புதன், 3 டிசம்பர், 2014

எனது சினிமா நினைவுகள்!

                         
                                                             Image result for satyam theater images

எத்தனையோ தொலைக்காட்சிச் சேனல்களில் தினசரி பல்வேறு திரைப்படங்களையும் பார்க்கும் வசதி, நினைத்த நேரத்தில் இணையத்தில் பாடல்களோ, முழுத் திரைப்படங்களையோ பார்த்துக் கொள்ளும் வசதி, வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வசதி வைத்து, புதிய / பழைய திரைப்படங்களை 3D வசதியுடன் பார்க்கும் வசதி என்று இத்தனை வசதிகள் இருக்கும் இந்தக் காலத்திலேயே தியேட்டரில் சென்று படம் பார்க்க மக்கள் முன்னூறும் ஐநூறும் கொடுத்து அலை மோதுகிறார்களே...

இதில் எந்த வசதியுமே இல்லாத காலத்தில், திரையரங்குகளில் மட்டுமே சினிமா பார்க்கமுடியும் என்ற  இருந்தபோது எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?  சினிமாவை விட்டால் ரேடியோதான் எங்கள் அடுத்த ஒரே பொழுதுபோக்கு.

(தஞ்சாவூர் சிவகங்கா கார்டனில் பெரிய பெரிய மைக்குகள் மறைவாக வைத்து ரேடியோ நியூஸ் ஒலிபரப்புவார்கள்)
                                                                     
                                                 
எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் திரையரங்கம் தஞ்சாவூர் மெடிகல் காலேஜ் ரோடில் இருந்த ராஜேந்திரா டூரிங் டாக்கிஸ்தான். 

அடர்த்தியான கூரைகளால் வேயப்பட்ட கவர்ச்சியான கூரைக் கொட்டாய். சுற்றிலும் படல் வேலி!  வேலியை வகுந்து டிக்கெட் கவுண்டர்கள். வெளிப் பகுதியில் இருக்கும் டிக்கெட் கவுண்டர்கள் வழியாக உள்ளே நுழைந்து பாடலுக்கு உள்ளே சென்றால் 15 பைசா முதல் இன்ஸ்டன்ட் சொர்க்க வாசல்!
                                                                   
                                                 

பெரிய திரையில் கருப்பு வெள்ளையில் காவியங்கள்.  அவ்வப்போது சில திரைப்படங்கள் வண்ணத்தில் வெளியாகி எங்களைச் சோதிக்கும்.   அந்த வண்ண மயமான அனுபவத்துக்காகவே இரண்டு மூன்று முறை பார்ப்போம்.

யார் நடித்தால் என்ன?   திரையில் பெரிய சைஸில் உருவங்கள் வரவேண்டும்! சுவாரஸ்யமாய் இருக்கவேண்டும்!   எங்களுக்கு எம் ஜி ஆர், சிவாஜி, ரவிச்சந்திரன் எல்லோருமே பிடித்த ஹீரோக்கள்தான்! 
                                                                  Image result for touring talkies images

பெஞ்ச் டிக்கெட்டும் (ஐயே.... மூட்டைப்பூச்சி!) சேர் டிக்கெட்டும் கவுரதை என்றாலும் குறைந்த விலையில் முன்னால் மணலில் அமர்ந்தும், படுத்தும் பார்க்கும் சுகம்!  கூட்டம் அதிகமாக இருந்தால் மணலைக் குமித்து படுத்து படம் பார்க்க முடியாது. சிலர் அந்த மணலிலே செய்யும் அசிங்கங்களை எல்லாம் பொருட்படுத்தாத வயது!

இடைவேளைகளில் சோடாவும், கலரும் ("ஜோடா கலரு.....ஜோடா கலரு....") கடலை மிட்டாயும்தான்.

டூரிங் டாக்கீசிலிருந்து 'டவுனுக்'குள் சென்று நாகரீகமான திரை அரங்குகளில் புதிய திரைப் படங்கள் பார்த்த போது அந்த சந்தோஷம் தனியாக இருந்தது. இடைவேளைகளில் கோன் ஐஸ்! அங்கு மணல் கிடையாது. சீட்டுகளில் மெத்தை இருந்தத என்று ஞாபகமில்லை. ஆனால் படங்கள் பார்க்கும் சுவாரஸ்யம் குறையவில்லை. 

பின்னாளில் இந்தப் படங்களை நம் வீட்டுக்குள் அமர்ந்தே பார்க்கப்போகிறோம் என்று யோசித்திருக்கவில்லை!  பாடல்களை வீட்டிலிருந்தே நம் கையால் இயக்கியே, நம் விருப்பத்தில் கேட்போம் என்றும் எண்ணியதில்லை!

                                    

ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களிடம் 25 பைசா வசூலித்துக்கொண்டு டான்போஸ்கோ ஹாலில் நடுவில் இருந்த தடுப்புகளை எல்லாம் எடுத்து விட்டு தெய்வமகன் படம் போட்டார்கள்.  அப்புறம் கொஞ்சநாள் கழித்து லாரல் ஹார்டி படங்களும், அடுத்து கொஞ்சநாள் கழித்து சார்லி சாப்ளின் படங்களும் போட்டார்கள்.  அப்புறம் அப்புறம் ஒன்றும் போடாமல் நிறுத்தி விட்டார்கள்!
         
                      
இங்கு லாரல் ஹார்டி படங்கள் பார்த்து, அவர்களைப் பிடித்துப்போய், பக்கத்தில் அப்போதுதான் திறந்திருந்த அருள் தியேட்டரில் சனிக்கிழமைகளில் காலைக் காட்சிகள் பார்த்ததும், சில நாட்களில் அதிரடியாகத் தியேட்டருக்குள் நுழையும் ட்ரில் மாஸ்டர்களால் காதுகள் திருகப் பட்டு மறுபடி பள்ளிக்கு அழைத்து வரப்பட்டதும் உண்டு! 
                                                    
                                                        
சனிக்கிழமையில் என்ன விசேஷம்?  1. எங்களுக்குப் பள்ளியில் யூனிஃபார்ம் கிடையாது. கலர் ட்ரெஸ்!   2. அரை நாள்.  3. சனி, ஞாயிறில்தான் காலைக் காட்சியில் இது மாதிரித் திரைப்படங்கள் போடுவார்கள்!

டிரைவ் இன் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவத்தை எனக்கு முதன்முதலில் வழங்கியது தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு! மாதத்துக்கு ஒரு படம் குடியிருப்பு வளாக மைதானத்தில் திரையிடுவார்கள். 
                                                    
               
ஒரு 35 எம் எம் ( இல்லை 16 எம் எம்மோ?)  ப்ரொஜக்டர் வாங்கி வைத்திருந்தார்கள். அசோசியேஷனில் பேசி முடிவு செய்து,  படச்சுருள் வாங்கி வருவார்கள். ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலையில் படம் திரையிடப்படும். 

ஒவ்வொரு வாரமும் புதன் முதலே மைதானத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகையை ஆவலுடன் தினமும் கவனித்துக் கொண்டிருப்போம்.  இந்த மாதம் என்ன திரைப்படம் போடப்போகிறார்கள், எப்போது அறிவிப்பு வரும் என்று!

சில மாதங்களில் இரண்டு படங்கள் போட்டும்  அசத்துவார்கள்!

மாலை ஆறு மணிக்கு மேல் அந்த மைதானத்தில் ஜமா சேர ஆரம்பிக்கும். நாற்காலியில் அமரும் பார்ட்டிகள் பின் வரிசையில் நாற்காலிகள் போட்டு ரிசர்வ் செய்து விடுவார்கள். ஆறரை மணிக்குமேல் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ஆஜராகி விடுவார்கள்.
                                                            
                                            
முதலில் எல்லாம் நான் முன்னால் தரை டிக்கெட்டில் எல்லா நண்பர்களுடனும் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் சில காரணங்களுக்காக வேண்டி சில நெருங்கிய நண்பர்களுடன் நாற்காலி போட்டு இடம் பிடித்து அங்கு அமர்ந்து படம் பார்த்தேன். அப்புறம் மறுபடி தரை டிக்கெட்டுக்குச் சென்று விட்டேன்!

இரவு நேரத்தில் குடியிருப்பு மக்களுடன் கூட்டமாக அமர்ந்தும், நின்றும் படம் பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாதது.  இடையில் இடையில் படத்தை நிறுத்தி ரீல் மாற்றுவார்கள்.  முதலில் எல்லாம் இதற்கெனவே அந்தப் படக் கம்பெனியிலிருந்து ஒரு ஆள் வருவார்.  அப்புறம் குடியிருப்பிலேயே குடியிருந்த ஒரு வெடர்னரி டாக்டர் இருந்தார். அவர் வீட்டில்தான் ப்ரொஜக்டர் வைத்திருந்தார். அவர்தான் படத்தை ஓட்டுவார். சளசளவெனப் பேசிக் கொண்டிருப்போம்.  படம் ஆரம்பித்ததும் அதில் ஆழ்ந்து விடுவோம்!  நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்து திறந்தவெளித் திரையரங்கில் படம் பார்த்த அந்த அனுபவம் இன்னமும் மறக்க முடியாதது.

நிறைய வீடுகளிலிருந்து குடும்பத்துடன் படம் பார்க்க வருவார்கள்.  எங்கள் வீட்டிலிருந்து அப்பா அம்மா படம் பார்க்க வந்ததே இல்லை.

 
         

முருகன்  காட்டிய வழி, வரப்ரசாதம், திக்கற்ற பார்வதி போன்ற எத்தனையோ படங்கள் அங்கு பார்த்ததுதான்.  இவற்றை தியேட்டரில் சென்று பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். சர்வர் சுந்தரம் கூட இங்கு பார்த்ததுதான்.  எவ்வளவு ஒடிசல் படம் போட்டாலும் கடமையாய் உட்கார்ந்து பார்த்து விடுவோம்!!
                                                       
                    

பின்னாட்களில் மதுரையிலும் இந்த வழக்கம் தொடர்ந்தது என்றாலும் ஏனோ மதுரையில் பெரிய நண்பர்கள் வட்டம் இல்லை. அதனாலோ என்னவோ கொஞ்சம் சுவை குன்றி இருந்தது.  

ரிசர்வ் லைன் பெரிய மைதானத்தில் மணலில் அமர்ந்து பெரிய திரையில் படங்கள் பார்த்த அனுபவம் கூடுதல் சுவாரஸ்யம்.  இங்கு இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் வார இறுதியில், இரவு 9 மணிக்குமேல்தான் படம் போட ஆரம்பிப்பார்கள்.  படம் முடிய இரவு ஒரு மணி ஆகி விடும்.  வீட்டில் இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டு
சைக்கிளுடன் ஆஜராகி விடுவேன்.  சைக்கிளைப் படுக்க வைத்து விட்டு மணலில் படுத்து படம் பார்த்த அனுபவங்கள்.. 




இன்னமும் குளிராக மனதில் நிற்கின்றது.









பின்குறிப்பு :  நேற்றுதான் டாக்டர் பழனி. கந்தசாமி ஸார் 'வாழ்க்கைக்குத் தேவையான பதிவுகளைப் பிரசுரிக்கிறார்' என்று வலைச்சரத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இது அதில் ஒன்றா  என்று கேட்க வேண்டாம்!

20 கருத்துகள்:

  1. ஆஹா !! அருமையான நினைவலைகள் !! நாங்களும் சின்னதில் ப்ரொஜக்டர் சினிமா பார்த்தோமே :) சனிக்கிழமைதான் .
    எனக்குதேவர் படங்கள் மட்டுமே நினைவிருக்கு :) அந்த சோடா கலரும் முறுக்கு தட்டையும் ரொம்பவே நினைவிருக்கு :)

    பதிலளிநீக்கு
  2. இப்படி எல்லாம் படம் பார்த்த அனுபவங்களே கிடையாது. சின்ன வயதில் படம் பார்த்த நினைவு என்றால்???????? ம்ம்ம்ம்ம்ம்ம்? ஶ்ரீதரின் கல்யாணப் பரிசு படத்தில் இருந்து தான் என் சினிமா நினைவுகள் தொடங்குகின்றன.

    பதிலளிநீக்கு
  3. கல்யாணப்பரிசு படம் பார்க்கப் போய் டிக்கெட் கிடைக்காமல், வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் பார்த்தோம். அந்த நினைவு இருக்கு. கல்யாணப் பரிசு படம் கல்பனா தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. வடுகக் காவல் கூடத் தெரு வீட்டிலிருந்து கல்பனா தியேட்டர் வரை நடந்தே போயிட்டு அங்கிருந்து நியூ சினிமா வரை மறுபடி நடந்தே போய்ப் படம் பார்த்திருக்கோம். வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு ஆரம்பத்திலே அவ்வளவு கூட்டம் இல்லை. :))) போகப் போகத் தான் சூடு பிடித்ததும் நினைவில் இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. திறந்த வெளித் தியேட்டர் என்றால் கல்யாணம் ஆகி அம்பத்தூரில் குடித்தனம் வைச்சதும் வீட்டுக்கு எதிரே இருந்த மைதானத்தில் நடந்து வந்த டூரிங் தியேட்டர் தான் நினைவில் வருது. அங்கே ஒரு டூரிங் தியேட்டரும் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் அருகே பழைய பாங்க் ஆஃப் பரோடா இருந்த இடத்தில் ஒரு டூரிங் தியேட்டரும் இருந்தது. ஓடி வரை வந்தது இல்லை. வீட்டுக்கு அருகே இருந்த டூரிங் தியேட்டரில் இரவுக் காட்சி பார்ப்போம். சாப்பாடு முடித்துக் கொண்டு போனால் ஒரு தமிழ்ப் படம், ஒரு ஹிந்திப்படம் இரண்டு படங்கள். ஒன்றுக்கு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று இலவசம். :)))) அநேகமா இலவசத்தை இவங்கதான் அறிமுகம் செய்திருப்பாங்களோ?

    பதிலளிநீக்கு
  5. எண்பதுகள் வரை அம்பத்தூர் பேருந்து நிலையத்து டூரிங் தியேட்டர் இருந்தது. அம்பத்தூரில் முதல் தியேட்டர் கட்டிடம், முருகன் தியேட்டர் என்பது தான். எண்பதுகளில் தான் ராக்கி தியேட்டர் வந்தது. இது நாள் வரை ராக்கி தியேட்டரில் ஒரு படம் கூடப் பார்த்தது இல்லை என்பது விசேஷம். :)))

    பதிலளிநீக்கு
  6. திரைப்படங்களின் வளர்ச்சி என்ற நிலையில் தங்களது பதிவு ஒருசுருக்கமான வரலாற்றைத் தந்துள்ளது. கீற்றுக்கொட்டகை மற்றும் போஸ்டரை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு போதுவோன்ற புகைப்படங்கள் காண்பதற்கு அரிதானதாக உள்ளன.இயல்பான நடையில் அமைந்துள்ள பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  7. மணலில் உட்கார்ந்து (கொட்டகையில்) படங்கள் பார்ப்பதே தனி சுகம்... நினைத்தாலே இனிக்கும் என்றும்...!@

    பதிலளிநீக்கு
  8. இதே நினைவுகள் எனக்கும் என் வயதை ஒத்த என் நண்பர்கள் நண்பிகள் எல்லோருக்கும் உண்டு!

    ஆம்! திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் பள்ளியில் படிக்கும் போது பார்த்த பல படங்கள்! அப்பா வீடு வாங்கி அடையார் வந்தார்! அப்போ நாங்கள் சென்று பார்த்த படங்கள் பல..

    மேலும்...இரண்டு படம் இரவுக் காட்சியில்--ஒன்று ஆங்கிலம்--மற்றும் தமிழ்...

    ---ஒரு ரூபாய்க்கு இரண்டு படம்!

    பதிலளிநீக்கு
  9. திருச்சியில் உற்வினர் காஜாமலை காலனியில் குடியிருந்தார்கள் அவர்கள் வீட்டுக்கு போன போது குடியிருப்பு வளாகத்தில் மைதானத்தில் திரையிட்டார்கள். பார்த்து இருக்கிறேன்.

    சிவகாசியில் டூரிங் டாக்கிஸிலில் படம் பார்த்து இருக்கிறேன். அப்பா அம்மாவுடம் போனால் சேர் டிக்கட், பக்கத்து வீட்டு அக்காவுடன் போனால் தரை டிக்கட். மணலில் உட்கார பெட்ஷிட் எடுத்து போவோம். நெஞ்சம் மறப்பதில்லை, வெண்ணிற ஆடை போன்ற படங்கள் டூரிங்டாக்கிஸில் பார்த்து இருக்கிறேன். தரை டிக்கட் 25 பைசா என்று நினைவு.

    விருதுநகருக்கு தான் புதுபடங்கள் பார்க்க போவோம். அழகான தியேட்டர் இருக்கும்.

    மதுரையில் தியேட்டரிலிருந்து பாஸ் வந்துவிடும் வீட்டுக்கு, நல்லபடமாக இருந்தால் அப்பா அழைத்து செல்வார்கள். கர்ண்ன் படம் கோவையில் படிக்கும் போது பள்ளியில் அழைத்து சென்றார்கள்.

    சிவகாசியில் 5, 6. 7 வகுப்புகள் படிக்கும் போது மாதம் ஒரு முறை
    ப்ரொஜக்டர் வைத்து சினிமா காட்டுவார்கள், ராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு படம், அலவூதீனும் அற்புத விளக்கும், காந்தி, நேரு போன்றவர்களின் வாழக்கை வரலாறு எல்லாம் காட்டுவார்கள். இயற்கை , விலங்குகள் சம்பந்த பட்ட படங்கள் தான் பெரும்பாலும்.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  10. திறந்த வெளித் தியேட்டரில் ராணுவக் குடியிருப்புகளின் திறந்த வெளித் திரையரங்குகளை மறந்திருக்கேன். நசிராபாத் ராணுவ கன்டோன்மென்டில் இருந்த போது அங்கே டோப்சி, அப்புறமா இன்னொண்ணு, பெயர் மறந்துட்டேன், இரண்டு திறந்த வெளித் திரையரங்குகள். அங்கே தான் எழுபதுகளின் நடுவில் பாகீஸா படம் பார்த்தேன். கோடைக்காலத்தில் இரவு ஒன்பது மணி ஆகும் படம் ஆரம்பிக்க. ஏனெனில் எட்டரை வரை சூரிய வெளிச்சம் இருக்கும். :))) திறந்த வெளி என்றால் அதான் திறந்தவெளி. மேலே கூரை ஒண்ணும் கிடையாது. வானமே கூரை. குளிர்காலத்தில் அவ்வளவாப் போக மாட்டோம். செப்டெம்பர், அக்டோபர் வரை போவோம். தீபாவளிச் சிறப்புப்படம் ஒரு ஹிந்தி, ஒரு தமிழ் என்று போடுவார்கள். அதுக்கும் போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
  11. ஊருக்குள்ளே நல்ல தியேட்டர்கள் உண்டு. அங்கேயும் போய்ப் படம் பார்க்கலாம். பால்கனி டிக்கெட் பத்து ரூபாய் என்றால் எங்களுக்கெல்லாம் 3 ரூபாய் தான். :)))) அநேகமாய் வாரா வாரம் போயிருக்கோம். எல்லாம் ஹிந்தி சினிமாத் தான். :)))

    பதிலளிநீக்கு
  12. Ithu nallaa irukke..... Why shouldn't we go to all different types of theaters and write it, rather than just remembering it ?! Fun, isn't it Sriram !! Topic kidaichaachu !

    பதிலளிநீக்கு
  13. நல்ல ருசியான அனுபவங்களும் பின்னூட்டங்களும் ஸ்ரீராம். நாங்கள் டூரிங் தியேட்டர் படம் என்றால் பழங்காநத்தத்தில் தான் பார்த்திருக்கிறோம். அறுவடை முடிந்து அடுத்த விதைப்புக்கு முன் அங்கே டூரிங் கொட்டாய் வரும். பாகப் பிரிவினை பார்த்த நினைவு இருக்கிறது. சிறுவயதில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொட்டகையில் பராசக்தி படம். பிறகு திருமங்கலத்தில் வரிசையாகக் கல்யாணப் பரிசிலிருந்து படங்கள் பார்த்தோம். திண்டுக்கல்லில் ப் வரிசைப் படங்கள். திருமண்மான பிறகு பார்த்த படங்கள் குறைவு. கல்பாக்கத்தில் அப்பா இருந்தபோது திறந்த வெளி அரங்கில் அன்னக் கிளி,போன்ற படங்கள் பார்த்ததுண்டு. எங்கள் ஊரில் காமதேனு,கபாலியில் சிந்து பைரவி,இளமை ஊஞ்சலாடுகிறதுய் இவைகளைத் தம்பியுடன் சென்று பார்த்திருக்கிறேன் மலரும் நினைவுகளுக்குக் கொண்டு சென்றதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. Sir, I had this experience. Intially in 16 mm screen (mostly B & W) during amman temple festivals. Then, couple of color films on white screen. Later Small scree (video screening). Have seen many films mostly on this fashion.
    Velaikkaran, Padikkathavan, Oomai vishikal, Poovishi vaasalile etc..

    Nostalgic..

    பதிலளிநீக்கு
  15. டூரிங் டாக்கீஸில் ,மணல் குவித்து உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ,பின்னால் இருப்பவன் மணலைச் சுரண்டி கீழே இறக்கி விட்டிருப்பான் ,மறக்க முடியுமா அந்த அனுபவங்களை ?

    பதிலளிநீக்கு
  16. நினைவலைகள் என்றுமே இனிமையானவை
    அதுவும் தஞ்சை என்னும்போது இன்னும் மகிழ்ச்சி கூடுகிறது
    தஞ்சையில் எங்கு இருந்தீர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  17. சுவாரஸ்யமாகப் பகிர்வு. பள்ளியில், கல்லூரியில் திரையிடப்பட்ட படங்கள், அழைத்துச் சென்று காட்டிய படங்கள் என நண்பர்களோடு பார்த்த அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்நாளில் கடலை மிட்டாயும், கோன் ஐஸும் பலருக்குப் பிடித்தமானதாய் இருந்தது. எல்லா பள்ளிகளிலும் ட்ரில் டீச்சர்கள் கையில்தான் சட்டம் ஒழுங்கு டிபார்ட்மெண்ட் போலும்:). //பின்னாளில் இந்தப் படங்களை நம் வீட்டுக்குள் அமர்ந்தே பார்க்கப்போகிறோம் என்று யோசித்திருக்கவில்லை! // உண்மை.

    பதிலளிநீக்கு
  18. ஐ...

    இந்த மாதிரி டூரிங் டாக்கீஸ் அனுபவம் இல்லை என்றாலும் திருவிழாவிற்கு பெரிய திரைகட்டி ஓட்டப்பட்ட படம் பார்த்த அனுபவம் நிறைய இருக்கு...

    நல்ல பகிர்வு அண்ணா.

    பதிலளிநீக்கு
  19. எல்லா வசதிகளும் இருந்து படத்தைப் பார்த்து ரசிப்பதைவிட இந்த மாதிரி சின்ன சின்ன இடங்களில் பட பார்த்த நினைவுகள் என்றைக்குமே சுகமானதுதான். இப்போதெல்லாம் சினிமா அரங்குகளுக்குப் போவதே இல்லை. DVD வாங்கி வந்து பார்ப்பதுதான். நல்ல இனிமையான அனுபவங்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  20. டூரிங்க் டாக்கீஸ் தங்கள் அனுபவம் எங்களையும் அழைத்துச் சென்றுவிட்டது அந்தக் காலத்திற்கு...மணலில் படுத்து, விளையாடி, தரைடிக்கெட் ம்ம்ம்ம்ம் படம் பார்த்த அனுபவம் உண்டு...ம்ம்ம் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!