7.1.26

எது நம்மை கடைசி வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்?

 

எங்கள் கேள்விகள் :

1) நினைத்த மாத்திரத்தில் உங்களால் உங்கள் கைகளை எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நீட்டலாம் என்று ஒரு மந்திர சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்வீர்கள்? 

2) கீழே இருக்கின்ற படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். 


= = = = = = = = =

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

1. செத்துப்போவது (தற்கொலை) என்று தீர்மானித்த பிறகு ஏன் கஷ்டமான வலியான முறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? - மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக்கொள்வது போன்று.   .. 

# தற்கொலையின் பின்னணியில் இருக்கும் மன நிலை மிகச் சிக்கலானது. இது பற்றி அதிகம் பேச எனக்கு உடன்பாடில்லை. சில தற்கொலைகள்  மக்கள் பலரின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற உந்துதலால் ஏற்படுவதுண்டு.‌

2.  எது நம்மை கடைசி வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்?   

# செயலில் ஆர்வம். மேன்மையான ரசனை.‌

3.  இந்த தசாப்தத்தில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் கணிணி/மொபைலைப் பார்த்துக்கொண்டிருப்பதால் என்ன என்ன உடற்குறைகள் வரலாம்?    

# என்னைக் கேட்கக் கூடாத கேள்வி.  பார்வைக்குறை, முதுகு வலி, பைத்தியம் ?

4.  முப்பது வருடங்களுக்கு முன்பு நமக்கு வியாதிகள் குறைவா? இல்லை எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் அல்லது ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வியாதி நமக்கு இல்லாமலிருந்ததா? புற்றீசல் மாதிரிப் பரவியிருக்கும் மருத்துவமனைகளைப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.   

# வசதிகள் கூடினால் செலவு செய்யத் தயங்க மாட்டோம். உடல் உபாதை வரும் போது மருத்துவம் பார்த்தால் தான் என்ன என்ற மனப்பான்மை வந்து விடுகிறது.

5. உலகில் எது உன்னதமான தொழில்? பெரும்பாலான பெரியவர்கள் சொல்வது, வக்கீல், மருத்துவத் தொழில் போன்றவை பாவத்தைச் சேர்க்கும் தொழில் என்று. அதனால் இந்தச் சந்தேகம்.

# என் கருத்து: ஆசிரியர் தொழில்.

= = = = = = = = = =

படமும் பதமும் : 


சமீபத்தில் நான் 4,5 மற்றும் 6ம் வகுப்பு படித்த ஊருக்குச் சென்றிருந்தேன். என் அப்பா, தலைமை ஆசிரியராக வேலை பார்த்த (1972) மேல் நிலைப் பள்ளி இது. இங்குதான் நான் 6ம் வகுப்பு சில மாதங்கள் படித்தேன். உள்ளே சென்று என் அப்பாவின் அறையைப் பார்க்க விரும்பினேன். ஆனால் செல்லும் பாதை புதராக இருந்ததால் பாம்பு இருக்குமோ என்ற பயம். மிகவும் கலைநயத்துடன் கூடிய கட்டிடம் இது. அந்த வருடமே புதிதாக ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டப்பட்டு (மிகப் பெரிய பள்ளிக்கூடம்) அங்கு எல்லோரும் சென்றுவிட்டோம். இது பற்றி பயணப் பதிவில் பகிர்வேன். இந்தப் பள்ளிக்கூடமும் சிறியது அல்ல. 11ம் வகுப்பு வரை இங்கு நடந்துகொண்டிருந்தது.


உடைந்த கிளைகள் சிதிலங்கள் இருந்ததால் இந்தப் பள்ளியின் உள்ளே செல்லவில்லை.  காலையில் பள்ளி 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்று நினைவு. என் அப்பா, கையின் பின்னால் பிரம்பை வைத்துக்கொண்டு, அது தெரியாமல் வாசலில் நின்றுகொண்டிருப்பார். 9 மணிக்கு மேல் வருபவர்களை பிரம்பைக் காட்டி பயமுறுத்துவார். ஐம்பது வருடங்களுக்கு முன் நான் வாழ்ந்த இடத்துக்குச் சென்றது எனக்கு ரொம்பவே உணர்வுபூர்வமான விஷயமாக இருந்தது. 


இது என்ன கட்டிடம்?  இதுதான் தனுஷ்கோடியில் இருந்த இரயில்வே ஸ்டேஷன். டிசம்பர் 64ல் ஏற்பட்ட பெரும் புயலில் அந்த ஊரே அழிந்துபோனதும், அப்போது தனுஷ்கோடிக்கு வந்துகொண்டிருந்த போட் மெயில், ஊருக்குச் சிறிது தூரத்தில் கடலால் கொள்ளப்பட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஊர் தபால் நிலையம், சாலை, வீடுகள் என்று ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. இப்போது ஒரு சாலை கடலை நோக்கி, அதன் ஒரு புறம் கடல் நுழைந்திருக்கிறது, இன்னொரு புறம் கடலில் ஆரவாரமான அலைகள் என்று ஊர் இருந்த சுவடே இல்லை. 



தனுஷ்கோடி ஸ்டேஷனை ஒட்டியுள்ள இருப்புப்பாதை தடம் மாத்திரம் எஞ்சியிருக்கிறது. 

= = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

அண்மையில், facebook பதிவில், பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் எழுதிய ஜோதிடக் குறிப்பு - பெண்களின் ராசி - அவர்களின் குணங்கள் பற்றி - படித்தேன். 

நம் வாசகர்கள், இதைப் படித்து, குறிப்புகள் சரியா என்று கருத்து பதியவும். 

உலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும்.

எந்தந்த ராசி பெண்களுக்கு எப்படியான குணம் இருக்கும் என பார்ப்போம்.

மேஷ ராசி பெண்கள்: 

மேஷ ராசி பெண்கள்  வெளிப்படையாக இருப்பார்கள். அவர்களுக்கு எதையும் சாதிக்கும் சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள். இவர்கள் மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள். கொஞ்சம் முன்கோபிகள்.

ரிஷப ராசி பெண்கள்

இவர்களுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் இருக்கும். ஆனால் உங்களுடன் மனம் திறந்து பேச ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியும். இனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும், புரிந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் ஒரு தலைமை குணம் அடிக்கடி வெளிப்படும். அன்பு மனம் கொண்டவர்கள்.

மிதுன ராசி பெண்கள்

மிதுன ராசி பெண்கள் உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். சில நேரங்களில் மனநிலையை பொருத்து ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். தக்க சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள். பாசமானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு   உதவி செய்யத் தயங்க மாட்டார்கள்.

கடக ராசி பெண்கள்

கடக ராசி பெண்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். இவர்கள் மீது யார் மிகவும் பாசமாக இருந்தாலும் அவர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள். அன்புக்கு மட்டும் அடிபணிவார்கள். இவர்கள் மிகவும் கவர்ச்சியானவர்கள், அதே சமயம் அமைதியானவர்கள், வெட்கப்படுபவர்கள். யாரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.

சிம்ம ராசி பெண்கள்

சிம்ம ராசி பெண்களுக்கு இயற்கையாகவே தான்தான் அறிவாளி என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ரொம்ம நல்லவர்கள். உங்களுக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் இவர்களது தோளில் சாய்ந்து அழலாம் என்ற அளவுக்கு இவர்களுடன் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். யாரிடமும் மனம் விட்டு பேச மாட்டார்கள்.ரொம்ப மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கன்னி ராசி பெண்கள்

கன்னி ராசி பெண்கள் பெருந்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தவர்களின் கருத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை சற்று அதிகமாக இருக்கும்.  அவர்களை மற்றவர்கள் பெருமையாக உணர வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், அவர்கள் உண்மையாகவே பெருமைக்குரியவர்களாகத்தான் இருப்பார்கள்.

துலாம் ராசி பெண்கள்

துலாம் ராசி பெண்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சரிசமமாக பழகுவார்கள், அவர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்கள் கலை உணர்வும், அழகுணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உண்மையான அன்பை கொண்டவர்கள்.

விருச்சிக ராசி பெண்கள்

விருச்சிக ராசி பெண்கள் பெருமைக்குரியவர்கள். தங்களது வாழ்க்கைத்துணையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள். ஒருவரை இவர்கள் நட்பாக ஏற்றுக்கொண்டு விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் நட்பு உங்களுக்கு கிடைத்துவிட்டால் உங்களுக்கு எந்த இன்னல்களிலும் தோள் கொடுப்பார்கள்.

தனுசு ராசி பெண்கள்

தனுசு ராசி பெண்கள் நாணயமும் நீதியும் கொண்டவர்கள். இவர்கள் சற்று எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள்.  தனக்கு என்ன தேவை என்பதை, தானே முடிவு செய்துவிடுவார்கள். இவர்களுக்கு திறமைகள் அதிகமாக இருக்கும். எதையும் சாதிக்கும் மன தைரியம் கொண்டவர்கள். இவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள். படபடப்பாக இருப்பார்கள். உண்மையை மட்டும் விரும்பக்கூடியவர்கள்.

மகர ராசி பெண்கள்

மகர ராசி பெண்கள் உள்ளத்தில் எப்போதும் அன்பு குடி கொண்டிருக்கும், இவர்கள் அனைவருடனும் நட்புடன் பழகுவார்கள், பிரபலமானவர்களாகவும் இருப்பார்கள். தன்னை யாருக்கு பிடிக்கிறதோ அவர்களை இவர்களுக்கும் பிடிக்கும். இவர்கள் நீண்ட நாள் உறவில் நிலைத்திருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யத் தயங்காதவர்கள்.

கும்ப ராசி பெண்கள்

கும்ப ராசி பெண்கள் சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கக்கூடிய இடத்தில் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்காக கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.  மேலும் எளிமையாக இருப்பார்கள் ஆனால் தன்மானமும், சுய கௌரவத்துடன் இருப்பார்கள். இவர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். இவர்களது மனம் புண்படும்படி நடந்து கொண்டால் பின்னர் இவரது இதயத்தை மீண்டும் வெல்வது மிகக் கடினம்.

மீன ராசி பெண்கள்

மீன ராசி பெண்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடன் நீங்கள் மரியாதையாகவும், நன்றாகவும் நடந்து கொண்டால் அவர்களும் உங்களுடன் அவ்வாறே நடந்துகொள்வார்கள். நீங்கள் அவர்களைத் தவறான நோக்கத்துடன் நெருங்கினால், அதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.  நல்ல எண்ணமும் உயர்ந்த சிந்தனையும் கொண்டவர்கள். அன்பான மனம் கொண்டவர்கள். சேவை மனப்பான்மை கொண்டவர்கள். விருந்தோம்பலில் வல்லவர்கள். 

= = = = = = = = = = = = = = =

135 கருத்துகள்:

  1. நினைத்த மாத்திரத்தில் கையை நீட்ட முடியுமானால்....... யோகாவில் சூர்ய நமஸ்காரின் ஒரு போஸ்ச்சர் முதற்கொண்டு பலவற்றிர்க்கு என் கால் பாதம் வரை கைகளை நீட்டமுடியும், முழுமையாக அந்த உடற்பயிற்சியைச் செய்தோம் என்ற திருப்தி தோன்றும்.

    மற்றபடி மரத்தின் கீழே நின்றுகொண்டு, பாங்காய், பலாப்பழம், தேங்காய் போன்றவற்றைப் பறிக்கலாம் என எண்ணுவதற்கு மரங்களோ இல்லை, உட்கார்ந்த இடத்திலிருந்தே பொருட்களை எடுத்துவிடலாம் என்று எண்ணும் வயதோ இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கற்பனை! நன்று.

      நீக்கு
    2. எனக்கும் கால் பாதம் வரை கைகள் நீளும். மற்றபடி முன்னெல்லாம் எம்பி எடுப்பேன் கைக்கெட்டாத தூரத்திலிருக்கும் பொருட்களை. இப்போல்லாம் எம்ப முடிவதில்லை.

      நீக்கு
    3. எனக்கும் இதுவரை கால் பாதம் தரையில் ஊன்றும் விதம் கால்கள் நேராக ஹஸ்தபாதாசனா செய்ய முடிகிறது. போகப் போகத் தெரியுமோ!!!!

      கீதா

      நீக்கு
  2. இந்த அனைவருக்குமான ராசி பலன்கள் ஐம்பது சதவிகிதம்தான் பொருந்தும், அதிகபட்சம் அறுபது. எல்லாமே யாருக்குமே பொருந்தாது. நல்லவைகளை மாத்திரமே பட்டியலிட்டிருந்தால், எனக்குப் பொருந்துது என சும்மா சொல்லிக்கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான்!

      நீக்கு
    2. முகநூலில் நானும் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன், சந்திரமௌளீஸ்வரன் விஸ்வநாதன் ஆகியோரின் ஜோதிடப் பக்கங்களைப் படிக்கிறேன். பெண்களைப் பற்றிய பட்டுக்கோட்டையாரின் கணிப்பு அவ்வளவாப் பொருந்தவில்லை.

      நீக்கு
    3. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. கௌதமன் சார் அவர்களுக்கு என்னாயிற்று... நிறைய நாட்களில் அவரைக் காண இயலவில்லையே. இன்றைக்கு அவர் பதில் போல் தோன்றவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேதான் இருக்கேன். கே ஜி ஜி பக்கம் + புதன்
      பதிவு என் தயாரிப்புதானே!

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கையை நீட்ட முடிந்தால்...... விட்டலாச்சார்யா படம் போல.... :) சில சமயம் அப்படியான கனவுகள் வந்ததுண்டு... . பிறகு யோசித்தால் என்ன பைத்தியக்கார கனவு என்று தோன்றும்.

    பாழடைந்த பள்ளி - வேதனை. சமீபத்தில் எங்கள் நெய்வேலி வீட்டிற்கு சென்று பார்த்தபோது கிடைத்த அதே உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. எனக்கு எந்தப் படங்களும் வரலை. வந்தப்புறமாப் பார்க்கணும்.

      நீக்கு
  5. ராசி பலன்கள் - :) பெரும்பாலும் சொல்லியிருப்பவை உண்மையாக இருக்க அவசியமில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வராஹமித்திரரின் பிருஹத் ஜாதகம் சமஸ்கிருத
      புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தால்
      படித்துப் பாருங்கள். 95 % சரியாக இருக்கும். அத்தியாயம்
      16 என்று ஞாபகம்.

      நீக்கு
    2. வராஹமித்திர்ரா இல்லை வராஹமிஹிர்ரா?

      நீக்கு
    3. அவருடைய ஆதார் கார்டு பார்த்தால்தான் தெரியும்!

      நீக்கு
    4. @கேஜிஜி, சுட்டி கிடைக்குமா? அல்லது கூகுளில் தேடணுமா?

      நீக்கு
    5. பார்க்கிறேன்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. நாலடியாரான எனக்குக் கைகளை நீட்டும் மந்திர சக்தி இருந்தால் வீட்டில் எந்த உயரமான ஷெல்ஃபில் வேண்டுமானாலும் சாமான்களை வைத்துக் கொள்ளலாம். யாரையும் சார்ந்திருக்கவேண்டாமே! இப்ப பாருங்க பெரும்பாலான சாமான்கள் என் கைகள் எட்டா உயரத்தில் ஷெல்ஃப் இருப்பதால் எல்லாம் என் கைக்கு எட்டும்படியான உயரத்தை வைக்கப் போக ஒரே கச்சான்புச்சான்னு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஒட்டுச் செருப்பு
    ஒட்டிக் கொண்ட வாழ்க்கை
    எப்போது பிய்ந்து போகுமோ!

    ஒட்டுச் செருப்பு
    ஒட்டிக் கொண்ட வாழ்க்கை
    பிய்ந்து போகும் அபாயம்.

    ஒட்டுச் செருப்பு
    ஒட்டிக் கொண்ட வாழ்க்கை
    பசையாய்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிஞ்சவங்க புரிஞ்சுக்கோங்க....புரியாதவங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. முதலாவது நல்லாயிருக்கு கீதா.

      நீக்கு
    3. ஒற்றைச் நெருப்புக்கு ஒன்பது வரிகள்!

      நீக்கு
    4. ஸ்ரீராம் நன்றி ஸ்ரீராம்....முன்னோடிகள் இருக்க வழி நடத்த நாமும் முயற்சி செய்திடலாமேன்னு!!!

      ஹாஹாஹா கௌ அண்ணா!

      கீதா

      நீக்கு
  9. நெல்லையின் கேள்விகள் - 1. மனம் படுத்தும் பாடு அது. ஆழ்மனம்....

    2. புதியதாகக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எதைச் செய்தாலும் ஈடுபாடுடன் செய்வது...வாழ்க்கையை ரசிப்பது.

    4. எப்போதும் வியாதிகள் இருக்கத்தான் செய்தன. இப்போது மருத்துவ உலகம் வளர்ந்திருக்கிறது. முன்ன தெரியாத வியாதிக்கு மர்மமான வியாதி வந்து...நோய்வாய்ப்பட்டார் என்று முடிந்து விடும்

    5. எல்லாத் தொழில்களுமே உன்னதமானவை அதை நாம் உன்னதமான மனதுடன் செய்தால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னத மனத்துடன் செய்ய முடியாத தொழில் வக்கீல் மற்றும் காவல்கார்ர் - போலீஸ் தொழில்.

      நீக்கு
    2. இல்லை நெல்லை. செய்யறவங்க இருக்காங்க ஆனா எப்படி இருப்பாங்கன்றதுதான் கேள்வி!

      கீதா

      நீக்கு
  10. பழைய கட்டிடங்கள் பல கதைகள் பேசும்...

    நாம் வாழ்ந்த இடங்கள் எல்லாமே ஒரு காலத்தில் இப்படித்தன மாறுமோ!?

    படங்கள் சூப்பர் நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் வாழ்ந்த வீடு காலத்தால் மாறி கவனிப்பாரற்றுப் போகும், நாம் பொக்கிஷம் என நினைத்த புத்தகங்கள் மற்றவைகள் போல. ஆனால் நம்மைப் பற்றி அப்படி நினைத்துவிடும்படி நம் வாழ்வு அமைந்துவிடக்கூடாது.

      நீக்கு
    2. கடைசி வரியை டிட்டோ செய்கிறேன் நெல்லை.

      கீதா

      நீக்கு
  11. /நினைத்த மாத்திரத்தில் உங்களால் உங்கள் கைகளை எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நீட்டலாம் என்று சொன்னீர்கள்.  நினைத்தமாதிரி வளையுமா என்று சொல்லவில்லையே...   டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டால்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம் எதற்கு ரோட்டில் போகும்போது கையை நீட்ட ஆசைப்படுகிறார்? கொஞ்சம் தள்ளிப் போகும் யாரேனும் ஒருவரின் தோள் பற்றித் திருப்பவா?

      நீக்கு
    2. ரோடில் போனால் கை வளைய வேண்டிய அவசியம் இல்லையே நெல்லை!  வீட்டுக்குள் இருந்து கொண்டே காய்கறி வாங்க, கடைத் தெரு போக, ஹோட்டலில் சாப்பிட..  எல்லோர் கையும் அது போல நீண்டிருக்குமே...    டிராஃபிக் ஜாம்..  நமக்கும் பாதகமில்லாமல் நம் கைகள் திரும்பி வரவேண்டும்!! 

      அப்பா எவ்வளவு பெரிய நோட்ஸ் போடவேண்டி இருக்கிறது!

      நீக்கு
    3. : கையை டெல்லி வரையிலும் எல்லாம் நீட்ட முடியாது!
      வளையாது.

      நீக்கு
  12. நெல்லையில் பள்ளி படம் பார்க்கப் பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  ஏனோ எனக்கு இந்த மாதிரி பழைய இடங்களின் படங்கள், அல்லது நேரில் பார்பபது பிடித்துப் போகிறது.  மனதில் பல எண்ணங்கள் தோன்றுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஊரில் அந்தப் பள்ளியை ஒட்டி ஒரு அக்கரஹாரம் இருந்தது.என் முதல் காதல் முளைவிட்ட இடமும் அதுதான். அங்கு கருவேப்பிலை மரங்கள் பத்துக்கு மேல் தோட்டமாக இருந்தன. இப்போது அக்கிரஹாரமே இல்லை. கருவேல மரங்கள் மாத்திரமே மண்டிக்கிடக்கின்றன. பயண விவரத்தில் எழுதுகிறேன்.

      நீக்கு
    2. முதல் காதல் பற்றியும் எழுதுவீர்கள்தானே...  மனம் அந்த வரியிலேயே  தடுக்கி விழுந்து விட்டது!

      நீக்கு
    3. ஐந்தாவது ஆறாவது படித்த பையனுடைய முதல் காதலைப் பற்றி எழுத என்ன இருக்கிறது? எட்டாம் வகுப்பு காதலிலேயே எழுத விஷயம் இருக்குமா என்ன?

      நீக்கு
    4. நெல்லையின் முதல் காதல் பற்றியும் முன்னரே சொல்லி இருக்கார். :) ஒருவேளை என்னிடம் நேரிலோ அல்லது மாமாவிடம் பேசும்போதோ சொல்லி இருக்கலாமோ?

      நீக்கு
    5. ஆ... என்ன அநியாயம்.. உங்களுக்கு மட்டும் சொல்லி இருக்கார்..

      நீக்கு
    6. கருத்திலேயே எப்பவோ சொல்லியிருக்கிறார், ஸ்ரீராம்...

      நாங்க அண்ணனை அப்படி ஃபாலோ பண்ணுறோமாக்கும்!

      கீதா

      நீக்கு
    7. அப்படியா? சொல்லி இருக்கிறாரா? யார், என்ன விவரம், எப்படி என்று எனக்கும் சொல்லுங்கள் கீதா. எனக்கு ஞாபகமில்லை!!

      நீக்கு
  13. தனுஷ்கோடி ஒரு பெரும் சோகம். அதைப்பற்றி ஒரு கதை எழுத ஆவல் வருகிறது. எப்படி எழுதுவது என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதான வேலை செய்ய இயலாத பெற்றோர். மகனும் மகளும் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். மகன் மாத்திரம் மீன் பிடித்துவிட்டு வருவதும், மருமகள் அவனுக்கு உதவி வாழ்க்கையை ஓட்டுவதும் நடக்கிறது. எப்போதான் போய்த் தொலைவீங்களோ என தினமும் பிரச்சனை. அதற்குத் தீர்வு புயல் வடிவத்தில் வந்தது.

      நீக்கு
    2. எழுதுங்களேன் ப்ளீஸ்... செவ்வாய் காத்திருக்கிறது!

      நீக்கு
    3. தனுஷ்கோடி பேஸ் கதை... நான் கொஞ்சம் எழுதி வைத்திருக்கிறேன்.... ஸ்ரீராம்...ஒவ்வொரு முறை இலங்கையிலிருந்து இங்கு வரும் போது ராமேஸ்வரத்துல இறங்கி தாத்தாவும் பாட்டியும் ராமேஸ்வரம் கோவில், திருப்புல்லாணி, தனுஷ்கோடி கோதண்டசுவாமி கோவில் போகாமல் உள்ளே நுழைய மாட்டாங்க என்னையும் கூட்டிக் கொண்டுதான். பாட்டியும் தாத்தாவும் தனுஷ்கோடி கதையை சொல்லிக் கொண்டே....தனுஷ்கோடி haunting place என்று அப்போது சொல்லப்படும் ஆனால் உண்மையிலேயே அப்படித்தான் வெறிச்சுனு இருக்கும் புயலால் பாதிக்கப்பட்டு என்னவோ ஒரு வெறிச் பூமி கடல், மணல் தான் எங்குமே மற்றவை இடிபாடுகளுடன் அதுவும் வெயில்....

      இப்போது சூப்பரா பண்ணிட்டாங்க.

      எழுதியதை என்ன தலைப்பிட்டு எழுதினேன் என்று பார்க்க வேண்டும். தேட வேண்டும்.

      கீதா

      நீக்கு
    4. கோதண்ட ஸ்வாமி கோவிலை மட்டும்தான் அந்தப் புயல் விட்டு வைத்திருந்தது. மற்றவை அனைத்தையும் இழுத்துக் கொண்டு சென்றுவிட்டது.

      கீதா

      நீக்கு
  14. நல்லதாகச் சொல்லும் எந்த ஜோதிடமும் தனக்கு இருப்பதாகவே தோன்றும்.  அல்லாததை மறுக்கத்தோன்றும்.  ஊன்றி எல்லா ராசிக்கான பலன்களையும் படித்தால் ராசி பலன்களின் மர்மம் தக்கினிக்கி தெரிந்து விடும்!

    பதிலளிநீக்கு
  15. ஒருவரைப்பற்றிப் பேச்சு வந்தால் ஒரு நண்பர் உடனடியாக அவர் பாசிட்டிவ் பக்கத்தைப் பேசுகிறார்.  இன்னொரு நண்பர் குறைவாக இருந்தாலும் அவர் நெகட்டிவ் பக்கத்தைப் பற்றி மட்டுமே சட்டென நினைவுய் கூர்கிறார்.  இதை என்ன என்று சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நண்பர் ஓவராலாக என்ன தாக்கத்தை ஒவ்வொருவர் மனதிலும் உண்டாக்கியிருக்கிறார் என்பதைப் பொறுத்து நிகழும். சுயநலமே உருக்கொண்டு, ஊழல் செய்து வயிறு வளர்த்து, குடும்பத்தையும் ஊழல் தொழிலில் ஈடுபடுத்தி பெரும் பணக்கர்ரான ஒரு சுயநலவாதியை, இந்திரன் சந்திரன் அந்தாளுக்கு நீதிமன்றம் விஞ்ஞான ஊழல்வாதி என முத்திரை குத்தியிருந்தாலும், பாரதரத்னா கொடுத்துவிடுங்கள் எனக் கையேந்துவதற்கும் ஆட்கள் இருப்பது போல

      நீக்கு
    2. அந்த ஒருவர் என்பது அரசியல்வாதி அல்ல. இன்னொரு நண்பர்!

      நீக்கு
  16. எனக்குப் பிடித்த இடங்களில் தனுஷ்கோடியும் ஒன்று... எப்போதோ பார்த்தது. சமீபத்துப் படங்களைப் பார்க்கும் போது போக வேண்டும் என்ற ஆசை எழுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் ஒவ்வொரு முறை தநுஷ்கோடி போகும்போதெல்லாம் பார்த்து வேதனைப் பட்டிருக்கோம். 2014 ஆம் ஆண்டில் பையர், மருமகளுடன் போகும்போது கொஞ்சம் பரவாயில்லை ரகம். அதன் பின்னர் நெடுஞ்சாலையை மத்திய அரசு போட்டு அங்கே பற்பல நவீன மாற்றங்கள் செய்து புதுப்பிக்கப்பட்ட தநுஷ்கோடியையும் பாம்பன் பாலத்தையும் பார்க்க வாய்ப்பே வரலை. 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ராமேஸ்வரம் போக முடியலை.

      நீக்கு
  17. ப. க 1 :

    நான் கடிக்க மாட்டேனா 
    என்று கேட்கிறது 
    நாகம்போல் படமெடுத்து 
    செருப்பு!

    பதிலளிநீக்கு
  18. ப. க 2  :

    காலுக்குப் பொருந்தாத 
    செருப்பு 
    செருப்புக்குப் பொருந்தாத 
    கால் 
    விலகத் தயாராகவே 
    இருக்க்கிறது  இழை 

    (அ)  
    விலகியே நிற்கிறது 
    இணைப்பும் அணைப்பும் 

    பதிலளிநீக்கு
  19. ப. க 3 :

    பொருந்தாத உறவுகள்

    காலுக்கு

    சேராத செருப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப. க 3 :

      பொருந்தாத உறவுகள்
      காலுக்கு சேராத
      செருப்பு

      நீக்கு
    2. நல்ல கவிதைகள்!

      நீக்கு
  20. தனுஷ்கோடி ஸ்டேஷனை ஒட்டியுள்ள இந்த இருப்புப் பாதையை சில வருடங்கள் அதாவது தனுஷ்கோடியை இப்ப சுற்றுலாத்தலமாக்கும் முன், பார்த்திருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கௌ அண்ணா, இந்த ராசி பத்தி எல்லாம் கிட்ட போக மாட்டேன்!!! அவுட் ஆஃப் சிலபஸ் எப்போதுமே எனக்கு.

    அவன் தாள் பணிந்து!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ​காதறுந்த ஊசியும் வாராது கான் கடைவழிக்கே
    வார் அறுந்த செருப்பும் வாராது கான் நடை வழிக்கே
    இதையறிந்து நடப்போம் நாம் நாளும் நல்வழியினிலே
    பாதை அது வகுத்த ஈசன் மலரடி தாள் பணிந்தே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. ஆஹாஹா... அருமை JKC Sir..

      நீக்கு
    2. 'கான்' என்பது 'காண்' என்று வரவேண்டும், இல்லையா?

      நீக்கு
    3. காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
      வார் அறுந்த செருப்பும் வாராது காண் நடை வழிக்கே
      இதையறிந்து நடப்போம் நாம் நாளும் நல்வழியினிலே
      பாதை அது வகுத்த ஈசன் மலரடி தாள் பணிந்தே.

      மாற்றப்பட்டது.

      Jayakumar

      நீக்கு
    4. முதல் வரில காண், இரண்டாவது வரில கான்-காடு. சரியா இருக்கும்.

      நீக்கு
    5. ஜே கே சி சார் சூப்பர் கவிதை!

      நீக்கு
    6. //இரண்டாவது வரில கான்-காடு. சரியா இருக்கும்// அதே, அதே!

      நீக்கு
    7. பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
    8. // முதல் வரில காண், இரண்டாவது வரில கான்-காடு. சரியா இருக்கும். //

      // //இரண்டாவது வரில கான்-காடு. சரியா இருக்கும்// அதே, அதே! //

      கான் என்ற இடத்துக்கு காடு என்று பொருள் வருவது ஓகே.  ஆனால் காதறுந்த செருப்பால் எந்த வழியிலுமே நடக்க முடியாதென்பதுதான் சரி!

      நீக்கு
    9. //ஆனால் காதறுந்த செருப்பால் எந்த வழியிலுமே நடக்க முடியாதென்பதுதான் சரி!// ஸ்ரீராம்.. அந்தப் படத்தை நீங்கள் பார்க்க்வே இல்லையா? அது நல்ல செருப்பு. ஒற்றைச் செருப்பு என்பதைத் தவிர ஒரு குறையும் இல்லை. அந்தப் பக்கத்தை இந்தப் பக்கத்தில் உள்ள வெல்க்ரோவுடன் சேர்க்கணும். அவ்ளோதான். ஏதோ காதறுந்த செருப்பின் படத்தைப் பகிர்ந்த மாதிரி சொல்றீங்களே.

      நீக்கு
    10. நல்ல செருப்புதான். மேல் மாடியிலிருந்து சின்னக்
      குழந்தை விளையாட்டாக அல்லது தெரியாமல் விட்டெறிந்த
      ஒற்றைச் செருப்பு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. 2ம், 5ம் மிக ரசித்தேன்.நம் வாழ்வில் இறைவனிடம் பற்று வைத்து சரணாகதி அடையும் போது, நாம் அறிந்தறியாமல் செய்யும் பாப புண்ணியங்கள் பன்மடங்காகப் பெருகி நம்மை வந்தடைகிறது. அதனால்தான் நம்முள் எழும் பாபமான எண்ணங்களை விடுத்து புண்ணியத்தை மட்டும் என்னிடம் சமர்ப்பித்து விடு என இறைவன் சொல்லியிருப்பதை பல நூல்களில் படித்துள்ளோம். அதுபோல், நாம் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து கற்றுத் தரும் போது நாம் கற்றதும் பன்மடங்காகப் பெருகி நம்முள் வந்தடைகிறது. எனவே ஆசிரிய தொழில் சிறந்தது. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிந்தறியாமல்... சரணாகதி அடைந்துவிட்டாலே, பலனை அவனுக்குத் த்த்தம் செய்துவிட்டால், அறியாமல் செய்யும் பாவங்களுக்கு சிறு தண்டனை அவ்வப்போது கொடுக்கிறான், பிறவியை அறுக்கிறான் என்பது கான்சப்ட். பாவம் எப்படி பன்மடங்காகத் திரும்ப வரும்?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உண்மைதான்.அவனருளால் நாம் வாழ்வில் அன்றாடம் செய்யும் செயல்களில், கிருஷ்ணார்ப்பணம் என அவனிடம் சமர்பிப்பது பன்மடங்காக நம்மை வந்தடையும் என படித்துள்ளோம்.

      வரவு செலவு கணக்காக நம் பாஸ்புக் படிவத்தை (நம் வாழ்வில் செய்த தீய நல்லவைகளை) "அவன்" கணக்கு வைத்தவாறு நம்மை படைத்து நம்முடனேயே அதை சரி பார்த்தவாறு அவன் வருகிறான் என எங்கோ படித்துள்ளேன்.

      நீங்கள் ஆன்மிகம் சகலமும் கற்று தேர்ந்தவர். உங்களுக்குத் தெரியாததா? ஏதோ என் சின்ன அறிவுக்கு பட்டதை சொல்கிறேன். இதைதான் ஊழ்வினை என்போம் இல்லையா..! "தொடர்ந்து வரும் துன்பங்களில், இந்தப் பிறவியிலும் என்ன பாவம் செய்தேனோ" என புலம்ப வைப்பதும் "அவன்தானே". அதை சிலசமயம் அவன் மன்னிக்கிறான் என்பதை நம் வாழ்க்கை திருப்பங்களில் உணர்கிறோம். ஆனாலும் மனதுக்குள் அது ஆறா தழும்பாகி உறுத்துதலை தரச் செய்யும் போது இந்த புலம்பல்கள்.அதையும் அவன் மனதுக்குள் சிரித்தபடி ரசிப்பான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி. வாழ்க வளமுடன்!

      நீக்கு
    4. //நீங்கள் ஆன்மிகம் சகலமும் கற்று தேர்ந்தவர். உங்களுக்குத் தெரியாததா?// ஹாஹாஹா. ஒரு சில விஷயங்கள் படித்திருக்கிறேன். மற்றவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கீதா சாம்பசிவம் மேடம் நிறைய இந்த மாதிரி விஷயங்கள் தெரிந்தவர்.

      வைணவத்துல, பிரபத்தி என்ற சரணாகதி உண்டு. இதனை அவரவர் ஆச்சார்யரிடத்தில் செய்துகொள்வார்கள். அப்படி சரணாகதி அடைந்தால், இந்தப் பிறவியே கடைசி என்பது பொருள். சரணாகதி செய்துகொண்டபிறகு, தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு இந்தப் பிறவியிலேயே சிறு சிறு தண்டனைகளை இறைவன் கொடுத்துவிடுவான். பிறக்கும்போதே இந்தப் பிறவியில் நாம் என்ன என்ன அனுபவிக்கணும் என்று எழுதியிருக்கிறானோ அவற்றை அனுபவிப்போம்.

      இதுதான் கான்சப்ட். ஆனால் என்னைப் பொருத்தவரையில், சரணாகதி அடைந்தாலும், பிறவியை அறுக்கும் அளவுக்கு நாம் நல்லவர்களாக இருந்தால்தான் அது பலிதமாகும். வெறும்ன சரணாகதி அனுஷ்டித்தால் மாத்திரம் போதாது என்று நான் நம்புகிறேன்.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    கவிதை என் பாணியில்தான் எனக்கு எழுத வருகிறது. இங்குள்ள சிறந்த கவிஞர்களிடம் நான் எப்போதும் தோற்றுத்தான் போவேன். இருப்பினும், வழக்கம் போல ஒரு சிறு முயற்சி. என் முயற்சி என்பதை இப்படியும் (தேவையற்ற ஆசையின் அறைகூவல். ) வைத்துக் கொள்ளலாம்.

    நாங்கள் இருவரும்
    ஜோடியாக இருக்கும்
    அழகை ரசித்து
    ஆசையுடன் எங்களை
    அரவணைத்து சென்றாலும்,
    எக்குத்தப்பான "பிரிவினைகள்"
    என்ற ஒன்று எங்களுக்குள்
    பிறந்து விட்டவுடன் எங்களை
    கழற்றி விடுவது உங்களுக்கு
    கசப்பான ஒரு செயலல்ல. ,.!
    அதனால்தான் (உ)பாதையுடன்
    அரற்றியபடி இருக்குமென்னை
    பாதையோரம் வீசியெறிய உங்கள்
    பாழும் மனமும் இடம் தருகிறது
    பாரினில் ஒன்றில்லையேல்
    மற்றொன்றுக்கு எந்நாளும்
    மதிப்பு மரியாதை கம்மிதான்.
    என்பதை நாங்கள் உணர்வோம் .
    ஜாடிக்கேற்ற மூடி இல்லாதது போல
    ஜோடியில்லா என் நிலையும்
    சோதனைகள் நிறைந்ததுதான்
    என்பதை நீங்களும்
    என்றாவது உணர்வீர்களா. .?

    இப்படி கவிதை (மனதின் எண்ணங்கள்) எழுத வைப்பதற்கு மிக்க நன்றி.அதனால்தான் என் அறுவை எண்ணங்களையும் பகிர்ந்து விட்டேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் எஸ் உணர்ந்து விடுகிறோம்...!

      சுருக்கமாக ஒன்று  :

      விட்டுப் பிரிந்தது 
      துணை 
      ஒற்றைச் செருப்பு.

      நீக்கு
    2. ஆஹா. சுருக்கெழுத்து. ரசித்தேன். இந்தக்கலை படித்ததிலை

      நீக்கு
    3. கவிதைகள் அற்புதம்!

      நீக்கு
  25. பந்தைத் தேடி வந்து
    பாதை விலகிச் சென்ற
    பாப்பா
    என்னைத் தேடி
    எப்போ வருவாளோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தை வினைகள் முற்றிலும் நீங்கியபின் 
      பந்தை அவள் தேடியும்  எடுத்தபின் 
      கட்டாயம் வருவாள் ஒருநாள் 
      காத்திரு நீ அதுவரை!

      நீக்கு
  26. தனுஷ்கோடியும் நமது அங்கம் தானே
    64 க்குப் பிறகு ஏன் மீண்டும்
    புதுப்பிக்கப்படவில்லை?...

    சோகமா வெறுப்பா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி, நீங்க அப்போ குவெய்த்தில் இருந்திருப்பீங்க! தநுஷ்கோடி புதுப்பிக்கப்பட்டு முன்னிருந்த சாலைகளெல்லாம் இப்போ இல்லை. நல்ல தரமான சாலை போடப்பட்டுச் சுற்றுலாத் தலமாக ஆக்கப் பட்டது. பிரதமர் வந்து சாலையைத் திறந்து வைத்ததாக நினைவு. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எனவும் நினைவு.

      நீக்கு
    2. நன்றி..
      அக்கா அவர்களது தகவலுக்கு நன்றி...

      நீக்கு
  27. எது நம்மை கடைசி வரை
    உயிர்ப்புடன் வைத்திருக்கும்?

    அன்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சிளம் குழந்தையின் முகமும் அதன் கைகால்களின் மிருதுத் தன்மையும் அதன் பொக்கைவாய்ச் சிரிப்பும் என்றென்றும் நம்மை உயிர்ப்புடன் வைச்சிருக்கும்.

      நீக்கு
    2. நல்ல பதில்கள்

      நீக்கு
  28. நெல்லையின் தனுஷ்கோடி படங்கள் எப்போ எடுக்கப்பட்டவை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கீசா மேடம். என் அண்ணனுடன் பல இடங்களுக்கு பத்துநாட்கள் பயணமாகச் சென்றிருந்தோம்.

      நீக்கு
  29. என் கைகள் மட்டுமின்றிக் கால்களும் நினைத்த மாத்திரம் நீளுமெனில் ஸ்ரீரங்கம் போயிடுவேன். இப்போதைக்கு இங்கே சர்க்கரை டப்பாவைத் தினமும் எட்டி எடுக்க முடியாமல் இடுக்கியால் அதை முன்னே தள்ளித் தள்ளி எடுக்கிறேன். அப்போத் தோணும் திடீர்னு கைகள் நீளாதானு! இங்கே அதுவே கேள்வியாக வந்திருக்கு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நினைத்த மாத்திரம் நீளுமெனில் ஸ்ரீரங்கம் போயிடுவேன். // அப்போவாவது அங்கிருக்கும் நல்ல புத்தகங்களில் ஒன்றை எடுத்து திரும்ப கையை பெங்களூர் வரை நீளமாக்கி என் வீட்டில் போட்டுவிடுவார்களா?

      நீக்கு
    2. ஏன், சென்னை என்ன இளிச்சவாயா?

      நீக்கு
    3. புத்தகங்கள் நிறைய இருக்குன்னாலும் பலவும் பைன்டிங் செய்யப்படாமல் அப்படியே லூசாகக் கட்டி வைச்சிருக்கேன். சில சித்தப்பா கொடுத்தவை. ஜெயமோகன் புத்தகங்கள் நிறையக் கொடுத்திருந்தார். மேற்கு மாம்பலத்தில் ஓர் லென்டிங் லைப்ரரிக்கு தானம் செய்துட்டேன். புதிய புத்தகங்களில் சில பரிசாக வந்தவை. ஸ்ரீராம் கொடுத்த பழைய புத்தகங்களும் உள்ளன. பரிசாகக் கிடைத்தவையில் கௌதமன் அவர்கள் அனுப்பிய 2 புத்தகம் ஸ்ரீராமின் அண்ணா மதுரையில் இருந்து அனுப்பி வைச்ச புத்தகம், ஸ்ரீராமின் அப்பா எழுதியது, ஜிஎம்பி, ரிஷபன், வைகோ, கடுகு சார், முகநூல் சிநேகிதிகள் அனுப்பி வைச்சது. கோமதி அரசு கொடுத்ததுனு இருக்கும். யோகி பாபா அவர்களின் சுயசரிதை ஆங்கிலத்தில் இருக்கு. சம்பந்தி மாமா கொடுத்தார். நிறையப் புத்தகங்கள் தொலைந்தும் திரும்ப வராமலும் போய் விட்டன.

      நீக்கு
  30. வித்தகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கவிதை மழை பொழிந்திருக்கின்றனர். நெல்லையின் படங்களெல்லாம் இப்போத் தான் திறந்தன. அனைத்தும் முன்னரே பார்த்த நினைவு. முக்கியமாய் அவருடைய பழைய பள்ளி. மற்றபடி கேள்வி/பதிலில் சுவாரசியம் குறைவாய் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. //அனைத்தும் முன்னரே பார்த்த நினைவு. // வாய்ப்பே இல்லை. நானே ஐம்பது வருடங்களுக்குப் பிறகு நவம்பரில் சென்றேன்.

      நீக்கு
    3. இது போன்ற படங்களாக இருக்கலாம் நெல்லை. ஆனால் நீங்க தான் அனுப்பினமாதிரி நினைவு.

      நீக்கு
  31. தற்கொலை என்பது கோழைத்தனம் என்றாலும் பலருக்கும் சில நிமிஷங்களாவது அந்த எண்ணம் வராமல் இருக்காது.

    ஆசிரியத் தொழில் உன்னதமானது. என் அப்பாவும் ஒரு பள்ளி ஆசிரியர் தான். அதனால்னு மட்டும் இல்லை. நான் முதல் முதல் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டப்போ, "நான் ஒரு ஆசிரியராக இருந்தால்" என்னும் தலைப்பில் பேசி முதல் பரிசு வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
  32. கணினி, மொபைலைப்பார்ப்பதால் கண் பார்வையில் கோளாறுகள் ஏற்படும். கண்களை மூடினால் உள்ளுக்குள் வெளிச்சம் வெகுநேரம் மறைவதில்லை. இருபக்கங்களிலும் வெளிச்சம் தோன்றித் தோன்றி மறைகிறது. கூடியவரை நான்கு மணி நேரம் தான் உட்காருகிறேன். அதுவும் இரவில் வெகு சீக்கிரம் கண்களை மூடிக் கொண்டு படுத்துடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படுக்கும் அறையில் வெளிச்சம் அதிகம் இல்லாமல்
      பார்த்துக் கொள்ளவும்.

      நீக்கு
  33. மிகப் பழமையான காலத்திலேயே சர்க்கரை நோய் "மது மேகம்" என்னும் பெயரில் இருந்ததாகச் சில சித்த வைத்திய நூல்கள் சொல்கின்றன. அதே போல் மாரடைப்பு எனப்படும் இதயத்தைத் தாக்கும் நோயும் இருந்திருக்கு. கை,கால்கள் உடைந்தால், எலும்பு முறிந்தால் சிம்புகள் வைத்து மூலிகை மருந்துகளைச் சூடாக எலும்பு முறிவில் வைத்துக் கட்டி விட்டதாகவும் தெரிய வருது. இன்னும் சிலர் கணவன் இறக்கும் தருவாயில் இருந்தால் மனைவியின் கைகளையும் கணவன் கைகளையும் ஒன்று சேர்த்துக் கட்டி மனைவியின் நாடித்துடிப்பு கணவனுக்கு அவன் ஆழ்மனதுக்குப் போய்ச் சேரும்படி கட்டுவார்கள் எனவும் அதன் மூலம் இறப்பின் எல்லைக்குச் சென்ற பலர் மீண்டு வந்ததாகவும் தெரிய வருகிறது. இப்போக் கூட கோமாவில் இருப்பவரின் மிக நெருங்கிய சொந்தத்தை விட்டு அவருடன் பேச வைப்பார்கள். பழைய சித்த வைத்திய நூல்களில் இம்மாதிரிப் பல விஷயங்கள் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. பழைய வைத்திய நூல் ஒண்ணும், சமையல் புத்தகம் ஒண்ணும் தற்செயலாய்க் கிடைச்சது. அதில் உள்ள தகவல்கள் தான் இது. புத்தகம் வேறே ஒரு கணினியில் இருக்கு. இதற்கு முந்தைய மடிக்கணினி. பல அரிய புத்தகங்கள் அதில் சேமிப்பில் உள்ளன. பையர் அவற்றை எல்லாம் பென் டிரைவில் எடுத்துக் கொண்டு கணினியைச் சுத்தம் செய்து விற்றுவிடு என்கிறார். இன்னும் மனசோ, நேரமோ வாய்க்கவில்லை. ஒரு சில சமையல் குறிப்புகள் என்னோட வலைப்பக்கம் பகிர்ந்திருக்கேன். இப்போ பிரியாணி என்னும் சமையல் முறை அந்தக் காலத்திலேயே இருந்திருக்கு.

      நீக்கு
    3. தகவல்களுக்கு மீண்டும் நன்றி.

      நீக்கு
  34. தனுஷ்கோடி சீரமைப்பு
    மத்திய அரசின் கட்டுப்பாட்டில்!...

    தமிழக ஆட்சி அமைப்புகள்?!?

    பதிலளிநீக்கு
  35. "அவர்கள் நமக்கு வேண்டப்பட்டவர்கள்தாம். ஆனாலும் அவ(னை) (ளை) ர்களையெல்லாம் உள்ளே விடாதே..!"கொஞ்சம் கைநீளம்." ஜாக்கிரதையாகவே இரு..! என நம் உறவுகளை சிலர் மறைமுகமாக கேலி செய்வார்கள்.(அவர்களுக்கு அனுபவமோ , இல்லை உள்ளூர பகையோ.) இப்போது இந்தக்" "கை நீளம்" என்பது அனைவருக்குமே அவரவர் ஆசைப்படி வந்து விட்டால், அந்த கேலி பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விடுமில்லையா..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சொன்னால் நமக்கு வாய் நீளம் என்று சொல்லி விடுவார்களே..!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. அப்படிப்பட்ட கேலிகள் ஏதும் பேசாதிருந்தால் கூடவா? ஆனால் வேறு மாதிரி சொல்வார்கள். , "ஊமை ஊரைக் கெடுக்குமென்ற" கேலி வரும்.

      நீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    படமும் பதமும் பானங்கள் நன்றாக உள்ளது. சகோதரர் நெல்லைத் தமிழரின் மலரும் நினைவுகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. அவர் வாழ்ந்த, படித்த, முறையே ஊர்களுக்கு, பள்ளிகளுக்கு நம்மையும் அழைத்துச் செல்பவை. இந்த தடவையும் படங்கள் அருமை. தனுஷ்கோடிக்கு இதுவரை சென்றதில்லை.

    உங்கள் பக்கமும் அருமை. ராசிகளின் பல தகவல்கள் அது நம் மனதிற்கும், செய்கைகளுக்கும் ஒத்துப் போனால், மகிழ்ச்சி தருபவையாக இருக்கும். மாறுபட்டு இருந்தால், குணங்களும் மாறி விடும். மற்றபடி என் ராசிக்குப் போட்டது எனக்கு ஒத்து வருகிற மாதிரி இருப்பதால் ஒரளவு மகிழ்ச்சிதான் வருகிறது. இதையே பல இடங்களிலும், நான் வாசித்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  37. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  38. கேள்விகளும்,பதில்களும் நன்றாக இருக்கிறது.

    கைகளைநம் வசதிக்கு ஏற்ப நீட்டமாக நீட்ட முடிந்தால் பல வித நன்மை இருக்கிறதுதான், தேவையான அந்த நேரம் மட்டும் நீள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  39. குட்டி குழந்தை விட்டுப்போன கால் செருப்பு எத்தனை கவிதைகளை மலர செய்து இருக்கிறது அத்தனையும் படித்தேன் அருமை.

    பதிலளிநீக்கு
  40. படமும் பதமும் படங்கள் பகிர்வு மனதை கனக்க வைத்து விட்டது. 1972 ல் இயங்கிய பள்ளி இப்போது பல நூற்றாண்டுகள் ஆனது போல பாழ் அடைந்து கிடப்பது பார்க்க வருத்தமாக இருக்கிறது.

    கெளதமன் சார் பக்கம் அவர் பகிர்ந்து இருந்த முகநூல் ராசிபலன் குறிப்புகளை வைத்து அந்த அந்த ராசிக்காரர்களின் குணநலங்களோடு ஒப்பிட்டு பார்த்தேன் . எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்லமுடியவில்லை . சில கொஞ்சம் பக்கம் வருகிறது.
    ஜோதிடர்களே சொல்வார்கள் இது பொதுவான பலன், அப்புறம் விரிவாக நேரில் வந்து பார்த்தால் நன்கு விவரமாக சொல்வோம் என்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!