சில புத்தகங்களை எடுத்தால் விறுவிறுவெனப் படித்துக் கொண்டு போக முடிகிறது. சில புத்தகங்களை எடுத்தால் தொடர்ந்து படிக்க ஓடவே மாட்டேன் என்கிறது. இதற்கு உதாரணம் ஜேகே சில குறிப்புகள்!
நாய்
வாய் வைப்பது போல இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று படிக்கிறேன்! திடீரென
பிரபலங்களின் எழுத்துகளைப் பகிர்ந்து ரொம்ப நாளாச்சே என்று தோன்றவும்,
உடனடியாக ஒரு பதிவு கிடைத்தது என்று பதிவிடுகிறேன்! முன்னர் இவற்றைப்
பகிர்ந்து யாருடைய எழுத்து என்று கேள்வி கேட்போம்! இப்போது எதை எதை யார்
யார் எழுதியது என்று சொல்லியே உங்கள் ரசனைக்கு விடுகிறோம்! இந்த மூன்றில்,
எது உங்களைக் கவர்ந்தது?
சாண்டில்யன் கதைகளைத் தொடங்குமுன் எழுதும் வர்ணனைகள் மிகப் பெரிது. கல்கியும்! முதலில் படிக்கும்போது (சிறு வயதில்) வர்ணனைகளை ஒதுக்கி விட்டு கதையை மட்டும் படிப்பேன். அப்புறம் வர்ணனைகளையும் படிக்கத்தொடங்கினேன். கதையோடு சம்பந்தம் இல்லா விட்டால் வர்ணனைகள் நேரத்தைக் கொல்வது போலத் தோன்றியது என்பதால் இப்போதும் அனாவசிய வர்ணனைகளை
பெரும்பாலும் விட்டு விடுகிறேன். ஆனால் இவற்றில் சம்பந்தப்பட்ட
எழுத்தாளர்களின் முத்திரை இருக்கிறதா என்று தெரியவில்லை. ரசனையாக
எழுதுகிறார்கள். உதாரணமாக எஸ்ரா எழுதி இருப்பது கதை அல்ல. அது அனுபவம். மழை பற்றிய அனுபவம். மனதில் நிற்கிறது.
============================
1) இரண்டு சிறு குன்றுகளுக்கு நடுவேயுள்ள ஒரு பள்ளத்தாக்கின் வழியே அகன்று வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது அந்தக் கூடு சாலை. அதன் இரு பக்கங்களிலும் நெருக்கமாக வளர்ந்திருந்த ராக்ஷஸ புளி, ஆலமரங்களின் கொப்புகள் சாலை நடுவிற்குக் கவிந்து வந்து கூடி வானம் தெளிவாகத் தெரியாதபடி ஒரு கூடுபோல், குடைந்த சுரங்கப் பாதை போல் அமைந்திருந்தது. விதானத்திளிருந்து சரங்கள் தொங்குவதுபோல ஆலம் விழுதுகள் மெல்லிய காற்றில் அலைபட்டு ஊசலாடிக் கொண்டிருந்தன.
==============================
2)
அதே வயல்கள்தாம். அதே பச்சைக் கதிர்கள்தாம். அதோ தூரத்தில் ஏற்றத்தை
இறக்கிக் கட்டிய உறை கிணறுதான். இப்பவும் ஒருவரும் அதைத் தூக்கிக் கொண்டு
போய்விடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோ ஒரு முறையில் மாறியிருந்தன. திடீரென ஏதோ
ஒரு மந்திரக்கோல் பட்டு உயிர் பெற்று மூச்சு விட ஆரம்பித்து விட்டன.
==============================
3)
இரவில் மழை தனித்த சுபாவமுடையதாக இருக்கிறது. அது எப்போது சீறும் எப்போது
தணியும் என்று அறிய முடியாது. பள்ளி வயதில் ஒரு நாளிரவு தூக்கத்தினூடே ஏதோ
சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். வெளியே மழை பெய்துகொண்டிருந்த சப்தம்
கேட்டது. மின்விசிறி சுழலும் ஓசைதான் அப்படி இருக்கிறதா அல்லது மழைதானா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப் பட்டிருந்தன.
மெல்லிய
இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்ருந்தது. பின்னிரவில்
வீடு கொள்ளும் தோற்றம் விவரிக்க முடியாதது. அதன் தன்னியல்பிற்கு
திரும்பியிருப்பதுபோல இயக்கம் ஓய்ந்து சாந்தம் கொண்டிருந்தது.
வீட்டின்
இயக்கம் பேச்சால்தான் உருவாகிறது போலும். பேச்சு நின்று போனால் வீடு
நிம்மதியிழந்து விடுகிறது. பகல் சொற்களின் விளைநிலம், இரவு சொற்களற்ற
தியானவெளி. ஒரு மாலைக்கு எவ்வளவு பேசுகிறோம், எவ்வளவு சொற்கள்
உதட்டிலிருந்து உதிர்ந்துபோகின்றன, பேச்சு துவங்கி பேச்சு ஓயும் வரை பகலெல்லாம் வீடு உருமாறிக் கொண்டேயிருக்கிறது.
மழை என்ன செயும் - எஸ்ரா