அலுவலக அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலுவலக அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.1.16

அலுவலக அனுபவங்கள் :: ஓய்வுக்குப் பின் வேலை


ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒய்வு பெற்ற நண்பர்கள் ஒன்றாகக் குழுமியிருந்தனர்.  இப்படி அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள்தான்.


பேச்சு பல்வேறு விஷயங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தது.  இவர்களோடு பணியாற்றியவர்களில் சிலர் மறைந்து விட்டிருந்தனர்.  சிலர் வெளிநாட்டில் மகன், அல்லது மகளோடு.  



மிக உயர்ந்த பதவிகளிலிருந்து ஒய்வு பெற்றிருக்கும் இந்த நண்பர்களில் இருவர் ஓய்வுக்குப் பிறகும் ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருப்பவர்கள்.  சும்மா வீட்டிலிருக்கப் பிடிக்காதவர்கள், பொழுது போகவில்லை என்பதால் வேலைக்குச் செல்பவர்கள்.






அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் கிண்டல் செய்து பேசிக் கொள்வார்கள்.

"இவன் வேலைக்குப் போக மாட்டேன்னு சொல்றானேன்னு பெருமைப் பட்டுக்காதேம்மா... இவனைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள மாட்டாங்க..  இவன் கேக்கற கேள்விகளுக்கு அவனவன் ஓடிப்போயிடுவான்.." என்பார் ஒருவர் விஸ்வநாதன் மனைவியிடம்!





"ஆமாமாமாம்... வேலியில போற ஓணானை யாராவது மடில கட்டிப்பாங்களா என்ன.."  என்று கிண்டலடிப்பார் இன்னொரு நண்பர்.
 


எல்லோருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் பேச்சு களை கட்டும்.
 


இவர்களைப் போலவே ஓய்வுக்குப்பிறகு வேலைக்குச் சென்ற இன்னொரு நண்பர் ஆரோக்கியராஜ் வேலையை விட்டு அப்போதுதான் நின்றிருந்தார்.
 


பேச்சு அதை பற்றித் திரும்பியது.  ஆளாளுக்குக் கிண்டலடித்துக் கொண்ருந்தார்கள்.
 


"என்ன ஆச்சு ஆரோக்கியம் ஸார்?  ஏன் வேலையை விட்டுட்டீங்க... போரடிச்சுப்போச்சோ?" விஸ்வநாதன் கேட்டார்.



 


"நீதான் சரி விசு..  ரிடயர்மெண்டுக்குப் பின் வேலை வேண்டாம்னு கரெக்டா முடிவெடுத்திருக்கே..  நாம இருந்த போஸ்ட் என்ன..  சோம்பேறித்தனம் கூடும்னு ஏதாவது வேலைக்குப் போகலாம்னு நினைச்சப்போ 'சர்ச்சு'ல என்னைப்பற்றி நல்லாத் தெரிஞ்சிருந்த ஃபாதர்  "நீங்க இங்கேயே வேலைக்கு வாங்களேன்..  எங்களுக்கும் கௌரவமா இருக்கும்.  உங்கள் அனுபவம் எங்களுக்கு உபயோகப்படும்" னு கூப்பிட்டார்..."
 


"அதான் எங்களுக்கே தெரியுமே ஆரோக்கியம் ஸார்.. அப்புறம் என்ன ஆச்சு?"
 


"முதல்ல எல்லாம் சாதாரணமாத்தான் இருந்தது.  முதல் பதினைந்து நாள் ஆபீஸ் போன உடனே ஒரே மரியாதைதான்.  "வாங்க ஸார்! இது வேணுமா, அது வேணுமா? நீங்க சொன்னா சரிதான்" ன்னு போயிகிட்டிருந்தது.  ஒருநாள் "ஸாரை"க் கட் செய்தார்.  அப்புறம் எந்த விளித்தலும் இல்லாமல் பேச ஆரம்பித்தார்.  அப்புறம் அவரைப் பார்க்கப் போனால் ஆளை விட்டு "அப்புறம் வரச்சொல்லு" ன்னு திருப்ப ஆரம்பிச்சார்.  இப்படியே ரெண்டு மாசம் ஓடி விட்டது. என்மேல் என்ன அதிருப்தின்னும் தெரியலை.  எதில் அவர் நினைத்தபடி நான் நடக்கலைன்னும் எனக்குப் புரியலை.  ஒரு நாள் நான் உள்ளே நுழையும்போது "அந்தாளைக் கூப்பிடுய்யா" என்று சொன்னது காதில் விழுந்தது.
 


"வேலையாள் வந்து என்னை அழைக்கவும், அந்த 'அந்தாளு' நான்தான் என்று தெரிந்தபோதே கஷ்டமாயிருந்தது.  உள்ளே நுழையும்போதே அவர் "என்ன ஆரோக்கியராஜ்..  வரவர உங்களைப் பார்க்கக் கூட முடியவில்லை.."ன்னு ஆரம்பிச்சார்.  அவர் பேர் சொல்லிக் கூப்பிட்டதுமே ஒரு மாதிரி இருந்தது..  அவருக்கு 35 வயசு.  எனக்கு 60 வயசு.  வேலைக்குச் சேரும் முன்பு 'சர்ச்சு'க்கு வரும் போதெல்லாம் எனக்கிருந்த மரியாதை நினைவுக்கு வந்தது.  அப்படியும் நான் அவரைப் பார்க்கப் போன போதெல்லாம் 'அப்புறம் வரச்சொல்லு' ன்னு அவர் சொன்னதை ஞாபகப் படுத்தினேன்"  



 


"அதுக்கு அவர் சொன்னார்.."நான் ஆயிரம் வேலையா இருப்பேன்..  நீங்க காத்திருந்துதான் என்னைப் பார்த்திருக்கணும்.  சம்பளம் வாங்கறீங்க இல்லே?   இவ்வளவு அனுபவம் இருக்கற உங்களுக்கு அது தெரியலையா ஆரோக்கியராஜ்?   இதுக்குதான் ஒரு புதுப் பையனை வேலைக்கு வைக்கணும்" னு பேசிகிட்டே போனார்!"
 


"புதுப் பையனையே வேலைக்கு வச்சுக்கோங்க"ன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்"
 


ஆரோக்கியராஜ் சொல்லி முடித்தார்.
 


"அதுவும் சரிதான்"  என்றார் விஸ்வநாதன்.
 


"யாருக்கு?"  என்றார் சுந்தர்.
 


"ரெண்டு பேருக்கும்தான்"  என்று முடித்தார் விஸ்வநாதன்.








படங்கள்  :  நன்றியுடன் இணையத்திலிருந்து...

22.9.15

அலுவலக அனுபவங்கள் :: இப்படியும் சில ஊழியர்கள், அதிகாரிகள்!


குடியிருப்பும் அலுவலகமும் கலந்திருக்கும் ஒரு அலுவலகம்.


அலுவலகத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் குடியிருப்புகள்.  அந்தக் குடியிருப்பின் ஒரு வீட்டில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் தலைமை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு மேலதிகாரி வசித்தார்.


தினமும் இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அடிப்படை ஊழியர்களை அழைத்து ஏதாவது வேலை வாங்கிக் கொண்டே இருப்பது அவர் வழக்கம்.  இது அந்த ஊழியர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தாலும் வேறு வழியில்லை.


தலைமை அலுவலகத்தின் மேலதிகாரி.   என்ன செய்ய முடியும்?


அலுவலகத்தில் கொஞ்சம் கடபுடா பேர்வழி ஒருவன் இருந்தான்.  அவனை மட்டும் அந்த அதிகாரி வேலை சொல்ல மாட்டார்.  மற்றவர்களுக்குக் காரணம் புரியவில்லை.  அவன் மேல் பொறாமையாகக் கூட இருந்தது.


அதற்குக் காரணமும் ஒரு நாள் அவன் சொல்லித் தெரிந்தது.  இவர்கள் செய்யாத செயலை அவன் செய்திருந்தான்.  அதுவும் ஒருமுறை அல்ல!


ஒருமுறை அந்த அதிகாரி இவனை அழைத்து  100 ரூபாயைக் கையில் கொடுத்து காலை டிஃபன் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார். ஒரு பொங்கலும், ஒரு வடையும் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.  கூடவே எப்போதும் மற்றவர்களிடம் சொல்வது போல 'உனக்கு ஏதாவது வேணும்னாலும் வாங்கிக்கோ' என்று சொல்லி இருக்கிறார்.  எப்போதுமே, எல்லோரிடமுமே சொல்வதுதான் என்றாலும் மற்றவர்கள்  "பரவாயில்லை ஸார்"  சொல்லி விடுவார்கள்.


இவன் அவருக்குப் பொங்கல் வாங்கிக் கொடுத்து விட்டு ("வடை இல்லையாம் ஸார்"),  மிச்சம் 20 ரூபாய் தந்திருக்கிறான்.   இருபது வருடங்களுக்கு முன் 100 ரூபாயின் மதிப்பும், டிஃபன்களின் விலைகளும் வேறு லெவல்! 

 
அவர் கேள்விக் குறியுடன் பார்த்தபோது தான் வாங்கிக் கொண்ட பொட்டலங்களைக் காட்டியிருக்கிறான்.  மூன்று, நான்கு வகைகள்!  அவருக்குப் பொங்கல் வடை மட்டும்!  தானே சொன்னதால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.  சாப்பாட்டு விஷயத்தில் என்ன சொல்ல முடியும்?


அடுத்த முறை அவனை அழைக்க நேர்ந்தபோது அவன் கையில் சென்ற முறையை விட காசு குறைத்தே கொடுத்திருக்கிறார்.  அதற்கும் அவன் தங்கள் இரண்டு பேருக்கும் சரி சமமாக வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான்.  மிச்ச காசு இல்லை என்று சொல்லி விட்டான்.


அதற்கும் அடுத்த முறை சரியான காசு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.  ஆனால், அடுத்த 'டர்னி'ல் அவருக்கு டிஃபன் வாங்கப் போன
இன்னொரு ஊழியர் வந்து,  இவர் கணக்கில் 45 ரூபாய் கடன் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.  சென்ற முறை 'இவன்' செய்த கைங்கர்யம்!

 
அதுதான் அவர் அவனை அழைப்பதே இல்லை.  மற்ற ஊழியர்களுக்கு இது போல செய்ய ஏனோ தைரியம் இல்லை!


இன்னொருமுறை குழாய்த் தண்ணீரில் ஏதோ நாற்றம் வருகிறது என்று
மேலே தண்ணீர்த் தொட்டி சுத்தம்செய்யச் சொன்னபோது, மேலே ஏற வழி இல்லாத அந்த வீட்டில், பின்னால் தண்ணீர் ஏறும் பைப் வழியாக ஏறுகிறேன் என்று அந்த பைப்பையும், ஒரு ஜன்னல் கதவையும் உடைத்து வைக்க, அதை அவர் சரி செய்யப் பட்ட பாட்டில்
அவர் இவனை அழைப்பதே இல்லை.  இவனைப் பார்த்தாலும் பார்க்காதது போலத் தாண்டிச் சென்று விடுவார்.


9.6.15

அலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்



அமைச்சர்களின் அல்லது மேலதிகாரிகளின் தொடர் தொல்லை தாங்காமல் அரசு ஊழியர்களில் சிலர் தற்கொலைக்கு முயலும் காலம் இது.  

கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் கிடைக்கப்பெற்ற ஒரு அலுவலரின் அனுபவம் இது.  ஆனால் இப்போதல்ல,  70 களில்!

அவர் எப்படி அதை எதிர்கொண்டார் என்பதுதான் சுவாரஸ்யம்.

மாதாந்திர ரெவியூ மீட்டிங்குக்குச் சென்ற ஒரு நாளில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.  ஆடிட் விளக்கம் சொல்ல நானும் சென்றிருந்தேன்.

நான் என்றால் ஸ்ரீராம் இல்லை.  அவன் இதை நான் சொல்லக் கேட்டு எழுதுகிறான், அவ்வளவுதான்.  என் பெயர் தேவையில்லை.  அப்படி பெயர் முக்கியம் என்றால் வாசு என்று வைத்துக் கொள்ளுங்களேன். 

ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய அதிகாரி எல்லோரையும் வழக்கம்போல காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார்.  தணிக்கைத் தடைகளில் சில விஷயங்களுக்கு, விதிகளில் இருக்கும் (பழைய) சட்டங்களை அப்படியே நேராகப் பொருத்திப் பார்த்தோம் என்றால் சரியாக வராது என்பது பாதிக்கப் படுபவர்களுக்குத் தெரியும்..  ஏன், தணிக்கை அதிகாரிகளுக்கும் தெரியும் என்றாலும் அவர்கள் வாதம் தனிவகை. அவர்கள் அதிகாரம் செய்யுமிடத்தில் இருப்பதால் அவர்கள் அதை லட்சியம் செய்வதுமில்லை. அது பெரிய கதை.  அது இங்கு வேண்டாம்!

எனவே பதில் சொல்பவர்கள் சில சமயம் விரக்தியின் உச்சத்தைத் தொட்டு வருவார்கள்.  அப்படி ஒருவர் முருகேசன்.,
அந்த மீட்டிங்கில் நானும் இருந்தேன்.  என் பங்கு நிதி சம்பந்தப் பட்டது.  எனக்கு பதில் சொல்ல வேண்டியது எதுவுமில்லை.  அப்படியே இருந்தாலும் கவலைப்படுவதும் இல்லை.  என்னைப் பார்த்து அவர்கள்தான் பயப்பட வேண்டும்.  அதற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது.  அதுவும் இங்கு வேண்டாம்.  இப்போது வேண்டாம்! 

 
தணிக்கைத் தடைகள் பற்றி உரையாடல் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் முருகேசனிடம் கேள்விமேல் கேள்வி விழுந்து கொண்டிருந்தது.  அவர் மேலாளர் அந்தஸ்தில் இருப்பவர்.

இரண்டு மூன்று கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டும் அவரிடமிருந்து பதில் இல்லை.  அவர் கீழே மேஜையில் ஏதோ உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது.  அதிகாரி அருகிலிருந்தவரை விளித்து முருகேசனின் கவனத்தை "ஈர்க்க"ச் சொன்னார்!  அவர் திரும்பி முருகேசன் அப்படி என்னதான் பார்க்கிறார் என்று பார்த்தார். ஒரு கட்டெறும்பு இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்க, அதை எல்லை மீறாமல் அணை கட்டி தடுத்து வைத்து பேனாவால் அதைக் குறி பார்த்துக் கொண்டிருந்தார் முருகேசன். அவர் உதடுகள் மடிந்து, கண்கள் கூர்மையாக கவனம் முழுவதும் கட்டெறும்பின் மீதே குவிந்து இருந்தது.

"ஸார்!... முருகேசன் ஸார்!" சத்தமாக அவர் கவனத்தைக் கலைத்தார் அந்தப் பக்கத்து நாற்காலி.

நானும் முருகேசனைப் பார்த்தேன்.  காலையிலிருந்தே அவர் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டது எனக்கு.

அதிகாரியைப் பார்த்து எழுந்து நின்றார் முருகேசன்.

"என்ன?" என்றார் நான்கு விரல்களை மடக்கி, கட்டை விரலை உயர்த்தி சைகையுடன்!

அதிகாரி கோப மோடின் உயர் நிலையில் மூன்று கேள்விகளையும் மறுபடி அடுக்கினார்.

"இப்படி அடுக்கினா எப்படி..  ஒண்ணொண்ணாக் கேளுங்க... அப்படிக் கேட்டாத்தானே சொல்ல முடியும்?" -  முருகேசன்.

"எத்தனை தரம்யா கேக்கறது?  தனித்தனியாக் கேட்ட போது என்ன செஞ்சுகிட்டிருந்தே?  நீ ஒண்ணொண்ணா சொல்லுய்யா... டைம் வேஸ்ட் பண்றே...எங்களை  என்ன வேலை இல்லாதவங்கன்னு நினைக்கிறியா... பதிலைச் சொல்லு" இரைந்தார் அதிகாரி.


"பதிலா?  பதிலா வேணும்?  பதில்தானே?  இதோ வர்றேன்... அங்க வந்து நானே பதிலைச் சொல்றேன்..  ஒவ்வொண்ணாச் சொல்றேன்"  நிறுத்தி, நிதானமாகச் சொன்னவர் சுற்றுமுற்றும் பார்த்தார்.  அருகில் இருந்த ரூலர் தடி போன்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டார்.

"இரு! இப்போ 'போட்'ல வந்து உதைக்கிறேன் உன்ன... கேள்வியா கேட்டிருக்கே? பதிலா வேண்டும்?  இதோ வந்து உதைக்கிறேன் பாரு" என்றவர் கையிலிருந்த தடியைத் துடுப்பாக்கிக் கொண்டார்.  

"ஏலேலோ... ஐலஸா!  ஏலேலோ... ஐலஸா..." என்று பாடியபடியே 'துடுப்பால்' துழாவிக்கொண்டே மேஜை மேஜையாகக் கடந்தார்.

எல்லோரும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் இந்த எதிர்பாராக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அதிகாரியும் அதிர்ந்துபோய் "என்ன இது?" என்பதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் நெருங்கிய முருகேசன் தடியால் ஓங்கி அவர் மண்டையில் ஒன்று போட, அதிகாரி திகைத்துப் பதறிப்போய் உள்ளே எழுந்து ஓட,  நொடியில் களேபரமானது இடம்.

அதிகாரிக்கு உதவிக் கொண்டிருந்த தணிக்கை உதவியாளர்  "ஏய் மிஸ்டர்!  நீங்க என்ன செய்யறீங்க, இதற்கு என்ன ஆக்ஷன் எடுப்போம் என்று தெரிந்துதான் செய்யறீங்களா?" என்று கோபத்துடன் கத்தினார்.

அடுத்த கணமே முருகேசனின் 'படகு' அவர் பக்கமாகத் திரும்ப, அவர் சப்தநாடியும் அடங்கி, அமர்ந்து, பீதியுடன் அவரைப் பார்த்தார்.

"இல்ல முருகேசன் ஸார்.. இப்போ சொல்லலைன்னா அடுத்த வாரம் பதில் தர்றேன்னு ஸார் கிட்ட சொல்லியிருக்கலாமேன்னு சொன்னேன்"

"ஆக்ஷனாடா?  எடு ஆக்ஷன்! நான் பார்க்காத ஆக்ஷனா?" என்ற முருகேசன் 'உதவி' கையிலிருந்த ஃபைல் நாடாவைப் பிரித்தவர் அதிலிருந்த பேப்பர்களைக் கற்றையாகக் கைப்பற்றினார்.  அசாத்திய வலுவுடன் அதை இரண்டு மூன்று பாகங்களாக்கிக்கொண்டு இரண்டு இரண்டாகக் கிழித்தார். மேஜை மேல் ஏறி நின்றவர், மேலே சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறியின் கீழாக அதைப் பிடித்தார்.

அந்த ஹால் முழுவதும் கிழிந்த பேப்பர்கள் பறந்தன.

ஒளிந்திருந்த தணிக்கை அதிகாரி அங்கிருந்து லேசாக எட்டிப் பார்த்து "என்ன ஸார் பார்த்துகிட்டு நிக்கறீங்க எல்லோரும்... அவரைப் பிடிங்க ஸார்!" என்று கத்தினார்.  மறுபடி காணாமல் போனார்!

அப்புறம் எல்லோரும் சேர்ந்து, முருகேசனை மெல்லப் பிடித்து அமர்த்தி, ஆசுவாசப் படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.  சில நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தார் முருகேசன்.

அப்புறம் இதுபோன்ற மீட்டிங்குகளில் இது பற்றிய பல கிண்டல் பேச்சுகள் நிறைய இடம்பெற்றன.  "எங்க, முருகேசன் கிட்ட கேட்கச் சொல்லுங்க பார்ப்போம்" என்பார்கள். 

முருகேசனிடம் " ஸார்.. உண்மையைச் சொல்லுங்க.. வேணும்னுதானே செய்தீங்க?  தெரிஞ்சேதானே அப்படிச் செய்தீங்க?' என்று பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும் கேட்டுப் பார்த்தார்கள்.  அவர் பாவமாக விழிப்பார்.

 

அவர் மைத்துனர் உள்ளூரில் பெரிய போலீஸ் அதிகாரி என்பதாலும், அவர் மாமனாரின் இன்னொரு சம்பந்தி வழியில் இவர்களின் உயர் அலுவலகத்தில் செல்வாக்கு இருந்ததாலும் முருகேசன் மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் தப்பித்ததும், கிழிக்கப் பட்ட ஃபைல்கள் மறுபடியும் உருவாக்கப்பட்டதும் தனிக்கதை.

28.4.15

அலுவலக அனுபவங்கள் : தமிழ்ச் சண்டை.




அலுவலகங்களில் சில சமயம் நடக்கும் சண்டைகள் சுவாரஸ்யமாக இருக்கும்.  அதாவது ஒருவருக்கொருவர் கைகளால் அடித்துக் கொள்வது அல்ல.  

ஆனால் அதுவும் உண்டுதான்.  இப்போது நான் சொல்லப் போவது வேறு மாதிரி.

நீ பெரியவனா, நான் பெரியவனா?  நீ அறிவாளியா, நான் அறிவாளியா?  உன்னை விட எனக்குக் கொஞ்சம் கூடவே தெரியும் போன்ற ஈகோ சண்டைகள் நடக்கும்.  நட்புடனும் அடித்துக் கொள்வதுண்டு.  விரோதத்துடனும் அடித்துக் கொள்வதுண்டு.

இந்தச் சம்பவம் பொறாமையினால் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த ஒரு போராட்டம்!

'வரைவுக்குறிப்பு' என்பது 'நோட்ஃபைல்' என்பதன் தமிழ்.  இதை எழுதி மேலதிகாரிக்கு அனுப்பி அப்ரூவல் வாங்கினால் அப்புறம் 'வரைவு' வைத்து விடலாம். அதாவது டிராஃப்ட். 

நம் கதாநாயகன் அந்த அலுவலகத்தில் உதவியாளர்.  அதாவது அஸிஸ்டண்ட்.    (மேஜர் சுந்தரராஜன் நினைவுக்கு வருகிறாரா?  என்ன செய்ய?  கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறதே!)   ஒரு ஃபைலை டீல் செய்துகொண்டிருந்தபோது அதில் "பார்வையில் காணும் கடிதத்தைக் காண்க.  மேல் நடவடிக்கை வேண்டப்படுகிறது"  என்று குறிப்பு எழுதி அனுப்பினார்.

அதைப் படித்த அக்கவுண்ட்ஸ் ஆஃபீசர் அந்த ஃபைலை அப்படியே திருப்பி அனுப்பினார்.

" 'காண்க' என்பது
வினை எச்சம்.    ஒரு மேலதிகாரிக்கு எழுதும்போது உதவியாளர் இப்படி எழுதக் கூடாது.  தயவு செய்து காண்க' என்றே எழுத வேண்டும்"  என்று எழுதி அனுப்பினார்.


நம் கதாநாயகன் கொஞ்சம் விடாக்கண்டர்,  நிறைய ஏடாகூடம்.  இவர் பதிலுக்கு அந்த நோட்ஃபைலில் பதிலுக்கு

"அது
வினை எச்சம் அல்ல.  அது   வியங்கோள் வினை முற்று.
மேலும் நோட்ஃபைலில் சீனியர் ஜூனியர் பாகுபாடு எல்லாம் கிடையாது.  எந்தப் பிரச்னையைக் குறித்துப் பேசுகிறோம் என்பதே முக்கியம்"  என்று எழுதி அவருக்கே திருப்பி அனுப்பி விட்டார்.


அவர் மறுபடி "நான் சொன்னதே சரி" என்று எழுதி அனுப்ப,  நம் நண்பர் பதிலுக்கு தன் மகளின் எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்திலிருந்து இரண்டு பக்கத்தை ஜெராக்ஸ் எடுத்து இணைத்து 'ஆதாரத்துடன்' மறுபடி அவருக்கு அனுப்பி விட்டார்.

 
விஷயம் ஜே டிக்குப் போய்விட்டது.   அவரைப் பற்றித் தனிப்பதிவே எழுதலாம்.  அவ்வளவு விஷயம் அவரிடமும் உண்டு!

"ஏ ஓ, அஸிஸ்டண்ட்... கூப்பிடுறா ரெண்டு பேரையும்!"

அவர் எதிரில் நின்றார்கள் இரண்டு பேரும்.

"என்னங்கடா பொழுது போகல்லையா உங்களுக்கு?  பொழுது போகல்லையான்னு கேட்டேன்"

"இல்லை ஸார்.. நோட்ஃபைல் எழுதி அனுப்பினா இவரு..."
முடிக்க விடாமல் வெட்டினார் ஜே டி.

"குடுமி வச்சிருக்கீங்களா ரெண்டு பேரும்?  திரும்புங்க....  பார்க்கிறேன்!  தமிழ்ப் புலவர்களா நீங்க?  நான் என்ன தமிழ்ச் சங்கமாடா வச்சு நடத்திகிட்டிருக்கேன்?  ஆஃபீஸா, என்னன்னு நினைச்சீங்க...  தொலைச்சுடுவேன்.. செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு என்ன விளையாடிகிட்டு இருக்கீங்க?"

கொஞ்ச நேரம் அர்ச்சனை செய்து அனுப்பினார்.

ஸீட்டுக்குத் திரும்பினார்கள் இருவரும். 

அப்புறம் அந்த ஃபைல் மறுபடி தயாராகி ஏ ஓ கையெழுத்தைப் பெற்று ஜே டியை அடைந்தது!


 


 
(டிஸ்கி :  வினையெச்சம், வியங்கோள் முற்று எல்லாம் அவர்கள் அடித்துக் கொண்டது.  சண்டைதான் முக்கியம்.  இதில் எது சரி, எது தவறு என்று எனக்குத் தெரியாது!)

24.3.15

அலுவலக அனுபவங்கள் : ஆடிட் ஆச்சர்யம்.




சாதாரணமாக ஆடிட் அனுபவங்களே ஆயாசத்தையும் வெறுப்பையும் தரும்!  ஆனால் இந்தச் சம்பவம் நடந்த வருடம் ஆடிட் கஷ்டமில்லாமல் முடிந்தது மட்டுமில்லாமல்,  நானும் என் நண்பர் தனாவும் என்ன சொன்னாலும் அதை அவர்கள் கேட்டது கண்டு மற்றவர்களுக்கு ஆச்சர்யம். ஏன், எங்களுக்கே நம்ப முடியவில்லை.
 
என்ன நடந்தது என்றால்...

ஆடிட் வரப்போகிறார்கள் என்னும்போது  ஆடிட் குழுவின் தலைமை அதிகாரி அவர்கள் வருவதற்கு ஒரு வாரம் முன்பு தொலைபேசினார்.  மலை வாசஸ்தலம் என்பதால் இங்கு வருவதற்கு எப்பொழுதுமே மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.  

"அஃபீஷியலா வந்தாலும் இந்த இடத்தைப் பார்க்கணும்னு வீட்டுல பிரியப்படறாங்க.  அதனால் அவங்களையும் அழைச்சிக்கிட்டு வர்றேன்.  எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தனியா எங்காவது ஒரு ரூம் புக் பண்ணிடுங்க.  மிச்ச பேரு அஸ் யூஷுவல் ஆபீசிலேயே தங்கிப்பாங்க"

"சரி ஸார்"

நல்ல இடத்தில் அவர்களுக்கு அவர் சொன்ன மாதிரியே காட்டேஜ் புக் பண்ணித் தந்தோம்.  அவருக்கும் மகிழ்ச்சி.  எனினும் ரொம்ப ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை.  சற்றே கடுகடு முகத்துடன் மிடுக்காக ஏற்றுக் கொண்டார்.

இரண்டாவது நாள் காலை அவரை அழைத்துவர ஜீப்புடன் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றோம்.  டிரைவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு,  அவர் அறைக்குச் சென்றோம். 

எங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு அவர் குளிக்கச் சென்றார்.  அவர் மனைவி உள்ளே இருந்தார்..

டெலிபோன் மணி அடித்தது.  அவர் குளித்துக் கொண்டிருந்ததால் அவர் மனைவி வந்து எடுப்பார் என்று எதிர்பார்த்தோம்.  அவர் அசையவில்லை. ஃபோன் விட்டு விட்டு மறுபடி அடித்தது.  உள்ளிருந்து அவர் ஃபோனை எடுக்கச் சொல்லி எங்களுக்குக் குரல் கொடுத்தார்.
 
 

தனா ஃபோனை எடுத்தார்.

"---------------"
 
"ஆமாம்."

"-------------------"
 
"குளிக்கிறாருங்க.."

"----------------------"
 
"அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடி பண்றீங்களா"

"-----------------------"
 
"நான் அவர் ஆடிட் பண்ண வந்திருக்கற ஆபீஸ் சூபரின்டெண்ட்ங்க.."
 
"----------------------------------------------------------------""
 
"இல்லைங்க..  அவங்கள்லாம் ஆபீஸ்ல தங்கி இருக்காங்க   ஸாரும் அவர் மிசஸும் மட்டும் இங்க தங்கி இருக்காங்க"

"----------------------------------------"
 
"ஆமாங்க...  உள்ள இருக்காங்க. கூப்பிடவா?"

"---------------------------------"
 
"சரிங்க.... நீங்க ஃபோன் பண்ணினீங்கன்னு ஸார்ட்ட சொல்லணும்.  அதானே?  சொல்றேங்க...நீங்க யாருன்னு சொல்லட்டும்?"

"----------------"
 

தனா ஃபோனை வைக்கும்போதே அவர் தலையைத் துவட்டியபடியே துண்டுடன் வந்தவர், "என்ன இவ்வளவு நீளமாப் பேசிகிட்டே இருந்தீங்க?  ரூம் செர்வீஸ் இல்லையா?" என்றார்.

"இல்லை ஸார்"  என்றார் தனா.

"அப்புறம் யாரு?" என்று சந்தேகமாகத் திரும்பி நின்று கேட்டார் அவர்.

தனா புன்முறுவலுடன் என்னை ஒருமுறை பார்த்தார். அப்புறம் உள்ளே ஒருமுறை பார்த்து விட்டு மெதுவான குரலில் சொன்னார்.  "உங்கள் மனைவி ஸார்!  மதுரைலேருந்து!"

"---------------------------------"
 
 
 
அந்த ஆடிட் சுலபமாக, அதிகக் கஷ்டமில்லாமல் ஏன் முடிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

19.11.14

அலுவலக அனுபவங்கள் : இப்படியும் நடப்பதுண்டு


சத்தியலட்சுமி மூக்கைச் சிந்தி, புடைவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டாள். கண்களையும் துடைத்துக் கொண்டாள்.
 
அவள் மீது இரக்கமான பார்வையைப் பதித்தபடி சங்கடத்துடன் நின்றிருந்தேன்.  தெரிந்த கதைதான்.
 
அவள் கணவர் மூர்த்தியைப் பற்றிய உரையாடல் அது.  நேற்றிரவும் குடித்து விட்டு ஒரே தலைவலியாம்.  வீட்டில், தெருவில் நடந்த அமர்க்களங்கள் பற்றியும், கொண்டுவந்து விட்ட ஆட்டோக்காரன் இவர் தவற விட்ட பணத்தையும் நேர்மையாகக் கொடுத்ததையும் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்.


                                                             
 
சொல்லிகொண்டு கிளம்பினேன். அலுவலகம் வந்தபின்னும் அவர் நினைவாகவே இருந்தது.

என்ன ஒரு திறமையான அதிகாரி?  எப்படி இருந்தவர்?
 
இரண்டு, மூன்று வருடங்களுக்குள் மிகப் பெரிய மாறுதல். நாள் முழுவதும் போதையில் இருப்பது சமீப காலங்களில் வழக்கமாகி விட்டது.

நேற்று அவருடைய பிராவிடன்ட் ஃபண்ட் தொகையிலிருந்து முப்பதாயிரம் ரூபாய் அவர் கைக்குக் கிடைத்திருந்தது. நாங்களும் எவ்வளவோ பத்திரம் சொல்லித்தான் கொடுத்தோம். கூட பியூனையும் அனுப்பினோம். இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்?
அவர் எங்களுக்கெல்லாம் உயர் அதிகாரி. 

                                                  
                                                         

முந்தைய சில சந்தர்ப்பங்களில் பணம் அப்படியே போய்விடும்.  இரண்டு மூன்று விஸ்கி, பிராந்தி பாட்டில்களுடன் இருபதாயிரம், முப்பதாயிரம் பணத்தைத் தொலைத்து விட்டு வீடு வருவார்.   பணம் தொலைந்தது ஒரு கஷ்டம் என்றால், இவர் மறுநாள் வீட்டில் அடிக்கும் கூத்து இன்னொரு தனிக் கொடுமை.  
 

                                                  
 
இந்த தினசரிக் கூத்துகளை அலுவலகமும், வீட்டைச் சுற்றியுள்ள நண்பர்களும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். யார் சொல்லியும் அவர் குணத்தை மாற்ற முடியவில்லை. மற்றவர்களுக்கு, தன் மீதான மதிப்பு குறைந்து கொண்டே வருவதை அவர் மதிக்கவே இல்லை. அலுவலகத்தில் தராதரமில்லாமல் கடன் வாங்கி இருந்தார்.
 
இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஒருநாள்..
 
சத்தியலட்சுமியின் பையன் வீட்டுக்கு ஓடிவந்தான். பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் பள்ளிச் சிறுவன் அவன்.  அவன் சொன்ன விஷயம் கேட்டு அவன் வீட்டுக்கு ஓடினேன்.  கூடவே பக்கத்து வீட்டிலேயே இருந்த மேனஜரையும் அழைத்துக் கொண்டுதான் ஓடினேன்.
 
கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்து விட்டு நெஞ்சில் காதை வைத்துப் பார்த்தோம்.  ஊ...ஹூம்.
 
"என்னம்மா ஆச்சு?"
 
"வழக்கம் போலத்தாங்க.. காலைலேயே மறுபடி கொஞ்சம் குடிச்சுட்டு, நேற்று அவர் கொண்டுவந்த பணத்தை நாங்கள்தான் எடுத்து ஒளிச்சு வச்சுட்டோம்னு ஒரே ரகளை. பையனைப் போட்டு அடித்தார். தடுக்கப் போன என்னைத் தள்ளிவிட்டு மிதி மிதின்னு மிதிச்சார். பையன் வந்து 'அப்பா'ன்னு சத்தம் போட்டு அவரை ரெண்டு போடு போட்டு அவரை கீழே இழுத்துப் போட்டான். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை...."
 
பயத்துடன் அழுது கொண்டிருந்த அவளை அடக்கி விட்டு,  நாங்கள் கலந்தாலோசித்தோம்.

வேறு ஏரியாவில் இருந்த
டைரக்டரை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.


 
லுவலகம். காலை பதினொன்றரை மணி இருக்கும்.
 
ஃபோன் ஒலித்தது. மேனேஜர் எடுத்தார். 
 
 "என்ன? எப்போ?" என்று அதிர்ச்சியானார்.
 
ஃபோனை வைத்து விட்டு நிமிர்ந்தவரிடம் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க அலுவலகமே காத்திருக்க, அவர் அந்த அதிர்ச்சியான மரணச் செய்தியைச் சொன்னார்.
 

                                                             
 
"அடடா... எப்போவாம்? என்ன ஆச்சாம்?"  என்றேன் அதிர்ச்சியுடன்.
 
"நேற்று முதல் போதையிலேயே இருந்திருக்கார். காலை எழுந்தும் குடிச்சிருக்கார். பத்தரை மணிக்கு மேலும் படுத்தே இருக்காரே என்று மனைவியும், பையனும் எழுப்பி இருக்கிறார்கள். எழுந்திரிக்கவே இல்லையாம்..."
 
"அடப்பாவமே... என்ன கொடுமை! நல்ல ஆஃபீசர். கொஞ்சம் கண்ட்ரோலா இருந்திருக்கலாம் அவர்..." அதிர்ச்சியுடன் சொன்னேன்.
 
டைரக்டர் அறைக்குச் சென்றோம். விஷயத்தைச் சொன்னோம். அவரும் அதிர்ச்சியானார்.
 
"இப்ப என்னய்யா ஃபார்மாலிட்டி?"
 
"உடனடியா ஆபீஸ்லேருந்து இறுதிச் செலவுகளுக்கென்று பத்தாயிரம் ரூபாய் டிரா செய்து தரலாம் ஸார்..."
 
"செய்ங்க உடனே....ச்....ச்...ச்... என்ன ஒரு திறமையான ஆபீசரை இழந்திருக்கிறோம் நாம்? கொடுமையான விதிய்யா... புறப்படும்போது சொல்லுங்க நானும் வர்றேன்.."





எல்லோரும் மதியத்துக்குமேல் சென்று ஃபார்மாலிட்டிஸ் முடித்தோம்.



படங்கள் :   நன்றி இணையம்.

13.8.14

அலுவலக அனுபவங்கள் - விசுவின் யோசனை



இந்தச் சம்பவம் நடந்தது எழுபதுகளின் இறுதியில்.

அலுவலகத்தில் அன்றைய காலைநேரம் வழக்கம் போலவே களைகட்டியிருந்தது. கேலியும் கிண்டலுமாக வேலை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். 

சாதாரணமாக அரசு அலுவலகங்கள் குறித்து ஒரு கருத்து உண்டு. அலுவலகத்துக்கு எப்போதும் தாமதமாக வருவார்கள். வந்ததும் தேநீர் அருந்தச் சென்று விடுவார்கள். அப்புறம் இருக்கைக்குத் திரும்பி, பேருக்குக் கொஞ்ச நேரம் வேலை. அப்புறம் மதிய உணவு,  அரட்டை என்று.....!

ஆனால் எங்கள் அலுவலகத்தைப் பார்த்தவர்கள் யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.
  தாமதமாக வருபவர்கள்  99 சதவிகிதம் இருக்காது.  பேசிக் கொண்டே வேலை செய்வார்களே தவிர வேலை தடைபடாமல் நடந்து கொண்டே இருக்கும்.  80 சதவிகித மேசைகளில் கோப்புகள் தேங்கி நின்றிருக்காது. 

ஒவ்வொரு அலுவலகத்தில்  இருப்பதுபோல,  சிரிக்காமல், அடுத்தவரை விரோதமாகவே பார்க்கும் சுபாவமும் இங்கு கிடையாது.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக ரஹீமின் சோர்ந்த முகம் எங்கள் கவனத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை. கலகலப்பான ரஹீம் சிரிப்பை மறந்த முகத்துடன் அவ்வப்போது மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு மௌனமாகவே இருந்தான்.

எங்களுக்கும் காரணம் தெரியும்தான். 
 

                                               
 
அவன் ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமான இடத்தில் இடம் வாங்கி இருந்தான். அவ்வப்போது சென்று பார்த்து வருவான். வீடு கட்ட கையில் ஏதும் காசில்லை என்பதால் அதை ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தான். 

அவன் மனைவி அதைப் பற்றி அவனை அடிக்கடி நச்சரிக்கிறாள் என்றும் சொல்லியிருக்கிறான். 
 
கொஞ்ச நாட்களுக்குமுன் சென்று பார்த்தபோது இவன் மனைக்குப் பின்புறம் அந்த மனைக்குச் சொந்தக்காரன் வீடு கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். இன்னும் கொஞ்சநாள் கழித்துப் பார்த்தபோது இவன் மனைக்குள்ளும் அவன் அத்து மீறியிருக்கிறான் - அதுவும் நிறையவே - என்று தெரிந்திருக்கிறது.


                                                          

"போலீஸ்ல சொல்ல வேண்டியதுதானே?"

"கட்டறவனே நம்ம ஸ்டேஷன் எஸ் ஐ தான் ஸார்!"  (சின்ன ஊர் அது)


                                                   
 
"அடக் கஷ்ட காலமே... தெரியாமச் செய்யறானோ?"

"எனக்கும் கூட அப்படி ஒரு ஆசை இருந்தது ஸார்.. போய்ப் பேசிப் பார்த்தேன். திமிராப் பேசறான்"

இதுதான் ரஹீமின் முகவாட்டத்துக்குக் காரணம்.

ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்க, அவன் மௌனமாக எல்லோரையும் வெறித்துக் கொண்டிருந்தான்.
 
ஒருவார லீவில் சென்னை சென்று திரும்பிய விஸ்வநாதன் அன்றுதான் அலுவலகம் வந்தார். அவர் அலுவலகத்தில் இருந்தால் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. 

ரஹீமின் கவலை முகம் பார்த்தார்.  காரணம் கேட்டார்.  அலுவலகமே பதில் சொன்னது!

இரண்டு நிமிடம் யோசனையில் இருந்தவர், "அவ்வளவுதானே... கிரகப்ப்ரவேசம் பண்ணிடு" என்றார்.

"ஸார்.. விளையாடறீங்களா?"

"இல்லை.. சீரியஸாத்தான் சொல்றேன். உன் மனைக்குள்ளே வீடு வந்திருக்கு இல்லே... அப்போ அது உன் வீடுதான். அந்த இடத்துக்கு நீ கிரகப்ப்ரவேசத்துக்கு ஏற்பாடு செய்"

ரஹீம் சோர்வாய் தன் இருக்கைக்குத் திரும்ப முயன்றான்.

"ரஹீம்.. நான் ஜோக் அடிக்கலை. நீ நிஜமா கிரகப் பிரவேசம் செய்ய வேண்டாம். பத்திரிக்கை மட்டும் அடி. எல்லோருக்கும் தெரியறா மாதிரி பத்திரிக்கை கொடு. அது போதும்"

"இதனால என்ன ஸார் பிரயோஜனம்?   நான் உதை வாங்கணுமா?"

"உனக்கு வேற வழி ஏதாவது வச்சிருக்கியா"
 
 
மறுபடியும் கொஞ்சநேரம் வெவ்வேறு யோசனைகளை அலசினார்கள்.

"ம்ம்ம்.... இல்லையே... நிறைய யோசனைகளை சொன்னார்கள். எதுவும் சரிவரலை"

"அப்ப செலவைப் பார்க்காம பத்திரிக்கை அடி. பார்ப்போம்.. நல்லா ஒரு மாதம் டைம் கொடுத்து தேதி வை.  நிஜமாகவே நல்ல நாள் பார்த்துக் குறி.  அது உன் இடம்.  சட்டப்படி என்ன செய்ய முடியும்னு யோசிக்கறப்பவே அவனுக்கு பயம் வந்துடும்"

யாருக்குமே இது பெரிய உபயோகமான யோசனையாகப் படவில்லை. சரிவராது என்று பாதிபேர்கள் வாதாடினார்கள். எல்லோருமே மாற்றி மாற்றிப் பேசினாலும் கடைசியாக வேறு எந்த வழியும் இல்லாததால் இதையே அமுல் படுத்திப் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள். 

ஒற்றை ஆளாக பத்திரிக்கை தராமல் எப்போதும் நண்பர்கள் நான்கைந்து பேர்களுடனே சென்று பத்திரிக்கை விநியோகிக்கச் சொன்னார் விசு.
 
 
                                               
 
கொஞ்சம் தயக்கமாகவும், இலேசான பயத்துடனும் வேலைகள் நடந்தன.  பத்திரிக்கை அடித்து பயத்துடன் விநியோகித்தார்கள்.
 











 
 
 
 
 
 
 
 
 
 
நான்காவது நாள் இவன் மனை காலியாக இருந்தது.

4.6.14

அலுவலக அனுபவங்கள் : நாராயணா... நாராயணா...



அலுவலகத்தில் வேலை செய்யும்போது முடிந்தவரை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து,  குனிந்த தலை நிமிராமலேயே வேலை பார்ப்பதற்குக் காரணம் வேலைச்சுமை மட்டுமில்லை! 

                                  


நிமிர்ந்து பார்த்தால் போதும், அதற்காகவே காத்திருந்தது போல எதிர்த் திசையில் மேஜைக்கருகில் ஒரு ஸ்டூலில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் நாராயணன் சட்டென எழுந்து ஓடி வருவான்.

நாராயணன் பியூன். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன்.


தண்ணீர் எடுத்து நீட்டுவான். இங்க் பாட்டிலுடன் நிற்பான். 'சிகரெட்டா ஸார்?' என்பான்! 'வேண்டாம், ஒன்றுமில்லை, போ' என்று சைகை காட்டி அவனுடைய இடத்துக்கு அவனை அனுப்புவேன்.

மரியாதை இல்லாமல் சொல்வதற்குக் காரணம் என் வயதும், அவன் வயதும் மட்டும் காரணமில்லாமல் அவன்மேல் எனக்கிருந்த பரிதாபத்தால் எங்களுக்கிடையே இருந்த அன்பு கலந்த புரிந்துணர்வு காரணமாகவும்தான்.


                                          


என் பார்வை திரும்பும் திசை எல்லாம் திரும்பி, கண்ணில் பட்டவற்றை சட் சட்டென எடுத்து பணிவுடன் நீட்டுவான்! காரணம் அவனுக்குக் காது கேட்காது. எனவே பார்வையாலேயே மற்றவர்கள் மீது கவனம் வைத்திருப்பான். யார் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்லுமுன்பு (சொன்னாலும்தான்!) ஊகிக்க முயல்வான்.


'எள் என்பதற்குமுன் எண்ணெயா'க நிற்க முயலும் அவன் செயல்கள் பெரும்பாலும் விபரீதமாகவே முடியும். அவனுக்குப் புரிய வைத்து வேலை வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

நான் அவனுக்கு சில ரெகுலர் வேலைகளை நேரம் பார்த்துச் செய்யச் சொல்லிக் கொடுத்திருந்தேன். காலை பதினொன்றரை ஆனால் ஃப்ளாஸ்க் எடுத்துக்கொண்டு தேநீர் வாங்கக் கிளம்புவது, எல்லோருக்கும் அவரவர்கள் வந்தவுடன் அவர்கள் இருப்பிடத்துக்கு அட்டெண்டன்ஸ் எடுத்துக் கொடுப்பது, அவ்வப்போது தண்ணீர் கொண்டு வந்து தருவது போன்ற வேலைகள் தானாகச் செய்யச் சொல்லிக் கொடுத்தேன். 


மேனேஜர் அறை வாசலில் மணி அடிப்பதற்கு பதில் விளக்கு எரிய வைத்தேன். 

                                        

நீண்ட நாட்களாகக் காலியாக இருந்த இந்த அலுவலகத்தின் இயக்குனர் பதவிக்கு ஒரு புதிய இயக்குனர் வந்து சேர இருந்தார். எனக்கு அவர் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். அவரைப்பற்றிக் கொஞ்சம் பயம் கலந்த கதைகள் உண்டு. 

கண்டிப்பானவர்.  கொஞ்சம் தப்பு கண்டுபிடித்தாலும் உடனே சஸ்பென்ஷன், மெமோ என்று தந்து விடுவார் என்ற வதந்திகள் அலுவலகத்தில் அவர் வருவதற்கு முன்னரே வந்து சேர்ந்து விட்டன. இதுமாதிரி மேலதிகாரிகளை எதிர்த்து நின்ற முரட்டு ஆசாமிகளும் எங்கள் அலுவலகத்தில் இருந்தாகள்தான்.  இவர் வந்து என்ன செய்கிறார், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று காத்திருந்தார்கள் அவர்கள்.  இதே போல
அவரும் இவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பார். இதெல்லாம் அரசு அலுவலகங்களில் எப்பொழுதும் நடப்பதுதான்!

நாராயணனுக்கும் இந்தத் தகவல்களை எப்படியோ புரிய வைத்திருந்தார்கள்.

நாங்கள் இருந்தது முதல் தளம். இயக்குனர் அறை தரைத் தளத்தில்.

புதிய இயக்குனர் வந்து வேலையில் சேர்ந்தார். அவர் அறை நாற்காலியில் அமர்ந்து பார்த்தால் வெளியில் மேடான பாதையும், சற்று தூரத்தில் சாலையும், விரையும் போக்குவரத்தும் கண்ணில் படும். சற்றே தனிமையான ஹாலில் தனிமையான அறை.

உட்கார்ந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தவர் ஏதோ நிழலாட நிமிர்ந்து பார்த்திருக்கிறார். தலையில் மங்கிக் குல்லாய் போட்டு, ஓவர்கோட் போட்ட ஒரு உயரமான கரிய உருவம் நிதானமாக தீட்சண்யமாக இவரைப் பார்த்தபடியே வலமிருந்து இடம் கடந்ததைப் பார்த்ததும் மனதுக்குள் கேள்விக்குறி வந்திருக்கிறது.  மீண்டும் வருகிறானா என்று பார்த்து விட்டு வேலையில் கவனம் செலுத்தக் குனியும் சமயம் அதே உருவம் இப்போது இடமிருந்து வலமாக இவரைப் பார்த்தபடியே மெதுவாகக் கடக்க,  லேசாக நிம்மதி இழந்திருக்கிறார்.

                                               


இன்னும் இரண்டு மூன்று முறை இதேபோல நடக்கவும், இவருக்கு நெஞ்சு தடதடத்து விட்டது.  ஏதேதோ தோன்ற, தொலைபேசியை எடுத்து என்னை அழைத்தார். "உடனே, உடனே  என் ரூமுக்கு வாங்க" என்றார்.

அவர் குரலில் தெரிந்த பதட்டம் கவனித்த நான், ஒன்றும் புரியாமல் உடனே அவர் அறைக்குச் சென்றேன். 

"என்ன ஸார்?"

"யாரோ ஒருத்தன் ஒருமாதிரி விரோதமா பார்த்தபடியே இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கமும், அந்தப் பக்கத்திலேருந்து இந்தப் பக்கமும் நிதானமா மெல்ல நடந்து, நடந்து தாண்டறான். ஹால்ல நம்ம ஆளுங்க வேற யார் நடமாட்டமும் இல்லையே... அவன் பார்வையே சரியில்ல... ஒரு மாதிரி இருக்கு....  யார்னு பாருங்க" என்றார். 

புதிராக இருந்தது.

அவர் அருகிலேயே அமர்ந்து காத்திருந்தேன். அவர் வேலை பார்ப்பதுபோல மேஜை மீது பார்ப்பதும், வாசல் பக்கம் பார்ப்பதுமாக இருந்தார். நானும் வாசல்பக்கம் கவனித்தபடியே இருந்தேன்.

நிழலாடியது. நெர்வஸாக என்னைப் பார்த்தவர், வாசல்பக்கம் பார்த்தார்.

அந்த உருவம் மறுபடி அதேபோலப் பார்த்தபடித் தாண்டியது. 

நாராயணன்!


எனக்குச் சிரிப்பு வந்து விட்டது என்றாலும் அடக்கிக் கொண்டு அவருக்கு நிலைமையை விளக்கினேன். 

அவனுக்குக் காது கேட்காத பிரச்னையையும், புதிய இயக்குனர் மீது அவனுக்கு இருந்த பயம் கலந்த தயக்கத்தால், அவர் அழைத்தால் உள்ளே செல்லலாம் என்று அவரையே பார்த்தபடி தாண்டித் தாண்டி நடந்ததையும் புரிந்து கொண்டு அவரிடமும் சொன்னேன். மணியடித்தால் அவனுக்குக் கேட்காது என்பதையும் சொன்னேன்.

இறுக்கம் கலைந்து சிரித்தவர், என்னை அந்த அறையில் பார்த்ததும் மெல்ல உள்ளே வர முயன்று வெளியே தயங்கி நின்றிருந்த நாராயணனை உள்ளே அழைத்தார். பெரிய ஸலாமுடன் உள்ளே விரைந்து வந்த நாராயணனைச் சிரிப்புடன் நாங்கள் இருவரும் ஏன் அப்படிப் பார்க்கிறோம் என்று அவனுக்கு அப்போது புரியவில்லை!

8.4.14

அலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்



80 களின் பிற்பகுதி.

மதியம் சாப்பிட்டு விட்டு மீண்டும் அலுவலகம் கிளம்பியபோது தொலைபேசி சிணுங்கியது. மகன் பதட்டமாகப் பேசினான். அவன் அப்போதுதான் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். கணக்கு முடிக்கும் நேரம் 10,000 குறைவதாகவும், அதை மாலை அலுவலகம் முடியும் நேரத்துக்குள் கட்டச் சொல்லி மேனேஜர் சொல்வதாகவும் சொன்னான்.

'கவலைப்படாதே, பதறாதே' என்று அவனுக்குச் சொல்லி விட்டு அலுவலகம் வந்து கோவிந்தனுக்கு தொலைபேசினான் ஈஸ்வரன்.

கோவிந்தன் இவன் நெருங்கிய நண்பன். கைகொடுக்கும் தெய்வம். இந்த சமயமும் உடனே கைகொடுத்தான்.

பணத்தை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலிருந்து ஒருமணி நேரப் பயணத்தில் இருந்த மகன் ஊர்
சென்று, வங்கியில் கட்டச் சொல்லிக் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.

ஒரு வாரத்தில் பணம் திரட்டி கோவிந்தன்
வீட்டுக்கு வந்தபோது அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டான்.

கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கோவிந்தன் கிளம்பிச் சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் கோவிந்த
னிடமிருந்து ஃபோன் வந்தது. பணத்தைக் காணோம் என்றும், கிளம்பும்போது வீட்டு வாசலில் விழுந்திருக்கலாம் என்றும், பணம் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று வாசலில் சென்று பார்க்கச் சொன்னான். மஞ்சள் பையில் வைத்து எடுத்துக் கொண்ட பணம் காணோமாம். 

ஈஸ்வரனும் வாசல் பக்கம் போய் நன்றாகத் தேடித் பார்த்தான். 

ஊஹூம்.

மறுநாள் அலுவலகம் முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து வழக்கமாக் கூடும் இன்னொரு நண்பனின் கடையில் குழுமி பேசிக்கொண்டிருந்தபோது இதை அவர்களிடம் சொன்னான் ஈஸ்வரன்.
 
குழுவில் இருந்த கோபால் என்னும் இன்னொரு நண்பன் மிகவும் ஆச்சர்யப்பட்டு போய், அன்று சம்பளக் கணக்கு அலுவலகம் சென்றுவந்தபோது தானும் 10,000 ரூபாயைத் தொலைத்து விட்டதாகவும், மனைவியின் நகையை வைத்து 10,000 ரூபாய் ஏற்பாடு செய்ததாகவும் கூறினான்.
நண்பர்கள் என்றால் இப்படி அல்லவா இருக்கவேண்டும் என்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

அப்புறம் நண்பர்கள் அவரவர்கள் அவ்வப்போது பணம், நகை தொலைத்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கலைந்து அவரவர் வீடு சென்றார்கள்.

மறுநாள் காலை அந்த கடைக்கார நண்பன் ஃபோன் செய்தான். "ஈஸ்வரா... கடைல திருட்டு போயிருக்குடா... சுவத்தை உடைச்சு கல்லாப்பெட்டியை உடைச்சிருக்காங்க... திருட்டுப்போன பணம் எவ்வளவு தெரியுமா? 10,000! நானும் நம்ம நண்பர்கள் லிஸ்ட்ல சேர்ந்துட்டேண்டா..."
குரலில் கவலையை விட உற்சாகம்தான் தெரிந்தது!

திருட்டுப் போனது கூட இரண்டாம்பட்சமாகி நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்ததாய்ச் சொன்ன அந்த நண்பனை என்னவென்று சொல்ல!

30.12.13

அலுவலக அனுபவங்கள் - டிரான்ஸ்ஃபர் மேட்டர்!


தலைமை அலுவலகம்.

இடமாறுதல்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்த நேரம். சில டிபார்ட்மெண்ட்களில் 'கொடுக்கவேண்டியதை'க் கொடுத்தால் கிடைக்கும். 

ஒருவர் வெளியூரிலிருந்து வேறு இடத்துக்கு மாறுதல் கேட்டிருந்தார். 

அப்ளிகேஷன் அனுப்பிய கையோடு நேரிலும் சொல்லிப் போக வந்திருந்தார். 

இயக்குனரைப் பார்க்கச் சென்றார். இயக்குனர் "என்ன காரணத்துக்காக இப்போது மாறுதல் கேட்கிறீர்கள்?"

"அதைச் சொல்ல முடியாது ஸார்..."

இயக்குனர் நிமிர்ந்து பார்த்தார். இல்லை, திமிரான பதில் இல்லை இது!

"சொல்லுங்க ஸார்.. சொன்னால்தானே அதில் நியாயமா இல்லையான்னு பார்க்க முடியும்?" 

"இல்லை ஸார்.. சொல்ல முடியாத காரணம் ஸார்...ஆனா நியாமான காரணம்தான் ஸார்..."

"அட, விளையாடாதீங்க... உங்களுக்குச் சொல்ல காரணமில்லை... அப்படித்தானே..."

"இல்லை ஸார்.. அப்படி இல்லை. காரணமில்லைன்னா கேட்பேனா..."
"அப்ப சொல்லுங்க.."

"சொல்ல முடியாத காரணம் ஸார்..."

'சில்லறை புரளாத இடமாயிருந்தாலும் சில்லறை தாராளமாகப் புழங்கும் இடத்துக்கு மாறுதல் கேட்பார்கள். இந்த இடம் 'அந்த' வகையில் 'நல்ல' இடமாச்சே...'

இயக்குனர் மோவாயைத் தடவினார். 'பெல்'லை அடித்தார். உள்ளே வந்த பியூனிடம் விஸ்வநாதன் ஸாரை வரச் சொல்லு" என்றார். 

விஸ்வநாதன் உள்ளே வந்தார். 

"விஸ்வம்.... இவரைக் கொஞ்சம் கேளுங்க... டிரான்ஸ்ஃபர் கேக்கறார். காரணம் கேட்டா சொல்ல முடியாத காரணம்கறார். நீங்க கேளுங்க... காரணம் தெரியாம எப்படி மாறுதல் கொடுப்பது?"

இரண்டு மூன்று முறை கேட்டும் விஸ்வநாதனுக்கும் அதே பதில்தான் 
வந்தது.  இருவருமே ஆர்வமாயினர். 

"அட அஃபீஷியலாக் கூட வேண்டாம்... என்ன காரணம்னு சொல்லுங்க.. அப்பத்தான் எங்களால ஒரு முடிவுக்கு வர முடியும்.."

"ஸார்... அது வந்து...எப்படிச் சொல்றது.. "

"அட, சொல்லுங்க... 


".............................."

இல்லாட்டிப் போங்க ஸார்.. எங்களால ஒன்னும் பண்ண முடியாது"

"இல்லை ஸார்... வந்து... நீங்க அஃபீஷியல் இல்லைன்னு சொல்லியிருக்கீங்க... தப்பாவும் நினைக்கக் கூடாது... கேட்கவும் கூடாது..."

இவ்வளவு பீடிகை ஆர்வத்தை அதிகப்படுத்தியது. 

"அட! சொல்லுய்யா..."

"அது வந்து... வந்து...(சுற்றிலும் பார்த்துக் கொண்டார்) ஸார்.. கேட்டுடாதீங்க ஸார்.. ............................  குவார்ட்டர்ஸ்ல இருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். நான் குடியிருக்கற வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலதான் ஸார் ரகுராமன் ஸார் இருக்கார் ... (ரகுராமன் என்பவர் இந்த இயக்குனருக்கு அடுத்தபடி அந்தஸ்து உள்ள இயக்குனர்) அவருடைய மிஸஸ் குறி சொல்றாங்க ஸார்... "

"அதுல உங்களுக்கு என்ன?"

"சங்கடமே அதான ஸார்... அவங்க மேல அம்மன் இறங்கி அருள் வருதுன்னுட்டு குறி சொல்றாங்க... நடு ராத்திரிலதான் குறி சொல்றாங்க..."

"ஓ.. உங்க தூக்கம் கெடுதா அதுல.." - விஸ்வநாதன்.

"சும்மா இருங்க விஸ்வம்...அவர் சொல்லட்டும். நீங்க சொல்லுங்க.." என்றார் இயக்குனர்.

"நடு ராத்திரிலதான் அவங்களுக்கு அருள் வருமாம்... அப்போ குறி சொல்றாங்க... ஏகப்பட்ட கூட்டம்.. என்னைத்தான் ஸார் கூப்பிட்டு டோக்கன் குடுக்கச் சொல்றாங்க... என்னைத்தான் வசூல் பண்ணிக் கொடுக்கச் சொல்றாங்க... வாரத்துல நாலு நாள் ராத்திரி கண்ணு முழிச்சு டோக்கன் கொடுக்கணும்... காசு வசூல் பண்ணனும்...மறுநாள் காலை அவங்க வீட்டுக்குப் போய் வசூல் ஆன ரூபாயை அவங்க கிட்ட கொடுக்கணும். டோக்கன் கணக்கோட 'டேலி' ஆகுதான்னு பார்த்து வாங்கிப்பாங்க... ரொம்பக் கஷ்டமா இருக்கு ஸார்... பலநாளா இப்படியே நடக்குது... வேற யாரையும் கூப்பிடவும் மாட்டேங்கறாங்க... தாங்க முடியல... கேட்டுடாதீங்க ஸார்..."

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"உண்மைதான். இதை என்ன காரணம்னு குறிப்பிட முடியும்?"

"குறி சொல்றது பலிக்குதாமா?" என்று கேட்டார் இயக்குனர்.

'இது என்ன கேள்வி?' என்பது போலப் பார்த்தார் விஸ்வம்.

ஏதோ பலிக்குது போல ஸார்.. இல்லன்னா ஒரு நாளைப் போல இவளவு கூட்டம் வருமா?" 

"சரி, நீங்க போங்க... நாங்க பார்த்துச் செய்யறோம்" என்று அவரை அனுப்பி வைத்தார் விஸ்வம். 

"என்னைய்யா சொல்றே... என்ன செய்யலாம் இவருக்கு?  

"பாவமாத்தான் இருக்கு"

"நடுவுல வந்து டிரான்ஸ்ஃபர் கேட்டு, நாம கொடுத்தா பிரச்னையாகுமா..." 

"வேற யாராவது இதே இடத்துக்குக் கேட்டிருந்தாதான் பிரச்னை. நல்லவேளையாய் இந்த இடத்துக்கு வேற ஒரே ஒரு ஆளைத் தவிர வேற யாரும் கேட்கலை. அவரும் ரொம்ப நாளைக்கு முன்னால கேட்டதுதான். அப்புறம் எதுவும் ப்ரெஸ் செய்யவில்லை. ஏதாவது சொல்லி இவருக்குப் போட்டுடலாம்"

"அவர் பிரச்னை பண்ணுவாரா?"

"மாட்டார்னு நினைக்கறேன். பார்த்துக்கலாம் சார்..."

"ரகு மிஸஸ் கிட்ட குறி கேட்கலாமா" என்றார் ஸீரியசாக! 

"இவரைப் பத்தி அவங்க கிட்டயேவா... போங்க ஸார்..."

"இவரைப் பத்தி இல்லீங்க... நம்ம சொந்தப் பிரச்னையைப் பத்தி கேட்டுப் பார்க்கலாமா?"

சிரித்து விட்டு வெளியே போய் விட்டார் விஸ்வநாதன்.