3.10.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 40 + மனசாட்சியம் - 3

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி   40 

ஒரு பகுதியில் சூர்யா சார், அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் பதிவில், அஷ்டாக்ஷரத்தில் ‘ஓம்’ என்ற எழுத்தைச் சேர்த்து எட்டு எழுத்துகள் இருக்கின்றன, அதனால் அது அஷ்டாக்ஷரம், ஆனால் “ஓம் நமசிவாய” என்று இருக்க, அதில் ‘ஓம்’ சேர்க்காமல் ஐந்தெழுத்து மந்திரம் என்றும், “ஓம் சரவணபவ” என்றிருக்க, அதில் ‘ஓம்’ சேர்க்காமல் ஆறெழுத்து மந்திரம் என்று சொல்வதன் காரணம் என்ன என்று கேட்டிருந்தார். 

அன்று அவருக்கு பதில் எழுத இயலவில்லை. பிறகு எழுத நினைத்த போது, இனி பதிவைப் பார்க்க அவர் வருவாரா என்ற சந்தேகத்தால் அந்தப் பதில் எழுதவில்லை. இதனை ஏன் இந்தப் பகுதியிலேயே எழுதிவிடக் கூடாது என்று தோன்றியது. நான் பிறப்பால் வைணவன். இருந்தாலும் தமிழில் பற்றுக்கொண்டிருப்பதால், திருமுறைகள் மற்றும் பல இலக்கியப் பாடல்களின் ஓசை, அர்த்த நயங்களை மிகவும் ரசிப்பேன். திருமுறைகளின் பதிகங்களில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை பிரபந்தங்களில் அதே அர்த்தங்களுடன் ஆனால் வைணவ சமயப் பாங்கில் எழுதப்பட்டுள்ளவை கண்டு வியந்திருக்கிறேன். 

திவ்யப் பிரபந்தங்களும் திருமுறைகளும் தமிழர்களால் தமிழில் இயற்றப் பெற்றவை. பிரபந்தங்களில் சமஸ்கிருதப் பெயர் சொற்களும், வார்த்தைகளும் தமிழ்ப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளன (திருமுறைகளை அவ்வளவு தூரம் ஆராயும் வாய்ப்பு கிடைக்கவில்லை) உதாரணமாக வைஷ்ணவர் என்பது வைட்டணவர், தேஜஸ் என்பது தேசு, விஷ்ணு என்பது ‘விட்டு’, பூஜை என்பது பூசனை, கம்சன் என்பது கஞ்சன்.. இது போல பல உதாரணங்கள் கொடுக்கலாம். பொங்கல் என்பதற்குப் பதில், பால் சோறு மூட நெய் பெய்து, நெய்யும் பாலும் கன்னலும் அமுதுமாகி என்றுதான் உபயோகித்திருக்கிறார்கள். 

ஓம் என்பது வடமொழி. அந்த வார்த்தையை திவ்யப் பிரபந்தத்தில் உபயோகப்படுத்தவில்லை. திருவாய்மொழியில் 1102 பாசுரங்கள் உள்ளன என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். (மொத்தம் பத்து பத்துக்கள். ஒவ்வொரு பத்திலும் பத்து திருவாய்மொழிகள். ஒவ்வொரு திருவாய்மொழியும் 11 பாசுரங்களால் ஆனது. ஆனால் ஒரு திருவாய்மொழி மாத்திரம், பன்னிரு நாமங்களைக் குறிப்பிடுவதால், 13 பாசுரங்களால் ஆனது).  இந்தத் திருவாய்மொழியில் முதல் பத்து முக்கியம் என்பர். அதாவது ஆயிரம் பாசுரங்களில் முதல் நூறு பாசுரங்கள். அதைச் சேவிக்க முடியவில்லை என்றால் முதல் பத்துப் பாசுரங்களையாவது சேவிக்கணும் என்பர். (உயர்வற உயர்நலம் என்று ஆரம்பிக்கும் பாசுரங்கள்). அதையும் சேவிக்க முடியவில்லை என்றால் முதல் மூன்று பாசுரங்களையாவது சேவிக்கணும் என்பர். அதுவும் முடியாத பட்சத்தில், முதல் பாசுரத்தையாவது சேவிக்கணும் என்பர். அந்தப் பாசுரமாவது, 

உயர்வு அற உயர் நலம்* உடையவன் யவன் அவன் **
மயர்வு அற மதி நலம்* அருளினன் யவன் அவன் **
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி யவன் அவன் **
துயர் அறு சுடரடி* தொழுது எழு என் மனனே  

இந்தப் பாசுரத்தில் முதல் மூன்று வரிகளில் முதல் எழுத்து ஓம் என்பதைக் குறிக்கிறது என்பர். அதாவது ஓம் என்பதன் விரிவு அ, உ, ம. ஆனால் இதில் அ, ம, உ என்ற வரிசையில் வந்திருக்கிறது. இதனைப் பிறகு பார்ப்போம். 

நான் சொல்ல வருவது, தமிழ் மறைகளில் ‘ஓம்’ என்ற சொல் கிடையாது. (எழுதியபோது இப்படி எழுதியிருந்தேன். ஆனால் ஓம் என்பதை தன் பதிகத்தில் சிவவாக்கியர் – பின்பு திருமழிசை ஆழ்வார் ஆனவர், உபயோகப்படுத்தியிருக்கிறார்) அதனால் ஐந்தெழுத்து மந்திரம் என்றால் ‘நமச்சிவாய’ மாத்திரம்தான். ஆறெழுத்து மந்திரம் ‘சரவணபவ’. இரண்டுமே தமிழ்ச்சொல்லாக உபயோகித்திருக்கின்றனர். ‘சிவ’ என்ற சொல், வேதங்களில் கிடையாது, அங்கு ‘ருத்ரன்’ என்றே குறிக்கப்படுகிறது என்பது என் நினைவு. (ஆனால் நமச்சிவாய என்ற மந்திரம் ருத்ரத்தில் வருகிறது என்று நினைவு) அதனால் தமிழ்ச்சொல்லில் வடமொழியான ‘ஓம்’ கலப்பதில்லை. அதே சமயம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்பது வடமொழி. அதில் எட்டு எழுத்துக்கள் இருப்பதால் அஷ்டாக்ஷரம் அல்லது எட்டெழுத்து மந்திரம். 

அப்படியென்றால் வைணவ ஆச்சர்யர்கள் தங்கள் கிரந்தங்களில் ‘ஓம்’ என்பதை உபயோகிக்கவில்லையா என்று கேட்டால், இரண்டு இடங்களில் ‘ஓம்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த நினைவு இருக்கிறது. 

ஸ்வாமி அருளாளப் பெருமாள் எம்பெருமானார், தம்முடைய பிரமேயசாரம் என்ற நூலில், 5ம் பாசுரத்தில் உபயோகித்திருக்கிறார். இவர் இராமானுஜரின் முதன்மைச் சீடர். இவரது வரலாறு பிறகு வரும். பிரமேய சாரம் என்ற நூல் திருமாலை வழிபடும் முறை மற்றும் எட்டெழுத்து மந்திரத்தின் சிறப்பைச் சுருக்கமாக உரைக்கும் நூல் (பத்து பாசுரங்களாலானது) 

வழியாவது ஒன்று என்றால் மற்றவை முற்றும்
ஒழியா, அது ஒன்று என்றால் “ஓம்” என்று -இழியாதே
இத்தலையால் ஏதுமில்லை என்று இருந்ததுதான்
அத்தலையால் வந்த அருள் 

பொருள்: இறைவனை அல்லது முக்தியை அடையும் வழி ஒன்றுதான் என்று நாம் உணரும்போது, மற்ற உலக ஆசைகள் பற்றுகள் மற்றும் பல்வேறுபட்ட சிந்தனைகள் அனைத்தும் தானாகவே ஒழிந்துபோகும். அந்த முழுமுதற் கடவுள் ஒன்றே என்று உணர்ந்துவிட்டால், அதுவே பிரபஞ்சத்தின் ஓம் என்ற நாதமாக ஒளிரும். நாம் உய்வடைய, நம்முடைய முயற்சி போதாது என்று ஒருவன் தன் இயலாமையை முழுமையாக உணர்ந்து அமைதியாக இருப்பதே சிறந்த சரணாகதி. அப்படி நாம் நம் அகந்தையை விட்டுவிட்டு இறைவனிடம் முழுமையாகச் சரணடையும்போது, அந்த பரம்பொருள் தன் எல்லையற்ற கருணையால் வந்து நம்மை ஆட்கொள்ளுவான். 

பொருள் விளக்கம்: வழியாவது ஒன்று – பரம்பொருளை அடையும் வழி ஒன்றுதான் என்று ஒருவன் ஆழமாக உணர்ந்தால், அவனது மனம் சிதறாது. உலக ஆசைகள், மாயை, பற்று மற்றும் தேவையில்லாத சிந்தனைகள் அனைத்தும் அந்த பரம்பொருளின் ஒளியில் தானாகவே எரிந்து சாம்பலாகிவிடும். ஓம் என்று – பிரபஞ்சத்தின் ஆதி நாதமான ஓம் என்னும் உணர்வில் கலப்பதாகும். இறைவனை உருவமாக மட்டும் பார்க்காமல் அருவமான நாத வடிவாக நாம் உணரும் நிலை இது. 

ஸ்வாமி மணவாளமாமுனிகள் (தென்கலை சம்ப்ரதாயத்தின் ஆச்சார்யரான இவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் காலத்திற்கு சுமார் 300 ஆண்டுகள் பிற்பட்டவர். வடகலை சம்ப்ரதாயத்தின் ஆச்சார்யரான ஸ்வாமி வேதாந்த தேசிகருக்கு 100 ஆண்டுகள் பிற்பட்டவர்) தம்முடைய உபதேசரத்தினமாலை என்ற கிரந்தத்தில், 19ம் பாசுரமான திருப்பல்லாண்டின் சிறப்பைப் போற்றும் பாசுரத்தில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார். 

கோதிலவாம் ஆழ்வார்கள் * கூறுகலைக் கெல்லாம் *

ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் * வேதத்துக்கு

ஓம் என்னும் அது போல் * உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய் *

தான் மங்கலம் ஆதலால் 

பொருள்: குற்றம் இல்லாத ஆழ்வார்களின் அருளிச்செயல்களான தமிழ் மறையான நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் முதலாவதாக பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு வைக்கப்பட்டுள்ளது எதைப் போல என்றால், வேதங்களின் தொடக்கமாக மங்கலமாக ‘ஓம்’ என்று பிரணவ மந்திரம் வைக்கப்பட்டுள்ளதைப் போல. 

விளக்கம்: பெரியாழ்வார் அவருடைய திருமொழியில் பொதுவாக கண்ணனின் லீலைகளை அனுபவித்துப் பாடியுள்ளார். அவர், பெருமாளுக்கு கண்ணேறு பட்டுவிடக் கூடாது என்று உருகி ‘திருப்பல்லாண்டு’ என்ற பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார். இந்த திருப்பல்லாண்டே, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், முதல் ஆயிரத்தில், முதலாவதான பத்தாக வைக்கப்பட்டுள்ளது. (இப்படி ஒழுங்குபடுத்தியவர் நாதமுனிகள் என்று முன்பே படித்திருக்கிறோம்) 

கோதில-குற்றம் இல்லாத,  கூறு கலை-அவர்கள் இயற்றிய பிரபந்தங்கள், ஓம் – வேதங்களை ஆரம்பிப்பதற்கு முன்பு ஓம் என்ற ஒலியுடன் ஆரம்பிப்பார்கள். அதுபோல, பிரபந்தங்களுக்கு திருப்பல்லாண்டு. சுருக்காய் – ஓம் என்ற பிரணவ சப்தமே வேதங்களின் சுருக்கு என்கிறார். அதுபோல திருப்பல்லாண்டே, நாலாயிர திவ்யப் பிரபந்தங்களின் சுருக்கு. 

இனி இன்றைய பாசுரமான உயர்வற உயர்நலம் என்ற பாசுரத்தின் பொருளைப் பார்ப்போம். 

##உயர்வற உயர்நலம்* உடையவன் எவன்? அவன்*

மயர்வற மதிநலம்* அருளினன் எவன்? அவன்*

அயர்வறும் அமரர்கள்* அதிபதி எவன்? அவன்*

துயர் அறு சுடரடி* தொழுது எழு என்மனனே!   

பொருள்: என்னுடைய மனமே… எவனுக்கு எல்லோருடைய மேன்மைகளைக் காட்டிலும் மேன்மையான நல்ல குணங்கள் உண்டோ, அவன் என்னிடமிருந்த விபரீத ஞானமாகிய அறியாமையை அகற்றினான். மறதியே இல்லாத தேவர்களின் தலைவன் அவன். அனைத்துத் துயரங்களையும் நீக்குகின்ற அவனது ஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து எழுவாயாக.    

விளக்கம்: உயர்வற உயர்நலம் உடையவன் – தன்னைவிட உயர்ந்தவர் என்று யாரையும் சொல்லமுடியாதபடி, எண்ணிறந்த, அழகு, அறிவு, ஆற்றல் போன்ற நற்குணங்களையும், எல்லையற்ற நன்மைகளையும் உடையவன். மறர்வற மதிநலம் அருளினன்– அறியாமை, மயக்கம் போன்றவற்றை முழுமையாகப் போக்கி, தெளிவான மெய்ஞானத்தை அருள்பவன், அயர்வறும் அமரர்கள் – சோர்வு மறதி போன்ற குறைகள் இல்லாத தேவர்கள்-நித்ய சூரிகள், துயர் அறு சுடரடி-நம் துன்பங்களைத் தொலைக்கும் சுடரடி. அல்லது துன்பங்களே இல்லாத ஒளி பொருந்திய திருவடிகள் 

இந்த முதல் பாசுரத்திற்கு மாத்திரம் விளக்கம் 22-25 ஏடுகளில் கொடுத்திருக்கிறார்  (1102 பாசுரங்களுக்கும், ஒவ்வொரு பத்து பாசுரங்களுக்கும் அவதாரிகை போன்றவை சேர்த்து மொத்த ஏடுகள் 36,000.) 

உயர்வற என்ற முதல் பாசுரத்திற்கான வியாக்கியானம் ஏடுகளில் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் கொடுக்கிறேன். அந்தக் காலத்தில் திருவாய்மொழி மற்றும் பிரபந்தங்களுக்கு மணிப்பிரவாள நடையில் பேருரை நிகழ்த்தப்பட்டது. அதைப் புரிந்துகொள்ளும் அளவு வடமொழி ஞானமும் கேட்பவர்களிடத்தில் மிகுந்து இருந்தது. 

நீங்கள் ஏதோ ஒரு ஊரில் பத்து இருபது பேர்களிடத்தில்தான் இந்த ஞானம் இருந்திருக்கும் என்று எண்ண வேண்டாம். 1323ல், மாலிக்காபூர் படையெடுப்பின்போது பன்னீராயிரம் வைணவர்கள் கோயிலைக் காக்க முற்பட்டபோது அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இதனை பன்னீராயிரம் வைணவர்களை தலையறுத்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுபோல, நம்பிள்ள திருவரங்கம் கோயிலில் சன்னிதிக்கு கிழக்குப் பகுதியில் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்யும்போது நிறையபேர் கலந்துகொண்டனர் என்பதால், காலக்ஷேபம் முடிந்து மக்கள் வெளியேறும்போது, இது நம்பிள்ளை கோஷ்டியோ நம்பெருமாள் கோஷ்டியோ என்று சொல்வர் (அதாவது உற்சவர் திருவீதி உலா வரும்போது திரளும் மக்கள் கூட்டத்தைப் போல நம்பிள்ளையின் பேருரையைக் கேட்க அவ்வளவு மக்கள் கலந்துகொண்டனர் என்பது பொருள்) 

ஏட்டில் இருப்பது: உயர்வர இத்யாதி – பகவதாநந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள் மநுஷ்யாநந்தம் தொடங்கி ப்ரஹ்மாநந்தத்தளவும் சென்று பின்னையும் அவ்வருகே உத்ப்ரேக்ஷித்துக்கொண்டு சென்று, பின்னையும் பரிச்சேதிக்கமாட்டாதே யதோ வாசோ நிவர்த்தந்தே என்று மீண்டவனவிறே; இது ஆநந்தகுணமொன்றிலுமிறே; குணங்கள் எல்லாம் இப்படியேயிறே இருப்பது; இக்குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய் பேசுகிறாரிறே இவர் 

நம் தமிழில்: வேதங்கள் சர்வேஸ்வரனின் ஆனந்தம் என்ற குணத்தை மாத்திரம் சொல்லத் தொடங்கின. பிரம்மம் என்ப்படும் சர்வேஸ்வரனின் ஆனந்தத்தை மனிதனின் உயர்ந்த ஆனந்தத்தை ஒரு அலகாக வைத்து விளக்க முற்படுகின்றன. (இதனைச் சொல்வது தைத்ரீய உபநிடதத்தின் ஆனந்தவல்லி பகுதி)  நல்ல கல்வி, வீரம், செல்வம், நல்ல ஆரோக்கியம், நல்ல குணம் கொண்ட ஒரு இளைஞன் இந்த உலகில் ஆண்டு அனுபவிக்கும் இன்பமே உயர்ந்த மனித இன்பம். அது ஒரு அலகு என்றால், மனுஷ்ய கந்தர்வர் இன்பம் இதனைப் போல் 100 மடங்கு. அந்த மனுஷ்ய கந்தர்வர் இன்பம் ஒரு அலகு என்று வைத்துக்கொண்டால், தேவ கந்தர்வர் இன்பம் நூறு மடங்கு. பித்ருக்களின் இன்பம் தேவ கந்தர்வனின் இன்பத்தைப் போல நூறு மடங்கு. இதைப் போல, ஆஜானஜ தேவர்கள், கர்ம தேவர்கள், முக்ய தேவர்கள், இந்திரன், பிரஹஸ்பதி, பிரஜாபதி போன்றோரின் இன்பம் அதற்கு முந்தைய படியைப் போல நூறு மடங்கு. பிரஜாபதி (பிரம்மன்) இன்பத்தைப் போல நூறு மடங்கு பகவானின் ஆன ந்தமா என்றால், அப்படி அல்ல, திரும்பவும் பிரஜாபதியின் ஆன ந்தம் போல மனித ஆனந்தத்தை எடுத்துக்கொண்டு திரும்பவும் இதே போல கணக்குப் போட்டாலும் பிரம்மத்தின் ஆனந்தத்தைக் கணக்கிட முடியாது.  ஆனந்தவல்லி பகுதி, யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ. என்று சொல்லிவிடுகிறது. 

அதாவது, பரம்பொருளை நமது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சிந்திக்கிற மனதால் முழுமையாக உணரவோ கண்க்ழ்டையவோ இயலாது. நமது புலன்களுக்கு ஒரு எல்லையுண்டு. ஆனால் பரம்பொருள் எல்லையற்றவன். 

இந்த விசாரம், கணக்கீடு  ஆனந்தம் என்ற ஒரு  குணத்தைக் கூறுவதற்கு மட்டுமே ஆனது. பரம்பொருள்ன் அனைத்துக் குணங்களும் அவ்வாறே உள்ளன. வேதங்களால் எல்லை காண இயலாதவைகளைத் தனக்கு அறிய முடிவதாக ஆழ்வார் கூறுகிறாரே என்றால், வேதங்களால் எல்லை காண முடியாதவற்றையும் தாம் அறியும்படி ஆழ்வாருக்கு ஞானம் இருந்தது என்கிறார். 

ஒரு ஏட்டில் மணிப்பிரவாளத்தில் இருப்பதை, நன்கு கற்றறிந்த ஒருவரால்தான் நாம் புரிந்துகொள்ளும்படி விளக்கிச் சொல்ல இயலும் இப்படிக் கேட்டு அறிந்துகொள்வதைத்தான் கிரந்த காலக்ஷேபம் என்கிறார்கள். 

ஆசைகளை முற்றும் துறந்த ஞானிக்கு இந்த அனைத்துப் படிநிலைகளின் இன்பமும் முழுமையாக உடனடியாகக் கிடைத்துவிடுகிறது என்கிறார்கள். அதனால்தான் தியானம் கைவரப் பெற்றவர்களால் அந்த ஆனந்தத்தை, தியானம் செய்யும் காலத்தில் அனுபவிக்க இயல்கிறது என்கின்றனர். 

ஓலைச் சுவடிகளில் இந்த மாதிரி எழுதப்பட்டு, அவை கட்டிவைக்கப் பட்டிருக்கும். ஒரு ஓலைச் சுவடி, சுமார் 100 ஆண்டுகள் அல்லது 200 ஆண்டுகள் பத்திரமாக இருக்கும். பிறகு அதனைப் படி எடுக்கவேண்டும் (புதிய ஓலையில் திரும்ப எழுத வேண்டும்). அப்படி எழுதும்போது பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும். தம்முடைய அறிவால் சில வார்த்தைகளை மாற்றி எழுதும்போது (தெளிவாக இல்லாததாலோ இல்லை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதாலோ) பாடபேதம் ஏற்பட்டுவிடுகிறது. முப்பத்தாறாயிரப்படி கிரந்தத்துக்கே பல ஏட்டுச் சுவடிகள் தமிழகம், கர்நாடகா போன்ற பல இடங்களில் இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் இந்த மாதிரி தவறுகளோ, இல்லை சொல்லிக்கொடுக்கும்போது கேட்பதால் ஏற்படும் தவறுகளோ பாட பேதத்திற்குக் காரணமாகிவிடுகிறது. ஒரு ஆசிரியர்/குரு தவறாக பாடம் கேட்டிருந்தால் அந்தத் தவறுகள் தலைமுறை தலைமுறையாகத் தொடரும். இங்கு தவறு என்பது வார்த்தைகளில் இருக்கும், ஆனால் பொருள் தவறு பெரும்பாலும் இராது. இப்படி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், சுமார் 475 பாட பேதங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.  முதல் பாசுரமான பல்லாண்டில்,

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித் திருக்காப்பு 

இதில், பலகோடி நூறாயிரமும் என்றும் இருக்கிறதாம். அதுபோல செவ்வடி செவ்வி என்றும் இருக்கிறதாம்.  சேவடி என்றால், செ + அடி, அதாவது சிவந்த அடிகள் என்று பொருள். இதனையே செவ்வடி என்றாலும் அதே அர்த்தம்தான். (நான் கற்றுக்கொண்டது சேவடி என்றே). புத்தகத்தில் பாடபேதம் இருந்தாலும், நாம் சேவிக்கும்போது நமக்குக் கற்றுக்கொடுத்த மாதிரியே சேவித்துவிடுவோம். இதுபோலவே பிரபந்தப் பாசுரங்களின் வரிகளைப் பிரிப்பதும்.

இந்த மாதிரி சுவடிகளைப் பார்த்துத்தான் நூற்றாண்டுகளுக்கு முன்பு படித்தார்கள். எவ்வளவு கஷ்டம் பாருங்கள்.

இன்றைக்கு பதிவு ரொம்பவே நீளமாகிவிட்டதோ? அடுத்த வாரம் தொடரலாமா?...


===========================================================================================

மனசாட்சியம் - 3

K G Y Raman

"நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்" . காக்கை குருவியை தம் இணை இனமாக பாவித்து பாரதியார் ஆனந்தக் களிப்பு அடைந்தார். அதிர்ஷ்டக்கார மனிதர். நமக்கு அந்த நல்ல அதிர்ஷ்டம் இல்லையே. நாம் நோக்கும் இடமெல்லாம் கொலையும் கொள்ளையும் வேறு பல குற்றங்களும் மலிந்து காணப்படுகின்றன. ஊடகங்களில் பெரும் பகுதி இந்த மாதிரி குற்றங்களைப் பற்றி விவரங்கள் சொல்லுவதிலேயே காலம் கழிக்கின்றன.


அதிலும் நமது செய்தி ஊடகங்கள் அந்த குற்றம் நடைபெற்ற சூழல் எப்படி நடைபெற்றது என்கிற முழு விபரம் இவற்றை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டும் படங்களுடன், அப்படி படங்கள் கிடைக்காத போது செயற்கை நுண்ணறிவு மூலம் தயார் செய்யப்பட்ட படங்களைப் போட்டு, பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இதை ஒரு கொடூர திருப்தியுடன் மக்கள் ஆர்வமாக பார்ப்பதனால்தான் இந்த மாதிரியான தகவல்கள் இந்த மாதிரியான முறையில் தரப்படுகின்றன என்கிற சந்தேகம் வலுக்கிறது.

சட்டசபையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அன்றாடம் நடந்த குற்றங்களை விரல் விட்டு எண்ணி இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா என்று கேட்பதும் ஆளும்கட்சியினர் உங்கள் ஆட்சியில் என்ன கிழிந்தது என்று பதில் சொல்வதையும் காணும் போது சலிப்புதான் ஏற்படுகிறது.

உண்மையிலேயே குற்றங்கள் பெருகி பெருகிவிட்டனவா அல்லது குற்றங்களைப் பற்றிய தகவல்கள் இப்பொழுது இன்னும் புத்திசாலித்தனமாக சேகரிக்கப்பட்டு நமக்கு தரப்படுகிறதா என்பது விவாதிக்க கூடிய ஒரு விஷயம்.


இப்படி மனிதர்கள் எதற்கெடுத்தாலும் வன்முறையை கையில் எடுப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் நமது திரையுலகம் என்று தோன்றுகிறது. நமது நட்சத்திர கதாநாயகர்கள் யாரானாலும் சரி என்ன பிரச்சனை வந்தாலும் அதை குற்றம் செய்பவரை கொடுமையாக தாக்குவதன் மூலமும், சில சமயம் கொன்று விடுவதன் மூலமும் "தீர்வு" காண்கின்றனர். திரும்பத் திரும்பத் திரும்ப இதே மாதிரி படங்கள் நூற்றுக்கணக்கில் இல்லை, ஆயிர கணக்கில் வரும் போது அதை பார்க்கிற, அவ்வளவாக முதிர்ச்சி இல்லாத இளமனதில், என்ன மாதிரியான எண்ணங்கள் உதித்து வலுப்பெறும் ? "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்" என்று ஒரு பழமொழி வேறு நம்மிடையே இருக்கிறது.

அதேபோல ஒரு பெண்ணின் காதலை பெறுவதற்கு கதாநாயகர்கள் கையெடுக்கும் முயற்சிகள் பலவும் அசட்டுத்தனமாகவும் அல்லது முட்டாள்தனமாகவும் இருப்பதே திரும்பத் திரும்ப பார்க்கிறோம். 
நமது சமூகம் குட்டிச்சுவராவதற்கு நமது திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணம் என்ற எண்ணம் எனக்கு மிகவும் வலுவாக உண்டு. வன்முறையையும் போக்கிரி தனத்தையும் ஒரு பெரிய சாமர்த்தியமாக சித்தரிக்க நமது படங்கள் சுவடு இல்லாமல் செய்யும் பெருங்கேடு மிகவும் கவலைக்குரியது.

38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. உயர்வு அற உயர் நலம் பாடல் பள்ளியில் 11 வது படிக்கும் போது மனப்பாட பகுதி. பாடல் பகிர்வும் அதன் விளக்கவுரையும் அருமை.

    நேற்றுதான் திருமழிசை ஆழ்வார் மெய்ப்பொருளை அறிய சைவம், சமணம், பௌத்தம் என பல சமயங்களை ஆய்ந்து இறுதியில் திருமாலே முழுமுதல் தெய்வம் எனத் தெளிந்தார். என்று படித்தேன்,

    திருமழிசை ஆழ்வாருடன் காஞ்சியைவிட்டு வெளியேற ஆணையிட்டான்
    மன்னன் என்ற வரலாறு படித்தேன்.

    கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
    மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
    செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
    பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

    என்ற பாடலை படித்தேன், இங்கு நீங்கள் திருமழிசை ஆழ்வாரை பற்றி சொல்லீருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதோத்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமானை சமீபத்தில் தரிசனம் செய்தது நினைவுக்கு வருகிறது. மூலவர் பெரிய உருவத்துடன் ஆதிசேஷனில் சயனித்துக்கொண்டிருப்பார். மிக அழகிய திருவுருவம்.

      திருமழிசைப் பிரான் பற்றி இந்தப் பகுதியில் சிவ்வாக்கியர் பாடல்களுடன் எழுதுவேன்.

      நீக்கு
  3. ஓம் என்ற சொல்லுக்கு விளக்கமும் ,பாசுரங்கள் பகிர்வும் அதன் விளக்கங்களும் தினம் படித்து மனதில் இருத்தி கொள்ள வேண்டியவை.

    //இறைவனை அல்லது முக்தியை அடையும் வழி ஒன்றுதான் என்று நாம் உணரும்போது, மற்ற உலக ஆசைகள் பற்றுகள் மற்றும் பல்வேறுபட்ட சிந்தனைகள் அனைத்தும் தானாகவே ஒழிந்துபோகும். அந்த முழுமுதற் //கடவுள் ஒன்றே என்று உணர்ந்துவிட்டால், அதுவே பிரபஞ்சத்தின் ஓம் என்ற நாதமாக ஒளிரும். நாம் உய்வடைய, நம்முடைய முயற்சி போதாது என்று ஒருவன் தன் இயலாமையை முழுமையாக உணர்ந்து அமைதியாக இருப்பதே சிறந்த சரணாகதி. அப்படி நாம் நம் அகந்தையை விட்டுவிட்டு இறைவனிடம் முழுமையாகச் சரணடையும்போது, அந்த பரம்பொருள் தன் எல்லையற்ற கருணையால் வந்து நம்மை ஆட்கொள்ளுவான். //

    அருமையான விளக்கம். முழுமையாக சரணாகதி அடைய வேண்டும்.
    புரட்டாசி மாதம் பாசுரங்கள் படித்து வருவதால் இன்றைய பதிவை நாளை படிக்க எனக்கு உதவும். இன்று பொய்கை ஆழவாரின் முதல் திருவந்தாதி படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நாலாயிரமும் புரட்டாசி மாத்த்தில் படிப்பது சிறப்பு.

      இந்த எண்ணங்கள், கடவுள் பக்தி, திருமுறைகள் பிரபந்தங்களில் ஆர்வம், கோயில் தரிசனங்களில் ஆர்வம் இயல்பாக உங்களிடம் இருந்ததா இல்லை திருமணம் ஆனபின் அரசு சார் அவர்களிடமிருந்து ஆரம்பித்ததா?

      நீக்கு
    2. என் அப்பா, அம்மா எல்லோரும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்கள் என் பழை பதிவுகளில் அம்மா, அப்பா வைப்பற்றி எழுதிய பதிவுகளில் சொல்லி இருப்பேன். அப்பாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும் அந்த ஊரில் உள்ள கோயில்களுக்கு அழைத்து சென்று விடுவார்கள்.வீட்டில் ஞாயிறு பஜன் உண்டு.கார்த்திகை சோமவாரம், வெள்ளிக்கிழமை லட்சுமி அஷ்டோத்திரம் பாடல்பாடி விளக்கு பூஜை செய்ய வேண்டும்.
      கோயில்களில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு அழைத்து செல்வார்கள். எனக்கும் இயல்பாக தெய்வ பக்தி வந்தது.

      பகவத் கீதை , பஜகோவிந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் மனப் பாடமாக படிப்பேன். திருமணம் ஆனபின் இவைகளை பாடுவதை விட்டு விட்டேன். மீண்டும் பாட ஆரம்பித்து இருக்கிறேன்.

      கணவர் வீட்டில் தேவாரம்,திருவாசகம், முற்றோதல் உண்டு. மாமனார், கணவர் ஆன்மீக சொற்பொழிவுகள் செய்வார்கள் . புராட்டாசி மாதம் நாலயிரதிவ்யபிரபந்தம் பாராயணம் செய்வார்கள். ஆனி மாதம் தொடங்கி அடுத்த ஆனி மாதத்தில் பன்னிரு திருமுறை பாராயணம் செய்வார்கள். மாமியாரும், என் கணவரும்.

      கார்த்திகை மாதம் கந்தசஷ்டி விரதம் ஆறு நாளும் இருப்போம். மாத சஷ்டி விரதம் இருப்போம், ஞாயிறு திருவெண்காடு அகோர மூர்த்தியை நினைத்து விரதம் கடைபிடிப்போம். இப்போது விரதங்கள் இருக்க கூடாது என்கிறார்கள்.

      நாலாயிரமும் புரட்டாசி மாத்த்தில் படிப்பது கணவரிடமிருந்து வந்தது.

      இப்போது இறை பக்திதான் என்னை வழி நடத்தி செல்கிறது என் கவலைகளை மறந்து நடப்பது எல்லாம் இறைவன் விருப்பம் என்ற தெளிவு ஏற்பட்டு இருக்கிறது.

      நீக்கு
    3. மிக்க மகிழ்ச்சி கோமதி அரசு மேடம்.... புரட்டாசியில் நாலாயிரம் படிப்பதும், முற்றோதுதலும் மிகவும் சிறப்பு. இன்றளவும் நீங்கள் தொடர்வதே ஆச்சர்யம். எல்லாம் இறைவன் செயல்.

      உண்மையாகவே தெய்வ பக்திதான் நம்மை வழி நடத்திச் செல்லும். பல கஷ்டங்களுக்கு நம்மிடம் தீர்வு இல்லை. எது நடந்தாலும் அது இறைவனின் திட்டப்படியே நடக்கிறது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏன் இப்படி ஆனது என்று அதிர்ந்த காலம் 2018ல் வந்தது... ஆனால் பிறகு எல்லாமே அவனது திட்டம், இதில் என் செயல் என்று ஒன்றும் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டது.

      விரதங்கள் நம் உடல் நிலையைப் பொறுத்ததுதான். அவன் நாமத்தை என்ணியிருந்தாலே போதுமானது.

      வாழ்க வளமுடன்

      நீக்கு
  4. ஆனந்தவல்லி பகுதி. கிரந்த காலக்ஷேபம் எல்லாம் அருமையான விவரங்கள் நிதானமாக படிக்கிறேன் அனைத்தையும்.
    உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மனசாட்சியம் - 3 இன்றைய பகுதி அருமையாக இருக்கிறது.

    //அதிலும் நமது செய்தி ஊடகங்கள் அந்த குற்றம் நடைபெற்ற சூழல் எப்படி நடைபெற்றது என்கிற முழு விபரம் இவற்றை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டும் படங்களுடன், அப்படி படங்கள் கிடைக்காத போது செயற்கை நுண்ணறிவு மூலம் தயார் செய்யப்பட்ட படங்களைப் போட்டு, பார்வையாளர்களை ஈர்க்கின்றன//

    உண்மை. இந்த மாதிரி காட்சிகளை எனக்கு பார்க்க பிடிப்பது இல்லை பார்க்க மன திடம் இல்லை.

    //போக்கிரி தனத்தையும் ஒரு பெரிய சாமர்த்தியமாக சித்தரிக்க நமது படங்கள் சுவடு இல்லாமல் செய்யும் பெருங்கேடு மிகவும் கவலைக்குரியது.//

    ஆமாம், சமூகத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் நாடகங்களில், சினிமாக்களில் அதை நியாயபடுத்துகிறார்கள் அது கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. // நான் பிறப்பால் வைணவன். இருந்தாலும்.. //

    "I am a born Christian" என்று நம் நிதிமந்திரி சட்டசபையில் சொன்னது நினைவுக்கு வருகிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். பிறப்பில் வரும் வழக்கத்தைவிட பிறவற்றையும் அறிந்துகொள்ளும்போது நமக்கு இன்னும் தெளிவு வரும் என நினைக்கிறேன்.

      நீக்கு
  7. 'உயர்வற உயர்நலம்' பள்ளிக்காலத்தில் மனப்பாடப்பகுதி.  இங்கு நீங்கள் பிரித்துக் கொடுத்திருக்கிறீர்கள் போல.  அப்போது மூன்றாவது வரியில் கொஞ்சம் தடுமாறி நிற்பேன் நான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படித்திருக்கிறேன். இன்னும் பல பாடல்கள் நினைவில் இருக்கின்றன.

      இப்போதெல்லாம் பாசுரங்களை எழுதும்போது பிரித்து எழுதினால்தான் படிப்பவர்களுக்குப் பொருள் விளங்கும், எனக்குமே, என்பதால் பிரித்து எழுதுகிறேன். இலக்கணப்படி அப்படிச் செய்யக் கூடாது.

      நீக்கு
  8. // ‘ஓம் நமோ நாராயணாய’ என்பது வடமொழி. அதில் எட்டு எழுத்துக்கள் இருப்பதால்//

    எனக்கு ஒன்பது தெரிகிறது பாஸ்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் என்பது ஓரெழுத்து. பாடல்களிலும் இப்படி வரும். புள்ளி வைக்கப்பட்டவைகளை எழுத்தாக பாவிப்பதில்லை.

      நீக்கு
  9. வழியாவது ஒன்று பாசுரம் படிக்க நன்றாயிருக்கிறது.  ஏனோ எனக்கு மந்திரமாவது நீறு வரிகள் நினைவுக்கு வந்தன.   

    பொருளை படிக்கும்போது அப்படி இல்லை என்று தெரிந்தாலும் மணவாள மாமுனிகள் பாசுரம் பாதியில் நிற்பது போல தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஶ்ரீராம்.. எனக்கும் எழுதும்போது நினைவுக்கு வந்தது. ஸ்வாமி மணவாள மாமுனிகளின் பாசுரம் வெண்பா முழுவதும் கொடுத்திருக்கிறேனே. கலரினால் அப்படித் தோன்றுகிறதோ?

      நீக்கு
  10. // அப்படி எழுதும்போது பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும். தம்முடைய அறிவால் சில வார்த்தைகளை மாற்றி எழுதும்போது (தெளிவாக இல்லாததாலோ இல்லை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதாலோ) பாடபேதம் ஏற்பட்டுவிடுகிறது.  //

    இப்போது நம்முடைய ஜெமினி இதைத்தான் செய்கிறது.  'படி' எடுக்கும்போது அங்கிருக்கும் வரிகள் தெளிவில்லா விட்டால், அல்லது புரியா விட்டால் அந்த வரிகளில் முந்தைய பிந்தைய வரிகளுக்கு பொருத்தமாய் தான் ஒரு வரியை இட்டு நிரப்பி விடுகிறது.  பொறுமையாக சோதித்தால்தான் இந்த திப்பிசம் தெரியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஐ இந்த மாதரி நிறைய விஷயங்கள் செய்கிறது. மிகவும் உபயோகம். இருந்தாலும் உண்மை எது, பொய் எது என்பது தெரிவதில்லை. ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்களை, சம்பந்தமில்லாமல் கவடுக்கிறது. இதனை வைத்து எத்தனை போலி காணொளிகள். பார்வையாளர்களைக் கவரணும் என இட்டுக்கட்டப்பட்ட காணொளிகள்.

      நீக்கு
  11. அந்தச் சுவடிகளில்தான் எவ்வளவு சிறிதாக வரிகள் கீறப்பட்டிருக்கின்றன?  அபார பயிற்சியும் பொறுமையும் இருந்திருக்க வேண்டும் அப்போதைய புலவர்களுக்கு. அல்லது ஓலை கீறுபவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் திருவரங்கம் கோயிலில் சுவடிகளைச்்சுத்தம் செய்துகொண்டிருந்தகோது பார்வையிட்டான். மிக மிக நீளமான ஓலைகள். கோயில் கணக்குகளைக் குறிக்க உபயோகித்திருக்கின்றனர்.

      கீறுவது என்ற சொல் அதிராவை நினைவுபடுத்திவிட்டது. அவங்களும் ஏஞ்சலினும் வீட்டு வேலைகளிலேயே மூழ்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

      நீக்கு
  12. ஏஐ வந்தாலும் வந்தது, செய்தியை இவங்களே நேரில் பார்ப்பதுபோல காணொளி வெளியிடறாங்க. எனக்கு யூடியூப் காணொளிகளில் நம்பிக்கைத் தன்மை ஏற்படுவதில்லை.

    திரைப்படங்களில் வில்லன்களைக் கதாநாயகனாக ஆக்குவது, வன்முறை ஆபாசங்களை பரவலாக்குவது, சமுதாயம் சீரழிந்ததற்குக் காரணம். இதனை எடுப்பவர்களே, அப்படி நடித்தவர்களே சமுதாய நலனுக்காக குரல் எழுப்புவதுபோல, இன்னமும் சமூகத்தைச் சீரழிக்க முயல்கின்றனர். பிரகாஷ்ராஜ, வெற்றிமாறன், அமீர், சூர்யா குடும்பம் எனப் பலரும் இந்த லிஸ்டில் வருவர்

    தொடர்பகுதி சிறப்பு

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  14. //உதாரணமாக வைஷ்ணவர் என்பது வைட்டணவர், தேஜஸ் என்பது தேசு, விஷ்ணு என்பது ‘விட்டு’, பூஜை என்பது பூசனை, கம்சன் என்பது கஞ்சன்.. இது போல பல உதாரணங்கள் கொடுக்கலாம். பொங்கல் என்பதற்குப் பதில், பால் சோறு மூட நெய் பெய்து, நெய்யும் பாலும் கன்னலும் அமுதுமாகி என்றுதான் உபயோகித்திருக்கிறார்கள். // உங்கள் அளவுக்கு ஆராயாவிட்டாலும் ஓரளவுக்கு இந்தத் தமிழாக்கங்களை நானும் கவனிச்சிருக்கேன். ஆனால் வைட்டணவர்னு படிச்சதில்லை. விட்டு எனப் படிச்சிருக்கேன். கஞ்சன் என்னும் சொல்லெல்லாம் சிலப்பதிகாரத்திலும் வந்திருக்கு ஆய்ச்சியர் குரவையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.

      திருவாய்மொழி 5ம் பத்து, 5ம் பதிகத்தில் வந்திருக்கிறது.

      அறிவரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
      நறிய நல் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன**
      குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி யதன் மேல்*
      அறியக் கற்று வல்லார் வைட்டணவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. 3287/5.5.11

      நீக்கு
  15. "வழியாவது ஒன்று " பாடலின் பொருள் நாமே எளிதில் புரிஞ்சுக்கறாப்போல் இருக்கு. ஸ்ரீராம் சொல்றாப்போல் தேவாரப் பாடல்களை நினைவூட்டுகிறது தான்.

    கீழே இந்தப் பாடலில் இதோடு நின்னு போயிருப்பதால் ஸ்ரீராமுக்குப் பாடல் முடியலைனு தோணுது.
    உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய் *

    தான் மங்கலம் ஆதலால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்பாவில் கடைசி வரி மூன்று வார்த்தைகள்தானே வரும்?

      நீக்கு
  16. திரு ராமன் அவர்கள் எழுதி இருப்பதில் கடைசிப் பத்தி நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்கிறது. அகிலும் இப்போதைய காலத்தை நினைத்தால் இளம் பெண்கள் நிலை மட்டுமில்லாமல் ஆண்களின் நிலையையும் நினைத்துக் கவலை ஏற்படுகிறது. பெண்கள் குருட்டுத்தனமான கனவில் ஆழ்ந்து வாழ்க்கையைக் கோட்டை விடுகின்றனர். அல்பத்தனமான ஆசைகளுக்கு வடிவம் கொடுக்க நினைக்கிறார்க்ள். நேத்திக்கு ஒரு இளம்பெண் (எந்த மாநிலம்னு தெரியலை) தமிழக முதலமைச்சர் வந்து தன்னைக் கட்டி அணைத்தால் தான் தான் எழுந்திருப்பேன் என டெல்லியின் போக்குவரத்து நிரம்பிய நடுச்சாலையில் படுத்துக் கொண்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார். இது ரொம்பக் கேவலமாகப் பெண்களுக்குப் பெண்களே செய்யும் ஓர் அவமரியாதையாக எனக்குத் தோன்றுகிறது. இதுவா பெண் சுதந்திரம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கரில், நன்றாகப் பாடிய 20+ வயதுப் பெண், நடிகர் ஆர்யா அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது, அவளுடைய ஆசையாக, ஆர்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டும் என்றார். இப்போ டெல்லிப் பெண், கட்டி அணைக்கணும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

      நாடு முன்னேறுவது உங்களுக்குப் பொறுக்கவில்லையா கீசா மேடம்?

      நீக்கு
  17. இன்றைய பாசுரபகிர்வு அருமை.

    ஓம் என்ற சொல்லுக்கு விளக்கமும் கண்டோம்.

    திரு. ராமன் அவர்களின் பகுதி இன்றைய படங்கள் படுத்தும் பாடு வன்முறைகளும் வக்கிரங்களும் பார்த்துப் பார்த்து மனங்களும் வக்கிரமாக போவது உண்மை.

    பதிலளிநீக்கு
  18. /‘ஓம் நமோ நாராயணாய’ என்பது வடமொழி. அதில் எட்டு எழுத்துக்கள் இருப்பதால் அஷ்டாக்ஷரம் /
    விளக்கத்துக்கு நன்றி நெல்லை!
    கடந்த மூன்று மாதங்களாக பதிவுகளைப் படிப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் (சமயத்தில் இரண்டு மூன்று வாரங்கள்) ஆகி விடுகின்றன. எனவேதான் பின்னூட்டம் போடுவதில்லை. தொடர்ந்து வாசித்து வருகிறேன் (in silent mode).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா சார்... என்ன உங்களைக் காணவில்லையே என்று பார்த்தேன். தொடர்ந்து வாசித்து வருவதில் சந்தோஷம்.

      நீக்கு
  19. பாசுரப் பகுதி, பல்வேறு விளக்கங்களுடன் சிறப்பாக உள்ளது. நீங்கள் அனுபவித்து வாசித்திருக்கிறீர்கள். அல்லது வாசித்து, அனுபவித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.
    தொடருங்கள். நலமுண்டாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார். அனுபவித்து வாசித்து, தொடர்புடையவைகளை வாசித்து அனுபவித்திருக்கிறேன். மிக்க நன்றி

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!