12.3.25

உங்களுக்குப் பிடித்த சரித்திரக் கதை எழுத்தாளர் யார்? எந்த சரித்திரம்?

 

ஜெயகுமார் சந்திரசேகரன்: 

திரை அரங்குகளில் 70 களில் மாட்டினீ ஷோ என்ற பிற்பகல் காட்சிகள் பெண்கள் வருகையால் மட்டுமே நிரம்பி வழிந்தது. தற்போது அவ்வாறு இல்லை. இந்நிலைக்கு காரணம் என்ன?

# தொலைக்காட்சியில் இலவசமாக படங்கள், சீரியல்கள் கிடைப்பதுதான்.‌

தினசரிகள் வாங்கும்/வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது ஏன்?

# மேலே தந்துள்ள பதிலைப் பார்க்கவும்.

& தொலைக்காட்சி செய்தி சானல்களில் நாம் பார்க்கும் செய்திகள், வீடியோ துண்டுகள் அரைமணி நேரத்திலேயே பழைய செய்திகள் ஆகிவிடுகின்றன. அப்படி இருக்கும்போது 24 மணி நேர பழைய செய்திகளைப் படிக்க யாருக்கு ஆர்வம் வரப்போகிறது ! 

தனியார் கல்லூரிகள் போய் தனியார் பல்கலைக் கழகங்கள் நிறைந்து விட்டன. இந்நிலை எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும்?

# அரசின் வருவாய் இலவசங்களிலும் ஊழலிலும் கரையும்வரை எல்லா விபரீதங்களும் சாஸ்வதம்.

தனியார் திறம்பட நிர்வகிக்க வேண்டுமானால் அவர்களை தவறு செய்ய அதிகார மையங்கள் ஊக்குவிக்காமல்   இருக்க வேண்டும்.

& நல்ல தரமான கல்வி, குறைந்த செலவில் கிடைத்தால், தடைகள் இன்றி தாக்குப் பிடிக்கும். 

கில்லர்ஜி, தேவக்கோட்டை  : 

உரிமை என்பதற்கும், அதிகாரம் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

# உரிமை பறிக்கப் பட்டால் போராடிப் பெறவேண்டும். பெற முடியும்.

அதிகாரம் பறிக்கப்பட்டால்,  மீண்டும் பெற வழிகள் இருப்பினும், பெறுவது உறுதியில்லை.‌

நெல்லைத்தமிழன்: 

 1. கல்விக்கண் கொடுத்த நல்லவரான காமராஜையே தோற்கடித்த தமிழக மக்களுக்கு, காசு வாங்கிக்கொண்டு இடைத்தேர்தலில் வாக்களிக்கும் பெரும்பாலான மக்களுக்கு எதுக்கு நல்லது செய்ய எண்ணும் அரசியல்வாதிகள் வரணும்?  ஊழல் செய்பவர்கள் தலைவர்களாக வந்தால் போதாதா?    

# நல்லது செய்யும் அரசியல்வாதிகள் களத்தில் இருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் " நான் அதிகம் உரிமைத் தொகை தருகிறேன் " என்று ஒவ்வொரு கட்சியும் சொல்லி ஜெயிக்கப் பார்க்கும் விந்தையை நாம் அநேகமாக காணக்கூடும். பக்கத்து மாநிலங்களில் ஆயிரத்தை விட அதிகமாக கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து கட்சிகள் ஜெயித்திருக்கிறசெய்தியையுமா பார்க்கிறோம்.

அது போகட்டும் , இந்திப் போராட்டத்தை காங்கிரஸ் சமாளித்த விதம்,  மக்களின் முழு வெறுப்பை சம்பாதித்தது. காமராஜ் தோற்றது அதன் விளைவாகத்தான்.‌

காசு வாங்கினபின் ஓட்டுப் போடாமல் இருப்பது பாவம் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். காசு தருபவர்களும் விவரம் தெரியாத அப்பாவி வாக்காளர்களுக்குக் காசு கொடுக்குமுன்,  அவர்கள் குடும்பத்தினர் மீதும் அவர்களின் இஷ்ட தெய்வங்களின் மீதும் சத்தியம் வாங்கிக் கொண்டு அதன் பின்பு தான் காசு தருகிறார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னத்திற்கு வாக்கு அளிப்பதற்கு ஏழை வாக்காளர்கள் பழகி விடுகிறார்கள். " கட்சி செய்யறது சரி இல்லை தான். ஆனால் நாங்கள் எல்லாம் சூரியனுக்கு தான் ஓட்டு போடுவோம்" : இது நாம் எப்போதும் கேட்கும் பேச்சு.

2.  சிவாஜி நடிப்பை ஆஹா ஓஹோ என்று பலரும் புகழ்கிறார்கள், ஆனால் அவர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லையே.  எம்ஜியாரை சிறந்த நடிகர் என்று பாரத அரசு சிறப்பித்திருக்கிறது. அப்படியென்றால் நடிப்புக்கு அளவுகோல் என்ன?  

# அரசு அளிக்கும் பட்டங்களும் கௌரவங்களும் ஆட்சியில் இருக்கும் கட்சி, தன் சுயநலத்தை உபதேசித்து அளிப்பது மட்டுமே.‌ எங்காவது எப்போதாவது அந்த மாதிரியான கௌரவங்களில் ஒரு நியாயமான அடிப்படை காணப்படும். அது ஒரு விதிவிலக்கே தவிர பொது விதி அல்ல. 

சிவாஜி கணேசன் ஒரு மிகச்சிறந்த நடிகர். ஆனாலும் அவர் சிறந்த நடிப்பைக் காட்டி நடித்த படங்கள் மிகச் சில மட்டுமே. பெரும்பாலான படங்களில் அவர் செய்தது மிகையான நடிப்பு - அது விரும்பப்படுகிறது , அதுதான் எதிர்பார்க்கப்படுகிறது என்பதன் காரணமாக இருக்கலாம் . அவருடைய நடிப்புத் திறமையைப் பற்றி மட்டுமே நாம் அறிவோம். பரிசுகளும் பட்டங்களும் வாங்க வேறு தகுதிகளும் தேவைப்படும்.

நடிப்புக்கு அளவுகோல் என்ன ? என் அபிப்பிராயத்தில் ஒரு 20 வருடம் சென்றபின் ஒரு படத்தைப் பார்த்து "அட இதையா நாம் விரும்பி பார்த்தோம்" என்று நாம் எண்ணாமல் இருப்பதுதான் சிறந்த அளவுகோல்.

3.  ஒரு காலத்தில் உருகி உருகிப் பார்த்த (ரசித்த) நடிகைகளை மனம் அம்போ என்று விட்டுவிட்டு உடனே வேறு நடிகைக்கு தாவுவதன் காரணம் என்ன?  

# அழகு & / or  கவர்ச்சி தவிர வேறு இல்லை.

& பார்ப்பவர்களுக்கு வயது கூடுவது உணரப்படுவதில்லை; பார்க்கப்படுபவர்களுக்கு வயது கூடுவது கண்கூடாகத் தெரிகிறது! (நெ த இப்போ எந்த நடிகைக்குத் தாவியிருக்கிறார் என்று இரகசியமாக தெரிவிக்கவும்!) 

4. எழுத்தாளர்களால், ஒரு நேரத்தில், எழுதியது போதும் என்று இருக்க இயலுமா?  

# இனி எழுத ஒன்றும் இல்லை எனவே இனி எழுதுவதாக இல்லை என்று எனக்குத் தெரிந்தவரை ஜெயகாந்தன் அவருக்கு முன்னே சாமர் செட் மாம் அறிவித்திருக்கிறார்கள். கானன் டாயில் கூட ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளை எழுதுவதை நிறுத்தி அதன்பின் ரசிகர்கள் வற்புறுத்தல் காரணமாக பெரும் பணம் பெற்றுக் கொண்டு எழுதினார் என்று செய்தி சொல்லுகிறது.

5. உங்களுக்குப் பிடித்த சரித்திரக் கதை எழுத்தாளர் யார்? எந்த சரித்திரம்?

# நான் சரித்திர கதைகள் அதிகம் படித்ததில்லை. சாண்டில்யன்,  அகிலன், பாலகுமாரன், நா. பார்த்த சாரதி ஆகியோர் எழுதிய சரித்திர கதைகள் எனக்குப் பிடிக்கவில்லை. அது போக மீதம் இருந்தது கல்கியின் "பார்த்திபன் கனவு"  "சிவகாமியின் சபதம்"  மற்றும் "பொன்னியின் செல்வன்". இவற்றில் பார்த்திபன் கனவு கொஞ்சம் சுமாராக இருந்ததாக நான் நினைக்கிறேன்.  மற்ற இரண்டும் எனக்குப் பிடித்த சரித்திர நாவல்கள். கல்கி எழுதுவது சரித்திர நாவல் அல்ல என்று கட்சிகட்டிக் கொண்டு சண்டை போட்டவர்களைப் பற்றி நினைவு இருக்கிறது.‌

& பதின்ம வயதுகளில் சாண்டில்யன் எழுதிய சில கதைகளைப் படித்திருக்கின்றேன். ரசித்ததும் உண்டு. 

வேலை பார்க்க சென்னை வந்தபின்தான் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தேன். மிகவும் ரசித்தேன். 

தற்காலத்தில், காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சில சரித்திர நாவல்கள்  படித்திருக்கிறேன். நிறைய தகவல்களுடன், சுவாரசியமாக எழுதுகிறார். 

கே. சக்ரபாணி சென்னை 28: 

1. சில இடங்களில் நான்கைந்து  பேர்கள்  இருக்கும்  இடத்தில்  ஒருவருக்கு கொட்டாவி  வந்தால்  மற்றவர்களுக்கும்  தானாக  கொட்டாவி வரும் கவனித்திருக்கிறீர்களா?  

# " கொட்டாவியும் குமரிப்பெண்ணும் தனியே போக மாட்டார்கள் " என்று பழமொழி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

& எண்ண அலைகள் பயணிக்கின்றன (Thought waves travel) என்பதற்கு இது ஒரு  சிறந்த உதாரணம். ஒரே அலைவரிசையில் இணைகின்றவர்கள்தான் ஓரிடத்தில் ஒன்றாக சேரும், உரையாடும் வாய்ப்பு பெறுகிறார்கள். ஒருவரின் மூளை, அவருக்கு 'இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவு ஏற்படுவதுபோல உள்ளது; உடனே கொட்டாவி விடு'   என்று கட்டளை பிறப்பிக்கும். உடனே உடல் அதை செயல்படுத்தும். அவருடைய மூளையின் எண்ண அலை, சுற்றியுள்ளவர்களின் மூளைகளில் எதிரொலிக்கும். உடனே சுற்றியுள்ளவர்களின் மூளைகளும் அந்த எண்ணத்தை பிரதிபலித்து, அவர்களின் உடலும் கொட்டாவி விட தூண்டப்படுகின்றன. அதனால்தான் ஒருவர் கொட்டாவி விட்டால், மற்றவர்களும் கொட்டாவி  விடுகிறார்கள். 

2. சிலபேர்  காப்பி குடிக்கறீங்களா என்றும்  சில பேர் காப்பி  சாப்பிடுறீங்களா  என்றும்  கேட்பார்கள்.  காப்பி குடிப்பது தானே  சாப்பிடுவது என்பது எப்படி வந்தது? 

# சரி விகித உணவு என்று அறியப்படும் பால் கலந்திருக்கிற காப்பி சாப்பிடப்பட வேண்டிய பொருள்தான் என்று நினைத்து விட்டார்கள் போலும் !

& காபி குடிப்பது / சாப்பிடுவது என்பதைக் கூட ஓரளவுக்குப் புரிந்துகொண்டுவிடலாம். ஆனால் சிலர் சிகரெட் குடிக்கிறார்களே - அவர்களிடம் நாம் சிகரெட் சாப்பிடுங்க என்று உபசாரம் செய்யமுடியுமா?  

= = = = = = = =

KGG பக்கம். 

பாண்டிச்சேரி பயணத்து படங்கள் மேலும் சில. 


Palms up! 


Rifle like fence 


Flower tree. 



coconut trees and fence 







Fielding 


Fielding 


Bowling 

= = = = = = = = =

"தலைப்பிற்கு படம்"  

'தெய்வீகம்'  தலைப்பிற்கு படங்கள் அனுப்ப, இன்னும் ஆறு நாட்கள்தான் மீதி உள்ளன. 

தெய்வீகம் ஆக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் காட்சியை, உங்கள் மொபைல் காமிரா அல்லது கைக் காமிரா மூலம் படம் எடுத்து, 

engalblog@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ 

or 

9902281582 whatsapp number க்கோ அனுப்பவும். 

படங்கள் அனுப்ப இறுதி தேதி : 18.3.2025. 

= = = = = = = = = = =

50 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. மாசி மக நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. எல்லாரும் மறக்காம குளிச்சிடுங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை 5.30 மணிக்கே குளித்துவிட்டேன்.

      நீக்கு
    2. அப்புறம் நடைப்பயிற்சி செய்ய உங்கள் நிழலையா அனுப்புவீர்கள் கேஜிஜி சார்?

      பொதுவா நான் எழுந்ததும் குளித்துவிட்டு, நடைப்பயிற்சி போன்றவற்றை முடித்துக்கொண்டு, திரும்பவும் குளிக்கும் வழக்கமுடையவன்.

      நீக்கு
    3. நடைப் பயிற்சிக்குப் பிறகு குளிப்பது இல்லை.

      நீக்கு
  4. உரிமை, அதிகாரம் பதில் பொருத்தமாக இல்லை.

    நம் குழந்தைகள், மனைவி ஆகியோரிடம் நமக்கு உரிமை இருப்பதால்தான் அதிகாரம் செய்கிறோம். அலுவலகத்திலும் இந்த உரிமை காரணமாகவே மேலதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை அதிகாரம் செய்கிறார்கள் அல்லவா? உரிமை என்பது ஒருவருக்கு அளிக்கப்பட்டது, அல்லது அவருக்கு உரித்தானது. அதிகாரம் என்பது அவர் செய்யும் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரே வெகுகாலமாக எனக்கு இந்த வேறுபாடு குழப்பமாகவே இருக்கிறது.

      நீ என் வீட்டுக்கு வா என்று சொல்லும் உரிமை எனக்கு உள்ளது.

      ஆனால் ?

      நீ என் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் எனக்கு உள்ளது.

      இது சரியா ?

      நீக்கு
    2. என் மனைவியைக் கண்டிக்கும் உரிமை எனக்கு இருக்கு. அந்த உரிமையை எனக்குக் கொடுக்கும் அதிகாரம் அவளிடம் இருக்கு !
      இது எப்படி இருக்கு!

      நீக்கு
    3. கில்லர்ஜி.. அது உரிமையல்ல. நீங்கள் வீட்டுப் பக்கமே வராதே என்று உங்கள் மகனிடமும் என்னிடமும் சொன்னால் அதைப் புறக்கணித்து என்னால் உங்கள் வீட்டுக்கு வரும் அதிகாரம் இல்லை (ED, CBI, Police etcஆக இருந்தாலொழிய). ஆனால் உங்கள் மகனுக்கு, என் அப்பன் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்குமே உரிமை கிடையாது, அப்பா உட்பட என்பதுதான் உரிமையின் அர்த்தம்.

      நீக்கு
    4. உரிமை அதிகாரம் என்று பொதுவாகக் கேட்டால் பொதுமக்களின் உரிமை ,,பொதுமக்களின் அதிகாரம் என்று எடுத்துக்கொண்டு பதில் சொல்லத் தூண்டப்படுகிறோம் .

      மற்றபடி, கணவன் -மனைவி , பெற்றோர் - குழந்தை , ஆசிரியர் - மாணவர் என்று ஒவ்வொரு தளத்திலும் உரிமைகளும் அதிகாரங்களும் வேறு வேறு மாதிரியாக இருக்கும். அதற்கு பொதுப்படையான பதில் சொல்லும் வாய்ப்பு இல்லை

      நீக்கு
  5. நடிப்புக்கு அளவுகோல் கேள்விக்கான பதில் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பாராட்டுகள். இதே அளவுகோலை நடிகைகளின் அழகுக்கும் வைக்கமுடியுமா என நினைக்கிறேன். சட் என நினைவில் வருவது நடிகை பத்மினி.

    பதிலளிநீக்கு
  6. விளக்கம் அளிக்காமல் வெறும் படங்களை மாத்திரம் பகிர்ந்தால் புரியுமா?

    பதிலளிநீக்கு
  7. சக்ரபாணி அவர்களின், குடி/சாப்பிடு கேள்வி யோசிக்கவைத்தது. டிரிங்க்ஸ் போட்டுட்டு வரேன், தண்ணி அடிக்கறான், தண்ணி சாப்பிடப் போயிருக்கான், சாராயம் குடிக்கிறான், மது உண்ணும் பழக்கம் அவனுக்கு இருக்கு.... என்று ஒரு செயலுக்கே அனேகமா பலவித வினைகளை உபயோகிப்பது வேறு எதற்காவது இருக்கா?

    பதிலளிநீக்கு
  8. //காசு வாங்கினபின் ஓட்டுப் போடாமல் இருப்பது பாவம் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்.//

    ஹா... ஹா... ஆம் உண்மைதான் ஜி காரணம் மக்கள் பிறந்தது முதல் ஒழுக்கசீலர்கள்.

    ஊரெல்லாம் வசியம், செய்வினை, மந்திரம் வியாபாரம் சூடு பிடிக்கிறது காரணம் தமிழக மக்களா ?

    வேற்று கிரகவாசிகளா ?

    பதிலளிநீக்கு
  9. கொட்டாவிக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றிகள்
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் மாசிமக வாழ்த்துகள்.

    கேள்வி பதில்கள் நன்று.

    பாண்டிச்சேரி பயணம் நிறைந்த படங்களுடன் விளங்குகிறது.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமையாக உள்ளது.

    அதிலும், உரிமை, அதிகாரம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு, அடுத்தடுத்து கொட்டாவி விடும் நபரை பார்த்ததும், வரும் கொட்டாவி பதிலுக்கு விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது.

    பாண்டிச்சேரி படங்கள் அனைத்தும் அருமை. இயற்கை சூழும் படங்களும், தங்கள் பேரன் கிரிகெட் விளையாடும் படங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. பாண்டிச்சேரி படங்கள் அருமை. உரிமை என்பது நம் நெருங்கிய சொந்தங்கள் அல்லது நெருங்கிய நட்புடன் மட்டும் வைச்சுக்கலாம். அதிகாரம் என்பது வேறே. அலுவலகத்தில் மேலதிகாரிக்கு ஒரு மாதிரி அதிகாரம். அவர் கீழ் உள்ளவருக்கு ஒரு மாதிரி இருக்கும். இப்படி வரிசையாப் போனால் கடைநிலை ஊழியருக்குக் கூட யாரிடமாவது அதிகாரம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. பேரனை இப்போவே கிரிக்கெட் க்ளப்பில் சேர்த்துடுங்க.

    பதிலளிநீக்கு
  15. இந்தியா பூராவும் மொழியைப் பற்றிப் பேசுகையில் தமிழ்நாட்டில் முதலில் தமிழ் ஒழுங்காய்ப் பேசப்படுகிறதா எனில் இல்லை.இன்னமும் சொல்ல மாட்ராங்க தான். சொல்ல மாட்டாங்க என்பதோ மாட்டேன் என்கிறார்கள் என்பதோ இல்லை. அதே போல் முதல் மந்திரியாய் இருக்கும் திரு.மு.க. எனச் சொல்வதில்லை. முதல் மந்திரியாய் இருக்கக் கூடிய என்கின்றனர். அப்படி எனில் அவருக்கு முதல் மந்திரியாய் ஆகக் கூடிய தகுதி இருக்கு என்று தான் பொருள் படும் இல்லையோ? என்னுடைய மனைவி என்பார்களா? என் மனைவியாய் இருக்கக் கூடியவர் என்பார்களா? அபத்தமாக இல்லையோ? இதெல்லாம் பெரும் அறிஞர்கள் கூடப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பது தான் விந்தை!

    பதிலளிநீக்கு
  16. எனக்குப் பிடித்த சரித்திரக்கதை எழுத்தாளர் அன்றும், இன்றும், என்றும் திரு கல்கி அவர்கள் மட்டுமே. மற்றவர்களின் சரித்திரக்கதைகள் படித்திருந்தாலும் மனதை ஈர்த்ததே இல்லை. ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், அகிலன், சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, வ்க்க்கிரமன் எனப் பலர் எழுதினாலும் முதல் நிலை கல்கிக்குத்தான். சாண்டில்யன் அவ்ர்களின் ஆரம்பகால நாவல்கள் கொஞ்சம் சுவையாக இருக்கும். கன்னிமாடம், மன்னன் மகள் போன்றவை நன்றாகவே இருக்கும். பின்னர் வர்ணனைகள் அதிகம் ஆகிவிட்டன. கதைப் போக்கைக் குறைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  17. கில்லர்ஜி கருத்துத் தொடர்பாக:

    மக்கள் ஒழுக்க சீலர்களா என்பது அல்ல விஷயம். மக்கள்.‌ பய உணர்ச்சி மிக்கவர்கள். பிள்ளைகள் பேரிலும் கடவுள் பேரிலும் சத்தியம் செய்து பெறப்பட்ட பணம் என்பது ஒரு பக்கம், அதுபோக போக்கிரிகளிடம் பெறப்படும் பணம் அதற்கு உண்டான பொருளை வழங்காதிருப்போமானால் பழி பாவத்துக்கு அஞ்சாத முரடர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்ற பயமும் மக்களை ஒரு திசையில் போக நிர்பந்தம் செய்கிறது.

    இந்தப் பணம் கொடுக்கும் தந்திரங்களுடன் பல நாட்களுக்கு முன்னால் எனக்கு நேரடியான அறிமுகம் உண்டு. அப்போதெல்லாம் தொகை ரொம்ப கம்மி.

    பதிலளிநீக்கு
  18. கேள்விகளும், பதில்களும் அருமை.

    பாண்டிச்சேரிபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

    உரிமை இருப்பவர்களிடம் எல்லாம் அதிகாரம் செய்ய வாய்ப்பு இல்லை (குடும்பத்தில்)

    அலுவலகத்தில் தனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் அதிகாரம் செய்ய உரிமை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. இப்போது இருக்கும் காலகட்டத்தில் உரிமை இருப்பவர்களிடம் கூட அதிகாரம் செய்யா முடியாத சூழ்நிலை இருக்கிறது. (குடும்பத்தில்)

    பதிலளிநீக்கு
  20. உரிமை என்பதற்கும், அதிகாரம் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

    # உரிமை பறிக்கப் பட்டால் போராடிப் பெறவேண்டும். பெற முடியும்.

    அதிகாரம் பறிக்கப்பட்டால், மீண்டும் பெற வழிகள் இருப்பினும், பெறுவது உறுதியில்லை.‌//

    உங்கள் பதில் நன்றாக இருக்கிறது.

    சொத்து பிரச்சனை, அலுவலக வேலை வாய்ப்பு உரிமை போன்ற வற்றை போராடி பெறலாம். ஆனால் குடும்பத்தில் உறவுகளிடம் உரிமையோடு , அதிகாரத்தோடு பழகியது போல பழக முடியாது ஒரு கால கட்டத்தில். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்?
      நேற்று மதியம் 1400 --க்குப் பிறகு நீங்கள் இந்தப் பக்கமே தலை காட்டவில்லை. அதனால் தான்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!