9.9.26

மணல் கயறு சாத்தியம்தானே? + சரோஜாதேவி பகுதி 15.

 

கேள்வி பதில்கள் :

அமரர் ஜெயக்குமார் சந்திரசேகரன் (சென்ற புதன் - 2.9.26 பதிவில் கேட்டிருந்த கேள்விகள். பதிலை பார்க்காமல் 4.9.26 கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை மூன்றுமணிக்கு காலமாகிவிட்டார். 😔) 

​மணல் கயறு சாத்தியம்தானே? (நாங்கள் ... இஸ்ரோ மோல்ட் உண்டாக்கி பைபர் க்ளாஸில் ஹீலியம் காஸ் குடங்கள் உண்டாக்குகிறோம். )

# மணல் கயிறு சாத்தியமாக இருக்கலாம். ஆனால் அது அவசியம் இல்லை.

& என்னுடைய தொழிற்சாலையில் கூட, இரும்புத் தகடால் செய்யப்பட்ட Front end structure / cab விட்டு, ஃபைபர் கிளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட cab 1990 ஆம் ஆண்டிலிருந்து தயார் செய்தோம். மிகவும் உறுதியான தயாரிப்புதான். ஆனால் ஃபைபர் கிளாஸ் என்பது மண் என்று சொல்லிவிட இயலாது. அது கண்ணாடித்தூள் மற்றும் resin கொண்டு தயாரிக்கப்படுவது. 



3D பிரிண்ட்டிங்கில் ஒரு வீட்டையே 2 நாளில் IIT சென்னை கட்டி விட்டது. அது பற்றி பாமரர்க்கு விளங்கும் படியாக சொல்ல முடியுமா?

# 3D பிரிண்டிங் பற்றி பாமரனுக்கு விளக்க வேண்டுமா என்ன ? இதோ பார், இந்த மாதிரி வீடு * விலையில் கிடைக்கிறது என்று சொல்வதையே பாமரன் வரவேற்பான்.  (மேலும் இது பற்றி எனக்கும் என்னைப் போல பலருக்கும் அதிகம் தெரியாது. அப்புறமல்லவா விளக்குவது !!)

& முதலில் தேவையான முப்பரிமாண வடிவத்தை கணினியில் தயார் செய்து கொள்கிறார்கள். அதை concrete கலவை பரப்பும் ஒரு nozzle க்கு யந்திரம் மூலம் அனுப்புகிறார்கள். கொத்தனார்கள் செங்கல், சிமெண்ட் கலவையால் கட்டும் சுவரை 3 D யந்திரம் வெறும் concrete கலவையை layers மூலம் குறைந்த நேரத்தில் கட்டிவிடுகின்றது. ஆனால், ஜன்னல்கள் அமைப்பது, வாசல் படி, கதவுகள், pillars, roof எல்லாம் யந்திரம் செய்யாது. மனிதர்கள் மட்டுமே தற்போது செய்ய இயலும். அதற்கும் robot கண்டுபிடிக்கப்படும். 

3 D மூலம் கட்டப்பட்ட சுவர் அமைப்பு : 

இப்போது அத்தியாவசியம் ஆனால் சில வருடங்களில் தூக்கி எறியப்படும் என்று நீங்கள் கருதுவது யாது? உதாரணமாக நீராவி என்ஜின்கள்.

# பெட்ரோல் டீசல் வாகனங்கள்.

நெல்லைத்தமிழன் : 

டாய்லெட்டுக்கு தமிழில் ஒப்பனை அறை என்று பெயரிட்டிருப்பதன் காரணம் என்ன? பெண்கள் எங்க கண்ணாடியைப் பார்த்தாலும் மேக்கப் போட ஆரம்பிப்பதாலா?

# கழிவறை என்று சொல்வது கெட்ட வார்த்தை ஆனது எப்போதிலிருந்து என்று தெரியவில்லை. டாய்லெட், ரெஸ்ட் ரூம் என்பது போல இதுவும் ஒரு இடக்கரடக்கல் தான். இதில் ஏன் பெண்களை வம்புக்கு இழுக்கிறீர்கள் ? டாய்லெட் சாமான்கள் என்றால் சொந்த அலங்கார பொருட்கள் என்று பொருள்படும். அலங்காரம் ஒப்பனை ஆகிவிட்டது.  கடுமையாக இல்லாமல் காதுக்கு இதமாக இருப்பது தவறில்லை அல்லவா ?

பெங்களூரில் காணுமளவு அழகிய பெண்களே சென்னையில் காண முடிவதில்லையே. ஒரே வறட்சியாகத் தோன்றுவதன் காரணம் என்ன?

# இதற்கெல்லாம் ஒரு காரணம் சொல்ல முடியுமா என்ன ? நம்ம ஊர் பெண்கள் அதிகம் வெளியில் வந்து மற்றவர் கண்ணில் படுவது இல்லை என்று வைத்துக் கொள்ளலாமே. அழகு என்பது பார்ப்பவரை பொருத்தது.  அழகான பெண்கள் என்று வந்து விட்டால், எல்லா இடத்திலும் இருப்பார்கள்.

ஒருகால் நாகரிகம் கருதி நீங்கள் உற்றுப் பார்ப்பதில்லையோ என்னவோ !

& நான் என்ன நினைக்கிறேன் என்றால், சென்னையில் நீங்கள் வெளியே சுற்றும்போது மனைவியுடன் சேர்ந்து சுற்றுகிறீர்கள். பெங்களூரில் தனி ஆளாக நிறைய சுற்றுகிறீர்கள்! 

ஆமாம், ஒரு கேள்வி - தமன்னா இருப்பது சென்னையிலா அல்லது பெங்களூரிலா? 

பெங்களூரில் குறைந்தபட்சம் ஏழு மாதங்கள் நல்லா குளிரா ஜிலு ஜிலுன்னு இருப்பதைப்போல சென்னையில் ஒரு வருடத்தில் எவ்வளவு நிமிடங்கள் குளிர் காலம்?

# டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சென்னையில்  குளிர் காலம் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

& எவ்வளவு நிமிடங்கள்! ஹா ஹா ஹா !! எனக்குத் தெரிந்து சென்னையில் ஒரு வருடத்தில் நான் ஸ்வெட்டர் போட்டுக்கொண்ட நாட்கள் மிகவும் குறைவு. முப்பது நாட்கள் இருந்திருந்தால் அதிகம். பெங்களூரில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஸ்வெட்டர் போடும் அவசியம் இருக்கும். 

ஒரு ஹோட்டலுக்கு அல்லது உணவகத்துக்கு ரேட்டிங் ஸ்டார் எப்படி கொடுக்கறாங்க? செக் இன் செக் அவுட்டுக்கு அதிக நேரம் எடுக்க எடுக்க ஸ்டார் ரேட்டிங் கூடுமா? அதுபோல ஆர்டர் செய்த உணவை கொண்டுவர  சர்வர் அதிக நேரம் எடுப்பதைப் பொறுத்து உணவகத்தின் மதிப்பு கூடுமா? சமீபத்தைய The Park Chennai மற்றும் Hotel Palm grove அனுபவம் அப்படி எண்ண வைத்தது. 

# வாடிக்கையாளர்கள் செய்யும் மதிப்பீடு அடிப்படையில் இப்படி ஒரு ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. இதில் பல காரணங்களால் சரியான உள்ளீடுகள் வருவதில்லை. இங்கே நல்ல ஹோட்டல் எது என்று கேட்டால் பல சமயம் சற்று கட்டமைப்பு நன்றாக இருக்கும் ஹோட்டல்களை குறிப்பிட்டுச் சொல்வார்கள். அங்கு பெரும்பாலும் உணவு சுத்தமாக இருக்கலாம் ஆனால் சுவையாக இருக்காது.

அதேபோல், இடுபொருட்கள் சுத்தமானதானாலும், உரம், ரசாயன தெளிப்பு இவற்றால் விளைச்சல் சுவை குன்றியிருப்பதும் காரணமாகலாம் . ஓட்டல் உணவு நன்றாக இருந்து நான் சுவைத்து சாப்பிட்டது 1960 என்று சொல்லலாம்.

= = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


யானைகளைப் பார்ப்பது நம் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி தரும். இல்லையா?  நாகர்கோயில் அருகே திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது நாங்கள் யானையைக் குளிப்பாட்டுவதைப் பார்த்தோம். பாகனுக்கும் யானைக்கும் உள்ள உறவே தனிதான்.


அவ்வளவு பெரிய யானைகள்... பாகனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. கொஞ்சம் எகிறினால் பாகன் கதி?


சமீபத்தில் ஒரு செய்தி பார்த்தேன். ஏதோ கோபத்தினால் பாகனைச் சட்னியாக்கிக் கொன்ற யானை, அவனுடைய மகன்/மகள் வந்தபோது மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்பதுபோல நடந்துகொண்டதாம்.  மிருகங்களும் மனிதர்களைப் போலத்தானே..இல்லையா! 

= = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 14: பெண் பார்க்கும் படலம்! 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 15 : ஆனந்தின் சம்மதம். 

வீணா ஆனந்துடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஜயராமன் விமலா இருவரும் மற்றவர்களுடன் (நாநா, பாபா, ஆனந்தின் பெற்றோர் ) பேசிக்கொண்டிருந்தனர். 

ஜயராமன் நாநாவிடம் 'உங்க பிசினஸ் என்ன என்று சொன்னீர்கள்?' என்று கேட்டார். 

நாநா " பனானா enterprises " என்றான். 

" அடேடே ! மைலாப்பூர் கம்பெனி ஆயிற்றே ! சென்னையிலேயே அதிகம் இன்கம்டாக்ஸ் கட்டுகின்ற கம்பெனிகளில் ஒன்று ஆயிற்றே! உங்கள் ஆடிட்டர் வரதராஜன் & கோ தானே!  " 

" ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும்? " என்று கேட்டான் நாநா. 

" நான் இன்கம்டாக்ஸ் ஆபீசில்தான் வேலை பார்க்கிறேன்.  பனானா எண்டர்ப்ரைஸஸ் பற்றி எங்கள் அலுவலகத்தில் அடிக்கடி கேள்விப்பட்டுள்ளேன். யு own that business? " என்றார் ஜயராமன். 

" ஆமாம். " 

" பார்ப்பதற்கு இவ்வளவு சாதாரண ஆளாக இருக்கீங்க!" 

" இப்படி இருப்பதுதான் எனக்குப் பிடித்துள்ளது!" 

பாபா வியப்புடன் " டேய் நாநா - அப்போ மெய்யாலுமே நீ பெரிய ஆளா ! நானும் உன்னை சாதாரண ஆளாக நெனச்சுக்கிட்டு இருக்கேன்!" என்றான். 

" என்னோடு பிசினஸ் பார்ட்னர் ஆக நீ வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதனால நம்ம பனானா எண்டர்ப்ரைஸஸ் பற்றி முழு விவரமும் உனக்கு அப்புறம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஜயராமன் சார் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் இன்றைக்கே கொஞ்சம் சொல்லவேண்டியதாகிவிட்டது. பரவாயில்லை" என்றான் நாநா. 

" அட! எதிர் வீட்டு பாபா - பனானா எண்டர்ப்ரைஸஸ் பிசினஸ் பார்ட்னரா! சூப்பர். சி ஏ முடித்தவுடனேயே வேலை - அதுவும் சென்னையின் அதிக வருமான வரி கட்டும் ஒரு கம்பெனியில்! ரொம்ப சந்தோஷம்" என்றார் ஜயராமன். 

முதன் முறையாக விமலா, பாபாவை ஆர்வமாகப் பார்த்தாள். 

*****       *******       ********

ஆனந்திடம் பேசி முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்த வீணா, மொபைல் போனை ஆனந்தின் அப்பாவிடம் கொடுத்தாள். 

" என்னம்மா வீணா - ரெண்டு பேரும் பேசிக் கொண்டதில் ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்ததா? கல்யாணம் பற்றி நாங்க தொடர்ந்து பேசலாமா ?" என்று கேட்டார் ஆனந்தின் அப்பா. 

" எனக்கு சம்மதம் மாமா. அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரே உங்களுக்கு சற்று நேரத்தில் ஃபோன் பண்ணி சொல்வார் " என்றாள் வீணா. 

ஐந்து நிமிடங்கள் கழித்து ஆனந்த் அவருக்கு ஃபோன் செய்தான். 

போனை எடுத்துப் பேசிய ஆனந்தின் அப்பா " சொல்லு ஆனந்த். ஓ கே. சரி, சரி .. .. .. அப்படியே செய்துவிடலாம் " என்றார். 

பிறகு ஜயராமனிடம் " ஆனந்த் நிச்சயதார்த்தத்தை சீக்கிரம் முடித்து, அடுத்த மாதம் கல்யாண நாள் பிக்ஸ் செய்யலாம் என்று சொன்னான். அவனுக்கு இரண்டு வாரம்தான் லீவு கிடைக்குமாம். வரும் வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதார்த்தம் வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் செய்துவிடுவோம்" என்றார். 

" சரி " என்றார் ஜயராமன். 

(தொடரும்) 

45 கருத்துகள்:

  1. ஹோட்டல்களின் ஸ்டார் ரேட்டிங், அங்கு என்ன என்ன வசதிகள் உள்ளன என்பதைப் பொறுத்தது. உணவகம், ஜிம், ணொலைக்காட்சிப் பெட்டி, நீச்சல் குளம் என்று வசதிகள் கூடக் கூட ஸ்டார் ரேட்டிங் அதிகரிக்கும். ஏழு ஸ்டார் ஹோட்டல் துபாயில் உண்டு.

    ஒரு இரவு தங்கச் செல்லும்போது எதையுமே நாம் கவனிக்கவோ உபயோகிக்கவோ இயலாது.

    நான் இந்தோநேஷியாவில் தங்கிய ரிசார்ட்டில் அறைகளின் (தரைத்தளம், பெரிய வீடு போன்ற மைப்பு) பின்னால் உள்ள கதவைத் திறந்தால் ப்ரைவேட் நீச்சல் குளம் (சிறியது), அங்கிருந்தே நாலைந்தடி அகல நீர் ஓடை வழியே பயணித்து பெரிய நீச்சல் குளத்தை அடையலாம். ஒவ்வொரு அறையலிருந்மும் இந்த ஓடையை அடையும்படியான அமைப்பு. மூன்று நாட்கள் தங்கியிருந்தும், அதனை உபயோகித்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  2. //பெங்களூரில் தனியாக, சென்னையில் மனைவியுடன்,// ஹாஹா... அப்படி இல்லை.. இருந்தாலும் என் எண்ணம் சரியானதுதான், காரணம் பெங்களூரில் வட நாட்டவரும் அதிகம்.

    பதிலளிநீக்கு
  3. முப்பரிமாண பிரின்டர், வீட்டுக்கு அல்லது தனிப்பட்ட சிறிய மாடல்கள் செய்வதற்கானது, நான் 2012லிலேயே லண்டனில் கண்டிருக்கிறேன் (அவங்க கடையை நாங்கள் கல்ஃபில் நடத்துவதற்கான பயணத்தில்). அப்போது அது என்னை ஈர்க்கவில்லை.

    வெளிநாட்டில் ஆட்கள் குறைவு... இதெல்லாம் வேணும். நம்மூருக்கு இதெல்லாம் வந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் பெருகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் துறையில் வேலைவாய்ப்பு குறைந்தால் வேறு ஒரு துறையில் அதிகரிக்கும்.‌ நன்றாக யோசித்தால் விளங்கும்.‌ முப்பரிமாண நாஸில், அதற்கான இணைப்புகள், அதற்கான ஃபீடர், காங்கிரீட் கலவை தயாரிக்க என்று பல வேலைவாய்ப்பு உருவாகும்.

      நீக்கு
  4. ஆக மொத்தம் பணம் பணத்துடன்தான் சேரும் போலிருக்கு.

    நான் கதையில் முதலில் கவனிப்பது, ஆளின் முகம் அதேதானா இல்லை மாறியிருக்கிறதா என்று

    பதிலளிநீக்கு
  5. சென்னையில் ஸ்வெட்டரா? ஒரு வேளை, நிறைய காசு கொடுத்து வாங்கியிருக்கிறோம், போட்டுக்கொண்டு வெளியில் சென்றால்தான் கெத்து என்று நினைத்திருப்பாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. அலுவலகத்தில் சென்டிரலைஸ்டு ஏ சி. அங்கு குளிராமல் இருக்க ஸ்வெட்டர் ( மழைக்காலங்களில்) அணிந்தது உண்டு.

      நீக்கு
  6. /// முதன் முறையாக விமலா,
    பாபாவை ஆர்வமாகப் பார்த்தாள். ///

    ஆகா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக, படம் பார்த்து கதை ( கருத்துரை) சொல்கிறீர்கள்!

      நீக்கு
  7. புதன் கேள்விகள். 1. நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் நிறைய மாதங்கள் இடைவெளி இருப்பது நல்லதா? அதிகபட்சம் எவ்வளவு இடைவெளி இருக்கலாம்? 2. உடலுழைப்பு இல்லாமல், வாழ்க்கையை அனுபவிப்பதை மாத்திரமே நோக்கமாக்க் கொண்டால் (மூணு நாட்கள் கொத்தனார், வயல் வேலை, கடைகளில் வேலை, சம்பாதித்த பணம் தீரும் வரை டாஸ்மாக்) வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு ஆட்கள் புலம் பெயர்ந்து வருவதைத் தடுக்க இயலாது அல்லவா? 3. வாழ்க்கையில் நண்பர்களைச் சம்பாதிப்பது முக்கியமா இல்லை உறவினர்களோடு நெருக்கத்தை வளர்த்துக்கொள்வதுதான் முக்கியமா? 4. அவரவர்க்கு சிறிய குடும்பம், உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்யாமை போன்றவற்றால் உறவுகளில் நெருக்கமில்லாமல், தான் தன் குடும்பம் என்ற மனோபாவம் அதிகமாகிவிட்டதா? 5. எனக்கு ரொம்ப வருடங்களாகவே இருக்கும் சந்தேகம்.. மக்களுக்கு இப்போது கிடைப்பது மாட்டுப் பால்தானா இல்லை கலப்படப் பாலா? இவ்வளவு மக்களுக்கும் பால் உற்பத்தி செய்யும் அளவு மாடுகள் இருக்கின்றனவா?

    பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் உங்களுக்கு மெயிலில் கேள்வி அனுப்பறேன்னு போன வாரம் சொன்னாரே... அதற்குள் அவருக்கு பதில் தெரிந்துவிட்டதா? கேள்வியை இந்த வாரம் காணோமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேயப்பா..! எவ்வளவு கேள்விகள் டகடக்கென்று அம்பு மழையாக தொகுத்து கேட்டு விட்டீர்கள். பாராட்டுக்கள்.

      அந்த காலத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன், திருமணம் செய்ய அவகாசமாக இரண்டு மாதங்கள் என கால அவகாசம் எடுத்துக் கொள்வது, திருமணத்திற்கு வேண்டிய பணம் புரட்ட, மேலும் அழைக்கப்பட்ட உறவுகள், ஒவ்வொரு ஊரிலிருந்தும் புறப்பட்டு வரவும், அவர்கள் சௌளகரியத்தை ஆலோசித்தும் அவ்வாறு இரண்டு, மூன்று மாதங்கள் இடைவெளிகள் விட்டார்கள் என நான் நினைக்கிறேன்.

      அதற்குள் மாப்பிள்ளை வீட்டாரைப்பற்றி, பெண் வீட்டார்களும், பெண் வீட்டைப்பற்றி மாப்பிள்ளை வீட்டார்களும், அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விடும் என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி விசாரித்ததில் நின்று போன திருமணங்களும் இருந்தது. அத்தனை விசாரித்தும் தலைவிதியை மாற்ற முடியாமல் தவித்தவர்களும் உண்டு. எல்லாம் வாங்கி வந்த வரம் இல்லையா.?

      எல்லாம் பொதுவெளியில் கேள்விகள் கேட்டதினால் வந்த வம்பு என்று நினைக்கிறீர்களா.? ஏதோ என் மனதில் பட்டதை கூறி விட்டேன். தவறெனின் மன்னிக்கவும். நன்றி.

      நீக்கு
    2. க ஹ மேடம்... இப்போ அளவுக்கு அதிகமாக ஈஷிக் கொள்வதால் பெற்றோர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் அல்லவா? ஏதேனும் பிரச்சனையில் திருமணம் தடைபடுமோ என? சில நாட்கள் முன்பு ஒரு லாஜிக் கேட்டேன்.

      புது மருமகள்ட மாமியார் ஏதோ கேள்விகள் கேட்கவும், மருமகள், நீங்களும் இந்த வீட்டு மருமகள்தான்.. என்ன ஒண்ணு நீங்க நாப்பது வருஷ பழசு.. எனக்கு சில நாட்கள்தாம். இரண்டு பேருக்கும் இது பிறந்த வீடு இல்லை. அதை மனசுல வச்சிக்கிட்டு எங்கிட்டப் பேசுங்க என்று..... இது எப்படி இருக்கு?

      நீக்கு
    3. :)))) புது மருமகளின் பேச்சு நியாயமானதுதான்.!!அப்போ வழிவழியாக பெண்கள் யாருக்குமே பிறந்த வீட்டின் சொகுசு வாழ்வு நிலையாகாதது போலவே..! நல்ல லாஜிக்தான்.

      நீக்கு
    4. பொது வெளியில் கேள்வி கேட்டால் இப்படி ஆகும் என்பதை நிரூபிக்கத்தான் பா வெ மேடம் சென்ற வாரம் அந்தக் கருத்துரை எழுதினார். உண்மையில் அவர் கேள்வி எதுவும் கேட்க நினைக்கவில்லை என்று நினைக்கிறேன். ( நெ த இந்த பதிவில் கேட்டுள்ள கேள்விகள், அவர் ஏற்கெனவே கேட்டுள்ள கேள்விகளின் வரிசையில் சேர்க்கப்பட்டது. )

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் கேள்விகளும், அதற்குரிய பதில்களும், அருமை. மேலும் சென்ற வார ஆரம்பத்தில் கேட்கப்பட்ட அவரது கேள்விகள் "என்றும் நிலையில்லாத மனித வாழ்வை உணர்ந்தும், நாம் இன்றும் மாயை போர்வை போர்த்திய ஆசைகளுடன் வாழ்ந்து வருகிறோம்" என்ற நிதர்சனத்தை விளக்குகிறது.

    சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்கள் அனுப்பிய யானை படங்கள் நன்றாக உள்ளது. மனிதர்களே சில சமயம் விலங்காக மாறும் போது, யானை மனிதர்கள் மாதிரி மாறுவது இயல்புதானே..! அவர் பகிர்ந்த யானை பற்றிய செய்தியை படித்தப்போது மனதுக்குள் வருத்தம் வந்தது. பாசத்துடன் வளர்க்கும் விலங்குகளே (சர்ப்பம் உட்பட) சமயங்களில் எமனின் பாசக்கயிறாக மாறி விடுமென சொல்வார்கள். கஸ்டந்தான்.! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. பாசத்துடன் பாம்பை வளர்க்கறாங்களா? பாம்புக்குப் பால் வார்த்தாலும் விஷம் கக்கும் என்ற பழமொழி இதனால்தான் வந்ததோ?

      எனக்கும் யாரேனும் கடுப்படித்துக்கொண்டிருந்தால், பொறுமையா என் மனதில் ஸ்டோர் செய்துகொண்டிருப்பேண். எப்போ அந்த ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிறதோ, அன்றைக்கு லெஃப்ட் ரைட் வாங்கிவிடுவேன். என்னிடம் மறந்துவிடும் பழக்கம் இல்லவே இல்லை.

      யானைக்கும் ஞாபக சக்தி உண்டு இல்லையா? அதுவும் பொறுத்துப் பொறுத்த்ப் பார்த்து ஒரு நாள் பாகனைச் சட்னி ஆக்கிவிடுகிறதோ?

      நிறைய பேர்கள் (குறிப்பாக திருவானைக்காவோ இல்லை வேறு கோயில் யானையோ.. அரங்கன் சித்திரை வீதியில் காலையில் உலா வரும். அல்லது ஒரு கோபுரம் அருகில் இருக்கும்) யானையை வீதியில் நடத்திக் கூட்டிவந்து (அதில் ஏறி உட்கார்ந்திருப்பார்கள்), வழியில் வருபவர்களிடம் பணம் வாங்கி ஆசி கூறச் செய்வார்கள். எவ்வளவு அநியாயம் என்று எனக்குத் தோன்றும்.

      நீக்கு
    3. அவை எல்லாம் கோயில் யானைகள் இல்லை. ஊர்வலங்கள், திருமணங்கள் போன்றவற்றிற்கு வாடகைக்கு விடும் யானைகள், அம்மாமண்டபத்தில் எப்போப்போனாலும் ஒரு யானை நின்று கொண்டிருக்கும். பாவமா இருக்கும்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    தங்களின் கதை பகிர்வும் நன்றாக உள்ளது.கூடிய விரைவில் நடைபெற இருக்கும் அக்கா, தங்கை இருவரின் திருமணத்திற்கும் வாழ்த்துகள்

    ./ஆக மொத்தம் பணம் பணத்துடன்தான் சேரும் போலிருக்கு./

    ஆமாம். அதுவும் அளவுகோல் வைத்துப் பார்த்து சேர்ந்தால்தான் அந்த பணத்திற்கும் பெருமை.

    இன்றைய அனைத்துப் பகிர்வுக்கும் நன்றி. (இன்று நானும் அதிகம் பேசி விட்டேன் என நினைக்கிறேன்.)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. ஜேகேசி சாரின் கேள்விக்கு பதில் கொடுத்தமைக்கு நன்றி. புதிய விஷயம் தெரிந்து கொள்ள முடிந்தது.

    நெல்லை சொல்லுகிறாப்போல் நானும் நினைச்சுப்பேன். ஏன் கழிவறைனு போடக் கூடாதா என்று. அது என்னமோ நல்ல தமிழ்ச் சொற்கள் எல்லாம் இப்போது கெட்ட வார்த்தைகளாக மாறி விட்டன. உதாரணம், காதல், மயிர், (சம்பந்தர், திருவள்ளுவர் ஆகியோர் பயன்படுத்திய சொல் தான் மயிர் என்பது) நாற்றம், கழிவறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதிலும் காதல் என்பது படும் பாட்டைப் பார்த்தால் ஞானசம்பந்தர் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" இருந்ததே தப்புனு தோண ஆரம்பிச்சுடும். :(

    சென்னைப் பெண்கள் அழகில்லை என்கிறீர்களா? அல்லது, தமிழகப் பெண்களா? அழகு என்பது எதை வைத்து அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறது?

    கௌதமன் சார் சொல்லி இருப்பதும் சரியாக இருக்கலாம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்னைப் பெண்கள் அழகில்லை என்கிறீர்களா? // நான் எங்கே சொல்கிறேன். எல்லாம் சீனியர் நீங்கள் சொல்லிச் சொல்லி என் மனதுக்கும் அப்படித் தோன்றிவிட்டது. பெங்களூர்னு எழுதாம பெண்கள் ஊர் என்று எழுதியது/எழுதுவது தாங்கள்தாமே கீசா மேடம்.

      நீக்கு
    2. ஹாஹாஹா, "பெண்"களூர் காஸ்மாபாலிடன் நகரம் இல்லையோ? அதான் அதை "பெண்"களூர்னே சொல்லிண்டு இருக்கேன். :)))))

      நீக்கு
    3. :))) நானும் பதில் எழுதும்போது கீ சா அவர்களின் பெண்களூர் பற்றி நினைத்தேன்

      நீக்கு
  12. சென்னையில் குளிரா? இஃகி,இஃகி,இஃகி, சென்னையில் குளிர்னு எல்லாம் எதுவும் கிடையாது. சும்மா அப்படீக் கொஞ்சம் காத்து லேசாக இதமாக அடிக்கும். அம்புடுதேன். அதுவும் மார்கழி மாசம்/தை மாசங்களில் மட்டுமே. ஆனால் பாருங்க சென்னை மக்கள் எல்லாம் அதுக்கே ஸ்வெட்டர், மஃப்ளர், காதில் வைச்சுக்கப் பெரிய உருண்டையான உல்லன் பட்டன்னு அமர்க்களப்படுத்துவாங்க. ஏசி கட்டாயமா வேண்டும். ஆனால் திருச்சியில் டிசம்பர், ஜனவர், பிப்ரவரி மாதங்களில் ஏசி தேவை இல்லை. ஃபான் போதும். சில சமயம் டிசம்பரில் ஃபான் கூடத் தேவைப்படாது. ஆனால் அதுக்காக ஸ்வெட்டர், மஃப்ளர் எல்லாம் வேணும்னு இல்லை. ஆனால் நம்ம மக்கள் அதெல்லாம் போட்டுப்பாங்க அங்கேயும். நமக்குத் தான் எதுவும் உறைக்காதே. அதனால் ஷால் கூட எடுத்துக்காமல் தான் போவோம்.

    ஓட்டல்களுக்கு எப்படி ஸ்டார் கொடுக்கிறாங்களோ தெரியலை. ஆனால் எல்லா ஸ்டார் ஓட்டல்களிலும் உணவு நன்றாக இருப்பதில்லை. சென்னையில் ஒரு சிலவற்றில் மட்டும் ஓகே. பாம்க்ரோவே ஓட்டலுக்கு அதன் செஃப் திரு நாராயணசாமி அவர்கள் (இப்போ இருக்காரோ இல்லையோ) வேலை செய்கையில் போனது. பின்னர் அவர் சவேராவுக்கு மாறி விட்டார். சவேரா போனதில்லை. ஆனால் பல ஹிந்திப்பட நடிக, நடிகையர்கள் அங்கே தங்குவார்கள் என அவர் சொல்லிக் கேட்டிருக்கோம். அவருடைய காடரிங் சம்பந்தப்பட்ட புத்தகம் தான் எனக்கு வட இந்திய சமையல்களில் ஈர்ப்பை உண்டாக்கியது. நான் டைஃபாயிட் ஜூரத்தால் அண்ணா வீட்டில் இருந்தப்போப் பொழுது போக அவர் படித்த புத்தகங்களை வாங்கிப் படிச்சுக் குறிப்புக்கள் எடுத்துப்பேன். இது நடந்தது 73 கடைசியில், 74 ஆரம்பத்தில்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல ஓட்டல்கள் எனில் மதுரையில் அன்றும், இன்றும் மாடர்ன் ரெஸ்டாரன்ட், (இப்போக் கூட சாப்பாடு அருமை என உறவினர்கள் சொன்னார்கள்.) கோபு ஐயங்கார் டிஃபனுக்கு மட்டும். சென்னையில் நிறையப் போய்ச் சாப்பிட்டிருக்கோம். மதுரையில் எல்லாம் ஓட்டலுக்குப் போக முடியாது. ஜனவரி 1 ஆம் தேதி அப்பா கூட்டிப் போவார். அப்போப் போய்ச் சாப்பிட்டது தான். டெல்லிவாலாவெல்லாம் அந்தச் சமயங்களில் போனது.

    ஆனால் சென்னையில் நம்மவரோடு நிறைய ஓட்டல்கள் தேடித் தேடிப் போவோம். பாரிஸ் கார்னரில் அர்மினியன் தெருவில் பாலிமார் ஓட்டல், வெளியே என்.எஸ்.சி ரோடில் அம்பீஸ் கஃபே, ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், சிடி கஃபே, சௌகார் தெருவில் ஹரி ஓம் பவன், இன்னும் சில ராஜஸ்தானி, குஜராத்தி ஓட்டல்கள், ஹரி ஓம் பவன் மில்க் ஹல்வாவுக்குப் பெயர் போனது. அங்கே சூடாக சமோசாவும் கிடைக்கும். பெரம்பூர் பட்ஸ் ஓட்டல், மவுன்ட்ரோடு கீதா கஃபே, தி.நகரிலும் தி.நகர் ரயில்வேஸ்டேஷனுக்கு அருகே இருந்த பட்ஸ், சித்தி வீடு இருந்த தாமோதர ரெட்டி தெருவுக்கு நேர் எதிரே இருந்த பட்ஸ், தாம்பரம் பேருந்து நிலைய பட்ஸ், சென்னை சென்ட்ரல் அருகே இருக்கும் பிக்னிக் ஓட்டல், இப்போது மாதிரி அப்போ இருக்காது. பழைய அந்தக் காலத்துக் கட்டிடம். மாடியில் தோட்டம். திறந்தவெளியில் ஆங்காங்கே குடைகளுக்குக் கீழே நாற்காலி, டேபிள் போட்டு உட்காரும்படி அப்போவே வசதிகள் உண்டு. அங்கே இரண்டு தரம் கல்யாண நாளுக்குப் போயிருக்கோம். இதைத் தவிர்த்தும் இருக்கவே இருக்கு, வசந்த் பவன், ஆர்ய பவன், கீதாஞ்சலி ஓட்டல் தி.நகரில், பர்கிட் ரோடில் இருந்த இந்தியன் காஃபி ஹவுஸ்,, தோசை நன்றாக இருக்கும். காஃபியும் சுவையான ஃபில்டர் காஃபி, டிகாக்ஷன் தனியா, பால் தனியா, சர்க்கரை தனியா, பீங்கான் பாட்டில் (pot) வரும். கூடவே பீங்கான் கப்புகளும் இருக்கும். நாமே கலந்துக்கணும். சில ஓட்டல்களில் தேநீரும் அப்படித் தான் கொடுப்பார்கள். கெட்டிலில் சூடான தண்ணீரில் தேயிலைத் தூள் கொதித்தபடி இருக்கும். பால் தனியாக, சர்க்கரை தனியாகக் கொடுப்பார்கள். பெரும்பாலும் ரயிலில் தான் இப்படிக் கொடுப்பார்கள். ஓட்டல்களில் மிகச் சிலவற்றில் அப்போதெல்லாம் இப்படிக் கொடுத்து வந்தார்கள். மங்களூர் போயிருந்தப்போ 2007/2008 இல் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தப்போ ரூம் செர்வீஸில் இந்த மாதிரிக் கொடுத்தாங்க. பொதுவாகப் பெரிய ஓட்டல்களில் இப்போதெல்லாம் வைக்கிற மாதிரி எலக்ட்ரிக் கெட்டில், பால் பாக்கெட் சாஷேக்கள், காபி பவுடர், தேயிலைத் தூள்னு வைச்சாலும் வெளியே வென்டிங் மிஷினும் இருக்கும். இப்போல்லாம் அப்படி இருப்பதாகத் தெரியலை. நிறைய ஊர் சுத்தினதாலே நிறைய ஓட்டல் அனுபவங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களே... இந்த கீசா மேடம் லிஸ்டைப் பார்த்துட்டு, பைக்கை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு ஹோட்டலாகப் போய்ப் பார்க்காதீங்க. அவர் சொல்வது அந்தக் காலத்துல. இப்போ அந்த ஹோட்டல்கள்லாம் இருக்கா, அப்போ சமையலைப் பார்த்துக்கிட்ட செஃப்கள்லாம் இப்போ உயிரோடு இருக்காங்களா என்பதையெல்லாம் நல்லா தெரிஞ்சுக்கிட்டு பைக்கை எடுங்க.

      இவர் சொல்லியிருக்கும் கீதாஞ்சலி நான் 1990ல் சாப்பிட்டிருக்கேன். அங்கு வட இந்திய தொட்டுகை, நான்லாம் சூப்பரா இருக்கும். அதை நம்பி இப்போ போக முடியாது. பர்கிட் ரோடு இந்தியன் காபி ஹவுஸ்-நான் கோல்ட் காஃபிக்காக 90களில் போயிருக்கிறேன், அங்கு முட்டையைப் பார்த்தும். ரங்கநாதன் தெரு பட்ஸ்லாம் 90களில் நல்லா இருந்தது. இப்போ அங்கெல்லாம் அதற்கான சுவடே கிடையாது.

      நீக்கு
    2. சிடி கஃபே, இருக்கு. அம்பீஸ் கஃபே (இப்போ இல்லை) ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், அர்மினியன் தெரு பாலிமர் ஓட்டல் எல்லாம் இப்போவும் இருக்குனு சென்னை வாழ் நண்பர்கள் சொல்லி இருக்காங்க. அதுவும் உறவுகளிலே சொல்லிட்டாங்க. பட்ஸ் ஓட்டல்களே இப்போ இல்லை, அதே போல் முன்னர் இருந்த உடுப்பி ஓட்டல்களும் இப்போக் கிடையாது. கீதாஞ்சலி ஓட்டல் இன்னமும் இருக்கு. சுமாரா இருக்கும். சரவணபவன் எல்லாம் 90 களில் தான் பிரபலம் ஆகி இருக்கின்றன. நான் அண்ணா நகர் ப்ளூஸ்டார் பேருந்து நிறுத்தத்தில் இருப்பதற்கும் மயிலையில் இருப்பதற்கும் தான் போயிருக்கேன். ஆகவே அது பத்தி எல்லாம் சொல்ல முடியாது. மற்றபடி பாம் க்ரோவ், சவேரா எல்லாம் இருக்கு. செஃப் நாராயணசாமி எங்க நண்பர் இப்போ இருக்காரோ இல்லையோனு நானே சொல்லி இருக்கேனே. மத்தபடி இவை எல்லாம் நக்ஷத்திர ஓட்டல்கள் என்பதால் சாப்பிடும்படி இருக்கலாம். சௌகார்ப்பேட்டையின் கடைகள் எல்லாம் இருக்கின்றன என்பதோட இப்போல்லாம் அங்கே கூட்டம் அள்ளுகிறது என்கின்றனர். அம்பத்தூரில் எங்க காலனியின் இருக்கும் குஜராத்திகள் அனைவருக்குமே சௌகார்ப்பேட்டையில் தான் சொந்த பிசினஸ். ஆகவே அவங்கல்லாம் சொல்லுவாங்க. கீதா கஃபே மவுன்ட் ரோடில் இல்லை. பாண்டி பஜாரில் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுனு இருந்தது. இப்போவும் இருப்பதாகக் கேள்வி.

      நீக்கு
    3. இந்தியன் காஃபி ஹவுஸில் முட்டையா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தெரியாது. அங்கெல்லாம் போயே பல வருஷங்கள் ஆயிடுச்சு.

      நீக்கு
    4. ராமகிருஷ்ணாலஞ்ச் ஹோம்.. 2019ல் சாப்பிட்டேன். நல்லா இருந்தது. பாண்டிபஜார் கீதா கபே சாம்பார், தென்னிந்திய உணவு இப்போவும் சாப்பிடுவேன். நல்லா இருக்கைம். ஆனால் ஜி என் செட்டி, கீதம், சங்கீதா இரண்டுமே சூப்பர்

      நீக்கு
    5. 1973 காலத்தில் நான் அசோக் லேலண்ட் சிடி ஆபிஸில் வேலை பார்த்தேன். அந்த ஏரியாவில் இருந்த பல சிறிய ஹோட்டல்களில் மதியம் சாப்பிட்டது உண்டு.‌மற்ற இடங்களில் அந்தக் காலத்தில் அளவு சாப்பாடு 60 பைசா.‌பாலிமர் ஹோட்டலில் அப்போது சாப்பாடு ஒரு ரூபாய்.. காஸ்ட்லி என்பதால் அங்கே சாப்பிட்டதில்லை.‌அப்போ என் மாத சம்பளம் கையில் வாங்கியது ₹150 மட்டுமே. அதில்தான் எல்லா செலவுகளும்!:

      நீக்கு
  14. யானைப் படங்கள் என்பதாலோ என்னமோ திறக்க ரொம்ப நேரம் எடுக்கிறது. யானை குளிப்பதை நானும் பார்த்திருக்கேன். ஆனால் நாகர்கோயில் போனப்போப் பார்க்கலை.

    இரண்டு பேருக்கும் இது பிறந்த வீடு இல்லை. அதை மனசுல வச்சிக்கிட்டு எங்கிட்டப் பேசுங்க என்று..... இது எப்படி இருக்கு?

    100% True.

    நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே வீட்டிலேயும் சென்ட்ரலைஸ்ட் ஏசி என்பதால் இப்படித் தான் குளிராக இருக்கு. நல்லவேளையா இப்போ வரச்சே ஷால்களில் 2,3 எடுத்து வந்திருக்கேன். ஸ்வெட்டர் கூட எடுத்துட்டு வந்திருக்கலாம் போல. வெளியே அனலாக இருக்குனு மருமகள், பிள்ளை சொல்லுவாங்க. நான் ரூமை விட்டு எங்கே போறேன்? :)

      சரோஜாதேவிக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாமல் போயிண்டு இருக்கே? போகுது, இந்த வீணா என்ன சொல்லப்போகிறாளோனு கவலையா இருந்தது. இரண்டு பேரும் சம்மதம் சொல்லி நிச்சயமும் ஆகப் போகுது. காடரிங் ஏற்பாடெல்லாம் யார் பாவனாவா? நல்ல ஆளாப் பார்த்துப் போடச் சொல்லுங்க. கூட்டத்தைச் சமாளிக்கத் தெரியணும்.

      கல்யாணத்திலே ஏதோ பெரிய பிரச்னை வருமோ? உள்ளூரக் கொஞ்சம் கவலையாத் தான் இருக்கு. :))))

      ஆக மொத்தம் நாநா நல்ல பிசினஸில் இருக்கார். அதிலே பாபாவுக்கும் பங்கு. ஆகவே விமலாவும் இப்போ பாபா மேல் ஆர்வம் காட்டுகிறாள். ரொம்பவே materialistic ஆன பொண்ணு போல.

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  15. கேள்வி பதில்கள் நன்றாக இருக்கின்றன.

    சென்னை வெப்பத்தில் குளு ....குளுவும் வத்தல் ஆகும். பெங்களூரில் வத்தலுமை குளு குளு ஆகும்.:))

    படமும் பதமும் யானைகள் படம் அருமை.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!