
இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் ஓரமாக ரெஸ்ட் எடுக்கும் டிராவல்ஸ் வண்டியினுள் அமர்ந்திருந்த டிரைவரிடம் அஞ்சு ரூபாய் கேட்டுக் கொண்டிருக்க, அவர் சாமி பூசாரி என்று ஏதோ சொல்லி மறுத்துக் கொண்டிருந்தார்! அப்புறமும் அவ்வப்போது அவரைப் பார்ப்பதுண்டு. அப்புறம் என்னிடம் அவர் ஏதும் கேட்பதில்லை!
இந்த சம்பவத்தைப் பற்றி நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள் அவர்களது அனுபவத்தைச் சொன்னார்கள். மின்வண்டியில் வரும் ஒருவர் அங்கு தொந்தரவு செய்யும் ஒரு பெரியவரிடம் தினமும் தொந்தரவு செய்யக் கூடாது என்ற கண்டிஷனோடு மாதம் பத்து ரூபாய் கொடுத்து விடுவாராம். மின்வண்டியில் சும்மா தட்டை நீட்டுபவர்களை விட, பாட்டுப் பாடி (சில பேர் நன்றாகப் பாடுகிறார்கள். ஸ்பீக்கர், மைக்கெல்லாம் வைத்துப் பாடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் பாடல் கிறித்துவ பாடல்கள், இறைவனிடம் கையேந்துங்கள், தரை மேல் பிறக்க வைத்தான் போன்றவை. சமயங்களில் பழைய காதல் பாடல்கள் அற்புதமாகப் பாடுவோர் உண்டு!)

இப்போதெல்லாம் யாரும் ஒரு ரூபாய்க்குக் குறைந்து வாங்குவதில்லை! பல வருடங்களுக்கு முன் தஞ்சையில் டிராயர் போட்ட குண்டு வாலிபர் மேரிஸ் கார்னர் பகுதியில் 'இட்லி சாப்பிட பத்து பைசா கொடுங்க சார்' என்று கையேந்துவார். அவ்வப்போது கொடுத்ததுண்டு. ஒருமுறை தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வெளியில் நடப்பதைப் பார்த்த பின், அவருக்கு பத்து பைசா தருவதில்லை.
அப்போதெல்லாம் ராப்பிச்சை என்று வருவார்கள். ஒருவித ராகத்துடன் இழுத்தபடி இரவு நேரங்களில் அவர்கள் வருவது பழகி விட்டிருந்தது. இப்போதெல்லாம் ராப்பிச்சை இல்லை. வீடு வீடாக வந்து பிச்சை எடுப்போரும் இப்போது இல்லை. எலெக்ட்ரிக் டிரெயின்களில், ஸ்டேஷன் வாசல்களில், கோவில் வாசல்களில் சிக்னல்களில் மட்டும் கண்ணில் படுகிறார்கள்!
இன்று மெகா டிவியில் ஏதோ ஒரு ஏலத்துக்கு பத்தாயிரம் முன்பணம் கட்டியும் தட்டில் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏலத் தொகை கேட்டும் நான்கைந்து பிச்சைக் காரர்கள் வந்திருந்ததைக் காட்டினார்கள். ஏலதாரர்கள் அவர்களைக் கலந்து கொள்ள விடவில்லையாம். பத்திரிகை ஜோக் உண்மையானது கண்டு சிரிப்பு வந்தது. இப்போதைக்கு இந்த பிச்சைக்கார நினைவுகளை முடிக்கிறேன்! வேறு ஏதும் சம்பவம் நடந்தால், நினைவு வந்தால் மறுபடி ப்ளேடு போடுகிறேன்!
(முதல் பதிவின் தொடர்ச்சிதான் - ஆனால் என்ன ஒரு எதிர்பாராத திருப்பம்! மர்மக் கதை ரேஞ்சுக்குப் போய்விட்டு - இப்படிப் பிச்சைக்கார நினைவுகளாக முடித்துவிட்டாரே பதிவாசிரியர்! - இப்படிக்கு பப்ளிஷர் )