செவ்வாய், 4 நவம்பர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 10 :: இனி ஆனந்தம்தான்!

       
பகுதி ஒன்பது சுட்டி : மோகனா   
     
"மொபைல் வாங்கப்போனேன், 
மோகனா வாங்கி வந்தேன்! 
என்னை ஏழையாகச் சொன்னாள், 
அந்தக் கன்னி என்று வருவாள்?" 
          
என்று பாடியபடியே, "அம்மா மோகனாவின் அம்மா அப்பா வருகின்ற நேரம். நம்ம ப்ளான் படி நீ பக்கத்து வீட்டுக்குப் போய் இரு. ஞாபகமா மொபைலையும் ஒரு கரண்டியையும் எடுத்துகிட்டு போ. நான் மிஸ்ஸுடு கால் கொடுக்கும்பொழுது வா!"  என்றான் அப்பு. 
   
"ஏண்டா ஒரு பொண்ணுக்காக கல்யாணத்துக்கு முந்தியே, என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பறே! அவ பொண்டாட்டியா வந்துட்டா அவ பேச்சைக் கேட்டு இன்னும் என்ன பாடு படுத்துவியோ!" என்றாள் பொய்க்கோபத்துடன், கல்யாணி. 
              
"அம்மா இப்போ நான் உன்னைத் திருப்பிக் கூப்பிடுவேன் என்று சொல்லித்தானே அனுப்பறேன். அவள் மனைவியா வந்து, உன்னை வெளியே அனுப்பச் சொன்னால், உடனே வெளியே அனுப்பிவிட்டு, திருப்பிக் கூப்பிடவே மாட்டேன்........... அவளை!" என்றான் அப்பு. 
               
கல்யாணி தன் மொபைலையும் ஒரு கரண்டியையும் எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பங்கஜத்தின் வீட்டிற்கு அரட்டையடிக்கக் கிளம்பினாள். 
             
===============================  
          
வீட்டுக்கு வந்த மோகனாவின் அம்மா, அப்பா இருவரையும் வரவேற்று, பேசிக்கொண்டிருந்தான் அப்பு. அவர்களுக்கு அப்புவைப் பார்த்ததுமே பிடித்துப் போனது. 
      
பரஸ்பர அறிமுகங்கள் முடிந்த பின், மோகனாவின் அப்பா அப்புவிடம் சொன்னார் " மோகனாவின் செலக்ஷன் சரியான செலக்ஷன்தான் நீங்கதான் என் பெண்ணுக்கு சரியான ஜோடி. நாங்கள் நினைத்திருந்தபடியே அநாதரவான ஏழைப் பையனை என் பெண் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாள் என்பதில் எங்கள் இருவருக்கும் சந்தோஷம். சரிதானே வசந்தா?" என்று கேட்டார் மோகனாவின் அப்பா. அவர் மனைவி, "உங்கள் சந்தோஷம்தான் என் சந்தோஷமும்" என்றாள். 
          
"ஆமாம், இந்த வீட்டுல நீங்க மட்டுமா இருக்கீங்க?"  
              
அப்பு கல்யாணியின் மொபைலுக்கு ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தான். 
           
"இல்லை. நான் சமையல் செய்கின்ற ஓர் அம்மாவை தத்து எடுத்து வளர்த்து வருகின்றேன். அந்த அம்மாவுக்கு ஒரே ஒரு பிள்ளை. கணவர் இல்லை. அவனை நல்ல முறையில் வளர்க்கவேண்டும் என்று இந்த அம்மா இந்த வீட்டிலும், மற்ற கல்யாண வீடுகளிலும் சமையல் வேலை செய்து வருகின்றார்கள். இப்போ கூட, நீங்க வருகின்றீர்களே, உங்களுக்குக் காபி கொடுக்கவேண்டுமே என்று, பக்கத்து வீட்டில் காபிப்பொடி இரவல் வாங்கப் போயிருக்காங்க அந்த அம்மா." 
            
கையில் கரண்டியுடனும், கரண்டியில் காபிப் பொடியுடனும் உள்ளே வந்த கல்யாணியைப் பார்த்ததும்,  மோகனாவின் அப்பா விஸ்வநாதன்,  "கல்யாணீ! நீயா! என்ன ஆயிற்று உன் கணவனுக்கு? எங்கே உன் பிள்ளை?" என்று உரக்கக் கேட்டார். 
               
மோகனாவின் அம்மா வசந்தா, "இவங்கதான் நீங்க சொன்ன கல்யாணியா?" என்று கேட்டபடி ஓடிச்சென்று கல்யாணியைக் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினாள். 
            
விஸ்வம், அப்புவிடம், "சாரி அப்பு - என்னுடைய பெண் மோகனாவை நான் இவங்க பையனுக்குத்தான் கல்யாணம் செய்து கொடுப்பேன்" என்றார். 
                  
கல்யாணிக்கு விஸ்வம் எழுதிய கடைசி கடிதத்தின் கடைசி வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. 
               
//"கல்யாணீ - உன்னை நான் அடுத்த முறை பார்க்க நேர்ந்தால், உன் கணவனுடனும், குழந்தையுடனும், சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டும்.
என்னை மன்னித்துவிடு, மறந்துவிடு." // 

கல்யாணி சிரித்தாள், சிரித்தாள், சிரித்துக்கொண்டே இருக்கிறாள்! 

(முற்றும்) 

                 

23 கருத்துகள்:

  1. மொபைல் வாங்கப்போனேன்,
    மோகனா வாங்கி வந்தேன்!

    எங்கள் பிளாக் திருமண அழைப்பிதழ் அருமை..!

    பதிலளிநீக்கு

  2. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. அட்டே அட்டே அமர்க்களப்படுத்திட்டீங்களே..

    பதிலளிநீக்கு
  4. முடிவு சுபம்...
    திருமண அழைப்பிதழ் அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  5. விஸ்வமுடைய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தோம்...ம்ம்ம்ம் எப்படியோ சுபம் போட்டு முடிச்திட்டீங்க...ஹப்பாடா. லைக் போட்டச்சு!

    பதிலளிநீக்கு
  6. ஆனால் என்ன கல்யாணி சிரித்துக் கொண்டே இருக்கின்றாள் என்பதுதான்....ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  7. கீதாம்மா என்ன சொல்லப் போகிறார்கள் என்கிறதைப் பார்த்து விட்டு, அவர்கள் வந்த பிறகு அப்புறம் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அவர்களால் இந்த இரண்டு வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ள முடியாது என்று தெரியும். இந்தக் கதை பற்றி கருத்துச் சொல்வதும் அப்படி இரண்டு வார்த்தைகளுக்குள் அடக்கிக் கொளகிற அளவுக்கு அல்ல. ஆக, இயல்பாகவே எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. // எங்கள் பிளாக் திருமண அழைப்பிதழ் அருமை..! //

    Spl. Lunch -- Menu plz.

    பதிலளிநீக்கு
  10. ஆனந்த முடிவு நன்றாக இருக்கிறது.
    திருமண அழைப்பிதழ் அருமை.
    மணமக்கள் வாழ்க பல்லாண்டு!
    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. சுபமான முடிவு! சுவாரஸ்யமான தொடர்! ந்ன்றி!

    பதிலளிநீக்கு
  12. எதிர்பார்த்த முடிவு ஆனாலும் கதை விறுவிறுவென்று நகர்ந்தது நன்றாக இருந்தது. அதுசரி என்றைக்குத் திருமணம் என்று சொல்லவில்லையே!

    நல்ல கதையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா
    சொல்லி முடித்த விதம் சிறப்பாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. கதை நகர்வு நன்று
    கதையின் முடிவு நன்று.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. வாலிப வயதில் கல்யாணியை கை கழுவியதும் அல்லாமல் இப்பொழுது ரொம்ப கரிசனமாக அந்த விஸ்வநாதன், "கல்யாணீ! நீயா! என்ன ஆயிற்று உன் கணவனுக்கு? எங்கே உன் பிள்ளை?" என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கிறானே, 'எங்கே உன் கணவன்?' என்று கேட்டாலும் அப்பாவி என்று விட்டு விடலாம்.. 'என்ன ஆயிற்று உன் கணவனுக்கு?' என்று கேட்க என்ன நெஞ்சழுத்தம்?..

    அந்த ஆளுக்காக கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் கன்னி காத்த கல்யாணி, இப்பொழுது கல்யாணப் பத்திரிகையில் விஸ்வநாதனின் பெயரையும் தன் பெயரையும் வேறொரு ஆங்கிளில் பார்த்த ஜோரில் பொங்கிப் பூரித்து விட்டாளாக்கும்?...

    கெளதமன் சார்! சொல்லுங்களேன்.. கல்யாணி எதற்குச் சிரித்தாள்? விரக்தி சிரிப்பா, வேதனைச் சிரிப்பா இல்லை காதலித்தவன் சம்பந்தியான விதியின் விளையாட்டை நினைத்து கொதித்தெழுந்த குரூர சிரிப்பா?..

    வளர்ப்பு மகனேயாயினும் உன் பெண்ணுக்கு அப்புவைத் திருமணம் முடிக்க நான் தயாரில்லை என்றல்லவா, விஸ்வநாதனின் முகத்தில் காரி உமிழ்ந்திருக்க வேண்டும் அவள்?

    எந்த அஸ்தஸ்து அப்பொழுது பெரிதாகப் போய் தாய்க்காக காதலியை இழக்க விஸ்வநாதன் அப்பொழுது துணிந்தானோ அதே அந்தஸ்து வசந்தா ரூபத்தில் அப்புவின் வாழ்க்கையில் விளையாண்டால் என்ன செய்வாள் இந்தக் கல்யாணி?..

    பதிலளிநீக்கு
  16. //..கெளதமன் சார்! சொல்லுங்களேன்.. கல்யாணி எதற்குச் சிரித்தாள்? விரக்தி சிரிப்பா, வேதனைச் சிரிப்பா இல்லை காதலித்தவன் சம்பந்தியான விதியின் விளையாட்டை நினைத்து கொதித்தெழுந்த குரூர சிரிப்பா?..

    வளர்ப்பு மகனேயாயினும் உன் பெண்ணுக்கு அப்புவைத் திருமணம் முடிக்க நான் தயாரில்லை என்றல்லவா, விஸ்வநாதனின் முகத்தில் காரி உமிழ்ந்திருக்க வேண்டும் அவள்?

    எந்த அஸ்தஸ்து அப்பொழுது பெரிதாகப் போய் தாய்க்காக காதலியை இழக்க விஸ்வநாதன் அப்பொழுது துணிந்தானோ அதே அந்தஸ்து வசந்தா ரூபத்தில் அப்புவின் வாழ்க்கையில் விளையாண்டால் என்ன செய்வாள் இந்தக் கல்யாணி?.. //

    கல்யாணி சிரித்தது ஆனந்தச் சிரிப்புதான்.

    ஏமாற்றமான இளமைக்காலம், வந்து பிறந்துவிட்டோம், வாழ்ந்து சென்றுவிடலாம் என்றெண்ணியிருந்த விரக்தி நாட்கள் முடிந்துவிட்டன. விஸ்வம் தன்னை ஏமாற்றி, கைவிட்டுவிட்டார் என்ற கோபம், அவர் தன்னைப்பற்றி தன மனைவி வசந்தாவிடம் எல்லாவற்றையும் கூறியிருக்கின்றார் என்ற உண்மையால் விலகிவிட்டது. தன்னுடைய வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் வந்துவிட்டது, பெண்ணின் பெயரை மோகனகல்யாணி என்று வைத்திருந்ததால், விச்வம் தன்னை மறந்துவிடவில்லை - இந்த உண்மைகளால் கல்யாணி உளமாறச் சிரித்தாள்.
    அப்புவுக்கும் மோஹனாவிற்கும் ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போய்விட்டது. அப்புறம் கல்யாணியோ விஸ்வமோ அதில் தலையிட்டு, அவர்களின் வாழ்க்கையை, சந்தோஷத்தை கெடுக்கக்கூடாது.
    வசந்தா, விஸ்வம் இருவருமே மங்களாவின் பணத்திமிரைப் பார்த்து, உணர்ந்து, அதை வெறுப்பவர்கள். அதனால்தான் தங்கள் மகளுக்கு, (மகனாகப் பிறந்திருந்தால், அவனுக்கு) ஏழையான அநாதரவான ஜோடியைக் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
    கேள்விகளுக்கு நன்றி. பதில்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ஜீவி சார்?

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள கெளதமன்,

    இப்படியான சீற்றம் என்னில் நிகழந்தது தான் உங்கள் கதையாக்கத்திற்கு கிடைத்த வெற்றி. உள்ளம் தோய்ந்து ஒன்றில் வாசிப்பு நிகழும் பொழுது கருத்துப் பரிமாற்றங்களில் இயல்பாகவே இத்தகைய வெளிப்பாடுகள் காலந்தோறும் ஏற்பட்டிருக்கின்றன.
    நா.பா. போன்றவர்களின் தொடர்களில் ஒரு காலத்தில் வாசகர்களிடம் ஏற்பட்ட அபிமானம் இந்த சின்னஞ்சிறு தொடரில் படிந்ததற்கு கதையாக்கத்தில் கோணல் மாணல்களாக விழுந்த முடிச்சுகள் தாம் காரணம்.

    Operation success but patient died என்று ஒரு நிலை உண்டல்லவா,
    அப்படியான ஒரு முடிவு இது.

    இப்படியான கதைகள் எழுதுபவரின்
    வார்த்தைகளில் சமைக்கப்படுவதில் லை, கதையின் போக்கு தன்னாலே தானே தன்னை அமைத்துக் கொள்வதாக அமைந்தால் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்.
    ஆரம்பத்தில் இல்லாத அவசரம் கதையின் இறுதிப் பகுதிகளில் நுழைந்து கொண்டு கதையை அள்ளித் தெளித்த கோலமாக்கியிருப்பது தெரிகிறது.

    பெண்களின் மனம் ஆழங்காணமுடியாத சமுத்திரம்.
    அதில் மூழ்கி மீண்டவர்கள் இல்லை என்பது தான் சரித்திரம். அப்படியான எந்த மீட்சியும் கூட அவர்களைச் சார்ந்தே காலந்தோறும்
    இருந்திருக்கிறது. 'என்னை அனுசரித்தால் சரி; இல்லை பகிஷ்கரிப்பு' என்பதே அவர்களின் வேதம்.

    அவர்களுக்கு இன்று இனிப்பது நாளை கசக்கும். அந்தந்த சூழ்நிலைகள் அந்த இனிப்பையும் கசப்பையும் அவர்களுக்குள் விதைக்கும். ஆண்களைப் போல ஒன்றை ஏதோ நியாயத்திற்கு கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்கிற பக்குவத்தை அவர்களின் சுயம்
    தவிர்த்து வந்திருப்பது தான் காலந்தோறும் வாழ்க்கை வரலாறு ஆகியிருக்கிறது.

    கல்யாணியின் மேல் படிந்த அனுதாபம் இப்பொழுது எனக்கு வசந்தாவிற்குத் தாவியிருக்கிறது.
    கல்யாணியை பார்க்காத போதோ,
    அவள் விலகியிருந்த நேரத்தோ
    ஏற்பட்ட உணர்வுகள் இனி வசந்தாவிற்குக் கிடையாது.
    தன் கணவனின் முன்னாள் காதலி அவள் என்கிற முள் வசந்தாவின் நெஞ்சில் என்று நெருடிக் கொண்டே இருக்கும். நெருடல் என்றைக்கு ஆழத்தைத்து இரத்தம் வடியும் என்று சொல்ல முடியாது.

    உணர்வுகளுக்கு அதுவும் பெண்கள் அடையும் உணர்வு பூர்வமான உணர்வு வெள்ளங்களுக்கு எந்த அணையையும் உடைத்துக் கொண்டு வெளிப்படும் சக்தி உண்டு.
    சில நேரங்களில் தன்னிரக்க நோயாகவும் அது மாறலாம்.
    அதனால் காலம்பூராவும் கல்யாணி அப்பு, விஸ்வநாத்ன் இவர்களிடமிருந்து விலகியிருப்பதே நல்லது. அந்த விலகல் தான் அப்பு-மோகனா வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தும்

    அதனால், வணக்கம் போட்டு சுபம் என்று திரையில் காட்டுவது இந்த மாதிரியான கதைகளில் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

    இந்தக் கதை இப்பொழுது தற்காலிகமாக முடிந்திருக்கிறதே தவிர, முடிந்தால் இதன் தொடர்ச்சியை இன்னொரு காலத்தில் நீங்கள் எழுதலாம். அந்த தொடர்ச்சி தான் ஒரு கதாசிரியர் ஒரு கதைக்காக வரவழைத்துக் கொண்ட அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஒரு வெறும் கதையாகப் பார்க்க இயலாத உண்மையான இயல்பான வளர்ச்சிப் போக்கில் இந்தக் கதை தன்னைத் தானே அமைத்துக் கொள்ளும்.

    வாழ்த்துக்கள்.

    ஜீவி

    பதிலளிநீக்கு
  18. பதில் போட்டிருந்தேனே, வந்து சேர்ந்ததா, கெளதமன்?

    இல்லையென்றால் இன்னொரு தடவை தான் எழுத வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தது நன்றி . என்னுடைய கிறுக்கல்களில் நீங்க ஏதேதோ ஆழமான அர்த்தங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்கள் . சந்தோஷமாக இருக்கிறது .

      நீக்கு
  19. பின்னூட்டங்கள் ஏற்கப்படுவதில்லையே, என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு இட்ட 3 நாட்கள் கழித்து இடப்படும் கருத்துரைகள் பதிவாசிரியர்களின் ஒப்புதலுடன் வெளியாகும். சில யந்திர யத்தனங்களை தவிர்க்கவே இந்த ஏற்பாடு .

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!