ஆன்மீகச் சுற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகச் சுற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.5.14

தஞ்சாவூர்



கல்யாணமகாதேவி வேலைகள் முடிந்தபின் அங்கிருந்து நேராக தஞ்சாவூர் என்றபோதே ஒரு மகிழ்ச்சி பரவியது மனதில்! "பள்ளி சென்ற கால முல்லைகளே" என்று பாடல் வரிகளை முணுமுணுத்தது உதடுகள்!

                                                 


எங்கள் குழுவில் ஒவ்வொரு ஊரிலும் வழி சொல்ல ஒருவர் இருந்தாலும் தஞ்சை பற்றி யாரும் அறியவில்லை என்பதால் வழி தேட அலைபேசியில் பேசத் தொடங்கியவர்களை இடைமறித்தேன். "இனி வழிக்கு நான் பொறுப்பு" என்றேன்! இத்தனைக்கும் நாற்பது வருடங்களுக்கு முன் தஞ்சையை விட்டுச் சென்றது.

பெரிய மாற்றமில்லை. பைபாஸ் ரோடிலிருந்து திரும்பிய இடம் நாஞ்சிக்கோட்டை ரோட் என்று அறிந்ததும் முதல் மகிழ்ச்சி. நான் படித்த பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். 


பள்ளியின் மேரிஸ் கார்னர் காம்பவுண்ட் கண்ணில் பட்டபோது சந்தோஷம் பொங்கியது! அந்த அருள் தியேட்டர் இன்னும் அங்கே! "நினைத்தாலே இனிக்கும்" பல லாரல் ஹார்டி நினைவுகளை உண்டாக்கியது அந்தத் தெரு.
இந்த சர்ச்சுக்குள் எத்தனை முறை சென்று வந்திருப்பேன். இந்த கேட்டுக்கு அருகில் எத்தனை குச்சி ஐஸ், பால் ஐஸ் சாப்பிட்டிருப்பேன்!
                    
உள்ளே சென்று திரும்பினேன்.

                


அங்கு நின்றிருந்தவரிடம் 'நீங்கள் இங்கு வேலை பார்க்கிறீர்களா?' என்று கேட்டபோது, மறுத்து, தான் ப்ளஸ் டூ பேப்பர் வேல்யுவேஷனுக்காக வந்ததாகச் சொன்னார்.


பள்ளிக்குள் சென்று புகைப்படம் எடுத்ததும், ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றதால் அங்கிருந்த வெளி அலுவலர் ஆயுதம் தாங்கிய காவலருடன் வந்து மிரட்டியதும், என் உணர்ச்சிவசப்பட்ட நிலை கண்டு, என் தோளைத் தட்டிக் கொடுத்து விலகியதும்...

என்னுடைய ஆசிரியர்கள் என்று நான் நினைவு கூர்ந்த தொண்ணூறு சதவிகித ஆசிரியர்கள் காலமாகி விட்டதாக அலுவலக உதவியாளர் சொன்னபோது கஷ்டமாக இருந்தது. பின்னே இத்தனை வருடங்கள் இருப்பார்களா என்ன என்ற எண்ணமும் எழுந்தது.
                         

வசித்த ஓல்ட் ஹவுசிங் யூனிட், மருத்துவக்கல்லூரி சாலை, வ வு சி நகர் என்று தாண்டிச் செல்லத்தான் நேரம் இருந்தது. 
               

அந்தக் கலை அரங்கத்தில்தான் எத்தனை நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன்... என் நண்பன் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டி முதல், எங்கள் பள்ளி ஆசிரியர் பாடிய இசை நிகழ்ச்சி வரை... அந்த உடைந்த பின் ஜன்னல் கூட சரி செய்யப்படவில்லை! இதன் நேர்பின்னே என் வீடு!

இத்தனை வருடங்கள் கழித்தும் நிறம் மாறாத, கூரை மாறாத பாலர்பள்ளி, அருகிலேயே லைப்ரேரி... இந்த லைப்ரேரி எத்தனை நினைவுகளை மீட்டெடுக்கிறது எனக்குள்! நானே லைப்ரேரியைப் பார்த்துக் கொண்ட நாட்கள், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய நாட்கள்...இன்னும் இன்னும்...

              


மருத்துவக்கல்லூரி சாலையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் மறுநாள் அதிகாலை சென்றால், அங்கு ஏற்கெனவே காத்திருந்த பக்தர்கள், கோவில் இன்னும் திறக்கவில்லை, இன்னும் அரைமணி நேரம் ஆகலாம் என்றனர். நான் இருந்தபோது சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கும். இப்போது நல்ல முறையில் இருந்தது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும், அருகிலேயே இருக்கும் மசூதிக்கும் அடிக்கடி வருவோம். இரண்டுக்கும் இடையேதான் எங்கள் ரேஷன் கடை இருந்தது. அந்தக் கடையை ஒட்டி சந்தில் நடந்தால் ராஜேந்திரா (டூரிங்) டாக்கிஸ் வரும்!
           



கொஞ்சம் அஜாக்கிரதையாக சைக்கிள் ஓட்டினால் ஓரத்தில் இருக்கும் சரிவில் விழுந்து கீழே சென்றுவிடும் அபாயமாக இருந்த மேம்பாலம் இப்போது நான்கு வழிச்சாலையாக அழகாக இருந்தது. எங்கள் 'வெண்சங்கு' பஸ் ஒருமுறை இந்த மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்திருக்கிறது!

                                        


மேலவீதியில் நண்பரைப் பார்க்க சங்கர மடம் சென்றபோது காமாட்சி அம்மனின் அற்புதத் தரிசனம் கிடைத்தது. 


மேம்பாலம் கிட்டத்தட்ட ராணி பேரடைஸ் தியேட்டர் தாண்டி முடிவைடைகிறது. பெரிய கோவிலைச் சுற்றி வந்தோம். மாலை 6.30 மணிக்கு மேல் ஆகி விட்டதால் நிறைய புகைப்படங்கள் இங்கு எடுக்க முடியவில்லை.

                            



சிவகங்கைப் பூங்கா செல்லும் ஆசையும் நேரமின்மை காரணமாக முடியாமல் போனது. சென்ட்ரல் லைப்ரேரி, திருவள்ளுவர் தியேட்டர் வழியாக (ஓல்ட்) பஸ் ஸ்டேண்ட் சென்று திரும்பி கும்பகோணம் செல்லும் சாலையைப் பிடித்தோம்.




முன்பு சாந்தி ஸ்டோர்ஸ் எதிரே, ஆனந்தபவன் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷன், இப்போது மேரிஸ் கார்னரில் இருந்தது ஆச்சர்யம். அந்தப்பக்கமாகச் சென்று ஈவினிங் பஜார், சாந்தப்பிள்ளை கேட், யாகப்பா தியேட்டர், ஞானம் தியேட்டர் (இப்போது ஹோட்டலாக மாறியிருக்கிறதாம்) ராஜா கலையரங்கம் தியேட்டர், மங்களாம்பிகா ஹோட்டல், மணிக்கூண்டு இவற்றை மனக்கண்களால் பார்த்தபடியே கும்பகோணம் சாலையில் விரைந்தோம்!


"தஞ்சைக்கு மறுபடி வரவேண்டும்"

29.4.14

கல்யாணமகாதேவி



திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் காட்டாற்றுப் பாலத்தைத் தாண்டிச் செல்லும்போது இடதுபுறம் ஒரு ஒற்றையடிப் பாதை திரும்பும். அந்தப் பாதைதான் கல்யாணமகாதேவி செல்லும் வழி.

 
பற்பல வருடங்களுக்கு முன்னர் எங்கள் குடும்பம் வாழ்ந்த ஊர்.  அவ்வப்போது என் மாமாக்கள் அங்கு சென்று வருவது வழக்கம்தான். சில வருடங்களுக்கு முன்னர் இங்குள்ள பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் எப்படிச் சிதைந்துள்ளது என்பதை ஒரு படத்துடன் ஒரு சிறு பத்திரிகையில் வந்திருந்தது. அதைப் பார்த்த ஒரு பெரிய மனதுக்காரர் அங்குள்ள பெருமாள் கோவிலைப் புதுப்பிக்க முன்வந்தார்.  
    
திரு கௌதமன் சில வருடங்கள் முன்பு அந்தக் கோவில் கட்ட நிதியுதவி செய்யச் சொல்லி முகநூலில் பகிர்ந்திருந்தது சில நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் 

 
   
குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் பெற்ற சிறு தொகையையும் சேர்த்து அந்தப் பெரிய மனதுக்காரரிடம் அணிலின் சிறு உதவியாய் ஒப்படைக்க அவர் பெருமாள் கோவிலைப் புதுப்பித்து, சென்ற வருடம் அந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.   

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அதை நடத்தி முடித்தவர்கள் வீட்டில் திருமணம் நடந்தது ஒரு விசேஷம். இங்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு உடனே திருமணம் கைகூடுவதாக நம்பப் படுகிறது. அங்கு நாதஸ்வரம் வாசித்த கார்த்திக் அருண் அவர்களுக்குக் கூட திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.
     
கும்பாபிஷேகம் நடந்து ஒருவருடம் பூர்த்தி ஆன நிலையில் அங்கு நடந்த ஹோமத்துக்கு அழைப்பு வந்தபோது கிளம்பிய மாமாக்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.  
    

                    


அடுத்து அங்கு குடிசையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சிவனுக்கும் ஆலயம் எழுப்பத் தீர்மானித்திருக்கிறார்கள்.

   
திருவாரூர் சாலையிலிருந்து கல்யாணமகாதேவி செல்லும் வழியில் ஓர் ஆறு காணப்படுகிறது. பாண்டவ ஆறு என்று சொல்கிறார்கள். வனவாசத்தின்போதோ எப்போதோ பாண்டவர்கள் இங்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.
               
     
ஊருக்குள் நுழைந்ததும் 1940, 1950 களில் இருப்பதுபோல உணர்வு ஏற்படுகிறது. கட்டிடங்கள் இல்லாத சாலைகள். காலில் மிதிபடும் மென்மணல் பாதைகள். ஓங்கி உயர்ந்த மரங்கள். பெரிய ஏரி. மூங்கில் புதர்கள். எங்கோ உயரத்தில் கேட்கும் பெயர் தெரியா ஒரு பறவையின் டுட்டூ ஒலி.
             

                  
அங்கிருந்த ஐயனார் கோவில்.
   


    
அங்கு பார்த்ததுமே நட்பு பாராட்டிய திடீர் நண்பன்.
                 

மரத்திருட்டு! 

இந்த ஊர்ப் பயணத்துக்காகக் கிளம்பியதில்தான் மற்ற ஊர்ப் பயணங்களும் சாத்தியமாகின. இங்கு ஹோமம் முடிந்து சாப்பிட்டானதும் தஞ்சையை நோக்கிக் கிளம்பினோம்.

23.4.14

திருவாரூர்


தூரத்திலிருந்து பார்க்கும்போதே மனத்தைக் கொள்ளை கொண்டது கோவிலின் தோற்றம். பைபாஸ் செய்து சென்று விடலாமென்றும் பேச்சு இருந்தது. அப்புறம் மனம் மாறி கோவிலுக்குச் சென்றோம்.

                                                                   


9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்கும் தியாகராஜர் கோவிலைப் பார்க்க எங்களுக்குக் கிடைத்த நேரம் ஜஸ்ட் ஒரு மணிநேரம் மட்டுமே.
                                                     
அதுவும் அரைமணியில் வந்துவிடுங்கள், கிளம்பிடுவோம் என்று சொல்லப்பட்டு, உள்ளே சென்று வேகமாகத் திரும்பிவரவே ஒரு மணி நேரமானது.

                                                            
 
கேமிரா வெளியே எடுக்க நேரமில்லாமல் கொடுக்கப்பட்ட குறைந்த அவகாசத்தில் கோவிலைப் பார்க்க உள்ளே ஓடினோம். உண்மையில் நிதானமாகப் பார்க்க்க வேண்டுமானால், முழுதும் பார்க்க ஒருநாள் போதாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

                                              
 
கேமிரா இல்லாததால் அலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் திருப்திப் பட்டுக் கொண்டோம்.



தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனமும் செய்யவேண்டும் என்று படித்தேன். ஊர் பெயர் மட்டும் பார்த்துத் தாண்டிச் சென்றோம்!

நாங்கள் போன அன்று பிரதோஷம் வேறு. ஒரே கூ.....ட்டம். எனவே அந்தப் பக்கம் செல்லவில்லை. ஒருபக்கக் கோவிலைப் பார்க்காமல் பாதி கோவில் அதுவும் அவசர அவசரமாக, ஓட்டமும் நடையுமாகப் பார்க்கவே ஒருமணிநேரம் பிடித்தது.
அம்மன் சன்னதியின் பின்னால் உள்ள சுவற்றில் காத்து வைத்துக் கேட்டால் வீணையொலி கேட்கும் என்று சொல்லி என் ஒரு மாமா சுற்றிச் சுற்றி வந்து சுவரில் காதை வைத்துக் கேட்டு எங்களையும் கேட்கச் சொன்னார்.
நான் சுவரில் காது வைத்ததும் "இங்க வந்துடு செல்லம்... பேசலாம்" என்று குரல் கேட்டது. திகைத்துப் போய் மாமாவைப் பார்க்கத் திரும்பினால் அருகில் ஒரு பெண் அலைபேசியில் சிறு குரலில் பேசியபடி தாண்டிச் சென்றாள். மறுபடி மறுபடி காது வைத்துக் கேட்டும் ஒன்றும் கேட்காததால், வீணையொலி கேட்க என் பாஸுக்கு அலைபேசினேன். (உண்மையில் தினம் ஒரு கோவில் செல்வது என் பாஸ்தான். அவரில்லாமல் நான் மட்டும் சென்றிருந்ததால் இதுமாதிரிக் கோவில்கள் பார்ப்பதை அவரிடம் அவ்வப்போது வர்ணனை செய்துகொண்டே இருந்தேன்)

மீண்டும் ஒருமுறை இந்தக் கோவில் பார்க்க என்று மட்டுமே வந்து பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.
                                                        
 
அடுத்தது கமலாலயம். திருக்குளத்தைப் பார்த்ததுமே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தத்  திருக்குளத்தில் ஒரு படகில் அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் அப்பா, அம்மாவின் ஃபோட்டோ பார்த்துக் கொண்ருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் திருமணமான புதிதில் இங்கு வந்து எடுத்துக் கொண்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம்.
                                               
 
தண்ணீர் நிறைந்து நின்ற திருக்குளத்தின் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. தெப்போற்சவம் நடைபெறும் நாளில் அங்கு நடக்கும்/நடந்த மகாராஜபுரம், எம் எஸ் கச்சேரிகள் பற்றி மறுபடி ஒரு முறை பேசினோம்.
                                                   

அப்புறம் கிளம்பிதான் மன்னார்குடி சென்றோம்!