புதன், 25 டிசம்பர், 2013

தினமணி, தி இந்து தீபாவளி மலர்கள்,லபக்தாஸ் ஃபோன், கல்கி சிறுகதை, கிரி ட்ரேடிங் - வெட்டி அரட்டை.


முன்னாள் கலெக்டருக்கு தொலைபேசிய 'லபக்தாஸ்':

இன்றைய தமிழகத்தில் லஞ்சம், ஊழலைக்கூட ஒழித்துவிடலாம். ஆனால், மதுவை ஒழிக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணியாற்றியபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். எனக்கோ எங்காவது சட்ட - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விட்டதா... அல்லது எங்காவது கலவரமா என்ற பதற்றத்தில், 'சொல்லுங்க..’ என்றேன். 

'ஐயா... கலெக்டர் சார் பேசுறீங்களா?’

'ஆமாம்... சொல்லுங்க!’

'நான் உசிலம்பட்டியில் இருந்து பேசுறேன்’ என்று சொல்லவும், எனக்கு பதற்றம் மேலும் அதிகமானது. 'என்ன பிரச்னை சொல்லுங்க...’

'ரொம்ப முக்கியமான பிரச்னைங்க ஐயா...’

'என்னன்னு சொல்லுங்க...’ என்றேன் மேலும் பதற்றமாக.

'உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் இருக்குல்ல.. அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு டாஸ்மாக் கடை இருக்குதுல்லய்யா... அந்த டாஸ்மாக் கடையில விற்கும் ரம்ல ஒரு வாரமா கிக்கே இல்லைய்யா... அதுக்கு நீங்கதான் எதாவது செய்யணும்’ என்றார்.

'ரம்'மில் 'கிக்' இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரை நள்ளிரவு 12 மணிக்கு அழைத்துப் பேசும் அளவுக்கு தமிழன் முன்னேறிவிட்டான்.

முன்னாள் கலெக்டர் சகாயம், சமீபத்திய கூட்டம் ஒன்றில், அவரே சொன்னது.

========================================================


சமீபத்தில் கிரி ட்ரேடிங் ஏஜன்சி செல்ல வேண்டிவந்தது. 'ஆஞ்சி' கோவில் போனால், மாலை 4.30 க்குத்தான் திறக்கும் என்றார்கள். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி  வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் நேரமாம். 
அது தெரியாமல் சீக்கிரம் சென்று விட்டதால் காத்திருக்கும் நேரத்தில் பக்கத்துக் கடைகளைப் பொறுக்கலாம் என்றால் ஓரிரண்டு கடைகள் தவிர மற்ற எல்லாம் மூடியிருந்தது. ராகவேந்தரா கோவில் கூட மூடியிருந்தது. ஹாட் சிப்ஸ் போனோம். அப்புறம் 'கிரி ட்ரேடிங்'குள் நுழைந்தோம். 

பக்தி மணம்!  ஊதுபத்தி வாசனை. புத்தகங்களில் (இங்கு வாங்க) சுவாரஸ்யம் இல்லை. நேரம் போக வேண்டுமே... சுற்றி வந்தால் ஒரு பெண் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் ஒரு டச் ஸ்க்ரீன் போர்ட் இருக்குமே, அது போல ஒன்றின் அருகே நின்று பாட்டு ஆர்டர் தந்து கொண்டிருக்க, ஊழியர் ஒருவர் அவர் கேட்ட பாடல்களை 'டச் ஸ்க்ரீனி'ல் தொட்டு டவுன்லோட் செய்து ஒரு சிடியில் பதிவு பண்ணித் தந்தார். 5 நிமிடங்களில் வேலை முடிந்தது. அந்தந்த பாடல்களுக்கு விலை அதிலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது.


ADD என்ற இந்த வசதி நாமே தெரிவு செய்து விரும்பும் சாதனத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
நானும் நீண்ட நாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த சில பாடல்களை 169 ரூபாய்க்கு ரெகார்ட் செய்து கொண்டு வந்தேன்!
ஆஞ்சி கோவிலில் என் ராசி, நாங்கள் போகும் நேரமெல்லாம் சர்க்கரைப் பொங்கல்தான் தருகிறார்கள். புளியோதரை வாங்க முடியவில்லை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அபூர்வப் பெயர் :

என் மாமா ஒருவரின் பெயர் விசுவேஸ்வரன். அவர் வேலை செய்த அரசு டிபார்ட்மெண்ட்டில் இவர் பெயரில் இவர் ஒருவர் மட்டும்தானாம். இந்தப் பெயர் அவ்வளவு அபூர்வம் என்பது ஆச்சர்யமாக இருந்தது. இன்னொரு மாமா பெயர் யக்ஞராமன். இந்தப் பெயரிலும் நிறையப் பேர்கள் பார்க்க முடியாது!

======================================================
பழைய செய்தி :

கல்கியில் நமது ப்ளாக்கர் நர்சிம் சிறுகதை. இதற்கு முன்னரும் கல்கியில் இவர் சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன். சாதாரணமாக இருந்தது. நான் படித்தது அவர் எழுதியுள்ள 'லவ் இச் சம்திங்'.  ஓகே ரகம். சிலசமயம் சில கதைகள் அமைந்து விடுகின்றன! அந்த வகையில் இதுவும் ஒன்று.


ஓவியர் மணியம் அவர்களைத் தொடர்ந்து அவர் மகன் மணியம் செல்வன் படம் வரைய வந்தது தெரியும். மூன்றாவது தலைமுறையாக  மணியம் செல்வன் மகள்கள் சுபாஷிணியும் தாரிணியும் படம் வரைகிறார்கள் என்ற செய்தியைத் தருகிறது கல்கி. புதிய தலைமுறை வார இதழில் கவிஞர் பா. விஜய் எழுதிய புலிகளின் புதல்வர்கள் தொடருக்கு வண்ண ஓவியங்கள் வரைந்திருக்கிறார் தாரிணி.

பிரபஞ்சனின் காலம் தோறும் தர்மம்-மகாபாரத மாந்தர்கள் பகுதியில் ஒரு  வாரம் சகுனி. அழகாய் எழுதியிருக்கிறார் பிரபஞ்சன். எந்த அளவு சுவாரஸ்யம் என்றால், அட்டைப்படமாக அந்த தொடரைக் குறிப்பிட்டு சகுனியையே அட்டைப் படமாகப் போடுமளவு!
புத்தக மதிப்புரையில் ஆனந்த் ராகவ் சிறுகதைத் தொகுப்புகள் பற்றி எழுதி ஆவலைத் தூண்டியிருக்கிறார்கள். நான் இதுவரை அவர் எழுத்துகள் படித்ததில்லை. படிக்கும் ஆவலைத் தூண்டுகிற்றன. (டாக்சி டிரைவர், துளி விஷம்)

============================================
எவ்வளவு சீக்கிரம் சொல்லிட்டேன்?

இந்தமுறை தினமணி தீபாவளி மலர் இலக்கிய மலராக மலர்ந்திருக்கிறது. ஆர். சூடாமணி, நா.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள், தேவனின் குறுநாவல், திகசி, ஜெயகாந்தன், விக்ரமன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கு, சின்னப்பா பாரதி பற்றி வேறு சில பிரபலங்களின் கருத்துகள், சா. கந்தசாமி, ஜெயமோகன், நெல்லை கண்ணன், தமயந்தி போன்றோரின் சிறுகதைகள், விளம்பக் காலம் என்ற நாஞ்சில் நாடனின் சுவாரச்ய்ச்மான கட்டுரை, எம் ஜி ஆரிடம் ஜெயலலிதா அந்தக் காலத்தில் எடுத்த பேட்டி...


தி இந்து இந்த வருடம்தான் வெளியிடப்பட்ட செய்தித் தாள் என்றாலும் தீபாவளி மலர் வெளியிட்டு விட்டார்கள். ஒரே சினிமா செய்திகள். என்றாலும் இதிலும் சுஜாதா, வாஸந்தி, அழகிய பெரியவன் போன்றோரின் சிறுகதைகள் உண்டு. சினிமா பற்றி சாரு நிவேதிதா, எஸ்ரா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் கட்டுரைகள் இருக்கிறது.

இரண்டுமே சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. அதனாலேயே மெதுவாகத்தான் படிக்க முடிந்தது ((சாக்கு!)  என்றாலும் தினமணிக்கு அதிக மார்க்!

18 கருத்துகள்:

  1. தீபாவளி மலர் வாங்கி எல்லாம் படிச்சது இல்லை. முன்னே லென்டிங் லைப்ரரியிலே இருக்கிறச்சே அவங்க வாங்கினதும் முதல்லே இரண்டு நாளுக்கும் ஒரு மாசம் கழிச்சு ஒரு வாரத்துக்கும் சர்குலேஷனில் கொடுப்பாங்க. அப்போப் படிச்சது தான். சித்தப்பாவுக்கு வரும் தீபாவளி மலர்களில் சில மலர்கள் சில சமயம் எனக்குக் கொடுப்பார். மற்றபடி தீபாவளி மலரெல்லாம் படிச்சே எந்தக்காலமோ ஆகிவிட்டது. :))))

    பதிலளிநீக்கு
  2. கிரி ட்ரேடிங் புத்தக செக்‌ஷனில் ருசிகரமான புத்தகங்களும் கிடைக்கின்றன. பொன்னியின் செல்வன் ஆங்கிலப்பதிப்பு ஐந்து பாகமும் (ஐந்தாம் பாகம் இரண்டு புத்தகம்) அங்கே தான் வாங்கினோம். அதே போல ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலாவும் அங்கே தான் வாங்கினேன். பரிசுப் பொருட்கள் முக்கியமாய் வெள்ளை உலோகத்தில் அழகழகாய், நம் பட்ஜெட்டுக்குள் அடங்கும் விதமாய்க் கிடைக்கின்றன. அவையும் வாங்கி இருக்கோம். :)))

    பதிலளிநீக்கு
  3. //உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் இருக்குல்ல.. அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு டாஸ்மாக் கடை இருக்குதுல்லய்யா... அந்த டாஸ்மாக் கடையில விற்கும் ரம்ல ஒரு வாரமா கிக்கே இல்லைய்யா... அதுக்கு நீங்கதான் எதாவது செய்யணும்’ என்றார்.//

    He is right.
    எனக்கும் 1993 லே ஜென்டில்மேன் பாத்ததிலேந்து ஒரு
    சந்தேகம் தான். சம்திங் இஸ் எக்ஸ்ட்ரா ஆர்டினரி

    அது சாதா கிக் இல்லை . கிக்கோ கிக்.

    இந்த பாட்டை கேட்டீகன்னா ஏன் அப்படி சொல்றேன் னு தெரியும்.

    https://www.youtube.com/watch?v=lQxjivyFjkk

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. நல்ல தொகுப்பு.

    அபூர்வப் பெயர்கள் கேள்விப் படாதவையாகவே உள்ளன.

    ஓவியர் மணியம் அவர்களின் மகள்களின் கைவண்ணம் காண ஆசை.

    ஆனந்த் ராகவ் அவர்களது ஒரு சிறுகதை குறித்த என் பார்வை இங்கே:
    http://tamilamudam.blogspot.com/2011/12/2010.html

    தி இந்து தீபாவளி மலரில் சுகா அவர்களின் ‘ராமநாதனிலிருந்து ரஹ்மான் வரை’ திரை இசை குறித்த கட்டுரையும் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. * கீதா மேடம்... தீ.ம. காசு கொடுத்து வாங்கவில்லை! தினமணி ஓசியில் வந்தது. அதை எக்சேஞ்ச் செய்து இந்து தீ.ம வாங்கினேன்! கிரி ட்ரேடிங் கடையில் வாங்கும் புத்தகங்களை புத்தகச் சந்தையில் வாங்கினால் பத்து சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்! பொதிகையில் வேளுக்குடி வழங்கிய கண்ணனின் ஆரமுது எல்லா பாகமும் சேர்த்து டிவிடி தொகுப்பாகத் தருகிறார்கள். விலை 6,000 என்று நினைவு.

    * சுப்பு தாத்தா... நல்ல பாட்டுதான் நினைவுக்கு வருது.

    * நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

    * நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் ஷேர் செய்துள்ள லிங்க் சென்று பார்த்தேன். உங்கள் பதிவு படித்திருக்கிறேன்.

    சுகா கட்டுரை குறிப்பிட விட்டுப்போய் விட்டது! மணியம் பெண்களின் படங்கள் எங்காவது கிடைத்தால் பகிரலாம்.

    * வல்லிம்மா... ஆமாம், நங்கநல்லூர் ஆஞ்சநேயரேதான்!

    பதிலளிநீக்கு
  6. கலெக்டரிடமேவா!!!! முன்னேறி விட்டோம் தான் போல....:)))

    தீபாவளி மலர் முன்பு ஒருமுறை படித்திருக்கிறேன்...

    கோவையில் என்னுடைய பள்ளித் தலைமை ஆசிரியர் பெயர் விஸ்வேஸ்வரன்...:) அவரைக் கண்டாலே எங்களுக்கு சிம்ம சொப்பனம்...:)))

    மீண்டும் கோகிலா படத்தில் கமலின் பெயர் யக்ஞராமசுப்ரமணியம் என்று நினைக்கிறேன்...:)))

    பதிலளிநீக்கு
  7. அரட்டையில் பல விஷயங்கள் பயனுள்ள‌வைகளாக இருந்தன. கிரி ட்ரேடிங், புத்தக சந்தை எங்குள்ள‌ன? சென்னை வரும்போது போய்ப்பார்க்கலாம்!

    தீபாவளி மலர்கள் பல வருடங்கள் முன் அழகழகாய் வண்ண‌ ஓவியங்கள் நிறைந்திருக்கும். நடராஜன், மாதவன், கோபுலு என்று ஓவியர்கள் அசத்தியிருப்பார்கள். இப்போதுள்ள தீபாவளி மலர்கள் ....ம்!

    பதிலளிநீக்கு
  8. //நள்ளிரவு 12 மணிக்கு அழைத்துப் பேசும் அளவுக்கு தமிழன் முன்னேறிவிட்டான்.// இவனைப் போன்றவர்களால் நல்ல ஆட்சியாளர்களும் நல்லதே நடக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறார்கள்

    பதிலளிநீக்கு
  9. அந்த டாஸ்மாக் கடையில விற்கும் ரம்ல ஒரு வாரமா கிக்கே இல்லைய்யா... அதுக்கு நீங்கதான் எதாவது செய்யணும்’ என்றார்
    >>
    அட, இந்தியா வல்லரசாகிட்டுது போல!!

    பதிலளிநீக்கு
  10. குடிமகன்கள் ரொம்பத்தான் முன்னேறிவிட்டார்கள்! சுவாரஸ்யமான தகவல்கள் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. Naan vikatan, the Hindu iru deepavali malarkalum padiththEn. Irandauyum ovvoru naalileye mudikka mudinthathu. Avvalavu vilambarangal!!

    பதிலளிநீக்கு
  12. அந்த தினமணி தீபாவளி மலரில்
    இந்துமதி அவர்களின் சிறப்பான கதை ஒன்று இருந்திருக்குமே?.. குறிப்பிட விட்டுப் போய்விட்டதா?..

    பதிலளிநீக்கு
  13. எனது முந்தைய பின்னூட்டத்தைத் தாண்டிச் செல்லுங்கள். அது சென்ற ஆண்டு தினமணி தீபாவளி மலர்.
    தவறுக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஆதி வெங்கட்.

    நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

    நன்றி சீனு.

    //அட, இந்தியா வல்லரசாகிட்டுது போல!!// :))))))))))) நன்றி ராஜி.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி middleclassmadhavi.

    நன்றி ஜீவி ஸார்.

    நன்றி வெங்கட் நாகராஜ்.

    நன்றி DD.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!