எங்கள் B+ செய்திகள்!
விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் காதல் செய்தி இல்லாத நாள் வேண்டும்
தற்கொலைச் செய்தி இல்லாத நாள் வேண்டும்
நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
சென்ற வாரத்து செய்திகளில் இருந்து, இதோ சில B+ செய்திகள்!
ஞாயிறு (12.8.2012)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் முதியோர்,
ஊனமுற்றோர்,
பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை
செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை. இவரின் சேவைக்கு இவர்
மனைவியும் (ஜோதிலட்சுமி) எதிர்ப்புச் சொல்லாமல் உறுதுணையாய் இருப்பது
சிறப்பு. ஊரில் உள்ள பெரியவர்கள் இவரை வாழ்த்துகின்றனர். (முகப்
புத்தகத்திலிருந்து)
***************
புதுடில்லி: மேற்குக் கடற்கரையில் மிகப் பெரிய அளவில் எண்ணெய் வளம்
இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
கூறியுள்ளது. இதன் மூலம் தங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும்
கூறியுள்ளது.
*********************
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகள்
ஜோதி ரெட்டி பத்தாம் வகுப்பு வரை முடித்தவர். வறுமையைச் சமாளிக்க தினக்கூலி
ஐந்து ரூபாய்க்கு வாழ்க்கையை ஓட்டத் தொடங்கியவர், எண்பத்தொன்பதாம் ஆண்டு
மத்திய அரசின் நேரு யுவகேந்திரா திட்டத்தின் இரவுப் பள்ளிகளில் ஆசிரியையாக
வேலை பார்க்கத் தொடங்கி, நின்று போன தனது கல்வியையும் தொடர்ந்து, பி ஏ முடித்து அரசு ஆசிரியையாகவும் ஆனவர், அமெரிக்காவில் வேலை பார்த்த சக
பணியாளர், மற்றும் உறவினர் மூலம் அமெரிக்கா சென்று வீடியோ கடையில்
பணியாற்றி, விசா தொடர்ந்து கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் நாடு திரும்பி, மறுபடி தினக் கூலியாகி மறுபடியும் விசாவுக்கு அலையாய் அலைந்திருக்கிறார்.
அதில் ஏற்பட்ட அனுபவத்தினால் ஏற்பட்ட திடீர் யோசனையால் விசா ஏற்பாடு
செய்யும் நிறுவனம் ஒன்றையே தொடங்கி, (கீஸ் ஸாஃப்ட்வேர் சொல்யுஷன்ஸ்)
அதிலிருந்தும் முன்னேறி மென்பொருள் மேம்பாடு, வேலை தேடித் தரும் நிறுவனம்
என்று எல்லைகளை விரிவாக்கி... ஆக இன்று அவர் அமெரிக்காவின் கீஸ் ஸாஃப்ட்வேர் சொல்யுஷன்ஸ் நிறுவனத்தின் சி இ ஓ. (தினமணி ஞாயிறு மலர்)
*********************
ஏழுமலை. பார்வையற்ற மாற்றுத் திறனாளி. மிருதங்கம் கற்றவர். 2005 ல்
அன்றைய முதல்வர் இவர் பெயரில் 2.5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்திருந்த
உதவிப் பணத்தைப் பெற அலைந்தபோது வெல்ஃபேர் டிபார்ட்மென்ட்டில் இருந்த
அதிகாரி 'குருடனுங்க ஃபைல் இருக்கா' என்று கேட்ட வார்த்தையில் கொதித்துப்
போய், போராடத் தொடங்கியவர், இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு
வகையிலும் உதவுவதற்கான அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். ரெயில்களில்
சிறு பொருட்கள் விற்பனை செய்யும் மாற்றுத் திறனாளிகளின் கஷ்டம் அறிந்துகொள்ள, இவரும் அதே போலச் சென்று விற்பனை செய்து மாற்றுத் திறனாளிகளிடம் அபராதம்
என்ற பெயரில் வசூல் செய்யப்படும் நூற்றைம்பது ரூபாயை நிறுத்த
வைத்திருக்கிறார். (தினமணி ஞாயிறு மலர்)
**********************
திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ் முத்துராமன் என்ற இளைஞர் சூரிய சக்தியில்
இயங்கும் சைக்கிள் ரிக்ஷா ஒன்றைக் கண்டு பிடித்து இந்திய சாதனைப்
புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.சூரிய சக்தி, பேட்டரியால் இயங்கும்
இதை மிதிவண்டியாகவும் பயன் படுத்தாலாம். மணிக்கு 45 கிலோமீட்டர் வரை
இயங்கும் இதன் உற்பத்திச் செலவு 50,000 ரூபாயாம். ஒருமுறை சார்ஜ் செய்தால்
150 கிலோமீட்டர் வரை இயக்கலாமாம். சென்னை நகர்ப்புறங்களில் மாற்றுத்
திறநாளிகள், முதியோர், பள்ளிக் குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க ஐம்பது
வாகனங்கள் இயக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. (தினமணி)
***********************
திங்கள் (13.8.2012)
முதலமைச்சரின்
தனிப்பிரிவுக்கு புகார்கள், வேண்டுதல்கள் அனுப்ப இணையதளம் தொடங்கப்
பட்டுள்ளது. முகவரிதான் மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு செய்யப் படும்
புகார்கள் சம்பந்தப் பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதன் அவ்வப்போதைய
ஸ்டேடஸ் கூட தெரிந்து கொள்ளலாம். செல்ஃபோன் எஸ் எம் எஸ் மூலம் கூட இந்த
வசதியைப் பெறலாம்
****************************
பெரம்பூர் செம்பியத்தில் ஸ்ரீ ஜெயின் மருத்துவ நிவாரண சங்கம் டயாலிசிஸ்
மையம் ஏற்படுத்தியுள்ளது. இங்கு மிகக் குறைந்த செலவில் - ரூபாய் முன்னூறு -
டயாலிசிஸ் செய்யப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
***************************
செவ்வாய் (14.8.2012)
(எங்கள் கண்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வாசகர்கள் யாருக்காவது கிடைத்திருந்தால் பகிரவும்!)
------------------------
புதன் (15.8.2012)
சுதந்திர தினம் என்பதைத் தவிர வேறு பாசிடிவ் செய்தி கண்ணில் படவில்லை! அமெரிக்க
விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா
வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி சிறு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார்.
இந்த நாளில் இதைப் படித்தாலும் செய்தி பழசு. Zavere Poonawala என்கிற பார்சிய தொழிலதிபர், பூனாவில் வசிப்பவர். இவரின் கார் டிரைவர் கங்கா தத். இவர் முப்பது வருடங்களாக வைத்திருந்த limousine
(ஆச்சார்யா ரஜ்னீஷ் வைத்திருந்ததாம்) காரின் டிரைவர். சமீபத்தில் இந்த
டிரைவர் மரணமடைந்து விட்ட செய்தி வெளியூரில் இருந்த தொழிலதிபருக்குத்
தெரிவிக்கப்பட, தான் வரும் வரை அவர் உடலை வைத்திருக்கும்படி வேண்டிக்
கொண்டு விமானத்தில் வந்தவர் டிரைவரின் உடலை அவர் குடும்பத்தினரின் சம்மதம்
பெற்று அதே காரில் மலரலங்காரம் செய்து தானே ஓடிக் கொண்டு
எரியூட்டுமிடம் கொண்டு சேர்த்தாராம். 'இரவு பகலாக தனக்காக உழைத்தவர்,
ஏழ்மையை எதிர்த்து வெற்றி கண்டு தன் (டிரைவரின்)குழந்தைகளை நல்ல முறையில்
படிக்க வைத்தவருக்கு தன்னால் செய்ய முடிந்த மரியாதை இது' என்றாராம் அந்தத் தொழிலதிபர்.
வெள்ளி (17.8.2012)
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை ஜூன், ஜூலை மாதங்களில், போதிய அளவு பெய்யவில்லை. இதனால், நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில், இன்று அதிகபட்சமாக பெரியாறில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சனி (18.8.2012)
வெறும் 5 ரூபாய்க்கு சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை பயணிக்கக் கூடிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் சி.பிரடெரிக், கே.கோபிநாத், டி.மனோஜ் பிரபாகர், எஸ்.குரு மற்றும் கணேஷ் பிரியன் ஆகிய மாணவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். சிறிது நேரம் சார்ஜ் செய்து கொண்டு ஸ்கூட்டரை கிளப்பினால் போதும். இரண்டு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரிகளில் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் மற்றொரு மோட்டார் பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி ஸ்கூட்டரை இயக்குகிறது.
தற்போது சாதாரண எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒரு முறை அதாவது 8 மணி நேரம் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிமீ வரை செல்ல முடியும். ஆனால், இந்த ஸ்கூட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்யும்போது ஒரு யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி 180 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதற்கு 5 ரூபாய் மட்டுமே செலவாகும் என்கின்றனர் மாணவர்கள் (முகப் புத்தகத்திலிருந்து)
-சத்துணவு திட்டத்தில் வேலைபார்க்கும் பெண்மணியின் மகனான நடராஜ் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகத் தடகளப் பயிற்சி அளிக்கிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கலால் துறையில் விளையாட்டுக் கோச்சாக இருக்கிறாராம். இருக்கும் வசதிகளைக் கொண்டே இளவயதில் தேசிய அளவில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது தனக்கு ஆதரவளித்த, தன்னை தத்தெடுத்து ஆதரவு அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களை நினைவு கூரும் இவர் தன்னிடம் வரும் ஏழை மாணவர்களிடம் காசு எதுவும் எதிர்பார்க்காமலேயே பயிற்சி அளிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரேனும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும், வெல்லுவார்கள் என்கிறார் (முகப் புத்தகத்திலிருந்து)
சிவகங்கையில் (திருப்புவனத்தில்) விபத்தில் சிக்கி கைகால்கள் முறிந்து துடித்துக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பொது மக்கள் உதவாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அந்த வழியே பரமக்குடி விழாவுக்குச் சென்று கொண்டிருந்த வைகோ அந்த வாலிபர்களை மோதிய அந்த வேனிலேயே ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு உதவிக்கு தனது தொண்டர்கள் இருவரையும் உடன் அனுப்பினார்.(தினமலர்)