திங்கள், 23 டிசம்பர், 2013

ஒரு பக்கா ரசிகரின் பார்வையிலும், ஒரு பாமரனின் பார்வையிலும் ...




சங்கீத சீசன் என்பது எப்பொழுது துவங்குகிறது?

அது சென்னையில் நவம்பர் மாதமே துவங்கிவிடுகின்றது. பல இடங்களில் குறிப்பாக 12 B பஸ் செல்கின்ற தடங்களில் ஏதாவது நான்கு இடங்களில் இரண்டு வாழை மரங்கள் கட்டி, ஒரு வெள்ளைத்துணி பானர் அந்த மரங்களுக்கு இடையே கட்டி, ஒருநாள் மாலை நாதசுரக் கச்சேரியுடன் துவங்கும். மறுநாள் முதல் காலையில் ஒரு லெக் டெம் 'ஷாடவ/ஔடவ ராகங்களில் ஸ்வாதித் திருநாள் கிருதிகள்' என்று ஏதாவது ஒரு முழ நீளத் தலைப்பு. அவ்வளவுதான் - விழா ஆரம்பமாகிவிட்டது. 




மேடையில் இருக்கின்ற மக்களில் பாதிப்பேர் அளவுக்கு ஆடியன்ஸ். அதிலும் அரைவாசிப் பேரு அரைத்தூக்கத்தில் - கை தட்டும் ஓசை கேட்கும் பொழுதெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து, நான்கு தடவை கை தட்டி, தூக்க ஆவர்தனத்தின் அடுத்த காலத்திற்கு செல்வார்கள். இந்தத் திருவிழா சில இடங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டும் நடைபெறும். மேடையில் பாடுபவர்களது / பக்க வாத்தியம் வாசிப்பவர்களின் சுற்றமும் நட்பும் ஆடியன்ஸாக அமர்ந்து ஒவ்வொரு ராக ஆலாபனைக்கும், பாட்டுக்கும், கை தட்டி உற்சாகப்படுத்துவார்கள்!

பெரிய சபாக்கள் தங்கள் கடையை விரித்தவுடன், இந்த வாழை மர பார்ட்டிகள் சைலண்ட் ஆகிவிடுவார்கள்.

அடுத்த வகை இசை மண்டபங்கள் செவிக்கும், வயிற்றுக்கும் ஒருங்கே விருந்து படைப்பவர்கள். கச்சேரி வசூலை விட காண்டீன் விற்பனை வசூல் கொள்ளை போகும். ஒரு கப் காபியின் விலை ஒவ்வொரு சீசனுக்கும் ஏறிக்கொண்டே போகின்றது. சென்ற சீசனில் இருபது ரூபாய் என்று பார்த்தேன். இப்போ என்ன விலை என்று சொல்லுங்க ரசிகர்களே! 



 


எனக்கு என்னவோ சங்கீத சீசன் என்கிற பீலிங் மியூசிக் அகடமியில் மார்கழி ஒன்றாம் தேதி காலை வேளையில் நுழைந்து, அங்கு நுழைவு வாயில் / ஃபிரன்ட் டெஸ்க் இருக்கின்ற இடம் அருகே சுவற்றில் இருக்கின்ற இசைக் கலைஞர்களின் படங்களைப் பார்க்கும் பொழுதும், நான் பிறந்த ஆண்டில் யார் சங்கீத கலாநிதி என்று பெயர்ப் பட்டியலைப் பார்க்கும் பொழுதும், அந்த இடத்திற்கு முதன் முதலில் என் அப்பாவுடன் சென்ற நினைவுகளை அசை போடும் பொழுதும்தான், (ஒவ்வொரு வருடமும்) சங்கீத சீசன் ஆரம்பிக்கின்றது என்கிற ஆழமான உணர்வு வரும்.

(இன்னும் சொல்வேன்)


======================================================

காலை முதலே சபாக்களில் கச்சேரிகள் இருக்கும். காசு கொடுக்காமல் பார்க்கலாம் / கேட்கலாம். அவ்வளவாக பிரபலம் ஆகாத கலைஞர்களின் கச்சேரிகள் அவை.



நெய்வேலி சந்தானகோபாலன் மகள் ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன் அருமையாகப் பாடுகிறார். அவரை மாலை ஸ்லாட்டுக்குக் கூப்பிடுகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனாலும், இவ்வளவு கூட்டம் அலைமோதினாலும், அவர் தந்தை 'நெய்வேலி' அவரை இலவசக் கச்சேரி டைமில் பாடுவதையே ஊக்குவிக்கிறாராம். நல்ல விஷயம். அவர் பாண்டித்தியம் எல்லாருக்கும் சென்று சேர வேண்டும் என்ற அவா.  இன்னும் பிரபலம் அடைய வேண்டும் என்பதும் காரணமாயிருக்கலாம். எப்படியோ, நல்ல விஷயம்.



ரித்விக் ராஜா அடுத்த வருடம் 'காசுக் கச்சேரிக்கு'ச் சென்று விடுவார் என்று நம்பலாம். T M கிருஷ்ணாவின் சிஷ்யர். இந்தமுறை கேட்டதில் ராமகிருஷ்ண மூர்த்தி நன்றாகப் பாடுவதாக மாமா சொன்னார். ஸ்வர்ண ரேதஸ் இன்னும் பிற்பகல் கச்சேரிதான் செய்து கொண்டிருக்கிறார்.

சபாக்களில் மெயின் கச்சேரி 6 மணிக்கு, 6.15 மணிக்கு, 6.30 மணிக்கு அல்லது 7 மணிக்குத் தொடங்குகின்றன. மெயின் கச்சேரி என்பது எல்லாம் 'காசு'க் கச்சேரிகள்.  (சீசன்) டிக்கெட் வாங்க வேண்டும். இப்போதெல்லாம் கல்யாண விருந்தில் ஒரே மாதிரி 'செட்'டில் உணவு வகைகள் பரிமாறுவது போல, ஒரு வர்ணம், ஒரு கன ராகம், ஒரு ராகம் தானம் பல்லவி, அப்புறம் ஒன்றிரண்டு துக்கடாக்கள், மணி என்ன ஆச்சு? 9.15? சபா செயலர் கொஞ்சம் ஓகே என்றால் 9.30 க்கு தில்லானாவோ, மங்களமோ பாடி கச்சேரியை முடித்து விடுவார்கள்.

Finished. Package system மாதிரி!

ரசிகர்களும் ராகம் தானம் பல்லவியிலேயே வாட்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஒன்று, கேண்டீனில் போய் குறைந்தபட்சம் ஒரு காஃபியாவது சாப்பிட்டு வர வேண்டும், அல்லது டிஃபன். சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பினால்தான் சென்னை டிராஃபிக்கில் காலாகாலத்தில் வீடு போய்ச் சேர முடியும். படுக்க முடியும். காலை அலுவலகம் செல்ல வேண்டுமே...
'தனி' வாசிக்க ஆரம்பிக்கும்போது மக்கள் கலைய ஆரம்பிப்பது பார்க்கவே சங்கடமான காட்சி.

சென்ற சீசனில் அபிஷேக் ரகுராம் சொன்னார் : "இந்தப் பாடலில் தனி ஆவர்த்தனம் வரும். அது தொடங்கும்போது கிளம்பிச் செல்வது என்பது அவர்களை அவமதிப்பது போலாகும். காஃபி அல்லது டிஃபன் சாப்பிடப் போக விரும்புபவர்களுக்காக இந்தப் பாடல் தொடங்குமுன்னர் செல்வதற்கு 3 நிமிடம் இடைவெளி விடுகிறேன்" கொஞ்சம் அனா பினாத் தனமாக இருந்தாலும் கலைஞர்களுக்கு ஏற்படும் இன்சல்ட்டுக்கு முன்னால் இது ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது.



கல்கி விமர்சனத்தில் டி எம் கிருஷ்ணா கச்சேரி பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு (ஃப்ளூட்) மாலி உருவாகிறாரோ என்று பேசுகிறார்களாம். கச்சேரியில் சம்பிரதாயங்களை உடைக்கிறார். சென்றமுறை ஒரு ராக ஆலாபனை செய்துவிட்டு, பாடலுக்குப் போகாமல் அப்படியே அடுத்த பாடலுக்குப் போய்விட்டார். 
இந்த முறை வாணி மகாலில் ஆலாபனை, நிரவல் என்று அற்புதமாய் ஒரு பாடலைப் பாடி விட்டு (அப்போது மணி எட்டு) இன்னும் ஒன்றேகால் மணி நேரம் இருக்கிறது, என்ன பாடப் போகிறாரோ என்று பார்த்தால் 'போதும், இதற்குமேல் நான் பாடினால் போலியாக இருக்கும்' என்று கச்சேரியை முடித்து விட்டாராம்! என்னதான் ஓசிக் கச்சேரி என்றாலும் இப்படியா என்று முணுமுணுத்துக்கொண்டே கலைந்தனராம் ரசிகர்கள். 

இத்தனைக்கும் இந்தப் பாடலைத் தொடங்குமுன் எத்தனை மணி வரை பாடலாம் என்று சபா செயலரைக் கேட்டுக் கொண்டாராம். அவரும் 9.15 மணி வரை பாடலாம் என்று சொல்லியிருந்தாராம்!

அந்தக் காலத்தில் கச்சேரிகள் 6 மணிநேரம், 7 மணி நேரம் கூட நடந்திருக்கிறது. மதுரை சோமு இரவு 9 மணிக்கு மேல்தான் கச்சேரியே தொடங்குவாராம். முடியும்போது காலை மணி 3 அல்லது நான்காகுமாம். மதுரை மணி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாதையர் பற்றியெல்லாம் தெரியாது. சோமு கச்சேரி தஞ்சையில் கண்காட்சியில் கேட்டிருக்கிறேன். 
அது மட்டுமா? இப்படியா டிக்கெட் போட்டு உள்ளே விட்டார்கள்? ஒவ்வொரு உற்சவத்திலும் ஒவ்வொரு கோவிலிலும் கச்சேரிகள் இருக்கும். அதுவும் புகழ் பெற்றவர்கள் கச்சேரி. மக்கள் 'உங்கள் ஊரில் திருவிழாவில் இந்த வருடம் யார் கச்சேரி?' என்றுதான் கேட்பார்களாம். சிறு பிள்ளையார் கோவிலாக இருக்கும். நான்கு சந்துகள், அல்லது தெருக்கள் கூடும் சங்கமமாக இருக்கும். பெரிய பெரிய பாடகர்கள் அங்கு உட்கார்ந்து கச்சேரி செய்வார்கள். இன்னார்தான் என்றில்லாமல் எல்லோரும் ரசித்த கச்சேரிகள் அவை. பிடிக்காதவர்கள் போய்க்கொண்டே இருக்கலாம். ஆனாலும் பெரும் கூட்டம் குழுமி கேட்டுக்கொண்டிருக்கும். 
கர்னாடக சங்கீதம் ஜாதி, மத வித்தியாசமின்றி எல்லாரையும் சென்றடைந்த காலம் அது. 

[T M கிருஷ்ணா தன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது படித்ததும் இவை நினைவுக்கு வந்தன.] 
====================================================
[முக நூலில் பகிரப்பட்டவை]

15 கருத்துகள்:

  1. கிருஷ்ணாவை ரசிக்க பொறுமை தேவைப்பட்டது. பிறகு கேட்க பொறுமை தேவைப்பட்டது. இப்போதெல்லாம் பார்க்கவே பொறுமை தேவைப்படுகிறது. மற்றவர்கள் ரசிக்கட்டும். எனக்கு வேண்டாம் க்ருஷ்ணா!

    ஸ்ரீரஞ்சனி சந்தான கோபாலன் - இனி தான் கேட்க வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாட்டு பாடுறாரா உக்காந்துகிட்டே டேன்சு ஆடுறாரானு தெரியாதபடி... அவரு தானே டிஎம்கே?

    பதிலளிநீக்கு
  3. சங்கீத கச்சேரி கேட்ட மாதிரி அருமையான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  4. அப்பாதுரை, சென்னையில்தான் இருக்கிறீர்களோ... எபோது டி எம் கிருஷ்ணா கேட்டீர்கள்? சஞ்சய் சுப்பிரமணியம் கேட்டிருக்கிறீர்களா?

    நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

    பதிலளிநீக்கு
  5. மதுரை சோமு அவர்கள் கச்சேரியை நான் தஞ்சையில் இரவு 9 மணிக்குத் தான் துவங்கினார்.

    தஞ்சை கீழ் வீதியில் பஸ் ஸ்டாண்ட் துவக்கத்தில் தெற்கு வீதி இடத்தில் பிரும்மாண்ட பந்தல் .

    அந்த பந்தலிலே ஒரு ஆயிரம் அடிக்கு ஜமக்காளம் . ரோடிலே போட்டு இருந்தார்கள்.

    அதில் முதல் வரிசையிலே உட்கார்ந்து அந்த வித்வத்தை பர்பூர்ணமாக அனுபவித்தேன். மதுரை சோமுவுக்கு பிடித்த காம்போதி , ஆனந்த பைரவி, கல்யாணி, சிந்து பைரவி எல்லாமே.

    கச்சேரி மங்களம் பாடும்போது மணி 4 இருக்கும். இருந்தாலும் கூட்டம் ஒருவர் கூட நகர மனம் இல்லாமல் ஆணி அடித்தாற் போல் உட்கார்ந்திருந்த காட்சி என் மனதில் இன்னமும் இருக்கிறது.

    1962 ஆ அல்லது 1963 என்று நினைவில் இல்லை. அப்பவே அவருக்கு மிகவும் உடம்பு சரியில்லை. மதுரையிலிருந்து அப்பொழுது தான் எனக்கு தஞ்சைக்கு மாற்றல் கிடைத்து இருந்தது என்ற ஒரு நினைவு மட்டும் இருக்கிறது.

    அதே போல், மன்னார்குடி ராஜகோபால் சுவாமி கோவில் முன்னே ராஜமாணிக்கம் பிள்ளை இரவு 8 மணிக்கு துவங்கியவர் காலை 5 மணிக்குத் தான் முடித்தார். பைரவி ராகத்தை மட்டும் ஒரு 2 மணி நேரம் வாசித்தார். அன்று கூட்டம் கணக்கில் அடங்காது.

    மணக்கால் ரங்கராஜன் , ஆலத்தூர் சீனிவாச அய்யர் அவர்களையும் தொடர்ந்து ஒரு 4 மணி முதல் ஐந்து மணி நேரம் பாடக்கேட்டு இருக்கிரேன்.

    அதெல்லாம் அந்தக்காலம்.

    இன்று அது போல் பாடுபவர் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

    சுப்பு தாத்தா
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. //பாட்டு பாடுறாரா உக்காந்துகிட்டே டேன்சு ஆடுறாரானு தெரியாதபடி... அவரு தானே டிஎம்கே?//

    ஹாஹா அப்பாதுரை, அவர் பாட மேடைக்கு வந்தால் பக்கவாத்தியக்காரங்களுக்குத் தனி மேடை போடணுமாக்கும்! :))) ஆனால் பாருங்க குரல் என்ன வளம், என்ன வளம்! அதைக் கொஞ்சமும் குற்றம் சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
  7. கச்சேரிகள்னு எல்லாம் போனதில்லை, அந்தக்காலம், இந்தக்காலம் எந்தக்காலத்திலும், மதுரை ஆடி வீதியில் நவராத்திரிக் கச்சேரிகள் கேட்டிருக்கேன். எம்.எஸ். அம்மா, எம்.எல்.வி. அம்மா. டிகேபட்டம்மாள் அம்மா போன்றோருடன் மதுரை மணி ஐயர், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன், வீணை சிட்ட்பாபு போன்றோரின் கச்சேரிகளைக் கேட்டிருக்கேன். இத்தனை கேட்டதுக்கு சங்கீத ஞானம் சூன்யம் தான். :)))

    வீட்டில் உட்கார்ந்தபடியே இந்தக் கச்சேரிகளைக் கேட்க முடிந்தது என்பதும் ஒரு விசேஷம். ஆடிவீதிக் கச்சேரிக்கு வைக்கும் மைக் மேலாவணிமூலவீதியில் எங்க வீட்டு மாடி அறை வரை கேட்கும். :))))) சீர்காழியின் சின்னஞ்சிறு பெண்போலே பாட்டு நேரில் கேட்கவென்று அதுக்குப் போவேன்.

    பதிலளிநீக்கு
  8. ஜாஸ்தி கேட்டது ஹரிதாஸின் பஜனை; எங்க திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக்கொடுக்கும் அத்தையம்மாவின் பஜனைப்பாடல்கள், ஶ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதரின் அஷ்டபதிக் ஈர்த்தனைகள், சந்தான கோபாலாச்சாரியாரின் வீணையில் சாமகானம் போன்றவை தான்.

    பதிலளிநீக்கு
  9. பழுதில்லாத சங்கீதம் டி எம் கிருஷ்ணாவுடையது.. அவரின் மன வியாலகிம்.. துங்கா தீர விஹாரம்.. நகுமோமு.. ஒரஜூபு சூ.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    மரபின் வழி முன்னேறி மரபை கேள்விக்குறியாக்குவது தீட்டிய மரத்தை கூர் பார்ப்பது போல என யாராவது இவரிடத்தில் சொன்னால் தேவலை!

    பதிலளிநீக்கு
  10. கச்சேரிக்கு போக ஆசைதான். .ஞானமில்லையே!
    நல்ல விமர்சனம். கர்நாடக சங்கீதத்திற்கு மவுஸ் கூடி இருப்பது போல்தான் தெரிகிறது.சினிமா பாடல்கள் பாட கர்நாடக சங்கீதம் அறிந்தவர்களையே இசை அமைப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதால். அதை கற்போரும் கேட்போரும் அதிகரித்துள்ளனர் என்று நினைக்கிறன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    சிறப்பான பகிர்வு வாழத்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. கர்னாடக சங்கீதம் ஜாதி, மத வித்தியாசமின்றி எல்லாரையும் சென்றடைந்த காலம் அது. //
    70, 73 ல் கோவில்களில் நிறைய பாடகர்கள் கச்சேரி கேட்டு இருக்கிறேன்.
    இப்போது அப்படி எல்லாம் பிரபலமானவர்கள் கச்சேரி கேட்க முடிவது இல்லை.
    தொலைக்காட்சிகளில் கச்சேரிகளை கேட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. கர்நாடக சங்கீதம் அன்றும் இன்றும் விமரிசனம் மிக நன்று.
    தெருவோர மேடைக் கச்சேரிகளா>>......அது ஒரு கனாக்காலம் .

    பதிலளிநீக்கு
  14. நல்ல சங்கீதம்!

    தில்லியில் அவ்வப்போது சில கச்சேரிகள் நடக்கும். அதற்கு மட்டுமே செல்ல முடியும். சென்னை சபாக்களில் நடக்கும் கச்சேரிகள் கேட்க வாய்ப்பில்லை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!