சனி, 20 ஏப்ரல், 2013

பாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 14, 2013 முதல் ஏப்ரல் 20, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
       
1) ஆரோக்கியத்துக்கு ஒரு பாடம் :  விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பிவழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.

                                      
சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்ஜி.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன்ஜி கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.

நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.

இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார். இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.

2) மின்வெட்டுக்கு ஒரு பாடம் :
  காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: ஜலகண்டாபுரம் வாலிபர் சாதனை

காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்
தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.
                                                

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, கண்டுபிடித்துள்ளார்.

இதற்கான முயற்சியில், மூன்று ஆண்டுகளாக ஈடுபட்ட அவர் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என, கண்டுபிடித்துள்ளேன். காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும்; மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின், இரு பக்கமும் உள்ள, இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும் என்பதால், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், மேச்சேரியை சேர்ந்த ஜெயவேல், சேலம், கருப்பூரை சேர்ந்த ராஜசேகர், குமாரபாளையத்தை சேர்ந்த சிவராஜ் ஆகியோரின் உதவியுடன், என் சக்திக்கு தகுந்தவாறு காற்றாலை அமைத்து, அதில் சிறிய அளவில் மின்சாரமும் கிடைக்க செய்துள்ளேன். போதிய பணவசதி இல்லாததால், ஆராய்ச்சியை தொடர தடை ஏற்பட்டுள்ளது.நான் செய்த செயல் வடிவத்தை, மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில் ஒப்படைக்க உள்ளேன். ஐந்து பேர் சேர்ந்து பவர் விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்துள்ளோம்.

டிரஸ்ட்டுக்கு பணம் செலுத்த விரும்புவோர், 99940097959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

3) மனிதர்களுக்கு ஒரு பாடம் :
  சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது....கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.

அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது.
                                              


தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்துகொண்டு இருந்தது. ஐந்தறிவு ஜீவன்கள் மனிதனைவிட பாசத்தில் ஒருபடி உயர்ந்தவை என்பது உண்மைதான்.

4) மாணவர்களுக்கு நவீன பாணியில் பாடம் :
கணினி வழிக் கல்வி; "சிடி' க்களில் பாடம்: "கைப்பணத்தில்' கிராமத்து ஆசிரியர் சேவை

காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர்.
                                                       

புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர்.

அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது.

உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது.

தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார்.


5) முன்னேற நினைப்போருக்கு ஒரு பாடம் : 4 வருடங்களுக்கு முன்னர் ஹோட்டலில் மேஜை துடைத்துக் கொண்டிருந்த எல். பொன்னுதுரை இப்போது ஒரு கம்பெனியில் வேதியியல் பொறியாளராக வேலையைத் தொடங்க இருக்கிறார்.

5 வயதில் தாயை இழந்து தந்தை மறுமணம் செய்து கொண்ட நிலையில் உறவினர்கள் சிலர் இந்த தலித் மாணவனின் படிப்பார்வத்தைப் பார்த்து, தலித் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்க, பத்தாம் வகுப்பை 96% சதவிகிதத்திலும், அப்புறம் ஸ்காலர்ஷிப் உதவியில் +2 வை 93% மதிப்பெண்ணும் பெற்றுத் தேறினார். அப்புறம் மேலே படிக்க ஆர்வமிருந்தும் முன்னேற முடியாமல் ராஜபாளையம் வசந்த் பவனில் வேலை செய்து கொண்டிருந்த போன்னுதுரையைக் கண்ட அவர் முன்னாள் இயற்பியல் ஆசிரியர், மறுநாள் எல்லா ஆசிரியர்களுடனும் அங்கு வந்து எல்லோரும் காசு போட்டு இவரைப் படிக்க வைக்கச் சென்னைக்கு அனுப்பினாராம். அப்புறமும் வங்கி உதவித் தொகை பெற அவர் தந்தை படுத்திய பாடு, ஆங்கிலம் புரியாமல் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் கடந்து இப்போது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் வேலையில் சேரப் போகும் செய்தியைத் தெரிவிக்கிறது ஹிந்து நாளிதழ்.

                                           


 
தன்னுடைய அனுபவத்தை வைத்து, இனி வசதியில்லா மற்ற கிராமப்புற மாணவர்களுக்கும் உதவத் தீர்மானித்துள்ளாராம். 

              

13 கருத்துகள்:

  1. பாசிடிவ் செய்திகளைப் படிக்க படிக்க
    எங்களுக்குள்ளும் பாசிடிவ் எனர்ஜி கூடுவதை
    உணரமுடிகிறது.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அனைத்து செய்திகளுமே அருமையான பாசிட்டிவ் செய்திகள்.

    தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்...

    பதிலளிநீக்கு
  3. ஆரோக்கியத்துக்கு ஒரு பாடம்.
    மின்வெட்டுக்கு ஓரு பாடம் மட்டும் நான் படித்து இருக்கிறேன்.

    மனிதர்களுக்கு ஒரு பாடம் மனதை உலுக்கியது.

    மாணவர்களுக்க் நவீனபாணியில் பாடம் பாராட்ட சொல்கிறது அந்த ஆசிரியரை.
    வாழ்த்துக்கள் சார்.

    முன்னேற நினைப்போருக்கு ஒரு பாடம்: எல் .பொன்னுதுரைக்கு வாழ்த்துக்கள்.

    பாசிட்வ் செய்திகள் வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. 1.நிச்சயம் அவரை தொடர்பு கொள்ள முயல வேண்டும். நிலா வேம்பு கசாயம் இவற்றை எல்லாம் ஒருமுறையாவது சுவை பார்க்க வேண்டும்.

    2.என்ன ஒரு அற்புதமான விஷயம், காற்றாலை இல்லதா மின்சார உற்பத்தி காற்றாலை

    5. சாதனை மாணவன்

    இந்த வார பாசிடிவ் செய்திகளில் தன்னம்பிக்கை ஒளிர்கிறது

    பதிலளிநீக்கு
  5. நல்ல செய்திகளின் தொகுப்பு...
    அருமை...

    பதிலளிநீக்கு
  6. சே, ஆரோக்கிய உணவிலே இருக்கிற அநேக உணவு வகைகளைச் செய்து சாப்பிட்டுட்டு இருந்தாலும் இப்படித் தோணலை பாருங்க. நிலவேம்பு எப்போவும் கையிலேயே இருக்கும். அதே போல் பேரிச்சை அவலும்! :))) கம்பு தோசை, கேழ்வரகு தோசைனு பண்ணிட்டுத் தான் இருக்கேன். :))))

    தலித் மாணவரின் ஊக்கமும், அவரை ஊக்குவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    ஜலகண்டாபுரம் காற்றாலை குறித்து ஏற்கெனவே படிச்ச நினைப்பு இருக்கு! :))))ம்ம்ம்ம்ம்ம்?????

    பதிலளிநீக்கு
  7. உற்சாகம் ஊட்டும் அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. நம்ம ஊரில் இந்த மாதிரி ஒரு இயற்கை உணவு விடுதி இருக்கு.
    ஒரு சாப்பாடு 450 ஆகிறது:)

    காற்றாலை இல்லாத விசிறி வந்துவிட்டால் எவ்வளவு மின் செலவு குறையும்!
    மாடு ரொம்பப் பாவமாக இருக்கிறது. எத்தனை வேதனைப் பட்டதோ.
    வறுமையிலும் படித்து முன்னுக்கு வரும் மாணவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    ஆசிரியர் லாரன்ஸ் போல இன்னும் எத்தனையோ நபர்கள் வருவார்கள் என்று நம்புவோம். அனைத்து நற்செய்திகளுக்கும் மிகவும் நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  9. அனைத்து செய்திகளும் வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியது என்றாலும் அந்த விபத்து மிகவும் மனதை உருக்கியது. மாட்டைப் பார்த்தாவது மனிதர்கள் திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. கைபேசி எண்ணை குறிதுக்கொண்டேன். எல்லா வகைகளையும் சுவைக்க நிச்சயம் ஒரு நாள் சிவகாசி செல்வேன்.

    பதிலளிநீக்கு
  11. The 2nd one is a fraud. Energy cannot be generated from a perpetual motion (like this one).

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!