வெள்ளி, 16 டிசம்பர், 2011

கற்றலின் கேட்டல் நன்று ...!

             

கற்றலின் கேட்டல் நன்று என்னும் கூற்றுக்கு அவரவர் தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப நிறைய எழுதி இருந்தாலும், ஒருவருக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று அறிந்து கொள்ள அவர் செய்கைகளைக் கூர்ந்து கவனித்து அதிலிருந்து கற்றுக் கொள்ள முயற்சிப்பதை விட, அவரையே கேட்டு விடுவது உத்தமம் என்பதுதான் அதற்குப் பொருளாக இருக்க முடியும்.

    
எப்படி என்கிறீர்களா ?  
   
என் நண்பர் ராமகிருஷ்ணனுக்கு கீரை பிடிக்கவே பிடிக்காது கீரை மசியலை அவர் எதற்கு ஒப்பிடுவார் என்பது அறிந்தால் நீங்கள் நாளை முதல் கீரையே சாப்பிட மாட்டீர்கள் - பாவம் சின்ன வயதில் ஒரு மாட்டுப் பண்ணையின் அருகே குடியிருந்ததன் விளைவாக இருக்கலாம்! 
  
 இன்னும் மற்ற சகாக்களுடன் நீலகிரியில் இருக்கும் அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பில் நாங்கள் இருந்த பொழுது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வீட்டில் எல்லோரும் கூடி சாப்பிட்டு விட்டு அப்படியே குன்னூர் அல்லது ஊட்டி மற்றும் சில சமயங்களில் தொட்ட பெட்டா, பவானி, கோயம்பத்தூர் இப்படி எங்காவது போய் வருவதும் உண்டு.     

    
ஃபோர்மன் நாராயணசுவாமி வீட்டில் நாங்கள் எல்லாம் இப்படி ஒரு நாள் கூடி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  நாராயணஸ்வாமியின் மனைவி வெகு நாட்கள் பூனேயில் இருந்தவர்.  அவ்வூர் வழக்கப்படி அவரவர் முதலில் எதை எடுத்து சாப்பிடுகிறார்கள் என்பதை கவனித்து, அதை அடுத்த முறை எடுத்து வரும் பொழுது நிறைய பரிமாறி விடுவார்.  
      
எல்லோரும் "தைலா மாமி நீங்க மட்டும் எப்படி யாருக்கு என்ன பிடிக்கும் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அதைப் போடுகிறீர்கள்" என்று சாவித்திரி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது மாமி "அதொண்ணும் பிரமாதம் இல்லையாக்கும் - இப்போ ராமகிருஷ்ணன் இலையில் கீரை போட்டதும் உடனே எடுத்து சாப்பிடுவதைக் கவனித்தேன் - உடனேயே உள்ளே போய் இதோ கொண்டு வந்தும் போட்டு விட்டேன்" என்று சொன்ன போது ராமகிருஷ்ணன் முகம் போன போக்கைக் கவனிக்காமலேயே மாமி "இப்போ பாருங்க கேஜிக்கு என்ன பிடிக்கும்னு சொல்றேன் " என்று விளக்க ஆரம்பித்து விட்டார்.
       
இப்பொழுது சொல்லுங்கள் கேட்டலின் கற்றல் நன்றா ? கற்றலின் கேட்டல் நன்றுதானே! 
     
இந்த அனுபவம் நிறையவே உண்டு என்பதால் சமீப காலமாகவே விழாக்களுக்கு சென்றாலும் சரி, கல்யாண வீடுகளுக்குச் சென்றாலும் சரி பிடிக்காத ஐட்டத்தை முதலில் காலி செய்வதே இல்லை. அதற்காக இலையில் விழும் பண்டங்களை வீண் செய்யும் வழக்கமும் கிடையாது. அந்த பிடிக்காத ஐட்டத்தை கடைசியாகக் காலி செய்வோம். (முன்னர் ஆர் வி எஸ் எழுதிய ஒரு விருந்தும், பரிமாறும் முறை பற்றிய பதிவில் கூட இதைச் சொல்லியிருக்கிறோம்!) பிடித்த ஐட்டத்தை முதலில் அல்லது எப்போது மறுபடி வேண்டுமோ அப்போது காலி செய்து விட்டால் மறுபடி கிடைக்கும் வாய்ப்பு இருக்கும்!  
             

21 கருத்துகள்:

  1. கேஜிஜி சார், கற்றலில் கேட்டல் நன்று என்பதற்கு இப்படி ஒரு 'சுவையான' விளக்கமா? காலையில் வாழை இலையில் உணவைப் பார்த்ததும் இன்றுதான் என்றைக்கும்விடச் சென்னையை மிஸ் செய்கிறேன்.
    இலை பார்த்து பரிமாறும் அந்த மாமியின் அன்பு பாராட்டப்பட வேண்டியதுதான். சில நேரங்களில் ரொம்ப அன்பே பிரச்சினைதான். என் மாமி அப்படிதான், நாம் தட்டைத் தூக்கிக்கொண்டு ஓடும் வரை உணவைப் போட்டுக்கொண்டே இருப்பார்.

    பதிலளிநீக்கு
  2. பூனாவிலிருந்து வந்த மாமியா:)
    மும்பை பஞ்சவடியில் சாப்ப்பிட்டு இருக்கிறீர்களா.
    தெரியாமல் சம்சம் என்ற தித்திப்பைச் சாப்பிட்டுவிட்டேன். திரும்புவதற்குள் இரண்டு வந்து விழுந்துவிட்டது தட்டில். சாஅமீஈஇ.தாங்காது அங்க எல்லாம் சாப்பிட்டால்.
    ஆனால் ஒரு மாமி இப்படி உபசாரம் செய்கிறார் என்றால் அவர் ஸ்பெஷல் தாஅன். இலையும் சாப்பாடும் பார்க்க ஜோர்:0)

    பதிலளிநீக்கு
  3. சரி... சரி... கீரையை எதற்கு ஒப்பிட்டிருப்பார் என்பது விளங்கி விட்டது. ஆனாலும் டூ மச்! ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்ற வார்த்தைக்கு புது விளக்கமாக நீங்கள் சொல்லியிருப்பதை மிக ரசித்தேன். கல்யாண வீடுகளில் சாப்பிடும் போது நானும் இப்படி்ததான் உஷாராகச் சாப்பிடுவேன் கே.ஜி.ஜி. சார்!

    பதிலளிநீக்கு
  4. ஹி... ஹி... கீதா மேடத்தைப் பாத்து நானும் கே.ஜி.ஜி. சார்தான் எழுதிருக்காருன்னு தப்பா சொல்லிட்டேன். கோச்சுக்காதீங்க ஸ்ரீராம் ஸார்!

    பதிலளிநீக்கு
  5. /இதோ கொண்டு வந்தும் போட்டு விட்டேன்/

    :))!

    /மறுபடி கிடைக்கும் வாய்ப்பு இருக்கும்/

    இது நல்ல உத்தி:)!

    பதிலளிநீக்கு
  6. ‘கற்றலின் கேட்டல் நன்று’ க்கு உங்களது சுவையான விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு படிப்பினை.நினைவில இனி வச்சிருக்கவேணும்.
    கல்யாணவீடுகளில இப்பிடியெல்லாம் நடக்குதென்றுதான் நினைக்கிறேன்.ஞாபகம் வருது !

    பதிலளிநீக்கு
  8. "சுவை"யான பதிவு.
    "ருசி"யான படைப்பு.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா.. இப்படியும் விளக்கம் சொல்லலாமா.. ஜூப்பர் :-)

    பதிலளிநீக்கு
  10. இன்னும் மற்ற சகாக்களுடன் நீலகிரியில் இருக்கும் அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பில் நாங்கள் இருந்த பொழுது//

    entha varusham???????

    பதிலளிநீக்கு
  11. பசிக்கிறது.சுவையான படையல்.கற்றலின் கேட்டலின் நன்று விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  12. அது அரவங்காடு இல்லையோ?.. இரயில்வே ஸ்டேஷன் போர்டு கூடச் சொல்கிறதே?..

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. ஆமாம் ஸ்ரீராம் என் மாமனார் வீட்டில் நான் போகும் போதெல்லாம் கீரை செய்து விடுவார்கள். எனக்கு அது பிடிக்கும் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு ஊரில் இருக்கும் இல்லை தழை எல்லாம் செய்து கொட்டி விடுவார்கள். கல்யாணம் ஆன புதிதில், போட்டதை சாப்பிட்டதின் விளைவு.

    பதிலளிநீக்கு
  15. ஓ ஹோ இப்படியும் இருக்கா
    சின்ன விஷய்ம்தான் ஆயினும் இத்தனை நாள்
    கவனிக்காதது நீங்க்கள் சொல்லி தெரிந்து கொண்டேன்
    பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. ந்ல்ல விஷயம்....நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

    பதிலளிநீக்கு
  17. சுவையான விளக்கம்! நான் கூட இலைல இருக்கற பிடிக்காததை முதலில் கடகன்னு சாப்பிட்டு விடுவேன். அப்பறம் பிடித்ததை நிதானமாக சாப்பிடுவேன். இதை படிச்ச அப்பறம் இனிமே கொஞ்சம் பாத்துதான் சாப்பிடணும்னு தோன்றது. ஆனா இந்த மாதிரி வாழை இல்லை சாப்பாடெல்லாம் ம்ம்ம்ம்.......... படத்துல பாத்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான்!

    'கற்றலின் கேட்டல் நன்று' ரொம்ப சரி! சோம்பேறியான எனக்கு இது ரொம்ப பிடிச்ச வாசகமும் கூட. அதனாலதான் நான் எல்லாத்தையுமே கேட்டே தெரிஞ்சுக்கறேன்.;)

    பதிலளிநீக்கு
  18. இந்தப் பதிவைப் படித்ததும் எனக்குள் எழுந்த எண்ணாங்கள் உண்மையிலேயே உணவு பற்றியதல்ல. நீங்கள் அரவங்காடு பற்றிக் குறிப்பிட்டதைப் படிக்கும்போது, கார்டைட் ஃபாக்டரியில் வேலையில் இருந்த ஃபோர்மன்களின் மகன்கள் வெங்கட்ராவ், விஸ்வநாதன் ஆகியோர் நினைவு வந்தது. என் வயதொத்தவர்கள் . உங்களுக்குத் தெரிய வாய்ப்பிருக்குமா.?1954-ம் வருட S.S.L. C.பாட்ச்.

    பதிலளிநீக்கு
  19. அரவங்காட்டில் பதிவாசிரியர் இருந்தது 1963 to 1974. அப்போது அங்கு பாலசுப்ரமணியம் என்ற பெயரில் இருவர் இருந்த நினைவு என்கிறார். அதில் ஒருவர் வீட்டிலிருந்து ஒரு பரிசுப் பொருள் கூடக் கிடைத்தது என்கிறார்.

    பதிலளிநீக்கு
  20. grrrrrrrrrrrrrrrஎன்ன ரகசியம்? என்ன ரகசியம்?? பதிவா"சிரி"யர் யார்னு சொல்லாட்டி என்ன! :P நாங்க அப்போ இல்லை அரவங்காட்டிலே.

    அரவங்காட்டிலே 2000த்தில் இருந்து 2002 வரை இருந்தோம். அரவங்காடு ஸ்டேஷனுக்கு நேர் மேலே ஆபீஸர்ஸ் க்வார்டர்ஸ். பாய்ஸ் கிளப்பில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ வைச்சுண்டு போனாலும் கொஞ்சம் 300 அடி கீழே தான் இறங்கி அப்புறமாய்ச் சில, பல குடியிருப்புகளைக் கடந்து எங்க குடியிருப்புக்குப் போவோம். அற்புதமான நினைவுகள்! மறக்கமுடியாத நாட்கள். எங்க க்வார்டர்ஸ் வாசலில் நின்னு பார்த்தால் எதிரே வெலிங்க்டன் மலை தெரியும். அங்கே மழை பெய்யும்; இங்கே பெய்யாது. மேகம் வந்து "இரு,அப்புறமா வரேன்"னு சொல்லிட்டுப் போகும்.

    பதிலளிநீக்கு
  21. அழகோ அழகு! சூரியன் கீழ்க்கோடியில் உதிச்சு மேல்க்கோடிக்கு அரைவட்ட வளைவாப் பிரயாணம் செய்வதை நாள் பூராப் பார்த்தால் சாப்பாடு கூட வேண்டாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!