இஷா மாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஷா மாலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.8.16

கேட்டு வாங்கிப் போடும் கதை :: கூறாமல் சன்யாசம்



          எங்கள் ப்ளாக்கின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம் பெறுவது இஷா மாலா அவர்களின் படைப்பு. 

  ஃபேஸ்புக்கில் நண்பரானவர்.  அங்கு சுவாரஸ்யமான பதிவுகள் பல இட்டு நண்பர்களை பலரைப் பெற்றிருப்பவர்.  இவரது பல பதிவுகளை மிகவும் ரசித்திருக்கிறேன். 

 
படங்களுக்குப் பொருத்தமாக கவிதைகள் எழுதுவார்.   உதாரணத்துக்கு ஒன்று..









உள்மனப்போராட்டம் உள்ளிருந்தே உழலவைக்க
கள்வெறிபோல் புவிவாழ்வு கண்டபடி சுழன்றடிக்க
எங்கிருந்து  வெளியே நான் யாருடன் போராட?
செம்பொற்க்கழலடிச்செல்வா உந்தன் உபதேசம்
எம்பால் இரங்காதோ ?
உள்ளும்புறமும்உவந்தே நான்உந்தாள் வந்தடைய!

Pic.Courtesy : Keshav Venkataraghavan






          இவரது தளம் மாலா"வின்" எண்ணங்கள்.

          அவரது முன்னுரையைத் தொடர்ந்து அவரது படைப்பு கீழே...

===================================================================



நமஸ்காரம். 


கதைபிறந்த கதைன்னு முன்னுரை சொல்லணும்ன்னா, எப்பவுமே பெண்கள் ஒருபடிதாழ்த்தி ன்னு தான் சமூகம் பார்க்கிறது. அப்படி ஒரு அமைப்பு . எல்லா நேரங்களிலும் ஒரே பாலினம் முன்நிற்க முடியாது.

சிலநேரம் ஆண்.  சிலநேரம் பெண்.

ஆனால் இந்த உயர்வுதாழ்வு எல்லாம் சம்பந்தப்பட்டவரின் அல்லது பாதிக்கப்பட்டவரின் கண்ணோட்டமே.  பொதுவாக இந்தகண்ணோட்டம் எனக்கு அத்தனை பிடித்தமில்லை. இது பெண்ணிய(ம்)ப் பேச்சு என்று எடுத்துக்கிறவர்களுக்கு ஒன்று சொல்வேன்.

பெண்ணியம் ஆணியம்னு எதுவும் இல்லை. ஒன்றில்லாமல் ஒன்றில்லை.  இருபாலாரும் சப்போர்ட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே வாழ்க்கைச் சக்கரம் பிறழாமல் ஓடும். ஆனாலும் துரோகம், வஞ்சனை, உயர்வு மனப்பான்மை இதெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்க்கை கடந்துகொண்டுதான் இருக்கு.



====================================================================




கூறாமல் சன்யாசம் 
 இஷா மாலா

 
இன்னிக்கு என்னமோ காலை மூணு மணிக்கே முழிப்பு வந்துவிட்டது கமலிக்கு. எழுந்து, கசகசத்த முகம் கழுத்தை புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டு, தலையை படிய வாரிக்கொண்டு வெளியே வந்தாள்; கொல்லையில் ஐந்து  மாடுகளும் சமர்த்தாக படுத்திருந்தன. லக்ஷ்மி மட்டும் நிலைகொள்ளாமல் அலைந்து கொண்டே இருந்தது. அவளுக்கு நிறை மாசம். கிட்ட போய் தடவிக்கொடுக்கும் முன்பே  தலையை வாகாக  நீட்டினாள். இந்த வீட்டுக்கு கமலி வந்த போது லக்ஷ்மி சின்னக் கன்னுக்குட்டி.! இப்ப அவள் நான்காவது கன்னுக்குட்டிக்கு அம்மா ஆகணும்.  போட்ட மூன்றும் கடேரி, இது கடேசியா காளையோ என்னமோ...பார்ப்போம். கட்டாக இருந்த பசும்புல்லை கொஞ்சம்போல எடுத்து போட்டுவிட்டு, கழுநீரில் உப்பள்ளி போட்டு, தவிடு கலந்து அதன் கிட்டே வைத்துவிட்டு உள்ளே வந்தாள். 



புதுசாய்  குழாய் போட்டிருக்கா, இங்கே புக்காத்திலே. கிணற்றிலேயே பழகினவளுக்கு இது ரொம்ப சொகுசா இருந்தாலும், வாளி நிறைவதற்கு காத்திருப்பது ரொம்ப அநியாயமாய் தோன்றியது! மளமளவென்று அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தன. அடுப்பு மூட்டினால் இரவு வரை ஆகும் அதை அமர்த்த. டி ஃ பன் முடித்து, குழந்தைகளை ரெடியாக்கி ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு கணவனுக்கு கேரியர் கொடுத்து அனுப்பிவிட்டு அடுத்த வேளை உணவுக்கு தயார் செய்யும் முன் மறுபடி ஒரு தரம் மாட்டுக்கொட்டிலுக்கு சென்று பார்த்து வந்தாள். நேரமாகும் போல தோன்றியது. 




வேலை கிடக்கு தலைக்கு மேலே என்றாலும்  என்னவோ அவளுக்கு கொஞ்ச நேரம் ஏதானும் படிக்கணும் போல இருந்தது. மாமனார்  மாமியார் அப்படி ஒன்றும் கண்டிப்பும் கறாரும் இல்லை, என்றாலும், இது படிக்க ஏற்ற தருணமும் இல்லை. சித்தார்த்தன் என்ற புத்தகத்தை இடையில் அட்டை வைத்து பாதியில் விட்டிருந்தாள்; என்னமோ அதை தொடரணும் போல ரொம்ப அவஸ்தையாய் இருந்தது. இல்லை வேண்டாம் அப்புறம்  பார்த்துக்கலாம். படிக்கும்போது இடையில் தடங்கல் வந்தால் அவளுக்கு பிடிப்பதில்லை.



கமலிக்கு மூன்று குழந்தைகள். மூன்று என்பது கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்தி போல தோன்றினாலும் (?!) மூன்று பிரசவத்திலும் மாமியார் அவளை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டார். இப்படி பார்த்துக் கொண்டது மாமியாரின் இயல்பான குணவிசேஷம் தான் அதுவும் மூணுமே பெண்குழந்தைகள்  என்றாலும் மாமியார் அதற்காக முகம் காட்டியதில்லை, என்றாலும் உள்ளூர அவளுக்கு ஒரு சந்தேகமும் உண்டு. பிராயச்சித்தம் போல செய்கிறார்களோ என்று.



பெட்ரூமை ஒட்டி இடைகழி ஒன்று உண்டு. அதை தாண்டி ஒரு பத்தடிக்கு பத்தடியாக சின்ன ரூம். ரேக்கு ரேக்கா அதில் ஏராள புத்தகங்கள். நாவல், கட்டுரை, ஆன்மீகம், ன்னு எல்லா வகையிலும். மாமனார் வக்கீலாய் ப்ராக்டீஸ் பண்ணவர். எல்லாத்துக்கும் பிரமாத உதாரணம் காட்டுவார். அந்த புத்தக ரூம் அவளுக்கு  ரொம்ப பிடித்த இடம், முதலில் ரொமாண்டிக்காக. (முதன் முதலில் கணவன் தன்னை தொட்டு முத்தமிட்டது அங்கே அந்த ரூமில் தான்) அப்புறம் அங்கு இருக்கும் புத்தகங்களுக்காக.



ஆனால் எந்த மனைவியும் காண விரும்பாத, காணப் பொறுக்காத காட்சியும் அங்கே அவள் காண நேர்ந்ததிலிருந்து அந்த ரூம் பக்கம் போனாலே அனல் அடித்தது. வயிறு குழைந்து மேனியெங்கும் எரிவது போல இருக்கும்.



இதைச்சொல்லி நியாயம் கேட்டு போராடவெல்லாம் அவளுக்கு தோன்றவில்லையோ, விருப்பமில்லையோ, ஆனால் அன்று முதல் இதோ இந்த மூன்று வருடங்களாக அவள் தனியாகத்தான் படுக்கிறாள், பெட்ரூமை ஒட்டிய அந்த இடைகழியில். குழந்தைகள் தூங்கின பிறகு, மாமனார் மாமியாருக்கு கூட தெரியாமல். 


பிரசவத்துக்காக நீ பிறந்தகம் போயிருந்த போது ஏற்பட்டுவிட்ட பழக்கம் என்றான் சிறிதும் கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல். 


என்ன பண்ணனும் இப்ப? விட்டுடறேன், என்றான். 


யாரை? 


அவளைத்தான். 


கமலி ஒன்றும் சொல்லவில்லை. ஏறெடுத்து பார்த்துவிட்டு விடுவிடுவென்று சமையலறைப் பக்கம் போய்விட்டாள். பின்னோடே வந்தான். 


கமலி ப்ளீஸ்...அப்பாம்மாட்ட சொல்லிடாதே. இனிமே இல்லை, என்ன ? 


கமலி வாயே திறக்கவில்லை. மாமனார் மாமியாரிடமும் ஏதும் கூறவில்லை.


இரவில் வழக்கம் போல பக்கத்தில் அவளைக் காணாமல் வெளியே வந்து பார்த்தான். பெட்ரூமை ஒட்டிய அந்த இடைகழியில் படுத்திருந்தவள் அருகே கீழே மண்டியிட்டு அமர்ந்தான். கமலி ப்ளீஸ்  என்றான். கமலி மென்மையாக ஆனால் உறுதியாக குரலைத் துளிக் கூட உயர்த்தாமல்


இனி என்னைத் தொட்டால் பிணத்தை ....... .பண்ணதுக்கு சமம். அவ்ளோதான், என்றாள். அதற்கப்புறம் அவன், கிட்டேயே வருவதில்லை. அவள் தன்னைப் பற்றி யாரிடமும் கூறாததும், நியாயம் கேட்டு போராடாததும் சிறிது நாளில் அவனுக்கு தெம்பூட்டியது. பழைய குருடி கதவைத்திறடி ங்கிற கதையாய் மீண்டும். அதையும் கமலி பொருட்படுத்துவதில்லை. நீ எனக்கு தூசுக்கு சமம் ங்கிற  மாதிரி இருந்தாள். ஒண்ணுமில்லாத கழுதைக்கு இவ்ளோவா..


அப்போ எனக்கு எவ்ளோ இருக்கும் ன்னு அவனுக்கு ஆத்திரம்.


இன்று பத்தாம் வருட திருமண நாள். 


இரண்டு/மூன்று வருடங்களாக புகைந்து கொண்டிருந்த விஷயம் இன்று வெடித்தது. ராமானுஜன் அவளுக்கு ஒரு சின்ன மெலிசான சங்கிலி ஒன்று வாங்கி வந்திருந்தான். ஒவ்வொரு வருஷமும் ஏதானும் ஒரு பரிசு வழக்கம்தான். அவளும் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை நிறைவாய் பெற்றுக்கொண்டு அவனுக்கு நிறைவளிப்பாள். மூன்று வருடங்களாக அவன் பரிசு சீந்தப்படாமல் அப்படியே தான் இருக்கு.  


வேலைகளுக்கு இடையில் லக்ஷ்மியையும் போய்ப் போய் பார்த்து வந்தாள், கமலி. இன்னிக்கு இருக்கும் ன்னு தான் தோன்றுகிறது, பெரிய தவலையில் வெந்நீர் போட்டு வைத்தாள். குளிர்காலம். மாட்டுக்கு ஜன்னி வந்துடாமல் பார்த்துக்கணும். லக்ஷ்மி ஓரிடத்தில் நிற்கமுடியாமல் அவஸ்தையாய் இங்கும் அங்கும் அல்லாடியது. தன் கடைசி பெண் விலாசினியை அழைத்து, பக்கத்து தெருவில் மாட்டுக்கார கோவாலி இருப்பான், அவனை கூட்டிண்டு வா போ, ஓடு என்றாள். 


அவள் அந்தப்பக்கம் போனதும் கோவாலியே இந்தப்பக்கம் வந்துவிட்டான் யதேச்சையாக. என்னம்மா  இவளோ  நேரமாக்குதே லட்சுமி? காலைலியே கன்னு போட்டு இருக்கும்ன்னு நெனச்சேன் என்றான். அங்கிருந்த  ஒரு பழந்துணியை உதறி நீட்டி ஒரு சார்ப்பு கட்டினான். மாட்டை தடவ கிட்டக்க போனா, லட்சுமி முட்ட வரவே ஒரு அடி பின் வாங்கினான். ஹாவ்...ஹாவ்...ட்ரூ..ட்ரூ  ஹாவ்...ன்னு பலவிதமா  குரல் கொடுத்து...அதை  பணிய வைத்து, பனிக்குடம் உடைந்து....கன்றின் தலை முன் காலோடு வெளியே வர, கோபாலி வாகாக அதை மொள்ள பிடித்து இழுத்து லட்சுமியின் பாரம் குறைத்தான். கன்றின்  குளம்பு கிள்ளி அதை வழித்து தடவி  சுத்தம்செய்தபின்...எழுந்திருக்க முயன்று ரெண்டு தடவை  கீழே விழுந்து,  லக்ஷ்மி  அதை வாத்சல்யத்துடன் நக்கிக்கொடுத்ததும் ஒரே துள்ளலில் எழுந்து  தோட்டம் பூரா ஒடிவிளையாடியது. பின்  கோவாலிக்கு சாப்பிட டி ஃ பன் எடுத்துவந்து கொடுத்து கொஞ்சம் தட்சிணை வைத்து அவனை அனுப்பி வைத்தாள். 



மறுநாள் இரவு கமலியின் கணவன், லட்சுமியை  “அனுப்பிடலாம்” ன்னு இருக்கேன்ன்னு ஆரம்பித்ததும் கமலி பதில் சொல்ல வாயெடுத்து, பின் பேசாமல் இருந்து விட்டாள். 


அவன் மீண்டும் அம்மாவிடம் அதையே ஆரம்பிக்க,  


என்னடா  சொல்றே? 


ஆமாம்மா...நாலு ஆச்சு. இனிமே அது உபயோகப் படாது. 


இருக்கட்டும் டா..அப்புறம் பாக்கலாம் ன்னு அந்த பேச்சை நிறுத்த முயல, 


அவனோ, அப்புறம் தெண்டத்துக்கு இதை வச்சு பராமரிக்கணும், அதான் இப்பவே  நல்ல விலைக்கு அனுப்பிடலாம் ன்னு சொல்றேன்..
 
அப்பா அம்மாவுக்கு  பயந்தவன் தான். ஆனாலும் பிடிவாதம் பிடிச்சா லேசுல ஓயமாட்டான்.



லட்சுமி  போனதிலிருந்து கமலி அரை உடம்பானாள். குழந்தைகளை கரை சேர்த்தாகணுமே ன்னு பல்லைக்கடிச்சிட்டு உயிர் வளர்த்தாள். ஆச்சு மூன்று பெண்களையும் நிறைவாக அனுப்பி புக்ககம் வைத்தாள். இதை ஒரு வரியில் சொல்லிவிட்டாலும் அதற்காக அவள் பட்ட பாடு இருக்கே வார்த்தைகளில் அடங்காது. 


என்னவென்று பிரித்தறிய முடியாத வகையில் உடம்பு தேய்ந்து உருக்குலைந்தாள், கண்ணில்  மட்டும் இருந்தது ஜீவன். மாமனார் மாமியாரின்  காலத்துக்கு பிறகு ராமனுஜன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகிறேன்  பேர்வழி ன்னு  கிளம்பி ஊரூராய் போய் இஷ்டத்துக்கும் ஆடினான்.



தாடி குங்குமப்பொட்டுன்னு பணிவான தோற்றம், கனிவான பேச்சு.  ஆனா அவ்வளவும் உள்ளே விஷம் என்று அறியாமல் ஆஹா ன்னு வந்து விழுந்து ஏமாந்து எழுந்த கூட்டத்தில் பெண்கள் தான் அதிகம். 


அதில் சாராதா ன்னு ஒருத்தி  வீடு வரையும்  வருவது உண்டு. இப்படி கிழிஞ்ச நாராய் கிடக்கிறேளே அம்மா, உங்களுக்கு ஏதானும் செய்யட்டுமா? ன்னு. 


கமலி வா ன்னு ம் சொல்லலை, போ, வேண்டாம் ன்னும் சொல்லலை.  


ஒருநாள் அந்த புத்தக ரூமிலிருந்து ஒரு புத்தகம் எடுத்து வந்து படிக்க சொன்னாள், சாரதாவை.



“ஸ்ரீ பெரும்புதூர் மாமுனிஉடையவர் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கையில்அவர் இல்லறத்தைத் துறந்து, சந்நியாசம் பெற்றுக் கொள்வதற்கான சித்தத்தை உருவாக்கியது சில நிகழ்ச்சிகள்.


முதலாவது, திருக்கச்சி நம்பி என்னும் அடியார் அவரது இடத்தில் அமுதுண்டபோது, அவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்ற எண்ணத்தால், ராமானுஜரின் மனைவியார் தஞ்சமாம்பாள் அவர் உணவருந்திய இடத்தைச் சுத்தம் செய்தார்


இரண்டாவது முறையாக, பசியோடிருந்த பெரிய நம்பிகளுக்கு அப்பசியை ஆற்றி உணவிடாமல், வீட்டில் சற்றும் பண்டமில்லை என்று பொய் சொன்னார்


மூன்றாம் முறையாக, பெரிய நம்பிகளின் மனைவியோடு தண்ணீர் எடுத்து வரும்போது அவரது குடத்து நீர் ஒரு துளி தன் குடத்தில் விழுந்து விட்டதென்று தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டி விட்டார்.


இனியும் இந்த இல்லற தர்மத்தைக் கடைப்பிடிப்பது,  தாம் எதற்காகப் பிறந்தோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் என்று எண்ணிய ராமானுஜர், தஞ்சமாம்பாளின் இல்லத் திருமணத்தைக் காரணம் காட்டி அவரைத் தனியாக அனுப்பி விட்டுஅவர் போன கையோடு வரதராஜப் பெருமாளிடம் விண்ணப்பித்துத் துறவறம் பூண்டார்.


இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது: ராமானுஜரின் மனத் திடம்.  இல்லாள் ஏறுமாறாக இருந்த காரணத்தால் அவர் கூறாது சன்னியாசம் கொண்டாரே தவிரதனது இல்லாள் இவ்வாறு உள்ளாளே என்று எண்ணிப் புலம்பவோஅதற்காகத் தன் கொள்கையை விடுத்துச் சமரசம் செய்து கொள்ளவோ இல்லை.
 
ஒரு விஷயம் இல்லாமல் போவது என்பது அந்த பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு இறைவன் அளிக்கும் வாய்ப்பாகவும் இருக்கக் கூடும்.”   


ஹ்ம்ம்..ம்ப்ச்.. என்ற முனகலில் படிப்பதை நிறுத்திவிட்டு, 


“அட அட அட! கேட்டேளாம்மா?! என்னமா எழுதிருக்கா பாருங்கோ” 


அதுவரை யாரிடமும் ரெண்டொரு வார்த்தைகளுக்கு மேல் அதிகம் பேசாத கமலி,


 “ஆமா..என்ன அதிசயம் இதில?  மனு சாஸ்திரம் முதல் இது வரைக்கும் எல்லாமே ஆண்கள் எழுதிய, அவாளை ஒசத்தியா காட்டற எழுத்துதானே?  அவாளுக்குப் பிடிக்கல, ஒத்துவரலேன்னா,  ஒண்ணு, ஓட்டிடணும், இல்லேன்னா ஓடிடணும் ன்னு இருக்கா.


ஏன்? இப்படி யோசிச்சு பாரு, ஆம்பளைகள் இப்படி ஏறுக்கு மாறா, குணக்கேடா நடந்துக்கறது பொறுக்காம எந்த பொண்டாடியானா துறவறம் போயிருக்காளான்னு?
 

அவாளுக்கு மட்டும் தான் கடமைன்னு ஒரு பந்தம் இருக்கு, 


சாவற வரைக்கும் அறுத்தெறிய முடியாத சங்கிலி அது. 


நான் ராமானுஜரை பழிக்கலை. அவர் மகான். ஆனா இந்த மாதிரி வாய்ப்பு இந்த மாதிரி விட்டு விடுதலை ஆறதுங்கிறது நமக்கு இல்லை. 


அவ்ளோதான். சத்தமே இல்லை..பேச்சோடு மூச்சும் அடங்கினாள்


சாரதா மௌனமாக புத்தகத்தை எடுத்து வைத்து விட்டு தகவல் சொல்ல கிளம்பினாள்.