6.10.26

சிறுகதை : எ போ கதை : குடுமி - சுஜாதா

குடுமி

சுஜாதா 

(ஸ்ரீரங்கத்து கதைகள்)


ஐம்பதுகளிலேயே ஸ்ரீரங்கத்தில் குடுமி வழக்கொழிந்துகொண்டிருந் தது. நாதஸ்வரக்காரர்கள் துறந்துவிட்டார்கள். 'பண்ணிவைக்கும் வாத்தியார்களும் கோவில் அர்ச்சகர்களும்தான் தொழில் தேவைக்குக் குடுமி வைத்திருந்தார்கள். பள்ளிச் சிறுவர்களில் ஒரு சிலர் பெற்றோரின் பிடிவாதத்தின் விளைவாக நாலாவது அஞ்சாவது வரை குடுமி வைத்திருந்து, அதற்கு நவராத்திரி சமயத்தில் அழகாகத் தலைவாரிப் பின்னப்பட்டார்கள்.

கோல்டன் ராக் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 'புல் சூட் ஐயங்கார்' லௌகீகத்துக்காகக் கிராப் வைத்திருந்தாலும் உற்றுப்பார்த்தால் பின்னால் ஒரு மெலிய கற்றைக் குடுமிபோல் பாவனை செய்யக் கடைசி அடையாளமாகச் சொல்லலாம்.

பெரும்பாலும் அவர் அதைத் தம் தொப்பிக்குள் ஒளித்து வைத்திருந்தார். கோயில் காரியங்கள் பண்ணுகிறவர் அனைவரும் குடுமி வைத்திருந்தாலும் சினிமா போகும்போதோ கோட்டைக்குப் போகும்போதோ முண்டாசுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டுதான் போவார்கள். திராவிடக் கழகக்காரர்களாலும் மற்ற சில சிறார்களாலும் 'போறான் பாருயா உச்சு குடுமி' என்று இகழப்படுவதைத் தவிர்க்க உபாயம் இது.

இவ்வாறு குடுமி அரிதாகிக்கொண்டிருந்த காலத்தில் உங்களுக்கு ராகவனின் கதையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ரங்குவின் வீட்டையும் கோதாவரி மாமி வீட்டையும் தாண்டி 'கோகோடம்ளர்' என்று சொல்லப்பட்ட பாஷ்யமையங்கார் வீட்டுக்கு முன்னே இருந்தது ராகவனின் வீடு. அவன் அப்பா 'ஏ.ஆர்' என்று அழைக்கப்பட்ட ராமசாமி ஐயங்கார் கச்சிதமாக இருப்பார்.

சோடா பாட்டில் கண்ணாடி போட்டுக்கொண்டு ஐஸ்கூலில் எட்டாவதுவரை கணக்கு வாத்தியார். விறகுக்காரனிடம் மாலை ஐந்து மணிவரை எட்டணாவுக்குப் பேரம் பேசுவார். அவருக்கு ஒரு பெண், நான்கு ஆண் மக்கள். அவர்களில் கடைசிதான் ராகவன். மற்ற பிள்ளைகள் சுமாராகப் படித்து பிஎச்இஎல்லிலும், தஞ்சாவூரிலும், புகளூர் சர்க்கரைத் தொழிற்சாலையிலும் கிளர்க்குகளாகப் போய்விட, ராகவன் மட்டும் பெரிய வேலைக்கு வருவான் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தோம்.

ராகவன் ஜோசப் கல்லூரியில் மனுப் போட்டான். கணிதத்தில் புலியாக இருந்ததால் மேத்ஸ் ஆனர்ஸ் சேர்ந்தான். ராகவன் கருகருவென்று ஒரு பெண்பிள்ளையளவுக்குக் குடுமி வைத்திருந்தான். முன் நெற்றியில் கொஞ்சம் குறைத்து முக்கால் மண்டையில் புறப்பட்டுப் பின்னோக்கிச் சென்ற கருநாகம் போன்ற கூந்தல். அதை அவன் காலை வேளையில் ஒரு சரசாங்கியின் நளினத்தோடு சேகரித்து வாரி எண்ணெய் தடவி முடிப்பான். அப்படியே பந்துபோல் பின்பக்கம் சுருண்டுகொண்டு கச்சிதமாக அமையும். அவனிடம் மற்ற பெண்மைக் குணங்கள் ஏதும் இல்லை. அவன் முகத்துக்கு அந்தக் குடுமி ஒரு தேஜஸ்.

அவன் பிரம்மச்சரியத்தினாலும் சபலமற்ற களங்கமற்ற முகத்தினாலும் ஒரு ஜொலிப்பும் சேர்ந்துகொண்டது. என்னிடத்தில் எப்போதாவது கணக்கில் சந்தேகம் கேட்க வருவான். அவன் சந்தேகங்கள் சந்தேகங்கள் இல்லை.

இப்படிச் சரியா என்று சரிபார்க்கத்தான் வருவான். பாட்டி எது கொடுத்தாலும் வாங்க மாட்டான். அதிகம் பேச மாட்டான் அவன். அதுவும் என் தங்கை வத்சலாவைக் கண்டால் உடனே ஓடிப் போய்விடுவான். வத்சலாகூட, "என்னடா, அந்தப் பையன் இப்படி வெக்கப்படறான்?” என்பாள்.

"வெக்கம் இல்லை. மரியாதை."

"எனக்கு ஒரு நாள் அவன் குடுமியை விடுதலை பண்ணி, நன்னா தலைவாரிப் பிச்சோடா போடணும்னு ஆசையா இருக்குடா.”

"கேட்டுப் பார்க்கறேன். ஆனா அவன் சம்மதிக்க மாட்டான்."

"அவன் நன்னா படிக்கிறானாமே, கலெக்டரா வருவாங்கறா?"

என்று கேட்டாள் பாட்டி. "நம்ம வத்சலாவுக்கு வேணா

பார்த்துரலாமா?"

"இந்தக் குடுமியை எடுத்தாத்தான் சான்ஸ்" என்றாள் வத்சலா.

“ஏண்டி, அவனுக்குக் குடுமி பாந்தமாத்தான் இருக்கு."

“இல்லை பாட்டி என் ப்ரண்ட்ஸ் எல்லாம் கலாட்டா பண்ணுவா, குடுமியைப் போய்க் கட்டிண்டியேனு. அவன் எப்ப எடுக்கப் போறான்னு கேட்டுரு” என்று வத்சலா விளையாட்டுக்குச் சொன்னாளாம்.

ஒரு தடவை பாட்டி இயல்பாகவே கேட்டுவிட்டாள், "ஏண்டா ராகவா, நீ எப்படா உன் குடுமியை எடுக்கப்போறே?"

"எதுக்கு எடுக்கணும் மாமி?"

"இப்ப எல்லாரும் கிராப்பு வெச்சுண்டிருக்கா... உலகத்தோட ஒட்டி வாழனும் சொல்லுவா."

"பஸ்ல யாரும் உன்னைக் கலாட்டா பண்ணலையா?" என்று கேட்டாள் வத்சலா.

அவன் நேராகப் பார்க்காமல் பதில் சொன்னான்: "கலாட்டா பண்ணுவா, பண்ணா பண்ணிட்டுப் போறா; நான் கண்டுக்கறதே இல்லை. கலாட்டா பண்ணுவாங்கறதுக்காகக் குடுமியை எடுக்கணுமா?"

"இப்ப ஆனர்ஸ்ல அட்மிஷன் கெடைச்சிருக்கே ஜோசப் காலேஜ்ல, அவா ஏதும் ஆட்சேபணை தெரிவிக்கலையா?"

"லேசா சொல்லிப் பார்த்தார் ப்ரின்சிபால்; வெள்ளைக்காரர். 'ஆர் யு கோயிங் டு கீப் திஸ் டஃப்ட்'னு. 'எஸ் ஃபாதர்'னேன். உன் குடுமியை எடுக்கச் சொன்னா என்ன பதில் சொல்வேன்னார். எனக்கு அட்மிஷன் வேணாம்னு சொல்லிடுவேன்னேன்...

"நல்ல தைரியம்டா உனக்கு."

"தைரியம் இல்லை மாமி! எனக்குப் பிடிச்சிருக்கு. குடுமியும் நெத்திக்கு இட்டுக்கறதும் சின்ன வயசிலிருந்தே பழக்கமாய்டுத்து. அப்பா கூட ஜாடை மாடையா சொல்றார் எடுத்துருன்னு. அம்மா என் அக்கா எல்லாரும் சொல்றா. என் அண்ணா யாரும் என்னோட சினிமா போறதுக்கே வெக்கப்படறா."

"சினிமா போவாயா நீ?" என்றாள் வத்சலா ஆச்சரியத்துடன்.

"எப்பவாவது வருஷத்துக்கு ஒரு தடவ 'ஒளவையார்', 'லிவிங் டெசர்ட்' மாதிரி நல்ல படமா வந்தா போவேன்."

ஜோசப் காலேஜ் அவன் குடுமியைவிட அவன் வாங்கிய மார்க்கை அதிகம் கௌரவித்ததால் அவனுக்கு அட்மிஷன் கிடைத்தது. அங்கே 'அல்ஜிப்ரா சீனிவாசன்' என்று ஒரு கணக்கு வாத்தியார் எங்களுக்குத் தூரத்து உறவு. அவர் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்தபோது வத்சலாதான் கேட்டாள்: "மாமா, எங்க பக்கத்திலிருந்து ராகவன்னு ஒரு பையன் உங்க கிளாஸ்லதான் படிக்கிறான்."

"எந்த ராகவனைச் சொல்றே? குடுமி ராகவனா? குட்டை ராகவனா?"

"குடுமி கடுக்கன் சீசூர்ணம்!"

''ஓ! அவனா...தெரியுமே. நன்னா தெரியுமே!"

"எப்படிப் படிக்கிறான்?" என்று கேட்டேன்.

"அந்தப் பையன் ஒரு ஜீனியஸ்ப்பா. ராமானுஜத்தோட மறு பிறவின்னு சொல்லலாம். அன்னிக்கு டென்சார் கால்குலஸ்ல ஒரு கணக்கு. நானும் ப்ரான்சிஸ் ராஜும் திணறிண்டிருந்தோம். இவன் என்னடான்னா சடக்குன்னு போட்டுட்டுப் பயந்துண்டே, 'இப்படி போட முடியுமான்னு பாருங்க சார்'னு கேக்கறான். அசந்து போய்ட்டோம். திஸ் பாய் வில் கோ ப்ளேஸஸ். ஆனா குடுமியை எடுக்கணும்!”

"எல்லாரும் சொல்லிப் பார்த்தா, மாட்டேங்கறான்?"

"இந்தக் காலத்தில கொஞ்சம் 'ஆடா'த்தான் இருக்கு. எடுத்துருவான்."

"அவனைவிடப் பிடிவாதமா இருந்தவனுங்களே கல்யாணம் ஆனதும் எடுத்ததைப் பார்த்திருக்கேன். ஆனா அவனைப் பார்த்தா கல்யாண கேசா தோணலை. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ஜே. கிருஷ்ணமூர்த்தின்னா பேசிண்டிருக்கான்."

"ஒரு நா தூங்கிண்டிருக்கறப்போ பெண்டாட்டி நறுக்கிடுவா” என்றாள் வத்சலா.

"இவன் நிச்சயம் 'மாத்'ல ரிசர்ச் ப்ரொக்ராம் அல்லது எம் ஃபில், பிஎச்டின்னு போய்டுவான். இப்பவே சில தியரங்களை எல்லாம் செட் தியரி மூலமா ப்ரூவ் பண்ண முடியும்னு சொல்றான்..."

அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த ராகவன் சீனிவாசனைக் கண்டதும் குருவைப் பவ்யமாக அணுகி, "சார், நம்ம ஆத்துக்கும் வந்துட்டுப் போகணும்" என்றான்.

"சந்தேகம் கேக்கலைன்னா வரேன்பா!"

"இல்லை சார்.”

"நாங்க உங்கிட்டே கேக்கும்படியான்னாப்பா இருக்கு. அது சரி, நான் சொன்னேனே ஃபார்ம் அதை 'பில்அப்' பண்ணியா ஸ்காலர்ஷிப்புக்கு?"

"பண்ணிட்டேன் சார். ஆனா என் குடுமியை வெச்சுண்டு அங்கெல்லாம் போக முடியுமான்னு தெரியலை."

"முதல்ல அப்ளை பண்ணிப் பாரு. அப்புறம் குடுமி பெரிய விஷயம் இல்லை. வெட்டலாம், வளக்கலாம்!"

அவன் மையமாகப் புன்னகைத்தான்.

அவன் சென்றதும் வத்சலா, "இவனாவது வெட்டறதாவது. கல்யாணமாகி அந்தப் பொண்ணு தூங்கிண்டிருக்கறப்ப கத்திரிக் கோலை எடுத்து நறுக்குன்னு வெட்டி தூரப் போட்டாத்தான் உண்டு. இப்பவே என் கை துருதுருங்கறது. எதுக்காக அழிச்சாட்டியமா இவனுக்கு இத்தனை தலைமயிர்?"

எனக்கு வேலை கிடைத்து அலகாபாத் போய் ட்ரெயினிங் போஸ்டிங் எல்லாம் ஆகி, லீவில் திரும்பி வந்தபோது ராகவனைச் சந்தித்து இரண்டு வருஷங்களாகிவிட்டன.

"என்ன ராகவா, நீ அமெரிக்கா போகப்போறதாவும் ஸ்காலர்ஷிப் கிடைச்சதாகவும் சொன்னா?"

"ஆமாம் கெடைச்சது. நான் போகலை. எம்.எஸ். பண்ணிட்டு பிஎச்டி பண்ணறதுக்கு ஹார்வர்டில கெடைச்சது, ப்ரின்ஸ்டன்லயும் கெடைச்சது. நியூ ஜெர்சியில ..."

"ஏன் வேணாம்னுட்டே?"

"நான் வேணாங்கலை. விசா கிடைக்கலை. கான்சல்ல விசாவுக்குப் போயிருந்தபோது என் குடுமியைப் பத்தி பேச்சு வந்தது. அந்தப் பொம்பளை வைஸ் கான்சல் கேட்டா ... நான் அது என் சொந்த விஷயம்னேன் ...

"நீ 'இஸ்கான்' ஆசாமியா? ஏர்போர்ட்ல பஜனை பண்ணிப் பிரசாதம் கொடுப்பாளே அவங்க கோஷ்டியான்னா. இல்லைன்னேன்.

"இந்தத் தடவை விசா கொடுக்கலை. ரொம்ப பிரில்லியண்ட் நீ. அடுத்த தடவை கம் வித் அவுட் யுவர் லிட்டில் பூச். ஐ கிவ் யூ விசான்னா...எனக்குக் கோபம் வந்தது. உங்க விசா யாருக்கு வேணும்னு வந்துட்டேன்."

"இப்ப என்ன பண்றே?"

"ஆனர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டேன். ஏஜி ஆபிஸ்ல செலக்ஷன் கிரேடு கிளார்க் பரிட்சை எழுதினேன். பாஸ் பண்ணிட்டேன். ஆர்டருக்கு வெய்ட் பண்றேன்."

அவன் குடுமி இப்போது இன்னும் பளபளவென்று, அவிழ்த்து விட்டால் குதிகாலைத் தொடும் போல இருந்தது.

"அம்மா கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டா" என்றான்.

"குடுமியை எடுத்திருந்தா நானே உன்னைக் கல்யாணம் பண்ணிண்டிருப்பேன் ராகவா!" என்றாள் வத்சலா, கண் சிமிட்டி.

ராகவன் புன்னகைத்து, "அதுக்குத்தான் செல்லத்தைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சேன். அத்தை பொண்ணு. குடுமியை எடுன்னு சொல்லமாட்டா" என்றான்.

"அப்படி என்ன அந்தக் குடுமி உசத்தி? அமெரிக்கா போறதைக் கூடத் தியாகம் பண்ணும்படி ! அதைப் பிடிவாதமா வெச்சுண்டு என்னத்தை நிரூபிக்க விரும்பறே?"

"அப்படி ஏதும் இல்லை. தன்னுடைய தோற்றத்தைத் தீர்மானிக் கிறதுக்கு ஒருத்தருக்கு உரிமை இருக்குன்னு நம்பறேன். அது மட்டும் இல்லாம கேலி செய்வான்னு எதுக்குப் பயப்படணும்? செஞ்சா செஞ்சிட்டுப் போறாங்கற மனோநிலை வாழ்க்கைல ரொம்பத் தேவைப்படறது. சரி, நீங்க அவசியம் கல்யாணத்துக்கு வரணும்."

"ஆமா, உன் மேத்தமாட்டிக்ஸெல்லாம் என்ன ஆச்சு?''

"அதை விடலை. அது பாட்டுக்கு அது. இப்பல்லாம் ரிசர்ச் பேப்பர்ஸ் எழுதிண்டிருக்கேன். நம்பர் தியரி க்ரிப்ட்டோ அல் காதரிதம்ஸ்ல...இண்டியன் மேத்தமாட்டிக்கல் ஜர்னல்ல, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகியிருக்கு. அடுத்த வாரம் திருச்சி ஆர்இசியில இண்டர்நேஷனல் கான்பரன்சுக்கு ஒரு செஷனுக்கு என்னைத் தலைமை தாங்கக் கூப்பிட்டிருக்கா! மாத்தமாட்டிக்ஸ்தான் என் முதல் காதல். அமெரிக்காவில் இருந்தாலும் அதேதான்; சீரங்கத்தில குடுமி வெச்சுண்டு இருந்தாலும் மாத்தமாட்டிக்ஸ் மாறாது!”

"அப்ப குடுமியோடதான் போகப் போறியா?"

"அஃப் கோர்ஸ்! இது என்ன கேள்வி?"

லீவு முடிந்து திரும்பும்போது திருச்சி விமான நிலையத்தில் என்இபிசி விமானத்தைப் பிடிக்கக் காத்திருந்தபோது அடுத்து ராகவனைப் பார்த்தேன். கதர் சட்டையும் வேஷ்டியும் குடுமியாக.

"என்ன ராகவா ஏர்போர்ட்ல? எங்கயாவது பாரின் போறயா?"

"இல்லை, நான் சொன்னேன் பாருங்கோ கான்பரன்ஸ். அதில இஸ்ரேலிலிருந்து பெர்ன்ஸ்டைன்னு ஒரு ப்ரொபசர் வரார். அவரை வரவேற்க வந்திருக்கேன். ரிசப்ஷன் கமிட்டியில இருக்கேன்."

ஃபாக்கர் விமானம் வந்து, அதிலிருந்து இறங்கிய பதினைந்து பேரில் இந்த ப்ரொபசர் பெர்ன்ஸ்டைன் தனித்துத் தெரிந்தார். அவருக்கு ராகவன் மாலை போட, நல்ல உயரமாக இருந்ததால்

சற்று எம்பிப் போட வேண்டியிருந்தது.

தனக்கு எம்பிப் போட்ட மாலையைக் கழற்றி அவர் மீண்டும் ராகவனுக்கே போடுவது தெரிந்தது. அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்.

கிட்டத்தில் பார்த்தபோது ப்ரொபசர் நல்ல அழகான கட்டுக்குடுமி வைத்திருந்தார்.


========================================================================================


மனசாட்சியம் - 6

K G Y Raman 


காலையில் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தபோது, எல்லாப் பெண்களும்  அரசு பேருந்துகள் எதிலும் எங்கு வேண்டுமானாலும்,  இலவசப்பயணம் செய்யலாம் என்கிற அரசின் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. 

வருவாய் அதிகம் இல்லாத, கடுமையான நிதி பற்றாக்குறை இருக்கிற மாநிலங்களில் இப்படி இலவசங்களை இயன்ற இடத்தில் எல்லாம் வாரி வழங்கினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்கிற கவலை ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படத்தான் வேண்டும். பெண்களுக்கு  இலவசம் என்று அறிவித்தால், சமூகத்தில் பெண்களை விட பிரச்சனைக்குரிய சூழ்நிலையில் இருக்கிற ஆண்களும் உண்டு.  அது போக, மூன்றாம் பாலினத் தவரும் இருக்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் இல்லை என்று மறுத்து பெண்களுக்கு மட்டும் வழங்குவது  எந்த அளவு சரியான விஷயம்? 

வாழ்க்கையில் நலிவு நிலையில் அவஸ்தைப் படுபவர்களுக்கும்,  இயலாதவர்களுக்கும் அரசின் உதவிக்கரம் நீட்டப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.‌ அதேசமயம் தங்களது பயணம் முதலிய இதர சேவைகளை தாங்களே செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிற மக்களுக்கு இலவசமாக எதையும் வழங்குவது பொருத்தமற்ற முடிவாகத் தானே இருக்கும். இலவசங்கள் வழங்குதல் என்னும் விஷயத்தில் நீதிமன்றங்களும் சட்ட நிபுணர்களும் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது. 
 பொதுப்பணத்தில் வசதி வாய்ப்பு அதிகம் இல்லாத போதே பெரும் செலவு செய்து இலவசங்களை தராதரம் பாராது வழங்குவதைச் சமாளிக்க சில வரைமுறைகளை செய்து கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

இலவசங்கள் மக்களின் பேராதரவைப் பெற்றுத் தரும் என்று அரசியல் கட்சிகள் பலமாக நம்புவது இந்த இலவசங்களின் அடிப்படை.‌  ஆனாலும் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால் இந்த இலவசங்களை மட்டும் முன்வைத்து வெற்றி பெற இயலாது என்பதும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதை உணர்ந்து செயல்படுவதற்கு பதிலாக இன்னும் அதிகபட்சம் இலவசங்களை அளித்தால் நிலைமை நமக்குச் சாதகமாகும்,  நமக்கு வெற்றி கிடைக்கும் என்கிற ரீதியில் கட்சிகள் திட்டங்களைத் தீட்டுவது நாட்டுக்கு நன்மையா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

இதற்கு இன்னும் ஒரு பரிமாணமும் இருக்கிறது. வண்ணத் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து ஆரம்பித்தது விலையில்லா மிக்ஸர் கிரைண்டர் அல்லது உரிமை தொகை வரை எதையுமே மக்கள் வேண்டும் என்று கேட்கவில்லை.  ஆட்சியாளர்களே முன் வந்து கொடுக்கும் இலவசங்களை பின்னாலே வேறு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றுதானே நினைக்க வேண்டும்.‌

உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

===================================================================================

இதுவரை அதிகம் கண்ணில் படாத சில மதன் ஜோக்ஸ்...








59 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. @கமலா, நேத்திக்கு உங்களைப் பார்த்த நினைவு இல்லை. ஒருவேளை நேரம் கழிச்சு வந்தீங்களோ? உடல் நலம் தானே?

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      நலமாக உள்ளேன் சகோதரி. நான் நான்கு நாட்களாகவே வலைத்தளம் வரவில்லை. உங்கள் பதிலுக்கு (என் பல்வலியைப்பற்றி நான் எழுதியமைக்கு ) நான் உங்களுக்கு மறுநாள் என நினைக்கிறேன். ஒரு நன்றி கூறி பதில் எழுதினதோடு சரி.! அப்புறம் தொடர்ந்து வரவில்லை. ஒரு நீண்ட நாளைய பிராத்தனைக்காக வெள்ளியன்றுஒரு கோவில் பயணம், பிறகு மறுநாள் வெளியில் குழந்தைகளோடு ஒரு பயணம் என நாட்கள் நேரங்களை விழுங்கி கொண்டது. இன்றுதான் வருகிறேன். நீங்கள் இப்போது அன்புடன் என்னை விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நல்ல செய்தி ஒன்றை .இன்று கருத்தில் கூறியிருக்கிறீர்கள். இப்போதுதான் பார்த்தேன். படித்து விட்டு மிகவும் மகிழ்வடைந்தேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் குடும்பத்திற்கு என் அன்பான வாழ்த்துகள்.. அனைவரும் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய செவ்வாய் கதை பகிர்வு நன்றாக உள்ளது. சுஜாதா அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். முடிவும் பிரமாதமாக இருந்தது. அந்தக்காலத்தில் குடுமி வைத்தவர்களை கேலி செய்வது மக்களின் இயல்பு. சுதந்திர பூமியில் இப்படியொரு கட்டுப்பாடுகளை விதைப்பது அநியாயந்தான். கதை படிக்கையில் அன்னியன் படம் நினைவுக்கு வந்தது.

    இன்றைய மனசாட்சியமும் அருமை. இலவசங்கள் மக்களுக்கு தேவையானதாக ஆகிவிட்டது. அப்போதைக்கு அதை பெறுவதில் உள்ள சந்தோஷங்களில், அதன் பின்னால் உள்ள சங்கடங்களை ஆலோசிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. என்ன செய்வது? கொடுப்பவர்களுக்கும், காரியம் அப்போது தீர்ந்தால் மகிழ்ச்சி என்ற மனநிலை .

    கார் ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. மதன் ஓவியங்கள் சிறப்பு. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. கார் ஜோக்ஸ் அத்தனையும் சூப்பர்.மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. சுஜாதா குடுமிக் கதை சூப்பர். என்ன ஒரு மனத்திடம் அந்த ராகவனுக்கு!! முடிக்கும் முடிச்சு அதைவிட சூப்பர். அவருக்குக் கைவந்த கலை.!!!!

    பதிலளிநீக்கு
  7. மனசாட்சியம் வழக்கம் போல் மிக அருமை. இது வரை இலவசம் வாங்கியதில்லை. ஏதாவது வருகிறது என்றால் ஏதையாவது எதிர்பார்க்கிறார்கள் என்று தானே அர்த்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை பொதுஜனம் புரிந்து கொள்வதில்லையே...

      நீக்கு
  8. கதை நன்றாக இருக்கிறது குடுமி வைத்துக் கொள்வேன் என்ற கொள்கையை விட்டு கொடுக்கவில்லை.
    என் அம்மாவின் அப்பா, அம்மாவின் சித்தப்பா எல்லாம் குடுமி வைத்து இருந்தார்கள், காதில் கடுக்கன் மாட்டி இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் சிலர் குடுமி வைத்திருக்கிறார்கள்..

      நீக்கு
    2. என் அப்பாவெல்லாம் குடுமி வைச்சிருந்ததாகச் சொல்லுவார்கள். எப்போ எடுத்தார்னு தெரியாது. ஆனால் என் அம்மா வழித் தாத்தாவும், என் அப்பாவின் அண்ணா பெரியப்பாவும் கடைசிவரை குடுமி தான். இருவருமே பால்ய சிநேகிதர்களும் கூட. ஒண்ணாப்படிச்சுக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வக்கீல் தொழிலிலும் ஒன்றாகவே ஆரம்பித்து நடத்தினவங்க.

      நீக்கு
    3. எங்கள் உறவுகளிலும் நட்புகளிலும் சிலர் மறைமுக குடுமியுடனும், நேரான குடுமியுடனும் இருக்கிறார்கள்.

      நீக்கு
  9. மனசாட்சியம் - 6 நன்றாக இருக்கிறது.
    //வாழ்க்கையில் நலிவு நிலையில் அவஸ்தைப் படுபவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் அரசின் உதவிக்கரம் நீட்டப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.‌ //

    உண்மைதான்.

    , ஆனால் பெண்களின் வெற்றி பயணத்தை பெண்கள் நிறைய பேர் விரும்புகிறார்கள். நிறைய பேர் வரவேற்கிறார்கள். அரசியல்வாதிகளால் இலவசங்களை நிறுத்த முடியாது.

    கார் நகைச்சுவை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. ஜனநாயகம் என்பது மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி செயல்பட்டு அவங்க ஆதரவைப் பெறுவது.

    மக்கள் இலவசங்களையும், வாக்குக்கான லஞ்சப் பணத்தையும் எதிர்பார்க்கறாங்க. அவங்களுக்கு நல்லவர்கள் தேவையில்லை. வாக்காளர்களுல் படித்தவன் படிக்காதவன் தற்குறி போன்றவர்களில் 20 சதம் இப்படி நினைப்பதால்தான் இந்திய ஜனநாயகம் சீரழிகின்றது.

    பதிலளிநீக்கு
  11. இப்போது மகாராஷ்டிரத்தில் பார்த்தேன் இளைஞர்கள்
    பலர் சிறு குடுமி வைத்திருக்கின்றனர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூரிலும் வேதபாடசாலைகளில் படிக்கும் சிறுவர்கள் கூட வைத்திருப்பார்கள்.

      நீக்கு
  12. எனது தாத்தா குடுமி வைத்திருந்தாராம்...

    பதிலளிநீக்கு
  13. சுஜாதாவின் குடுமியை இதுவரை பார்த்ததில்லை! வாசிப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து விட்டீர்களா?!

      நீக்கு
    2. இப்பத்தான் முடிச்சேன். கிரிக்கெட் ப்ரேக்கின்போது! நமது நாட்டிலும் குடுமிகள் பரவலாகத் தென்படும் காலமும் வரும்..!

      நீக்கு
  14. //லௌகீகத்துக்காகக் கிராப் வைத்திருந்தாலும் உற்றுப்பார்த்தால் பின்னால் ஒரு மெலிய கற்றைக் குடுமிபோல் பாவனை செய்யக் கடைசி அடையாளமாகச் சொல்லலாம்.//
    இப்போவும் எனக்கு நெருங்கிய சில இளைய வயது உறவினர்கள், நண்பர்கள் இப்படித் தான் குடுமி வைச்சுட்டு இருக்காங்க. இவர்களில் பெரிய பெரிய கம்பெனிகளின் வைஸ் ப்ரசிடென்டுகள், முதன்மை அதிகாரிகள் எல்லாமும் இருக்காங்க. கர்நாடக இசைப்பாடகர் திரு சித் ஸ்ரீராம் நல்ல அடர்த்தியான கட்டுக்குடுமி வைச்சிருந்தார். இப்போப் பார்த்து ரொம்ப நாளாச்சு. அதனால் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் குழுவில் இருக்கும் ஹீமா பால் கூட குடுமி வைத்திருக்கிறார்!

      நீக்கு
    2. ஹீமாவா! அட ஆண்டவா.. அவர் கீமோ பால். Keemo Paul. Guyanese cricketer, allrounder.

      நீக்கு
  15. சுஜாதாவின் "குடுமி" கதை முன்னரே படிச்சிருந்தாலும் மறுபடியும் படிச்சேன். இப்போதும் குடுமியுடன் இருக்கும் படித்த வாலிபர்கள் இருக்கின்றனர். மற்றபடி கதை வழக்கமான சுஜாதாவின் கதை.

    திரு ராமன் இலவசங்கள் பற்றிச் சொல்லி இருப்பது முற்றிலும் சரியே. எங்களுக்குச் சென்னையில் இருக்கையில் இப்படிச் சில கிடைக்கும்போல் இருந்தது என்பதால் ரேஷன் வாங்கவே போக மாட்டோம். ஸ்ரீரங்கம் வந்ததும் நாங்க வாங்குவதில்லை என்பதால் மத்தவங்க எதிர்பார்ப்புக் கூடவே ரேஷன் கார்டையே வேண்டாம்னு திரும்பக் கொடுத்துட்டோம்.

    பொதுவாகத் தமிழ்நாட்டில் தன்மானம் குறைவாகவே இருக்கிறதோனு தோன்றுகிறது. எல்லோருமே இலவசங்களை எதிர்பார்ப்பதோடு அதிகம் பேராசையுடனும் இருக்கின்றனர். பொதுவாகப் பெரும்பான்மை மக்கள் இலவச அரிசி+ரேஷன் பொருட்களோடு இலவசமாக அரசு பெண்களுக்குக் கொடுக்கும் பணம் போன்றவற்றோடு டாஸ்மாக் இருந்துவிட்டால் போதும். திருப்தி அடைகின்றனர். வேறே வேலை வெட்டிக்குப் போகக் கூட ஆசை இல்லை. பிடித்த நடிகரின் படத்தை எப்படியாவது போய்ப் பார்க்கணும். உழைத்தால் அவருக்காக உழைக்கணும். இவ்வளவு தான் தமிழக மக்களின் ஆசை. எதிர்பார்ப்பே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்காலத்தில் டாஸ்மாக் கூட இலவசமாக கொடுக்கும் நாள் வருமோ... மாதம் ஐந்து லிட்டர் மது இலவசம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்வார்களோ!

      நீக்கு
  16. முகநூலிலேயே காரை ஓட்டிப் பார்த்துட்டேன் என்றாலும் மரம் நடுங்கி ஓடுவது தான் டாப் க்ளாஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  எனக்கு கிள்ளும் ஜோக்தான் டாப்.

      நீக்கு
  17. சொல்லலாமானு தெரியலை. ஆனாலும் சொல்றேன். புதுத் தாத்தா ஆன ஸ்ரீராமுக்கும் புதுப் பாட்டியான அவர் பாஸுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஆசிகள். புதிதாய்ப் பிறந்திருக்கும் ரோஜாப்பூவுக்கும் அவள் பெற்றோருக்கும், சித்தப்பா, சித்திக்கும் வாழ்த்துகள், ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதூ.... ஸ்ரீராம் சின்னப் பையன் என்று நினைத்திருந்தேனே... 'தாத்தா பாட்டி' ரேஞ்சுக்குக் கொண்டு போயிட்டீங்களே...

      நீக்கு
    2. ஹாஹாஹா, எனக்கு முதல் குழந்தை பிறக்கையில் என் அம்மாவுக்கு 40 வயசு ஆகலை. அப்பாவுக்கும் 50 வயது தான். இஃகி,இஃகி,இஃகி,இஃகி. அதனால் தான் ஸ்ரீராம் சின்னப் பையராக இருந்தாலும் "பையர் தாத்தா" ஆகிட்டார்.

      நீக்கு
    3. அன்பான சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் குடும்பத்திற்கு என் அன்பான நல்வாழ்த்துகள். மேலேயும் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இங்கும் மகிழ்ச்சி காரணமாக அவருக்கு மீண்டும் என் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

      நீக்கு
    4. புதிதாக பிறந்திருக்கும் குட்டி பேத்திக்கும் என் அன்பான ஆசிகள்.

      நீக்கு
    5. நன்றி கீதா அக்கா, நெல்லை, கமலா அக்கா.

      நீக்கு
    6. ’எங்கள்’ தாத்தா ! வாழ்த்துக்கள் !
      பேத்தியை கிரிக்கெட் ப்ளேயராக ஆக்கிவிடுங்கள். கேப்டனாக ஆகி, தங்கப் பதக்கம் வாங்கிக்கொண்டு வருவாள்!

      நீக்கு
  18. என் மாமனாரும் அவர் அண்ணாவும் 70கள் வரை குடுமிதான் வைச்சிருந்திருக்காங்க. 70 ஆம் ஆண்டில் என் இரண்டாவது நாத்தனார் கல்யாணத்தின் போது பெரியப்பா ஊரிலிருந்து கல்யாணச் சத்திரத்துக்கு வரும் வழியில் கும்பகோணம் டவுன் ஹாலில் சிலர் அவரைக் கேலி செய்து குடுமியை வலுக்கட்டாயமாய் அறுத்துப் பூணூலையும் அறுத்துவிட்டார்கள் எனக் கல்யாணச் சத்திரத்திற்கு வந்து அழுதிருக்கார். ஆனாலும் கடைசிவரை குடுமியை எடுக்கலை. என் மாமனார் பயந்து கொண்டு அதன் பின்னர் குடுமியே வைச்சுக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேரம் ஆங்காங்கே குடுமிகள் அறுக்கப்பட்டு. பூணூல்கள் அறுக்கப்பட்டன.

      நீக்கு
  19. சுஜாதாவின் கதை அருமை. ' நீ நீயாக இரு ' ....என்பதுபோல.

    மதன் ஜோக்ஸ் மிகவும் ரசிக்க முடிந்தது..

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் தாத்தா ஆகி விட்டார்...
    மகிழ்ச்சி...

    புதிய ஜீவனுக்கும் மற்றும் பெற்றோருக்கும் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  21. இங்கும் சொல்வதில் மிக மகிழ்ச்சி. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் வாழ்த்துகள். பாப்பா அவள் பெற்றோர் மற்றும் அனைவரும் சுகமாகச் சிறப்புடன் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  22. முதலில் புதிய தாத்தா பாட்டிக்கு வாழ்த்துகள்.

    சுஜாதா கதைக்குக் கேக்கணுமா என்ன? அருமை. வடக்கிலும் சிலர் குட்டியாக உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும்படியான குடுமி வைத்திருப்பதைப் பாத்திருக்கேன். சிலர் சின்னதா முடிச்சுப்போட்டிருப்பாங்க, சிலர் அந்த முடியை மட்டும் கொஞ்சம் நீளமா விட்ருப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அமைதிச்சாரல்.. உங்கள் வருகை சந்தோஷம் தருகிறது.  கருத்துக்கு நன்றி.  முன்புபோல் இல்லாமல் இப்போது நிறையபேர் குடுமி வைத்துக் கொள்கிறார்கள் போல.

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!