கனவு இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவு இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.3.14

முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அரட்டை - 1

                         
கொஞ்சநாள் முன்பு கல்கியில் ஒரு முதியோர் இல்லம் விளம்பரம் கண்ணில் பட்டது.  6 பெரிய நகரங்களில் இருப்பதாக விளம்பரம். தனி காம்பவுண்ட் மைய சமையலகம், ஆரோக்கிய பராமரிப்புச் சேவைகள், விளையாட்டு வளாகம், வீடு தூய்மையாக்கம், நூலகம், போக்குவரத்துச் சேவைகள் பராமரிப்பு, சொத்து மேலாண்மைச் சேவைகள், மின்சாரப் பராமரிப்புச் சேவைகள், 24 X 7 பாதுகாப்பு, இன்னும் என்ன வேண்டும்?

 

படிக்கும்போது பேசாமல் அங்கு பணம் கட்டிவிட்டு சென்று தங்கி விடலாம் என்று ஆசை வருகிறது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அல்லது முதியவரைக் கத்தியால் குத்தி நகை பறிப்பு என்றெல்லாம் செய்தி வருகிறது.
பலருக்கு அவரவர்கள் அருகாமை வீடுகளில் இருப்போர் யார் என்றே தெரிவதில்லை.  அதற்கு இந்த முறை தேவலாம். பேசாமல் தங்களுக்கான அறையில் புத்தகம் படித்துக் கொண்டோ, தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டோ, போரடிக்கும்போது கோவிலுக்கோ, நூலகமோ, நடைப்பயிற்சியோ சென்று வரலாம்.

முன்னர் எனக்கொரு கனவு இருந்தது. சுஜாதா தனது 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் சொன்னது போல படிப்படியாக அப்புறம் அது காணாமல் போனது. பல வருடங்களுக்கு முன்னால் வந்த கனவு.

 

சென்னையில் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் கொஞ்சம் பெரியதாக ஒரு இடம் வாங்கிவிட வேண்டியது. கொஞ்சம் பெரிய அளவில் நிறைய அறைகள் கட்டிவிட வேண்டியது. கிட்டத்தட்ட தனித் தனி போர்ஷன் போல. ஒவ்வொன்றிலும் அவரவர்களுக்கான பிரைவசிகள் பாதிக்கப் படாமல் குடும்பம் குடும்பமாக நம் உறவினர்களே. . ஒவ்வொரு வீட்டிலும் தனித் தனி சமையல் செய்து கொள்ளவும் வசதி உண்டு.  தனி டிவி உண்டு. தனி படுக்கை அறைகளும் உண்டு. அல்லது ஒத்துக் கொண்டால் ஆள் வைத்தோ, சுழற்சி முறையிலோ அல்லது கூட்டு முயற்சியிலோ மையமாக ஒரே சமையல். 

நடுவில் பெரிய ஹா...ஆ......ஆ...ல்.  அங்கு(ம்) ஒரு டிவி.  அங்கு எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் கூடும் வசதி. வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள் தங்க வசதியான அறைகள்.


காம்பவுண்டுக்குள் மற்றும் மொட்டை மாடியில் தேவையான காய்கறிகள், கீரைகள், பழங்கள் பயிர் செய்து கொள்ளலாம். அல்லது இன்னும் கொஞ்சம் வசதி இருந்தால் அருகிலேயே, அல்லது கொஞ்ச தூரத்தில் கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டு, அங்கும் நெல் உட்பட, வாழை, தென்னை, காய்கறிகள் பயிர் செய்யலாம்.

                                                              

வீட்டில் பெரிய அளவில் பிரமிட் அமைப்பில் ஒரு பெரிய தியான ஹால்.

எல்லோரும் எப்போதும் பார்த்துக் கொண்டே, பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று இல்லை. தேவைப்படும்போது கூடிக் கொள்ளலாம். தனித்தனியாக, ஆனால்  சேர்ந்து இருக்கலாம். பெரிய அபார்ட்மெண்ட்களில் வசிக்கிறோம். ஒரு அவசர நேரத்தில் உடம்பு சரியில்லை என்றால் கூட 'யார் உதவிக்கு வருவார்கள், நமக்கு யாரைத் தெரியும்' என்ற நிலை இருக்காது என்றெல்லாம் எண்ணம் ஓடும்.

சில இடங்களில் நண்பர்கள் ஒரு குழுக்களாகச் சேர்ந்து இடம் வாங்குகிறார்கள். ஆனால் அப்புறம் அவரவர்கள் விற்று விட, எத்தனை பேர் சேர்ந்து ஒரு இடத்தில் வசிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. அப்படியே இருந்தாலும் பக்கத்துப் பக்கத்து வீடுகள்தானே... நான் சொல்வது ஒரு கட்டிடத்துக்குள்... ஒரு காம்பவுண்டுக்குள்.
இந்தக் கனவு நடைமுறையில் சாத்தியம் என்பது மிகக் கஷ்டம்தான். அதனால்தானே கனவு என்றே சொல்கிறேன்! எனக்கிருந்த இதே கனவு எனக்கு முன்னரே இதே போல என் மாமாவுக்கும் இருந்தது என்பது அப்புறம் பேசியபோது தெரிந்தது.

    

இது அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தைப் போலத்தான். அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தில் சகோதரர்கள் குடும்பம் அவரவர்கள் மகன்கள், மருமகள்களோடு, பேரன், பேத்திகளோடு சேர்ந்து வாழ்ந்த காட்சிதான். இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. காணாமல் போய்விட்டது.

இப்போதும் இருக்கலாம் எங்கேனும் இதுபோன்ற கூட்டுக் குடும்பங்கள்.  அப்படி இருந்தால், வாழ்க அவர்கள்................

- தொடரும்  -