சனி, 31 ஜூலை, 2010

ஜேகே -- மரணத்துக்குப் பின்னும் தொடரும் எண்ணம்.


(ஒரு கணிசமான இடை வேளைக்குப் பிறகு...)
..
ஒருவரின் பூத உடல் மரித்தபின்னும் எண்ணம் தொடர்கிறது. இது நிரூபிக்கப் பட்ட ஒன்று. எண்ணம் என்பது தொடர்ச்சிதான். எல்லாம் சொன்னபின், நீங்கள் என்பது யார்? நீங்கள் ஒரு எண்ணக்குவியலின் உருவம்தான் அல்லவா? ஒரு பெயர், ஒரு உருவம், பணம் இப்படியான பல எண்ணங்களின் உருவம்தான் நீங்கள். ஒரு கருத்துக் குவியலின் வடிவம். அந்த எண்ணங்களை, கருத்துக்களை நீக்கிவிட்டால், அந்தப் பெயர், பதவி இவற்றை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கும் "நீங்கள்" யார்? எண்ணங்கள் " நான் " எனும் குவியத்தில் இருப்பதுதான் நீங்கள்! எண்ணங்கள் தொடரவேண்டும், மேன்மையடையவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். காரணம் எண்ணங்கள் வழியே உண்மை என்பதை தெரிந்துகொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எண்ணங்களின் மேம்பாடு என்னை பூரணத்துவம் அடையச் செய்யும் என்று நினைக்கிறீர்கள். அதனால்தான் எண்ணங்கள் தொடரவேண்டும் என்று விரும்புகிறீர்கள். எண்ணங்கள் சத்தியத்தை, கடவுளை, இப்படியாக என்ன பெயர் சொன்னாலும் சரி, அதை அடைய வழி வகுக்கும் என்று நம்புகிறீர்கள்.


மரணம் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்


பருவுடல் வயது, மூப்பு, நோய், விபத்து இப்படியாக ஏதோ ஒரு காரணத்தால் அழிகிறது. இது மாற்றமுடியாதது. இது நடப்பதை தொடர்ந்து கண்டுவருவதால் இதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால், உடலுக்கும் அப்பால், " நான் " என்று ஒன்று இருக்கிறது. என் ஒட்டு மொத்தப் புரிதலின் வடிவமாக அது இருக்கிறது. நான் சேகரித்த அனுபவங்கள், என் செயல்கள், நான் ஆசைப்பட்டு குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதன் பலன், இவை யாவும் பௌதிக உடல் அல்ல. மனரீதியிலான " நான் " ஆகும். இது என் நினைவுகளின் மொத்த உரு. இதை அழிவின்றி தொடர்ந்து வைத்துக் கொள்ள நான் ஆசைப் படுகிறேன். மரணம் அல்ல, இந்த சேமிப்புகள் முடிவுக்கு வருவதுதான் நமக்கு உண்மையான அச்சம் தருவதாகும்


வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் பகுப்பு எதுவும் இல்லை. தம் பௌதிக சேமிப்புகளின் மேல் கொண்டுள்ள பற்றுதலாலும், அவை தொடரவேண்டும் என்ற மூடத்தனமான அற்ப ஆசையாலும், மனிதன் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் ஒரு பாகுபாடைக் கொண்டுவருகிறான். அந்த மாதிரியான மக்கள், மறு ஜன்மம் என்ற கொள்கையை தம் அச்சத்தை மூடி மறைக்கவும், தாம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆசையாலும் பற்றிக்கொள்கிறார்கள். எண்ணங்கள் தொடர்கின்றன என்பது வெளிப்படையாகத் தெரியும் ஒன்றுதான். ஆனால் உண்மையை நாடும் எவரும் எண்ணங்கள் குறித்து அக்கறை கொள்வதில்லை. காரணம், எண்ணங்கள் உண்மைக்கு கொண்டு செல்வதில்லை என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். " நான் " மறு ஜன்மம் வழியே உண்மையைத் தேடலைத் தொடர்வதாக எண்ணிக்கொள்வது பொய்மையானது.  

4 கருத்துகள்:

  1. மரணத்துக்கு பிந்திய வாழ்க்கை. ஒவ்வொரு மதமும் ஒவ்வொன்று சொல்கிறது. மனிதர்கள் கருத்தும் பல விதமாக, ஜேகே அவர்கள் கரூத்து ஏற்கும் விதமாக.

    பதிலளிநீக்கு
  2. அப்படியாங்க.... சரிங்க..... :-)

    பதிலளிநீக்கு
  3. மறுபிறப்பு,ஆன்மா நீங்கள் சொன்ன "நான்" ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துச் சொன்னபடியேதான் இருக்கிறார்கள்.
    ஆனால் இதுதான் என்கிற திடமான முடிவு எங்குமே இல்லை !

    பதிலளிநீக்கு
  4. திரும்ப திரும்ப படிச்சு பாக்கறேன். புரிஞ்சா மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. நானும் நிறைய தடவ இதை பத்தி யோசிச்சிருக்கேன். நான் என் அம்மாவிடம் பலமுறை ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். எங்கம்மா 'உனக்கு மட்டும் எப்படியடி இப்படி எல்லாம் யோசனை போறது' என்றார்கள். இன்றும் என் மனதில் அந்த கேள்வி இருக்கிறது, விடை கிடைக்காமல். உங்களிடம் கேட்டு விட மாட்டேன், பயப்படாதீர்கள். :)

    இனி இவ்வளவு கணிசமான இடைவெளி வேண்டாமே! ஓரளவுக்கு தொடர்ந்து படித்தால்தான் ஆர்வம் குறையாமால் இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!