2.9.26

பெண்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் செய்வது வரமா இல்லை சாபமா? + சரோஜாதேவி பகுதி 14.

 

கேள்வி பதில்கள் :

கீதா சாம்பசிவம்: 

"கோடி(Godi) மீடியா என்றால் என்ன?

# அரசின் செல்லப் பிள்ளையாக மடியில் அமர்ந்து அரசின் புகழ் பாடி லாபம் பார்ப்பது. விமர்சிக்கிறவர்களை நியாய அநியாயம் பாராமல் தரம் தாழ்ந்து தாக்குவது.

அடிக்கடி "பூமர்" "பூமர்" என்கிறார்களே? பூமர் என்றால் என்ன? 

  • பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்
  • பழைய கால சிந்தனை கொண்டவர்
  • புதிய தொழில்நுட்பங்கள் அல்லது சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ளாதவர் என்று கேலி செய்ய
  • “இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு சிந்திக்கவில்லை” என்று சொல்ல

உதாரணமாக, ஒருவர் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி புரியாமல் பேசினால், இளைஞர்கள் “OK, Boomer!” என்று கிண்டலாகச் சொல்லலாம்.

என்ன வயதாக இருந்தாலும், boomer என்றால் பழைய பஞ்சாங்கம்! 

இந்தக் கரப்பான் பூச்சிகள் எல்லாமும் பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் போய்த் தகராறு செய்வதும் அமைச்சர்களை ராஜினாமா பண்ணச் சொல்லுவதும் சரியா?  மற்றப் பிரச்னை உள்ள மாநிலங்களுக்குப் போக மாட்டேன்னு அடம்.

கரப்புக்கள் எல்லாம் வெளிநாட்டுப் படிப்பு, வெளிநாட்டு வாசம். ஆனால் இங்கே உள்ள பெரிய பெரிய பணக்காரக் குழந்தைகள்/ அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் குழந்தைகள் படிப்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிஜேபிக்காரங்க குழந்தைங்க வெளிநாட்டில் படிச்சால் மட்டும் ஏன் கண்டிக்கின்றனர்? பொதுவாக எல்லோரையும் இந்தியாவிலேயே படிங்கனு சொன்னால் அது நியாயம். ஆனால் இங்கே மத்தவங்க படிப்பைப் பத்திக் கவலைப்படாமல் குறிப்பிட்ட கட்சிக்காரங்க குழந்தைங்க மட்டும் படிக்கக் கூடாது என்பது விநோதமாக இருக்கே?

இவங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆளும் கட்சியோ, அரசோ, அல்லது அரசு அதிகாரிகளோ எந்தவிதத் தொல்லைகளும் கொடுத்ததாகத் தெரியலை. முன்பகையும் இருப்பதாகத் தெரியலை. ஆனாலும் ஏன் இவங்க எல்லோரும் ஆளும் கட்சியையே எதிர்க்கிறாங்க?

# கோடி மீடியா பல்கிப் பெருகினால் கரப்பான்பூச்சி கட்சி இயல்பான பின்விளைவு. நியாயமாக எதிர்க்க முடியாதபோது எப்படியாவது  எதிர்த்தாக வேண்டும்.

& ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் விளம்பரம் பெரிய அளவில் கிடைக்கும். 

நெல்லைத்தமிழன் : 

1. வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்வதால் ஆண்கள் இழப்பது என்ன? அவர்களது மனைவி இழப்பது என்ன? 

# கணவர் அல்லது மனைவி தரும் சின்னச் சின்ன எரிச்சல்களிலிருந்து நிவாரணம்.

2. பெண்கள் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் செய்வது வரமா இல்லை சாபமா?

# வீட்டிலிருந்தே வேலை என்பது பெண்களுக்கு நிச்சயம் வரம்தான். உங்களுக்கு ஏன் அப்படித் தோன்றவில்லை ?

3. வீட்டில் மனைவியும் வேலை செய்வதால்தான் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருங்கிறதா? அதற்காக செக்யூரிட்டி வேலை பார்ப்பவர் மனைவியும் ஏதோ வேலை செய்து பொருளீட்டுவதைத் தவறாச் சொல்லலை. 

# அவரவர் தகுதிக் கேற்ப வேலை தேடிக் கொள்ளாமல் இந்தக் காலத்தில் சமாளிக்க இயலாது. எனவே இருபாலரும் வேலை பார்ப்பது சரிதான்.

4. இரண்டு ப்ரொஃபஷனல்கள் திருமணம் செய்துகொள்வதால் நன்மைகள் அதிகமா இல்லை தீமைகளா? உதாரணமாக இரண்டு ஐடி வேலை செய்பவர், மருத்துவர் பட்டயக் கணக்காளர், பாடகர்கள், நடிக நடிகையர் (கௌதமன் சாருக்கு படம் பகிர வாய்ப்பு) போன்று. 

# ஓய்வே இருக்காது என்ற ஒரு பிரச்சினைதான்.

& நடிக / நடிகர் ஜோடிகளில், எனக்குத் தெரிந்து பிரகாசித்த ஜோடி என்றால், ஜெமினி கணேசன் + சாவித்திரி மட்டும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள் எஸ் எஸ் ஆர், விஜயகுமாரி, ஏ வி எம் ராஜன் புஷ்பலதா அடுத்துச் சொல்லலாம். மீதி ஜோடிகள் கல்யாணத்திற்குப் பிறகு - பெரும்பாலும் நடிகைகள் - நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார்கள் - ஸ்னேகா / பிரசன்னா போன்று. படம் போடுவதற்கு ஒன்றும் வாய்ப்பு இல்லை!! 

5. Brother in law wife என்ன பெயரில் உறவு வரும்?  ஷட்டகர் என்பது என்ன மொழி? தமிழில் அந்த உறவின் பெயர் என்ன?

# மச்சினன் மனைவி என்று சொல்லிவிடலாம்.

எல்லா உறவுக்கும் தெளிவான பெயர் கிடையாது.

& சென்னை வந்த புதிதில் என் மன்னியின் அண்ணன் ஊரிலிருந்து வந்திருந்தார். என்னை அழைத்துக்கொண்டு அவர் உமா டாக்கீஸ் போகலாம் என்று கிளம்பினார். நாங்கள் இருவரும் உமா டாக்கீஸ் நோக்கி சென்றபோது, எதிரில் வந்த என் நண்பர், ' இவர் யார்? ' என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மன்னியின் அண்ணன் நகைச்சுவை மன்னன்! அவர் சொன்னார் - டேய் நான் யாரு என்று யாராவது கேட்டால் " ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு நேர உடன் பிறந்தான்"   என்று சொல்லு என்றார்! 

அது போல  Brother in law wifeக்கு ஏதாவது கண்டுபிடிக்கலாம்! ஷட்டகர் என்ற சொல், தெலுங்கு அல்லது கன்னட மூலம் கொண்டதாக இருக்கலாம். 

Telugu: ṣaddhakudu

Kannada: ṣaddaka

தமிழில் : சகலர் அல்லது சகலை! 

= = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


திற்பரப்பில், (நாகர்கோயில் அருகே) நீர்வீழ்ச்சிக்குப் பின்புறத்தில் இந்த மாதிரி பெரிய நீர்நிலை உண்டு. கரை அருகே நிறைய தாழம்பூச் செடிகள் உண்டு. அங்கு நாமே கால்களால் இயக்கக்கூடிய இருவர் அமர்ந்து செல்லும் போட்டுகள் boats உண்டு. நானும் என் மகளும் அப்படி, அவளின் ஆசைக்காக சிறிது தூரம் சென்றிருக்கிறோம். ஆனால் எனக்கு ரொம்ப பயம். ஏதேனும் ஆகி படகு கவிழ்ந்தால் எப்படி மகளைக் காப்பாற்றுவது? அதனால் திரும்பி கரைக்கு வெகு விரைவாக வந்துவிட்டோம்.  சும்மா ஒரு அனுபவத்திற்காகத்தான் சென்றோம் என்று சொல்லிவிட்டேன்.  ஒரு வருடத்திற்கு முன்னால் அவள் சொன்னாள், சின்னக் குழந்தைகளின் மனதில் பயத்தை உண்டாக்கக்கூடாது. தைரியமா எதுலயும் ஈடுபட வைக்கணும். பயம் உண்டாச்சு என்றால் பிற்காலத்திலும் அந்த பயம் போகாது என்றாள். அப்படித்தான் அறிவியல் சோதனைகள் சொல்கின்றனவாம்.   அது சரி... நம் குழந்தை மேல் நமக்கு இருக்கும் அக்கறை வேறு யாருக்கு இருக்கும்? ஒருவேளை அந்த அறிவியல் முடிவுகள் தவறாக இருந்தால் யாருக்கு நஷ்டம்?


இப்போ இந்தப் படத்தைப் பார்த்தாலும், ஐயோ..அவ்வளவு தூரம் எந்தத் தைரியத்தில் போனோம் என்று தோன்றும். ஒருவேளை முதலை வந்தால்? ஒரு வேளை போட் கவிழ்ந்தால்? ஒருவேளை இடையில் பாறையில் மோதினால்?   இப்படீல்லாமா பயப்படுவது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். 

= = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 13 : பாவனா டீச்சர் ! 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 14: பெண் பார்க்கும் படலம்! 

தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த பாபா, எதிர் வீட்டிற்கு அன்று மாலை அவர்கள் எல்லோரும் அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்ததும் சென்றான். 

ஜெயராமன் பாபாவை வரவேற்று, பேசிக்கொண்டிருந்தார். 

பாபா, தன்னுடைய பிசினஸ் பார்ட்னர் நாநாவின் நண்பன் ஆனந்த் பற்றியும் பற்றியும், ஆனந்தின் பெற்றோர் கோவையிலிருந்து மறுநாள் மாலை வருவார்கள் என்று சொன்னான். ஆனந்துக்கு வீணாவை மிகவும் பிடித்துப் போனதால், ஆனந்தின் பெற்றோர்கள் தாங்களும் வீணாவைப் பார்க்கவேண்டும் என்று வருகிறார்கள். 

அவர்கள் இங்கே வந்தபின், ஆனந்த் வீடியோகால் வழியாக அழைப்பான் என்றும், அதன் பின் வீடியோ கால் வழியாக வீணாவும் ஆனந்தும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம் என்றும், வீணாவுக்கு ஆனந்தைப் பிடித்திருந்தால், மேற்கொண்டு இரண்டு குடும்பங்களும் சம்பந்தம் பற்றி பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறினான். 


****    ******  ***** 

மறுநாள் மதியம், ஆனந்தின் பெற்றோர், நாநா எல்லோரும் பாபாவின் வீட்டிற்கு வந்தார்கள். 

பாபாவின் காரில் நால்வரும் புறப்பட்டு, திருவல்லிக்கேணி கோவில் அருகே உள்ள கடைகளில், வெற்றிலை, பாக்கு, பழங்கள், பூ எல்லாம் வாங்கிக்கொண்டு, கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து பிறகு வீட்டிற்குத் திரும்பினர். 

மாலையில் நால்வரும் ஜயராமனின் வீட்டிற்குச் சென்றனர். 

ஜெயராமன் எல்லோரையும் வரவேற்றார். பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தன. 

ஆனந்தின் அப்பா, " இது சம்பிரதாயமான பெண் பார்க்கும் படலம் இல்லை. ஒரு ஆரம்ப அறிமுக சந்திப்பு மட்டுமே. வீணாவையும் கூப்பிடுங்க எல்லோரும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுவோம். பிறகு, ஆனந்தை வீடியோ காலில் அழைக்கிறேன். கொஞ்ச நேரம் நாம் ஒவ்வொருவரும் ஆனந்துடன் பேசுவோம்.  அதற்குப் பின், ஆனந்துடன் மொபைல் போனில் வீணா பேசட்டும்" என்றார். 

ஜெயராமன், " சம்பிரதாயமான விஷயம் இல்லை என்றாலும், வீணாவும் விமலாவும் பஜ்ஜி, சொஜ்ஜி காபி எல்லாம் தயார் செய்துள்ளார்கள். அதை முதலில் சாப்பிடுவோம்" என்றார். 

ஆனந்தின் அப்பா, " முதலில் உங்க பெண்களைக் கூப்பிடுங்க. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்போம். பிறகு டிஃபன் காபி சாப்பிடுவோம்" என்றார். 

ஜெயராமன், வீணா விமலா இருவரையும் ஹாலுக்கு அழைத்தார். 

இருவரும் வந்தனர். 

அவர்கள் இருவரையும் பார்த்த ஆனந்தின் அப்பா அம்மா இருவரும் " ஆஹா உங்க பெண்கள் இருவரும் திவ்யமா இருக்காங்க" என்றனர்.  "பச்சைப் புடவை கட்டியிருப்பதுதான் வீணா என்று நினைக்கிறேன். சரிதானே? " என்றார் ஆனந்தின் அம்மா. 

ஆனந்தின் அப்பா," என்னுடைய தம்பியின் பையன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு விமலா சரியான ஜோடியாக இருப்பாள் என்று நினைக்கிறேன்." என்றார். 

பாபா நெளிய ஆரம்பித்தான். நாநாவிடம் இரகசியமாக " டேய் - இவரு திடீரென்று ரூட்டை மாற்றுகிறார். ப்ரேக் போடு " என்றான். 

நாநா, ஆனந்தின் அப்பாவிடம், " சார், இப்போ நாம வந்திருப்பது ஆனந்த் - வீணா கல்யாணம் பற்றி பேச. மீதி எல்லாவற்றையும் பிறகு பாரத்துக்குவோம்" என்றான். 

" அதுவும் சரிதான்" என்றார் ஆனந்தின் அப்பா. 

டிஃபன் வந்தது. 

எல்லோரும் ரசித்துச் சாப்பிட்டார்கள். 

" பஜ்ஜி கொஞ்சம் காரம் அதிகம், ஆனால் சொஜ்ஜி சாப்பிட்டவுடன் அந்த காரம், அந்தகாரம் ஆகியது. காபி சாப்பிட்டவுடன் அதன் சுவையில் மீதி எல்லாமே காணாமல் போய்விட்டன " என்றார் ஆனந்தின் அப்பா. 

(இன்றைய கதை சப் சப் என்று இருந்தது என்று கீ சா மேடம் கருத்துரை எழுதமுடியாது! பாருங்க இப்போ உப்பு, காரம், இனிப்பு எல்லாம் இருக்கு!)

ஆனந்தின் அப்பா ஆனந்தை வீடியோ காலில் அழைத்தார். 

அங்கு இருந்த ஒவ்வொருவருடனும் ஆனந்த் கொஞ்ச நேரம் பேசினான். பிறகு வீணா தனி அறைக்குச் சென்று ஆனந்துடன் அரைமணி நேரம் பேசினாள். 

வீணா திரும்பி வரும்வரை அறையில் இருந்த எல்லோரும் சந்தோஷமாக உரையாடிக்கொண்டு இருந்தனர். 

(தொடரும்) 


88 கருத்துகள்:

  1. கேள்விகள் கேட்கும் விதத்திலேயே அந்தக் கேள்விக்கான பதில் என்னவாக ஒ
    இருக்கும் என்று வாசிப்பவருக்கு ஆர்வமூட்டும் விதத்தில் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.
    உதாரணத்திற்கு ஒரு கேள்வி.
    இந்தியாவில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று நம் எல்லோருக்கும் தெரியும். எல்லா நாடுகளிலும் சூரியன் கிழக்கில் தான் உதிக்கிறதா? இல்லை, இதில் வேறுபாடு ஏதேனும் உண்டா?

    பதில் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றாலும் அந்த கேள்வியை அமைத்த முறையில் ஒரு.மாறுபாடு இருக்கிறது. அது தான் கேள்விகள் எழுப்புவதில் இருக்கும் சாமர்த்தியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ. அவர்கள் என்ன கேட்கவேண்டும் என்பதையோ எப்படி கேட்கவேண்டும் என்பதையோ நாம் கூறினால் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை நாம் பறிப்பதாக ஆகிவிடும். எனவே, யார் என்ன வேண்டும் என்றாலும் எப்படி வேண்டுமானாலும் கேட்கட்டும்.

      நீக்கு
    2. வீட்டிலிருந்து வேலை, இருவரும் வேலை செய்வது போன்ற கேள்விகள் யோசிக்கக் கூடிய டாப்பிக் இல்லையா? இருவரும் வேலை செய்யும்போது குழந்தைகளை யார் பார்த்துப்பாங்க, அதனால் ஏற்படும் தர்மசங்கடங்கள், சௌகரியக் குறைச்சல்கள் இதெல்லாம் யோசிக்க வைப்பதில்லையா?

      உங்களுக்கென்ன? (ஆண்கள்). எந்த ஊரா இருந்தால் என்ன.. நம்ம வேலைக்கு பாதிப்பு வராது, வேளா வேளைக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்பதால் இதைப்பற்றி யோசிப்பதில்லையோ?

      நீக்கு
    3. நல்ல கருத்து. இன்னொருவரின் கருத்து சுதந்திரத்தில் நாம் எதுவும் சொல்லவோ, செய்யவோ முடியாது. spontaneous ஆக வரணும்.

      நீக்கு
    4. ஆதரவு கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. என்னுடைய முதல் கேள்வி புரியவில்லையா அல்லது அது பற்றிய அனுபவம் உடையவர்களைத் தெரியவில்லையா? சின்னச் சின்ன எரிச்சல்களிலிருந்து எப்படி நிவாரணம் கிடைக்கும்?

    காலையில் எழுந்து அரக்கப் பறக்க கணவனுக்கும் குழந்தைக்கும் எல்லாம் செய்து, ஒன்பது மணிக்குள் அவர்கள் குளம்பியதும் கொஞ்சம் ஓய்வு எடுத்து, சீரியல்கள் பார்த்து, மெதுவாக வீட்டு வேலைகள் முடித்து (துணிகள் தோய்ப்பது, மாவு அரைப்பது, காய்ந்தவற்றை மடிப்பது போன்று) பிறகு மாலை நான்கு மணி அளவில் அவர்களுக்கான உணவைத் தயார் செய்து... என்று நாள் கழியும். கணவன் வீட்டில் அறையில் ஆபீஸ் வேலை பார்த்தால் அவளுக்கென்ற நேரம் கிடைக்குமா?

    கணவன் வீட்டிலேயே வேலை பார்த்தால், பலரிடம் பழகுவது, நேருக்கு நேர் எல்லாவற்றையும் பகிர்வது, என்று பலவற்றையும் இழப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு நேரம் தெளிவாக இருந்தேன். இப்போ குழப்பிட்டீங்க.

      நீக்கு
    2. தினமும் யாரும் மாவு அரைப்பதில்லை. ஒரு தரம் அரைத்தால் குறைந்தது நாலைந்து நாட்கள் வந்துடும். அதே போல் துணியும். முன்னெல்லாம் தினம் தினம் குளித்துத் துவைத்தாற்போல் இன்றைய நாட்களில் செய்வதில்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான். வீட்டிலேயே வேலை செய்வதால் உடை பற்றி அதிகம் கவனம் கொள்ள வேண்டாம். சமையலும் எளிமையாக ஒரு கலந்த சாதம், தயிர் சாதம் ஏதேனும் காய் அல்லது கூட்டு, சாலட் எனப் பண்ணிக்கலாம் விலாவரியாகப் பண்ண வேண்டாம். கூடியவரை வேலைகளைக் குறைச்சுக்கப் பழகிக்கணும்.

      நீக்கு
    3. அம்பெரிக்காவில் ஹூஸ்டனின் என் பெண்ணின் சிநேகிதி கணவர் எனக்குத் தெரிந்து சுமார் பத்து வருடமாக வொர்க் அட் ஹோம் தான். மாதம் ஒரு நாள் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அலுவலகம் சென்று ரிப்போர்ட் கொடுக்கப்போவார்.

      நீக்கு
    4. துபாயில் ஒரு வீட்டில் (நம்மவர்கள்), ஃப்ரீசரில் மாவு ஏகப்பட்டது அரைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் வீட்டில் பெரியவர்களே நான்கைந்து. அதனால் எந்த நேரம் அவர் வீட்டுக்குப் போனாலும் இட்லி, தோசை ரெடியா வந்துடும். இந்த சப்ஜெக்ட் எழுத ஆரம்பித்தால் நிறைய எழுதணும்.

      நீக்கு
    5. அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் பெண் வீட்டிலும் சரி, பையர் வீட்டிலும் சரி,துணிகள் மடியாக வேண்டுமெனில் அன்று காலை, அதாவது என்னிக்கு மடி வேணுமோ அன்னிக்குக் காலை நன்கு அலசிப் பிழிந்து ட்ரையரில் போட்டுவிட்டுக் குளிக்கப் போவோம். ஈரத்தோடு வந்து ட்ரையரில் இருந்து எடுத்து அணிந்து கொள்ளலாம். ஆகவே அங்கும் மடி, ஆசாரம் எல்லாம் பார்க்க முடிந்தது. :)

      நீக்கு
    6. எங்க மாமியார் மாதிசி கண்டிப்பாக யாராலும் இருக்க முடியாது. நான் மட்டும் மடியாக இருந்தால் போதாது. கைப்பிடித்துணி, துடைக்கும் துணியில் இருந்து குழந்தைகளின் உள்ளாடை, உடை, துண்டுகள் முதற்கொண்டு மடியாக என்னோட துணிகளோடு சேர்த்து உலர்த்திக் காய வைக்கணும். அவங்க என்னிடம் வரும்போது போட்டிருக்கும் உடைகளைக் களைந்துவிட்டு அந்த மடித்துணியைப்போட்டுவிடச் சொல்லுவாங்க. பின்னர் எல்லோருடனும் இருக்கக்கிளம்பினால் மடியை அவிழ்த்துட்டுப் பழைய துணிகளை அவங்களே போட்டுக்கச் சொல்லிப் போகச் சொல்லுவாங்க. அதைப் பாதுகாப்பது, அதாவது அதன் மேல் பட்டுவிடாமல் தப்பிப்பதெல்லாம் ஒரு கலை.

      நீக்கு
    7. மடி ஆச்சாரம் கடுமையாகப் பார்க்கும் என் பெரியப்பா வீட்டில் நான் வளர்ந்திருக்கிறேன். இப்போ யோசித்துப் பார்த்தால், நாம் எல்லோரும் சக்கையை வைத்துக்கொண்டு சாறை மறந்துவிட்டோம். எந்தக் காரணத்திற்காக மடி ஆச்சாரம் வந்தது என்பதை மறந்து, வெறும்ன மடி ஆச்சாரம் என்று தொடர்கிறோம் (முந்தைய தலைமுறை முதற்கொண்டு). நான் மிகச் சின்ன வயதில், டிரஸை கழற்றிவிட்டு அவர்களிடம் சென்றது நினைவுக்கு வருது.

      நீக்கு
    8. இந்தக் காலத்தில் மடி,ஆச்சாரம் எல்லாம் அவுட் dated ஆகிவிட்டன. யாரும் அதை லட்சியம் செய்வதில்லை.

      நீக்கு
  3. பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது வரமல்ல. வீடே சிறையாகி விடும். வீட்டு வேலை, அலுவலக வேலை, மற்றவர்களைப் பார்த்துப் பழக முடியாமை, வெளிடம் போகும் வாய்ப்பு இல்லாமை என அவளுக்குக் கஷ்டங்கள் அதிகமாகிவிடும் என்பது என் எண்ணம்.

    என்ன ஒண்ணு, இடையில் டபாய்த்துவிட்டு உணவு தயார் செய்துகொண்டிருக்கலாம், கணவன் வரும்போது இருவரும் உடனே சேர்ந்து உண்ண

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது எல்லா நாளிலும் நிகழ்வது அல்ல. ஒரு மாதத்தில் சில நாட்கள் மட்டுமே நிகழ்வது.

      நீக்கு
    2. //மற்றவர்களைப் பார்த்துப் பழக முடியாமை, வெளிடம் போகும் வாய்ப்பு இல்லாமை// 24 மணி நேரமும் அலுவலக வேலையே செய்து கொண்டிருக்கப் போகிறார்களா? அலுவலக நேரம் முடிந்ததும் பழகலாம், வெளியே போகலாம்.

      நீக்கு
    3. என்ன அதே அதே னு ஜால்ரா சப்தம் கேட்குது. இப்போல்லாம் வாரத்தில் மூணு நாலு நாட்களாவது வீட்டிலிருந்து வேலை. ஹசுபண்டு வேலை முடித்து வீடு திரும்பும்போது பழகலாம் வெளியே போகலாம்னு பா வெ மேடம் சொல்வது ஆச்சர்யம்தான். கீதா ரங்கன் என்ன சொல்வார்னு தெரியலை

      நீக்கு
    4. வீட்டிலேயே வேலை செய்வது, அதிலும் ஐடி துறையில் இருப்பவர்கள் வேலை செய்வது பெண்களுக்கு வசதி தான். வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வந்து உட்காரலாம். ஆனால் நேரம் ஒத்து வர வேண்டும். ஸ்ரீரங்கத்தில் எதிர் உள்ள வீட்டில் இருந்த பெண் ஆஸ்திரேலியா கம்பெனி ஒன்றுக்காக வேலை செய்தாள். அவள் வேலை நேரம் மதியம் பனிரண்டு அல்லது இரண்டு மணி முதல். ஆகவே காலை எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு சாப்பாடு முதற்கொண்டு ஆகி இரவுக்கெனத் தயார் செய்து வைத்து விடுவாள்.. இரவில் அதாவது நம்ம மாலை/இரவில் அவளுக்குக் கிடைக்கும் உணவு நேரத்தில் போய் தங்களுக்கான இரவு உணவைத் தயார் செய்துவிடுவாள். எனக்கு இது ரொம்ப வசதி, நாமெல்லாம் வேலை பார்க்கையில் இப்படி எல்லாம் இல்லையேனு நினைச்சுப்பேன். நடைமுறையிலும் இது வசதி எனவே தோன்றியது.

      நீக்கு
    5. என்னோட ஒரு பைசாக் கருத்து இது.

      நீக்கு
    6. இத்தனையிலும் நவராத்திரியில் கொலுவெல்லாம் வைத்து அனைவரையும் கூப்ப்பிட்டு வெற்றிலை, பாக்கெல்லாம் கொடுத்திருக்காள் அந்தப் பெண்.

      நீக்கு
    7. நான் கிட்டத் தட்ட இரண்டு வருஷங்கள் இதைப் பார்த்திருக்கேன். இப்போ பெண்களூர் மாற்றல் அவள் கணவருக்கு என்பதால் அங்கே போய்விட்டாள்.

      நீக்கு
    8. இந்த மாதிரி வேலை அனைவருக்கும் அமைவதில்லை. சிலருக்கு (அல்லது பலருக்கு), நியூசிலாந்து கிளையண்ட், அமெரிக்க கிளையண்ட் என்று இரண்டு ப்ராஜக்ட்களு வந்துவிடும். அல்லது இத்தகைய கிளையண்டுக்கு ஆபீஸிலிருந்து சேவை செய்யணும். அப்போ நேரம் கெட்ட நேரம்தான் ஆபீஸ் இருக்கும்.

      நீக்கு
    9. ஐ டி கம்பெனி தவிர வேறு எதிலும் வொர்க் ஃப்ரம் ஹோம் சரிப்பட்டு வராது. பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளிலோ அல்லது விமான ஓட்டுனர்களோ WFH செய்தால் என்ன ஆகும்!

      நீக்கு
    10. எதிர்காலத்தில் AI வந்து IT வேலைகளை கபளீகரம் செய்துவிடும் என்கிறது பாவனா !

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வீட்டிலிருந்து வேலை செய்வதில் இருக்கும் ஒரே ஒரு நன்மை அரக்க பரக்க கிளம்ப வேண்டாம் என்பது மட்டுமே. என் மகன் வீட்டிலிருந்தபடி வேலை பார்த்த ஒரு நாள் நான் வழுக்கி விழுந்து விட்டேன். அவன் வந்து எழுப்பி விடுவான் என்று எதிர்பார்த்தேன், காலில் இருந்த அவன் பத்து நிமிடம் கழித்துதான் வந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்மை அவங்களுக்கு மட்டும்தான். வேளா வேளைக்கு காபி உணவு ஸ்நாக்ஸ் வீட்டிலிருக்கும் செக்ரட்டரி கொடுக்கணும். மத்தபடி வீட்டுக்குப் பிரயோசனம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

      நீக்கு
    2. அதெல்லாம் இல்லை, பையர் நைஜீரியாவில் இருந்தப்போவும் சரி, இங்கே தோஹாவில் இப்போ இருக்கும்போதும் சரி, இந்தியா வந்தால் வீட்டிலிருந்து வேலை தான். உணவு இடைவேளையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்துவிடுவார். (வண்டி இருந்தது.) அதோடு வேறே ஏதானும் தேவைனாலும் கேட்டுச் செய்வார். இன்னும் சொல்லப் போனால் அவருக்கான காஃபி, தேநீரை அவரே தயாரித்துக்கொள்வார்.

      நீக்கு
    3. கீசா மேடம்.... உங்க பையரை வைத்துச் சொல்லாதீங்க. அதிலும் அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாட்டில் வேலை பார்த்தவர்கள், அவரவர் வேலையை அவரவர்களே செய்துகொள்வார்கள். காபி கொண்டுவா, டீ கொண்டுவா, உடைகளைத் தோய்த்துவிடு என்றெல்லாம் ஏவ மாட்டார்கள். அதனால் அவங்களைக் கருத்தில் கொள்ளக் கூடாது. ஹா ஹா ஹா நம்மூர் ஆசாமிகள் பெரும்பாலும் மனைவியே எல்லாம் செய்யணூம் என்று எதிர்பார்ப்பார்கள்

      நீக்கு
    4. பொதுவாகவே எங்க வீடுகளில் ஆண்களையோ , பெண் குழந்தைகளையோ சார்பு நிலையில் வளர்த்ததில்லை. ஒரு வயசு ஆனப்புறமா அவங்க வேலைகளை அவங்களே செய்துக்கணும்னு எழுதப்படாத நிபந்தனைகள் உண்டு. காலை எழுந்ததுமே பல்தேய்த்து இயற்கைக் கடன்கள் கழிந்த கையோடு குளிச்சுத் துவைச்சுட்டு வரணும்னு எங்க வீட்டிலே கடுமையான நிபந்தனை. இப்போவும் என் அண்ணா அப்படித்தான் இருக்கார். இன்னும் எங்க அப்பா வழி உறவுகளில் பலரும் அப்படித்தான். ஆனால் எனக்கே இப்போல்லாம் அந்தப் பழக்கம் ராஜஸ்தான் போனதுமே விட்டுப் போச்சு. :( அதுவே என் மைத்துனர்களிடம் செல்லாது. இன்னும் சொல்லப் போனால் மாமா தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்வார். (பாட்டி, பெரியம்மா, அத்தை வளர்ப்பு) ஆனால் மாமியாருக்கு அது வருத்தமா இருக்கும். அவனைப் பார்த்துக்க ஆளே இல்லாமல் கஷ்டப்படுகிறான் என வருபவர்களிடமெல்லாம் சொல்லி நிஜம்மாவே அழுவார். அவருக்கு இது புரியவே 80 வயதுக்கும் மேல் ஆயிற்று. :))))

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. இங்கே எல்லாம் துப்பறியும் சாம்புவுக்கு வேம்பு பண்ணறாப்போல் காஃபியை ஆத்திச் சொட்டுச் சொட்டாகத் தம்பளரில் விடணும் என்பார்கள். பின்னால் எல்லோருக்கும் எல்லாமும் மாறிவிட்டது என்பது வேறே விஷயம். கிராமத்தில் இருந்ததால் அவசரம் இல்லை. செய்ய முடிஞ்சது. நகரத்தில் அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கணுமே! :)))) கிராமத்தை விட்டு வந்து சில ஆண்டுகள் அவங்களுக்கு இந்த அவசரத்தோடு ஒட்ட முடியாமல் தவிச்சிருக்காங்க.

      நீக்கு
  6. அடுத்த வாரத்திற்கான கேள்வி: நீங்கள் எந்த விஷயங்களில்.... வேண்டாம், வாட்சாப்பில் அனுப்புகிறேன். இந்த வாரமே எல்லோரும் பதில் சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  7. மன்னியின் அண்ணாவை எப்படி அறிமுகப்படுத்துவது என்று குழம்பினீர்களா? அண்ணாவின் மச்சினர் என்று சொல்லியிருக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்ட நண்பருக்கு என்னை மட்டும்தான் தெரியும்!

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
    பெண்கள் வீட்டிலிருந்து வேலை பார்த்தால் குழந்தைகள் அம்மாவை தொந்திரவு செய்யும். மடியில் வைத்து கொள் , விளையாட வா என்று எல்லாம் அழைக்கும். மற்ற நேரங்களில் வீட்டு பெரியவர்களிடம் இருக்கும் குழந்தைகள் அம்மா வீட்டில் இருந்தால் அம்மா தான் எல்லாம் செய்ய வேண்டும் என்பார்கள்.

    ஆபீஸ் போய் விட்டால் சமத்தாய் பாட்டியிடம் இருக்கும் அம்மா, அப்பா ஆபீஸீக்கு போய் இருப்பதாய் யாராவது கேட்டால் சமத்தாய் சொல்லும்.

    நெல்லை சொல்வது போல வீட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து சாப்பிட சில நேரங்களில்முடியும் சில நேரங்களில் மீட்டிங்க் என்று இருப்பார்கள்
    போன்காலில்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    மன்னியின் அண்ணாவை அறிமுகப்படுத்த பேசாமல் அண்ணாவென்றே குறிப்பிட்டு விடலாம். நாங்கள் என் கணவரின் அண்ணாவை அப்படித்தான் அழைப்போம் . யாருக்காவது சுட்டிக்காட்டும் போது, அவர் பெயருடன் அண்ணாவை சேர்த்துச் சொல்வோம். நீங்கள் சொன்ன "ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு நேர உடன் பிறந்தான்" " என்ற வாசகத்தை பொதுவில் யாராவது அறிவுரைகள், சொன்னதை திருத்தங்கள் என வந்து சொல்லும் போது," யார் இவர்? பொதுவில் இப்படி வந்து அவமானத்தை தருகிறார் இவர் என்ன ஆச்சா னுக்கு..... "என இப்படி சற்று அங்கலாய்ப்புடன்
    குறிப்பிடு(குறைபடு)வோம் .நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அந்த உறவுகளுக்கெல்லாம் பெயர் இல்லை என்பது என் கேள்வி. எல்லோரையும் அண்ணா, அக்கா, தங்கை, அத்திம்பேர் என்று அழைத்துவிடுவது சுலபம். ஒருவேளை, மச்சினியிடமோ, இல்லை மச்சினர் மனைவியிடமோ ஒருவர் பேசும் சந்தர்ப்பமே இல்லை, பேசுவதும் இயல்பில்லை என்பதனால் அந்தக் காலத்தில் இப்படி ஏற்பட்டிருக்குமோ?

      நீக்கு
    2. அப்படியும் இருக்கலாம்.

      நீக்கு
  11. படமும் பதமும் பகுதியில் நெல்லைத்தமிழன் படங்கள் அருமை.
    மகளை ழைத்து கொண்டு போகும் போது பொருப்பும் கடமையும் இருக்கும் போது சிறிது பயம் தோன்றும் தான்.

    மகள் சொன்னதும் சரிதான் . பயத்தை உண்டு பண்ண கூடாதுதான்.


    சில நேரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. சில நேரங்களில் இப்படித்தான்!

      நீக்கு
  12. கதை நன்றாக இருக்கிறது. பெண் பார்க்கும் படலம் இனிப்பு, காரம், காப்பி எல்லாம் முடித்து உரையாடி கொண்டு இருப்பது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்தை அடித்து முடிபதற்குள் வெளியாகி விட்டது அவசரப்பட்டு

      நீக்கு
  13. //முதலில் உங்க பெண்களைக் கூப்பிடுங்க. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்போம். பிறகு டிஃபன் காபி சாப்பிடுவோம்" என்றார். //

    முதல் படம் இந்த காட்சிக்கு போட்டதா?

    //அவர்கள் இருவரையும் பார்த்த ஆனந்தின் அப்பா அம்மா இருவரும் " ஆஹா உங்க பெண்கள் இருவரும் திவ்யமா இருக்காங்க" என்றனர். "பச்சைப் புடவை கட்டியிருப்பதுதான் வீணா என்று நினைக்கிறேன். சரிதானே? " என்றார் ஆனந்தின் அம்மா. //

    புடவை கட்டி அழகாய் வருகிறார்கள் இருவரும்.

    பதிலளிநீக்கு
  14. ​மணல் கயறு சாத்தியசம் தானே? (நாங்கள் ... இஸ்ரோ மோல்ட் உண்டாக்கி பைபர் க்ளாஸில் ஹீலியம் காஸ் குடங்கள் உண்டாக்குகிறோம். )
    3D பிரிண்ட்டிங்கில் ஒரு வீட்டையே 2 நாளில் IIT சென்னை கட்டி விட்டது. அது பற்றி பாமரர்க்கு விளங்கும் படியாக சொல்ல முடியுமா?
    இப்போது அத்தியாவசியம் ஆனால் சில வருடங்களில் தூக்கி எறியப்படும் என்று நீங்கள் கருதுவது யாது? உதாரணமாக நீராவி என்ஜின்கள்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த புதனுக்கான கேள்விகள். பதில் அளிப்போம்.

      நீக்கு
  15. எனக்காகப் பெண் பார்க்கும் படலத்தைச் சுவையுடன் அமைத்த திரு கௌதமன் அவர்களுக்கு நன்றி. ஆனால் வீணா போடப்போகும் நிபந்தனைகள் என்னென்ன? இந்தக் கல்யாணம் நடக்குமா? ஆனந்தை வீணாவுக்குப் பிடிக்குமா? பாபாவின் ஆசை நிராசை ஆயிடுமா? இப்போத் தான் கொஞ்சமாவது கவலைப்பட வேண்டி இருக்கு. கல்யாண காரியம் பாருங்க. :)))))

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. என்னோட கேள்விகளுக்கான பதில் எல்லாம் ஓகே. என்றாலும் பல விஷயங்கள் நியாயமற்றவையாகவே இருக்கின்றன. நெல்லையோட முதல் கேள்விக்கான கருத்துகளைச் சொல்லிட்டேன். இன்னொரு கேள்விக்கான பதில். இரு ப்ரொஃபெஷனல்கள் திருமணம் செய்து கொள்வது. என் நண்பரும் உபிசவுமான திருமூர்த்தி வாசுதேவன் அவர்கள் மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர். அவர் மனைவி கைனகாலஜிஸ்ட். கடலூரில் பெண்கள் பிரசவத்துக்காகப் பெரியதொரு மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். அதோடு வீட்டையும் பார்த்துக் கொண்டார் என்பதை நாங்க கண்கூடாகப் பார்த்திருக்கோம். சமையலுக்கு மாமி இருப்பார். என்றாலும் எல்லாமும் இவர் மேற்பார்வையில் தான் நடக்கும். இன்னும் சொல்லப் போனால் திவாவுக்கு மேலே இரு அண்ணாக்கள் இருந்தாலும் அவர் பெற்றோர் இவருடன் கடலூரில் தான் இருந்தனர். அவங்களுக்கு மத்தியானம் 3 மணிக்கு டிஃபன் கொடுக்க திவாவின் மனைவி வந்து செய்து கொடுப்பதைச் சில முறை பார்த்திருக்கேன். அதே போல் உறவுகளிலும் கணவன்/மனைவி மருத்துவர்கள் உண்டு. பலரும் பெண்களுக்கான மருத்துவத்திலேயே சிறப்புப் பெற்றிருந்தார்கள். மருத்துவமனையையும் நடத்தி வந்தார்கள். இதெல்லாம் அவரவர் மனப்போக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு ப்ரொஃபஷனல்கள் திருமணம் செய்துகொண்டாலும், வேலை சொந்த வேலையாக இருந்தால் ஓகே. இல்லாவிடில் கடினம். ஒருவர் மருத்துவராக இருந்து ஷிஃப்ட் வேலை என்றால் ரொம்பவே கடினம். இதுபோன்று பலரைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஃபேமிலியில் குழந்தைகளை தாத்தா/பாட்டிகள்தாம் பார்த்துக்கணும், வீட்டு வேலைகளும் சிலவற்றைச் செய்யணும். இல்லாவிடில் கந்தர்கோளம்தான்.

      நீக்கு
    2. திவா. வெளியில் இருந்த ஒரு மருத்துவமனையில் தான் அனஸ்திஸ்டாக வேலை செய்தார். மனைவி தான் சொந்த மருத்துவமனை. இன்னொரு உறவினரில் கணவன் சுந்தரம் ஃபவுன்டேஷன்ஸின் மருத்துவமனையில் இருந்தார். மனைவி வீட்டிலேயே மாடியில் மருத்துவமனை வைத்துக் கொண்டு நிர்வகித்து வந்தார். இவருக்கும் மாமனாரும் மாமனாரின் தங்கையும் உடன் இருந்தார்கள். திவாவுக்கு ஒரே பையர். நெரூரில் பாடசாலையையும் பிரம்மேந்திராளின் ஜீவசமாதியையும் பார்த்துக்கறார். இன்னொருத்தருக்கு ஒரு பெண், ஒரு பையர். அவங்களே தான் பார்த்துண்டாங்க. ஏனெனில் இவங்களும் எங்க பெண், பையரும் கிட்டத்தட்ட ஒரே வயசு.

      நீக்கு
    3. இவங்கல்லாம் வயசில் என்னை ஒத்தவங்க. ஐந்து அல்லது ஆறு வயசு குறைந்தோ கூடியோ இருக்கலாம். இதெல்லாம் இப்போதைய தலைமுறையால் முடியுமா என்பது சந்தேகமே. சமீபத்தில் ஒரு பெண் மருத்துவர் குழந்தை பிறந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது முகநூலில் வந்திருந்தது. அதை Post Partum Depression என்றார்கள். இது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கே அதிகம் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

      நீக்கு
    4. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  18. பட்டயக் கணக்காளர்களிலும் சில உறவுப் பெண்கள் உண்டு. மேலே சொல்லி இருந்தேன் எங்க எதிர் வீட்டில் இருக்கும் பெண் என்று. அந்தப் பெண்ணும் சரி, அவள் கணவரும் சரி இருவருமே சி.ஏ. படிச்சுட்டு வேலை செய்பவர்கள் தான். இப்போதைய தலைமுறையும் கூட.

    பதிலளிநீக்கு
  19. //என்னோட கேள்விகளுக்கான பதில் எல்லாம் ஓகே. என்றாலும் பல விஷயங்கள் நியாயமற்றவையாகவே இருக்கின்றன.//நான் உங்கள் இருவரின் பதிலில் நியாயமற்றவை எனச் சொல்லவில்லை. நடப்பது அனைத்தும் நியாயமில்லாமலேயே நடக்கின்றன. இங்கே விவரித்து எழுதினால் அரசியல் பதிவாகி விடும். :(

    பதிலளிநீக்கு
  20. நெல்லையின் திற்பரப்புப் படத்தையும் கரையோரத் தாழைகள் இருப்பதையும் படித்த உடன் பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகத்தில் கடலில் சூறாவளியில் இருந்து தப்பிய வந்தியத் தேவன் அருள்மொழித் தேவரைப் பூங்குழலி, சேந்தன் அமுதனிடம் ஒப்படைத்த போது அவர்கள் இருவரும் இம்மாதிரித் தாழைப்புதர்களை ஒட்டிய ஒரு ஓடையிலே தான் படகை ஓட்டிக் கொண்டு நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போவார்கள். அந்த அத்தியாயம் படிக்கையிலேயே என் மனதுக்குள் தாழை மணம் வீசும். இப்போதும் அப்படியே உணர்ந்தேன். ஆனால் இத்தகைய ஆபத்துள்ள இடத்துக்குப் பெண்ணை அழைத்துச் சென்றது சரியல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் குடும்பமாக அங்கு சென்றிருந்தோம். பெண்ணுக்கு நான் விரைவில் கரைக்கு அழைத்துவந்துவிட்டேனே என்று எண்ணம். பத்து ரூபாய்க்கு தாழம்பூ மடல் வாங்க நினைத்தேன். அவர் அடுத்த போட்டுக்கான வேளையில் பிஸியாகிட்டார். எங்களுக்கும் நேரமில்லை.

      இப்போதெல்லாம் தாழம்பூவே நம் உபயோகத்தில் இல்லை என்பதைக் கவனித்தீர்களா?

      நீக்கு
    2. கோயில்களில் தாழம்பூ அம்மன் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது. திருவானைக்கா அகிலாவுக்கும், சமயபுரம் மாரியம்மனுக்கும் தாழம்பூ அலங்காரம் செய்வதைப் பார்த்து வருகிறேன். நான் சின்ன வயசில் பூவெல்லாம் தைத்து அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் தாழம்பூ வைச்சுப் பின்னிக் கொண்டதில்லை. பயமே காரணம். எங்களுக்குத் தெரிந்த ஒரு சின்னப் பெண் தாழம்பூ வைத்துத் தைத்துக் கொண்டவள் திடீரென இறந்து விட்டாள். தாழம்பூவில் இருந்த பூ நாகமே கொத்திவிட்டது எனப் பேசிக் கொண்டார்கள். ஆனால் நான் கல்யாணம் ஆகி 3,4 வருஷம் கழிச்சு எங்க பெண் ஒன்றரை வயதுக் குழந்தையாய் இருக்கையில் என் கணவரின் அத்தை எனக்குத் தாழம்பூ வைத்துப் பின்னி விட்டார். அவருக்கு எனக்கு அடர்த்தியாகத் தலை முடி இருப்பதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

      நீக்கு
  21. படங்கள் பார்க்கவும் ரசிக்கவும் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பூமர் அங்கிள் என்பதை இந்தக் காலத்து இளசுகள் நிறையவே பயன்படுத்துகின்றனர். அவங்க லெவலுக்கு இறங்கிப் பேசாமல், படிப்பு, பழைய கதை, அறிவுரைகள் என்றெல்லாம் ஆரம்பித்தால் நாம் பூமர் அங்கிள் ஆகிவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  23. //பஜ்ஜி கொஞ்சம் காரம் அதிகம்// இதைப் படித்ததும், எனக்கு ஒன்று தோன்றியது. தமிழகத்தில் (ஏன் பெங்களூரிலும்) இப்போதெல்லாம் காரம் அதிகமாக இருக்கிறது. காரணம் பலரும் டாஸ்மாக் கஸ்டமர்கள் என்பதாலா? நாக்கு செத்துப் போய், ரொம்ப காரம் வேண்டியிருக்கோ? கேடரர்களும் அப்படியே தயார் செய்கிறார்கள். தாங்க முடியலை. உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஜ்ஜி - வீட்டில் தயாரிக்கப்பட்ட பஜ்ஜி மட்டுமே சாப்பிடுவேன். கடை பஜ்ஜி சாப்பிடுவதை 12 வருஷங்கள் முன்பே நிறுத்திவிட்டேன்

      நீக்கு
  24. சகலை- இது சரியான வார்த்தை. சகி-தோழி. சகன் - தோழன். சகலை, தோழராகக் கருதப்பட வேண்டியவர். அவருடைய மனைவி நமக்கும் சகோதரி உறவு முறை. அதாவது மனைவியின் சகோதரிகள் மச்சினி என்ற பெயர் இருந்தாலும், சகோதரி முறை.

    பதிலளிநீக்கு
  25. முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் உடை, மற்றும் நிற வித்தியாசங்கள் இருக்கின்றனவே. இரண்டும் வெவ்வேறு நிகழ்வில் இருக்கும் படங்களோ? அப்படி இருந்தால் அந்தச் சம்பவம் இந்த வாரத்தில் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணா விமலாவை குறிப்பிடுகிறீர்களா?
      முதல் படம் முதல் நாள் மாலை பாபாவுடன் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பது. அடுத்த படம் மறுநாள் மாலை ஆனந்தின் பெற்றோர் வந்தபோது.‌இரண்டாம் படத்தில் மேக் அப் அதிகம்.‌

      நீக்கு
  26. நெல்லை பகிர்ந்திருக்கும் படங்கள் மிகவும் அழகாக உள்ளன. சில இடங்களில் self peddling போட்டுகளில் பெடல் பண்ணும் இருவரோடு உதவிக்கு இன்னொருவரும் அவர்களுக்கு முதுகை காட்டியபடி நின்று கொண்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    சகோதரர் நெல்லைத் தமிழர் அனுப்பிய நீர்பரப்பு படம் நன்றாக உள்ளது. தனியாக செல்லும் போது ஏற்படும் பயம் (அதை பயம் என்பதை விட மகளின் மமேல் உள்ள அக்கறை எனலாம்) . நியாயமானதுதான்.

    தங்களின் இவ்வார கதைப்பகுதி நன்றாக உள்ளது. படங்களும் அழகாக இருக்கிறது. கல்யாண பகுதியும் விரைவில் வந்து விடுமென நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. கேள்வி பதில்கள் நன்று.

    படமும் பதமும் படம் அருமையாக உள்ளது.

    கதை நன்றாக போகிறது.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!