14.10.26

ஒரு கட்சி யாரை நம்பி இருக்கிறது? தலைவர்? தொண்டர்கள் ? + சரோஜாதேவி தொடர்கதை பகுதி 20

 

கேள்வி பதில்கள். 

நெல்லைத்தமிழன் : 

1 ஒரு கட்சி யாரை நம்பி இருக்கிறது? தலைவனை மாத்திரமா இல்லை தலைவர்களையா இல்லை தொண்டர்களையா?  

# நம் நாட்டில் கட்சிகள் தலைவர்களைத்தான் நம்பியிருக்கிறது. காங். வலுவிழந்து போன காரணம் மக்களைக் கவர்ந்திருக்கும் முகம் இல்லாமல் போனது.  தொண்டர்களும் தேவைதான், அவர்களைக் கவர்ந்து வைக்கிற சக்திதான் தலைவரது முதலீடு. ஆரம்ப முதலே அடுத்த முகத்தை ஜாக்கிரதையாக அதிக இடம் தராமல் காத்து வருவது தலைவரின் தனி சாமர்த்தியம்.

2.ஜனநாயக வழிமுறை நல்லதா இல்லை சைனா போன்று சர்வாதிகாரமாக இருப்பது சரியா? எது ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லது? 

 # இன்றைய நிலவரப்படி பார்த்தால் யோக்கியமான தேசபக்தி மிகுந்த சர்வாதிகாரிதான் சிறந்த தீர்வு என்று தான் தோன்றுகிறது. தேர்தல் என்பது கோடான கோடிகளை அநியாயமாக செலவு செய்வது என்று ஆனது ஜனநாயகம் மதிப்பிழந்துதான் போயிருக்கிறது.

3.படித்தவர்கள், படிக்காதவர்கள், தொலை நோக்குப் பார்வை உள்ளவர்கள், ஒன்றும் அறியாத மூடர்கள், விலை போனவர்கள், உலா மகாச் சோம்பெறிகள் என்று ஒவ்வொரு வகை மனிதனுக்கும் சம மதிப்புள்ள வாக்கு இருப்பது நாட்டுக்கு நல்லதா? 

# ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது ஜனநாயகத்தின் மிகவும் அடிப்படையான சித்தாந்தம். இதில் நிலம் இருப்பவருக்கு மட்டும் ஓட்டு, சொத்து இருப்பவருக்கு ஒட்டு, வருமான வரி கட்டுபவருக்கு ஒட்டு என்பது போன்ற நிபந்தனைகள் பெரிய பலன் எதையும் தராது. இந்த மாதிரித் தகுதி இருப்பவரிடம் அகங்காரமும் சேர்ந்து கொண்டால், விளைவு விபரீதமாகக் கூடப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

4.நம் நாட்டில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் அரசியல்வாதிக்கும் அதிகாரம் உள்ளவனுக்கும் சம அளவில் நீதி கிடைக்கிறதா? இல்லை என்றால் என்ன மாற்றங்கள் தேவை? 

# நிச்சயம் எல்லாருக்கும் சம நீதி கிடைப்பதில்லை. இதை சரி செய்யும் வாய்ப்புக் கூட ஜனநாயக நாட்டில் மிகச் சொற்பம்.

5. இப்போதைய கர்நாடிக் பாடகர்களை (இருபாலாரும்) விரும்பிக் கேட்கிறீர்களா? இல்லை பழைய பாடகர்களின் பாடல்தான் உங்கள் விருப்பமா?

# பழைய பாடகர்கள் புதிதாக வந்தவர்கள் எல்லாருடைய இசையையும் ரசித்து தான் கேட்கிறேன்.  உண்மையில் இப்பொழுது பல இளம் சங்கீத வித்வான்கள் மிக நன்றாகவே பாடுகிறார்கள். முன்பு போல் அல்லாமல் இப்பொழுது நூற்றுக்கணக்கான நல்ல பாடகர்கள் உருவாகி இருப்பது இசை உலகில் ஒரு சந்தோஷத்திற்கு உரிய விஷயம்.

பானுமதி வெங்கடேஸ்வரன் :

நமது புராணங்களிலும், இலக்கியங்களிலும் ஆண்களுக்கு இடையே நிலவிய நட்பு சிலாகிக்க படுவது போல பெண்களுக்கு இடையேயான நட்பு சிலாகிக்க படாததற்கான காரணம் என்ன?

# நாம் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், வெகு காலத்துக்கு பெண்களின் வாய், கை கால்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தோம். பெண் என்றால் தன் வாழ்நாள் முழுவதும் யாரோ ஒருவரின் பாதுகாப்பில் சமர்த்தாக அழகாக உதவியாக சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்ற மனோபாவம் நிலவி வந்தது. இன்றும் கூட பரந்த அளவில் நிலவிவருகிறது.

 " பெண்கள் சிரித்தால் போச்சு" , அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ",  "கணவனே கண்கண்ட தெய்வம் - கல்லானாலும் கணவன் " என்றெல்லாம் சொல்லி வளர்த்தோம். புலவர்கள்  மற்றும் கலைஞர்கள் இவர்களிடையே கூட,  பெண்கள் மைனாரிட்டிதானே ? 

இன்றும் கூட இரண்டு ஆண்கள் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருப்பது போல அல்லது இரண்டு சினேகிதர்களாக நெருக்கமாக இருப்பதைப் போல பெண்கள் இருக்க மாட்டார்கள்,  பொறாமை அவர்களது பிறவிக் குணம் என்பது போன்ற கருத்துக்கள் அடியோடு அழிந்துவிடவில்லை. 

பாட்டுடைத் தலைவனுக்கு இருந்த மரியாதை பாட்டுடைத் தலைவிகளுக்கு இருந்ததில்லை. விதிவிலக்காக மணிமேகலையையும் கண்ணகியையும் கொண்டாடி சமாளிக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் இரண்டு பெண்களுக்கிடையே சிறந்த நட்பு இருந்ததாக இலக்கியம் எதுவும் இல்லை என்பது எனக்கு வியப்பாக இல்லை.

(ஆட்டோ டைப் செய்யும் போது கூட "  பெண்களிடையே " என்று சொன்னால் , " பெண்களை அடைய " என்று வருகிறது !)

நீங்கள் ரசிக்கும் stand up comedian யார்?

# எனக்கு இரண்டு பேரை மட்டுமே தெரியும். அதில் ஒருவர் சற்று விரசமாக அதிகம் பேசுகிறார். அலெக்சாண்டர் பாபு தான் என்னுடைய அபிமானத்தைப் பெற்றவர்.

#  stand up comedian ? எனக்கு sit down காமெடியன் கூட யாரையும் தெரியாது! கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஸ்டாண்ட் அப் காமெடியன் ராகுல் என்று தோன்றுகிறது. 

= = = = = = =

படமும் பதமும் : 

சென்ற வாரப் பதிவில் பா வெ மேடம் அனுப்பியிருந்த படத்தைப் பார்த்த உடனேயே நெ த அதே கூண்டை (!) அவர் எடுத்திருந்த படத்தை அனுப்பி, இவைகளையும் சென்ற புதன் பதிவில் சேர்க்கச் சொன்னார். அது மதிய நேரம் ஆகிவிட்டபடியால் நான் - ' காலையிலிருந்து அதுவரை blog விசிட் செய்தவர்கள் மறு விசிட் செய்வது சந்தேகம்; அதனால் இந்த வாரம் - இன்று வெளியிடுகிறேன் என்று அவருக்கு செய்தி அனுப்பினேன். இதோ அந்தப் படங்கள் : 

நெல்லைத்தமிழன் : ( ஓ கே தானே தலைவரே?) 






= = = = = = = = =

இது நம் பழம்பெரும் பதிவர் கீதா ரங்கன் ஊருக்குச் சென்றிருந்தபோது நான் எடுத்த படம். இந்த மாதிரி அழகிய குளம், வயல்கள், அமைதியான கிராமம், புது காய்கறிகள் கீரை வகைகள்... இவைகளை விட்டுவிட்டு நாம் ஏன் நகரத்தை நோக்கி நகர்கிறோம்? நகர் நமக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் தந்தால் நாம் ஏன் இந்த மாதிரி கிராமத்தை நோக்கிச் செல்கிறோம்?


காலையில் கோயில் குளத்தில் குளித்துவிட்டு, கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, வீட்டுக்கு வந்து நிம்மதியாக உண்டு, உறங்கி... என அமைதியான வாழ்க்கை வாழாமல் ஏன் பரபரப்பான நகரத்தில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறோம்?  நாம் நமக்காக நம் வாழ்க்கையை வாழ்வதில்லையோ?

***********************************

ஸ்ரீராம் :

"ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்"



= = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 19: " விமலாவை அழைப்போம்" 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 20 : " சேலம் சுந்தர்" 

மறுநாள் காலை. 

பாபா தன்னுடைய மொபைல் போனில் முதன் முறையாக விமலாவுக்கு ஒரு செய்தி அனுப்பினான். 

" வீணா கல்யாண விஷயமாக ஒரு சிறு ஆலோசனை தேவைப்படுகிறது. இன்று எப்பொழுது நேரம் கிடைக்குமோ அப்போது எங்கள் பனானா எண்டர்பிரைஸஸ் ஆபீசுக்கு வர இயலுமா? " 

பத்து நிமிடங்கள் கழித்து விமலாவிடமிருந்து பதில் வந்தது. 

" இன்றைக்கு அப்பா, வீணா இருவரும் ஆபீஸ் செல்கிறார்கள். நான் வொர்க் ஃப்ரம் ஹோம். இன்று மாலையில் ஒரு ஆபீஸ் கால் இருக்கு. அது முடிந்தவுடன், வருகிறேன். புறப்படுவதற்கு முன்பு செய்தி அனுப்புகிறேன்" 

நாநாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு, பாபா ஆவலோடு காத்திருந்தான். 

2,55 க்கு விமலாவிடமிருந்து ஒரு செய்தி. 

" ஆபீஸ் கால் கேன்ஸல் ஆகிவிட்டது. மூன்றே கால் மணிக்குப் புறப்படுவோம்." 
பாபா உடனடியாக நாநாவுக்கு ஃபோன் செய்து, " விமலாவை அழைத்துக்கொண்டு இப்போதே வருகிறேன். விவரம் எதுவும் அவளுக்குச் சொல்லவில்லை. அவள் அங்கே வந்தபிறகு நாம் பக்குவமாக எடுத்துச் சொல்வோம். " 

" சரி" என்றான் நாநா. 

= = = = = = = = = =

காரில் சென்றுகொண்டு இருக்கும்போது விமலா கேட்டாள்: " நீங்க எப்போ ஜெர்மன் கத்துக்க ஆரம்பிச்சீங்க? " 

" சமீப காலமாகத்தான். " 

" எதுக்கு கத்துக்கிறீங்க ?" 

சிறிது தயக்கத்திற்குப் பின் பாபா சொன்னான் : " உங்களை impress பண்ணத்தான்" 

" நெனச்சேன். சரி - இம்ப்ரஸ் பண்ணிட்டீங்களா? "

" அதை நீங்கதான் சொல்லணும் " 

" judgement reserved " 

" waiting for a favorable judgement my lord" 

" யாரு கிட்ட ஜெர்மன் கத்துக்கிறீங்க" 

" பாவனா கிட்ட " 

" அது யாரு ?" 

" அது ஒரு வாயாடி. நாநாவோட பி ஏ " 

" ரொம்ப அழகா இருப்பாளா? என்ன வயசு?" 

" இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களே பார்ப்பீங்க. பார்த்து, கேட்டுத் தெரிஞ்சிக்குங்க!" 

= = = = = = = = = = = = =

BE வந்து சேர்ந்த விமலாவையும் பாபாவையும் " வாங்கோ, வாங்கோ, உங்கள் வரவு நல்வரவாகுக " என்று வரவேற்றான் நாநா. 

" வாவ் ! வெரி ப்யூடிஃபுல் லேடி. பாபா ஏன் இப்படி விமலா பெயரைக் கேட்கும்போதெல்லாம் மெய்மறந்தான் என்று இப்போதான் தெரியுது" என்றது பாவனா. 

சுற்றுமுற்றும் பார்த்த விமலா, " யார் அது?" என்று கேட்டாள். 

" அதோ கம்ப்யூட்டர்ல ஒரு வாயாடி இருக்குது பாரு - அதுதான் பாவனா. அதுதான் வரவேற்கிறது" என்றான் பாபா. 

" பாவனா உனக்கு என்ன வயசு சொல்லு?"

" நாநா எனக்கு பாவனான்னு பேர் வெச்சி கிட்டத்தட்ட இருபது மாசம் ஆகுது. அதன்படி பயத்தால் எனக்கு ஒண்ணே முக்கால் வயசு ஆகுது!" 

பிறகு பாவனா தன் கதையை சுருக்கமாக விமலாவுக்கு சொன்னது. 

பாபா : " விமலா மேடம்! உங்களை இங்கே வரச்சொன்னதில் ஒரு முக்கியமான விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் கேட்பதற்குத்தான். முதலில் இந்த போட்டோவைப் பாருங்கள். பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்" 


விமலா : " இது fake ஃபோட்டோ " 

பாபா : " எப்படி பார்த்த உடனேயே அப்படி சொல்கிறீர்கள் ?" 

விமலா : " வீணாவிடம் இந்த கலர் புடவையே கிடையாது. வீணாவுக்கு சிவப்பு கலர் அறவே பிடிக்காது. " 

நாநா : " அப்போ நாம நினைத்தது சரிதான். யாரோ fake வீடியோ அனுப்பி ஆனந்த் கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். " 

பாபா : " விமலா - இப்போ நாங்க காட்ட இருக்கின்ற வீடியோவை கவனமாகப் பாருங்கள். யாரோ இந்த வீடியோவை ஆனந்துக்கு அனுப்பியிருக்காங்க. ஆனந்த் இதை எங்களுக்கு அனுப்பி இதைப் பற்றிய உண்மை கண்டுபிடித்து சொல்லச் சொல்லியிருக்கிறான். "

நாநா : " ஆனந்துக்கு இது fake வீடியோ என்ற தகவலை இப்போ அனுப்பிவிட்டேன். முழு விவரம் இரண்டு நாட்களுக்குள் அனுப்புவதாக செய்தி அனுப்பிவிட்டேன்." 

விமலா வீடியோவை நான்கு முறை திரும்பத் திரும்பப் பார்த்தாள். 

விமலா : " வீடியோவில் உள்ள குரல் வீணாவினுடையதுதான். ஆனால் சில இடங்களில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. வீடியோவில் இருக்கும் மாப்பிள்ளை யார் என்று தெரியவில்லை. அந்த ஆளை நான் பார்த்தது இல்லை. ஆனால் அவருடைய குரல், என்னுடைய சேலத்து மாமாவின் பையன் சுந்தர் குரல் போல இருக்கிறது " 

நாநா : " ஓ கே. கேஸ் கிளியர். விமலா நீங்க வீட்டுக்குத் திரும்பப் போய் உங்க சேலத்து மாமாவின் விலாசத்தை எங்களுக்கு அனுப்புங்க. கல்யாண ஏற்பாடுகளை தொடருங்கள். இந்த வீடியோ பத்தி யாரிடமும் - ஆமாம் உங்க அக்கா & அப்பா உட்பட யாரிடமும் ஒன்றும் சொல்லாதீர்கள். பாபா நீ விமலாவை அவங்க வீட்டுல டிராப் செய்துவிட்டு, சேலம் மாமா அட்ரஸ் வாங்கிக்கொண்டு வா. நாம ரெண்டு பேரும் உடனடியாக சேலத்துக்குப் போவோம். சேலம் மாமாவையும், அந்த சுந்தரையும் ஜெயிலுக்கு அனுப்ப ஒரு பிளான் தயார்." 

(தொடரும்) 

= = = = = = = = =

மனசாட்சியம் - 14
K G Y Raman
பேரின்பப் பெருவெளி ! 

" இவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறீர்களே " என்கிற ஆற்றாமை மனநிலை  வள்ளலார், பட்டினத்தார் போன்ற ஆன்றோர்களுக்கு மட்டுமல்ல,  சில அரசியல் கட்சிகளுக்கும், நம்மிடையே இருக்கிற  பல உபதேசிகளுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.‌ 

முக்கியமாக அரசியல் கட்சிகள். " மெய்யும் பொய்யும் கலந்து வித விதமாகப் பேசிப் பார்த்தாயிற்று. எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டு அதற்கு விலையாக பணத்தையும் கொடுத்தாகிவிட்டது. இதற்குப் பின்னும் வெற்றியைக் காணவில்லையே " என்கிற அவர்களது  ஏமாற்ற உணர்ச்சி நாம் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியது. 

ஆனால் பட்டினத்தார் வள்ளலார் போன்றவர்கள் நிலை அதுவல்ல. பேரின்பத்தை அனுபவித்தவர்கள்,  அது எவ்வளவு எளிதாகக் கிடைக்கிறது என்பதை உணர்ந்து,  இது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துடன் எவ்வளவோ பாடுபட்டு எப்படியெல்லாமோ சொன்னாலும் மக்கள் அதை செவி கொடுத்துக்  கேட்கவில்லை. அல்லது கேட்டவர்களுக்குப் புரியவில்லை.

" நூறு வலுவான இளைஞர்கள் கிடைத்தால் இந்த உலகையே மாற்றிக் காட்டுவேன் " என்று விவேகானந்தர் சொன்னதாகச் சொல்வார்கள்.  விவேகானந்தர் பெயரில் நற்பணி மன்றம் இருக்கிறதே தவிர அவர் தேடிய 100 பேர் கிடைக்கவில்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி நமது நாடு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருமா ?  

இந்த வரிசையில் நாம் அறிந்தும் அறியாமலும் ஆயிரக்கணக்கான பேர் இருப்பதற்கான வாய்ப்பு வலுவாக இருக்கிறது. 

இந்த விஷயத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட இதே போல சொல்லி இருக்கிறார்.  " விளிம்பு வரை வர, எட்டிப் பார்க்கப் பல பேர் இருக்கிறார்கள்.‌ ஆனால் அந்த இறுதிக் குதிப்புக்கு யாரும் முற்படுவதில்லை " என்கிற ரீதியில் அவர் பேசியிருப்பது நினைவுக்கு வருகிறது. அவர் குறிப்பாகச் சொல்லும் "அந்த" நிலை சொற்களால் விளக்க இயலாதது என்றும் சொல்கிறார். அது என்னவாக இருக்கும் ? 

" சும்மா இருப்பதே சுகம் " என்று ஒருவரும்,  " சும்மா இரு,  சொல் அற,  என்றதுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே " என்று இன்னொருவரும் பாடி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.  அந்த நிலை என்ன , அது எப்படி இருக்கும் ?

சும்மா இருப்பது 

சொல்லற இருப்பது 

ஆசை வெகுளி மயக்கம் இவை இல்லாதிருப்பது 

கணக்கில் பாவமோ புண்ணியமோ அற்ற சமநிலை

இவை அனைத்துமே நமக்கு புரியாத புதிர்களாகத் தான் இருக்கின்றன. 

விருப்பு வெறுப்பு அற்ற ஒருவன் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்கிறான் என்பதே ஒரு சுவாரசியமான கற்பனையாகத்தான் இருக்கிறது.

அடுத்த ஜென்மத்தில் பார்த்துக் கொள்வோம்.

43 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய நாள் அமையப் பிரார்த்தனைகள். கீதா ரங்கன் ஊர்ப் படங்கள் சிறப்பு. கேரளாவீடுகள் போல படித்துறை அமைந்திருக்கிறது. நாங்கள் எல்லாம் படித்துறைக் குளியல் செய்பவர்கள்:)

    பதிலளிநீக்கு
  2. காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தவர் யாருங்க. மஹாலய அமாவாசை விருந்துக்கு வந்த முன்னோர்கள்.

    பதிலளிநீக்கு
  3. அலெக்சாண்டர் பாபு, மைலாப்பூர் மாமிகளைக் கேலி செய்வாரே:( சீர்காழியையும் பழிப்பார்.

    பதிலளிநீக்கு

  4. விருப்பு வெறுப்பு அற்ற ஒருவன் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்கிறான் என்பதே ஒரு சுவாரசியமான கற்பனையாகத்தான் இருக்கிறது.

    அடுத்த ஜென்மத்தில் பார்த்துக் கொள்வோம்.'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' இது தான் நிஜம்

    பதிலளிநீக்கு
  5. பெண்கள் தங்களுக்குள்ளிருக்கும் நட்பை அவ்வளவாக வெளிக் காண்பித்துக் கொள்வதில்லை. அவ்வை தான் கண்ட நல்ல பெண்களைப் பாராட்டுகிறார். பாரி மகளிர் தோழமையாக இருந்ததால் தான் ஒருவனையே மணந்தனர். இரண்டு பெண்களின் நட்பில்தான் ''விஸ்ராந்தி" முதியோர் இல்லம் ஆரம்பித்தது. ஆண்களுக்கு வீட்டுக்கு வெளியே நட்பு. பெண்களுக்கு தொலைபேசியே நட்புப்பாலம். வீட்டு வேலை முடிந்தால் தானே வெளியே போகமுடியும்?

    பதிலளிநீக்கு
  6. அந்தப் படத்துக்கு அம்மா என்று பெயர் வைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  7. "அந்த நிலை நம்முள் இருக்கும் தெய்வத்தை, அந்த உணர்வை அனுபவிக்கும் நிலை" என்கிறார்கள். அதைச் சொற்களால் விளக்க முடியாது என்றும் அந்தப் பாதையில் நாமே போய் அடைய வேண்டும் என்றும், பாதையின் தூரம் கடந்த காலத்தில் நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்றும், இதுவரை கடந்த ஜென்மங்களைப் பொறுத்து பாதையின் தூரம் (பாக்கி இருப்பது) மாறும் என்றும் சொல்கின்றனர். பேசாமல் இருப்பது, அமைதியாக சஞ்சலமன்றி இருப்பது இந்த வழிக்கான மார்கம் எனவும் சொல்கின்றனர். நம்மில் பலருக்கும் தரையில் உட்காரவே முடிவதில்லை. சில யோகிகள், அடுத்தடுத்த நிலை தியானத்தில் செல்ல குறைந்த பட்சம் நாலு மணி நேரமாவது தியானத்தில் இருக்கும் பக்குவம் வரணும் என எழுதியிருக்கின்றனர். யோசிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  8. பெண்களுக்கு இடையேயான நட்பு... சிந்திக்க வைக்கும் கேள்வி....

    இரண்டு பெண்கள் நட்புடன் இருப்பது களங்கமில்லா மனம் இருக்கும் சிறு வயதில் சாத்தியம். பிறகு சாத்தியமில்லை.

    இரண்டு பெண்களான மாமியார் மருமகள்களே நட்புடன் இருப்பதாக ஈரேழு பதினாலு லோகத்திலேயும் கிடையாது என்று கௌதமன் சார் சொல்வதுபோலத் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! சொல்வதை எல்லாம் நீங்க சொல்லிவிட்டு என்னை ஏன் பா வெ மேடம் கிட்ட மாட்டிவிடுறீங்க!

      நீக்கு
  9. பெண்களின் இயற்கைக் குணம் ஒப்பிடுவது, பொறாமைக் குணம். இந்த குணங்களைக் கொண்ட ஆண்களாலும் நட்புடன் இருக்க இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா வெ மேடம்! பொறுத்தது போதும் பொங்கி எழுங்க!

      நீக்கு
    2. /பா வெ மேடம்! பொறுத்தது போதும் பொங்கி எழுங்க!// எனக்கு வயதாகி விட்டதா? அல்லது maturity வந்து விட்டதா என்ரு தெரியவில்லை, இப்போதெல்லாம் விவாதங்களில் ஆர்வம் குறைந்து விட்டது. இருந்தாலும் பெரியவர் நீங்கள் சொல்லும் பொழுது தட்ட முடியுமா? அந்த காலங்களில் பெண்களின் வாழ்க்கை திருமணத்தோடு பந்தப்பட்டிருந்தது. கணவனின் உறவும்,நட்பும்தான் அவளுக்கும் உறவும், நட்பும் என்று கருத வேண்டிய நிர்பந்தம். அதை பெண்களும் ஏற்றுக் கொண்டார்கள். தவிர தொலை தொடர்பு சாதனங்கள் கிடையாது. எனவே பெண்கள் பல விஷயங்களை தியாகம் சிதது போல நட்பையும் தியாகம் செய்தார்கள். இப்பொதெல்லாம் ப்ரைமரி ஸ்கூல் ரீ யூனியன், மிடில் ஸ்கூல் நட்பு ரீ யூனியன், ஹயர் செகண்டரி ரீ யூனியன், காலேஜில் U.G., P.G, க்ரூப்புகள், அதற்கான ரீ யூனியன் என்று இப்போதுதானே கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள், சில நாட்கள் கழிந்து பெண்களின் நட்பை சிலாகித்து கதைகள் வரலாம். இப்போதெல்லாம் லேடீஸ் ஒன்லி என்று சுற்றுலாக்கள் கூட செல்கிறார்கள்.

      நீக்கு
    3. //லேடீஸ் ஒன்லி என்று சுற்றுலாக்கள் கூட// உண்மைதான். காரணம் வீட்டு ஆண்கள் பிஸினெஸில் பிஸி. ஆபீஸ் வேலைகள். பணமோ இருக்கு. அதனால் பெண்கள் மாத்திரம் சுற்றுலா, இன்னொருவர் வீட்டுக்குப் போய் கொண்டாடுவது என்றிருக்கிறார்கள். நல்லதுதானே

      நீக்கு
  10. பெண்களின் நட்பு பற்றி வல்லி ஹிம்கன் அவர்களும் , நெல்லை அவர்களும் நல்ல கருத்துக்கள் தந்துள்ளார்கள்.

    கிராமத்துப் படங்கள் காண்பதற்கு குளிர்ச்சி.

    ' சும்மா இருப்பது, ' சொல்லற இருப்பது' என சொல்லி விட்டு போய் இவைதானே மிகுந்த சிரமம் என்பதை உணர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. பட த்தின் பெண்ணின் உடை... ஒரு காலத்தில் அழகாக இருந்த காம்பினேஷன். பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. பாவாடை தாவணிக்கு ஏற்ற நிறமாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது பாவாடை தாவணி என்றால் என்ன என்று ஆண்கள்தாம் தாய்க்குலத்துக்கு விம் போட்டு விளக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது பாவாடை தாவணி என்றால் என்ன என்று ஆண்கள்தாம் தாய்க்குலத்துக்கு விம் போட்டு விளக்கணும்.// கங்கை அமரன் பாவாடை தவணியில் பார்க்க முடியுமா? என்று பாடுவார். காலம் மாறிப்போச்சு. சமீபத்தில் QFR ல் 'நெஞ்சிருக்கும் வரை' திரைப்படத்திலிருந்து 'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி..' பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன், அதில் 'மாதரார் தங்கள் மகள் என்று பார்த்திருக்க,மாப்பிள்ளை முன் வந்து மணவரையில் காத்திருக்க, காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர.." என்ற வரிகளைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது. கால் பார்த்து நடந்து வரவா..? இப்போதெல்லாம் மணப்பெண்கள் நடனம் ஆடிக் கொண்டல்லவா வருகிறார்கள்?

      நீக்கு
    2. பழைய பாடல்களை, அதிலும் பெண்கள் எப்படி இருக்கணும் என்றிருக்கும் பாடல்களை இப்போதைய தலைமுறை கேட்டால், பாடலாசிரியரை கொலை செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

      நீக்கு
  12. அந்தச் சிற்பம் என்ன என்பதை என்னுடைய படத்தைப் பெரிதாக்கினால் நன்றாகத் தெரியும். ஆனால் இங்க வெளியிட்டிருப்பதில் என்ன எழுதியிருக்குன்னே தெரியலை. எப்படி இப்படி அநியாயமா வெளியிட்டிருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  13. நெல்லையின் முதல் கேள்வியும், அதற்கான பதிலும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  14. //பெண்களிடையே என்று சொன்னால், பெண்களை அடைய என்று வருகிறது// ஹாஹா! கீதா ரங்கன் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் சிரிச்சு முடியல..

    பதிலளிநீக்கு
  15. கீதா ரங்கன் என்றதும் நினைவுக்கு வருகிறது, கொஞ்ச நாள் தலை மறைவாக இருந்தால் பழம்பெரும் பதிவர் ஆகி விடுவாரா? நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  16. ஒண்ணா இருக்க கத்துக்கணும் படம் அருமை!
    கீதா ரங்கன் அவர்களின் சொந்த ஊர் இவ்வளவு அழகா? இப்படி ஒரு ஊரில் இருந்ததால்தான் அவர் அவ்வளவு உணர்ச்சிகரமாக எழுதுகிராரோ?

    பதிலளிநீக்கு
  17. இந்த வாரம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கேள்விகளாகவே இருக்கின்றன. எல்லாக் கேள்விகளும் பதில்களும் நன்றாகவே இருக்கின்றன. நெல்லையின் கடைசிக் கேள்விக்கு கௌதமன் சார் பதில் சொல்லி இருக்கார் போல. ஆனால் குறியீடு அவருடையது இல்லை& இது அல்லவா கௌதமன் சாரின் குறியீடு?

    பெண்களுக்கு இடையே என்னதான் நெருங்கிய சிநேகம் இருந்தாலும் ஒரு நெருடல் இருக்கத் தான் செய்யும். ஏனெனில் அவரவர் குடும்ப வாழ்க்கை, அப்போதைய பிரச்னைகள், வீட்டில் இருக்கும் வேலைகள், குழந்தைகள், கணவன், மாமியார், மாமனார் இருந்தால் அவர்கள் எனப் பெண்களின் கவனம் பரவலாக ஆகிவிடுவதால் தனிப்பட்ட இன்ப, துன்பங்களை அதிகம் பொருட்படுத்துவது இல்லை. என்றுமே பெண்களைப் பொறுத்தவரை குடும்பம் தான் முதலிடம். கணவன் தான் நெருங்கிய நண்பன்.

    நெல்லை அனுப்பி இருக்கும் படமும் நன்றாக உள்ளது. இங்கே தெளிவாக அந்த போர்டை நெல்லை எடுத்துப் போட்டிருக்கார்.

    பதிலளிநீக்கு
  18. நாகர்கோயில் ஊர் அழகு கொஞ்சத் தான் கொஞ்சுகிறது. நாங்க போனப்போ நல்ல மழை நாள் ஆரம்பிக்கும் சமயம் வேறே. தென்மேற்குப் பருவ காலம். மேகங்களும், காற்றும், மெல்லிய சாரலுமாக அருமையான வானிலை. கன்யாகுமரிக்கு 3,4 தரம் போயிட்டதால் அந்தத் தரம் நாகர்கோயிலிலேயே தங்கி எல்லா இடங்களும் பார்த்தோம். ஆனாலும் சுசீந்திரமும், கன்யாகுமரியும் திரும்பவும் போனோம். கடற்கரையைச் சுற்றிப் பார்த்தால் ஒரே மன அதிர்ச்சி! எங்கெங்கு பார்த்தாலும் சர்ச்சுகள். முதல் முறை போனப்போ இவ்வளவெல்லாம் இல்லை. கன்யாகுமரி மட்டும் போயிட்டு சுசீந்திரம் போயிட்டு விளக்குகள் வாங்கிக் கொண்டு திரும்பிட்டோம். இந்தத் தரம் 3 நாட்கள் தங்கினதால் பார்த்தோம். திருச்சியில் காவிரிக்கு அந்தப்பக்கம் எப்படி இருக்கோ அது போல் நாகர்கோயிலுக்கு அந்தப் பக்கம் கன்யாகுமரி இருக்கிறது. :( நல்லவேளையாக பகவதி அம்மன் கோயிலில் அதிகம் மாற்றம் இல்லை. அதே போல் தான். நுழைவுச்சீட்டோ, சிறப்பு தரிசனச் சீட்டோ கன்யாகுமரி, சுசீந்திரம் ஆகிய கோயில்களிலும் திருவட்டாறிலும் இல்லை. இப்போ எப்படியோ தெரியாது.

    பதிலளிநீக்கு
  19. தெரிசனங்கோப்புப் போக நினைச்சோம். டாக்டர் மஹாதேவன் ஊரில் இல்லை என்றார்கள். அதனால் நம்ம ரங்க்ஸ் வேண்டாம்னுட்டார். :(

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் எங்கே எடுத்தார் இந்தப்படத்தை? நல்லா இருக்கு. திரு ராமன் அவர்களின் இன்றைய கட்டுரையில் எல்லாமும் நன்றாக விரிவாகச் சொல்லிட்டுக் கடைசியில் அடுத்த ஜென்மத்தில் பார்த்துக்கலாம் என்றது தான் சூப்பர். ஹெஹெஹெ, நாம் எல்லோருமே அப்படித் தானே இருக்கோம்!

    கௌதமன் சார் கதையில் புதிய கதாபாத்திரம் வரப் போகிறது. அது வில்லனா? காமெடியனா? மேலே சொல்லி இருக்கீங்களே ஸ்டான்ட் அப் காமெடியன்? அவரா? அது என்ன ஸ்டான்ட் அப் காமெடியன்? என்ன சிறப்பு அவருக்கு? வீட்டியோ ஒரிஜினல் இல்லை என்பதை எப்படிக் கண்டு பிடிக்கின்றனர்? எங்க பெண் என்னிடம் நீ நிறைய ஏஐ படங்களாய்ப் போடறே என்கிறாள். நானோ ஏஐ பக்கமே போனதில்லை. எப்படிப் படங்களை எடுப்பதுனே தெரியாது. ஆனாலும் இதை ஏஐ படம்னு எப்படிச் சொல்றங்க? புரியலை தான். :(

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளும்,அதற்கு பதில்களும் அருமை.
    படங்கள் எல்லாமருமை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கிறது.
    தென்னைமரங்கள் சூழ்ந்து இருக்க குளக்கரை படம் அழகு.கீதாரெங்கன் சொந்தஊர் அழகு.


    "ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்"///

    படம் அழகு.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!