திங்கள், 30 ஜனவரி, 2012

ஈஸ்ட் ஆர் வெஸ்ட் சர்ஜரி இஸ் பெஸ்ட்! மருத்துவ வியாபாரம்.

            
என் நண்பர் ஒருவர் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புக்குக் கீழே விழுந்தார்! ஒன்றுமில்லை, ஓரமாக சென்று கொண்டிருந்தவரை சாலை நெரிசலில் அவசர இடுக்குகளில் நுழைந்த இரு சக்கர வாகனம் ஒன்று இடித்துத் தளளி விட்டுப் பறந்தது. விழுந்தவர் எழுந்தபோது கையில் மட்டும் வலியை உணர்ந்தார். வேறு ஒன்றும் அடியில்லை.
              
வீடு வந்தபோது இடது கை முஷ்டி லேசாக வீங்கியிருந்தது. விரல்களை அசைக்க முடிந்தது.வலி இருந்தது. அன்று வலி நிவாரணி ஒன்று லோகல் மெடிகல் ஷாப்பில் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மறுநாளும் வலி தொடர்ந்தாலும், நட்பு மற்றும் உறவுகள் சொன்னதாலும் மருத்துவமனை சென்று எக்ஸ்ரே எடுத்தார். 
            
சிறு கோளாறு இருப்பது தெரிந்தது. அதாவது 'சிறிய' என்று இவர் நினைத்தார்! முதலில் கட்டுப் போட்டு அனுப்பிவிடத் தீர்மானித்தது அவர் இருந்த ஏரியா சிறிய மருத்துவமனை. இவரின் நண்பர் ஒருவர் மருத்துவர். அவர் பார்த்து விட்டு "சர்ஜரி பெஸ்ட்.... இருபதாயிரம் ரூபாய் வரை ஆகும்.... ரொம்ப அதிகம்னா முப்பதாயிரம் ஆகலாம்"  என்று சொல்ல, தென் சென்னையில் பெரிய பெயரை உடைய ஒரு மருத்துவமனை சென்றார்.
             
ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்.
               
ப்ளேட், ஸ்பூன் (!) எல்லாம் வைத்து சர்ஜரி தேவையா, அல்லது மாவுக் கட்டு மட்டும் போதுமா என்று விவாதித்து செகண்ட் ஒபீனியன் என்று அண்ணா நகர் பக்கம் இன்னொரு பெரிய ஸ்பெஷாலிடி மருத்துவமனைக்குச் சென்றார்கள். எக்ஸ்ரே எல்லாம் புதிதாக மறுபடி கூடுதல் விலையில் எடுக்கப் பட்டு, 'சர்ஜரி தான் பெஸ்ட்' என்று சொல்லி, அவர்கள் கொடேஷனைக் கொடுத்தார்கள்.
            
ஒன்றரை லட்சம் ரூபாய்!
                     
முப்பதாயிரம் ருபாய் ஆகும் என்று சொன்ன (நண்ப) மருத்துவரிடம் அணுகியபோது அவர் சற்றே சுதாரித்திருந்தார்! ஆனாலும் ரீசனபில்! தன் தோழைமை மருத்துவருக்கு சிபாரிசு செய்தால் அறுபதுக்குள் முடியும் என்றார். சரி, ஐமபதையிரம் சொன்ன இடமே தேவலாம் என்று முடிவு செய்து மறுபடி அங்கேயே சென்று அட்மிஷன் நடைமுறைகளை ஆரம்பித்த போது இவர்கள் கொடேஷன் கொடுத்தார்கள்! ஒரு லட்சத்து இருபதாயிரம்!
             
வீக்கம் ரொம்பக் கம்மியாய் இருக்கிறது, வலியும் இல்லை பேசாமல் அப்படியே இருந்து விடுகிறேன் என்கிறார் இவர்.
                  
மாவுக் கட்டு போட்டால் நேராக உட்காருமா, அப்புறம் பிசியோதெரபி செய்ய வேண்டும் அதற்கு இவர் வயது தடையாக இருக்கும், சர்ஜரி என்றால் உடனடி ரிசல்ட், ஆனால் அதற்கும் பிசியோதெரபி உண்டு... "மாவுக் கட்டு எல்லாம் இப்போ யார் சார் போடறாங்க... சர்ஜரிதான்" என்றார் மருத்துவத் துறை நண்பர் ஒருவர். 
              
ஏகப் பட்ட விவாதங்கள்.
               
என்ன ராசியோ நண்பரின் மகனும் சமீபத்தில் இதே மாதிரி கையில் சர்ஜரி செய்து கொண்ட வகையில் முப்பதாயிரம் ரூபாய் செலவாகி இருந்தது. அது கேரளாவில்! இதை விடப் பெரிய சிகிச்சை- ஒரு விபத்தில் ஏற்பட்டது. அங்கு விலை நிலவரம் கம்மி போலும்!
             
"நீங்க என்ன கையிலிருந்தா கொடுக்கப் போறீங்க.... இன்சியூரன்ஸ்காரங்க கொடுக்கப் போறாங்க...உங்களுக்கென்ன...உங்கள் கையிலிருந்து பத்தாயிரமோ இருபதாயிரமோதான் செலவாகப் போகுது... நீங்கள் சொன்ன ரேட்டை விடவும் இது கம்மிதானே..." என்று கூறின ரிசப்ஷன்கள்! 
            
அறுவைச் சிகிச்சை முடிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த விலை நிலவரங்கள்தான் ஆச்சர்யமேற்படுத்தியது. 
               
இன்சியூரன்ஸ்,  மெடிக்ளெய்ம் எல்லாம் போடாதவர்கள் கதி என்ன?
                    
என் மாமா ஒருத்தர் ஒரு வடை ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் என்று இரண்டு வடை சாப்பிட்ட கதை தெரியுமோ.... அதுவும் இதே போலதான். வடையில் ஆரம்பித்த கோளாறு எங்கெங்கோ சென்று நிம்மோனியா வரை சென்று, 'பிழைப்போமா' என்று சரியாகும்போதுதான் வடைக்குக் கொடுத்த விலை தெரிந்தது!


12 கருத்துகள்:

  1. பல இடங்களிலும் நடப்பதுதான்.வடைக்கு மட்டுமல்ல,உணவுப்பொருளுக்கு கொடுக்கும் விலை சில நேரங்களில் மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  2. டிஸ்சார்ஜுக்கு ரிசப்ஷனுக்குப் போனதுமே கேள்வி இன்சூரன்ஸா, ரீஇம்பர்ஸ்மெண்டா, கேஷா. இன்சூரன்ஸ்னா ராஜ மரியாதை. ரீ இம்பர்ஸ்மெண்ட்னா பார்மசில காஸ்மடிக்ஸ் வேணும்னா வாங்கிட்டு மெடிசின் பில் கேளுங்கன்னு கேரட். கேஷ் அப்படின்னா ரூம்ல வெயிட் பண்ணுங்கன்னு குறைஞ்சது ஒரு நாள் எக்ஸ்ட்ரா வாடகை கறந்துடுவாங்க. :(

    பதிலளிநீக்கு
  3. மருத்துவ நடப்பைப் பிட்டு பிட்டு வைத்துள்ளீர்கள். தலைப்பே ஓங்கி அடிக்கிறது.

    வடை(யால்) போச்சே என வருந்தியிருப்பார் மாமா. கவனம் தேவை எல்லோருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. விதை இல்லாத ஒலிவ்காய் என்று வாங்கி அலட்சியமாகச் சாப்பிட,விதை திடீரென்று கடிபட்டு பல்லே முறிந்து காப்புறுதி பல்லுக் கட்டி விட்டிச்சு.இதுவும் ஒரு கதை !

    பதிலளிநீக்கு
  5. மருத்துவ உலகில் இப்படியான விஷயங்களால் அவதிப்படுபவர்கள் நிறைய. சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. இப்பெல்லாம் மருத்துவ மனைகளில் எல்லா உடம்புக்கும் தனித்தனியாக pacakage charge வைத்திருக்காங்க. இதெல்லாம் எப்படி முடியுமோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. நிறைய இருக்கு சொல்ல! :(( மருத்துவம் ஒரு சேவையாக இருந்த காலமும் ஒன்று உண்டு. அதைப் பத்தி நினைச்சு மனசைத் தேத்திக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி சண்முகவேல்,
    நன்றி பாலா சார், பிபி அதிகமா இருக்கு என்று சொல்லியும் சர்ஜரி தாமதிக்கும் இரு உதாரணங்களும் உண்டு!
    நன்றி ராமலக்ஷ்மி,
    நன்றி மாதவன்,
    நன்றி ஹேமா,
    நன்றி கணேஷ்,
    நன்றி சமுத்ரா,
    நன்றி ராம்வி,
    நன்றி கீதா மேடம்,
    நன்றி ரத்னவேல் சார்.

    பதிலளிநீக்கு
  9. இந்த இன்ஷூரன்ஸ் வரமா, சாபமான்னே ஒரு பட்டிமன்றம் வைக்கலாம்போல!!

    ஒரே டாக்டரின் சேவையை இ.மு., இ.பி.ன்னு தரம் பிரிக்கலாம்கிற அளவுக்கு மாறிப்போச்சு!! :-(((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!