நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 41
சென்ற வாரத்தில் ஐந்தெழுத்து மந்திரம் மற்றும் ஆறெழுத்து மந்திரம் ஆகிய இரண்டில் ஓம்காரம் சேர்க்கப்படவில்லை, காரணம் ஓம் என்பது வடமொழிச் சொல் என்பதனால் இருக்கும் என்று எழுதியிருந்தேன். நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேனா என்ற சந்தேகம் என் மனதில் வந்துபோனது. சைவத் திருமுறைகள் சரியாகத் தெரியாமல் எழுதிவிட்டேனோ என்ற ஐயம்.
நான் சமீபத்தில் கர்நாடகா கோயில் யாத்திரை ஆறு நாட்கள் சென்றிருந்தேன். அப்போது டெம்போ டிராவலரில் எனக்குப் பின் அமர்ந்திருந்த தம்பதியினர் தினமும் சிவபுராணமும், சொற்றுணை வேதியனையும் ஒரு நாள் ‘ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை’ பதிகத்தையும் ஒலிக்கவிட்டனர். இவை அனைத்துமே என் மனதை ஆக்கிரமித்துக்கொண்டன. அதிலும் ‘சொற்றுணை வேதியனும்’ ‘ஓடி ஓடி’யும். அதில் ‘ஓடி ஓடி ஓடி ஓடி’ பதிகத்தில் பல, திருச்சந்த விருத்தத்தை ஒத்திருக்கிறதே என்று தோன்றியது. பெங்களூர் திரும்பியதும் அதனை எடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது சிவாக்கியர் எழுதியது. இவர் அந்தப் பிறப்பிலேயே திருமழிசை ஆழ்வாராக மாறினார் என்ற வரலாறு படித்திருக்கிறேன். சிவாக்கியரின் பதிகங்களில் ஒன்று என் ஐயத்தைத் தீர்த்தது என்று தோன்றியது. அந்தப் பதிகத்தை இங்கே கொடுக்கிறேன்.
ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே
இது சிவவாக்கியர் சிவனைப் பற்றிப் பாடிய பதிகத்தில் எட்டாவது பாடல். இது சிவபெருமானின் பஞ்சாட்சரமாகிய ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையை விளக்குகிறது.
பொருள்: பிரபஞ்சத்தின் இயற்கை உலகம் (அண்டம்) மற்றும் எல்லை இல்லாத உலகங்கள் (பேரண்டம்) அனைத்தும் நமசிவாய என்ற ஐந்தெழுத்துக்குள் அடங்கும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இந்த ஐந்தெழுத்தின் வடிவமே. உயிரின் தொடக்கமாகவும் முடிவாகவும் இருக்கும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளான அகாரமும் மகாரமும் (படைப்பு, விழிப்பு நிலை, அழித்தல், ஆழ்ந்த உறக்க நிலை) இந்த பஞ்சாட்சரத்தில் அடக்கம். அனைத்து உண்மைகளும் சக்திகளும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் முழுமையாக அடங்கியுள்ளன.
விளக்கம்: ஓம் என்ற பிரணவ மந்திரம், அகாரம், உகாரம், மகாரம் (அ, உ, ம) ஆகிய மூன்று ஒலிகளுடன் கூடியது, அவை படைக்கும், காக்கும், அழிக்கும் தொழில்களைக் குறிக்கிறது, விழிப்பு, நனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளைக் குறிக்கிறது என்றாலும், முதலையும் முடிவையும் சொன்னாலே இடையில் உள்ளது அடங்கிவிடும் என்ற கருத்தில் இங்கு அகாரமும் மகாரமும் மாத்திரம் கூறப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கு முழுமையான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
திருவரங்கம் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீநிவாசன் திருவுருவப்படம்.
பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்கு ஸ்ரீநிவாசன் காட்சி கொடுத்ததை நினைவுகூறும் வகையில் இரண்டாம் பிராகாரமான இராஜமகேந்திரன் திருவீதியில் உள்ள ஸ்ரீநிவாசனது திருவுருவப்படம். (அடுத்த படத்தில் திருவீதி பெயர் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்)
ஸ்ரீரங்கம் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தைப் பற்றி எழுதும்போது இது விட்டுப்போய்விட்டது. அரங்கநாதன் கோயிலில் எதற்காக ஸ்ரீநிவாசன் திருவுருவம் வைத்துள்ளார்கள்? இதற்கு நாம் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அழகிய மணவாளதாசன் என்று அழைக்கப்பட்ட இவர், 17ம் நூற்றாண்டில் பிறந்தவர். திருமலை நாயக்கர் காலத்தவர். (திருமலை நாயக்கர் 1623-1659 வரை ஆண்டவர்) - சிலர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் காலம் 1100கள் என்று சொல்கின்றனர். நாயக்க மன்னர் காலத்தில் தெலுங்குச் சொற்கள் தமிழில் இடம் பெற்றன. அவர்கள் ஐயகாரு என்று சொன்ன சொல்லே பின்னால் ‘ஐயங்கார்’ என்று மருவி, திருமாலை முதன்மைத் தெய்வமாகக் கொண்டு, பிற தெய்வங்களைக் கொள்ளாதவர்களுக்கு ‘ஐயங்கார்’ என்ற அடைமொழி சேர்ந்து அந்தணரில் ஒரு ஜாதியாகிவிட்டது (மற்றவை ஐயர், ராவ் போன்று சில)
நல்ல கல்வியறிவும், தமிழ்ப்புலமையும் பக்தியும் கொண்ட இவரைத் தன் அலுவலராக திருமலை நாயக்கர் அமர்த்திக்கொண்டார். ஒரு நாள் அரசாங்க வேலையில் இருந்தபோது திடுமெனெ எழுந்து தன் உத்தரீயத்தை ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று சொல்லி தோள்களிலிருந்து எடுத்துக் கசக்கினார். அரசவையில் இப்படிச் செய்வது தகாது என்பதால் அவரிடம் காரணம் கேட்க, திருவரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்குப் பிடித்திருந்த தீப்பந்தச் சுவாலை திரையில் பற்றி எரிந்ததால் அணைத்தேன் என்றார். இதைக்கண்டு சிரித்த அவையோர், நம்பெருமாள் கோயிலில் தேர்த்திருவிழா நடப்பது உமக்கு இங்கிருந்து எப்படித் தெரிந்தது எனக் சொல்லி, அரசரிடம் இதனைக் கூறினர்.
அதே நேரத்தில், திருத்தேரின் அருகில் ஐயங்கார் வணங்கி நின்றிருந்தபோது திரையில் சுவாலை பட்டு எரிந்ததால் அதனை ஐயங்கார் அணைக்க, அர்ச்சகர் முதலியோர் இவ்வாறு நடந்ததற்கு தோஷ பரிகாரம் செய்தனர் என்ற செய்தி அரசனை அடைந்தது. அது எப்படி ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இவர் இருத்தல் இயலும் என்று அரசர் வியப்புற்றார்.
அன்று இரவு திருமலை நாயக்கர், உறக்கத்தில், தான் திருவரங்கம் சென்றதாகவும், வழியில் திருக்காவிரியில் நீராடிக்கொண்டிருந்த ஐயங்காரையும் தன்னுடன் கூட அழைத்துச் சென்று பெரிய பெருமாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்புகையில் ஐயங்காரைக் காணாமல் மயங்கியதாகக் கனாக்கண்டு விழித்து மறுநாள் காலையில் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரைக் கூப்பிட்டு, நம்பெருமாளுக்கு அந்தரங்க பக்தனாக இருக்கும் உம்மை எம் அலுவலகப் பணியில் வைத்திருப்பது தகாது என்று சொல்லி, அவர் விருப்பப்படி திருவரங்கம் கோயிலில் ஒரு இருப்பிடம் அமைத்து, கோயில் தளிகைப் பிரசாதமும் அவருக்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பிவிட்டார் என்பர்.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், ஐந்து அந்தாதிகள், மாலை இலக்கியம், ஊசல் இலக்கியம், கலம்பகம் என எட்டு பிரபந்தங்கள் இயற்றினார். அவை அஷ்டப் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதில் பாதிக்கும் மேல் திருவரங்கத்தில் எழுந்தருளும் திருவரங்கனைப் போற்றும் வகையில் அமைந்தவை.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருவரங்கத்து அந்தாதி, திருவரங்க மாலை, திருவரங்கக் கலம்பகம், ஸ்ரீரங்க நாயகர் ஊசல் என்று திருவரங்கனையே பாடினார். இவர் கனவில் வந்த திருவேங்கடமுடையான், எம்மையும் பாடுக எனக் கேட்க, எல்லாத் தலத்திலும் உள்ள இறைவன் ஒருவனே என்பதை உணராமல் இவர், அரங்கனைத் தவிர எவரையும் பாடேன் என்று சொல்ல, இவருக்கு கண்டமாலை என்ற கொடிய நோய் வந்தது. இதனால் இவர் பெரிதும் துன்பமுற்றார். பிறகு திருவேங்கடமுடையானை, தன் துன்பம் நீங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றித் திருவேங்கடமுடையானைத் துதிக்க, திருவேங்கடமுடையான் காட்சி தந்து பிறகு இவரது நோய் நீங்கிற்று என்பர்.
திருவேங்கடமுடையான் இவருக்குக் காட்சி தந்த இடத்தில்தான் தற்போது திருவேங்கடமுடையான் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிறது என்கின்றார்கள்.
அதன் பிறகு திருமாலிருஞ்சோலை இறைவன் மீது அழகர் அந்தாதி, மற்றும் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி பாடினார் என்பர். இவர் தீவிர வைணவப் பற்றுடன் விளங்கினார்.
தனது 70ம் வயதில், திருவரங்கம் கோயிலில் வெளிப் பிராகாரத்தில் தியானத்தில் இருந்தபோது, கோயில் பசு கால் இடறி இவர் மீது விழுந்து காயமுற்று இறந்தார் என்பர்.
இவருடைய ஸ்ரீரங்கநாதர் ஊசல் பிரபந்த்தத்தில் ஒரு பாடலைப் பார்ப்போம்.
புண்டரிகத்தவன் தவஞ்செய்து இறைஞ்சுங் கோயில்
புரிசடையோன் புராணஞ்செய்து ஏத்துங் கோயில்
பண்டிரவி குலத்தரசர் பணிந்த கோயில்
பரிந்திலைங்கைக் கோன்கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமுங் கோபுரமும் மதிலும் செம்பொன்
மாளிகையும் தண்டலையும் மலிந்த கோயில்
அண்டர் தொழும் திருவரங்கம் பெரிய கோயில்
அமர்ந்துறையும் பெருமானார் ஆடீர் ஊசல்
பொருள்: திருமாலின் கொப்பூழில் தோன்றியவனான பிரம்மதேவன் தவம் செய்து பிரதிஷ்டை பண்ணி, திருவாராதனம் செய்து வணங்கிய கோயிலும், முறுக்கிய சடைமுடியையுடைய சிவபெருமான், புராணம் செய்து துதித்த கோயிலும், முன்பு, சூரிய குலத்து அரசர்கள் வணங்கிய கோயிலும், இலங்கைக்கு அரசனான விபீஷணர் விரும்பிக் கொண்டுவந்து ஸ்தாபித்த கோயிலும், மண்டபங்களும் கோபுரங்களும் மதில்களும் சிவந்த செம்பொன்னினால் செய்யப்பட்ட மாளிகைகளும், சோலைகளும் நிறைந்துள்ள கோயிலுமான, தேவர்கள் எல்லோராலும் வணங்கப்படும் திருவரங்கம் பெரிய கோயிலில் அமர்ந்து நித்தியவாசம் செய்யும் நம்பெருமாளே, ஊஞ்சல் ஆடுங்கள்.
விளக்கம்: புண்டரீகத்தவன் – தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மதேவன். புரிசடையோன் – சிவபெருமான். (ஸ்ரீரங்க மஹாத்மியத்தை நாரதருக்கு சிவபெருமான் உரைத்ததாகப் புராணத்தில் உண்டு). இரவிகுலம் – சூரிய வம்சம். சூரிய வம்ச அரசர்களான இஷ்வாகு, தசரதன் மற்றும் ஸ்ரீராமன் ஆகியோருக்கு குல தெய்வம் ரங்கநாதர். இலங்கைக் கோன் கொணர்ந்து – இலங்கை அரசனாக ஆன விபீஷணன் கொணர்ந்து, தண்டலை – சோலைகள்
ஒரு சமயம் நாங்கள் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் (அதாவது கோயிலில் திவ்யப்பிரபந்தங்கள் அதையொட்டி 20 நாட்களுக்கு மேல் சேவிப்பார்கள் ஸ்தலத்தார். அப்போது) திருவரங்கத்தில் இருந்தோம். இரவு 8 ½ மணி இருக்கும். அப்போது எனக்குத் தெரிந்தவர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அவர் என்னிடம், இப்போது நம்பெருமாள் உலா வரும்போது நாம் வேக வேகமாக இரண்டாம் பிராகாரம் ஓடிச் செல்லவேண்டும். நம்பெருமாள் உள்ளே பிராகாரத்துக்குள் வந்ததும் கதவைச் சாத்திவிடுவார்கள் என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நானும் என் மனைவியும் வேக வேகமாக ஓடி இரண்டாம் திருச்சுற்றுக்குள் சென்றோம். பிறகு நம்பெருமாள் உள்ளே வந்ததும் சுற்றுக்கதவை அடைத்தார்கள். நம்பெருமாளுக்கு முன்னால், நிசப்தத்தில் வீணைக் கச்சேரி, பிரபந்தம் என்று சுமார் ¾ மணி நேரம் போனதே தெரியவில்லை. அந்த அனுபவத்தை வார்த்தையால் விவரிக்க இயலாது. பின்பு அதனை வீடியோவாகக் கண்டேன். நாங்கள் சென்றிருந்தது இராப்பத்து ஐந்தாம் திருநாள் அன்று. படத்தில் நான் இருப்பது தெரிகிறதா? கோயில் அனுபவம் என்பது அந்த இறைவன் அளிப்பது. நாம் எதிர்பாராத நேரத்தில் அது கிடைக்கும்போது ஏற்படும் சந்தோஷமே தனி. நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றபோது இரவு மணி பத்து.
இனி இராமானுஜர் வரலாறு.
இராமானுஜர், திருவாய்மொழியின் வியாக்கியானத்தை பெரியநம்பியிடம் கேட்கவேண்டும் என்ற ஆசையில் அவரிடம் சென்று தன் மனோரதத்தைத் தெரிவித்தார். (இராமானுஜரின் ஆச்சார்யார் பெரிய நம்பி என்பது நினைவிலிருக்கும் என்று நினைகிறேன். அவர்தான் மதுராந்தகம் கோயிலில் இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தவர்). பெரியநம்பி, தன்னுடைய ஆச்சாரியரான யாமுனாச்சாரியாரின் (ஆளவந்தாரின்) விருப்பப்படி, அதாவது அவர் சொல்லியிருந்தபடி, திருவாய்மொழியையும் பெரிய திருமொழியையும் திருவரங்கப் பெருமாள் அரையரிடம் பாடம் கேளும் என்று சொல்லிவிட்டார்.
ஆளவந்தாரிடம்தான் பாடம் கேட்கவேண்டும் என்ற ஆசை கொண்ட இராமானுஜருக்கு அதற்கான பிராப்தத்தைக் காலம் கொடுக்கவில்லை. ஆளவந்தார் தன் முக்கியச் சீடர்களிடம் ஒவ்வொரு பகுதியை நன்கு அதிகரித்துவிட்டுச் சென்றிருந்தார். நாதமுனிகள் காலத்தில் வந்த பண் ஏற்றிப் பாடும் முறையை திருவரங்கப் பெருமாள் அரையரிடமும், திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை திருமாலையாண்டான் இடத்திலும், சரம ஸ்லோகம் மற்றும் இரகசிய கிரந்தங்களின் அர்த்தத்தை திருக்கோஷ்டியூர் நம்பியிடத்திலும் என்று ஒவ்வொருவரிடமும் அவர்களின் திறமைக்கும் ஆசைக்கும் ஏற்ப (இதனை நாம் சிலருக்கு சிலவற்றில் ஸ்பெசலைசேஷன், தனித் திறமை இருக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டும். ) கொடுத்திருந்தார்.
இதை எப்படி குருபரம்பரையில் சொல்லுகிறார்கள் என்றால், ஒரு அரசன், தன் அருமைப் புதல்வன் வயதுக்கு வந்ததும் பெற்றுக்கொள்ளட்டும் என்று தன்னுடைய பெருநிதியை பல்வேறு அமைச்சர்களிடத்தில் கொடுத்து வைப்பதைப் போல , ஆளவந்தார் தன்னுடைய ஞானப் பெருநிதிகளை, பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருவரங்கப் பெருமாள் அரையர் போன்றோரிடம் வைத்துப் போனார்.
பெரிய நம்பி இராமானுஜருக்குக் கற்பித்தாலும், தன் மனதில் இராமானுஜரை ஆச்சார்யராகவே கருதினார். பாடம் கற்பிக்கும்போதே இராமானுஜரின் அருமை பெருமைகளை உணர்ந்து, தன்னுடைய புதல்வரான புண்டரீகரை, இராமானுஜரின் சீடராக்கினார். இதுபோலவே திருக்கோஷ்டியூர் நம்பியும், தம் புதல்வரான சௌம்யநாராயணரை, இராமானுஜரின் சீடராக்கினார்.
இதற்கிடையில் இராமானுஜர், தன்னுடைய தம்பியான கோவிந்த பட்டர், உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்ற பெயருடன் காளஹஸ்தி தலத்தில் பொறுப்பில் இருபதை எண்ணி, அவரைத் திருத்திப் பணி கொள்ளவேண்டும், நம் வைணவ மதத்திற்கே அவரைக் கொண்டு வர்வேண்டும் என்று தன்னுடைய தாய் மாமாவான பெரிய திருமலை நம்பியிடம், ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு வைணவரை அனுப்பியிருந்தார். அவரும் திருமலை சென்று இராமானுஜரின் விருப்பத்தை அவரிடம் விண்ணப்பித்தார். நாமும் அவரை வைணவத்திற்குக் கொணரவேண்டும் என்று நினைத்திருந்தோம். இராமானுஜரின் விருப்பமும் அதுவேயாகில் உடனே செய்வோம் என்று சொல்லி, அவர் காளஹஸ்திக்குச் சென்றார்.
தன்னுடைய மனைவியரின் சாபத்தால் ஒளியிழந்த சந்திரன், இந்த புஷ்கரணியில் நீராடி பெருமாளை வழிபட்டுத் தன் சாபம் தீர்ந்தான் என்பது புராண வரலாறு. ஸ்ரீரங்க விமானத்தில் பட்டு விழும் மழைத்தண்ணிர் இந்த புஷ்கரணியில் சேரும்படி அமைத்திருக்கிறார்கள். நீர்நிலை மாசுபடக் கூடாது என்பதற்காக, நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இந்த புஷ்கரணியைப் பூட்டிவைத்துள்ளார்கள். இந்த புஷ்கரணியின் கரையில்தான் கோயில் தலவிருட்சமான புன்னை மரம் அமைந்துள்ளது.
காளஹஸ்தியில் உள்ளங்கை கொணர்ந்த நாயனாரை பெரிய திருமலை நம்பி சந்தித்தாரா, என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் காண்போம்...
==================================================================================================

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்குசொற்றுணை வேதியன் நான் தினமும் பாடல், ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை’ பிரதோஷ சமயத்தில் பாடுவோம் மாலை நேர கூட்டு வழிபாட்டில்.
பதிலளிநீக்குஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு சிவவாக்கியர் பாடலும் விளக்கமும் அருமை.
சிலர் ஏதேனும் சந்தேகம் கேட்டால், அது மனத்திலேயே இருந்து, சரியான பதில் கிடைக்கும்வரை நம் மனதை விட்டுப் போவதில்லை.
நீக்குஎன் மனதில் பலமுறை சொற்றுணை வேதியன் பாடல் ஓடுகிறது, மன்னம் ஆகவில்லை.
திருவரங்கம் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீநிவாசன் திருவுருவப்படமும் , பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்கு ஸ்ரீநிவாசன் காட்சி கொடுத்த வரலாறும் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஸ்ரீரங்கநாதர் ஊசல் பிரபந்த்த பாடலும் விளக்கமும் அருமை.
//இராப்பத்து ஐந்தாம் திருநாள் அன்று. படத்தில் நான் இருப்பது தெரிகிறதா? //
வலபக்கம் கடைசியில் லைட் புளூ சர்ட் அணிந்து இருக்கிறீர்கள் , சரிதானா?
மிக்க நன்றி. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்கு//கோயில் அனுபவம் என்பது அந்த இறைவன் அளிப்பது. நாம் எதிர்பாராத நேரத்தில் அது கிடைக்கும்போது ஏற்படும் சந்தோஷமே தனிதான்.//
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மை. உங்களுக்கு தெரிந்தவர் உலாவரும் போது நடப்பதை சொன்னதால் உங்களுக்கு கிடைத்தது, இறைவன் அவர் மூலம் உங்களை கலந்து கொள்ள வைத்து இருக்கிறார்.
நானும் அதுபோலவே சிலருக்குச் சொல்லியிருக்கிறேன். திருப்பதி மார்கழி தரிசனம் மற்றும் உட்பிரகார (திருஉண்ணாழி) வலத்துக்கும் நெருங்கிய உறவினரை கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியும் அவருக்கு வரமுடியாமல் போய்விட்டது.
நீக்கு//நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இந்த புஷ்கரணியைப் பூட்டிவைத்துள்ளார்கள்.//
பதிலளிநீக்குபுஷ்கரணி படம் பார்த்து கொண்டேன், முன்பு பார்த்தது இல்லை.தல விருட்ச தரிசனமும் கிடைத்தது.
நன்றி.
மூலவர் தரிசனத்திற்குப் பிறகு வெளியே வலம் வந்தால் இதனை மிஸ் செய்ய முடியாது.
நீக்கு/கல்லணை கட்டிய கரிகால் சோழன், தஞ்சைப் பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழன் இவர்கள் இப்பொழுது நம் வீட்டுக்கு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.//
பதிலளிநீக்குநல்ல கற்பனை.
பட்டினத்தில் பூதம் படத்தில் பூதம் ஆச்சிரியமாக கேட்பது போல இருக்கிறது இரண்டு பேரரசர்களும் கேடபது.
/நல்ல சாலைகள்
தரமான அரசுப் பள்ளிகள்
குப்பை கூள மேலாண்மை,
நதிகளில் மாசுக்கட்டுப்பாடு,
அடிப்படை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை,
நன்கு பராமரிக்கப்படும் அரசுப் போக்குவரத்து
இதற்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து அரசு இவற்றை கவனிக்க முன் வந்தால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள். //
இன்றைய மனசாட்சியம் பகிர்வு அருமை . நல்ல விழிப்புணர்வு பதிவு.
ஐயங்கார் என்பதற்கு பெயர்க்காரணம் இப்படியும் இருப்பதாக படித்தேன்.
பதிலளிநீக்குஆன்மீக மற்றும் சமய ரீதியான விளக்கத்தின்படி, இச்சொல் ‘ஐந்து + அங்கம் + ஆர்’ என்பதில் இருந்து உருவானது. வைணவ (ஸ்ரீ வைஷ்ணவ) நெறியில் ஒருவரைச் சேர்ப்பதற்கு ‘பஞ்ச சம்ஸ்காரம்’ எனப்படும் ஐந்து புனிதச் சடங்குகள் செய்யப்படுகின்றன. • தாபம்: தோள்களில் சங்கு, சக்கர முத்திரைகளைப் பதித்தல். • புண்ட்ரம்: நெற்றியில் திருமண் (நாமம்) அணிதல். • நாமம்: தாச நாமம் (இறைவனுக்கு அடிமை என்ற பெயர்) பெறுதல். • மந்திரம்: ரகசிய திருமந்திரங்களை ஆச்சாரியர் மூலம் உபதேசம் பெறுதல். • யாகம்:
வாங்க ஶ்ரீராம். ஐயங்கார் விளக்கம் நன்று, பொருத்தமுடையது. ஐ. அங்கம். ஆர்-விகுதி. ஐயர் என்ற சொல்லிலிருந்து, தெலுங்கு மொழி மக்களால் ஐயகாரு என அழைக்கப்பட்டு பிறகு ஐயங்கார் எனத் திரிந்தது எனவும் படித்திருக்கிறேன். ஐயங்கார் என்ற சொல், ஜாதி இராமானுஜர் காலத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்..
நீக்குஸ்ரீராம் சொல்லுவது போலவே அம்பத்தூரில் எங்க எதிர் வீட்டு மாமா நரசிம்மாசாரியும் சொல்லுவார்.
நீக்குதொலைக்காட்சியிலிருந்து எப்படி சரியாக அந்த நிகழ்ச்சியையும் அதில் உங்களையும் பிடித்தீர்கள்? நீங்கள் இருப்பது தெரிகிறது.
பதிலளிநீக்குகாணொளி கிடைத்தது. நாங்கள் இருவரும் இருக்கும் அபூர்வ நிகழ்வு என்பதால் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
நீக்கு@Nellai! Good. Keep it up.
நீக்குஅனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.முப்பெரும் தேவிகளின் அருளாசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குகண்டு பிடிச்சுட்டேன் உங்களை. மனைவி பின்னால் நிற்கிறார், உங்களை ஒட்டினாற்போல். நீங்களோ பாரம்பரிய உடை அணியாமல் (இரவு என்பதாலோ) நீலக்கலர் சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறீர்கள். ஓகேயா? உங்களுக்கு முன்னால் கண்ணாடி போட்ட ஒரு மஞ்சள் கலர் புடைவை அணிந்த பெண்மணி.
பதிலளிநீக்குநல்லா இருக்கு பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் கதையும், ஐயங்கார் என்னும் பெயர் வந்த காரணமும். பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் வாழ்க்கையில் நடந்ததுனு தெரியாமலே இந்தத் தேரில் தீப்பிடித்து இருந்த இடத்தில் இருந்து கொண்டே தீயை அணைத்த கதை படிச்சிருக்கேன். ஆனால் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பதை இன்னிக்குத் தான் தெரிந்து கொண்டேன். இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் இரண்டாம் பிரகாரத்தில் இருப்பதும் இன்னிக்குத் தான் தெரியும். பார்த்ததில்லை அல்லது கவனிக்கலை. :(
சிவவாக்கியர் எனக்கும் பிடித்தவர். அவருடைய பதிகமும் அதன் விளக்கமும் அருமை. நாவுக்கரசரின் சொற்றுணை வேதியன் பதிகமும் அதை அவர் பாடியபோது அவருக்கு ஏற்பட்டிருந்த இக்கட்டும் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. நற்றுணையாவது நமசிவாயவே என்று அவர் பாடியது எக்காலத்துக்கும் பொருந்தும். முன்னெல்லாம் வழிநடைத் துணையாக இதைப் பாடிக்கொண்டே யாத்ரிகர்கள் செல்வார்கள் எனப் படிச்சிருக்கேன். நானெல்லாம் வழித்துணைக்குக் கந்த சஷ்டி கவசம் தான்.
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
வாங்க கீதா சாம்பசிவம் மேடம். அன்று பாரம்பர்ய உடையில் இல்லை. சன்னிதிகளையும் மூலவரையும் சேவித்தேன். சரியா கண்டுபிடித்துவிட்டீர்கள்.
நீக்குஸ்ரீநிவாசப் பெருமாளை நாம் நிச்சயம் கவனிப்போம், கியூ வரிசையில் வரும்போது (இப்போது அதற்கு ஏற்ற மாதிரி கியூ வரிசை. அதில் ஆன்லைனில் டிக்கெட் வாங்கினவர்களுக்கு தனி லைன்)
கந்த சஷ்டி கவசம் பல முறை சொல்வேன். தற்போது நற்றுணை ஆவது நமச்சிவாயவே என்பதே மனதில் பல நாட்கள் ஒலிக்கின்றது. அந்தப் பதிகத்தின் பல பாடல்களின் அர்த்தத்தை ஒரு பதிவில் எழுத மனம் ஆசைப்படுகிறது
நான் பெரிய பெருமாளை தரிசித்தே ஏழெட்டு ஆண்டுகள் ஆகின்றன. பல வருஷங்கள் கழிச்சு நம்பெருமாளை இந்த வருஷம் தான் ஆடிப்பெருக்கன்று தரிசிக்க நேரிட்டது. அந்தப் பக்கம் போனால் ஒருவேளை தெரியலாம் இது முன்னரே பார்த்திருக்கேனா இல்லையா என்பது. ஆனால் புஷ்கரிணி எல்லாம் பார்த்திருக்கேன்.
நீக்குஅவனருளால், வருடத்துக்கு ஒரு முறையாவது திருவரங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. இந்தத் தடவை, மிக விஸ்தாரமாக எல்லா சன்னிதிகளுக்கும் சென்று தரிசித்தோம்.
நீக்கு
பதிலளிநீக்கு//இராமானுஜர், தன்னுடைய தம்பியான கோவிந்த பட்டர், உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்ற பெயருடன் காளஹஸ்தி தலத்தில் பொறுப்பில் இருபதை எண்ணி, அவரைத் திருத்திப் பணி கொள்ளவேண்டும், நம் வைணவ மதத்திற்கே அவரைக் கொண்டு வர்வேண்டும்.//
ராமானுஜர் காலத்திலேயே சைவ/வைஷ்ணவ பேதம் தோன்ற ஆரம்பித்து விட்டது போலிருக்கு. ஆனால் இப்போதும் சரி, அப்போதும் சரி பூரண வைராக்கியத்துடன் இறை சேவை செய்வதில் வைணவர்களுக்கு நிகரில்லை. பழந்தமிழ்ச் சொற்களையும், சொல்லப் போனால் தமிழையும் காப்பாற்றி வருபவர்கள் அவர்களே. ஸ்மார்த்தர்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை என்றே சொல்லலாம். என்னையும் சேர்த்து. :))))
இதனை பேதம் என்று சொல்லக்கூடாது. நம்மைச் சேர்ந்தவர், நம் உறவினர், நாம் கொண்டுள்ள பாதையில் பயணிக்கணும் என்று நினைத்தார் இராமானுஜர். அதுவும் தவிர, இரண்டும் இரண்டு வெவ்வேறு சமயங்கள் அல்லவா?
நீக்குஉண்மையைச் சொல்லணும் என்றால், கோயிலையும் பிரபந்தங்களையும் காப்பவர்கள் தென்கலையார் என்ற சொலவடை உண்டு. திருமுறைகளிலும் மிக நல்ல அருந்தமிழையும் பக்தியையும் காணலாம். பக்தி இலக்கியங்களே நம் உயிர்நாடி.
பெரியவருடைய மனசாட்சி இன்றைக்கு வெகு முக்கியமான விஷயங்களை நினைவு கூர்ந்திருக்கிறது. இவை தான் சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகள். இதுவரை வந்த அரசும் தமிழகத்தில் இவற்றை எல்லாம் செய்வதில்லை. அக்டோபர் மாசம் வரை சும்மா இருந்துட்டு மழை கட்டியம் கூறியதும் அவசரம் அவசரமாக சிமென்டைக் கொட்டிச் சாலை போட்டோம் எனப் பெயர் பண்ணுவாங்க. அடிக்கும் மழையில் அந்த சிமென்டெல்லாம் கரைந்து ஓடும். பின்னர் அடுத்த மழைக்காலம் வரை ஒண்ணும் நடக்காது.
பதிலளிநீக்குநிஜம்மாவே ராஜ ராஜ சோழனோ, கரிகால் சோழனோ வந்தால் மக்கள் இப்படிக் கொஞ்சமும் தமிழறிவே இல்லாமல் சினிமாக்காரங்க பின்னால் போய்க்கொண்டு அதிலேயே புளகாங்கிதம் அடைவதை ஆச்சரியத்துடனும் வெறுப்புடனும் பார்ப்பார்கள் என்பதோடு நல்லவேளையா நம்ம காலத்தில் மக்கள் உண்மையான வீரம் செறிந்து இருந்ததால் நாம் ஒவ்வொரு படை எடுப்பிலும் ஜெயித்தோம், இல்லைனா இப்படிக் குடிச்சே மானத்தை வாங்கி இருப்பாங்கனு அவங்களுக்குள் பேசிப்பாங்க.
பெர்யவரின் கட்டுரையின் கடைசிப் பத்திப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. _/\_
பதிலளிநீக்குஇன்றைய மஹாலய அமாவாசை நாளன்று அனைவருக்கும் துன்பங்களை நீக்கி அவர்களைக் காத்திடும் துர்கை அம்மன் என்றென்றும் அதே போல் மக்களின் துன்பங்களை சம்ஹாரம் செய்து நாட்டுக்கும், வீட்டுக்கும் எந்தவிதப் பெரும் பிரச்னையும் இல்லாமல் காத்து அருளும்படி வேண்டிக் கொள்கிறேன். இப்போதைய நாட்டு நிலைமை கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. துர்கை தான் இந்தப் பத்து நாட்களையும் நல்லபடியாக நடந்து எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் காத்து அருள வேண்டும். ஜெய் துர்கா மாதா! ஜெய் ஹிந்த்!
பதிலளிநீக்குஅப்படியே வேண்டுவோம். இப்போதுதான் அமாவாசை தர்ப்பணம் முடிந்து வந்தேன்.
நீக்குஇன்று மனசாட்சியத்தில் எழுதியிருப்பது, சமீபத்தில் சுற்றுக்கு வந்த வாட்சப் மெசேஜை ஒட்டியது என்று தோன்றியது.
பதிலளிநீக்குஉங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் உங்கள் இளமைக்காலத்தில் மனதில் திருப்தியுடனும் சந்தோஷமுமாக இருந்தீர்களா இல்லை தற்காலத்திலா? பெரும்பாலானவர்களுக்கு இளமைக் காலம்தான் சந்தோஷமளித்த காலம். காரணம் பொறுப்பின்மை என்று மாத்திரம் சொல்லிவிட முடியாது.
வசதிகள் இருக்கின்றன. அவை மன மகிழ்வைத் தருகின்றனவா? சமூகத்திற்கு நம் பங்களிப்பை அளிக்க உதவுகின்றனவா?
பாசுர விளக்கங்கள் கண்டோம்.. இராப்பத்து தரிசனமும் அறிந்தோம். உங்கள் படமும் கண்டோம் . எல்லாம் அவனருள்.
பதிலளிநீக்குபுஷ்கரணி யும் தரிசித்தோம்.
வாங்க மாதேவி அவர்கள். இறை தரிசனம் அவன் அருளால்தான். மிக்க நன்றி
நீக்கு