13.10.26

கே வா போ சிறுகதை --- வேர்கள் - (பண்புடன் மின்னிதழில் வெளியானது) - சாந்தி மாரியப்பன்

அமைதிச்சாரல் என்று அறியப்படும் / என்கிற வலைத்தளத்தின் சொந்தக்காரர் சாந்தி மாரியப்பன் திருநெல்வேலிக்காரர்.  அருமையான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.  வெண்பாக்கள் படைப்பவர்.  சிந்தனைச் சிதறல்களாய் சில பதிவுகள் எழுதுவார்.  இப்படி ஒரு அருமையான கதையும் எழுதுவார்.  அவர் அனுமதியோடு அவர் எழுதிய கதையை இங்கு கேட்டு வாங்கி போடுகிறேன்! 

வேர்கள்
(பண்புடன் மின்னிதழில் வெளியானது)
- சாந்தி மாரியப்பன் -

முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல் இறுக ஆரம்பித்திருந்த கீல்கள் சப்தித்தன. அந்த ‘கிர்’ என்ற சத்தம், அவனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையை அறுப்பது போலிருந்தது. அந்தச் சத்தம் அவனுக்குப் புதிதல்ல; ஆனால், இன்று அது ஒரு மரண வீட்டின் இறுதி மௌனத்தைப் போலத் தாளமுடியாததாக இருந்தது.   


மாரிமுத்துவின் கைகள் நடுங்கின. இறுக்கிப்பிடித்திருந்த பெட்டியின் கைப்பிடி அவனது உள்ளங்கையில் ஆழமாகத் தடம் பதித்திருந்தது. இன்னும் இறுக்கிக்கொண்டான். வீட்டின் நிலைக் கதவைச் சாத்தி, துருப்பிடித்த பூட்டைத் தொங்கவிட்டபோது, அவனது கைவிரல்கள் அனிச்சையாக அந்த மரக்கதவை ஒருமுறை வருடின. 

அந்த வீட்டைக்கட்டும்போது முறைப்படி முதன்முதலில் நிலைவாசல்தான் நிறுத்தப்பட்டது. சந்தனம் குங்குமம் இடப்பட்டு மாவிலைத்தோரணமும் நிலைமாலைகளும் அணிந்து நின்ற அந்தக்கதவை சட்டத்தோடு அவனது தாத்தாவே தூக்கி நிறுத்தினாராம். அவரது வியர்வை வாசனை இன்னும் அந்தத் தேக்கு மரத்தின் வரிகளில் தங்கியிருப்பதாக அவன் உணர்ந்தான். அவர் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை தான் கைவிட நேர்ந்ததை எண்ணி தன்னையே வெறுத்தான்.  

இளங்காலையின் காற்றில் முற்றத்து வேப்பமரம் தன் இலைகளை மெதுவாய் உதிர்த்தபடி நின்றது. ஒரு சில இலைகள் அவன் தலைமீது விழுந்தது, அவனை “எங்க போனாலும் புத்தியாப் பொழைச்சுக்கோ” என ஆசீர்வதிப்பதாய்ப்பட்டது. 

“போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்வது? மனிதர்கள் இல்லாத வீதிகளில் மௌனம் மட்டுமே அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.  

வீட்டின் தலைவாசலில் தெருவில் இருந்த மண்ணைத் தொட்டுத் தன் நெற்றியில் வைத்துக் கொண்டான். ஒரு கைப்பிடி மண்ணை, கைக்குட்டையில் பொதிந்து பொட்டலமாய்க் கட்டிக்கொண்டான். பிறந்து வளர்ந்த ஊரையும் மண்ணையும் விட்டு பிடிமண்ணுடன் வெளியேறுவது அவனுக்குச் சொல்லொணா வேதனையைக்கொடுத்தாலும், அந்த மண் அவனுக்குச் சொல்லாத விடைபெறலையும் சொன்னது.  

படியிறங்கி நடக்கத் தொடங்கியபோது, அவனது கால்கள் தன்னிச்சையாக நின்றன. திரும்பிப் பார்த்தான். அந்த வீடு, அவனது தாத்தா காலத்தில் எழுப்பப்பட்டது. தலைமுறைகள் கடந்தும் உறுதியாக நின்றுகொண்டிருந்தது. அவன் மகன் சிறுவயதில் சுவரில் கரியால் கிறுக்கிய சித்திரங்கள் மழைக்கால ஈரத்தில் நனைந்து உலர்ந்து மங்கலாகத் தெரிந்தன. அந்தச் சுவர்களுடனான அவனது உறவு வெறும் செங்கல் மற்றும் சாந்தால் மட்டும் பிணைக்கப்படவில்லை. ஞாபகங்கள் ஒவ்வொரு அணுவையும் இணைத்திருந்தன, ஒவ்வொரு விரிசலிலும் ஒரு கதையிருந்தது; ஒவ்வொரு கறையிலும் ஒரு சம்பவம் உறைந்திருந்தது.  ஒவ்வொரு ஞாபகமாக மேலெழ எழ அவனது பாதங்கள் மண்ணில் புதைய மறுத்தன. ஒவ்வொரு அடியும் ஒரு யுகமாக நீடித்தது. 

அவனது நிலம், இப்போது காகிதத்தில் வேறொருவனின் பெயருக்கு மாறிவிட்ட அந்த ஐந்து ஏக்கர், தூரத்தில் மேக மூட்டத்திற்கு அடியில் மங்கலாகத் தெரிந்தது. அப்பாவின் சிகிச்சைக்கு வீட்டை விற்ற பணம் போதாத போது நிலத்தையும் சேர்த்து விற்க வேண்டி வந்திருந்தது.  அவன் மனதுக்குள் ஒரு போராட்டம் வெடித்தது. “நகரம் உன்னை வாழவைக்கும் மாரிமுத்து.. எத்தனையோ கனவுகளுடன் நாட்டின் எந்த மூலையிலிருந்தெல்லாமோ வரும் மக்களை வாழ வைக்கும் அந்தப் பெருநகரம் உன்னை மட்டும் கை விட்டு விடுமா? உனக்கும் ஒரு பிழைப்பு அங்கே காத்திருக்கும், இதைப்போல் இன்னும் பல சொத்துகளை நீ வாங்குமளவுக்கு உன்னை உயர்த்தும்” என்று அவனது வறுமை அவனிடம் பேசியது. 

ஆனால் அவனது மனமோ, அந்த நிலத்தில் புதைக்கப்பட்ட அவனது முன்னோர்களின் சாம்பலை நினைவூட்டியது. அந்த மண்ணில் பிறந்து அதே மண்ணில் கலந்த தாத்தன் மற்றும் பூட்டனின் அந்தச் சாம்பலில்தான் இந்த மண்ணின் சத்தும் கலந்திருக்கிறது. தன் ரத்தமும் சதையுமான ஒரு பகுதியை அறுத்தெறிந்துவிட்டு, வேறொரு இடத்தில் ஒட்டுப் போட்டு வாழ முடியுமா? எனத் தடுமாறினான்.  “மாரிமுத்து, இது உன் கோழைத்தனம் இல்லையா? உன் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணை இப்படி அனாதையாக விட்டுவிட்டு ஓடுகிறாயே?” மனசாட்சியின் இரைச்சல் தாளாமல் காதுகளைப் பொத்திக்கொண்டான். 

வாங்கிய கடனுக்கு நிலத்தையும் வீட்டையும், பறிகொடுத்தபின், இந்த வீட்டைப் பார்ப்பதே ஒரு குற்ற உணர்வாக அவனுக்குள் ஊறியிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த வீட்டுத் திண்ணையில் உட்காரும்போது, அந்நியரின் வீட்டில் அமர்ந்திருப்பது போல் தவித்தான். அதை வாங்கியிருந்த உறவினன், “அண்ணே.. நீங்க வீட்டைக் காலி பண்ணனும்ன்னு இல்ல.. பெயருக்கு ஒரு தொகையை வாடகையாக் கொடுத்துட்டு நீங்களே இருந்துக்கலாம், அண்ணியையும் குழந்தையையும் கூட்டிக்கிட்டு வெளியேற வேண்டாம்” எனச்சொல்லியிருந்தும் அவனுக்கு அதற்கு மேல் அங்கிருக்க மனம் அப்போது கூசியது.  

ஊர் எல்லையை நோக்கி அவனது நடை நகர்ந்தது. ஊரின் ஒவ்வொரு அங்குலமும் அவனோடு பேசத் தொடங்கியது. 

கிணற்றடியில் பெண்கள் நீர் இறைக்கும் சத்தம் இன்னும் காற்றில் மிதப்பது போல ஒரு பிரமை. மாட்டுத் தொழுவத்தில் எழும் சாணத்தின் மணம், அவனது நுரையீரலுக்குள் பழகிப்போன ஒன்று. ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் பெரியவர்களின் சிரிப்பொலி மூளையில் மங்கலாக ஒலித்தது. இவை எதுவுமே இனிமேல் அவனுக்குச்சொந்தமில்லை. இந்த ஊரைப்பொறுத்தவரை அவன் இனிமேல் ஓர் அந்நியன். இந்த ஊரிலிருந்த அவனது முகவரியைத்தொலைத்து விட்ட, வீடு வாசல் இல்லாத ஒரு ஏகாங்கி.  

அவனது மன ஓட்டம் பின்னோக்கிச் சென்றது. ஒரு காலத்தில் ஊர்த்திருவிழாவில் முதல் மரியாதை பெற்ற குடும்பத்தின் வாரிசு அவன். 

இன்று விடியும் முன்பே திருடன் போல ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான். “மண்ணை நம்பினவனை அது என்னிக்கும் கை விடாது மக்களே” என்று தாத்தா அடிக்கடி சொல்வார். “மண்ணை நான் கைவிடவில்லை, ஆனா, அது என்னைக் கைவிட்டுவிட்டது தாத்தா. காலம் என்னிடம் இருந்த மண்ணைப் பிடுங்கியும் கொண்டது.” என விரக்தியுடன் காற்றிடம் புலம்பினான். வானம் பார்த்த பூமியில் மழை பொய்த்ததும், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டதும் அவனது கட்டுப்பாட்டில் இல்லாதவை. ஆனால் அதன் விளைவு இன்று அவனை நாடோடியாக மாற்றியிருக்கிறது. நிலம் மட்டும் விளைந்திருந்தால் கடன் வாங்க வேண்டிய தேவையே வந்திருக்காது.  

குளக்கரையைத் தாண்டும்போது குளிர்ந்த காற்று அவனது முகத்தில் படர்ந்து சிலிர்ப்பூட்டியது. சிறுவயதில் இடுப்பில் சுரைக்குடுக்கையையும், காலி கேன்களையும் கட்டிக்கொண்டு அந்தக் குளத்தில்தான் அவன் நீச்சல் பழகினான். மணிக்கணக்கில் நண்பர்களுடன் மீன் பிடித்த அந்த மாலைப் பொழுதுகள் மனக்கண்ணில் ஓடின. இன்னும் விடிந்திருக்காத.. பறவைகள் கூட விழிக்காத முன்விடியலில் சுற்றுப்புறத்தின் அமைதி, அவனுக்குள் பெரும் இம்சையாக மாறியிருந்தது.  அவன் கால்கள் தார்ச்சாலையைத் தொட்டபோது, ஒரு நடுக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. நகரத்தின் இரைச்சலுக்குள் தன்னைத் தொலைக்கப் போகிறோம் என்ற பயம், அவனது வயிற்றுக்குள் ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.  “அங்கு யார் என்னை என்ன உறவு சொல்லி அழைப்பார்கள்? அங்கு எந்த மரம் எனக்கு நிழல் தரும்? அங்கிருக்கும் காற்றில் என் ஊர் மண்ணின் வாசனை இருக்குமா?”  நகரம்… எந்திரத்தனமாய் இயங்கும் அங்குள்ள மனிதர்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரே தெரியாது. இந்த கிராமத்து மண்ணிலோ, செடி கொடிகளுக்குக் கூடப் பெயர் உண்டு. ஒவ்வொரு வரப்புக்கும் ஒரு வரலாறு உண்டு. தான் பிறந்து, தவழ்ந்து, காதலித்து, வாழ்ந்த இந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு, எதற்காகவோ ஓடும் இந்தப் பயணம் எதில் முடியப் போகிறது? அடர்ந்த கான்க்ரீட் காட்டுக்குள் தனது சிறு கூட்டைக் கட்ட எந்த மரத்திலாவது இடம் கிடைக்குமா?  சூரியன் மெல்லத் தலைகாட்டத் தொடங்கியது. கிழக்கே சிவந்த வானம், அவனது வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்துவிட்டதை அறிவிப்பது போலிருந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். கண்களில் கசிந்த ஈரத்தை மறைக்க அவனுக்கு யாரும் அங்கில்லை, ஆனாலும் அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.  “இங்கேயே கூலி வேலை செய்தாவது பிழைக்கலாம்” என்றது ஒரு மனம். “வேண்டாம்.. ஓரே ஊரில் முதலாளியாய் இருந்துவிட்டு இப்போது கூலிக்காய் கையேந்துவது மரணத்தை விடக் கொடியது” என்றது இன்னொரு பக்கம். மானம் பெரியதா, வயிறு பெரியதா என்ற போரில் பல சமயங்களில் வயிறு வென்றுவிடுகிறது. ஆனால், அந்த வெற்றி ஒருபோதும் மனதிற்கு நிம்மதியைத் தருவதில்லை.  ஊர் எல்லையில் பேருந்து நிறுத்தம் இருந்த அந்தப் பாழடைந்த பிள்ளையார் கோயில் வந்தது. அதன் அரசமரம் காற்றில் சலசலத்தது. அந்தச் சத்தம் அவனுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கையைத் தருவது போலிருந்தது.  


“ஓடுகிறாயா? அல்லது ஒளிந்து கொள்கிறாயா?”  அவன் குளக்கரையில் அமர்ந்தான். தண்ணீரில் தெரிந்த அவனது பிம்பம் அவனுக்கே அந்நியமாகத் தெரிந்தது. கையில் இருந்த பெட்டி, அவனது தோல்வியின் அடையாளம். இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பட்டணத்திற்குப் போனால், அங்கே அவன் ஒரு வெறும் ‘எண்’ணாக மாறிவிடுவான். அங்கு அவனுக்கு முகவரி கிடையாது, குலதெய்வம் கிடையாது, சொந்தம் கிடையாது. அவன் கையில் இருந்த அந்தப் பெட்டிக்குள் சில துணிகளும், ஒரு பழைய குடும்பப் புகைப்படமும், காய்ந்து போன ஒரு பிடி மண்ணும் மட்டுமே இருந்தன. அதுதான் அவனது ஒரே சொத்து. இந்த மண்ணில் அவன் வாழ்ந்ததின் மிச்சம்.  அவன் தன் கைகளை ஊன்றி மண்ணில் ஆழமாகப் புதைத்து பின்னுக்கு லேசாகச் சாய்ந்து கொண்டான். மண் ஈரமாக இருந்தது. கடந்த வாரம் பெய்த அந்தச் சிறு தூறல், இன்னும் ஈரத்தைப் பாதுகாத்து வைத்திருந்தது. 

அந்த ஈரம் அவனது விரல் நகங்களுக்குள் ஏறியபோது, அவனுள் மின்சாரம் பாய்ந்தது போலிருந்த குளிர்ச்சியை கண்மூடி அனுபவித்தான். இனி எந்தப்பிறவியில் இந்த மண்ணைத்தீண்டும் பாக்கியம் கிடைக்கப்போகிறதோ!  தூரத்தில் ஒரு பேருந்தின் வெளிச்சம் தெரிந்தது. அது அவனை இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் போகும் ராட்சசன். பேருந்து வரும் சத்தம் அருகில் நெருங்கிக்கேட்டது. ஹாரன் சத்தம் காற்றில் கிழிந்து வந்து அவன் காதுகளை அடைந்தது. அந்தக் கணத்தில் மாரிமுத்துவின் மன ஓட்டம் திசை மாறியது. நகரத்தில், கிடைத்த வேலைகளைச்செய்து ஓடும்பிள்ளையாய் காலம் தள்ளவோ, செக்யூரிட்டி உடையணிந்து கொண்டு எந்திரமாக நிற்பதற்கோ அவன் பிறக்கவில்லை. அவனது கைகள் மண்ணைக் கிளறப் பிறந்தவை. நிலம் கைவிட்டுப் போயிருக்கலாம், ஆனால் இந்த மண்ணின் மணம் அவனுக்குச் சொந்தமானது.  பேருந்து வந்து நின்றது. நடத்துனர் தரையில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அவனைப் பார்த்தார்.  “ஏறலையாப்பா?” எனக்கேட்ட நடத்துனரை ஏறிட்டுப்பார்த்த மாரிமுத்து தன் இரும்புப் பெட்டியை இறுகப் பற்றினான். பின் ஒரு கணம் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். கருமேகங்கள் மெல்லத் திரண்டு கொண்டிருந்தன. மழையின் வாசனை காற்றில் பரவியது. அவனது நிலம் அவனைக் கூப்பிடுவது போல அவனுக்குக்கேட்டது.  “இல்லை… நான் வரல…” என்று முணுமுணுத்தான்.  நடத்துனர் விசிலை ஊத, பேருந்து புகையைக் கக்கிக்கொண்டு நகரத் தொடங்கியது. அது கிளப்பிய புழுதி அவன் முகத்தில் படிந்தது. அந்தப் புழுதி அவனுக்குப் பிடித்திருந்தது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான். குடும்பம் அவனைத்தொடர்ந்தது. இப்போது அவனது நடை வேகமாக இருந்தது. பூட்டிய வீட்டின் கதவைத் திறந்தபோது, அந்த ‘கிர்’ என்ற சத்தம் இப்போது ஒரு வரவேற்பு கீதமாக அவனுக்குக் கேட்டது.  வீடு.. அவனது வேர்கள் ஊன்றியிருக்கும் ஆதிமண். தாத்தனும் அப்பனும் பெற்றுப்பெருகி, குலம் வளர்த்த கோயில். அதிலிருந்து கொண்டே நிலத்தை மீட்டெடுக்கப் போராடுவான் அல்லது அதே மண்ணில் மடிவான். ஆனால், வேரற்ற மரமாகப் பிழைக்க அவனுக்கு விருப்பமில்லை. “என் வேர் இங்குதான் இருக்கிறது, இங்கிருந்து ஊன்றித் தழைத்து நானும் ஓர் விருட்சமாக எழுவேன்” எனச் சொல்லிக்கொண்டான்.  முற்றத்து வேப்பமரம் இப்போது இன்னும் பசுமையாகத் தெரிந்தது. மாரிமுத்து திண்ணையில் அமர்ந்து, தன் பெட்டியைத் திறந்து அந்தப் பழைய குடும்பப் புகைப்படத்தைப் பார்த்தான். அதிலிருந்த தூசியைத்துடைத்த கையோடு தன் கண்ணீரையும் துடைத்துக்கொண்டான். படத்தில் இருந்த அவனது தந்தை புன்னகைப்பது போலிருந்தது.  

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

========================================================================================

மனசாட்சியம் - 13
K G Y Raman

மடகாஸ்கர் நாட்டு மக்கள் மரவள்ளி இலையை வேகவைத்தும், உலர்த்திப் பொடி செய்தும் சாப்பிடுகிறார்களாம். அதில் என்ன சுவை இருக்கும் என்கிற ஒரு ஆர்வம் எனக்குத் தோன்றுகிறது.

அதே போல் வாழைப்பழ வற்றல், பணியாரம் !

ஏ ஐ யை கேட்டபோது கிடைத்த தகவல் :

Yes, that is completely true. Tapioca leaves—which are the leaves of the cassava plant (from which tapioca is derived)—are a staple element of traditional Malagasy cuisine.
The dish is known locally as Ravitoto (meaning "crushed cassava leaves"). 

இன்றைக்கு எழுபது வருஷங்கள் முன்பு என் அத்தை சேம்பு இலைச்சுருளில் அரைத்த பருப்பு விழுதைப் பரப்பி அதை சுருட்டி ஆவியில் வேக வைத்த பின் சின்னச் சின்ன தாக வெட்டி வாணலில் வதக்கித் தந்தது நினைவுக்கு வருகிறது. 

அடை, மசால் வடை , உசிலி எல்லாமே எனக்குப் பிடிக்கும். எனது நண்பர்கள் 
"  -+++++++,  பருப்புத் தின்னி " என்று‌ கலாய்த்தது  நினைவுக்கு வருகிறது..

எக்ஸாடிக் வகையில் மிகுந்த சுவையான தென்னங்குருத்து சாப்பிட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் மூங்கில் குருத்து கூட சுவையான பொருள் என்று எனக்குத் தெரியாது. இப்போது பேசப்படுவதை வைத்துப் பார்த்தால், மூங்கில் குருத்து ஸ்பெஷல் ஐட்டம்  போலத் தான்  தெரிகிறது.  சில பிராணிகள் மூங்கில் இலை குருத்து மட்டுமே உண்டு உயிர் வாழ்கின்றன என்று சொல்கிறார்கள். 

தென்னங்குருத்து சாப்பிட வேண்டும் என்றால் ஒரு தென்னை மரம் உயிரை விட வேண்டும். புயலில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் பல தென்னை மரங்கள் விழுந்த நிலையில் மூன்று வேளையும் தென்னங்குருத்து சாப்பிடும் அரிய வாய்ப்புக் கிடைத்தது.

புதிதாக ஒரு விஷயம், அதிலும் முக்கியமாக, சாப்பிடுவதில் புதிதாக ஒரு பொருள் என்று வந்தால், இயல்பாகக் கொஞ்சம் தயக்கத்தோடு தான் அதை நான் பரீட்சை செய்து பார்ப்பேன். ஸ்ட்ராபெர்ரி, ஹார்லிக்ஸ், சூயிங் கம்,  ஆப்பிள் ஜூஸ், அவ காடோ , மஷ்ரூம் சூப் போன்ற பல விஷயங்கள் முதலில் வாயிலிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக,  ஏதோ ஒரு டூ இன் ஒன் ஹோட்டலில் பொசுக்கப்பட்ட காய்கறிகள் தின்னக் கிடைத்த போது நான் எதிர்பாராத அளவில் அது எனக்குப் பிடித்திருந்தது. 

நான் கொழும்பு வழியாக பஹ்ரீன் சென்ற சமயம், கொழும்பு விமான நிலையத்தில் வண்டி மாறிச்செல்ல வேண்டும். மிகுந்த எதிர்பார்ப்புடன் சிலோன் டீயை ருசி பார்க்க  மிகுந்த எதிர்பார்ப்புடன் விமான நிலைய டீக்கடையில் போய் நின்ற போது , அந்த ஆள் அமெரிக்க  டாலர் தவிர வேறு நாணயம் எதையும் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான். என்னிடம் டாலர் எதுவும் இல்லை. பெருத்த ஏமாற்றம். அப்புறம் வேற ஒரு சமயம் வேறு ஒரு இடத்தில் சந்தர்ப்பம் கிடைத்த போது சிலோன் டீ  ஒன்றும் பெரிய தேவாமிர்தம் இல்லை என்று தெரிந்து கொண்டேன்.

பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பும்போது பழரசம் வேண்டும் என்று அபிநயத்துடன் கேட்டதும் ஹோஸ்டஸ் ஒரு பெக் விஸ்கி கொடுத்தார். எல்லாம் இறைவன் செயல் என்ற தத்துவ ஞானம் எனக்கு  அப்போது ஏற்பட்டது முற்றிலும் வேறு விஷயம் !!

============================================================================

44 கருத்துகள்:

  1. அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்.நவராத்திரி நலமுடன் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.  நவராத்திரி நல்லபடி போய்க்கொண்டிருக்கும் என்றுதான் நம்புகிறேன். சுண்டல் இரவுகள்!

      நீக்கு
    2. ஆமாம். சுண்டல் உண்டு. இரண்டு மூறு நாட்கள் மட்டுமே மகளிர் வரவும் கலகலப்பும். மிச்ச நாட்களில் நாம் செல்ல வேண்டிய முறை வரும்.

      நீக்கு
  2. சாந்தி மாரியப்பன், அமைதிச்சாரலின் சிறு கதை மிக மிக அருமை.பயந்து கொண்டே படித்தேன் .எங்கே பழைய கதைகளில் துயரம் தூக்குமே அதே போல இருக்குமோ என்று. பிரமாதமாக முடித்திருக்கிறார். முற்றிலும் புதிய பரிமாணங்கள் வந்திருப்பது இப்போது புரிகிறது. வாழ்த்துகள் அன்பு ஷாந்தி. இங்கே பதிந்ததற்கும் மிக நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. ''பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பும்போது பழரசம் வேண்டும் என்று அபிநயத்துடன் கேட்டதும் ஹோஸ்டஸ் ஒரு பெக் விஸ்கி கொடுத்தார். எல்லாம் இறைவன் செயல் என்ற தத்துவ ஞானம் எனக்கு அப்போது ஏற்பட்டது முற்றிலும் வேறு விஷயம் !!'' ஹாஹாஹா!!

    அதன் விளைவு என்ன என்று சொல்லவில்லயே:)

    எனக்குத் தெரிந்து பல நபர்கள் தூங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   திருப்பிக் கொடுத்திருப்பார்.

      நீக்கு
    2. ஓ! உண்மைதான். நாம் எல்லாம் அதைத்தான் செய்வோம்.

      நீக்கு
  4. வாழைப்பழ வற்றல் நன்றாகவே இருக்கும். தென்னங்குருத்து இனிமை. மற்றவை சாப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  5. சிலோன் டீ, க்ரீன் டீ. எல்லாமே ஒவர் ரேட்டட் என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  6. சேம்பு பாட்டி காலத்தில் தோட்டத்தில் இருந்தது. திரு ராமன் சொன்னது போல நாங்களும் பருப்பு அரைத்து வேக வைத்து அந்த இலையுடன் சாப்பிட்டிருக்கிறோம். அற்புதமான மணத்துடன் ருசியாக இருக்கும். சேம்பு இலைகள் வளர்ந்த அளவு, சேப்பங்கிழங்குகள் நிறைய கிடைக்கவில்லை. சேனைக்கிழங்கு நன்றாக வந்தது. பாட்டி காலத்துக்குப் பின் சிங்கம் வளர்த்த செடிகள் குரோட்டன்ஸ், விசிறி வாழை, செம்பருத்தி வகைகள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வேக வைத்து அந்த இலையுடன் சாப்பிட்டிருக்கிறோம் //

      நான்  ருசித்ததே இல்லை!

      நீக்கு
    2. சின்ன வயசில் அப்பா ஊர் மேல்மங்கலத்திலிருந்து குத்தகைக்காரர் வரும்போதெல்லாம் சேம்பு இலைகள், மஞ்சள், வேர்க்கடலை மூட்டை எனக் கொண்டு வந்து தருவார். அங்கெல்லாம் நஞ்சை, புஞ்சை இரண்டும் உண்டு. நஞ்சையில் 3 போகமும் அரிசியும் (அந்த அறுபதுகளில்) புஞ்சையில் பருப்பு வகைகள், மிளகாய், வேர்க்கடலை போன்றவையும் போடுவார்கள். தஞ்சாவூர் ஜில்லாவில் அப்படி இல்லை. நஞ்சை மட்டும் தான். அங்கேயே தை மாசம் அறுவடை முடிந்ததும் பயறு, உளுந்து தெளிப்பது என அந்த நஞ்சை வயல்களிலேயே போடுகின்றனர். இதில் வரப்பில் போடும் உளுந்து நல்லாக இருக்கும், எந்தப் பண்டங்கள் பண்ணினாலும் சுவையாக இருக்கும்னு என் அம்மா சொல்லுவார். அப்பளத்துக்குக் கரை உளுந்து எனக் கேட்டு வாங்குவார்.

      நீக்கு
    3. சேம்பு இலைக்குச் சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். அந்தச் சேம்பு இலைகள் அக்கம்பக்கம் கொடுத்தது போக மிச்சத்தில் இந்த மாதிரி சேம்பு இலை வடைகளாக அம்மா பண்ணுவார். எங்க வீட்டில் வறுத்ததில்லை. பருப்புகளை ஊற வைச்சு உப்புக்காரம் போட்டு அரைச்சதை இலைகளில் தடவி இட்லித் தட்டில் வேட்டில் வேக வைச்சு எடுத்துத் துண்டங்களாக நறுக்கிட்டுப் பின்னர் எண்ணெய் வைச்சுப் பொரித்து எடுப்பாங்க. மாமியார் வீட்டில் அதைக்காலை சமையலிலேயே கறி மாதிரி வறுத்து எடுத்துச் சாப்பாட்டுடன் தொட்டுக்கப் போடுவாங்க. ராஜஸ்தானில் இருந்தப்போ சேம்பு எல்லாம் வளர்த்ததால் இதெல்லாம் பண்ண வாய்ப்பு இருந்தது. அம்பத்தூரிலும் சொந்த வீட்டில் கொஞ்ச காலம் தோட்டம் போட்டப்போப் போட்டிருக்கோம். பின்னர் மாமரங்கள், பாக்கு மரம், மாதுளை மரம், தென்னை மரங்கள் ஆகியவை வளர்ந்து நிழல் தட்டி விட்டது. வீட்டை விற்கையில் அந்த மரங்களை நினைத்தே அழுகை வந்தது. :(அதிலும் வேப்ப மரம் வாசலில். பெண்ணைப் போல்ல் பாதுகாத்து வளர்த்தது. :(((((

      நீக்கு
  7. இன்றைய கதை பல நினைவுகளை வரவழைத்தது. மிகச் சிறிய இரண்டு வரி நிகழ்வை, மனதில் தைக்கும்படியாக, மிக்க உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார் சாந்தி மாரியப்பன் அவர்கள்.

    சென்னையில் குப்பை கொட்டி, மெட்ராஸுல பிறந்தேன் என்று சொல்பவர்கள் எல்லோரின் மூலமும் இப்படி ஊரை விட்டு வந்த கதை இருக்கும். மிக நிறைவான, பழைய நினைவுகளை அசை போடும்படியான கதை.

    பதிலளிநீக்கு
  8. மனசாட்சியம்..... பிறகு கருத்து எழுதுகிறேன்.

    ஹைப் பண்ணும் பல, நமக்குக் கிடைக்கும்போது, இதுக்கா இவ்வளவு பெருமையாச் சொன்னாங்கன்னு தோணும்.

    பதிலளிநீக்கு
  9. சேம்பு இலையை உபயோகப்படுத்தி வட நாட்டவர் செய்யும் ஒன்றை ருசித்திருக்கிறேன். கமன், ரவா டோக்ளா வகையில் மஞ்சள் நிறத்தில் சுருட்டி வைக்கப்படும் ஒன்று என நினைக்கிறேன்.

    இன்று வரை பானி பூரி சாப்பிட்டதில்லை. பிசினெஸ் விஷயமாக துபாய் சென்றிருந்தபோது அந்த கம்பெனி அதிகாரிகள், நான் இந்தியன் என்பதால் சிறந்த ரெஸ்டாரன்டில் தாஹி பூரி ஆர்டர் செய்தார்கள். வேறு வழியில்லாமல் சாப்பிட்டு, அதன் ருசியில் மயங்கினேன்.

    பதிலளிநீக்கு
  10. விமானத்தில் பழரசம்.... எனக்கு பல நினைவுகளை எழுப்புகிறது.

    பல நேரங்களில் பிசினெஸ் வகுப்பில் பயணப்பட்ட நேரம் அது. சென்னைக்கு வந்துகொண்டிருந்தபோது, உணவை வாங்கி புகைப்படம் எடுத்துக்கொள்வேன். ஸ்பெஷல் உணவாக இருக்கும். ஒரு சமயம் என் அருகில் இருந்தவர் உணவு வேண்டாம் இலவசமா டிரிங்ஷ் உண்டா எனக்கேட்டு, ஆம் என்றதும் பறக்காவெட்டி மாதிரி குடித்துத் தள்ளினார். கிளம்பும்போது அவர் பெட்டியை மேலிருந்து எடுக்க எம்பியபோது, பூநூல் வெளியே தெரிந்து இளித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’இலவசமா’ குடிப்பதில் சிலருக்குத் தனி போதை! பூநூல் பாவம். அதுக்கென்ன தெரியும்!

      நீக்கு
  11. மரவள்ளி சிப்ஸ் எப்போதும் சூப்பர். வாழைப்பழ பணியாரம், அப்பம்லாம் மெத்மெத் என்று சுவையா இருக்கும். இதெல்லாம் மிஸ் பண்ணியிருக்கிறாரே

    பதிலளிநீக்கு
  12. பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பும்போது பழரசம் வேண்டும் என்று அபிநயத்துடன் கேட்டதும் ஹோஸ்டஸ் ஒரு பெக் விஸ்கி கொடுத்தார்.//

    ’அபிநயம்’ பார்த்து, சரி.. இத விஸ்கி சரி செஞ்சிரும்னு நெனச்சிட்டார்போலருக்கு !

    பதிலளிநீக்கு
  13. அமைதிச் சாரல் நாகர்கோயிலைச் சேர்ந்தவர் இல்லையோ? எதுக்கும் அவங்களையும் கேட்டுக் கொண்டு பிறகு திருத்துங்க.

    பதிலளிநீக்கு
  14. "பத்ரா" வோ அல்லது "பாத்ராவோ" சேம்பு இலையில் பண்ணும் கறியின் பெயர். குஜராத்தில் தான் மிகவும் பிரபலமானது. விருந்தினர்களுக்கான உணவில் இதுவும் "உந்தியா"வும் இல்லாமல் இருக்காது. உந்தியாவில் காய்கள் அனைத்தும் இருந்தாலும் கடலை மாவில் செய்யப்படும் "Ghகட்டா" கட்டாயமாய் இருக்கும். நம்ம ஊர்ப் பருப்பு உருண்டை போல இந்த "Ghகட்டா"விலும் சப்ஜி மட்டுமில்லாமல் மோர்க்குழம்பிலும் போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  15. சாரலின் கதையைப் படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  16. கதை என்னவோ நன்றாக இருக்கிறது. சாரலின் தமிழுக்குக் கேட்கணுமா? ஆனால் மாரி முத்து தனியாக இருப்பதைப் போலவும், தனியாகவே ஊரை விட்டுச் செல்வது போலவும் அமைந்திருக்கும் கதையில் இரண்டு இடங்களில் மட்டும் குடும்பத்தைப் பற்றி வருகிறது. முதலில் வீட்டையும், சொத்தையும் வாங்கிய உறவினன் காலி செய்து கொண்டு போக வேண்டாம் என்று சொல்லும் இடம், பின்னர் மாரிமுத்து பேருந்தில் ஏறாமல் ஊருக்குத் திரும்பும்போது குடும்பமும் அவனைத் தொடர்ந்தது என்னும் ஒற்றை வாக்கியம். மற்றபடி குடும்பத்தைப் பற்றியோ, அவர்களின் மனம் பற்றியோ அவர்களும் இதுக்கு உடன்பட்டுத் தான் இருக்காங்களா என்பது பற்றியோ கதையின் எந்த இடத்திலும் சாரல் குறிப்பிடவில்லை. நாமாக யூகம் செய்து கொண்டாலும் குறைந்த பக்ஷமாகப் படத்திலாவது அவனுடன் குடும்பமும் இருந்ததைச் சுட்டிக் காட்டவே இல்லையே! தனிமையிலேயே தனியாகவே மாரிமுத்துவுக்கு இந்த அனுப்வங்கள் ஏற்பட்டிருப்பதாகவே யூகிக்க வைக்கிறது கதை.

    மற்றபடி பிறந்த ஊரையும் வாழ்ந்த வீட்டையும் விட்டுப் பிரிவது எளிதல்ல. அதன் தாக்கம் பல நாட்களுக்கு, ஏன்? மாதங்கள், வருடங்கள் ஆனாலும் மனதிலிருந்து மறையாது. மேலும் வாழ்ந்த வீடு என்பது கல்லாலும், சிமென்டினாலும், மணலாலும் ஆன ஓர் கட்டிடம் இல்லை. உயிர்ப்புடன் தானும் இருந்து கொண்டு நம்மையும் இருக்க வைக்கும் ஓர் கோயில். அங்கிருந்து வெளியேறுவது என்பது நாற்றைப் பிடுங்கி நடுவது போலனு கூடச் சொல்ல முடியாது. ஏனெனில் நாற்றுக்கள் புதிய மண்ணில் வேர் விட்டு விடும். ஆனால் இங்கோ நம் மனம் ஏற்காது. ஆகவே துளசிச் செடியைப் போல் என்று சொல்லலாம். பிறந்த இடத்து மண் இல்லைனால் துளசி முளைப்பதில்லை. அனுபவத்தில் பார்த்திருக்கேன். இப்போவும் குழந்தைகளைப் பிறந்த வீட்டில் பெற்றெடுக்கும் பெண்கள் பிரசவம் முடிந்து புக்ககம் செல்லும்போது குழந்தையின் பிறந்த வீட்டு மண்ணையும் ஒரு பொட்டலமாகக் கட்டிக் கொண்டு செல்லும் பழக்கம் உண்டு. பிறந்த மண்ணுக்கு அவ்வளவு மஹிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பெரிய உண்மை. மண் மாறுகிறது. உணர்ச்சிகள் மாறுவதில்லை. நானும் மாரியின் குடும்பத்தைக் காணோமே என்று நினைத்தேன்.

      நீக்கு
  17. திரு ராமன் அவர்கள் சொல்லி இருப்பது போல் தென்னங்குருத்திலும் கறி மாதிரிப் பண்ணுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அதே போல் தென்னம்பாளையும் முளைத்துவந்ததும் சீக்கிரமாகவே பறித்துப் பண்ணுவார்களாம். கிராமங்களில் காய்கறித் தோட்டம் மழைக்காலங்களில் போட முடியாது என்பதால் இப்படி எல்லாம் சமைப்போம் என என் மாமியார் சொல்லுவார். ஆனால் இன்னொரு விஷயமும் உண்டு. மாடு கறவை நிற்கும் சமயம் பால் குறையும்போது மோருக்குத் தட்டுப்பாடு வருமாம். அப்போதும் அரிசி களைந்த இரண்டாவது கழுநீரை மோரோடு சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ உப்புப் போட்டுக் கருகப்பிலை போட்டுக் கரைச்சு வைப்பார்களாம். எலுமிச்சம்பழம் இருந்தால் அதையும் பிழிஞ்சு வைப்பாங்களாம். எனக்குமே மாமியார் கருவிலிக்குப் போகும்போது அப்படிக் கழுநீரை மோராகப் பலமுறை கொடுத்திருக்கார்.

    பின்னர் ஒரு முறை உ.வே.சா. நினைவு மஞ்சரியா அல்லது வேறே ஏதுமா நினைவில் இல்லை. மோர், பால் நிறையக் கிடைக்கும் மழைக்காலங்களில் அவற்றைச் சேமித்துப் பாலாகவோ அல்லது காய்ச்சி உறை ஊற்றித் தயிராகவோ பானைகளில் ஊற்றி நன்றாக வாயைக் கட்டிக் களிமண்ணால் சீல் வைச்சு ஊரின் பொதுக்குளங்களில் போட்டு விடுவார்களாம். அப்போதெல்லாம் மழைக்காலம் என்றால் குளங்களில் ஜலம் நிறையவே இருக்குமே. ஆகவே அவை பாதுகாப்பாக உள்ளே போய் விடுமாம். பின்னர் வெயில் காலத்தில் பால், மோர் தட்டுப்பாடு வரும்போது அவற்றை வெளியே எடுத்துப் பங்கிட்டுக் கொள்வர்களாம். எனக்குத் தெரிந்து உ.வே.சா. அவர் கல்யாணத்துக்கோ அல்லது வேறே ஏதும் விசேஷத்துக்கோ இப்படிச் செய்ததாக எழுதி இருந்த நினைவு.

    பதிலளிநீக்கு
  18. மூங்கில் குருத்தில் ஊட்டியில் எங்களுடைய குடியிருப்பின் செர்வன்ட் க்வார்டர்சில் இருந்த பெண்மணி சமைச்சுப் பார்த்திருக்கேன். வேணுமானு கேட்பாங்க. எனக்குச் சமைக்கத் தெரியாது என்பதால் வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆனால் மதுரையில் அம்மா சின்னக்கடை மார்க்கெட்டுக்குப் போனால் கட்டாயமாகத் தாமரைத் தண்டு வாங்கி வருவார். அவற்றை வில்லை வில்லையாக நறுக்கிக் கறி பண்ணுவார். நறுக்கினால் வெண்டைக்காய் போலத் தான் இருக்கும். ஆனால் வழவழப்பு இருக்காது. மோரில் போட்டு வற்றல் தயாரிப்பார். சின்ன வயசில் இதெல்லாம் நிறையச் சாப்பிடக் கிடைச்சது. பின்னர் அவை எல்லாம் சாப்பிட அவ்வளவாய்க் கிடைக்கலை. ஆனால் அம்மா இருந்த வரை தாமரைக்கிழங்கு வற்றல் வந்துடும். பின்னர் கடைசி மைத்துனர் தில்லியில் குர்காமில் இருக்கையில் அங்கே போக வர இருந்த சமயங்களில் குர்காம் காய்கறி மார்க்கெட்டில் தாமரைத் தண்டு நிறையக் கிடைச்சு வாங்கிப் பண்ணினேன். நாத்தனாருக்கெலலம் இதைப் பார்த்து ரொம்ப ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  19. He who has no faith in himself can never have faith in God. - Swamy Vivekananda அனைவருக்கும் வணக்கம்! நவராத்திரி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. சாந்தி மாரியப்பன் கதை முதல் முறையாக படிக்கிறேனோ? இது போன்ற கதைகள் பலருக்கும் பிடிக்கும், காரணம் எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் புலம் பெயரத்தான் வேண்டியிருக்கிறது. "பாக்கியசாலி யார்?" என்ற யக்ஷன் கேள்விக்கு, "பிழைப்புக்காக பிறந்த மண்ணை விட்டுச் செல்லாதவன்" என்று யுதிஷ்டிரன் பதில் அளிக்கவில்லையா? பிறந்த ஊரிலேயே வாழ்ந்து, மரணிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  21. நாங்கள் மஸ்கட்டில் இருந்த பொழுது, எங்கள் குழந்தைகளை பார்த்துக் கொண்ட குஜராத்தி aunty சேம்பு இலையில் பருப்பு உசிலியை வேக வைத்து, நுறுக்கி, வதக்கி செய்யும் பத்ரா செய்யும் பொழுதெல்லாம் எங்களுக்கு கொடுத்தனுப்புவார். மிகவும் சுவையாக இருக்கும். கனடாவில் frozen stuff ஆக கிடைக்கிறது. பெண் வாங்கி வருவாள், நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. அமைதிச்சாரல் எழுதிய கதை நன்றாக இருக்கிறது.
    சொந்த ஊரில் நிலம்,புலன், வீடு வாசலுடன் வாழ்ந்தவர்கள் வேறு ஊருக்கு பிழைக்க செல்வது வேதனையான விஷயம் . மாரி முத்து மனம் நினைத்து தவிப்பதை நன்றாக சொல்லி இருக்கிறார்.

    //“அண்ணே.. நீங்க வீட்டைக் காலி பண்ணனும்ன்னு இல்ல.. பெயருக்கு ஒரு தொகையை வாடகையாக் கொடுத்துட்டு நீங்களே இருந்துக்கலாம், அண்ணியையும் குழந்தையையும் கூட்டிக்கிட்டு வெளியேற வேண்டாம்” //

    படத்திலாவது அண்ணி, குழந்தையை காட்டி இருக்கலாம். தனிமையில் அவர் மனம் தவிப்பது போல படத்திலும் அவர் மட்டும் இருக்கிறார்.

    மாரிமுத்து நல்ல முடிவு எடுத்தார் . நிலம் , மற்றும் வீட்டை மீட்கும் நிலை வரட்டும்.

    பதிலளிநீக்கு
  24. மனசாட்சியம் நன்றாக இருக்கிறது. அத்தை செய்து கொடுத்த சேம்பு இலை பருப்பு உசுலியின் சுவையை இப்போது நினைத்து செய்முறையுடன் சுவையாக சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!