"பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே.." என்றொரு பழைய
பாடல் உண்டு. தேவர் படமொன்றில் சுந்தர்ராஜன் நடிப்பில் 'தெய்வச்செயல்'
என்கிற யானை பற்றிய படம்! இந்தப் பதிவும் யானை பற்றியதுதான்.
19-08-2012 கல்கி இதழில் வனக்காவலன் என்ற தலைப்பில் ரமணன் எழுதியிருக்கும் கட்டுரையை இங்கு பகிர்கிறோம்.
லாரன்ஸ் அந்தோணி. பிறந்த தேதி, செப்டம்பர் பதினேழு, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது. (17-09-1950) ஆப்பிரிக்க வனவிலங்குகள் வாழ்க்கையை ஆராயும் வனவியல்
ஆராய்ச்சியாளர். வனவிலங்குகளைப் பற்றி புத்தகங்கள் எழுதியிருப்பவர். 20
வருடங்களுக்கும் மேலே ஆராய்ச்சிப் பணி. தனியார் வசமுள்ள தென் ஆப்பிரிக்கக்
காட்டுப்பகுதிகளில் ஒன்றான துலதுலா(THULA THULA). இந்தத் துலா என்ற இடத்திலிருக்கும் காட்டுப்
பூங்காவின் தலைமை வார்டனாகப் பணி.
இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து வந்த ஒரு தொலைபேசி
அழைப்பால் பதறிப் போனார் லாரன்ஸ். "500 மைல் தொலைவில், ஒரு தனியார்
காட்டுப் பகுதியில் ரவுடித்தனம் செய்யும் ஒரு காட்டு யானைக் கூட்டத்தைச்
சுட்டுக் கொல்லப் போகிறார்கள்" என்பதுதான் அந்தச் செய்தி. "அவற்றை இடம்
மாற்றுங்கள். நான் திருத்த முயற்சிக்கிறேன். சுட வேண்டாம்" என்று இவர்
கேட்டுக் கொண்டதால் இருபது ரவுடி யானைகளை இவர் தலையில் கட்டினார்கள். அந்த
யானைக் கூட்டத்தின் தலைவி சரியான ரவுடி ராணி. பாதுகாப்பிலிருந்து
தப்பிப்பதில் எக்ஸ்பர்ட். தப்பித்து வெளியே வந்தால், மற்ற யானைகளைக்
கெடுத்து விடும் என்பதால், அந்த யானைக் கூட்டம் வாழும் பகுதிக்கு மின்வேலியிட்டிருந்தார்கள்.
அதைத் தகர்த்தெறிந்து மின்சாரத்தைத் துண்டித்து விட்டு தப்பிக்க முயற்சி
செய்த முரட்டுப் புத்திசாலித் தலைவி. அந்த யானைக் கூட்டத்துடனே பதினெட்டு
மாதம் வாழ்ந்து அவற்றுடன் பேசிப்பேசி ஆயுதங்களைக் கையாளாமல் புரிய வைத்து
திருத்தி ஒரிஜினல் இருப்பிடத்தில் கொண்டு விட்டார் லாரன்ஸ்.
இந்த முயற்சியில் தமது போராட்டங்களுக்குப் பின் அந்தப் பெண் யானை தம்மைப்
புரிந்து கொண்டு கட்டுப் பட்டது பற்றியும் பின் படிப்படியாக சாதுவாகிப்
போனதைப் பற்றியும் லாரன்ஸ் எழுதிய "யானை சொல்லும் ரகசியங்கள்" (The
Elephant Whisperer - my life with the herd in the African Wild )
என்ற புத்தகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெஸ்ட் செல்லர்.
இவர் கடந்த 2012 மார்ச் மாதம் இரண்டாம் தேதி, எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் இறந்து போனார். உலகறிந்த வனவியல்
ஆராய்ச்சியாளரான லாரன்ஸ் மறைவுச் செய்தியைக் கேட்டு , அஞ்சலி செலுத்த
வந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ஒரு யானைக் கூட்டம். 600 மைல்
தொலைவில் தாங்கள் வாழும் காட்டுப் பகுதியிலிருந்து பன்னிரண்டு மணி நேரம்
தொடர்ந்து ஒரே வரிசையில் அணிவகுத்து நடந்து ( கூட்டமாக வந்தால் தாக்க வரும்
யானைக் கூட்டம் எனக் கருதி தாங்கள் விரட்டப் பட்டு விடுவோம் என்பதால்
கட்டளையின் கீழ் இயங்கும் யானை வரிசையைப் போல வந்திருக்கின்றன)
லாரன்சின்
வீட்டுக்கு வந்தன. 600 மைல் தொலைவுக்கு அப்பால் நிகழ்ந்த லாரன்சின் மரணம்
எப்படித் தெரிந்தது என்பதும், வழி தவறாமல், ஓய்வெடுக்காமல் சரியாக இவரது
வீட்டுக்கு எப்படி வந்தது என்பதும் மிகப் பெரிய ஆச்சர்யம். காரணம் லாரன்ஸ்
தற்போது வசித்த இடத்தை இந்த யானைகள் பார்த்ததில்லை. வந்த இடத்தில்
லாரன்சின் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்து, பின் தாமாகவே தங்கள்
இருப்பிடத்துக்கு அணிவகுத்துத் திரும்பிய இந்த யானைக் கூட்டத்தை டிவி
செய்தியாளர்கள் துரத்திச் சென்ற போது லாரன்சின் மகன், " நாட்டின் பெரிய
தினசரிகள் அஞ்சலி வெளியிட்டதை விட பெரிய கவுரவமாக இந்த யானைக் கூட்டம்
வந்ததைக் கருதுகிறோம். தயவு செய்து எங்கள் விருந்தினர் கோபப்படும்படி
எதுவும் செய்யாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
விலங்குகளில் யானை மிக புத்திசாலி என்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப் பட்ட
விஷயம். அவற்றுக்கு டெலிபதியும் உண்டோ என்பது இப்போது ஆராயப் பட வேண்டிய
ஒரு விஷயம்.
நன்றி : கல்கி 19-08-2012 இதழ்.