16.9.26

குழந்தைகள், வயதானவர்கள் யாரை கவனித்துக் கொள்வது கடினம்? + சரோஜாதேவி பகுதி 16

 

கேள்வி பதில்கள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

எந்த விஷயங்களில் உங்களை பூமர் என்று உங்களை சுற்றியிருப்பவர்கள் கருதுகிறார்கள்?

நீங்களே உங்களை பூமர் என்று நினைக்கும் தருணங்கள் உண்டா?

# காதில் விழுவதெல்லாம் உண்மை என்று நம்பி கலக்கமடைவதை சுட்டிக் காட்டி " இது பூமர்த்தனம் " என்று சொல்லும் போது அது சரி என்றே எனக்கும் தோன்றும்.

& சுற்றியிருப்பவர்கள் கருதுவது எதுவும் எனக்குத் தெரிவதில்லை. நான் சந்திப்பது நெருங்கிய உறவினர்களையும் , எப்போதாவது நண்பர்களையும். 

நானே என்னை இதுவரை பூமர் என்று நினைத்தது இதுவரை இல்லை. 

குழந்தைகள், வயதானவர்கள் யாரை கவனித்துக் கொள்வது கடினம்?

# வயதானவர்களை கவனித்துக் கொள்வது சிரமம் என்று நினைக்கிறேன்.  சிறு குழந்தைகளை கவனிக்க வேண்டிய நாட்களில் நமக்கு உடல் மனம் இரண்டுமே வலுவாக இருக்கும்.

& வயதானவர்கள் என்னும் வயதான குழந்தைகளை கவனித்துக்கொள்வதுதான் கடினம். 

குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?

# அவர்கள் தவறு செய்யும் போது அதை சாந்தமாக ஆனால் உறுதியாகத்  திருத்த வேண்டும்.  நல்ல விஷயங்களை அலுப்படிக்காமல் உணர்த்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதை கற்றுத்தர வேண்டும் தன்னம்பிக்கையா கடவுள் நம்பிக்கையா?

& கடவுள் நம்பிக்கையால் வருகின்ற தன்னம்பிக்கையை. 

நெல்லைத்தமிழன் : 

1 பாவ புண்ணியம் பற்றிப் பேசும் நாம், ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் இது நல்ல செயலா இல்லை கெட்ட செயலா என்று பார்த்துப் பார்த்துச் செய்கிறோமா?  

# நான் அப்படித்தான் செய்கிறேன்.  சில விஷயங்களில் அசிரத்தை இருக்கும் போது அதை உணர்ந்து சரி செய்து கொள்கிறேன்.

& எனக்கு எப்போதும் வருகின்ற சந்தேகம் : கரப்பான் பூச்சிகளை கண்டவுடனேயே Hit அடித்துக் கொல்கிறேனே இது பாவமா அல்லது புண்ணியமா? 

2.தானம் என்பது என்ன? பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதன் அர்த்தம் என்ன? ஏன் தான தர்மம் என்று சேர்த்துச் சொல்கிறோம்?

# இல்லாதவனுக்குக் கொடுப்பது தானம்.  ஊர்ப் பொதுக் கிணறு அமைப்பது தர்மம். 

குடிகாரனுக்கு பண உதவி செய்தால் அவன் மேலும் குடித்து தன்னை மோசமாக்கிக் கொள்வான்.  அப்படிப்பட்ட தானத்தால் பயனில்லை. எனவேதான் பாத்திரமறிந்து பிச்சை இடு என்று சொல்லப் பட்டது.

& மகாபாரதத்தில் கர்ணன் இறக்கும் சமயத்தில் கண்ணனைக் கேட்கிறான் : " நான் தான தர்மங்கள் செய்யவில்லையா - எனக்கு ஏன் இந்த நிலை? " என்று. 

அதற்கு கண்ணன், " நீ செய்தது தானம் மட்டுமே. பாண்டவர்களுக்கும், திரௌபதிக்கும் நீ செய்தது எதுவுமே தர்மம் இல்லை. அதர்ம வழியில் நடந்ததால் உனக்கு இந்த நிலை. " 

3.பிராமணன் சொத்து சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்பது சாஸ்திரம். அதை நம்மால் ஏன் பின்பற்ற இயலவில்லை?

 # நாம் பிராமணர்களல்லாமல் போனதுதான் காரணம்.

& சார் நாம இருப்பது இருபத்து ஓராம் நூற்றாண்டு. இப்போ இந்த சாஸ்திரம் எல்லாம் பார்ப்பவர்கள் சரியான பைத்தியங்கள்! 

4.உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க இயலாத உதவியைச் செய்தவர் யார்? அல்லது உதவி செய்ய முயற்சித்தவர் யார்? அதுபற்றி விவரிக்க இயலுமா? 

# பெரிய அளவில் உதவி பெறத் தேவையில்லாமலே என் வாழ்க்கை கழிந்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி. மற்றபடி கல்யாணம் போன்ற செலவுகள் வரும்போது நண்பர்கள் ஏனென்று கேளாது எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுத்து வட்டி இல்லாமல் நான் சொன்ன போது திரும்ப வாங்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதை அவ்வப்போது நினைத்தும் பார்த்திருக்கிறேன். 

நான் சற்று புத்திசாலி. நன்றாக முன்னுக்கு வர முடியும் என்று எனக்கு சில ஆசிரியர்கள் தைரியம் கொடுத்தார்கள். அவர்கள் ஆசியினாலோ என்னவோ என் வாழ்வு பெரிய சிக்கல் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதற்கு நன்றி சொல்ல கூட எனக்கு சந்தர்ப்பம் இல்லை. அது என் வாழ்வில் ஒரு நிரந்தர ஏமாற்றம்.‌

& என் பையன் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது தாராளமாக பண உதவி செய்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்தான் மறக்க இயலாத உதவியை செய்தவர்கள். 

5. நண்பர்கள் ஒருவனது வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்கிறார்களா இல்லை உறவினர்களா?

# நம் வாழ்க்கை மேம்படுமாறு நாம் உணர்வது நல்ல நண்பர்களால் மட்டுமே. உறவினர்கள் நம்மை சிலாகித்து பேசுவதும் ஊக்கம் தரும் என்றாலும் நல்ல நண்பர்கள் நமக்கு நல்லதே நினைக்கிறார்கள் என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம்.

= = = = = = = = =

படமும் பதமும் : 

என்னுடைய பொசிஷனுக்காக (அதாவது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் என்னுடைய நிலைக்காக) எனக்கு எந்த கிஃப்ட் அல்லது சலுகைகள் வந்தாலும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். எனக்கு நிறைய அஃபீஷியல் கெஸ்ட் மற்றும் பல வெளி அலுவலகம் தொடர்புடைய ஆட்கள் வருவார்கள். அவர்களை நான் எங்கள் ரெஸ்டாரண்டுகளுக்கோ இல்லை வேறு இடங்களுக்கோ உணவிற்கு அழைத்துச்செல்லலாம். ஆனால் பெரும்பாலும் நான் அப்படிச் செய்வதில்லை. நான்  ப்யூர் வெஜ் என்பதும் ஒரு காரணம் (ஹாஹா). எனக்கு சில நேரங்களில் மொபைல் பரிசாக வரும். அல்லது வேறு பொருட்கள். எல்லாவற்றையும் ஹெட் ஆபீஸுக்கு அனுப்பிவிடுவேன்.  ஒரு தடவை மேலே உள்ள ஃப்ரூட் கொத்து பெரிய கம்பெனியிலிருந்து எனக்கு அனுப்பியிருந்தார்கள். அப்போது என் அம்மா பஹ்ரைனுக்கு வந்திருந்தார். அதனால் என் பாஸிடம் படத்தை அனுப்பி இதை மாத்திரம் நான் வீட்டுக்கு எடுத்துச் செல்லவா என்று கேட்டேன். இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எதற்கு அனுமதி கேட்கிறாய் என்று சொல்லிவிட்டான். பிறகு இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.


நான் இந்தப் பழக்கொத்தில் எதையும் சாப்பிடவில்லை. இதுபோல ஒரு முறை ரெட் வெல்வெட் கேக் மிகப் பெரியது எனக்கு வந்தது. என் குடும்பம் அப்போது என்னுடன் பஹ்ரைனில் இல்லை. என் பெண், ரெட் வெல்வெட் கேக் என்பது மிகவும் சுவையாக இருக்கும், தனித்துவம் வாய்ந்தது என்று சொன்னாள். எனக்கு அதில் ஆர்வம் இருந்ததில்லை. அதனால் என் அலுவலகத்தில் உள்ளவர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அதன் படம் எங்காவது எடுத்திருந்தால் பகிர்கிறேன்.

= = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 15 : ஆனந்தின் சம்மதம். 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 16 : நிச்சயதார்த்தம் 

திட்டமிட்டபடியே நிச்சயதார்த்தம் திருவல்லிக்கேணியில் இருந்த ஒரு கல்யாணமண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது. 

ஜயராமனின் உறவினர்கள், நண்பர்கள், பாபா, வீணா , விமலா இருவரின் தோழிகள், ஆனந்த் குடும்பத்தின் உறவினர்கள் நண்பர்கள் (நாநாவும் வந்திருந்தான்) என்று பலரும் வந்திருந்தனர். 

நடக்கும் நிகழ்ச்சிகளை, ஆனந்த் அமெரிக்காவிலிருந்து வீடியோ கால் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். 

அடுத்த மாதம் 14 ஆம் தேதி முகூர்த்தம் வைப்பதாக  லக்னப் பத்திரிக்கையில் குறிப்பிட்டார்கள். 

லக்னப் பத்திரிக்கை எழுதப்பட்டு இரு தரப்பிலும் இருந்த மூத்த உறவினர் கையெழுத்து இட்டார்கள். 

காலை டிஃபன், மதியம் சாப்பாடு எல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

காலை டிஃபன் சாப்பிட்ட பின் கை கழுவ சென்றபோது நாநாவிற்கு முன்பாக கியூவில் நின்றிருந்தவர் " .. .. அதெல்லாம் நீ கவலைப் படாதே .. ..  .. ..  எப்படியும் நிறுத்திவிடுவேன். நான் எடுத்து அனுப்பும் படங்களை மட்டும் நீ பார்த்து, உன் திறமையைக் காட்டு - அப்புறம் அவ உனக்குத்தான் .. .. " என்றார். 

நாநாவிற்கு இந்த உரையாடல் விசித்திரமாகப் பட்டது. பேசியவர் யார் என்று பார்த்தான். 

முன்பின் பார்த்திராதவர். கை கழுவி முடித்தபின் பேசியவரின் பின்பாக விரைவாக நடந்து, அவர் உட்கார்ந்த பிறகு, அவர் முன்பு சென்று, கூட்டத்தை ஃபோட்டோ எடுப்பவன்போல அவரை ஒரு ஜும் ஷாட் எடுத்தான். 

பிறகு, பாபாவிடம் அவர் படத்தைக் காட்டி, இவர் யார் என்று கேட்டான் நாநா. 

பாபா, " இவர்தான் வீணாவின் தாய் மாமா - நான், நீ இங்கே வந்த அன்று சொன்னேனே சேலம் மாமா - தெருவில் இறங்கி ஒரு லவ் ஜோடியைக் கண்டித்துவிட்டு - விஷயம் விபரீதம் ஆகும் என்று தெரிந்தவுடன் ஊருக்கு ஓடிப்போனவர். ஏன் கேட்கிறாய்? " 

" ஒன்றும் இல்லை - சும்மா தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன்" என்றான் நாநா. ஆனால் அதற்குப் பின் அந்த சேலம் மாமாவின் நடமாட்டாங்களையும் அவர் நிச்சயதார்த்த நிகழ்வுகளை  மொபைல் போனில் படம் எடுப்பவைகளையும் உன்னிப்பாக கவனித்தான். அவர் வீணா பேசுவது சிரிப்பது எல்லாவற்றையும் cover செய்வது நாநாவின் கவனத்தை பெற்றது. நாநா அவருடைய சில நடவடிக்கைகளை தன்னுடைய செல் போனில் ஃபோட்டோ மற்றும் வீடியோ பிடித்துக்கொண்டான். 


= = = = = = = = = = = =

நிச்சயதார்த்தம் நன்றாக நடந்து முடிந்தது. 

உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர். 

ஆனந்தின் பெற்றோர்கள் அங்கிருந்து  கோவை செல்ல கிளம்பினார்கள். புறப்படுவதற்கு முன்பு, ஆனந்த் கல்யாணம் நடக்க இவ்வளவு முயற்சிகள் எடுத்த பாபா & நாநா இருவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். 

" நீங்க ரெண்டு பேரும் எப்போ கல்யாணம் செய்துகொள்வதாக இருக்கிறீர்கள்? " என்று கேட்டார் ஆனந்தின் அப்பா. 

" எங்களுக்குப் பிடிச்ச பெண்ணா கிடைக்கும்போது " என்று சொல்லிச் சிரித்தான் நாநா. 

(தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!