக ஐக்கியமானது ஆச்சரியமில்லையே ..! கதையை அழகாக எழுதியுள்ளார் கதாசிரியர். பாராட்டுக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்துக் கருத்துரையிட்டமைக்கு நன்றி கமலாஜி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    என்ன இன்று இதுவரை யாரையும் காணவில்லையே.? (சகோதரர் துரை செல்வராஜ் அவர்களும், என்னையும் தவிர.) எ. பியும் இன்று மௌனத்தின் நறுமணமாகிப் போனதோ.? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய நகைச்சுவை பகுதி நன்றாக உள்ளது. 2,3,5 ஐ மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வட்டாரவழக்கு மனதிற்கு இதமாக இருக்கிறது எவ்வளவு வருடங்கள் ஆகின்றன! வெங்கட்ஜி தளத்தில் அண்ணாச்சி எழுதும் போதும் இந்த உணர்வு வரும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கதையின் உட்பொருள் மிகப் பெரிய தத்துவத்தைச் சொல்கிறது. வெளியுலகப் பூப்பை விட, உள் மனம் பூத்து விரிவது அதாவது பண்பட்டு பக்குவப்பட்டு மலர்ந்து விளங்குவதை வெளியுலக சாதாரண மக்களால் புரிந்து கொள்வது கடினம்...மிகவும் கடினம். நாம் பக்குவப்பட்டு அமைதியைத் தழுவும் போது நம்மைச் சுற்றி உள்ளவர்கள், "மாறிட்டான்/மாறிட்டா பாரு" என்றோ இல்லை கொஞ்சம் மனம் பேதலித்துவிட்டது என்றோதான் பார்க்கும் சொல்லும். அதுவும் பெண்ணிற்குத் திருமணம் ஆகாமல் இப்படி மனநிலை அடைந்தால் அந்த ரீதியில்தான் பார்கும். உள் மனதின் ஓசைகளை அது கேட்காது.

    மிகப் பெரிய தத்துவதை உள்ளடக்கிய கதைக்குப் பாராட்டுகள் சாந்தி மாரியப்பன் அவர்களுக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. முந்தைய கருத்தின் தொடர்ச்சியாக.....

    //“உங்க நகரத்துல ஒரு நிமிஷமாவது சத்தம் இல்லாம இருக்க முடியுமா? உங்க போன், உங்க கம்ப்யூட்டர், உங்க கார்... எல்லாம் சத்தம் போட்டுட்டே இருக்கு. அந்தச்சத்தம் எனக்குப் பிடிக்கவேயில்லை//

    பூங்காவனத்தின் மனம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது மௌனம், அமைதி என்பது எந்தவிதச் சூழலிலும் நாம் அனுசரிக்க முடியும் என்ற நிலை.

    அமைதியான இயற்கைச் சூழல் நமக்கு நல்ல அமைதியைத் தரும் தான்...ஆனால் அதே அமைதியை சத்தங்களும் கூட நம்மைப் பாதிக்காமல் சுற்றி என்ன நடந்தாலும் அந்தே அமைதியைக் காத்திடவும் பழகிவிட்டால்...அது இன்னும் ஒரு படி மேலான உன்னத லெவல்..

    இப்ப சுபாஷ் பூங்காவனத்தின் பேச்சால் கவரப்பட்டு அதை தானும் கடைபிடிக்க வேண்டும் என்று நகரத்திற்குச் சென்றதும் சத்தங்களுக்கு இடையிலும் அமைதி....அவனுக்கு அடுத்த நிலை அமைதியை எட்டிவிடுவானோ என்றும் தோன்றியது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. "நீங்க எல்லாரும் ஒருத்தரோடொருத்தர் பேசறீங்க, ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டதா நினைச்சுக்கறீங்க. உண்மையில் யாரும் யாரையும் புரிஞ்சுக்கறது இல்லை. //

    //நீங்கல்லாம் பேசிப்பேசி பிரச்சினைகள் கூடுதலாகி ஒருத்தருக்கொருத்தர் மனத்தாங்கலோடு கடைசியில் பேசாம இருந்துடறீங்க. //

    மிக மிக உண்மையான வரிகள்!

    ரொம்ப நல்லாருக்கு கதை.

    எனக்குக், கதையில் சுபாஷிற்கும் பூங்காவனத்திற்கும் இடையில் மெல்லிய திரை போல ஓர் ஈர்ப்பு...அன்பு.....காதல் இருக்கிறதோ என்று தோன்றியது அதை ஆசிரியர் சாந்தி அவங்க, கத்தி மேல் நடப்பது போன்று subtle ஆகக் கொண்டு போயிருப்பதாகத் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை ஆழ்ந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  9. " மெளனத்தின் நறுமணம் உலகத்தவரிடம் இருந்து காக்க '" பல சமயங்களில் மெளனம் எம்மைக் காத்து வருகிறது என்பது உண்மையே.

    நல்லதோர் கதையைத் தந்த சாந்தி மாரியப்பன் அவர்களுக்கு பாராட்டுகள்.
    பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    ஜோக்ஸ் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாதேவி. கண்டு பல நாட்கள் ஆகின்றனவே.. நலமா?

      நீக்கு
  10. அந்தக் குட்டிப் பையன் செம ஸ்மார்ட்!!!! புன்சிரிப்பு வந்தது.

    காலிஃப்ளவர்!!!! ஹாஹாஹா - ஒரு வேளை காலி ஃப்ளவர்னு நினைச்சு சொல்றாரோ!!

    சம்பாத்தியம் - நல்ல விவாதம்!!

    கட்சிகள்? அந்தக் கார்ட்டூன் செம...

    படம் இல்லாமல் கதை - நல்ல ஒப்பீடுல்ல? கார்டூனிஸ்ட் நகைச்சுவையாளரின் கற்பனையை ரசித்தேன்.

    மீசை - ஹாஹாஹா

    க்ளிஸரைன் - ஹாஹாஹா..

    கீதா



    பதிலளிநீக்கு
  11. என்ன இன்று எ.பி. கப் சிப் என்று இருக்கிறது? கதையின் தலைப்பை ஜுஸ்டிஃபை செய்கிறதா?
    கதை சிறப்பு! ஒரு நுணுக்கமான விஷயத்தை பேசியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி பானுமதிஜி.

      நீக்கு
  12. நுணுக்கமான கதை. மௌனமே கதையாகிறது. அன்பு ஷாந்திக்கு வாழ்த்துகள். எப்போதும் சாது மற்றும் சன்னியாசிகளே மௌனத்தைக் கையில் எடுப்பார்கள். இங்கே ஒரு பெண் அதுவும் இளவயதுப் பெண் இப்படி இருகிறாள் என்றால் அதற்குப் பின்னும் ஒரு நிகழ்வு இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. ஆனால் மௌனம் பல விதத்தில் தேவையாக இருக்கிறது. எனக்கு அது மிக பயனுள்ளதாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. காதலுக்காக கதைகள் வந்த நேரம் போய், புரிதலுக்காக இருவர் நட்பு கொள்வது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  15. Free Funded Forex Account

    Start your trading journey with a Free Funded Forex Account and gain access to trading capital without risking your own money. This opportunity allows skilled traders to demonstrate their strategies, discipline, and risk management abilities while trading in real market conditions. With a funded account, you can focus on maximizing your trading potential and earning profits based on performance. Whether you are a new trader looking for experience or an experienced trader seeking greater capital, a Free Funded Forex Account provides a pathway to grow your skills, build confidence, and achieve your financial goals in the forex market.
    Contact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.com/

    பதிலளிநீக்கு
  16. கதையை வெளியிட்ட எங்கள் ப்ளாகிற்கு முதல் நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!