திங்கள், 23 ஜனவரி, 2012

பால்காரர்

     
அமைதியான இரவு; பெங்களூர்க் குளிர். போர்த்திக்கொண்டு படுத்து, நல்ல தூக்கம்.

மின் விசிறிச் சத்தம் கூட இல்லாமல் இருந்த அமைதியையும், தூக்கத்தையும் ஒருங்கே கெடுத்தது, நாய் குரைப்புச் சத்தம். வீட்டிலே உள்ள மற்ற மக்கள் எல்லோரும் ஆறு வருடங்களுக்கு மேலாக இந்தக் குளிருக்கும், குரைப்புச் சத்தங்களுக்கும் பழகிய கும்பகர்ணர்கள். நான் ஒருவன்தான் இந்தச் சூழ்நிலையில் இரண்டுங்கெட்டான். 

குறைக்கின்ற அந்த நாய் பக்கத்துத் தெருவிலிருந்து குறைப்பது போல தூரத்திலிருந்து குறைத்துக் கொண்டிருந்தது. 'போ போ போய் விடு' என்று சொல்வது போல குரைப்புகள்; சில சமயங்களில் அழுகை கலந்த முறையீடு! இது தெரு நாய் குரைப்புதான். வீட்டு நாய் குரைத்தால், அந்தந்த வீட்டு மக்கள் அதை எப்படியாவது சமாதானம் செய்து அமைதியை நிலைநாட்டி விடுவார்கள். 

திடீரென்று ஒரு மௌனம் - நிசப்தம். நம்ப முடியாத சூழ்நிலையை மனம் வாங்கி, நாய்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றி,  உறக்கம் வந்து கண் இமைகளை அழுத்தும் நேரம் --- திரும்பவும் குரைக்கத் தொடங்கியது அந்த நாய். 

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ஓஷோ சொன்ன யுக்தியைப் பின்பற்றினால் என்ன என்று தோன்றியது. அதாவது அந்த நாய், நமக்குப் பிடித்த கடவுள் பெயரையோ அல்லது நமக்குப் பிரியமானவர்களின் பெயரையோ சொல்வது (குரைப்பது!) போல கற்பனை செய்து கொள்ளலாம். அப்போ நமக்கு அது ஒரு தொந்தரவாகத் தெரியாது என்ற யுக்தி அது. 

ஊ ஹூம் - அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அந்த நாயின் குறைப்பு எனக்குப் பிடித்தவர்களின் பெயரின் எழுத்துகளை சரியாகச் சொல்லவில்லை! அதற்காகவே அதை நேரில் சந்தித்து, ஒரு கல்லால் அடித்து, அதை ஓட ஓட விரட்டி விட வேண்டும் என்று தோன்றிற்று. 

நேரம் என்ன என்று பார்த்தேன். காலை மணி நாலரை. சரி. எப்படியாவது அந்த நாயை விரட்டிவிடுவோம் என்று நினைத்து, படுக்கையிலிருந்து எழுந்து, ஸ்வெட்டர், கம்பளிக் குல்லாய், போர்வை எல்லாம் அணிந்து, போர்க்கோலம் பூண்டு வந்து, வாசல் கதவைத் திறந்தேன். அடேடே - வாசல் கிரில் கேட் பூட்டப்பட்டிருக்கின்றதே! இந்தப் பூட்டின் சாவி எங்கே இருக்கின்றது என்று வீட்டில் இருக்கின்றவர்கள் யாரையாவது எழுப்பிக் கேட்டால்தான் தெரியும். அப்படி எழுப்பினால், எழுப்பப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாயை விடக் கடுமையாக என்னைப் பார்த்துக் குரைக்க ஆரம்பிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம். 

'என்ன செய்யலாம்?' என்று யோசித்துக் கொண்டிருக்கையில், ஆபத்பாந்தவனாக சைக்கிளில் வந்து இறங்கினார், எதிர் வீட்டுப் பால்காரர். 
       
மாத முதல் ஞாயிற்றுக் கிழமைகளில், வாடிக்கையாளர் வீடுகளுக்கு கூப்பன் விற்க, பணம் வசூல் செய்ய அவர் வருகின்ற நேரங்களில்,  அவரைப் பார்த்ததுண்டு. தமிழ் தெரிந்தவர் என்பதால், என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் தமிழில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் செல்வார். எங்கள் வீட்டுப் பால்காரர் காலை ஏழுமணி சுமாருக்குத்தான் வருவார். எதிர் வீட்டுப் பால்காரர் இவ்வளவு சீக்கிரமாக வருகின்றாரே என்று வியப்பாக இருந்தது. அதை அவரிடமே கேட்டுவிட்டேன். "என்ன பால்காரரே - இவ்வளவு சீக்கிரம்?" 

"நான் இன்றைக்கு கொஞ்சம் முன்னதாகத்தான் வந்துவிட்டேன். சட்டென்று பால் பாக்கெட் போடுகின்ற வேலையை முடித்துக் கொண்டு, ஹோசூர் போகணும். அதான் காரணம்" என்றார். அவருடைய குரல் முற்றிலும் கரகரப்பாக மாறியிருந்தது. 'சரி இந்தப் பனி காலத்தில் இப்படி வெளியே உலவுபவருக்கு தொண்டை கட்டிக் கொள்வது இயற்கைதான்' என்று நினைத்துக் கொண்டேன். 

"பால்காரரே - எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?"
           
"என்ன சார் வேண்டும்?"
           
"பக்கத்துத் தெரு நாய் - இப்படி பயங்கரமாக, பேயைக் கண்டது போல குரைத்துக் கொண்டு இருக்கின்றதே; அதை அந்தப் பக்கம் போகும் பொழுது, விரட்டி நாலைந்து தெருக்கள் தாண்டி போகின்றாற்போல துரத்தி விடுங்கள். அல்லது எப்படியாவது அது சத்தம் போடாமல் இருக்க வையுங்கள்."
           
"இனிமேல் அது சத்தம் போடாது சார். இப்போ நிறுத்திடும். நீங்க போய் தூங்குங்க." என்று சொல்லி விட்டு, எதிர் வீட்டுப் பால் பையில் பால் பாக்கெட்களைப் போட்டு விட்டுக் கிளம்பினார். அவர் பக்கத்துத் தெரு போகின்ற வரையிலும் பார்த்திருந்து விட்டுப் போகலாம் என்று பார்த்திருந்தேன். ஆனால் சைக்கிளில் ஏறிச் சென்றவர், சைக்கிளுடன் திடீரென்று பனி மூட்டத்தில் கரைந்து காணாமல் போனார். கொஞ்ச தூரம் போனவுடனேயே அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஆனால் நாய் குரைப்பு மட்டும் உடனே மந்திரம் போட்டாற்போல் நின்றது. எனக்கு அது போதும். 
            
வாசல் கதவைத் தாளிட்டு, வந்து படுத்து, இரண்டரை மணி நேரம் தூங்கினேன். ஏழு மணிக்கு வாசல் பக்கம் வந்து பால் பாக்கெட்களை எடுக்க வந்தால், எதிர் வீட்டுக்காரர் அவர்கள் வீட்டு கேட்டுக்கருகே, தெருவைப் பார்த்தபடி நின்றிருந்தார். 
           
"என்ன சார்? காஃபி சாப்பிட்டுட்டீங்களா?" என்று கேட்டேன். 
   
"ஊ ஹூம் ... இன்னும் பால்காரர் வரவில்லை" என்றார் எதிர்வீட்டுக்காரர். 
                       

23 கருத்துகள்:

  1. பே...ய்க்கதை !

    ஓஷோவின் யுக்தி அருமை !

    பதிலளிநீக்கு
  2. கதை, நாய், நிலா, பால்கார் படம் எல்லாம் ஒரு மாதிரியா...... எதுக்குங்க இப்படி பயமுறுத்தறீங்க?
    ஏற்கெனவே இங்க நான் இருக்கற இடத்துல பகலே இரவாட்டாம இருட்டா, ரொம்பவே நிசப்தமா, வெளில பலமான காத்தோட மழை பெஞ்சுண்டு
    ஓஓஓஓ.....ன்னு இருக்கு. சரி கொஞ்சம் ப்ளாக் எல்லாம் படிப்போன்னு பாத்தா, நீங்க வேற இப்படி எல்லாம் எழுதி என்னை இன்னும் பயமுறுத்தறீங்களே! :)

    பதிலளிநீக்கு
  3. ஏற்கெனவே ரெண்டு நாளாப்பொட்டுத் தூக்கம் இல்லை; இதிலே இது வேறேயா???? இப்போ இங்கே ராத்திரி ஏழேமுக்கால் வேறே. தூக்கம் வர நேரத்திலே இந்த நினைப்பு வந்துடப் போகுதே! :))))

    அது சரி, நாலரை மணினா காலம்பரத் தானே, பேசாம எழுந்து பல்லைத் தேய்ச்சுட்டுக் காபிக்கு டிகாக்‌ஷன் போட்டுட்டு ஒரு நாளைக்காவது உங்க த.ம.வுக்கு வேலையைக் குறைச்சிருக்கலாம் இல்ல????

    பதிலளிநீக்கு
  4. ஆனால் ஒண்ணு இந்தத் தெரு நாயெல்லாம் ராத்திரி குரைச்சு எழுப்பி விடறது நம்ம நாட்டிலே அதிகமாத் தான் இருக்கு! :((((( எங்க வீட்டிலே காம்பவுண்டுக்குள்ளேயே புகுந்துக்கும். ஒரே சண்டை, மண்டை உடையும். ஒரு தரம் குட்டி போட்ட பூனையையும், பூனைக்குட்டிகளையும் துரத்தி.......
    ஒண்ணும் பண்ண முடியலை! பூனைக்குட்டிகள் 5 குட்டிகள் வரிசையா அம்மாவோட.......... நினைச்சாலே மனம் நடுங்கும். :(((((((((

    இத்தனைக்கும் எங்க வீட்டில் நாலு, ஐந்து நாய்கள் வளர்த்திருக்கோம். நம்ம ரங்க்ஸ் பள்ளி நாட்களிலே நாய் துணைக்கு வரத் தான் பள்ளிக்கே போவாராம். அவ்வளவு பழக்கம். இருந்தாலும்..........

    பதிலளிநீக்கு
  5. எங்கள் ப்ளாக்24 ஜனவரி, 2012 அன்று 8:29 AM

    // கீதா சாம்பசிவம் said...
    .........

    அது சரி, நாலரை மணினா காலம்பரத் தானே, பேசாம எழுந்து பல்லைத் தேய்ச்சுட்டுக் காபிக்கு டிகாக்‌ஷன் போட்டுட்டு ஒரு நாளைக்காவது உங்க த.ம.வுக்கு வேலையைக் குறைச்சிருக்கலாம் இல்ல????//

    பெங்களூர்ல காலை நாலரை மணி என்பது பாதி ராத்திரிங்க!

    என்னுடைய த ம பகல் பன்னிரண்டு மணி சமயத்தில்தான் காஃபி போடுவார். காலை நேரத்தில் எனக்கு வேண்டிய சுக்கு மல்லி காஃபியை நானேதான் போட்டுக் கொள்வேன்.
    பதிவாசிரியர்.

    பதிலளிநீக்கு
  6. பெங்களூர்ல காலை நாலரை மணி என்பது பாதி ராத்திரிங்க! ////

    சரியாப் போச்சு போங்க, பெண்களூரிலேயே அப்படின்னா இங்கே என்ன சொல்லுவீங்களோ! :)))))))
    இங்கே காலம்பர நாலரை மணிக்குப்பார்த்தீங்கன்னா அப்பத்தான் ராத்திரி எட்டு மணி மாதிரி இருக்கும். :)

    என்னுடைய த ம பகல் பன்னிரண்டு மணி சமயத்தில்தான் காஃபி போடுவார். காலை நேரத்தில் எனக்கு வேண்டிய சுக்கு மல்லி காஃபியை நானேதான் போட்டுக் கொள்வேன்.//

    ஹிஹிஹி, நல்ல த.ம. தான். வாழ்க உம் தொண்டு!

    சுக்குமல்லிக்காப்பி உடம்புக்கு அதுவும் பெண்களூர் குளிருக்கு நல்லது. அதையே தொடருங்க.

    பதிவாசிரியர்.//

    அதென்னங்க உங்க பதிவை விட சஸ்பென்ஸாப் பதிவாசிரியர் யாருனு தெரியாமப் பொதுவாப் பதிவாசிரியர்னு போடறீங்க?? மண்டையை உடைக்குதே!

    பதிலளிநீக்கு
  7. கடமையுணர்ச்சி கூடிய பேய். அது சரி.. 'காபி சாப்பிட்டீங்களா'னு கேட்டா, 'பால்காரர் இன்னும் வரலே'னு சொல்றாரே? க்யா சம்மந்தம்?

    பதிலளிநீக்கு
  8. கடமையுணர்ச்சி கூடிய பேய். அது சரி.. 'காபி சாப்பிட்டீங்களா'னு கேட்டா, 'பால்காரர் இன்னும் வரலே'னு சொல்றாரே? க்யா சம்மந்தம்?//

    அது ஒண்ணும் இல்லை, எதிர்வீட்டுக்காரருக்குச் சுக்குக் காப்பியோ, அல்லது கடுங்காப்பியோ பழக்கம் இல்லை; பால் சேர்த்துத் தான் சாப்பிடற வழக்கம்னு அர்த்தம். முதல் நாள் பால் ஃப்ரிட்ஜில் இருந்திருக்காது! :))))))

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ப்ளாக்24 ஜனவரி, 2012 அன்று 7:04 PM

    கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது சரி. பலருக்கு காலைக் காஃபி புதுப் பாலில்தான் குடிக்கப் பிடிக்கும். பழைய பால் காஃபி என்றால் விளக்கெண்ணையை குடிக்கச் சொல்வது போல நினைப்பார்கள். புதுப் பால், புது (முதல்) டிகாக்ஷன், அளவான சர்க்கரை, சூடு எல்லாம் இருக்கின்ற காஃபியை, ஆற்றிக் குடிக்கின்ற இரசனை இருக்கின்றதே, அடா ...அடா ....!!

    பதிலளிநீக்கு
  10. புதுப் பால், புது (முதல்) டிகாக்ஷன், அளவான சர்க்கரை, சூடு எல்லாம் இருக்கின்ற காஃபியை, ஆற்றிக் குடிக்கின்ற இரசனை இருக்கின்றதே, அடா ...அடா ....!!//

    அப்படீங்கறீங்க?? :))) அப்புறமா த.ம.வுக்குப் பயந்து ஏன் சுக்குக் காப்பி? ஹிஹிஹி,

    ஒரு தரம் எங்க வீட்டுக் காஃபி குடிச்சுப் பாருங்க. நீங்கல்லாம் என்ன இருந்தாலும் பாக்கெட் பால் காஃபி தானே. நாங்க நேரடியா மாட்டுக்கிட்டே இருந்தே வாங்கிட்டு வருவோம். :)))) விபரம் தெரிஞ்சதிலே இருந்து இப்படித்தான். ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    இங்கே தான் வேறே வழியே இல்லை; ஹாஃப் அன்ட் ஹாஃபோட திருப்தி அடைஞ்சுக்கணும். :P:P:P

    பதிலளிநீக்கு
  11. எங்கள் ப்ளாக்24 ஜனவரி, 2012 அன்று 8:59 PM

    // அப்படீங்கறீங்க?? :))) அப்புறமா த.ம.வுக்குப் பயந்து ஏன் சுக்குக் காப்பி? ஹிஹிஹி,//

    த ம வுக்கு பயந்து சுக்குக் காப்பி இல்லைங்கோ ... சுக்குக் காப்பி போடுவது ரொம்ப ஈசி. பீங்கான் குவளையில் ஒரு ஸ்பூன் சுக்கு மல்லி காபிப் பொடியைப் போடவேண்டியது. அரை டம்ப்ளர் தண்ணீர் ஊற்றவேண்டியது. மைக்ரோ வேவ் ஓவனில் ஒரு நிமிடம் வைத்து சூடு படுத்தவேண்டியது. அப்புறம் ஒரு டீ வடிகட்டியில் வடிகட்டி - தேனோ அல்லது சர்க்கரையோ கலந்து சுவைத்துச் சாப்பிடவேண்டியது. அம்புட்டுதான்!

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக்24 ஜனவரி, 2012 அன்று 9:02 PM

    // கீதா சாம்பசிவம் said...
    ithu entha a"siri"yar?//

    பேயைக் கண்டு பயப்படாதவர்! (என்று சொல்லிக் கொள்பவர்)

    பதிலளிநீக்கு
  13. த ம வுக்கு பயந்து சுக்குக் காப்பி இல்லைங்கோ //

    பேயைக் கண்டு பயப்படாதவர்! (என்று சொல்லிக் கொள்பவர்)//

    ஹிஹிஹிஹி, ஆ"சிரி"யரே, கு.வி.மீ.ம.ஒ.???????????

    ஓகே, ஓகே, ஒரு டிப் தரேன் சுக்குமல்லிக்காபியை இப்படி மைக்ரோவேவில் எல்லாம் வைச்சு மாடர்னைஸ் பண்ணாம, காஸ் அடுப்பிலேயே கொதிக்கவிட்டுக் கொஞ்சம் கருப்பட்டி(கருப்பட்டின்னா கருப்பட்டி தான்) போட்டுக் குடிங்க. அடாடா, இங்கே இந்தக் குளிருக்கு அபாரமா இருக்கும். ஆனா ஒண்ணு, பாலெல்லாம் சேர்க்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  14. குரோம்பேட்டைக் குறும்பன்26 ஜனவரி, 2012 அன்று 8:59 AM

    காலை நேர நடை செல்லும் பொழுது, எதிரில் வருகின்ற பால்காரரிடம், "பால் இருக்கிறதா?" என்று கேட்பதற்கு பதிலாக, 'கால் இருக்கிறதா?' என்று பார்க்க வைத்துவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  15. Now you have got me thinking our street dogs. They never stop barking. and there has been two sudden passing away inthe vicinity too.
    your story makes me wonder. hmmmm!!!!really scary.

    பதிலளிநீக்கு
  16. இந்தப் பதிவு வந்தப்போவும் அம்பேரிக்காவிலே தான் இருந்திருக்கேன்! :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!