முந்தைய பகுதி, எட்டெட்டு பகுதி 6 சுட்டி
(கேவி யிடம் ஆவி கூறிய கதை தொடர்கிறது. )
காலு சிங் கூறியதைக் கேட்டவுடன் எனக்கு உலகமே இருண்டுவிட்டது. என்னுடைய ஒரே உறவான தந்தையை நிராதரவாக விட்டு விட்டு, 'ஓ ஏ தான் இனி என் உலகம்' என்று வந்த எனக்கு, 'ஓ ஏ யும் பிங்கியும் தந்தை மகளாகப் பழகவில்லை' என்ற காலு சிங்கின் செய்தி பேரிடியாகத்தான் பட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. கடவுளே! எனக்கு ஏன் இந்த நிலை? உலகம் எப்பொழுதுமே இப்படித்தானா? உலகத்தில் உள்ள ஆண்கள் எல்லோருமே இப்படித்தானா? இந்த செய்தியைக் கேட்காமலேயே நான் உயிரை விட்டிருக்கக் கூடாதா? என்றெல்லாம் தோன்றியது. அதன் பிறகு 'எனக்கு என்று ஒரு குழந்தை பிறந்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதோ?' என்றும் தோன்றியது.
உடனே அப்பாவை தொலைபேசியில் அழைக்க முயற்சி செய்தேன். அப்பா இந்த முறையும் என்னுடன் ஃபோனில் பேச வரவில்லை என்றால், உடனேயே தூக்கில் தொங்கிவிடுவது என்றும் முடிவெடுத்தேன். ஃபோனை எடுத்த மளிகைக் கடைக்காரரிடம், "சார் - என் அப்பாவை ஃபோனுக்கு வரச் சொல்லுங்கள். இந்த தடவை என்னிடம் பேசமாட்டேன் என்று சொன்னார் என்றால், இனிமே நான் கூப்பிடவே மாட்டேன்; பேசவே மாட்டேன் என்று சொல்லுங்கள்." என்றேன்.
என்றைக்கும், பேச விருப்பமில்லை என்று சொல்லி அனுப்புகின்ற அப்பா அன்றைக்கு பேச வந்தது ஒரு ஆச்சரியம். ஃபோனை எடுத்து, "என்னம்மா மாயா குட்டி?" என்று அப்பா கேட்டதும் - கட்டுப் படுத்த முடியாமல், வார்த்தைகள் வராமல், வாய் விட்டு அழத் தொடங்கிவிட்டேன். வார்த்தைகளுக்கு பதில் விம்மல்கள்தான். அப்பா பதறிப் போய்விட்டார். "என்னம்மா? என்ன ஆச்சு? எதுவாக இருந்தாலும், உடனே கிளம்பி இங்கே வா அம்மா. பிறகு பேசிக்கொள்ளலாம்." என்றார்.
பிறகு ஒருவாறு மனம் இலேசானவுடன், "அப்பா, என் ஜாதகத்தை கணித்து எடுத்து வந்தாயே, எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா கிடையாதா? என்னுடைய வாழ்க்கையே தன்னந் தனியாளாக வாழ்ந்து முடிய வேண்டியதுதானா?" என்று கேட்டேன். ஓ ஏ தடம் புரண்டிருப்பது பற்றி கூறினால் அப்பாவால் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாது என்று என்னுடைய உள்ளுணர்வு கூறியதால், குழந்தை இல்லாத பிரச்னையை மட்டும் அப்பாவிடம் கூறினேன்.
அப்பாவின் குரலில் இருந்த குழப்பம் விலகி, தெளிவாகப் பேசினார். "அட அசடே - இதற்குத் தான் இவ்வளவு அழுகையா? நான் என்னவோ ஏதோ என்று பயந்து போய் விட்டேன். ஜாதகம் எல்லாம் முழுவதுமாக நம்பக் கூடாது அம்மா. நமக்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வேண்டும். வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால் அதுவே பெரிய வரப்ரசாதம். உன்னுடைய ஜாதகத்தில், நீ உன்னுடைய முப்பத்து ஏழாவது பிறந்த நாளுக்குப் பிறகு மகாராணி போல வாழ்வாய் என்று இருக்கின்றது என்று ஜோதிடர் கூறினார். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திரு. அதன் பின் உனக்கும் நல்ல காலம்; உன்னால் எனக்கும் நல்ல காலம் வரும் என்று ஜோதிடர் கூறினார்." என்றார்.
"அப்பா, அந்த ஜாதகத்தை எனக்கு உடனே அனுப்பி வை. அதை இங்கே உள்ள ஜாதக ஜோதிட வைத்தியர் ஒருவரிடம் காட்டி, தோஷப் பரிகாரம் எதுவாவது செய்து, மனச் சாந்தி பெற முடியுமா என்று பார்க்கின்றேன்" என்றேன்.
"சரி மாயா. இப்பொழுதே உன் ஜாதக நகல் உனக்குக் கூரியரில் அனுப்புகின்றேன். தைரியமாக இரு. அசடாட்டம் அழுதுகொண்டு இருக்காதே. சந்தோஷமாக இரு." என்றார் அப்பா.
மறுநாள், என் ஜாதக நகல் எனக்கு வந்து சேர்ந்ததும், அதையும் , என்னுடைய கணவர் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு, இந்தூரில் பிரபலமாக இருக்கின்ற 'ஆயுர் ஆரோக்கிய வீர்ய விஜயன்' என்னும் ஜாதக ஜோதிட வைத்தியரின் வீட்டிற்குச் சென்றேன்.
அவர், வீட்டில் தன்னுடைய சிஷ்யன், 'எலெக்டிரானிக் சாமியார்' என்ற ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
(தொடரும்)
நன்றாக இருக்கு.தொடருங்கள்
பதிலளிநீக்குஅருமை.. விறுவிறுப்பாக செல்கிறது தொடர்.
பதிலளிநீக்குபெயர்கள் எங்கிருந்தெல்லாம் கிடைக்கிறது பாருங்கள்!
பதிலளிநீக்குஇருந்தாலும் அந்த இந்தூர் ஜாதக ஜோதிடரின் முழுப்பெயரையும் போட்டிருக்கலாம். 'ஷேம ஸ்தைர்ய ஆயுர் ஆரோக்கிய வீர்ய விஜய ஐஸ்வர்யன்' என்று அந்த அம்மாம் பெரிய பெயரை ரொம்ப ஷார்ட்டாக குறுக்கி விட்டீர்களே!
கதையும் படங்களும் அருமை..
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் ஜீவி. என்னுடைய குருநாதரின் பெயர் இன்னும் நீளமானது. அது, 'சஹ குடும்பானாம் ஷேம ஸ்தைர்ய ஆயுர் ஆரோக்கிய, வீர்ய விஜய, சகல ஐஸ்வர்ய, இஷ்ட காம்யார்த்த சித்யர்த்தன்' என்பதாகும். பதிவாசிரியர் சுருக்கிப் போட்டு விட்டார். ரொம்ப நீளமாகப் போட்டால், மன்சூர் அலிகான் எடுத்த படம் என்று நினைத்து வாசகர்கள் பயந்து ஓடிவிடுவார்கள் என்று நினைத்திருப்பார் போலிருக்கு!
பதிலளிநீக்குசாதகம் பாக்கிறதும் பரிகாரம் செய்றதும்...எங்க அம்மா ஞாபகம் வருது !
பதிலளிநீக்குஎ சா மறுபடுயும் வந்துட்டாரா?
பதிலளிநீக்குவிறு விறு, சுறு சுறு தொடர். தொடரட்டும்.
பதிலளிநீக்குவிறுவிறு சுறுசுறு தொடர்தான். ஆனால் இத்தனை இடைவெளிவிடாமல் கொஞ்சம் சுறுசுறுப்பாக எழுதலாம்.
பதிலளிநீக்குகீதா சந்தானம் மேடம். நீங்கள் சொல்வது சரிதான். நாங்களும் அதைத்தான் பதிவாசிரியரிடம் சொன்னோம். அவர் மார்கழி மாதம் வந்தாலே சென்னை சங்கீத சபாக்களில்தான் வாழ்க்கை நடத்துவது என்று மைலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, தி நகர் பகுதிகளில் இருக்கும் சபாக்களில் செவிகளுக்கும், சபா காண்டீன்களில் வயிற்றுக்கும் உணவு என்று சுற்றி அலைந்து இப்போதான் திரும்பி வந்தார். இனிமேல் ஒழுங்காக வாரம் ஒரு அத்தியாயம் எழுதுவார் என்று நம்புவோம்.
பதிலளிநீக்குநல்ல விறுவிறுப்பு! தொடருங்கள் சற்று விரைவாக. பதிவாசிரியர் திரும்ப போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், கனு பொங்கல், காணும் பொங்கல்ன்னு பிசியா பொங்கல் சாப்பிட போயிட போறார். :)
பதிலளிநீக்குஒரு பதிவுக்கும், இன்னொண்ணுக்கும் நடுவே எம்புட்டு இடைவெளி! யோசிக்க நேரம் எடுத்துக்கிறாங்களோ?
பதிலளிநீக்கு