புதன், 19 நவம்பர், 2014

அலுவலக அனுபவங்கள் : இப்படியும் நடப்பதுண்டு


சத்தியலட்சுமி மூக்கைச் சிந்தி, புடைவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டாள். கண்களையும் துடைத்துக் கொண்டாள்.
 
அவள் மீது இரக்கமான பார்வையைப் பதித்தபடி சங்கடத்துடன் நின்றிருந்தேன்.  தெரிந்த கதைதான்.
 
அவள் கணவர் மூர்த்தியைப் பற்றிய உரையாடல் அது.  நேற்றிரவும் குடித்து விட்டு ஒரே தலைவலியாம்.  வீட்டில், தெருவில் நடந்த அமர்க்களங்கள் பற்றியும், கொண்டுவந்து விட்ட ஆட்டோக்காரன் இவர் தவற விட்ட பணத்தையும் நேர்மையாகக் கொடுத்ததையும் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்.


                                                             
 
சொல்லிகொண்டு கிளம்பினேன். அலுவலகம் வந்தபின்னும் அவர் நினைவாகவே இருந்தது.

என்ன ஒரு திறமையான அதிகாரி?  எப்படி இருந்தவர்?
 
இரண்டு, மூன்று வருடங்களுக்குள் மிகப் பெரிய மாறுதல். நாள் முழுவதும் போதையில் இருப்பது சமீப காலங்களில் வழக்கமாகி விட்டது.

நேற்று அவருடைய பிராவிடன்ட் ஃபண்ட் தொகையிலிருந்து முப்பதாயிரம் ரூபாய் அவர் கைக்குக் கிடைத்திருந்தது. நாங்களும் எவ்வளவோ பத்திரம் சொல்லித்தான் கொடுத்தோம். கூட பியூனையும் அனுப்பினோம். இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்?
அவர் எங்களுக்கெல்லாம் உயர் அதிகாரி. 

                                                  
                                                         

முந்தைய சில சந்தர்ப்பங்களில் பணம் அப்படியே போய்விடும்.  இரண்டு மூன்று விஸ்கி, பிராந்தி பாட்டில்களுடன் இருபதாயிரம், முப்பதாயிரம் பணத்தைத் தொலைத்து விட்டு வீடு வருவார்.   பணம் தொலைந்தது ஒரு கஷ்டம் என்றால், இவர் மறுநாள் வீட்டில் அடிக்கும் கூத்து இன்னொரு தனிக் கொடுமை.  
 

                                                  
 
இந்த தினசரிக் கூத்துகளை அலுவலகமும், வீட்டைச் சுற்றியுள்ள நண்பர்களும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். யார் சொல்லியும் அவர் குணத்தை மாற்ற முடியவில்லை. மற்றவர்களுக்கு, தன் மீதான மதிப்பு குறைந்து கொண்டே வருவதை அவர் மதிக்கவே இல்லை. அலுவலகத்தில் தராதரமில்லாமல் கடன் வாங்கி இருந்தார்.
 
இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஒருநாள்..
 
சத்தியலட்சுமியின் பையன் வீட்டுக்கு ஓடிவந்தான். பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் பள்ளிச் சிறுவன் அவன்.  அவன் சொன்ன விஷயம் கேட்டு அவன் வீட்டுக்கு ஓடினேன்.  கூடவே பக்கத்து வீட்டிலேயே இருந்த மேனஜரையும் அழைத்துக் கொண்டுதான் ஓடினேன்.
 
கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்து விட்டு நெஞ்சில் காதை வைத்துப் பார்த்தோம்.  ஊ...ஹூம்.
 
"என்னம்மா ஆச்சு?"
 
"வழக்கம் போலத்தாங்க.. காலைலேயே மறுபடி கொஞ்சம் குடிச்சுட்டு, நேற்று அவர் கொண்டுவந்த பணத்தை நாங்கள்தான் எடுத்து ஒளிச்சு வச்சுட்டோம்னு ஒரே ரகளை. பையனைப் போட்டு அடித்தார். தடுக்கப் போன என்னைத் தள்ளிவிட்டு மிதி மிதின்னு மிதிச்சார். பையன் வந்து 'அப்பா'ன்னு சத்தம் போட்டு அவரை ரெண்டு போடு போட்டு அவரை கீழே இழுத்துப் போட்டான். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை...."
 
பயத்துடன் அழுது கொண்டிருந்த அவளை அடக்கி விட்டு,  நாங்கள் கலந்தாலோசித்தோம்.

வேறு ஏரியாவில் இருந்த
டைரக்டரை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.


 
லுவலகம். காலை பதினொன்றரை மணி இருக்கும்.
 
ஃபோன் ஒலித்தது. மேனேஜர் எடுத்தார். 
 
 "என்ன? எப்போ?" என்று அதிர்ச்சியானார்.
 
ஃபோனை வைத்து விட்டு நிமிர்ந்தவரிடம் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க அலுவலகமே காத்திருக்க, அவர் அந்த அதிர்ச்சியான மரணச் செய்தியைச் சொன்னார்.
 

                                                             
 
"அடடா... எப்போவாம்? என்ன ஆச்சாம்?"  என்றேன் அதிர்ச்சியுடன்.
 
"நேற்று முதல் போதையிலேயே இருந்திருக்கார். காலை எழுந்தும் குடிச்சிருக்கார். பத்தரை மணிக்கு மேலும் படுத்தே இருக்காரே என்று மனைவியும், பையனும் எழுப்பி இருக்கிறார்கள். எழுந்திரிக்கவே இல்லையாம்..."
 
"அடப்பாவமே... என்ன கொடுமை! நல்ல ஆஃபீசர். கொஞ்சம் கண்ட்ரோலா இருந்திருக்கலாம் அவர்..." அதிர்ச்சியுடன் சொன்னேன்.
 
டைரக்டர் அறைக்குச் சென்றோம். விஷயத்தைச் சொன்னோம். அவரும் அதிர்ச்சியானார்.
 
"இப்ப என்னய்யா ஃபார்மாலிட்டி?"
 
"உடனடியா ஆபீஸ்லேருந்து இறுதிச் செலவுகளுக்கென்று பத்தாயிரம் ரூபாய் டிரா செய்து தரலாம் ஸார்..."
 
"செய்ங்க உடனே....ச்....ச்...ச்... என்ன ஒரு திறமையான ஆபீசரை இழந்திருக்கிறோம் நாம்? கொடுமையான விதிய்யா... புறப்படும்போது சொல்லுங்க நானும் வர்றேன்.."





எல்லோரும் மதியத்துக்குமேல் சென்று ஃபார்மாலிட்டிஸ் முடித்தோம்.



படங்கள் :   நன்றி இணையம்.

17 கருத்துகள்:

  1. நிகழ்வுகளா அல்லது சொல்லிப் போன விதமா நேரம் காலம் என்று கவனித்தால் இடிக்கிறது போல் தெரிகிறதே....!

    பதிலளிநீக்கு
  2. இடிக்கலை ஜிஎம்பி சார், காலம்பர அலுவலகம் கிளம்பும் முன்னர் நடந்திருக்கு. பின்னர் கலந்து ஆலோசித்திருக்கின்றனர். அதன் பின்னர் அலுவலகம் வந்தாச்சு. வந்தபின் நடந்தவை. சரியாவே இருக்கு. சஸ்பென்ஸ் த்ரில்லர்.

    பதிலளிநீக்கு
  3. முடிவு எதிர்பாராதது.

    வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்டதா, முடியாத்னு சொல்லிட்டு பப்ளிஷ் கொடுத்துட்டேன். சமத்தா ஃபாலோ அப் கேட்டுட்டு பப்ளிஷ் ஆயிடுச்சு. :) இனிமே இப்படித் தான் இது மூஞ்சியிலே மொத்தணும்னு வைச்சிருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வலை உலகின் ஈடு இணையற்ற தலை(வலி)வியான என்னையே யாரு நீ னு கேட்டால்! பின்னே சும்மாவா! ரெண்டு சாத்து சாத்த மாட்டோம்! :)))))

    பதிலளிநீக்கு
  4. மறுபடியும் ஒரு "வாய்மை எனப்படுவது யாதெனின்" அலுவலக அனுபவக் கதையா...?

    பதிலளிநீக்கு
  5. எதிர்பாராத முடிவு.
    ஒவ்வொரு குடிமகன்களும், இந்த மாதிரியான ஒரு நிலமை தனக்கு வரும் என்று எண்ணினால், அவன் அந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டான்.

    பதிலளிநீக்கு
  6. குடிகாரன் வாழ்க்கை பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் முடிகிறது ,இப்படிப் பட்டவர் இல்லாமல் போவதே நல்லது !

    பதிலளிநீக்கு
  7. பாவம்.....

    அவரா....?
    சத்தியலட்சுமியா....?
    அவர் மகனா.....?

    குடிகாரர்கள் யோசிக்க வேண்டிய பதிவு. அருமை ஸ்ரீராம் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. மது குடியைக் கெடுக்கும், என்பது மிகவும் சரியே என்று உணர்த்துகிறது உங்கள் பதிவு. குடிகாரர்கள் கவனிப்பார்களா?

    பதிலளிநீக்கு
  9. மனம் சங்கடப்படுகிறது
    திறமைக்கும் ஒழுக்கத்திற்கும்
    இப்போதெல்லாம் எங்கும்
    ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கிறது
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பக்ர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. குடி குடியைக் கெடுக்கும்! இப்படித்தான் பல குடும்பங்களில் நடக்கின்றது, குடும்பங்கள் அனாதைகளாகின்றன...வேதனை!

    பதிலளிநீக்கு
  11. குடி குடியைக்கெடுக்கும் என்பதை விவரிக்கும் நல்லதொரு பதிவு!!

    பதிலளிநீக்கு
  12. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. நீங்கள், மானேஜர், டைரக்டர் அனைவரும் மூர்த்தியின் மரணச் செய்தியை அதிர்ச்சியுடன் கேட்ட இடத்தில்தான் கதை நிற்கிறது. எழுதியவிதம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  14. டாஸ்மாக் படுத்தும் பாடு
    இந்நிலைஎன்று மாறுமோ

    பதிலளிநீக்கு
  15. ஒரு பழக்கத்தால் சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் அவதி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!