குளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.12.10

மார்கழித் திங்கள் அல்லவா.

கோல நினைவுகள்....




மாதங்களில் சிறந்தது மார்கழி...

மார்கழி மாதம் வந்தால் ரெண்டு விஷயம் விசேஷம்..


ஒன்று பனியும் குளிரும்... அடுத்து கோலம்!




அந்த நாளில் வீட்டு வசதிக் குடியிருப்பில் குடியிருந்த போது சுமார் ஐநூறு வீடுகளின் நடுவே இருந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. அதற்கும் முன்னால் நீண்ட தெருக்கள் இருந்த இடங்களில் வசித்த காலங்களும்...


வரிசையான தெருக்களில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் விதம் விதமான கோலங்கள்...முதலில் காவி மட்டும் பூசப் படும் காலங்கள் போய் கலர்ப் பொடிகள் வந்து கலர்ப் பொடிகளை கோலத்தில் இட்டு வண்ண மயமான தெருக்களைப் பார்த்த காலம். கோலத்தில் கால் மிதிக்காமல் காலை தெருவில் நடப்பதே ஒரு கலை. அலுவலகம் போகும் பெண்கள், பள்ளி கல்லூரி போகும் பெண்கள் எந்த வீட்டின் முன் கோலம் புது மாதிரியாகவோ, கஷ்டமான கோலமாகவோ இருக்கிறதோ அங்கு நின்று அளவெடுப்பார்கள். மறு நாள் அவர்கள் வீட்டின் முன் அந்தக் கோலம் காணப்படும். பெரும்பாலும் இந்தக் கோலக் கடத்தல்கள் ஏரியா விட்டு ஏரியா தான் போடப் படும். பின்னே, பக்கத்து வீட்டில் போட்டதை நம் வீட்டில் மறுநாள் போடுவதில் சுவை இல்லையே...!


இந்தக் கோலம் போடப் படும் முன் முதல் நாள் வீட்டுப் பெண்கள் பேப்பரிலும் தரையிலும் புள்ளிகள் வைத்து கோடுகள் இழுத்து சிந்தனையுடன் கோல ஆராய்ச்சியில் இருப்பார்கள். ஏதோ கஷ்டமான கணக்கு ஃபார்முலாவுக்கு விடை கண்டு பிடிக்கும் கணித மேதை போலத் தோன்றுவார்கள்.


நாங்களும் கூட புள்ளிகளை இஷ்டத்துக்கு வைத்து விதம் விதமாக டிசைன் போட்டு கோல உற்பத்தி செய்ய முயற்சி செய்வோம்!


என்ன கோல ஆராய்ச்சி என்கிறீர்களா...ஓய்வு கிடைத்ததே என்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பழைய கோல நோட்டு கிடைத்தது..அதை வைத்து ஒரு பதிவு ஒப்பேற்றி விடலாமே என்று தோன்றியது..! அதில் பார்த்த கோலங்களைத்தான் அங்கங்கே தெளித்திருக்கிறோம்.


ஒருமுறை அதிகாலைக் குளிரில் தங்கை தலையில் துணி சுற்றிக் கொண்டு கர்மசிரத்தையாக கோலம் போட்டுக் கொண்டிருக்க, அதிகாலை ஊரிலிருந்து வந்த மாமா தொந்தரவு செய்யாமல் பின்னால் நின்று (அவரும் மஃப்ளருடன்) ரசித்துக் கொண்டிருக்க, புள்ளியிட்டு கோலத்தைப் பெரிதாக்கப் பின்னால் நகர்ந்த தங்கை அரைகுறை இருளில் பின்னால் நின்ற உருவத்தைப் பார்த்து அலற, அதுவரை அங்கு காவலுக்கு நின்றிருந்து அப்போதுதான் உள்ளே சென்றிருந்த நாங்கள் ஓடிவர...மறக்க முடியாத சம்பவம்.


இன்றைய கான்க்ரீட் காடுகளின் நடுவே கோலங்களை எதிர்பார்ப்பது ரொம்பக் கஷ்டம். இன்றைய ஐடி யுகத்தில் கோலம் போடும் பெண்களும் குறைவு. போடும் இடம் அமைந்திருக்கும் இடங்களை யோசித்தால் மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பும் குறைவு.


அப்போது மார்கழிக் கோலம்..இப்போது காலத்தின் கோலம்!