வியாழன், 19 ஏப்ரல், 2012

உள் பெட்டியிலிருந்து - 04 2012

                 
ஒற்றுமை
  
பெத்த பொண்ணுக்கும்  பரீட்சை பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை. கட்டிக் கொடுக்கும் வரையில் தலைவலிதான்.   
===============================

புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை

அம்மாவும் சிறுவனும் பாலம் கடந்து கொண்டிருக்கின்றனர்.   
அம்மா : "என் கையை கெட்டியா பிடிச்சிக்கோ என்ன?"
சிறுவன் : "இல்லைம்மா... நீ என் கையைப் பிடிச்சிக்கோ..."
அம்மா :  " என்ன வித்த்யாசம் செல்லம்?"
சிறுவன் : "நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒரு நேரம் கையை விட்டுடுவேன்.  ஆனால் நீ என் கையைப் பிடிச்சிகிட்டா எந்தச் சூழ்நிலையிலும் என் கையை விடமாட்டேன்னு எனக்குத் தெரியும்"  
=======================================

எது தெரியுமா அதிக வலி...
  
நீங்கள் நம்பும் ஒருவர் உங்களைப் புண்படுத்தினால் வலி. அதைவிட அதிக வலி தருவது நீங்கள் புண்படுத்திய ந(ண்)பர் உங்களை இன்னும் நம்புவது!  
==================================

"கவித கவித..."!

வாழ்க்கை 
ஒரு நதியைப் போல
ஓடிக் கொண்டிருக்கிறது..
எதிர்பாராத் திருப்பங்களுடனும்
வளைவுகளுடனும்..
சில நல்லவையாய் இருக்கலாம்   
சில கெடுதலாயும்.
எல்லாத் திருப்பங்களையும்
அனுபவியுங்கள்.
ஏனெனில்,
இந்த வளைவுகள்
நம் வாழ்வில் 
திரும்புவதில்லை!   
--------

மண்ணில் விழும்
மழைத் துளியிடம்
பூமி கேட்டது...
"இன்னும் எத்தனை முறை விழுவாய்?"
மழைத் துளி
சொன்னது..
"தாங்கிக் கொள்ள
நீ
இருக்கும் வரை..."
---------------------------------

தன்னை விரும்பாமல் கறுப்புக் (கொடி) குடை காட்டுவதைத் தாங்காத மழை உன்னைத் தொடும் முயற்சியில் தோற்று மண்ணில் விழுந்து அழுகிறது. 

ஸாரி... பிரிச்சிப் போடணுமோ...

தன்னை விரும்பாமல் 
கறுப்புக் (கொடி) குடை 
காட்டுவதைத் தாங்காத மழை 
உன்னைத் தொடும் முயற்சியில் 
தோற்று 
மண்ணில் விழுந்து   
அழுகிறது

-------------

கண்ணீருக்குக் கூட
எவ்வளவு வெட்கம்...
அது கூட 
அவள்
சென்ற பிறகுதான்
வருகிறது!   
===========================

தத்துபித்துவம்

நீங்கள் அழகாயிருப்பது உங்கள் பெற்றோரின் கொடை. உங்கள் வாழ்வை அழகாக்கி வாழ்ந்து காட்டுவது உங்கள் பெற்றோருக்கு நீங்கள் கொடுக்கும் கொடை!

நீங்கள் கோபப் படும் சோகப் படும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையின் சந்தோஷமான அறுபது விநாடிகளை இழக்கிறீர்கள்.

நேற்றைய சண்டை இன்றைய பேச்சை நிறுத்தாததே நல்ல நட்பு.

எல்லா நாளும் நல்ல நாளாய் இருப்பதில்லை. எனினும் எல்லா நாளிலும் ஏதோ ஒன்றாவது நல்லதாக இருக்கிறது.

நீங்கள் நேராக நிற்கும்போது நிழல் வளைந்திருந்தால் கவலைப் படாதீர்கள்.  

நம்மைப் பற்றிக் கவலைப் படாதவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டிருக்கிறோமே, ஏன் ஒரு நிமிடம் நின்று திரும்பி நம் பின்னால் ஓடி வந்து கொண்டிருப்பவர்களைப் பார்க்கக் கூடாது?

நம்மைச் சிரிக்க வைத்தவர்களை மறந்து விடுகிறோமே, அழ வைத்தவர்களை ஏன் மன்னித்து விடக் கூடாது?

எண்ணங்களை நீங்கள் ஆளுங்கள்... உங்களை அது ஆள விடாதீர்கள்!

நீங்கள் ஆளும் மனம் உங்கள் நண்பன். உங்களை ஆளும் மனம் உங்கள் எதிரி!

ஒருவரிடம் உண்மை அன்பு என்பது அவரைப் பற்றிப் பேசும்போது அல்ல, அவரைப் பற்றி நினைக்கும்போதே வர வேண்டும்!

மின் செலவில்லாத புன்னகை அதிக வெளிச்சத்தைத் தருகிறது. எல்லோருக்கும் புரிகின்ற மொழியாகவும் இருக்கிறது.

இன்று பட்டம் பெற்றதாய் நாளை கற்றுக் கொள்வதை நிறுத்துபவன் நாளை மறுநாள் படிக்காதவனாகி விடுகிறான்!

கோபம் நேசிப்பவர்களையும் யோசிக்க வைத்தால், அன்பு வெறுப்பவர்களையும் நெருங்க வைக்கும்!

அடிக்கும்வரை தெரிவதில்லை மணியோசை! பாடும் வரை தெரிவதில்லை பாடலின் ராகம்!! வெளிப்படுத்தும்வரை தெரிவதில்லை அன்பும் காதலும்!!!! (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பு...)  

 







ரிஸ்க் என் வாழ்க்கை.
சாத்தியமானது என் அன்பு

அசாத்தியமானது என் லட்சியம்.    
அபாயமானது என் விளையாட்டு.
என்னுடன் ஆடுங்கள். ஏனென்றால் 
வெற்றி என் பெயர்!

அடுத்தவங்க வாழ்க்கை நம்ம வாழ்க்கையை விட நல்லதா இருக்குன்னு அடிக்கடி நினைக்கிறோமே, நாம கூட சில பேருக்கு அடுத்தவங்கதான் என்பதை மறந்துடறோமே...

தீய கனியை சுவைத்துக் கொண்டிருக்கும் வரையில் தீங்கனியின் சுவையை  அறிய முடிவதில்லை. கஷ்டங்களையும் சந்தோஷங்களையும் உணர்ந்தால்தான் வாழ்வை அனுபவிக்க முடியும்.    
==========================================

இது எனக்குத் தெரியாதா....!   

அடுத்தவர் நம்முடன் இருக்கும்போது விட்டுக் கொடுததும், நாம் அடுத்தவர்களுடன் இருக்கும் போது அனுசரித்தும் போக வேண்டும்.   
===========================

அப்பாடி....இது பெட்டர் / யார் சொல்வதோ யார் சொல்வதோ...
  
வாழ்க்கையில் ஏதும் சாதனை படைத்தேனோ இல்லையோ யாரையும் வேதனைப் படுத்தவில்லை...  
=========================   
                  

22 கருத்துகள்:

  1. என்ன இந்த முறை பெரும்பாலும் எங்கோ படித்தது மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்?

    பெண் பற்றி சொல்வது (First one ) ஜோக்குக்கு வேண்டுமானால் சரி. நிஜத்தில் பெண்கள் தான் வயதான காலத்தில் பெற்றோருக்கு நிஜாமாக மாரல் சப்போர்ட் ஆக உள்ளனர்.. ஆண்கள் அல்ல.

    பதிலளிநீக்கு
  2. எ(உ)ங்கள் ப்ளாகில் தமிழ் மண ஒட்டு பெட்டி வேலை செய்ய வில்லை. இது blogspot.in - பிரச்சனைக்கு பின் என் நினைக்கிறேன். எனக்கும் இந்த தொந்தரவு இருந்தது. ஆனால் நண்பர்கள் பலரும் இதை சரி செய்ததை பார்த்து விட்டு நண்பர் வெங்கட் நாகராஜிடம் கேட்டேன். அவர் எப்படி என சொன்னார். எனக்கு புரியலை. பின் பாஸ்வர்ட் தந்ததும் சில நிமிடத்தில் சேர்த்து தந்து விட்டார்.

    நிற்க தலைப்பை இப்போது தான் பார்க்கிறேன் உள் பெட்டியிலிருந்து. எனவே தான் படித்தது மட்டும் பகிர்ந்துள்ளீர்கள் போலும்

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்களுடன் நவ ரசங்களும்
    கலந்து கொடுத்துள்ள பதிவு அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //கட்டிக் கொடுக்கும் வரையில் தலைவலிதான்//

    சற்றே கோபம் வருகிறது. சரி, கட்டிகொடுத்தப்புறம் தலைவலிபோய் திருகுவலி வருமோ? :-))))

    //நீ என் கையைப் பிடிச்சிகிட்டா //
    சின்னக் குழந்தைக்கு இப்பிடிலாம் யோசிக்கக்கூடத் தெரியாது!!

    போன வாரம் என் சின்னவன், ரோட் கிராஸ் பண்னும்போது “ஏம்மா இவ்ளோ பயப்படுறே? என் கையைப் பிடிச்சுக்கோ”ன்னான். இதுதான் குழந்தைகளின் மனது.

    மத்த தத்துவங்கள் ரெண்டுமூணு தரம் வாசிச்சாத்தான் அர்த்தம் பிடிபடுது என்பதால் விட்டு வைக்கிறேன்!! :-)))))))))))))

    பதிலளிநீக்கு
  5. புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை
    ////


    அம்மா பிள்ளையிடம் வைத்திருக்கும் அன்பு உண்மையானது.அது அந்த பிள்ளைக்கு (எல்லாருடைய பிள்ளைக்கும்) தெரியும்

    பதிலளிநீக்கு
  6. தத்துபித்துவங்கள் அத்தனையும் சிறப்பான சிந்தனைகள்.

    முதலாவது ஒப்பீடுதான் தத்துப்பித்துவம்:)!

    பதிலளிநீக்கு
  7. நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒரு நேரம் கையை விட்டுடுவேன். ஆனால் நீ என் கையைப் பிடிச்சிகிட்டா எந்தச் சூழ்நிலையிலும் என் கையை விடமாட்டேன்னு எனக்குத் தெரியும்"

    சிந்திக்கவேண்டிய வரிகள்..

    பக்தனும் பகவானிடம் வைக்கவேண்டிய கோரிக்கை இதுதான்..

    பதிலளிநீக்கு
  8. எங்கள் பிளாக்19 ஏப்ரல், 2012 அன்று 2:40 PM

    நன்றி மோகன் குமார்....முதலாவது ஜோக்குக்கு மட்டும்தான்!

    நன்றி ரமணி சார்...

    நன்றி ஹுஸைனம்மா.... எப்படியோ உங்களை வரவழைச்சுடுச்சு இல்லே அந்த ஜோக்... ரொம்ப நாளா வராம இருந்தீங்க இல்லே!

    வாங்க சதீஷ்...நன்றி உங்கள் வருகைக்கு

    நன்றி ராமலக்ஷ்மி...

    நன்றி ராஜராஜேஸ்வரி.... நீங்கள் சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
  9. பெண்ணைக்கட்டிக்கொடுப்பதையும் பரீட்சைப்பேப்பர் கட்டிக்கொடுப்பதையும் இணைத்த அவதி...கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கிறது.

    நம்பிக்”கை” பிடித்தல்,கவிதைகள்,தத்துவங்கள் எல்லாமே எப்பவும்போல ரசிப்பதோடு மனதிலும் பதிகிறது !

    பதிலளிநீக்கு
  10. //ரொம்ப நாளா வராம இருந்தீங்க இல்லே!//

    விடுமுறையில் இந்தியா போயிருந்தேன். அதான் வரமுடியலை.

    ஆனாலும், ஒரு மாசத்துல 25 - 30 பதிவு போட்டா எப்படிப் படிக்கிறது, பின்னூட்டுறதாம் - அதுவும் லீவுல இருக்கும்போது??

    இனி ரெகுலராய் வருவேன், இன்ஷா அல்லாஹ். :-))))

    பதிலளிநீக்கு
  11. புத்திசாலித்தனமான சுய(நல) நம்பிக்கை - அம்மா, சிறுவனுக்குமானது மட்டுமல்ல... அன்பு கொண்ட இரண்டு உள்ளங்களுக்கான உரையாடல் என்று சொல்லலாம்.:-))))


    அன்புள்ள ரமேஷ்...என்ன ஆச்சு? ஆளையே காணோம்? :-))))

    சில சொந்த காரணங்கள். திரும்ப வர சில நாட்கள் ஆகலாம்.

    பதிலளிநீக்கு
  12. கடைசி வரிகள் நன்றாகத்தான் இருக்கிறது. எதுக்குத்தான் பெண்களைத் தலைவலியாச் சொல்றீங்களோ.கல்யாணம் செய்வது
    சிரமம்தான்.மத்தபடி பெண்கள் உங்கவீட்டுக் கண்கள்:)

    பதிலளிநீக்கு
  13. படம் தான் பொறுத்தமாய் இல்லையே தவிர அந்த அம்மாவும் சிறுவனும் உரையாடல், அற்புதம்!

    வாழ்க்கையின் திருப்பங்களைப் பற்றி படித்தப்போ, மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் படித்த ஒரு வளைவு சிக்னல் வாசகம் நினைவுக்கு வந்தது. Blind Curve என்னும் ஆங்கில வாசகத்தை 'குருட்டு வளைவு' என்று மொழிபெயர்த்திருந்தார்கள்! இனி வேறு எங்காவது இவ்வாசகத்தைப் படித்தால் என் நினைவு வரட்டும்!

    'ஸாரி.. பிரிச்சுப் போடணுமோ!' சரியான கவிதக் கிண்டல்! கிண்டல் இல்லேனா குறும்பு என்று கொள்க!

    ஒரு கண்டுபிடிப்பு: 'நீங்கள் அழகாயிருப்பது.... கொடுக்கும் கொடை' என்று படிக்கும் பொழுதே, 'நாம் அழகாயிருப்பது நம் பிள்ளை களுக்கு கொடை' என்றும் தெரிகிறதே!

    எதெல்லாம் தீய கனிகள் என்று தெரியாததால் தான் இத்தனை கஷ்டங்களும், சந்தோஷங்களும்!
    தீய கனி = தீங்கனியோ?..

    வாழ்க்கை பூரா விட்டுக் கொடுப்பதைச் சுலபமாகச் சொல்வது எப்படி? இப்படி:
    'அடுத்தவர்.. அனுசரித்தும் போக வேண்டும்.'

    'வாழ்க்கையில்.. வேதனைப்படுத்த வில்லை' --
    'சாதனையும் படைக்கவில்லை; வேதனையும் படுத்தவில்லை' என்றால் சாதனைக்கும் வேதனைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிற மாதிரித் தெரியலை?.. இல்லை, வேதனைப் படுத்தினால் தான்.. அல்லது வேதனை பட்டால் தான் சாதனை கைவசப் படுமோ?..

    பதிலளிநீக்கு
  14. பரிட்சை பேப்பரையும் பெண்ணையும் ஒப்பிட்ட விஷயம் அருமை. தத்துப் பித்துவங்களும் நன்றாகவே இருந்தது. கவிதைன்னா என்னா, எப்படி எழுதறதுன்னு ரொம்ப நாளாவே ஒரு குழப்பம் இருந்துச்சு. இப்ப அந்தக் கலைய தெளிவாப் புரிய வெச்சுடு்டீங்க. இனி நானும் கவிஞனாயிடுவேனே... ஜாலி! (எனக்கு!)

    பதிலளிநீக்கு
  15. ரசிக்க வைத்த அருமையான தகவல்கள் அடங்கிய உள்பெட்டி சுவாரஸ்யம்.

    அதிலும் அம்மா மகன் சம்பாஷனை சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  16. //சிறுவன் : "நான் உன் கையைப் பிடிச்சிகிட்டா எதாவது கஷ்டத்துல ஒரு நேரம் கையை விட்டுடுவேன். ஆனால் நீ என் கையைப் பிடிச்சிகிட்டா எந்தச் சூழ்நிலையிலும் என் கையை விடமாட்டேன்னு எனக்குத் தெரியும்" //

    ரொம்பவும் ரஸித்தேன்; குழந்தைகளுக்கு அம்மான்னா அம்மா தான். ;)))))

    பதிலளிநீக்கு
  17. கதம்ப பதிவு அருமை கவிதைகளை ரசித்துப் படித்தேன் .

    பதிலளிநீக்கு
  18. ஹுஸைனம்மா.. நீங்கள் இந்தியா வந்திருந்தது பற்றி கேள்விப் பட்டோம்... சீக்கிரமே அது சம்பந்தமான பதிவுகள் எழுதுவீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்....

    //ஆனாலும், ஒரு மாசத்துல 25 - 30 பதிவு போட்டா //

    அப்போ மே மாசத்துலேருந்து தினமும் இரண்டு பதிவு போடறதுங்கற 'எங்கள்' தீர்மானத்தைத் தற்காலிகமா நிறுத்தி வைக்க வேண்டியதுதானா...!

    ஹேமா... கஷ்டப் பட ஒண்ணுமில்லை...சும்மா ஜோக்தான்!

    வாங்க ரமேஷ்... சொந்த வேலைகளை சீக்கிரம் முடிச்சிட்டு வந்து நல்லபல பதிவுகள் தருக....

    வல்லிம்மா.... பெண்கள் மட்டுமில்லை, ஆண் குழந்தைகளையும் கட்டிக் குடுக்கற வரை ஒரு கடமை மனசுல உறுத்திக்கிட்டுதானே இருக்கும்?! எங்கள் வீட்டிலும் பெண்கள் கண்களே....!

    வாங்க ஜீவி சார்... 'குருட்டு வளைவு' நினைவில் நிற்கும்....! These turns will never return in Life என்று அழகாய் ஆங்கிலத்தில் வருவதை தமிழ் 'படுத்தியது' என் குற்றமே...! கவிதைக் குறும்பை ரசித்ததற்கு நன்றி...பின்னூட்டத்தின் கடைசி வரிகள் எங்கள் சிந்தனையையும் கிளறின.

    ஜாலியாய் ரசித்து ஜாலிப் பின்னூட்டமிட்ட கணேஷுக்கு நன்றி.

    நன்றி ஸாதிகா,

    நன்றி வைகோ சார்,

    நன்றி சசிகலா...

    பதிலளிநீக்கு
  19. ஒரே பதிவில் எத்தனை அயிட்டங்கள். அதுவும் அவ்வளவு சுவையுடன். அருமை. சூப்பரான கல்யாண சாப்பாடு சாப்பிட்ட திருப்தி.

    பதிலளிநீக்கு
  20. ஒரே பதிவில் எத்தனை அயிட்டங்கள். அதுவும் அவ்வளவு சுவையுடன். அருமை. சூப்பரான கல்யாண சாப்பாடு சாப்பிட்ட திருப்தி.

    பதிலளிநீக்கு
  21. அருமையா இருக்கு. ஒரு சில இடங்களில் இருக்கிற த்த்துபித்துவங்களைப் படிச்சு எனக்கு தலையே வெடிச்சிடுச்சு...! ஹா..ஹா..

    இருந்தாலும் படிக்க படிக்க அலுப்பு தட்டாம இருந்தது.. !! பகிர்வினுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  22. எங்கள் ப்ளாக்23 ஏப்ரல், 2012 அன்று 8:00 PM

    நன்றி மோ சி பாலன், பழனிவேல்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!